‘உண்டி சுருங்குதல் பண்டிக்கு அழகு’
நாம் இன்று பல சொற்களைக் கால மாறுபாட்டின் காரணமாக வழக்கில் பயன்படுத்துவதில்லை. சில சொற்களுக்குப் பொருளையே மறந்துவிட்டோம். அப்படி மறந்துபோனதால் என்ன நட்டம் என்கிறீர்களா?
நட்டம்தான் தப்பும் தவறுமாகப் புரிந்துகொண்டு தேவையில்லாத இடத்தில் தவறாகப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறோம்.
பலரது உணர்வுகளோடு விளையாடிக் கொண்டிருக்கிறோம். நம் பேச்சில் பழமொழிகளைக் கையாண்டு எல்லாம் தெரிந்தவர்போல் காட்டிக் கொண்டிருக்கிறோம். உண்மையில் பழமொழிகளின் உண்மைப் பொருளை விளங்கிக் கொண்டுதான் அதை பயன்படுத்துகிறோமா?
இதோ சில பழமொழிகளும்-நாம் புரிந்துகொண்ட முறையும்-உண்மையான பொருளும். . . .
‘உண்டி சுருங்குதல் பெண்டிருக்கு அழகு’
இப்பழமொழிகளை நாம் எப்படி புரிந்துகொண்டிருக்கிறோம்?
உடனே சொல்ல ஆரம்பித்து விடுவீர்களே. பெண்களின் இடை பாகமாகிய வயிறு சுருங்கியிருக்க வேண்டும். அப்போதுதான் பார்க்க அழகாக இருக்கும். கம்பர் போன்ற பெருமக்களெல்லாம் சீதையின் இடையைப் பற்றி விவரிக்கும்போது ""பொய்யே எனும் இடையாளொடு"" என்கிறார். இடை இல்லையோ என்று நினைக்கும்படியான தோற்றம் கொண்டவள் சீதை என்று வருணிக்கிறார். அதை அப்படியே எளிமைப்படுத்தி கண்ணதாசனும் ‘இடையோ இல்லை. இருந்தால் முல்லைக்கொடிபோல் மெல்ல அசையும்’ என்று பெண்களின் இடை முல்லைக் கொடிபோல் இருக்கவேண்டும் என்றும் கூறியிருக்கிறாரே என்றெல்லாம் கேள்விகளைச் சரமாரியாகக் கேட்கிறீர்களா? இருங்கள். சற்றே பொறுங்கள். தமிழிலக்கியத்தில் ஒரு சொலவடை இருக்கிறது.
‘எழுதியவன் ஏட்டைக் கெடுத்தான். படித்தவன் பாட்டைக் கெடுத்தான்’ என்று.
அப்படி எழுதியும் படித்தும் கெடுத்த சொற்களில் ஒன்று தான் ‘பண்டி’.
‘பண்டி’ என்றால் வயிறு.
ஆம் வயிறுதான்.
பண்டியைத்தான் ‘பெண்டிர்’ எனஆக்கிவிட்டார்கள்.
இப்போது படித்துப் பாருங்கள் ‘உண்டி சுருங்குதல் பண்டிக்கு அழகு’ (உண்டி-பண்டி சொற்கள் பொருத்தமாக இருக்கிறதல்லவா?
அகராதிகள் பண்டி என்னும் சொல்லுக்கு வயிறு என்றும் உடல் என்றும் பொருள் தருகின்றன. இப்போது பொருளைப் பார்க்கலாமா?
உண்டி சுருங்குதல் வயிறுக்கு அழகு.
ஆணுக்கு தொப்பை இருந்தாலும் பெண்ணுக்கு தொப்பை இருந்தாலும் அழகு குறைவுதான். தொப்பை ஏற்படக்கூடிய அளவிற்கு உடலை பெருத்துபோக விடக்கூடாது. அளவோடு உண்டு, உடற்பயிற்சியோ, உடல் உழைப்போ மேற்கொண்டு, வயிறை அளவாக வைத்துக் கொள்ள வேண்டும். தொப்பை ஏற்பட ஆரம்பித்துவிட்டாலே, உடல் உழைப்பு குறைந்துபோய் விட்டது என அர்த்தம். நோய்கள் உடலுக்குள் நுழைய ஆரம்பித்து விட்டது என்றும் அர்த்தம். எல்லா நோய்களும் வயிற்றில் போடப்படும் உணவைப் பொறுத்தே வருகின்றன.
அந்த காலத்தில் 90 வயது வாழ்ந்தார்கள், நூறு வயது வாழ்ந்தார்கள். ஆனால் இந்த காலத்தில் அப்படி வாழ முடியலையே. நாற்பதிலேயே சர்க்கரை நோய் இரத்த அழுத்தம் வந்துவிடுகிறதே எனப் புலமபித் தவிக்கிறோம்.
அந்தக்காலத்தில் பல ஆண்டுகள் உயிரோடு வாழ்ந்தவர்களுக்குத் தொப்பை இருந்ததா என யோசித்துப் பார்க்க நமக்கு நேரமிருப்பதில்லை.
நம் முன்னோர்கள் உடலைப் பேணும் வழியறிந்து உடலை அளவோடு (வயிற்றை) வளர்த்தார்கள். அதனால் உயிரையும் வளர்த்தார்கள்.
திருமூலர் திருமந்திரத்தில்,
""உடலை வளர்க்கும் உபாயம் அறிந்தேன்
உடலை வளர்த்தேன் உயிரை வளர்த்தேன்"" என்பார்.
பண்டி என்னும் சொல் இலக்கியத்தில் வருகிறதா?
பண்டி -1.வண்டி செந்நெற்பகரும் பண்டியும் (சீவக சிந்தாமணி.61)
2.வயிறு (சூடாமணி நிகண்டு)
3.உடல்
4.யானை (அக. நி.)
