மணிமேகலை அறவண அடிகளை கைகூப்பி வணங்கினாள் .பின் பணிந்து அடிகளின் அடி தொழுதாள். மாதவியின் கையிலிருந்த அமுதசுரபியை அவருக்கு முன்னால் வைத்து மீண்டும் தொழுது நின்றாள். பின் மணிமேகலை தனக்கு நடந்தவற்றையெல்லாம் அடிகளிடம் கூறினாள் .
அவர் அமுதசுரபியைக் கையில் எடுத்துப் பார்த்தார். கண்மூடி நெடுநேரம் தியானத்தில் இருப்பது போல் அமர்ந்திருந்தார்.
பின்னர் கண்விழித்து மணிமேகலையிடம் ‘இது ஆபுத்திரனுடையது’ என்றார்.
‘ஆபுத்திரனா யார் அவர்? பெயரே புதுமையாக இருக்கிறதே. அவருக்கு எப்படிக் கிடைத்தது அடிகளே?’
அப்போது அவர் கூறியதைக் கேட்டதும் மணிமேகலைக்கு
அன்று இரவு முழுதும் சாலியின் நினைவு தான். அந்த சாலி எண்பது வயது கிழவனுக்கு மணமுடிக்கப்பட்டவள்.அப்போது சாலிக்கு பதினைந்து வயது. ஈவிரக்கமின்றி இளம் பெண்ணை ஒரு கிழவனுக்கு மணமுடித்திருக்கிறார்கள். அவனுக்கு ஏற்கனவே இரண்டு மனைவிகள். ஒரு வேலைக்காரி போல் நடத்தப்பட்ட சாலிக்கு கணவனின் சந்தேகப் பார்வை மேலும் துன்பத்தைத் தந்தது.
அவள் கணவனிடம் பாடங்களைக் கேட்க வந்த ஒருவன் அவள் படும் துயரங்களைப் பார்த்து மனம் வருந்தி இருக்கிறான்.
சாலிக்கு வீட்டு வேலை மட்டுமல்ல. அவன் கணவனுக்குப் பரிசாகக் கொடுக்கப்பட்ட மாடுகளையும் பராமரிக்க வேண்டும். பால் கறந்து விற்றுத் தானியங்களை வாங்கி வர வேண்டும். இடைவிடாத வேலை.
புதிதாக வந்த காளை வேறு அடங்க மறுத்தது. அதைக் கயிற்றில் கட்டி வைத்தாலும் அது திமிறிக் கொண்டிருந்தது. அதைப் பெரிய கம்பத்தில் கட்டிவிட்டு மாட்டுத் தொழுவத்தை அடுத்து உணவுக் கூடத்தில் சாலி அடுப்போடு போராடிக் கொண்டிருந்தாள்.
எங்கும் புகை மண்டலம். சதா திமிறிக்கொண்டிருந்த காளை, கயிற்றிலிருந்து விடுபட்டு அவளை நோக்கிப்பாய்ந்து ஓடி வந்ததை அவள் கவனிக்கவில்லை.
அவள் கணவனிடம் பாடங்களைக் கேட்க வந்த இளைஞன் அதைப் பார்த்து ஓடோடி வந்தான். ஆனால் அதற்குள் சாலியை அது முட்டித் தள்ளி விட்டது. அவள் தொலைதூரத்தில் சென்று விழுந்தாள். வெறிகொண்ட காளையை அடக்கி, தொழுவத்தில் கட்டிய இளைஞன், விழுந்து கிடந்த அவளை நோக்கி ஓடி வந்தான்.
சாலிக்கு பலத்த அடிதான்.
கைகளில், காலில் காயம். திடீரெனத் தூக்கி எறியப்பட்டதில் அதிர்ச்சி. எழ முடியவில்லை. அந்த இளைஞன் ஓடிச் சென்று தண்ணீர் கொண்டு வந்தான்.
சாலி அதை வாங்க கை நீட்டினாள்.
‘என்ன துணிச்சலடா உனக்கு?’
அவள் கணவனின் குரல்.
இளைஞன் திரும்பிப் பார்த்தான். சாலி நடுங்கிய படியே எழுந்து நின்றாள்.
‘போடா வெளியே. எத்தனை நாளா நடக்கிறது’
‘ஐயா நான் சொல்றதைக் கேளுங்க’
‘கேக்கறதுக்கு என்ன இருக்கு. அதான் பார்த்தாச்சே’
‘ஐயா....அவசரப்படாதீங்க...... காளை கயிறு அவிழ்ந்து அம்மாவை தள்ளிருச்சி. அதான் காப்பாத்த வந்தேன்.’
