நீரின்றி அமையாது உலகு.

முனைவர் ஜ.பிரேமலதா,தமிழ் இணைப்பேராசிரியர், அரசு கலைக் கல்லூரி, சேலம் 636 007 DR.J.PREMALATHA,ASSOCIATE PROFESSOR IN TAMIL,GOVT ARTS COLLEGE,SALEM -636 007.

Wednesday 28 June 2017

மணிமேகலை.14

சூரியனைப் போல ஒளியுடைய அழகிய குழந்தை அது  அருகில் யாருமில்லை. பூங்கோதை ஓடிச் சென்று வாரி எடுத்தாள். குழந்தையற்ற அவர்களுக்குக் கடவுள் தந்த பரிசு. சாலை விடிந்தவுடன் இளபூதி விசாரித்தான். குழந்தையை யாரும் உரிமை கொண்டாடவில்லை.
மாட்டுத் தொழுவத்தில் கிடைத்த அவனுக்குத் தாய்ப்பால் எங்கிருந்து கிடைக்கும்? பசுவின் பாலைக் கொடுத்து வளர்த்தார்கள். பசு வளர்த்த பிள்ளையானான். ஆபுத்திரன் ஆனான்.

தான் வளர காரணமாகயிருந்த பசுவைத் தாயாகவே கருதினான். பூங்கோதை இளபூதியிடம் ஆபுத்திரனைக் குருகுலத்தில் சேர்க்கச் சொன்னாள். வளர்ந்து கட்டிளங் காளையானான்.
ஆவன் குருவின் வீட்டில் யாக வளர்த்த அவனையும் அழைத்திருந்தார்கள். குருவின் தொழுவத்திலிருந்த மாடுகளைப் பார்த்துக் கொள்ளும்படி குரு ஏவ, உவகையோடு ஆபுத்திரன் பசுவைக் காணச் சென்றான். நின்றிருந்த பசுவின் கண்களில் நீர் பெருகிக் கொண்டிருந்தது. உள்ளுணர்வில் ஏதோ தோன்ற குருவிடம் ஓடினான்.
‘குருவே, பசுவின் கண்களிலிருந்து கண்ணீர் வடிகிறதே’
‘ஆம். விலங்குகள் முன்னுணர்வு உள்ளவை. நாளை அதைத்தான் வேள்விச் சாலையில் வெட்டப் போகிறோம்.’
‘என்ன?’
‘ஆபுத்திரா வேள்வி சிறப்பாக நடைபெற வேண்டும். எந்தக் குறையும் வந்து விடக் கூடாது தெரிகிறதா?’
ஆபுத்திரன் தலையாட்டினான். ஆனால் உள்ளுக்குள் ஒரு திட்டம் வைத்திருந்தான்.
அனைவரும் உறங்கும் வரை காத்திருந்தான். நள்ளிரவில் பசுவை அதன் இடத்திலிருந்து அப்புறப்படுத்திக் காப்பாற்றுவதே அவள் நோக்கம்.
வேள்விக்காகப் பல அந்தணர்கள் வந்திருந்தார்கள்.
அடுத்த நாள் விடியலிலேயே வேள்வியைத் தொடங்கி விடுவார்கள். அதற்குள் பசுவைக் காப்பாற்ற வேண்டும். ஊர் அரவம் அடங்கியது. ஆபுத்திரன் பசுவை விடுவித்து, ஓட்டிச் சென்றான். ஊர் எல்லையைக் கடந்து விட்டால் அதைக் காட்டில் விட்டு விடலாம் என்பது அவன் எண்ணம்.
ஆனால் இயற்கை உபாதையைக் கழிக்க எழுந்த குரு பசுத் தொழுவத்தில் இல்லாதது கண்டு அதிர்ந்தார். அவர் போட்ட கூச்சலில் ஊரே பசுவைத் தேடி புறப்பட்டது.
வேள்விக்கான பசுவை பலியிடா விட்டால், தெய்வக் குற்றம் நேர்ந்து ஊர் அழிந்து விடும் என்ற அச்சம் அவர்களை ஒன்று திரட்டியது.
