நீரின்றி அமையாது உலகு.

முனைவர் ஜ.பிரேமலதா,தமிழ் இணைப்பேராசிரியர், அரசு கலைக் கல்லூரி, சேலம் 636 007 DR.J.PREMALATHA,ASSOCIATE PROFESSOR IN TAMIL,GOVT ARTS COLLEGE,SALEM -636 007.

Thursday, 9 April 2020

மணிவாசகரின் காலம்



மணிவாசகரின் காலம்

                மணிவாசகரின் காலம் இன்றுவரை விவாதத்திற்கு உரியதாகவே இருந்து வருகிறது. இவர் காலம் கி.பி. மூன்றாம் நூற்றாண்டு என்றும், கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டு என்றும் இருவேறு கருத்துக்கள் நிலவுகின்றன.
                மறைமலையடிகளும், செங்கல்வராயபிள்ளையும் மணிவாசகரின் காலத்தைக் கி.பி.மூன்றாம் நூற்றாண்டு என்றே உறுதிப்படுத்துவர். இவர்களைப் போன்றே மணிவாசகரின் காலத்தைக் கி.பி.மூன்றாம் நூற்றாண்டே என்று குறிப்பிடும் பிறரது கூற்றுக்கள் கீழே விளக்கப்பட்டுள்ளன.
                சைவ சமயக்குரவர் மூவருள் காலத்தால் முற்பட்டவராகக் கருதப்படுபவர் திருநாவுக்கரசர். இவருடைய சமயகாலத்தில் வாழ்ந்தவர் திருஞானசம்பந்தர். திருநாவுக்கரசரின் காலம் ஆறாம் நூற்றாண்டின் இறுதியும், ஏழாம் நூற்றாண்டின் தொடக்கமுமாகும். மணிவாசகர் பற்றித் தனது தேவாரத்தில் தனித்திருத்தாண்டகத்தில் இரண்டு செய்திகளைக் குறிப்பிடுகிறார் நாவுக்கரசர்.
1.             மணிவாசகர் பொருட்டு இறைவன் நரியை பரியாக்கிய செய்தி
2.             வந்தியின் பொருட்டு இறைவன் பிட்டுக்கு மண் சுமந்த செய்தி இதன்மூலம் நாவுக்கரசரின் காலத்திற்கு முற்பட்டவரே மணிவாசகரின் என்று குறிப்பிடப்படுகிறது.
மறைமலையடிகளார்.
‘‘குராமலரோடு அராமதியஞ் சடைமேற் கொண்டார்
        குடமுழ நந்தீசனை வாசகனானக் கொண்டார்’’
                                                                (தனித்திருத்தாண்டகம் 11)
என்ற வரிகளில் நாவுக்கரசர் குறிப்பிடும் சொல்லான வாசகனாக் கொண்டார்என்பது மணிவாசகரையே குறிக்கிறது. ஆதலால், நாவுக்கரசரின் காலத்திற்கு முற்பட்டவரே மணிவாசகர் என்று குறிப்பிடுகிறார் (1967-108). இவ்வாறு பெறப்படும் புறச்சான்றுகளினால் மணிவாசகரின் காலம் கி.பி. மூன்றாம் நூற்றாண்டே என்று கூறுவர்.
‘‘நரியைக்குதிரை செய்வானும்’’ (1988-871) என்று நாவுக்கரசர் தனது தேவாரத்தில் கூறிச்சென்றுள்ளார். இறைவன் மணிவாசகருக்காக நரியை குதிரையாக்கிய செயலையே இவ்வாறு நாவுக்கரசர் குறிப்பிடுகிறார். இதன்மூலமும் மணிவாசகர் நாவுக்கரசர் காலத்திற்கு முற்பட்டவரே என்று கூறலாம்.
