நீரின்றி அமையாது உலகு.

முனைவர் ஜ.பிரேமலதா,தமிழ் இணைப்பேராசிரியர், அரசு கலைக் கல்லூரி, சேலம் 636 007 DR.J.PREMALATHA,ASSOCIATE PROFESSOR IN TAMIL,GOVT ARTS COLLEGE,SALEM -636 007.

Wednesday 28 June 2017

மணிமேகலை 7

ணிமேகலை கடற்கரையில் பலவிதமான நண்டுகள் ஓடுவதும், வளையில் ஒளிவதுமாக இருப்பதைப் பார்த்தாள். அவளுக்குச் சிறுவயதில் விளையாட்டு நினைவிற்கு வந்தது.
தன் தந்தையுடன் ஐந்து வயது சிறுமியாக இருந்தபோது தேரில் ஏறி, கடற்கரைக்குச் சென்றதை நினைத்துக் கொண்டாள்.
வெள்ளிய நுண்மணலில் சின்னஞ்சிறு கால்கள் பதிய நடந்தாள். ஆங்காங்கே நண்டுகள் அலைந்து கொண்டிருந்தன. அவற்றின் பின் ஓடினாள்.
அங்கிருந்த சிறுகுச்சியை எடுத்துக் கொண்டு அதில் ஒன்றை திருப்பிப் போட்டாள். மீண்டு திரும்பிய அது அவளை நோக்கி ஓடி வந்தது. பயந்துபோய் ஓடினாள். அந்த நண்டு வேறுபுறம் திரும்பியதை அறிந்து மீண்டும் அதனைக் குச்சியினைக் கொண்டு அலைகழித்தாள்.
வா வா வந்து என்னைப் பிடி
இப்படிப் பல நண்டுகளையும் அலைகழித்து, அதன் பின்னே ஓடி அவை துரத்த, பின்வாங்கி ஓடினாள். அவளுக்கு அந்த விளையாட்டுப் பிடித்திருந்தது. பச்சைப் பாட்டுப்பாவடை நனைய நண்டுகளுடன் கடலுக்குள் ஓடினாள்.
கோவலன் பதறிப் போனான்மேகலை கடலுக்குள் போகாதே போகாதே,நில்கூக்குரலிட்டபடி ஓடி வந்தான்.
அப்பா கையை விடுங்கப்பா. நான் தொம்பத் தூரம் போகமாட்டேன்என்று தந்தையின் கையை உதறப் பார்த்தாள்.
கோவலனோ கையை இறுக பற்றிஇது என்ன விளையாட்டு? நண்டுகள் உன்னைக் கடித்து விடும். வா வேற பக்கம் போகலாம்
மேகலை எதையும் காதில் போட்டுக் கொள்ளவில்லை. நண்டுகள் கடலுக்குச் சென்று விடுமே என்று எண்ணத்துடன் தந்தையிடமிருந்து விடுபட்டு ஓட முயன்றாள்.
மகளை அப்படியே தூக்கிக் கொண்ட கோவலன், அவன் கையைக் காலை உதறியபோதும் விடாமல் தூக்கிக் கொண்டு நடந்தான்.
அவ்வளவுதான் அவன் தோளிலிருந்து, நண்டுகள் கடலுக்குள் சென்று விட்டதைப் பார்த்துவிட்ட மேகலைவென்று அழத் தொடங்கினாள்.
மகளை அடித்துப் பழக்கமில்லாத கோவலனுக்கு அவளின் அழுகையை எப்படி நிறுத்துவதெனத் தடுமாற்றம்.
அங்கே பார்பொம்மைக் கடைகள். உனக்கு எல்லாப் பொம்மையும் வாங்கித் தரேன் வா
எனக்கு நண்டு கூடத் தான் விளையாடணும்அழுகையின் ஊடே மேகலை கேவினாள்.
அவளுடைய பொன்வண்ணச் சட்டை மாலைச் சூரியனின் கதிர்கள் பட்டு மின்னிக் கொண்டிருந்தது. 
மாதவியை விட அழகான தன் மகளைப் பெருமை பொங்கப் பார்த்தான். கரு வண்டுவிழிகள், மை தீட்டிய புருவம், தங்கப் பிறை நெற்றி, மின்னும் கன்னக்கதுப்பு, செப்பு போன்ற வாய் கடற்காற்றில் பறக்கும் முன் நெற்றி சுருண்ட முடிகள் குட்டி தேவதை போலத் தென்பட்டாள். அவளுடைய அழுகை தான் பொருத்தமில்லாமல் இருந்தது.
