1 மணிமேகலைநாவல்
----------------------------------------
[‘பெண்களின் மொழிக்கு ஒரு எல்லை வகுத்திருக்கிறது இந்த உலகம்]
மணிமேகலை துயிலெழுந்தாள்.
எழும்போதே ஏதோ மாற்றம் உணர்ந்தாள்
.
.
குளிர் காற்று வீசும் நுண் மணல் பரப்பில் படுத்திருக்கிறாள். கண்களை இரு கரங்களாலும் தேய்த்து உறக்கம் அகற்றியபடி எழுந்து அமர்ந்தாள். சுற்றிலும் கண்களை ஓடவிட்டாள் . சுற்றிலும் கடல்.
சூரியன் அப்போதுதான் பொன் கிரணங்களை வீசியபடி எழுந்து கொண்டிருந்தான். கடலெங்கும் தங்கமயமாய் ஜொலித்தது. அந்த அற்புதக் காட்சியில் ஒரு கணம் மெய் மறந்தாள். ஒரு கணம் எல்லாம் மறந்து ஒரு புதிய உலகின் புதிய உயிர் போல் அதிசயத்தை அனுபவித்தாள்.
அடுத்த கணமே தான் இருப்பது இதுவரை தன் வாழ்நாளில் பார்த்தறியாத புதிய இடம் என உணர்ந்தாள். ஐயோ இது என்ன இடம்? இது புகாரின்
கடற்கரையோ அல்லது பளிக்கறையோ? இல்லை இல்லை இது பளிக்கறை இல்லை. கடற்கரைதான்.
சுதமதி எங்கே?எங்களைப் பளிக்கறையிலிருந்து கடற்கரைக்கு
அழைத்து வந்த மணிமேகலா தெய்வம் எங்கே?
இது என்ன இடம்?
ஐயோ மாதவித் தாய் தவியாய்த் தவித்துக் கொண்டிருப்பாளே? இந்த சுதமதிக்கு
என்னாயிற்று?
என்னை இப்படித் தனியாய் விட்டு
எங்கே சென்றாள்? என்னை பத்திரமாய் பார்த்துக் கொள்வதாய்ச் சொல்லி உவவனத்திற்கு
அழைத்து வந்தாளே? இந்த இடம் புகாரின் எந்தப்பகுதி? கடலிலிருந்து எழும் சூரியனைப்
பார்த்தால் இது காலை நேரம் போலத் தெரிகிறதே. ஆனால் புகாரின் காலை நேரத்து எந்த ஓசையும் இங்கு கேட்கவில்லையே. இங்கு எப்படி வந்தேன். நேற்று நடந்ததை நினைத்துப் பார்த்தாள்.
பாட்டி சித்ராபதியின் ஆணையை தெரிவிக்க, வயந்தமாலை வீட்டிற்கு வந்திருந்தாள். மாதவியிடம் போகிக்கு அதிபதியான இந்திரனுக்கு விழா எடுக்கும் நாளில் ஆடலில் விஞ்சியவரான மாதவியும் மணிமேகலையும் பங்கேற்காதது குறித்து, ஊரார் தூற்றும் பழிச் சொல்லை எடுத்துரைத்து வரச் சொன்னதாக ‘சித்ராபதி’ தன்னை அனுப்பிய சேதியைச் சொன்னாள். அது கேட்டு மாதவி மிக்க துயருடன் தன் மறுப்பை அவளுக்குப் புரியும்படி எடுத்துரைத்தது நினைவிற்கு வந்தது.
‘மாதவி நீ எப்பேர்ப்பட்ட ஆடல் மகள். நீ இல்லாமல் இந்திர விழா நடந்ததுண்டா?’
‘இது அரச விழா. நானில்லாவிட்டாலும் இது நடக்கும். அரச விழாக்கள் யாருக்காகவும் நிற்பதில்லை. அது நடந்தே தீரும். நீ என் தாயிடம் இதை தெளிவாக எடுத்துக் கூறு.
‘அப்படியல்ல மாதவி. நீ கோவலன் இறந்த துக்கத்தில் இருப்பதால் வரமறுக்கிறாய். உன் குலத் தொழிலை நீ சிந்தித்துப் பார். கணிகையருக்கு கணவன் கிடையாது. ஆனால் நீயோ கோவலனைக் கணவனாக நினைத்துக் கொண்டு உன் எதிர்காலத்தைச் சீரழித்துக் கொள்கிறாய்’.
