நீரின்றி அமையாது உலகு.

முனைவர் ஜ.பிரேமலதா,தமிழ் இணைப்பேராசிரியர், அரசு கலைக் கல்லூரி, சேலம் 636 007 DR.J.PREMALATHA,ASSOCIATE PROFESSOR IN TAMIL,GOVT ARTS COLLEGE,SALEM -636 007.

Wednesday 28 June 2017

மணிமேகலை-3


உதயகுமரன், சுதமதியின் தைரியத்தைப் பார்த்து வியந்தான். ஏனெனில் கணிகையர் குலத்தைச் சார்ந்த பெண்கள், அன்னிய ஆண்களிடம் பசப்பு வார்த்தைகளைப் பேசுவார்கள். ஆண்களைக் கவருவதிலேயே குறியாக இருப்பார்கள். ஆண்களுக்குப் பிடித்த மாதிரி நடந்து கொள்ள கண்களால் மயக்குவார்கள். கொஞ்சி கொஞ்சிப் பேசுவார்கள். இவ்வாறு தான் அவன் கணித்து வந்திருக்கிறான் .
ஆனால் சுதமதி மிகத் துணிச்சலாக அவன் கண்களை நேருக்கு நேராகப் பார்த்தபடி பேசினாள். அவனுடைய கைகள் கோபத்தில் உடைவாளைப் பற்றியதைப் பார்த்த பின்னும்,  உதயகுமரனைக் கண்டு அவள் அஞ்சவில்லை. அவள் நிச்சயமாக கணிகையாக இருக்க முடியாது. அவள் யார்? எதற்கு கணிகையரோடு வாழ்கிறாள்?
மிகுந்த ஒழுக்கமுடைய குலப் பெண்ணைப் போல நடந்து கொள்ளும் அவள் மீது அவனுக்கு இரக்கம் தோன்றியது. அவள் யாராக இருக்கக்கூடும்?மன்னன் மகனாகிய தன்னிடமே இப்படி எதிர்த்து நிற்கிறாளே!மணிமேகலையை மறந்துவிடு என்று எனக்கே அறிவுரையும் கூறத் தொடங்கி விட்டாளே. அவள் மிக உறுதியான பெண் என்பதை உணர்ந்த உதயகுமரன்  ஆச்சரியத்தோடு கேட்டான், “உன்னைப்பார்த்தால் இந்த ஊரைச் சேர்ந்தவள் போலத் தெரியவில்லையே. எப்படி இக் கணிகையருக்கு சேடியானாய்?”
“நான் புகார் நகரில் மாதவி வீட்டில் சேடியாய்ச் சேருவதற்கு முன், சண்பை நகரத்தில் வசித்தவள். ஒரு அந்தணன் மகள். என்னை மாருதவேகன் என்ற கயவன் ஏமாற்றி, இந்நகரில் விட்டுவிட்டுச் சென்றுவிட்டான். திரும்பிப் போக வழியறியாது, நான்  ஒரு சமணப் பள்ளியில் பணிமகளாய் பணியாற்றி வந்தேன். என்னைப் பிரிந்தறியாத என் தந்தை மலர் பறிக்கச் சென்ற மகளைத் தேடி தள்ளாத வயதிலும் ஊர் ஊராய் அலைந்திருக்கிறார். அப்போது பல அந்தணர்களுடன் தீர்த்த யாத்திரை மேற் கொண்டு வரும் பொழுது போகுமிடமெல்லாம் என்னைப் பற்றி விசாரித்தபடியே சென்றிருக்கிறார். அப்படி என்னைத் தேடியபடியே புகாருக்கு  வந்தவர் என்னைத் தேடி இறுதியில் சமணப் பள்ளியில் கண்டறிந்தார். என்  நிலையறிந்து துயரமுற்றார். என்னையும் தன்னோடு தீர்த்த யாத்திரை வரச் சொன்னார். ஆனால் அவருடன் வந்த அந்தணர்கள் என்னை அனுமதிக்கவில்லை. எனவே நானும் அவரும் பல நாட்கள் புகார் நகரில் பிச்சையெடுத்து உண்டோம். விதியின் சோதனை என்னிடம் விளையாடியது    
“ஒருநாள் பிச்சையெடுத்து வரும் வழியில், கட்டுத்தறியிலிருந்து விடுபட்டு மதம் பிடித்ததுபோல பாய்ந்து வந்த ஒரு காளை மாடு, அவர் வயிற்றைக் குத்திக் கிழித்துவிட்டது.  அவருடைய வயிறு  கிழிந்து குடல் வெளியே வந்துவிட்டது.  குடலைக் கையில் ஏந்தியபடி அடைக்கலம் தேடி பலவாறாக அலைந்தோம். இறுதியில் நான் பணிபுரிந்த சமணப் பள்ளியடைந்தோம்.  அவர்கள் எங்களை உள்ளேயே அனுமதிக்கவில்லை.