மணிவாசகரே நூலில் காணப்படும் சில சொல்லாட்சிகளைக் கொண்டும், இவரது காலத்தை நிறுவ முயன்றுள்ளனர். ‘‘கணபதியைக் குறித்தும் மூவரைப் பற்றியும் ஒன்றும் கூறாமையாலும், தேவாரத்தில் வரும் ஆலவாய்என்றும் பிரயோகம் வராமல் மதுரைஎன்றே குறிப்பதாலும், நாயன்மார்களுள் கண்ணப்பர், சண்டேசுவரர் என்றும் பழைய தொ.டர்களைத் தவிர வேறு நாயன் மார் எவரையும் குறியாமையாலும் இவர் காலம் மூவர் காலத்திற்கும் முன்னதாகும் (1967-625) என்று திருவாசககத்தில் இடம்பெற்றுள்ள சில செய்திகளைக் கொண்டு நிறுவுகிறார் செங்கல்வராயபிள்ளை. இதுமட்டுமின்றி,
                ‘‘வரகுணனாந், தென்னவன் ஏத்துச் சிற்றம்பலத்தான்’’
                                                                (திருக்கோவையார் 306)
என்ற திருக்கோவையாரில் மணிவாசகர் வரகுணன் என்னும் பாண்டிய மன்னனைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளார். நிகழ் காலத்தில் வைத்துக் குறிப்பிட்டிருப்பதால், இம்மன்னது சமகாலத்தில் மணிவாசகர் வாழ்ந்திருக்க வேண்டும். இம்மன்னது காலம் கி,பி.ஒன்பதாம் நூற்றாண்டு. ஆதலால் மணிவாகரது காலமும் ஒன்பதாம் நூற்றாண்டே என்று கூறுவர். ஆனால், தமிழகத்தில் ஒரே பெயருடைய பல மன்னர்கள் வாழ்ந்துள்ளனர். எனவே, கிபி. மூன்றாம் நூற்றாண்டில் வரகுணப் பாண்டியன் என்ற பெயரில் வேறொரு மன்னன் வாழ்ந்திருக்க வேண்டும் என்று கருத இடமுள்ளது.

ஓன்பதாம் நூற்றாண்டே

மணிவாசரின் ஒன்பதாம் நூற்றாண்டைச் சார்ந்தவர் என்று கூறுபவர்கள் மூன்று முக்கியமான சான்றுகளைக் குறிக்கின்றனர்.
1.             திருத்தொண்டத் தொகையினை இயற்றிய ஒன்பதாம் நூற்றாண்டில் வாழ்ந்திருந்த சுந்தரர் மணிவாசகரைப் பற்றிக் குறிப்பிடாமை
2.             சேக்கிழார் தனது பெரியபுராணத்தில் மணிவாசகரைப் பற்றிக் குறிப்பிடாமை.
3.             திருவாசகத்தில் தேவார மூவரைப் பற்றிய குறிப்புகள் உள்ளமை இதனை வன்மீகநாதன்,
சுந்தரர் குறிப்பிடாத காரணங்கள்
                1. வாழ்ந்தது குறுகிய காலம்
                2. பாண்டி நாட்டைப் பற்றி மட்டுமே அறிந்திருந்தமை
                3. குறைவான தலங்களுக்கு மட்டுமே சென்று தரிசித்துக் குறைவான பதிகங்கள் பாடியுள்ளமை
                4. .தொண்டர்கள் ஐவரைப் பற்றிக் குறித்துள்ளமை.
                                1. சம்பந்தர்
`                               2. நாவுக்கரசர்
3. திருநீலகண்டயாழ்ப்பாணர்
4. மெய்ப்பொருள் நாயனார்
5. கலிக்கம்ப நாயனார்
                என்ற (1983-11) இவர்கள் அiவைரும் பாண்டி நாட்டைச் சார்ந்தவர்கள். சுந்தரர் சற்றேறக்குறைய தனது காலத்திற்கு அருகாமையில் வாழ்ந்திருந்த பாண்டி நாடு முழுமையும் அறிந்திருந்த இத்தொண்டர்களைப் பற்றிக் குறிப்பிடுகிறார். மணிவாசகரோ, பாண்டிய நாட்டைச் சாந்தவர் ஆயினும், தான் வாழ்ந்த காலத்திலேயே சிவ அடியவர்களாலும், தில்லையில் தில்லைவாசிகளாலும் அறியப் படாதவராக வாழ்ந்திருக்கிறார். பித்துப் பிடித்து இறைவனைத் தேடியலைந்த நிலையில் பித்தர்என்றே அழைக்கப்பட்டிருக்க வேண்டும். எனவே, சிவ அடியவராக இவரை யாரும் அறிந்திருக்க முடியாமல் இருந்திருக்கலாம். சுந்தரரும், தகவல் தொடர்பற்ற அச்சமுதாயத்தில் மக்கள் தொகையானது கணக்கெடுப்பது போல சிவபக்தர்களின் பட்டியலை எடுக்காமல், தனக்குத் தெரிந்த அடியவர்களை மட்டுமே பாடிச் சென்றிருக்கலாம். அல்லது மணிவாசகர் பற்றி முழுமையான செய்திகள் அறியாத நிலையில் விட்டுச் சென்றிருக்கலாம் என்று கருதுவதற்கும் இடமுள்ளது. மேலும், சுந்தரரின் திருத்தொண்டத்தொகையானது வல்லினையாற்றி இறையருள் பெற்ற சிவதொண்டர்களையே எடுத்துக்கூறுகிறது. மணிவாசகரோ, இத்தகைய வல்லினை எதுவும் ஆற்றாமலேயே இறைவனால் வலிய வந்து ஆட்கொள்ளப்பட்டமையால் திருத்தொண்டர்தொகையில் பாடப்பெறவில்லை என்றும் கூறலாம் இதனால் சுந்தரர் குறிப்பிடாத காரணத்தினாலேயே மணிவாகர், சுந்தரர் காலத்துக்குப் பிற்பட்டவர் என்று கருதுவது பொருந்தாது எனலாம்.