‘போதும் வயந்தமாலை. வெந்த புண்ணில் வேலை பாய்ச்சாதே. நான் வர இயலாது"
"மாதவி, நீ கோவலனை மட்டுமே மனதில் நினைத்து வாழ்ந்திருக்கலாம். ஆனால் கோவலர் உன்னை ஒரு கணிகையாகத்தான் நினைத்து வாழ்ந்திருக்கிறார். ஆடவர் எப்போதும் சந்தேக புத்தி கொண்டவரே. தன் சொந்த மனைவி மீதும் அப்புத்தியிலேயே செயல்படுவார்கள். சென்ற வருடம் என்ன நடந்தது?. அவர் வேறொரு பெண்ணின் மீது மையல் கொண்டது போல் பாடினாரே. காவேரி, கங்கை, பெண்களின் கற்பென்றாரே, அவர் நெய்தல் நிலப் பெண்ணொருத்தியின் நினைவினால் தன்னை மறந்து கானல் வரி பாடினாரே""
மாதவி அமைதியாக இருந்தாள்.யந்த மாலை மேலும் தொடர்ந்தாள். ‘நீயும் விளையாட்டுக்காக எதிர்ப்பாட்டு பாடினாய். பெண்களின் கற்பு ஆடவரின் கையில் தானிருக்கிறதென்று. இதில் என்ன தவறு இருக்கிறது? எம் ஊரே பேதமை உடையது. அதனால் தலைவன் சொன்ன அத்தனைப் பொய்களையும் நம்பினோம் என்றாய். கைகளால் மணலை தூர்த்து விடலாம் என நம்பி கைகளால் கடல் தூர்க்கும் சிறுமியராய் வளர்ந்த நாங்கள் வளர்ந்த பின் கயமை கொண்ட ஆடவர் மகளிரைத் துன்புறுத்துவர் என்பதை எப்படி அறிவோம் என்று கேட்டாய்.’
‘இப்போது எதற்கு வயந்தமாலை அதை நினைவுபடுத்துகிறாய்.?’
‘என் மனம் ஆறவில்லை மாதவி. விளையாட்டுக்காக ஒரு பெண்ணைக் கற்பனையாகக் கருதி அவர் பாடலாம். நீ பாடக்கூடாதா? அவர் நெய்தல் நிலத் தலைவியை நினைத்து ஏங்கியதுபோல் பாடினார். நீயும் ஒரு நெய்தல் நிலத் தலைவனை நினைத்துப் பாடினாய். இதில் உன் ஒழுக்கத்தில் எங்கு குறை வந்தது?
‘பெண்களின் மொழிக்கு ஒரு எல்லை வகுத்திருக்கிறது இந்த உலகம். ஆண்கள் எதை வேண்டுமானாலும் வெளிப்படுத்தலாம். அது அவர்களின் உரிமை. ஆனால் ஒரு பெண்ணுக்கு எல்லாவற்றிலும் எல்லை, கட்டுப்பாடு இருப்பதைப் போல மொழியிலும் கட்டுப்பாடு உண்டென்பதை மறந்து போனேன். கோவலர் விளையாட்டாகப் பாடியதை நானும் விளையாட்டாக எடுத்துக் கொண்டே எதிர்ப்பாட்டு பாடினேன். ஆனால், ஒரு பெண்ணின் எல்லையை நான் மீறிவிட்டதாக அவர் அதனை வினையாக்கிவிட்டார். பெண்கள் விளையாட்டாகக் கூட மொழியின் எல்லையை மீறக் கூடாதென்பதைப் பட்ட பிறகே தெரிந்து கொண்டேன். மேலும், நான் ஒரு கணிகையல்லவா?’ மாதவி விரக்தியுடன் சிரித்தாள்.
