நீரின்றி அமையாது உலகு.

முனைவர் ஜ.பிரேமலதா,தமிழ் இணைப்பேராசிரியர், அரசு கலைக் கல்லூரி, சேலம் 636 007 DR.J.PREMALATHA,ASSOCIATE PROFESSOR IN TAMIL,GOVT ARTS COLLEGE,SALEM -636 007.

Sunday, 23 August 2015

புத்தக வாசிப்பு அரிசோனா மகாதேவன் பதில்கள்

புத்தக வாசிப்பு


 

தாரகை இணைய வலைப்பதிவை
( https://tamizhtharakai.wordpress.com/)நடத்தி வருகிற அரிசோனா மகாதேவன் சார் நம் ஜனாதிபதி அப்துல்கலாம் அவர்களுடன் பணயாற்றியவர். தற்போது அமெரிக்காவிலுள்ள அரிசோனாவில் வாழும் இவர் தமிழ் மீது தாளாத காதல் உடையவர். தமிழ் இனி மெல்ல....என்ற இவரது நாவல் தமிழின் நிலை குறித்து எழுந்துள்ள எழுச்சியூட்டும் அற்புதமான நாவல்...எதிர்காலவியல் என்னும் நவீன உத்தியுடன் வெளிவந்துள்ளதமிழின் முதல் நாவல் இது. அவரது பதில்கள் இதோ......

ஒரு அரிசோனன் பதில்கள்......

1. நூல்கள் படிக்கும் பழக்கம் பெருக்க தங்களின் வழிகாட்டுதல் என்ன?
நூல்களை மலிவு விலையில்தர பதிப்பகங்கள் முன்வரவேண்டும்.  அரசு நூல்நிலையங்கள் நிறைய நூல்களை வாங்கிவைக்கவேண்டும்.  
2. மாணவர்கள் கல்லூரி வந்தவுடன் திசைமாறிப் போய்விடுகின்றனர். அவர்களை எவ்வாறு வாசிக்க வைப்பது?
 
தமிழ்க்கல்வி குறைவதே இந்நிலைக்குக் காரணம்.   அனைத்துப்பள்ளிகளிலும் தமிழ் கட்டாயப் பாடமாக்கப்படவேண்டும்.  தமிழ் நூல்கள் வாசிப்பும், அதில் தேர்வும் வைக்கப்படவேண்டும். மொழிக்கல்வி மதிப்பெண்கள், அறிவியல்துறை அனுமதிக்கு எடுத்துக்கொள்ளப்படாவிட்டாலே, தமிழ்க்கல்வி பெருகும் வாய்ப்பிருக்கிறது.
3. துறை சார்ந்த நூலகள் மாணவர்களுக்கு அந்நியமாகிப் போவதன் காரணம் பரந்த புத்தக வாசிப்பின்மையே எனக் கூறலாமா?
தாங்கள் கூறுவது சரியே.  ஆனால்,  அறியிவல் துறைகளில் பலதமிழ்நூல்கள் எழுதப்படுவதில்லை.  அப்படிச் சிலர் எழுதினாலும் "கடைவிரித்தேன், கொள்வாரில்லை!" என்ற நிலைதான் எங்கும் காணப்படுகிறது. 
4. துறை சார்ந்த நூலகள் தவிர பிற இதழ்களை தாங்கள் வாசிப்பதுண்டா? எனில் அவை குறித்த தங்களின் கருத்து என்ன?
 