சாலி கணவனிடம் ஓடினாள். உண்மையைச் சொல்ல. ஆனால் அவனோ அவளை நோக்கி வந்து கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளினான்.’
சாலிக்குக் கணவனிடம் சொல்ல நல்ல செய்தி ஒன்றிருந்தது. அதுதான் அவள் கருவுற்றிருப்பது. ஆனால் நிலைமை கை மீறிவிட்டது.
அவள் ஓடிவந்து கணவனின் கால்களைப் பிடித்துக் கொண்டு அழுதாள்.
தன் குழந்தைக்காக அவன் வாரிசுக்காக ஏற்றுக் கொள்வான் என நினைத்தாள்.
‘ஒழுக்கங் கெட்டவளே. என் காலைத் தொட உனக்குத் தகுதியில்லை.’
எட்டி உதைத்தான்.
அந்த இளைஞன் செயலற்று வெளியேறினான்.
சுருண்டு விழுந்து மயக்கமானாள்.நள்ளிரவில் எழுந்தாள்.
கால் போன போக்கில் நடந்தாள்.
கால் சோர ஒரு திண்ணையில் அமர்ந்தாள். வெளியே வந்த வீட்டினர் அவளைப் பார்த்துச் சாடையாக அவதூறு பேசினர்.
அதற்குள் அவளைப் பற்றிய அவப் பேச்சுகள் பரவிவிட்டன.
சாலி, யார் யாரிடமோ போய் முறையிட்டாள். அழுதாள்.
‘ஒழுக்கங் கெட்டவளுக்கு என்ன நீதி கிடைக்கும்’
‘அவள் கணவன் உத்தமன். நல்லவன். அவனுக்குப் போய்த் துரோகம் செய்தாளே’ ஊரார் அவளைக் கேவலப்படுத்தினார்கள்.
அவ்வூரை விட்டே சென்று விட முடிவெடுத்தாள்.கால் போன போக்கில் தொலைதூரம் நடந்தாள். தென்திசை நோக்கி பயணப்பட்டாள். ஒரு மாட்டுத் தொழுவத்தில் ஆண் மகவை ஈன்றாள்.
அழகிய சிசுவை எப்படிக் காப்பாற்றுவது?
அந்தக் காளை மட்டும் தன்னை முட்டாமலிருந்தால், அவள் கணவன் இந்தக் குழந்தையைப் பெற்றதற்காகத் தலையில் வைத்துக் கொண்டாடியிருப்பான்.
ஆனால் உலகத்தின் பார்வையில் இந்தக் குழந்தை ஒழுக்கங் கெட்டவளின் குழந்தை.
இந்த உலகம் தன்னைப் பழித்தது போதாதென்று இந்தப் பச்சிளங் குழந்தையையும் பழி க்கும்.‘செய்யாத தவறுக்குத் தான் சுமக்கும் பழியை, தன் குழந்தையும் சுமக்க வேண்டுமா’
குழந்தை தன்னிடமிருக்கும் வரை தானே அதற்குக் களங்கமே!
சிந்தித்தாள். பச்சிளங் குழந்தையை அங்கேயே விட்டு அகன்றாள்.
குழந்தையின் அழுகுரல் கேட்டு அந்த வீட்டின் தலைவன் இளபூதி வெளியே வந்தான்.
‘எங்கிருந்து அழுகை ஒலிக்கிறது. பிறந்த குழந்தையின் அழுகை. யாருக்கு குழந்தை பிறந்திருக்கும்?’ தன் மனைவியிடம் சென்று எழுப்பினான்.
‘பூங்கோதை உனக்குக் கேட்கிறதா?’
கண்ணைக் கசக்கிக் கொண்டு எழுந்தாள். அவளுக்கும் குழந்தையின் அழுகை கேட்டது. இடைவிடாத அழுகை.
அக்கம்பக்கத்தில் யாரும் பிரசவிக்கும் நிலையில் இல்லை.
பின் யாருக்கு குழந்தை பிறந்திருக்கும்? இருவரும் அழுகை வந்த மாட்டுத் தொழுவம் நோக்கிச் சென்றார்கள்.
[தொடரும்]
பின் யாருக்கு குழந்தை பிறந்திருக்கும்? இருவரும் அழுகை வந்த மாட்டுத் தொழுவம் நோக்கிச் சென்றார்கள்.
[தொடரும்]
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்களைப் பதிவு செய்யலாமே?