நீரின்றி அமையாது உலகு.

முனைவர் ஜ.பிரேமலதா,தமிழ் இணைப்பேராசிரியர், அரசு கலைக் கல்லூரி, சேலம் 636 007 DR.J.PREMALATHA,ASSOCIATE PROFESSOR IN TAMIL,GOVT ARTS COLLEGE,SALEM -636 007.

Wednesday, 28 June 2017

மணிமேகலை .6

ணிமேகலை தனக்குள்  வினாக்கள் வினாக்களாகக்  கேட்டுக்  கொண்டாள்.
 ‘இப்போது எதற்காக அவர்களை நினைத்து நான் அச்சப்பட வேண்டும். எப்போதோ நடந்த சம்பவம். செவி வழியாக காலம் காலமாக வழங்கி வருகிறது. நான் பயப்பட மாட்டேன். 
 இங்கு மனிதர்களே தென்படவில்லையே.
 தன்னையே சமாதானப் படுத்திக் கொள்வதைத் தவிர அவளுக்கு வேறு வழியில்லை.
கால்கள் சோர்வடைய மரங்கள் உயர்ந்திருந்த கடற்கரைச் சோலைக்குச் சென்றாள். 
பசிபசிபசி..... அளவறியாத பசி......
விசாகை மற்றும்  மருதி நினைவு வேறு தொடர்ந்து அவளை அலைகழித்தது.
தங்களின் இச்சைக்குக் கணிகை குலமென்று ஒரு குலத்தையே உருவாக்கிட்ட இவர்கள்குல மகளிரையும்துறவு மேற் கொண்டவர்களையும்மணமான பெண்களையும் மானத்தோடு வாழ அனுமதிக்கவில்லையே.
சுதமதிவிசாகைமருதிஇவர்கள் மூவருமே எந்தத் தவறும் செய்யாதவர்கள். அழகாயிருந்தது அவர்கள் குற்றமேஓரு பெண்ணை அடைய வேண்டுமென்று நினைத்துவிட்டால்  எவளாகஇருந்தாலும்  அவளை அடைந்துவிடலாம் என்பது ஆண்களின் எண்ணமா?
அப்படியானால், உதயகுமரனும்  தன் பின்னால் அதற்காகத் தான் வந்தானா?
குலமகளிருக்கே பாதுகாப்பு இல்லாத நிலையில்என்னைப் போன்ற கணிகை குலப் பெண்களுக்கு என்ன பாதுகாப்பு இருக்கப் போகிறது. அதுவும் அவன் சர்வ அதிகாரமும் படைத்த மன்னன் மகன்.
மணிமேகலை விடை தெரியாமல் சோர்வடைந்தாள்.
அவன் மன்னன் மகன்.
 தான் கணிகை மகள்.
அவன் மன்னன் மகன்.
 தான் கணிகை மகள்.
திரும்பத் திரும்ப மனதிற்குள் சொல்லிக் கொண்டாள்.
ஆனால் அவன்பால் சென்ற நெஞ்சிற்கு இது புரியவில்லையே.
எல்லாப் பேதங்களும் மறைந்து அவன் உதயகுமாரனாகவும்தான் மணிமேகலையாகவும் மட்டும் சந்திக்க நேர்ந்தால்......
ஓடும் மேகங்களில் அவனோடு மிதக்கவேண்டும் . கொட்டும் மழையில் அவன் கை பிடித்து ஓட வேண்டும். கடலின் அலையில் கால் நனைய கை கோர்த்து நடக்கவேண்டும். மணக்கும் மலர் தோட்டத்தில் பூக்களாய் நாங்கள் இருக்கவேண்டும். எல்லை இல்லா இன்பம் அவனோடு பெற்றிட வேண்டும். என் இறுதிமூச்சை அவன் மடியில் விட்டிட வேண்டும். இந்த மனிதர்களற்ற இடத்தில் அவன் மட்டும் என்னோடிருந்தால்,  என் தந்தை தந்த பாதுகாப்பை அவன் எனக்குத் தருவதாயிருந்தால்.....கற்பனைகள் சிறகடிக்க மணிமேகலை கனவுகளில் மிதந்தாள்.
அவன் தோட்டத்தில் மலர் பறித்துக் கொண்டிருந்த அவளின் தோளைத் தொட்டுஅவள் திரும்புவதற்குள் ஒடி ஒளிந்து கொண்டான். உதயகுமரா, நீயும் என்னை விட்டுவிடாதே. தந்தை வானுலகம் சென்றான். தாயோ எனைத் துறந்து துறவு பூண்டு விட்டாள். நீ தான் நீ தான் எனக்குக் காவல். நீ வேண்டும். தேடித்தேடியலைந்தாள். கண்ணைக் கட்டி காட்டில் விட்டதுபோலிருந்தவளுக்கு ஒரு கொழு கொம்பாய் உதயகுமரன் தெரிந்தான். ‘
நீ என்னை மணக்கவில்லையானலும் மாதவி போல உன் ஒருவனுக்காகவே உயிர் வாழ்வேன். என்னை ஏற்றுக் கொள்! பித்துப் பிடித்தவள் போலத் தூக்கத்தில் உளறினாள். படுத்திருந்த அவள் இடைமீது உரிமையோடு கை போட்டு அவனும் அருகே உறங்குவதாய் உணர்ந்தாள்.  குறுக்கே ஒரு மான் ஓடியது. திடுக்கிட்டு விழித்தாள். மரங்கள் அடர்ந்த காட்டினைப் பார்த்தாள்.
சோலையா அல்லது அடர்ந்த காடா எனப் புலப்படாத நிலையில் அப்பகுதி காட்சியளித்தது.  எழுந்து காட்டினூடே நடந்தாள்.
அங்கிருந்த ஒவ்வொரு மரங்களும் அறுபது அடி உயரமிருக்கும்அவ்வளவு அகன்ற உயர்ந்த அடர்ந்த மரங்களை ஆச்சர்யத்துடன் பார்த்தாள். வானின் வெளிச்சத்தையே அவை தடைசெய்திருந்தன அவற்றின் விழுதுகள் மண்ணுக்குள் வேரோடி தனி மரமாகவே தெரிந்தன. அவற்றிடையே இருந்த இடைவெளியில் உள்நுழைந்து நிமிர்ந்து பார்த்தாள். கீச்கீச் என்று இடைவிடாமல் ஓசை மேலேயிருந்து எழும்பிக் கொண்டே இருந்தது.
