நீரின்றி அமையாது உலகு.

முனைவர் ஜ.பிரேமலதா,தமிழ் இணைப்பேராசிரியர், அரசு கலைக் கல்லூரி, சேலம் 636 007 DR.J.PREMALATHA,ASSOCIATE PROFESSOR IN TAMIL,GOVT ARTS COLLEGE,SALEM -636 007.

Thursday, 11 September 2014

வானவில் என்னும் புதினம்


 வானவில் என்னும் புதினம் - இரண்டாம் உலகப் போரில் ஹிட்லரின் தாக்குதலை இரஷ்யா எதிர்கொண்ட விதம் பற்றிக் கூறுகிறது வானவில் புதினம். உலக இலக்கிய வரலாற்றில்இரஷ்ய நாட்டு இலக்கியத்திற்கு என ஒரு தனி இடம் உண்டு.    அந்நாட்டு மக்களின் வாழ்க்கையை உள்ளது உள்ளபடியே எடுத்துக்காட்டும் கருவியாக அவ்விலக்கியம் செயல்படுவதுதான் அதன் சிறப்பு. யுத்த காலத்திலே உலகத்திலேயே வெளி வந்த நுhல்களில் தலைசிறந்தது வானவில் என்னும் புதினம். இப்புதினம் ஸ்டாலின் விருதினைப் பெற்றுள்ளது.
          """"வாண்டா வாஸிலெவ்ஸ்கா"" எனும் ருஷ்ய போலீஸ் பெண் எழுத்தாளரே வானவில் எனும் தலைப்பில் அமைந்த இந்த நாவலைப் படைத்தவர் . உடலில் ஓடுகின்ற இரத்தத்தை உறையச் செய்யும் குளிரில் நடந்த இருதயத்தை நடுங்கச் செய்யும் போர் நிகழ்வுகளைத் தத்ரூபமாக மிடுக்கான தமிழ் நடையில் ஓடவிட்டு வாசகர்களை இழுத்துப் பிடித்துப் பறக்க வைக்கும் அளவுக்கு இந்நாவலை மொழிப்பெயர்த்தவர்கள் ருஷ்ய மொழிப்பெயர்ப்புகளில் தேர்ந்த அந்நாளைய மொழிப்பெயர்ப்பாளர்களான ஆர். ராமநாதன், ஆர். எச். நாதன் ஆகிய இருவருமே ஆவர். தமிழில் இந்நாவலை பெரும்பாலானோர் விரும்பிப் படிக்கக் காரணம் அவர்களுடைய சரளமான மொழிப்பெயர்ப்பே காரணம் .
 வானவில்என்னும் கதையானது கிராம சோவியத் என்னும் இரஷ்ய நாட்டின் கிராம மக்கள் ஜெர்மானியரின் தாக்குதல்களை எதிர்கொள்வதை மையமாகக் கொள்கிறது. ஓலினா என்னும் பெண்ணை அவர்கள் சித்திரவதைச் செய்கின்றனர். தங்களை எதிர்ப்பவர்கள் அனைவரையும் ஜெர்மானியர்கள் கொல்லுகின்றனர். அவர்களை எவராலும் தடுக்க முடியவில்லை. கிராம மக்கள் அனைவரும் ஜெர்மானியர்களைச் சபிக்கின்றனர். பின்பு ஒரு கட்டத்தில் செம்படையினர் வந்து ஜெர்மானியர்களை வென்று கிராமத்தை மீட்பதாகக் கதை முடிகிறது. 
     இரண்டாம் உலகப்போர் கி.பி.1939-1945ஆம் ஆண்டு வரை நடைபெற்றது. உலகில் இருந்த பெரிய வல்லரசுகள், நேச நாடுகள், மற்றும் அச்சு நாடுகள் என இரு எதிரெதிர் அணிகளாகப் பிரிந்து போரில் ஈடுபட்டன. முதல் உலகப் போருக்கு ஜெர்மனிதான் காரணம் என்பதை உலக நாடுகள் உணர்ந்து, ஜெர்மனியை இழிவுபடுத்தும் நோக்கத்தோடு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் அனைத்தும் இரண்டாம் உலகப் போருக்கு வித்திட்டன.
          
          1941ஆம் ஆண்டு ஜீன் 22ஆம் நாள் இரஷ்யாவுடன் செய்து கொண்ட போர்த் தொடுக்காத ஒப்பந்தத்தை  மீறி  ஹிட்லர் இரஷ்யா மீது படையெடுத்தார். ‘கிராம சோவியத்‘ என்னும் கிராமத்தின் மக்கள் ஜெர்மனியருக்கு எதிராக செயல்பட்டு பெற்ற வெற்றி இக்கதையின் கரு ஆகும்.  இரஷ்யா மிகுந்த பனிப் பொழிவினை உடைய நாடு ஆகும். ஹிட்லர் ரஷ்யா மீது போர் தொடுத்த காலம்  பனிக்காலம் . ஜெர்மனியருக்கு பழக்கமில்லாத காலம் .  நாவல் முழுவதும் பனிக்காலமும் அதனால் ஏற்படும் விளைவுகளும் காட்டப்பட்டுள்ளன. 

இதனால் ஹிட்லரின் படை வீரர்கள் கடும் அவதிப்பட்டனர். மேலும், இரஷ்யர்கள் பின்பற்றிய போர்க்கொள்கை ‘அழித்துப் பின்வாங்குதல்‘ ஆகும். இதனால் அவர்கள் முக்கிய பாலங்களை அழித்துப் பின்வாங்கினர். இது ஹிட்லருக்கு மேலும் நெருக்கடியைக் கொடுத்தது. ஹிட்லர் சோவியத் யூனியனை கைப்பற்ற செய்த நடவடிக்கைகளும், கொடுமைகளும் வானவில் புதினத்தில்  எடுத்துக் கூறப்பட்டுள்ளன.



   

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்களைப் பதிவு செய்யலாமே?