‘இந்த ஊர் உலகமே அறியும். நீ பிறந்த குலம்தான் கணிகை குலம். ஆனால் நீயோ கோவலர் ஒருவரையே மனதால் வரித்து அவருடன் மட்டுமே வாழ்ந்தாயென்று’
‘உண்மைதான் வயந்தமாலை. கோவலரும் அப்படி நினைத்தவர்தாம். அதனால் தான் நான் பெற்ற பிள்ளைக்கு ஊராரை அழைத்து விருந்து வைத்தார். தங்களின் குலதெய்வமான மணிமேகலா தெய்வத்தின் பெயரையே அவளுக்கு வைத்தார். தன் மகளை இரு கண் போலப் பாதுகாத்தாரே அவருக்குத் தான் மணிமேகலை மீது எவ்வளவு பாசம்’ மாதவி மகளுடன் கோவலன் இருந்த நாள்களில் அவர்களின் பாசப்பிணைப்பினை நினைத்து பெரு மூச்செறிந்தாள்.
‘பாசமாம் பாசம். உன்மீதுதான் கோபம். தன் மகள் மீது என்ன கோபம். அவளையும் புறக்கணித்து விட்டாரே’
‘அப்படியில்லை வயந்த மாலை. மணிமேகலைக்கு பதிமூன்று வருடங்களாகின்றன. மகளின் வளர்ச்சி கோவலருக்குப் பல மனப் போராட்டங்களைத் தந்திருக்கும். அவளுக்குரிய மணமகனைத் தேர்ந்தெடுக்க வேண்டிய கடமை அவரை அலைக்கழித்திருக்கும். மகளுக்கு நல்ல மணவாளனைத் தேட வேண்டும் என்ற மனப் போராட்டத்தில், தான் மணந்து விட்டு வந்த கண்ணகியின் நிலை அவரை உறுத்தியிருக்கும். பொருளில்லாத நிலையில் நல்ல வரனை எப்படித் தேடுவது? மேலும் அவர் நம்முடன் இருந்த போது, பாணர், பாங்கன், கூத்தன் இவர்களோடு தானே பழகியிருந்தார். தன் மகளுக்கு ஏற்ற மணமகனைத் தம் வணிக குலத்தில் தானே தேட வேண்டியிருக்கும். எனவே இனிமேலாவது வணிகர்களோடு நல் உறவு வைத்துக் கொள்ளலாம் என நினைத்திருப்பார்.’
வயந்தமாலை தனக்குள் “கணிகை பெற்ற
பெண்ணை வணிகன் மணப்பதா? என்ன கற்பனை. என்ன முட்டாள்தனமான நம்பிக்கை” என
நகைத்துக்கொண்டாள்.,பின் அமைதியாக‘கோவலர் உன்னைச் ‘சலம் புணர்கொள்கை சலதி’ என்று இகழ்ந்தாலும், நீ அவரை எவ்வாறு உயர்த்தி வைத்திருக்கிறாய். உண்மையில் யார் உசத்தி ? அவருடைய புறக்கணிப்பிற்கு எவ்வளவு அழகாகக் காரணம் கற்பிக்கிறாய்’ என்று மாதவிக்காகப்
பரிதாபப்பட்டாள் வயந்த மாலை.
‘ஆனால் ஊரார் தான் உன்னைப் பழிக்கின்றனர். கோவலன் தான் போய் விட்டானே. தன் குலத்தொழிலின்படி மற்றொருவனோடு மாதவி வாழலாமே என்கின்றனர்’என்றாள்.
மாதவி காதுகளைப் பொத்திக் கொண்டாள். ‘போதும் எந்தப் பழியுரையையும் நான் கேட்கவில்லை. நீ போய்விடு.’
‘அறுபத்து நான்கு கலைகளையும் தேர்ந்தது துறவியாவதற்காகத் தானா? அப்பப்பா நீ கற்ற வித்தைகளை எடுத்துச் சொல்லவே நேரம் போதாதே. சோதிடக்கலை, ஓவியக்கலை, நாடகக் கலை, தாள வகை, தோற்கருவி, தாளக்கருவி வாசித்தல், சமையற்கலை, சுண்ணப்பொடி தயாரித்தல் என்று இவற்றை உன்னைப்போல கற்றவர் யாருண்டு இந்தப் புகாரில்’ அத்துணையும் வீணாகி விடக்கூடாது. மாதவி உன் துறவிக் கோலம் உனக்குப் பொருந்தவில்லை. எப்போதும் போல் இந்திர விழாவில் கலந்து கொள். வா போகலாம்.’[தொடரும்]
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்களைப் பதிவு செய்யலாமே?