தொடர்ந்து நின்றதில், கால் வலிக்கவே மரத்தின் பெருத்த விழுதுகள் மீது அமர்ந்தாள். நடந்து பழக்கமில்லாததால் கால்கள் வலித்தன. இப்படித்தானே கண்ணகித்  தாயும் நெடுதூரம் நடந்திருக்கிறாள். புகாரிலிருந்து மதுரைக்கு.....கால் வலிக்க வலிக்க... வலிக்க... 
அவள் அத்தனையும் பொறுத்துக் கொண்டது எதற்காக?
கணவனோடு வாழக் கிடைத்த வாய்ப்பிற்காக. ஆனால் நடந்ததோ....! 
நடந்ததோ வேறு.
கணவனையே இழந்த   துயரத்திற்கு  வழக்காட நாடாளும் மன்னனையே 
அயலூரில் நேரிட எத்தனை துணிவு வேண்டும்?எப்படி வந்தது அந்தத்துணிவு? பெருமை மிக்க புகார் நகரத்து வணிகர் குலப்பெண்ணாயிருந்து மாண்பு குன்றாத வாழ்க்கை வாழ்ந்து கள்வன் மனைவி என்ற இகழை ஏற்காத சீற்றமா?
 என்னவெல்லாம் கனவு கண்டிருப்பாள் ? 
மனம் திருந்திய மணவாளனிடம், மன்னிப்புக் கேட்ட கணவனிடம் மீண்டும் ஒரு புது வாழ்வு கிட்டும் என்ற நம்பிக்கையா?.
கள்வனான பொற்கொல்லன் சொல்வதை ஆராயாமல் ஏற்ற ஒரு மன்னன் ஏற்ற  பொய் 
 தவிடுபொடியாகி விட்டதே. 
அவனுக்கும் கண்ணகிக்கும் கோவலனுக்கும் என்ன உறவு? எதுவுமில்லை. அப்படியிருக்க அவனால் அவர்களின் வாழ்க்கை மட்டுமல்ல, என்னுடைய வாழ்க்கையும் இப்படி தடம் மாறி நிற்கிறதே? எந்தத் திக்கில் பார்த்தாலும் இருட்டாய் தெரியும் இந்தக் காட்டைப் போலத் தன் வாழ்க்கையும் தெரிகிறதே.
பொய்மை நிறைந்த உலகம்.  
பெண்களைத் தெய்வமாக்கி வழிபாடு செய்து கொண்டே மறுபுறம் அவளை முடக்கிசிந்தனைச் சிறகொடித்து ஒரு சிலரைக் கற்பென்ற சிறைக்குள் தள்ளிபலபேரைத் தன் இச்சைக்குப் பலியாக்கும் கயமை நிறைந்த உலகம்.  
மதுரையைக் கண்ணகி எரித்தது சரியென்றே தோன்றுகிறது.
 மக்களைக் காக்க வேண்டிய பொறுப்புடையவனே மக்களின் பொருளைக் கவர்ந்து கள்வனாகித் தன் தந்தையை வெட்டிச் சாய்ந்திருக்கிறானே.
தன் தந்தை, கொலையுண்டு இரத்தம் ஓட கிடக்கும் காட்சியை நினைத்துக் கொண்டாள். எத்தனை கொலைகள் அங்கு இப்படி நடந்திருக்குமோ?
 ‘ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என உணர்ந்து தான் கண்ணகி தாய் நகரைத் தீக்கிரையாக்கினாளோ?
கண்ணகியின் கொங்கைத் தீ மட்டுமல்ல மதுரையை அவ்வூர் பெண்களின் கொங்கைத் தீயும் சேர்த்துத்தான்  எரித்திருக்கும்.
உதயகுமாரன் மட்டுமென்னகாவல் காக்க வேண்டிய மன்னனேகயமை எண்ணத்துடன் பெண்களை நாடி அலைகிறானே.
கணிகை குலப் பெண்களை உரிமையோடுஆதிக்கத்தோடு ஆள நினைக்கும் அரசவர்க்கம்
அந்த  அதிகாரத்தை அக்குலப் பெண்களின்   மறுவாழ்வுக்கு ஏன்
  பயன்படுத்துவ தில்லை அனைவருக்கும் போதுமான உணவைக் கொடுக்கக் கூட இந்த அரசாட்சியால் முடியவில்லை. அரை வயிற்றுக் கஞ்சிக்காகத்தானே பல குலப் பெண்கள் மானமிழந்து கணிகைத் தொழிலுக்கு வந்து சேர்கிறார்கள். நாட்டுக்காக ஆண்கள் போரில் மடிகிறார்கள். வழியற்ற நிலையில் தன் பிள்ளைகளின் வயிற்றுக்காக பெண்கள் கணிகையாகிறார்கள். 
தானா இப்படியெல்லாம் யோசிப்பது?’ 
இந்த நெடுந் தனிமை   இன்னும்   எத்தனை   நாள்களுக்கு
அங்கு மாதவியும் சுதமதியும் தன்னைத்தேடி அழுது கொண்டிருப்பார்களே. மாதவிக்காவது சுதமதியும் சுற்றமும் இருக்கிறது. 
மதுரையில் கண்ணகி தாய் தனிமையில் எப்படி அழுது துடித்திருப்பாளோமனங்கலங்கி நின்ற அந்நிலையிலும் என்ன துணிவுமதிநுட்பம் அப்பப்பா நினைக்கவே வியப்பாக இருக்கிறது.
தந்தை எதற்காக ஒற்றைச் சிலம்பை எடுத்துக் கொண்டு விற்கச் செல்ல வேண்டும்? யாராவது ஒற்றைச் சிலம்பை விற்பதற்காக எடுத்துச் செல்வார்களா?
 ஒரு வணிகனானத் தன் தந்தைக்கு இதுகூடவா தெரியாமல் போயிருக்கும்?
 