உண்டு.  வாரப் பத்திரிகைகளின் தரம் வெகுவாகக் குறைந்துவருவதைப் பார்க்கிறேன்.  எழுத்துப் பிழைகள், இலக்கணப்பிழைகளும் ஒப்புக்கொள்ளப்படுகின்றன. 
5. இணைய வழி படிப்பென்பது தகவல் திரட்ட உதவும். வாழ்க்கையில் மனிதமனங்கள் பண்பட உதவுமா?
தமிழ்மொழி வளர, இணையவழிக்கல்வி மிகவும் தேவையான ஒன்று.  தமிழில் உள்ள அரிய, பெரிய நூல்களும், பண்பை வளர்க்கும் நூல்களும் இணையமேறவேண்டும். இளம்தலைமுறை அறிவியல்மூலமாக அனைத்தையும் அறியவிரும்புகிறது -- அதுவும் இணையமூலம் அறியவிரும்புகிறது.  அப்படிச்செய்தால், இணையத்தைக்கொண்டு மனிதமனங்களைப் பண்படுத்த இயலும்.
6.நூல் படிப்பதற்கும்  இணைய வாசிப்பிற்கும் உள்ள வித்தியாசம்?
நூல்கள் நண்பர்கள், வாழ்க்கையில் நம்மோடு நிற்கும் துணைவர்கள் என்றால், இணையத்தை ரயில் சினேகிதர்களுக்கு ஒப்பிடலாம்.   ஆயினும் அந்நிலை வெகுவாக மாறிவருகிறது.  இவ்வளவுதூரம் இணையம் வளர்ந்தபோதிலும், "முப்பத்திமுக்கோடி" [2015 ஜனத்தொகை 32 கோடி]  மக்களே வாழும்அமெரிக்காவில் ஆண்டுக்கு 260 கோடி படிகள்   [3,05,000 புது நூல்கள்] வெளியிடப்பட்டிருக்கின்றன.  அதேசமயம்  அமெரிக்காவைவிட நான்குமடங்கு மக்கள்தொகை உள்ள இந்தியாவில் 90,000 நூல்கள் மட்டுமே வெளியிடப்பட்டிருக்கின்றன.
7.பல நூல்களைப் படித்து அறிவை வளர்ப்பதின் மூலம் தன்னம்பி க்கை ஏற்படு ம். ஆக்கஅறிவு (Creativity) மிகும். இணையத் தரவுகள் இதைச் செய்யுமா?
 

நிச்சயம் செய்யும்.  இணையத்தில் விரல்நுனியில் விஷயங்களைப் பெறவியலும். ஆயினும் அவை தரவேற்றம் செய்யப்படவேண்டும்.  அதற்காக, தரமுள்ள நூல்கள் எழுதப்படவேண்டும். 
8. நூல் படிப்பு. கண்களுக்கு பயிற்சி. இணைய வாசிப்பு கண்களுக்கு கேடு.இணையத்தை நீண்ட நேரம் படிக்க பயன்படுத்தமுடியுமா?
தாங்கள் சொல்வது ஓரளவு உண்மையாக இருந்தாலும், கணினியில் படிப்பதற்காக, கண் அயர்ச்சி ஏற்படாமலிருக்க தகுந்த ஒளி வடிகட்டிகள் உள்ளன.  அவரை உபயோகப்படுத்தலாம்.  

9.
பல விஷயங்களை இணையத்தில்படித்தாலும்  புத்தக வாசிப்பு போல் சிந்தனையைத் தூண்டுமா?