சேக்கிழார் குறிப்பிடாத காரணம்
                சேக்கிழாரது பெரியபுராணம், சுந்தரரது திருத்தொண்டர்த்தொகையைப் பின்பற்றி எழுதப்பட்டதாகும். எனவே, சுந்தரர் குறிப்பிடாத காரணத்தினால் சேக்கிழாரும் குறிப்பிடவில்லை என்று கருதலாம்.
திருவாசகத்தில் மூவரைப் பற்றிய குறிப்புகள்
                தேசியவிநாயகம்பிள்ளை, மணிவாசகரது காலம் கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டு என்று குறிப்பிடுகிறார். திருவாசகத்தில் மூவரைப் பற்றியச் சில குறிப்புகள் இடம் பெற்றுள்ளன என்று கூறுவதன்மூலம், மணிவாசகர் மூவர்காலத்துக்கும் பிற்பட்டவர் என்று நிறுவுகிறார். கவிமணி குறிப்பிடும் சான்றுகள், ‘‘திருவாசககத்தில், அடியவர் பிணியை ஆண்டவ.ன் தீர்த்தருளியதாகத் திருச்சதகப்பாட்டு ஒன்று தெரிவிக்கிறது. அப்பரின் சூலைநோயைத் தீர்த்த செய்திதான் அங்கே குறிக்கப்படுகிறது என்கிறார் தேசியவிநாயகம்பிள்ளை. பண் சுமந்த பாடலுக்குப் பரிசு அளித்ததைத் தெரிவிக்கிறது. திருஅம்மானைப் பாட்டு ஒன்று திருஞானசம்பந்தர் தம் பாடல்களுக்குப் பரிசிலாக முத்துச்சிவிகை முதலியவற்றைப் பெற்றது இத்திருவாசககப்பாட்டால் இனிது புலனாகிறது என்கிறார் கவிமணி. அப்பரையும், சுந்தரரையும் குறிப்பிடுவதுபோல் திருவாசகம் சுந்தரரையும் குறிப்பிடுகிறது. திருவாசகம்-எண்ணப்பதிகம் ஆறாம்பாட்டிலே சுந்தரர் திருமணக் காலத்தில் ஆண்டவன் அந்தணர்கோலத்தில் தோன்றி எதிர்வாதம் பேசித் தடுத்து ஆட்கொண்டது மேலே குறித்த எண்ணப்பதிகச் செய்யுளில் குறிக்கப் படுவதாக விளக்கம் தந்துள்ளார் கவிமணி என்று (1981-93-94) குறிப்பிடுகிறார்.
                                கவிமணி குறிப்பிடும் பாடல்கள்
                                ‘‘பணிவார் பிணி தீர்த்தருளி’’ (5-89)
                                ‘‘பண்சுமந்த பாடற் பரிசு படைத்தருளும்’’       (8-8)
                                ‘‘பால் திருநீற்று எம்பரமணப்
                                பரம்பருணை யொடும் எதிர்த்து
                                தோற்றிமெய் அடியார்க்கு அருள்துறை அளிக்கும்’’ (44-6)
போன்ற திருவாசகப் பாடல்களாகும்.
