நீரின்றி அமையாது உலகு.

முனைவர் ஜ.பிரேமலதா,தமிழ் இணைப்பேராசிரியர், அரசு கலைக் கல்லூரி, சேலம் 636 007 DR.J.PREMALATHA,ASSOCIATE PROFESSOR IN TAMIL,GOVT ARTS COLLEGE,SALEM -636 007.

Wednesday, 28 June 2017

மணிமேகலை :8

ருட்டில் ஒன்றும் தெரியவில்லை. தட்டுத்தடுமாறி கைகளைச்சுற்றித் தடவிப்பார்த்தாள். காலை ஒரு மரத்தின் விழுதுகள் பிணைத்திருந்தன

இருகைகளாலும் அவற்றின் பிணைப்பிலிருந்து விடுபட்டு விழுதுகளை விலக்கிக்கொண்டு  வெளியே வந்தாள். 

ஆங்காங்கே சிவப்பாய் மின்னுகிறதே அது என்ன?’ இருட்டில் ஒன்றும் புலப்படவில்லை. 

கால்களுக்கிடையே எதுவோ நீளமாக ஊர்ந்தது. அசையாமல் நின்று விட்டாள். விடியும் வரை நின்று கொண்டேயிருந்தாள்.

 காலை சூரியனின் ஒளி எங்கும் வீசி நிற்கஅவள் பார்வையில் பட்டவையெல்லாம் எங்கும் பாம்புகள். பாம்புகள். பலவண்ணம். பலவடிவம். பல நீளம். பாம்புகளுக்கிடையில் தான் மரத்தோடு ஒரு மரமாய் நிற்பதை உணர்ந்தாள்.

கண்ணில் பட்ட சிவப்பு ஒளிகள் மாணிக்கக்கற்கள் என்று போகப்போக விளங்கிற்று.

இது நாகர்களின் நாடாக இருக்கலாம் என முதன்முதலாக நினைத்தாள். புகாரிலிருந்து முப்பது யோசனை (240 மைல்) தூரத்தில் உள்ள நாகத் தீவாக அல்லது மணித்தீவாக இது இருக்கலாம். அவ்வளவு தொலைவு எப்படி ஓரிரவில் இங்கு வந்தேன்?’ 

வெளிச்சம் படர்ந்ததும் பாம்புகள் புற்றுக்குள் பதுங்கிக் கொண்டன. அவை இருந்ததற்கான அடையாளங்களே இல்லை. மீண்டும் சோலைக்குள் அவள் செல்லவேயில்லை. கடற்கரையையை ஒட்டியே தன் பொழுதைக் கழித்தாள். இரவுகள் வந்தன.போயின. பகல்கள் வந்தன போயின. 

இரவும் பகலுமாக நான்கு நாள்கள் நகர்ந்தன. இன்னும் அவள் அறிந்தேயிராத பல விலங்குகளைப் பார்த்தாள். ஆனால்அவளை எவையும் பொருட்படுத்தவில்லை. அப்படி ஒருத்தி அத்தீவில் இருப்பதாகவே எவையும் கருதவில்லை போலும். அவை எதற்கோ கட்டுப்பட்டவைப்  போலத் தன் வழியில் இயங்கிக் கொண்டிருந்தன. கொஞ்சம் கொஞ்சமாக அச்சம் விலகத்தொடங்கியிருந்த்து. தனிமை பயம்இருள் பயம்எதிர்காலப் பயம்பசிபாம்பு பயம் ஒவ்வொன்றாக அவளை விட்டுக் கழன்றன. 

மணிமேகலைக்கு அந்தப் பகுதி ஓரளவிற்குப் பிடிபட்டிருந்தது. கடற்கரை சார்ந்தே பல மைல்கள் நடந்தபடி இருந்தாள். 

ஐந்தாவது நாள்தான் சோலைக்குள் நுழைந்து பார்ப்பதென முடிவெடுத்துதுணிவுடன் உள் நுழைந்து சென்றாள். கண்ணுக்கெட்டிய தூரம் பழ மரங்கள்  

ஏராளமாக விளைந்திருந்த பழ மரங்கள்

அங்கு ஒரு தடாகம் தென்பட்டது. மனிதர்கள் கால் படாத அப்பகுதியில் முதன்முறையாக அவளுடைய காலடித்  தடங்கள் பதிந்தன.

......ஒருவித அச்சத்துடன் மருள மருள அக்கம்பக்கம் பார்த்தபடிதிரும்பி செல்வதற்கு முன்னேற்பாடாகத் தன்னுடைய கால் தடங்களை அழுந்தப்  பதிந்தபடியே முன்னேறிக் கொண்டிருந்தாள். 


அங்கே அதிசயமாக மூன்றடி அகலமும் ஒன்பதடி அகலமுடைய ஒரு உயர்ந்த பீடம் கட்டப்பட்டிருந்தது. மணிமேகலைக்கு மிகுந்த ஆச்சரியமாக இருந்தது. இப்படியானால் இத்தீவில் மனிதர்கள் வசிக்கிறார்களா

எப்படி இப்படி ஒரு பீடம் இங்குக் கட்டப்பட்டிருக்கிறதுவிடை தெரியாத வினாக்களோடு அப்பீடத்தை நோக்கி விரைந்து சென்றாள். அப்பீடத்தின் மேல்பகுதியில்,மையத்தில் இரு பாதங்களின் சிற்பங்கள் வடிக்கப்பட்டிருந்தன. அந்தப்பாதங்களின் மீதும் அவற்றின் கீழும் பல மலர்கள் விழுந்திருந்தன. 

அந்தப் பகுதியருகில் இருந்த பறவைகள் ஓசையெழுப்பாததால் அந்தப் பகுதியே மிக மிக அமைதியாக இருந்தது. கடலில் பேரோசை கூட அங்குக் கேட்கவில்லை. 

கடற்கரையிலிருந்து வெகு தொலைவிற்கு தான் வந்து விட்டதை உணர்ந்தாள்.அது யாருடைய பாதச் சிற்பமாக இருக்கும்யார் இங்கு இதைச் செதுக்கியிருப்பார்கள். 

புத்த தேவனுக்கே பாத வழிபாடு தொன்று தொட்டு நடப்பதை அறிவாள். அப்படியானால் புத்த தேவனை வணங்கக் கூடியவர்கள் யாராவது இங்கு இருக்கலாம். தன்னறியாமல்தலைமேல் கை கூப்பித் தொழுது வணங்கினாள். விழுந்து வணங்கினாள். கண்களில் கண்ணீர் பெருகியது. அப்படியே அங்கேயே அமர்ந்துவிட்டாள். கண்களை மூடிக் கொண்டாள். [தொடரும்]

 

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்களைப் பதிவு செய்யலாமே?