“தெருவில் திகைத்து நாங்கள் பலபேரிடம் உதவி கேட்டு நின்றோம். பலரும் வேடிக்கைப் பார்த்தபடிதான் சென்றார்களேயன்றி யாரும் உதவவில்லை. அப்போது பிச்சை எடுத்தபடி சங்க தருமன் என்ற புத்தத்துறவி அங்கு வந்தார்., எங்கள் துயரைக் கண்டு துடிதுடித்து,  தானே முன்வந்து அவர் தங்கியிருந்த பௌத்த பள்ளிக்கு அழைத்துச் சென்று அடைக்கலம் தந்து, வைத்தியம் செய்தார். அவரே எனக்குப் புத்த மதத்தின் பெருமையை உணர்த்தியவர். என் தந்தை பௌத்த துறவியாகி  அம்மடத்திலேயே தங்கி விட்டார். என் தந்தையைப் பாதுகாக்கும் தேவைக்காக,  மாதவி புத்தர் வழியில் நடப்பவள் என அறிந்து அவர்களிடம் சென்று சேர்ந்தேன்”
‘சரி சரி மணிமேகலையின் தோழியாகிய உனக்கு, என்னுடைய மனநிலை நன்றாகத் தெரியுமல்லவா? நான் இந்நாட்டு மன்னனின் மகன். அவளிடம் என் ஆசையைக் கூறு. அவளை என்னைச் சந்திக்க ஏற்பாடு செய்.
“இந்நாட்டு மக்களைக் காக்கும் மன்னனின் மகனாகிய நீ, உன் மக்களின் மனநிலையறிந்து அதற்கேற்ப அவர்களைப் பாதுகாக்க வேண்டுமேயல்லாது அவர்களை துன்புறுத்தக் கூடாது.  மணிமேகலை துறவு மேற் கொள்ளப் போகிறாள். எனவே அவள் மீது கொண்டிருக்கும் ஆசையை நீக்கிவிட்டுவிடு. அவளை அவள் விருப்பப்படி வாழவிடு. உனக்கு உன் விருப்பப்படி வாழ  உரிமையிருப்பதுபோல அவளுக்கும் வாழ உரிமையிருக்கிறது.”
அவன் அதைப் பொருட்படுத்தவில்லை. “நீ யார் எனக்கு அறிவுரை சொல்வது? அவளை அடைய எனக்கு வேறு வழி உண்டு.  சித்ராபதி மூலம் மணிமேகலையை அடைவேன்” என்று கோபத்துடன் பளிக்கறையை வெறித்துப் பார்த்தபடி குதிரை மீதேறி புறப்பட்டு விட்டான்.
பளிக்கறையை விட்டு வெளியே வந்த மணிமேகலை உதயகுமாரன் சென்ற திசையையே பார்த்துக் கொண்டிருந்தாள்.  மணிமேகலை, என்னை அவன் இழிவாகப் பேசினாலும் அவன் பின்னேயே என் மனமும் செல்கிறதே!. இது  காதலின் இயற்கை எனில் அது என்னிடமிருந்து அழிந்து போகட்டும்என்று மனதிற்குள் நினைத்துக்கொண்டாள்.
