மகளிர் அணியும் - குதிரை அணியும்
கலித்தொகைப் பாடலொன்று,
(மருதன் இளநாகனார்-மருதக்கலி)
பெண்ணின் அணிகலனோடு
குதிரைக்கு அணிவிக்கப்படும் அணிகலன்களை ஒப்பிட்டுக்
கூறுகிறது. குதிரை அணிகள் அனைத்தும் பருத்தி நூலால் முறுக்கப்பட்ட கயிற்றினால் ஆனது. ஆனால் பரத்தை அணிந்திருக்கும்
அணிகலன்களோ அனைத்தும் தங்கத்தினால் ஆனது.
பரத்தையிடம் சென்று மீண்ட
தலைவன், தலைவியிடம் பரத்தையிடம் சென்றுவந்ததை மறைத்து ‘குதிரை ஏற்றம்’ சென்று வந்ததாகக் கூறுகிறான்.
அவன் பொய்யை அம்பலப்படுத்தும் வகையில், தலைவி நீ ஏறிய குதிரையைப் பற்றி நான் நன்கு அறிவேன். அது நீ விரும்பும் பரத்தை தான் எனக்கூறி குதிரையைப் பரத்தையாக உவமித்து பல பொருத்தங்களைப்
பட்டியலிட்டு உண்மையை வெளிப்படுத்துகிறாள்.அவ்வாறு
வெளிபடுத்துமிடத்து குதிரை அணிந்துள்ள அணிகலன்களைப் பரத்தை அணிந்துள்ள
அணிகலன்களோடு ஒப்பிடுகிறாள்.
""""அறிந்தேன் ; குதிரைதான் ;
பால்பிரியா ஐங் கூந்தற் பல் மயிர்க் கொய்சுவல்
மேல்விரித்து யாத்த சிகழிகைச் செவ்உளை
நீலமணிக் கடிகை வல்லிகை, யாப்பின்
கீழ்
ஞால் இயல் மென் காதின் புல்லிகைச் சாமரை,
மத்திகைக் கண்ணுறையாகக் கவின் பெற்ற
உத்தி ஒரு காழ்,
நூல்
உத்திரியத்தின் பிடி
நேர் மணிநேர் முக்காழ்ப் பல்பல கண்டிகை
தார்மணி பூண்ட தமனிய மேகலை"" (கலித்தொகை. 96: 7-15)
பரத்தை – குதிரை அணிகலன்கள்
பொருத்தம்
பரத்தை – குதிரை
பைங்கூந்தல் - பிடரிமயிர்
சிகழி - செவ்உளை
நீலமணிக்கடிகை - வல்லிகை
புல்லிகை - சாமரை
மத்திகை - கண்ணுறை
உத்தி - உத்திரியத்தின் பிடி
நேர்மணி முக்காழ் - பல்பிடிகண்டிகை
மேகலை - நூபுரப்புட்டில்
வார் - கிண்கிணி
பரத்தையின் கூந்தலைப் போல் குதிரையின் பிடரிமயிர் இருந்ததாம்.
அக்கூந்தலைக் கட்டும் கயிறாகிய சிகழி போல குதிரையின் செவ்உளை எனப்படும்
பிடரியில் அணிவிக்கப்படும் சிவந்த அணி இருந்ததாம்.
நீலமணிக்கடிகை எனப்படுவது பெண்கள் கழுத்தில் அணிந்து கொள்ளும் கழுத்தணி.
அதுபோல குதிரையின் ‘வல்லிகை’ எனப்படும் கழுத்தணி இருந்ததாம்..
புல்லிகை என்பது பெண்கள் தலையில் ஓரத்தில் அணிந்து கொள்ளும் அணி.
சாமரை என்பது குதிரையின் தலையின் ஓரங்களிலிருந்து காதுவரை வரும் அணியாகும்.
இது புருவத்திற்கு மேலே தாழ்ந்து வருவது.
இதைப் போலவே குதிரைக்கும் அணிவிப்பர்.
இது ‘கண்ணுறை’ என்றும் அழைக்கப்பட்டுள்ளது.
பெண்கள் நடு உச்சியிலிருந்து
நெற்றிவரை அணியக்கூடியது நெற்றிச்சுட்டி. பெண்கள்
அணிவதை, ‘உத்தி ஒரு காழ்’ என்பர். குதிரைக்கும் நெற்றிச்சுட்டி
அணிவிக்கப்பட்டுள்ளது. இது ‘நூல் உத்திரியப் பிடி’ எனப்பட்டுள்ளது.
மேகலை என்பது பெண்கள் இடையில் அணிந்து கொள்ளும் அணிகலன் அதைப்போல குதிரையின் மேலேறி அமர்பவர்க்ள் பிடித்துக் கொண்டு ஏற வசதியாக, நூபுரப்புட்டில்
என்னும் கயிற்றைக் குதிரையின் இடையில்
கட்டியிருப்பார்கள்.
குதிரைக்கு அணிவிக்கப்படும்
வாரைப் போல, பரத்தை
கிண்கிணியை அணிந்திருப்பாள்.
இப்பாடலில் குதிரைக்கு அணிக்கப்படும்,
செவ்உளை, வல்லிகை, சாமரை, கண்ணுறை, நூல் உத்திரியப்பிடி, பல்பிடி கண்டிகை, நூபுரப்புட்டில், கிண்கிணி சோர்க்கும் கயிறு ஆகிய அனைத்துமே பருத்தி நூலால் ஆன கயிற்றால்
உருவாக்கப்பட்டவை. குதிரைக்கு அணிவிக்கப்படும்
வகையில் பலவிதமாக அணிகலன்களைத் தமிழர்கள் உருவாக்கியிருப்பதை
இப்பாடல் மிக அழகுற வெளிப்படுத்தியுள்ளது. கயிற்றைக் கொண்டு குதிரை அணிகலன்களில் கூட கலை நயத்தை மிக அழகாகத் தமிழர் வெளிப்படுத்தியுள்ளனர்.
பெண்கள் அணிந்துகொண்டுள்ள
அணிகலன்களில் தான் எத்தனை வகை? எத்தனை பெயர்?அக்காலத் தமிழர்களின் கலைநயத்தை வியக்காமல் இருக்கமுடியாது.
புலவர் குதிரையையும்
இரசித்திருக்கிறார். பெண்கள் அணிந்து கொள்ளும் அணிகலன்களையும் வியப்போடு
பார்த்திருக்கிறார். மிகவும் சமயோசிதமாக இரண்டையும் பொருத்தமான இடத்தில்
பொருத்திப் பார்த்து நகைச்சுவையுடன் இதை வெளிப்படுத்தியிருக்கிறார்.
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்களைப் பதிவு செய்யலாமே?