நீரின்றி அமையாது உலகு.

முனைவர் ஜ.பிரேமலதா,தமிழ் இணைப்பேராசிரியர், அரசு கலைக் கல்லூரி, சேலம் 636 007 DR.J.PREMALATHA,ASSOCIATE PROFESSOR IN TAMIL,GOVT ARTS COLLEGE,SALEM -636 007.

Tuesday 4 October 2016

திடமான எண்ணமிருந்தால் போதும்





திடமான எண்ணமிருந்தால் போதும்


       
 ஜப்பானில் மிக ஏழைக் குடும்பத்தில் ஒரு கிராமத்தில் பிறந்தவர் சோய்ச்சிரோ என்பவர். அவருடைய தாயார் நெசவுத் தொழிலாளி. தந்தையோ இரும்பு பட்டறையில் வேலை செய்யும் கூலித் தொழிலாளி. ஒரு வாடகை சைக்கிள் கடையையும் நடத்தி வந்தார். இந்நிலையில் சோய்ச்சிரோ வாடகைக்கு விடும் சைக்கிளில் அடிக்கடி உடைந்து விடும் பிஸ்டன் ரிங்கைத் தானே தயாரிக்க முயற்சி செய்தார். பள்ளியில் பகல் நேரத்தில் படிப்பு. இரவு பிஸ்டன் ரிங் தயாரிப்பில் ஆராய்ச்சி. இப்படியே இவருடைய இளமை கழிந்தது. பொருட்செலவு தான் மிகுந்ததே தவிர பிஸ்டன் ரிங் அவர் நினைத்தபடி உருவாகவில்லை. இதற்கிடையில் திருமணமும் நடந்தது. மனைவியின் நகைகளை அடமானம் வைத்து உறுதியான பிஸ்டன் ரிங்கை உருவாக்கினார். இரண்டு ஆண்டுகள் இடையறாத முயற்சிகளும், தோல்விகளும், பொருள் இழப்புகளும் ஏற்பட்டாலும் சோய்ச்சிரோ மனம் தளரவில்லை. இறுதியில் அப்போது பிரபலமாக இருந்த டோயோட்டாவின் கான்ட்ராக்ட் கிடைத்தது. தன் சொத்தெல்லாம் விற்று தொழிற்சாலை துவக்கினார். அப்போதுதான் ஜப்பானுக்கும் அமெரிக்காவிற்கும்  இடையேபோர்ச்சூழல் உருவாகியிருந்தது. 


ஒரு வழியாக தன் தொழிற்சாலையைக் கட்டி முடித்தார். ஆனால் கட்டி முடித்த சில நாட்களிலேயே அமெரிக்கா போட்ட குண்டு அத்தொழிற்சாலையை தீக்கிரையாக்கியது. மீண்டும் கட்ட முயற்சித்தார். ஆனால் போர்ச்சூழலினால் கான்க்ரீட்டும், இரும்பும், கட்டுமானப் பொருட்களும் கிடைக்கவில்லை. தனது வேலையற்ற பணியாளர்களை அழைத்து ஒரு வேலை கொடுத்தார். அமெரிக்க விமானங்களிலிருந்து எரிபொருள் நிரப்பிய பின் கீழே வீசியெறியும் கேன்களை சேகரிக்கச் செய்தார். தனது தொழிற்சாலைக்கு அந்த கேன்கள் உதவும். அது அமெரிக்கா நமக்கு கொடுக்கும் பரிசு என்றார். 