                மணிவாசகர், கண்ணப்பன் (10-4), சண்டேசுரர் (15-7) போன்ற நாயன்மார்களைப் பற்றித் தனது திருவாசகத்தில் குறிப்பிட்டுச் சென்றிருப்பதுபோல இவர்களைப் பற்றியும் குறிப்பிட்டுள்ள பாடல்களே இவை என்று கருத இடமுண்டு. ஆனால், இவையெல்லாம் அனைத்துச் சிவனடியார்களுக்கும் இறைவன் செய்யும் பொதுவான செயல்களேயாகும் என்றும் இறைவன் தன்னைப் பணிவார்க்கு இவ்வாறெல்லாம் அருள்புரிவான் என்றும் உலகத்தாருக்கு உணர்த்தும்பொருட்டே இவ்வாறு பாடிச் சென்றுள்ளார் மணிவாசகர். கண்ணப்பன் போன்றவர்களின் பெயரைக் குறித்தது போல், பெருஞ்சிறப்புப் பெற்ற, தமிழகமே வியந்து பாரட்டியச் சைவ சமயக் குரவர்களின் பெயர்களை எங்குமே குறிப்பிடாத காரணத்தினால், இம்மூவருக்கும் முற்பட்டவராகவே மணிவாசகர் வாழ்ந்திருக்க வேண்டும் என்பதை அறிந்துகொள்ள முடிகிறது. மேலும், ‘பணிவார் பிணி தீர்த்தருளி என்று பொதுவாகவே குறிக்கிறார். தன்னைப் பணிபவர்களின் நோயைத் தீர்த்து அருளும் நல்மருத்துவன் போன்றவன் இறைவன் என்று இறைவனின் பெருமையை உணர்த்துகிறார்.
                பண்சுமந்த பாடலுக்குப் பரிசு என்பதற்கு, இசைத்தமிழால் இறைவனைப் பாடுவோருக்கு மிகுந்த திருவருளைத் தருகின்றவன் இறைவன் என்பதே சரியான பொருளாகும்.
                பரங்கருணையொடும் எதிர்த்து என்பதற்கு உண்மை அடியவர்களுக்கு இறைவன் தானே எதிரே வந்து அருள்புரிவான் என்பதே பொருளாகும்.
                இதுகாறும் அறிந்தவற்றால், மணிவாசகர் மூவர் காலத்திற்கும் முற்பட்டவர் என்பதை உணர்ந்துகொள்ள முடிகிறது.
2.9.திருவாசகத்தின் பாடுபொருள்
                ‘‘தேனும் பாலும் இனிப்பது உண்மை என்றால், இசையில் எழும் இனிமை உண்மை என்றால், ஒருமித்த உணர்வுடையோர் ஒன்றிய நிலையில் உதிக்கும் இன்பம் உண்மை என்றால், இவற்றைப்போல் கோடி மடங்கு உண்மையானது இறைமை இன்பம்’’ என்கிறார் சண்முகசுப்பிரமணியம் (1984-8). இத்தகைய இறை இன்பத்தினைப் பாடுபொருளாக்கி பாடப்பெற்ற நூலே திருவாகசம்.
                சுவை இன்பம், செவி இன்பம், உடல் இன்பம் முதலான புலன்வழி இன்பங்கள் சிற்றின்பங்களாகும். இவையெல்லாம் அழியக்கூடியவையாகும். அழியும் புலன்கள் வழிவரும் இன்பங்கள் நிலையில்லாதவை. இறைமை இன்பமோ ஐம்புலன்களுக்கும் அப்பாற்பட்டது. எனவே, இறைமை இன்பத்திற்கு என்றும் அழிவு கிடையாது.
                இறைமை இன்பத்தினைப் பற்றிப் பாடியுள்ள இறையடியவர்கள் அனைவருமே இறைவனை இணையில்லாத இன்ப ஊற்றாக, ஆனந்த அனுபவமாகப் போற்றுகின்றனர்ர் மணிவாசகரும் அன்பே வடிவான சிவனைத் தேன், பால், அமுது என்றெல்லாம் பல இடங்களில் பாடியுள்ளார். திருவாசகத்தின் மையப்பொருள் இறைவனின் அருளைப் போற்றிப் பாடுவதாகும். பாடல் வழியாகவே பரமனை எளிதில் அடையும்வழியைக் கடைபிடித்தவர் மணிவாசகர். இதனை, அவரே பல இடங்களில் எடுத்துக் கூறியுள்ளார்.
எ.கா.