மணிமேகலை அந்தப் புதிய இடத்திற்கு வந்து சேர்ந்ததை நினைத்துக் கொண்டாள். சுதமதியை மாருத வேகன் மயக்கி அழைத்துப் போனது போல தன்னையும் யாராவது மயக்கி இப்புதிய இடத்திற்கு அழைத்து வந்து விட்டார்களோ? இல்லையே அந்த உவ்வனத்தை விட்டு நாங்கள் வேறுவழியாக அல்லவா வெளியேறினோம்? ஆங்! இப்போது நினைவிற்கு வருகிறது. எங்கிருந்தோ ஒரு தெய்வ வடிவினள் வந்தாள். தன்னை மணிமேகலா தெய்வம் என்றும் என் குல தெய்வம் என்றும் அறிமுகப்படுத்திக் கொண்டதே. அத்தெய்வம்தானே எங்களுக்கு புதிய வழியைக் காட்டியது.
நாங்கள் செல்ல வேண்டிய சக்ரவாளக் கோட்டத்தைப் பற்றிக் கூறி, எங்களுடனே அந்த இரவு முழுவதும் தங்கியிருந்து கோதமையின் வரலாற்றையும் கூறியதே! நடு இரவானது அறியாமல், அந்தத் தெய்வத்திடம் கதை கேட்டுக் கொண்டிருந்தோம். நான் எப்போது உறங்கினேன் என்பதே தெரியவில்லையே. மீண்டும் விழித்துப் பார்க்கும்பொழுது, அந்தத் தெய்வத்தையும் காணவில்லை. சுதமதியையும் காணவில்லை. இந்த இடம் உவவனம் போலவோ, சக்ரவாளக் கோட்டம் போலவோ தெரியவில்லை. நான் மட்டும் இங்கு எப்படி வந்தேன்?
சுதமதிதான் இவ்வாறு ஒளிந்து கொண்டு மாயம் செய்கிறாளோ . . . . ‘சுதமதி . . .  சுதமதி . . . . இப்படி விளையாடாதே. எனக்கு பயமாக இருக்கிறது. எங்கு மறைந்து இருந்தாலும் வெளியே வாமணிமேகலை உரக்கக் கூவிக் கொண்டே கடற்கரை முழுதும் அலைந்தாள்.
கொஞ்சம் கொஞ்சமாக ஒளி பரவத் தொடங்கியது.
அப்போது கடற்கரை ஒட்டிய சோலைக்குள்ளிருந்து பல பறவையினங்கள் சிறகடித்து வானில் பறந்தன. அலையில் தவழும் குளுவை பறவைகள் வந்து அலைகளில் தங்கி விளையாடின. விரிந்த சிறகுடைய போதா என்ற பறவை அவள் தலை மேலே பறந்து சென்றது. சிரல் பறவை கடல் நீரில் பாய்ந்து விருட்டென மீனோடு வெளியே வந்தது. தன் சிறகுகளை ஒடுங்கியவாறே இருக்கும் முழுவல் பறவை சிறகுகளை ஒடுக்கியபடியே கடற்கரை மீனைத் தேடி ஓடியது. ஒருபுறம் அன்னச்சேவல் தன் பேடையுடனும், குஞ்சுகளுடனும் தோற்றம் தந்து சோலைக்குள் மறைந்தது. இன்னும் அவள் பார்த்தேயிராத பல பறவையினங்கள் வானில் சிறகடித்து இரை தேடிப் பறந்தன. அவைகள் தான் எத்தனை வண்ணங்கள், வடிவங்கள். எங்கெங்கும் கடற்காகம், கிளி, கடற்புறா பறந்து திரிந்தன.
மனிதர்கள் ஓசையே எங்கும் கேட்கவில்லை.
இந்நேரம் புகாராக இருந்திருந்தால்?
வலம்புரிச் சங்குகள் பெருகி ஒலித்திருக்கும். யானைகள் பிளிறியிருக்கும். குதிரைகள் கனைத்திருக்கும். பணிப் பெண்கள் வேலை செய்யும் பொழுது ஏற்படும் வளையல்கள் ஓசை காதில் நிறைந்திருக்கும். கோயில்களிலிருந்து மணியோசை ஒலித்திருக்கும். ‘பூ விற்கும் பெண்களின் இனிய குரலோசை எழுந்திருக்கும். தோற்கருவிகளை கடைகளின் வாயில் தோறும் நின்று இசைப்போர் எழுப்பும் முழக்கம் கடைவீதியை நோக்கி அனைவரையும் இழுத்திருக்கும். இங்கு அப்படிப்பட்ட எந்த ஓசையும் எழவில்லை.