பாதி வழியிலேயே ஆபுத்திரன் பிடிபட, அவனைத் திருடன் என்றது.
‘இல்லை நான் திருடவில்லை. இதைக் காப்பாற்றவே இப்படிச் செய்தேன். பசு நம் தாயல்லவா? அதன் பாலை உண்ணும் நாம் அதனைக் கொல்லலாமா?’
இளபூதி ஆபுத்திரனிடம் ஓடிவந்தான். ‘ஏனப்பா இப்படிச் செய்தாய்? தெய்வக்குற்றம் நேராதா?’
அப்பா என்னை மன்னியுங்கள். பசுவைக் கொல்வதால் தான் தெய்வக்குற்றம் நேரும். என் உயிர் போனாலும் இப்பசுவை நான் பலியிட அனுமதிக்க மாட்டேன்.’
ஒரு அந்தணன் வந்தான். ‘தாய்ப்பால் குடித்து வளர்ந்தவனாக இருந்தால் உனக்கு யாகத்தின் அருமை தெரியும். நீ மாட்டின் பாலைக் குடித்து வளர்ந்தவன் தானே. அதனால் தான் அறிவற்று செயலைச் செய்திருக்கிறாய்’
‘இவனிடம் பேசிப் பயனில்லை. இவன் யார் தெரியுமா? இளபூதி கேள். நீ வளர்த்த இவன் சாலி என்ற ஒழுக்கம் தவறிய பெண்ணின் மகன். இவனை உன் தோட்டத்தில் விட்டுச் சென்ற பின்பு அவளுக்குப் பைத்தியம் பிடித்து விட்டது. கடை வீதியில் தான் பெற்ற குழந்தையை மாட்டுத் தொழுவத்தில் விட்டு வந்த கதையைப் போவோர் வருவோரிடமெல்லாம் சொல்லி அழுது கொண்டிருந்தாள். புது ஊராதலாலும், பைத்தியமானபடியாலும் மாட்டுத் தொழுவத்தை அவளால் கண்டுபிடிக்க முடியவில்லை. இவனைப் பற்றிச் சொல்ல வந்தபோது, குழந்தையற்ற நீங்கள் இவன் மீது வைத்திருந்த பாசத்தைப் பார்த்து உன்னிடம் மறைத்து விட்டேன். இப்போது நம் ஊருக்கே கேடாகி விட்டான். நல்ல புத்திமதி சொல்லி அவனைத் திருத்து’ இளமதி அவனிடம் அறிவுரைகளைக் கூறினான். ஆனால் ஆபுத்திரன் அதைக் கேட்கவில்லை.
‘நீ கணிகையின் மகனே. உன்னை வளர்த்ததே பெரும் பாவம்’ என இழிவாகப் பேசினான்.
ஆபுத்திரன், ‘தந்தையே என் தாய் ஒழுக்கங் கெட்டவளாக இருந்தால் என்ன? தேவ கணிகையான திலோத்தமைக்கு வசிட்டர், அகத்தியர் என நீங்கள் போற்றும் மகன்கள் பிறக்கவில்லையா? தாங்கள் என்னை இழிவுபடுத்தினாலும் பசுவைத் தரமாட்டேன்’ என்றான்.
அந்தணர்கள் அவனிடமிருந்து அப்பசுவைப் பறிக்க முயன்றனர். அப்பசுவோ வெகுண்டு அந்தணர் ஒருவரைத் தன் கொம்பால் குத்திக் கிழித்துவிட்டு, காட்டிற்குள் ஓடி விட்டது.
வெகுண்ட இளபூதி, """"நீ இனி என் மகனில்லை. என் கண்முன் நில்லாதே. எங்காவது தொலை"" என்று ஆபுத்திரனை விட்டு நீங்கினான்.[தொடரும்]

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்களைப் பதிவு செய்யலாமே?