                                ‘‘சிவன் அவன்என் சிந்தையுள் நின்றதனால்’’
                                ‘‘சித்தம் அழகியார் பாடாரோ நல்சிவனை’’ (7-3)
                                ‘‘நினைதொறும் காண்தொறும் பேசும்தொறும் எப்போதும்
                                  அனைத்து எலும்பு உள்நெக ஆனந்தத் தேன்சொரியும்
                                  குனிப்பு உடையான்’’               (10-3)
                                  ‘‘துரைமாண்ட ஆபாடித் தோன்நோக்கம் ஆடாமோ’’ 15-14)
                திருவாசகத்தில் காணப்படும் சிறப்பியல்புகளுள் அதன் அயராத அன்புத்திறனும் ஒன்றாகும். அன்பே உயிருணர்ச்சிகள் அனைத்திலும் தலை சிறந்ததாகவும், தெய்வத்தன்மை வாய்ந்ததாகவும் திகழ்கிறது. இத்தகைய அன்புணர்ச்சியே நூல் முழுமையிலும் காணப்படுகிறது. அன்புணர்ச்சி மேலோங்க, ஏனைய தீயஉணர்ச்சிகள் சிதைந்தொழியும்.  அந்நிலையில் மனிதன் இறைநிலைக்குப் படிப்படியாக உயர்ந்து செல்வான் என்பதற்குத் திருவாசகம் எடுத்துக்காட்டாகத் திகழ்கிறது. எனவேதான், ‘‘இத்தெய்வத் தமிழ்மறை நூல் தமிழ்வேதம் மாத்திரமல்ல, அன்பு நெறிகாட்டும் தமிழ்ப் பேரிலக்கியம்’’ என்று திருவாசகத்தினைப் போற்றுகிறார் உத்தண்டராமன் (1967- )
                மணிவாசகர், தான் இறைவன்பால் கொண்ட அன்பின் காரணமாகப் பெற்ற பேறுகள் சிலவற்றை எடுத்துக்கூறியுள்ளார்.
                                ‘‘அன்பினால் அடியேன் ஆவியோடு ஆக்கை
                                                ஆனந்தமாய்க் கசிந்து உருக’’ (22-2)
                                ‘‘என்புதைந்து உருகி நெக்குநெக்கு ஏங்கி’’ (4-80)
                                ‘‘வேண்டும் நின்கவுல் கண் அன்பு’’ (5-74)
                                ‘‘தடக்கையின் நெல்லிக் கனிஎனக்கு ஆயினன்’’ (3-162)
அண்டங்களை எல்லாம் கடந்து நிற்கும் அற்பமான தன் உள்ளத்திலே உறைகிறான் என்ற உண்மையினை உணர்ந்த நிலையில் அவரக்கு இறைவன்பால் எழும் அன்பு ஆறாகப் பெருகுகிறது.
‘‘மணிவாசக சுவாமிகளின் இறை அன்பு அளவில்லாதது. காதலி காதலனிடம் கொண்ட அன்பையும்விடச் சிறந்தது’’ என்கிறார் உத்தண்டராமன் (1967-111). இறைவன்பால் தான் கொண்ட அன்பு எத்தகையது என்பதை மணிவாசகர்.
                ‘‘கொள்ளேன் புரந்தரன் மால்அயன்
                                வாழ்வு, குடிகெடினும்
                  நள்ளேன் நினது அடியாரொடு
                                அல்லால், நரகம் புகினும்
                எள்ளேன் திருஅருளாலே
                                இருக்கப்பெறின், இறைவா
                உள்ளேன் பிறதெய்வம் உன்னைஅல்லாது
                                எங்கள் உத்தமனே’’(5-2)
என்ற பாடலின் மூலம் விளக்குகிறார். இதன்மூலம் இறைவன்மீது காட்டும் அன்பு அவன்மீது மட்டுமே பற்றுவைத்த அன்பாக, மெய்யன்பாக இருக்கவேண்டும் என்கிறார்.
திருப்பெருந்துறை அனுபவமே திருவாசகத்தின் உயிர்நிலை என்று கூறலாம். மணிவாசகர் தாம்பெற்ற அனுபவத்தை இரண்டு நிலைகளில் வெளிப்படுத்துகிறார்.
1.             இன்பத்திளைப்பு
2.             தொடர்ந்து அனுபவிக்க முடியாமல், இடையில் ஏற்பட்ட இடையூறு மணிவாசகர் தாம் பெற்ற இன்ப அனுபவத்தைப் பல பாடல்களில் சுவைபடக் கூறியுள்ளார்.