இணையத்திலும் நிறைய மின்புத்தகங்கள் உள்ளன. சிந்தனையைத் தூண்டும் புத்தகங்களும் உள்ளன.  எதிலும் நன்மை, தீமைகள் இருக்கத்தான் செய்கின்றன.  திரைப்படங்கள், சின்னத்திரைகளில் உள்ளமாதிரித்தான். 
10.மக்கள் படிப்பதற்கேற்ற தரமான  நூல்கள் அதிக அளவில் வெளிவர என்ன செய்யவேண்டும்?
 நானறிந்தவரையில், தமிழநாட்டில் எழுத்தாளர்கள் [பிரபலமானவர்களைத்தவிர]
பிழைக்கவழியில்லை என்றுதான் சொல்லவேண்டும். நான் பழம் எழுத்தாளர் ராவ் அவர்களுடன் உரையாடும்போது அவர் மனம்வருந்திச் சொன்னதை உங்களுக்குத் தருகிறேன்: "ஒரு எழுத்தாளன் நல்ல புத்தகம் எழுத ஒரு ஆண்டு ஆகிறது என்று வைத்துக்கொள்வோம்.  புத்தகம் அச்சிடுபவர்கள்,  பதிப்பாளர்கள், விற்பனையாளர்கள் அனரிவருக்கும் கைமேல் காசு கிடைத்துவிடுகிறது.  அப்பாவி எழுத்தாளருக்கோ ஒரு பியூனின் ஊதியம்கூட கிடைப்பதில்லை."  இந்நிலை மாறினாலொழிய, தமிழில் நல்ல நூல்கள் வரப்போவதில்லை.  மக்கள் தமிழில் நல்ல நூல்கள் இல்லையென்று மற்ற மொழி நூல்களை வாங்கிப்படிக்கும் நிலை வரத்தான் போகிறது.  தென்னாட்டில் கேரளாவில் இந்நிலை இல்லை என்றும் கேளிவிப்பட்டேன்.  அங்கு புத்தக வளர்ச்சியைப்பற்றி தங்களும் அறிந்திருப்பீர்கள்.
11.நல்ல விமரிசகர்கள் உருவாகவேண்டுமானால் நல்ல பல படைப்புகள் வேண்டும். அதற்கு நல்ல ரசனை வேண்டும். அதற்கு நல்ல வாசிப்பு அவசியம். வட்டத்தைச் சுற்றி வருவது போலத்தான் இதுவும்.தங்களின் கருத்து என்ன?
இதற்கு முன்னர் கேட்கப்பட்ட கேள்வியில் நான்அளித்த பதிலில் இக்கேள்விக்கான பதிலும் அடங்கியுள்ளது. 
12.நீங்கள் காணும் தற்கால நூல்கள், இதழ்களில் உள்ள குறைகள், குற்றங்கள் என்ன? அவற்றை எப்படிக் களையலாம்?
எந்த ஒரு பதிப்பாளரும் இலாபம் ஈட்டவே முனைகிறார்.  தரமான புத்தகங்களை விளம்பரப்படுத்தில் விற்பனை செய்யும் பதிப்பாளர்கள் மிகவும் குறைவே.  குறைந்த நேரத்தில் பொருளீட்டவேண்டும் என்று ஒவ்வொரு பதிப்பாளரும் செயலிட்டால், தரமான புத்தங்கள் வெளிவரா.  அரசு நூலகங்களும் புத்தங்களை எளிதில் வாங்கி, விலையை உடனுக்குடன் கொடுத்துவிடுவதில்லை.  ஆகவே, எதைக் குறைகூறுவது.  இப்படி இருக்கும்போது, தமிழில் புத்தகங்கள் வெளிவருவே ஒரு பெரிய வியப்புதான்.  இதில் குறைகூறி அதையும் தடுக்க நான் விரும்பவில்லை.  
13.நீங்கள் படித்த புத்தகங்களில் உங்களுக்குப் பிடித்த நூல்கள் என்ன? உங்களுக்குப் பிடித்த படைப்பாளர் யார்?
 
அமெரிக்காவில் இருப்பதால், இப்பொழுது வெளியாகும் புத்தகங்களைப் படிப்பும் வாய்ப்பு எனக்குக் குறைவாகவே இருக்கிறது.  மறைந்த எழுத்தாளர்களில் எனக்கு மிகவும் பிடித்தவர்கள் கல்கி, அகிலன், ஜெயகாந்தன் , கி. இராஜேந்திரன் ஆகியோர், அவர்களின் எழுத்துக்கள்.  சுஜாதாவையும் பிடிக்கும்.  தேவன் அவர்களின் துப்பறியும் சாம்பு, பாக்கியம் இராமசாமி அவர்களின் அப்புசாமியும் ஆபிரிக்க அழகியும் போன்ற நகைச்சுவை நூல்களும் எனக்குப் பிடித்தவை.  இப்பொழுது ஜெயமோகன் அவர்களின் எழுத்தும் எனக்குப் பிடிக்கிறது.  அவரது எரணமுறைக்  [logical]  கட்டுரைகளையும் இரசிக்கிறேன்.
14. தற்போது வரும் இதழ்கள் தரமுடையனவாக உள்ளனவா?
அவற்றின் அச்சுத்தரம் உயர்ந்துள்ளது. 
15.புரட்சிப்பாதையில் கைத் துப்பாக்கிகளைவிட பெரிய ஆயுதங்கள் புத்தகங்களே என்றார் லெனின்.தற்போது இணையம் தகவல்களை விரைவாகத் தரலாம். ஆனால் உள்ஆற்றலை வளர்க்குமா?

இணையங்கள் தகவல்களை விரைந்து தந்தாலும், சிலசமயம் தவறான தகவல்களும், ஆய்வுகளும், ஒருதலைப்பட்சமான பதிவுகளும் மக்களைத் திசைதிருப்பும் வாய்ப்புள்ளது.  புத்தகங்களில் எவை நன்மைபயப்பவை, எவை போழுதுபோக்குக்கானவை, எவை குப்பை என்று நாம் உள்ளி உணரும் அளவுகோலை -- வள்ளுவர் கூறிய, "எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும், அப்போரும் மெய்ப்பொருள் காண்பதறிவு" என்ற குறளை  நினைவில்கொண்டு -- இணையத்தகவல்கள் விஷயத்திலும் செயல்படவேண்டும்.



No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்களைப் பதிவு செய்யலாமே?