இங்க பார்., என் செல்லக்குட்டியில்ல. என் பட்டுக் குட்டி இப்படி அழுதீனா மறுபடி இங்குக் கூட்டி வரமாட்டேன்
அவள் விழிகளில் மிரட்சி.
 ஐயோ மீண்டும் கடற்கரைக்கு வர முடியாதா, கொஞ்சம் சமாதானமானாள்.
அப்பா எனக்கு யானை பொம்மை வாங்கித் தரறியா?’ கோவலன் பெருமூச்சு விட்டான். தேரேறி கடற்கரையில் அப்போது தான் திறந்து வைக்கப்பட்டுக் கொண்டிருந்த அல்லங்காடி கடைகளை நோக்கிச் சென்றான்.
கண் கொள்ளாத அளவிற்கு மரப்பாச்சி பொம்மைகள். உருட்டி விளையாடும் தேர், யானை பொம்மை, படை வீரர்கள் பொம்மைகள், குதிரை பொம்மை, இராஜா ராணி பொம்மை எனப் பிடித்ததை வாங்கிக் கொண்டாள். அத்தனையும் அள்ளிக் கொண்டு, துள்ளிக் குதித்தபடி தந்தைக்கு முன் தேரில் ஏறிவிட ஓடினாள். தேரில் ஏறும் போதுசர்ரென்று ஒரு சத்தம். தேரில் நீட்டிக் கொண்டிருந்த சிறிய கூர் ஆணி அவள் பட்டுப் பாவாடையைக் கிழித்து விட்டது. அவ்வளவுதான் கையில் வைத்திருந்த பொம்மைகளைக் கீழே போடவும் மனம் வராமல், மாட்டிக் கொண்டிருந்த பாவாடையை எடுக்கவும் தெரியாமல் தேரில் பாதி ஏறிய நிலையிலேயே நின்றாள். கோவலன் மகளின் நிலையைக் கண்டு ஓடிவந்து பாவாடையை விடுத்துத் தேரில் ஏற்றினான்.
கடலலை கால்களை நனைக்க, மணிமேகலை தன் உணர்வு பெற்றாள். அந்தப் பாவாடை போல் தன் வாழ்வும் கிழிந்து தொங்கிக் கொண்டிருக்கிறது. அன்று தன்னை ஆணியிலிருந்து விடுவித்துத் தேரிலேற்றிய தந்தையோ, வானுலகம் சென்று விட்டார். தன்னை இப்போது யார் காப்பது?
நண்டுகள் கடலில் இங்குமங்கும் அலைந்து திரிந்தன. என் மனமும் உதயகுமரனிடமும் தாயிடமும் அலைந்து அலைந்து திரிகிறதே. நடந்து கொண்டே இருந்தாள். இது என்ன ஊர்? புகாரின் இன்னொரு பகுதியா? இங்கு எப்படி வந்தேன். பதில் கிடைக்காமல் நடந்தபடியே இருந்தாள். எப்படியாவது சுகமதியைக் கண்டுபிடித்து விடவேண்டும். மாலை நெருங்கிக் கொண்டு இருந்தது. அவளுக்குள் இனம் புரியாத அச்சத்தை அது ஏற்படுத்தியது.
சுகந்தனின் மகன்களைப் போல யாராவது அத்தீவிலிருப்பார்களா? சுகந்தனின் மகன்களைப் பற்றி நினைத்ததும் அவள் உடல் நடுங்கத் தொடங்கியது.
மருதியையும் விசாகையும் எப்படி மறக்க முடியும்? நெருங்கி வரும் இரவு எங்கோ தெரியும் விண்ணின் மங்கிய ஒளி. அவள் நெஞ்சுக் கூட்டுக்குள் பயம் பந்தாய்ச் சுருண்டது. அமர்ந்தபடியே உறங்கிப் போனாள். நடு இரவில் அவள் மீது எதுவோ ஊர்வது போல, வீலென்று அலறி எழுந்தாள். [தொடரும்]

----------------

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்களைப் பதிவு செய்யலாமே?