இங்கு பறவைகளின் ஓசைகள் எங்கும் நிறைந்திருக்கின்றன. ‘புகார் நகரில் காணும் யாரையும் காணவில்லையே. ஐயோ, மனிதர்களையே காணவில்லையே. நான் இறந்து இங்கு பிறந்திருக்கின்றேனா?
 சக்ரவாளக் கோட்டத்துப் பூதங்கள் கோதமையின் மகனைக் கொன்றதுபோல என்னையும் கொன்றுவிட்டனவோ? நான் பேயாக மாறி அலைந்து கொண்டிருக்கிறேனோ? பேய் வடிவம் எப்படியிருக்கும்? குனிந்து தனக்கு கால்கள் இருக்கிறதா எனப் பார்த்துக் கொண்டாள். கால்களால்தானே இதுவரை நடந்து வந்தோம் எனச் சமாதானம் கொண்டாள். ஒருவேளை பூதம் சுதமதியைக் கொன்றிருக்குமா? நான் சக்ரவாளக் கோட்டத்தின் இன்னொரு பக்கத்தில் அலைந்து கொண்டிருக்கிறேனோ?
மனங் கலங்கி மணிமேகலை அச்சத்தினால் பீடிக்கப்பட்டாள். இங்கும் அங்கும் ஓடினாள். அவளின் கொண்டை அவிழ்ந்து கூந்தல் முதுகில் விழ, கூவினாள், புலம்பினாள், ஏங்கினாள், அழுதாள். அவளைத் தேற்றுவார் யாரும் அங்கில்லை. மனம் நைந்தாள். இனி மாதவியோடு யாரையும் பார்க்க முடியாமல் போய் விடுமோ என கலங்கினாள்.
அவளுக்கு தன் தந்தையின் நினைவு வந்தது. ‘தந்தை இருந்திருந்தால் தனக்கு இப்படி ஒரு நிலை வந்திருக்குமா? தாய் கண்ணகியோடு வேறு நாட்டை அடைந்து, வீண்பழி சுமந்து வெட்டுண்டு இறந்த ஐயாவே. என் நிலையைப் பாருங்கள். அனாதை போல ஆனேனே! இந்த இடம் எது என்று தெரியவில்லையேஎன வாய்விட்டுஅரற்றி அழுதாள்.
சிறிய வயதில் தந்தையோடு விளையாடிய விளையாட்டுக்களை நினைத்தாள். தன் கைச்சிறைக்குள் மகளை எப்போதும் காத்த தந்தையின் நினைவு அவளை வருத்தியது. ‘தாய் சொன்னதுபோல தன் மீதிருந்த பாசத்தின் காரணமாகத்தான் பொருளீட்ட வேற்று நாடு சென்றீரோ. உங்களை விடப் பெரிய பொருள் உலகத்தில் இல்லை என்பதை உணராமல் போனீர்களே. தெருவில் மதம் பிடித்த யானையொன்று காண்போரைத் துன்புறுத்துவது அறிந்து, தன் உயிரையும் பொருட்படுத்தாது அதனோடு போராடி அதனை அடக்கி பல உயிரைக் காத்தீர்களே. இப்போது உங்கள் மகள் யாராலும் காப்பாற்றப்படாமல், தனியாக அழுது கொண்டிருக்கிறாளே. ஊருக்கெல்லாம் பொருள் கொடுத்து தான தருமம் செய்தீர்களே. அந்தத் தருமங்கள் எதுவும் என்னை இப்போது காக்கவில்லையே. என் நிலையைப் பாருங்கள்என வான் நோக்கிக் கதறி அழுதாள். அப்படியே நெடுமரம் கடற்கரை மணலில் சாய்வது போலச் சாய்ந்தாள். மயங்கிப் போனாள்.