உடல் ""புழுப் பெய்தபண்டி தன்னை (தேவாரம் 702.2)""
தமிழ் லெக்சிகன் பண்டி - வயிறு என்று பொருள் தருகிறது.
‘மண்டி நிறைகூறு பின்பு’ (பாரத.வேத்.48)
வண்ணாரப் பண்டி- வண்ணார் துணிகளை ஏற்றும் வண்டி (யாழ்.அக)
பண்டி என்பதை தொந்தி, தொப்பை, வண்டி, உரோகினி, வயிறு, உடல், யானை என விக்சனரி பொருள் தருகிறது.
தொப்பை பெருத்த (கடற்பன்றி)யை தமிழில் குறிப்பாக இலங்கைத் தமிழில் பண்டி என வழங்கியுள்ளனர்.
(மன்னாரில் கடல் பண்டி! - YouTube)
ஜெயமோகன் தன் வெண்முரசு, மழைப்பாடல்-91ல் பண்டி என்பதைப் பற்றித் தெளிவாக ஒரு விளக்கம் தந்துள்ளார்.
""விளையாடத் தொடங்கும் குழந்தை வரைவாக தன் மழலைக் கொழுப்பை இழக்கத் தொடங்குகிறது. சிறு பண்டி வற்றுகிறது. . . எதில் தொப்புள் தெரியும்? வயிற்றில். சுந்தனக் குழம்பு போன்ற வயிற்றில் குமிழி போல அழகிய தொப்புள் இருந்தது என்கிறார் சந்தனக் குழம்பில் குழிழி போல சிறிய அழகிய பண்டியில் தொப்புள் தெரிந்தது"" என்கிறார்.
வயிற்றுப் பகுதியில் அதிகம் சதை போட்டால் அழகான வடிவமே மாறிவிடும்.
அந்த அளவிற்கு உடலின் வடிவத்தோடு தொடர்புடையது வயிறு என்கிறார்கள் அழகுக்கலை நிபுணர்கள்.
சரி மருத்துவர்கள் என்ன சொல்கிறார்கள்?
http://whqlibdoc.who.int/publications/2011/9789241501491_eng.pdf
WHR அளவு இடை தொடை சுற்றளவு விகிதம் (WHR) எனப்படுகிறது.
நம் உடலின் முன்பகுதியிலுள்ள கடைசி விலா எலும்பிற்கு சற்று கீழேயும் தொப்புளுக்கு மேலாகவும் அளவுநாடா கொண்டு அளவிடப்படுவதே
WHR அளவு. சரி ஆண்களுக்கு என்ன அளவு? பெண்களுக்கு என்ன அளவு?
ஆண்களுக்கு 0.9ஐ விடக் குறைவாக இருக்க வேண்டும்.
பெண்களுக்கு 0.7ஐ விடக் குறைவாக இருக்க வேண்டும்.
WHR அளவு BMI அளவை விட மிகச்சிறந்த அளவுக் குறியீடு. துல்லியமானது என்கின்றனர் மருத்துவ நிபுணர்கள்.
http://www.bmi-calculator.net/waist-to-hip-ratio-calculator/
ஆண்களுக்கு 1 "" (Inch) ஐவிட கூடுதலாக இருந்தாலோ, பெண்களுக்கு 0.9"" ஐ விட கூடுதலாக இருந்தாலோ இதய நோய் மற்றும் நாட்பட்ட சிறுநீரக நோய்கள் வருவதற்கு வாய்ப்புகள் அதிகம் என்கிறது மருத்துவ எச்சரிக்கை.
(Waist-Hip Ratio)
இப்போது மீண்டும் பழமொழியைப் படித்துப் பாருங்கள்.
உண்டி சுருங்குதல் பெண்டிருக்கு அழகா?
""உண்டி சுருங்குதல் பண்டிக்கு அழகா?""
இனி இந்தப் பழமொழியை சரியாக உச்சரித்துப் பழகுங்கள். இப்போது சொல்லுங்கள்.
பழமொழிகளைத் தப்பும் தவறுமாகப் புரிந்து கொண்டதால் பெண்களுக்கு சங்கடம்.
வீட்டிலும் நாட்டிலும் தொப்பைகள் பெருக்கம்.
எதனால் இதய நோய், சிறுநீரக நோய்கள் வருகின்றன எனத் தெரியாமல் எத்தனை வேதனைகள். இழப்புகள்.
இனிமேலாவது தமிழர்களின் கூரிய நுண்ணுணர்வினை நன்கு புரிந்துகொண்டு பழமொழிகளைச் சரியாக உச்சரிக்கச் சபதம் எடுத்துக் கொள்வோமா?
""கடவுளும் அவள் இடையும் ஒன்று சிலர் உண்டென்பார் சிலர் இல்லையென்பார்"" எனக் குமரன் என்பவர் (koodal1.blogspot.in) கவிதை எழுதியிருக்கிறார்.
இதென்ன இடையா? இல்லை விரிந்த குடையா? பெருகிய செல்களின் படையா? | விரதத்திற்கு உன் நாட்டில் தடையா? கொழுப்பின் வெள்ளமடையா? நீ ருசித்த உணவின் கொடையா? கன்றிருக்க கயிறு மேயுதாம் என்ற விடுகதைக்கு விடையா? நீ நடந்தால் நான் பாடணும் .......நடையா இது நடையா .... |
இடை இருவருக்குமே இல்லாதது போல் இருக்க வேண்டும்.
அது தான் அழகு.
சரியான உடல்வாகு உடையவர்களே எப்போதும் அழகு.
highly informative
ReplyDeletesuper information
ReplyDeleteNice information
ReplyDelete