‘‘மெய்தான் அரும்பி விதிர்விதிர்த்து
                உன்விரை ஆர்கழற்கு என்
  கைதான் தலைவைத்துக் கண்ணீர்
                ததும்பி வெதும்பி உள்ளம்
  பொய்தான் தவிர்த்து உன்னைப் போற்றி
                சயசய போற்றி என்னும்
  கைதான் நெகிழவிடேன் உடை
                யாய்என்னைக் ககணடு கொள்ளே’’ (5-1)
‘‘என்புநைந்த உருகி நெக்குநெக்கு ஏங்கி
  அன்புஎனும் ஆறு கரையது புரள
  கண்களிகூர நுண்குளி அரும்ப’’       (4-80)
                இறைவன்மீது தோன்றும் அன்பின் பெருக்கால், கண்களிலே களிப்பு, எலும்புகள் நெகிழ்ந்து உருகுதல், நெக்குநெக்கு ஏங்குதல் போன்ற மெய்ப்பொருள் நிகழ்வதாகக் கூறுகிறார்.
                                ‘‘அன்பிற்கும் உண்டோ அடைக்கும்தாழ் ஆர்வலர்
                                  புண்கண்நீர் பூசல் தரும்’’ (குறள்,71) என்பார் வள்ளுவர்.
இறையருளைத் தொடர்ந்து அனுபவிக்க முடியாத நிலையில்,
                                ‘‘இருதலைக் கொள்ளியினுள் எறும்பு ஒத்த’’ (6-9)
                                ‘‘கொம்பரில்லாக் கொடிபோல’’ (6-20)
என்றெல்லாம் புலம்பித் தவித்துத், தன் துன்பத்தை வெளியிடுகிறார்.
                மணிவாசகர், இன்பத்தில் மூழ்கித் திளைத்துப் பாடியுள்ள பாடல்களை நோக்கும்பொழுது, திருவாசகத்தின் பொருள் இன்பஅனுபவமே என்றும், கையற்ற நிலையில் புலம்பித் தவித்துப் பாடியுள்ள பாடல்களை நோக்கும்பொழுது திருவாசகத்தின் பொருள் அவலமே என்றும் தோன்றுகிறது. இவ்வாறு திருவாசகத்தினைக் கற்கும்பொழுது, படிக்கும்தோறும் புதுப்புதுப் பொருளைத் தருவதாயும் சிறந்த பக்தி இலக்கியமாகவும் விளக்குவதைத் தெளிவாக உணரமுடிகிறது.
                ‘‘எல்லையற்ற பலபொருட்கள் நுட்பக் குறிப்புகளை உயர்த்திக் கொண்டு, செல்ல வல்ல தன்மையதாதலே சிறந்த கவிதை எனத் தெளியப்படுதற்குரிய சீரிய சான்றாகும் சிறந்த நல்ல கவிதைச் செய்யுள் எதுவாயினும், அதனைச் சுற்றி அளவிடற்கரியதொரு பொருட் குறிப்புச் சூழ்நிலை மிளிர்ந்து கொண்டேயிருக்கும். கவிஞன் கருதியதும் கூறியமுத் ஒரு கருத்தோயினும், அக்கருத்தே மிக விரிந்து பரந்து, அவன் கருதாத பல இயைபுடைய நற்கருத்துக்களையும் தன்கண் பொலியத் சிறந்த கவிதை நிறைந்த பொருளுடையதாக இருக்கும்மென்றும், அது நம்மைக் கிளர்ந்தெழச் செய்கின்ற ஆற்றலுடையதாக இருக்குமென்றும் திருவாசகத்தின் மூலம் புலனாகிறது.
திருவாசகம் ஒப்புயர்வற்ற ஞானப்பனுவல் என்பதும் உலக இலக்கியங்களான பைபிள், கீதை இவற்றோடு ஒப்புநேநாக்கி பாரட்டத்தக்க பெருமையுடையதென்பதும், ஆய்வின் மூலம் புலனாகிறது. திருவாசகம் ஒரு முத்தமிழ் நூல் என்றும், சைவ சமயக் குரவர்கள் மூவருள்ளும் மணிவாசகரே பக்திநெறியில் உயர்ந்து நிற்கிறார் என்பதையும் பல்வேறு சான்றுகள் வழி உணர முடிகிறது. கற்குந்தோறும், புதுப் புதுப் பொருளைத் தரும் இலக்கியக்களஞ்சியமாகத் திருவாசகம் விளங்குகிறது. சமயக்குரவர் நால்வருள் மணிவாசகரே காலத்தால் முற்பட்டவர் என்பதையும் அறிய முடிகிறது.












No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்களைப் பதிவு செய்யலாமே?