உச்சி வெயில் சுட்டெரிக்கும் வேலையில் நினைவு திரும்ப எழுந்தாள். எம்மாற்றமும் இல்லை. அதே இடத்தில்தான் கேட்பாரற்று கடும் வெயிலில் இவ்வளவு நேரமும் கிடந்திருக்கிறாள். கடுமையாக பசித்தது. வாழ்வில் முதன்முறையாக பசியின் கொடுமையை உணர்ந்தாள். கண்கள் மயங்கின. பார்வை மங்கியது. காது அடைத்தது. தன் மேல் ஒட்டிக் கொண்டிருந்த மணலைத் தட்டிவிட்டாள். தலை வலித்தது.
வேறு வழியறியாது, நிழலுக்காக, கடற்கரையொட்டி இருந்த சோலையை அடைந்தாள். அங்கு பல பழ மரங்கள்... கொய்யா, நாவற் மரம், இலந்தை மரம், வாழை மரங்கள், மாமரங்கள், பலா மரங்கள் தென்பட்டன. அவளுக்கு அதிசயமாக இருந்தது. அந்தச் சோலைக்குள் சற்று அச்சத்துடனே நுழைந்தாள். அங்கும் பறவைகளின் ஒலியே எங்கும் ஒலித்தது. சில அணிற்பிள்ளைகள் மரத்திற்கு மரம் தாவின. குரங்குகள் அவளைக் கண்டதும் அதிசய பிராணியைப் பார்ப்பதைப் போலப் பார்த்தன.
குயில் ஒன்று அவளைப் பார்த்ததும் நீண்டு ஒலித்தது. பல வண்ணக் கிளிகள் ஒரு கிளையில் வரிசையாக அமர்ந்திருந்தன. அவளுடைய சுண்டு விரல் அளவே இருந்த குருவிகள், சிட்டுக் குருவிகள், பாடும் வானம்பாடிகள் அந்தச் சோலையில் அங்குமிங்கும் பறந்த வண்ணமிருந்தன. சற்றே அச்சம் நீங்கினாலும், கொடிய விலங்குகள் எங்கிருந்தாவது பாய்ந்து வந்து விடுமோ என்ற பதற்றத்துடன் அச் சோலைக்குள் நுழைந்தாள். பழங்களைப் பறித்து பசியாறினாள். பசியாறியவுடன் சிறிது தெம்பு வரவே ஒரு பருத்த மரத்தினடியில் அமர்ந்தாள். அவளருகே பறவைகள் அச்சமின்றி வந்தமர்ந்து, தரையில் கொத்தித் துழாவின.
மணிமேகலைக்கு கிடைத்த அந்த நீண்ட தனிமை ஏன்?எதற்காக? விதியின் விளையாட்டு தானா? தன் வாழ்க்கையில் நடந்த பல நிகழ்ச்சிகளையும், பலருடைய வாழ்க்கைப் பற்றித் தனக்குள் எழுந்த வினாக்களையும் மெல்ல நினைத்துப் பார்க்கத் தொடங்கினாள். ஒரு மான் தொலைவில் தலைநீட்டியது. மெதுவாக தன் குட்டியுடன் வந்து புல்லை மேயத் தொடங்கியது. அவளுக்குத் தன் தாய் நினைவிற்கு வந்தாள். இந்தச் சோலை எப்படி சூரியனின் வெப்பக்கதிரினை உள்ளே விடாமல் குளர்ச்சியாக உள்பகுதியை வைத்து இருக்கிறதோ, அதைப் போல தன்னைச் சமூகத்தின் எந்த புறச் சூழலும் பாதிக்காத வண்ணம் காத்து வந்திருக்கின்றாள். இப்போது அனைத்து மரங்களும் வெட்டப்பட்டு விட்ட சோலையில் எப்படி சூரியக் கதிர்கள் உள் நுழைந்து நீரை உறிஞ்சி நிலத்தைப் பாலையாக்குமோ அதைப்போல, தன் நிலையை ஆக்கிவிட்டாள்.  
இது அவளால் ஏற்பட்டதா?
இச்சமூகத்தினால் அவளுக்கும் எனக்குமே ஏற்பட்டதா?