 ஒற்றைச் சிலம்பை விற்பதற்காக வருபவனைக் கயவன் என்று தானே நினைப்பார்கள்? அதுதானே பொற்கொல்லனுக்குச் சாதகமாக அமைந்தது?
கண்ணகி வீட்டை விட்டு வெளியே சென்றறியாதவர் என்றார்களே. ஆனால் எவ்வளவு நுட்பமாகப் பாண்டியனின் சிலம்பிலிருப்பது முத்து என்று உணர்ந்து, அதையே ஆதாரமாகப் பற்றிக் கொண்டு வாதாடச் சென்றிருக்கிறார்கள். கண்ணகி வணிக குலத்தில் பிறந்தவள் என்பதை நிரூபித்து விட்டார்களே.
புகாரையே தாண்டியறியாத கண்ணகிதான், மதுரையில் பாண்டியனின் அவையைத் தேடிச் சென்று அவனுடைய சபையிலேயே அவனிடம் நேருக்கு நேர் வாதிட்டிருக்கிறார்கள்.
அரசியல் பற்றியோ ஆட்சி பற்றியோ எதுவும் தெரியாமலேயே, வாதில் வென்று பாண்டியனின் தவறைச் சுட்டிக்காட்டி, அவனைத் தன் வாயாலேயே ‘யானே கள்வன்‘ என்று சொல்ல வைத்திருக்கிறார்கள். அவனுடைய அரசாட்சியையே முடிவுக்கு கொண்டு வந்து விட்டார்களே. எவ்வளவு பெரிய புரட்சியை நடத்திக் காட்டிவிட்டார்கள். மணிமேகலைக்கு மேனி சிலிர்த்தது. 
அந்தத் தாயின் துணிவு தனக்கு வரவேண்டுமென்றுதான் கண்ணகியின் மகளென்று என்னைத் தாய் சொன்னார்களோ?
உடனே தன் தாயின் நினைவு வந்தது. கண்ணகியைத் தன் தாய் மாபெரும் பத்தினி என்றார்களே. அப்படியென்றால் தன் தாய் பத்தினி இல்லையா?
கணிகையிடம் சென்று வந்த கணவனை எதுவும் கேட்காமல், எந்தக் கோபத்தையும் காட்டாமல், தன் இழப்பையெல்லாம் சொல்லி வருந்தாமல், அன்போடு உபசரித்து  அவன் கேட்டவுடன் தன் சிலம்பை விற்க கொடுத்ததினால்தான் அவரை மாபெரும் பத்தினி என்றார்களோ?
சிலம்பை விற்கக்கொடுக்காதிருந்தால் என்னவென்று அழைத்திருப்பார்கள்?
ஏன் உன் ஆடல் பாடல்களால் என் கணவனை மயக்கி என் வாழ்க்கையைச் சீர்குலைத்து விட்டாய் என்று என் தாயைத்  தட்டிக் கேட்காததாலா?[தொடரும்]

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்களைப் பதிவு செய்யலாமே?