பாட்டி சித்ராபதி ஏன் தாயையும், தன்னையும் கணிகை குலத் தொழிலில் ஈடுபடச் சொல்கிறாள்?  தன் தாய் மாதவியிடம் இல்லாத பெருஞ் செல்வமா? பாட்டி சித்ராபதி தேடிச் சேர்த்த செல்வங்களும் ஏராளமாக இருக்கின்றன. தாய்க்கும் பாட்டிக்குமான முரண் ஒழுக்கத்திலும், ஒழுக்கக்கேட்டிலும் என ஏன் வந்தது. தாய்தான் குல மரபிலிருந்து வழுவி கணிகைகுல ஒழுக்கத்தை மீறுவதாகப் பாட்டி கூறுகிறாளே. ஆனால் தாயோ சமூகம் விதித்துள்ள குலமுறைப் பெண்களுக்கான ஒழுக்கமே தான் நாடுவது என உறுதியாக இருக்கிறாளே! இதில் எதை ஏற்பது?
கணிகையாக வாழ விருப்பமில்லாதவர்கள்  துறவைத் தான் நாட வேண்டுமா?
ஆனால் உதயகுமரனைப் பார்த்த நாள் முதல் அவனிடமே என் மனம் செல்கின்றதே!
 உதயகுமரனைப் பற்றி நினைத்த உடனே இன்ப நினைவுகள் அவளுக்குள் கிளர்ந்தெழுவது ஏன்?
பருவ வயதுக் கனவுகள் மணிமேகலை  விழிகளில் வலம் வந்தன. ஆனால் அவன் தான் அரசன் மகன்!
 தான் ஒரு கணிகையின் மகள்!
 அவளுக்குத் துக்கம் தொண்டையை அடைத்தது. தந்தை இருந்திருந்தால் உதய குமரன் தன்னை இவ்வாறு துணிவோடு தேடி வந்திருப்பானா? அல்லது நான்தான் சுதமதியோடு உவவனம் சென்றிருக்க நேருமா?
உவவனம் தேடிச் சென்றபோது புகாரில் நடந்த சில நிகழ்ச்சிகள் நினைவிற்கு வந்தன. பிச்சைப்பாத்திரம் ஏந்திய ஆடையைத் துறந்த சமண முனிவரை ஒரு கள் குடியன் வழிமறித்து வம்பு செய்து கொண்டிருந்தான்அதைப் பலர் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்களே தவிர முன்வந்து யாரும் தடுக்கவில்லை.
மற்றொருபுறம், பேடு என்னும் கூத்தினை பலர் பார்த்துக் கொண்டிருந்தனர். அந்தப் பக்கமாக நடந்து வந்த மணிமேகலையைக் கண்டதும், காணாததைக் கண்டதைப் போல அவளைச் சூழ்ந்து பேரழகுடைய இவளை தவநெறிப் படுத்திய மாதவி கொடியவளேஎனத் தாயைத் தூற்றினர்.  
என் தாயைத் தூற்றுவதற்கு இவர்கள் யார்? எல்லாவற்றையும் வேடிக்கை பார்க்க மட்டுமே கற்றிருக்கிறார்கள்.
 என் தாய் போன்ற பெண்களுக்கு இவர்கள் காட்டிய மாற்று வழிதான் எது? சித்ராபதியின் மனநிலையில் தான் என் தாயும் செயல்பட வேண்டும் என்று கூற இவர்களுக்கு யார் அதிகாரம் கொடுத்தது?
எனக்கு நல்வாழ்வு தர யாராவது முன் வந்தார்களா? என் தாய் வேறு வழியில்லாமல் தானே தவநெறியை ஏற்றுக் கொண்டாள்.
கணிகையர் குலத்தில் பிறந்தது தான் என் குற்றமா?
 மாற்றுப் பாதையில் நடக்க ஒரு தருமம் ..புத்த தருமம் கை கொடுத்ததே என அதைப் பின்பற்றி, தன் தலைமுறையைக் காப்பாற்ற நினைக்கிறாளே அது குற்றமா?
 இவர்கள் பார்வையில் கணிகை, குலமகள் ஆக முடியாது. கூடாது. தவநெறியைக் கடைப்பிடித்தாலும் அதுவும் கூடாது. அதுவும் குற்றம்.
கோபத்தில் மணிமேகலைக்கு பெருமூச்சு வந்தது. கண்கள் சிவந்தன.
இந்தச் சுதமதி நல்ல ஒழுக்கமுள்ள அந்தணரின் மகளாகத்தானே பிறந்தாள்!எவனோ ஒருவன் விண்ணிலிருந்து ஒரு விமானத்தில் மிகுந்த நகையணிந்து செல்வச் செருக்கோடு இறங்கி வந்து, பூப்பறித்துக் கொண்டிருந்த அப்பாவிப் பெண்ணைத் தூக்கிக் கொண்டு சென்றிருக்கிறான்.
சில நாள்கள் இன்பத்தை அனுபவித்துவிட்டு, எங்கோ ஓரிடத்தில் அவளை ஈவு இரக்கமின்றி இறக்கிவிட்டு எதுவும் சொல்லாமல் சென்றிருக்கிறான். அவளும் திரும்பிச் செல்ல வழியில்லாமல் சமணப் பள்ளியில் அடைக்கலம் தேடுகிறாள். அவள் தந்தை தன் குல அந்தணர்களோடு தீர்த்தம் ஆட வந்தவன், புகாரில் இவளைக் கண்டு தன் குலத்தோடு சேர்த்துக் கொண்டு ஊர் திரும்ப நினைக்கிறான். ஆனால் சிறிதும் கருணையற்ற அந்த அந்தணர்கள், ஒரு தவறும் செய்யாத தன் இனக் குலப் பெண்ணின் ஆதரவற்ற நிலையறிந்தும் தங்களுடன் சேர்த்துக் கொள்ள மறுத்து விட்டனர்.
பெண்ணை நடுத்தெருவில் பிச்சையெடுக்கும் நிலைக்கு ஆளாக்குவது தான் அந்தணர் குல தர்மமா என்று கூட சிந்திக்கவில்லை. பாவம் தங்க இடமின்றி பல நாள்கள் சுதமதி, தந்தையோடு பிச்சையெடுத்திருக்கிறாள். இதை இந்தப் புகாரில் இருந்தவர்களெல்லாம் பார்த்துக் கொண்டு தானிருந்திருக்கிறாகள்.
 காளை முட்டி அவள் தந்தை குடல் சரிந்து, குடலைக் கையில் ஏந்தி உயிருக்கு அலைந்த நிலையில், அவன் அந்தணன் என்பதால் சமணப் பள்ளி அவனை நிராகரித்திருக்கிறது. புகார் நகரில் போவோர் வருவோரெல்லாம், இரத்தம் பெருக தன் குடலைத் தன் கையில் சுமந்தபடி தெருவில் அலைந்த தந்தையையும், மகளையும் வேடிக்கை பார்த்துத் தான் சென்றிருக்கிறார்கள். சங்க தருமன் மட்டும் உதவாவிட்டால் இவர்கள் நிலை என்னாகியிருக்கும்?
பணம் படைத்தவன் பெண்ணை அனுபவித்து கை விடுகிறான். குலமானம் பேசுபவன் தன் குலத்தைச் சேர்ந்தவனையே தெருவில் பிச்சையெடுக்க விடுகிறான். தன் குலப் பெண்ணிற்கு நடந்த கொடுமையைத் தட்டிக் கேட்க யாரும் முன் வரவில்லை. புகார் நகரத்து மக்களோ இந்திர விழா காட்சிகளைக் கண்டு களிப்பதுபோல, இவற்றையெல்லாம் கண்டு களித்துக் கொண்டிருக்கிறார்கள்.
இப்படிப்பட்ட மானம் கெட்ட மக்களின் முன்தான், தாய் மாதவி நடனமாட வேண்டுமாம். அதுதான் குலதர்மமாம். பாட்டி சித்ராபதி தன் குல மானத்தைப் பற்றிப் பெரிதாகப் பேசுகிறாள்.
அவரவர் குலம் அவரவர்களுக்கு உயர்வு!  குலமாம் குலதர்மமாம் மணிமேகலைக்கு அடிவயிற்றில் இருந்து கசப்பு பீறிக்கொண்டு  வந்தது![தொடரும்]

1 comment:

உங்கள் கருத்துக்களைப் பதிவு செய்யலாமே?