 
பின் அந்த கேன்களை உருக்கி விற்று தொழிற்சாலையை மீண்டும் கட்டினார். இம்முறை ஜப்பானில் ஏற்பட்ட பூகம்பத்தினால் தொழிற்சாலை தரைமட்டமானது. தன் பிஸ்டன்  தொழில்நுட்பத்தை டோயோட்டா கம்பெனிக்கே விற்று பணம் பெற்று அன்றாட வாழ்க்கையை நடத்தத் தொடங்கினார்.
மீண்டும் வாடகை சைக்கிள் கடையைத் தொடர்ந்து நடத்தினார். அப்போது தன்னுடைய வீட்டிற்குத் தேவையான பொருட்களை தொலைதூரம் சைக்கிளில் சென்று வாங்கி வரவேண்டிய சூழலில் மிகவும் சிரமப்பட்டார். இந்தச் சூழலிலிருந்து வெளிவர வேண்டும் என சூளுரைத்துக் கொண்டார். காருக்குத் தயாரித்த பிஸ்டனைக் கொண்டு சிறிய மோட்டாரை வடிவமைத்து தன்னுடைய சைக்கிளில் பொருத்தினார். இதை தானே பயன்படுத்தத் தொடங்கினார். இதுதான் உலகின் மோட்டார் சைக்கிள். அவருடைய நண்பர்களும் தங்களுக்கு அதுபோல் செய்து தரும்படி கேட்க, சிறிய தொழிற்சாலை ஒன்றை துவக்கிவிட விரும்பினார். ஆனால் பணமில்லை. எனவே ஜப்பானில் உள்ள 18,000 சைக்கிள் கடைகளுக்கும் கடிதம் எழுதினார். ஜப்பானை மீண்டும் எழுச்சி பெற வைக்க இது உதவும் என்றார். காரை விட மலிவானது, மக்கள் எங்கு வேண்டுமானாலும் பயன்படுத்தலாம், குறுகலான சாலைகளிலும் பயன்படுத்தலாம் என்றார்.
 தன்னுடைய தொழிற்சாலையில் முதலீடு செய்யும்படி கேட்டுக் கொண்டார். 3000 சைக்கிள் கடைகள் முன் வந்தன. அவர்கள் அளித்த பொருளுதவியைக் கொண்டு உற்பத்தியைத் துவக்கினார். சைக்கிளில் சிறிய எஞ்சின் பொருத்தி விற்பனைக்கு விட்டார். இது மக்களைக் கவர்ந்தது. விற்பனையில் சாதனை படைத்தது. அமெரிக்கா, ஐரோப்பா நாடுகளிலும் சைக்கிள் எஞ்சின்கள் ஏற்றுமதி செய்யப்பட்டன. 

இதற்குப் பின் சிறிய ரக கார்களைத் தயாரித்து விற்பனை செய்தார். இன்று சோய்ச்சிரோவின் நிறுவனத்தில் ஒரு லட்சம் ஊழியர்கள் உள்ளனர். இரு சக்கர, நான்கு சக்கர நிறுவனங்களில் உலகின் முன்னனி நிறுவனமாக இன்று இவருடைய கம்பெனி விளக்குகிறது. சோய்ச்சிரோவின் முழுப்பெயர் என்ன தெரியுமா? சோய்ச்சிரோ ஹோண்டா தன் பெயரின் பாதியையே தன் நிறுவனத்துக்கு வைத்தார். ஹோண்டா நிறுவனத்தினால் ஜப்பானின் வறுமை நீங்கியது. உலக சந்தையில் ஜப்பானியர்கள் வெற்றிக் கொடி நாட்டினார். இதனால் சோய்ச்சிரோவின் கண்டுபிடிப்பிற்கு ஜப்பான் பேரரசர் ஆட்டோ மொபைல் துறையின் மன்னன்’பட்டத்தை வழங்கினார்.

தான் தயாரித்த பிஸ்டனை வெளி உலகிற்கு அறிமுகப்படுத்த அவருக்கு நாற்பது ஆண்டுகள் ஆயின. போர்ச்சூழல் நிறைந்த ஜப்பானில் பல்வேறு மூலப்பொருட்களினால் ஏற்பட்ட தட்டுப்பாட்டையும், பூகம்பத்தினால் ஏற்பட்ட அழிவையும், பலமுறை தொழிற்சாலை தரைமட்டமான சூழலிலும் மனந்தளராமல் தொடர்ந்து இறுதிவரை போராடி இன்று ஆட்டோ மொபைல் துறையின் மன்னன்என்ற பட்டத்தை வென்ற சோய்ச்சிரோ ஹோண்டா மகா மனிதர்தான்.


வெற்றி பெற வேண்டும் என்னும் திடமான எண்ணமிருந்தால் போதும். எந்த செயலிலும் வெற்றி பெற்று விட முடியும்.
எத்தனை கோடி இடர் வந்து சூழினும்
எண்ணஞ் சிறிதுமு ண்டோ?
பொய் கருதாமல் அதன் வழி நிற்பவர்
பூதலம் அஞ்சவரோ?
என்பார் பாரதியார்.
குறிக்கோள் இலாது கெட்டேன்என்றார் சான்றோர் ஒருவர். ஒவ்வொரு மனிதனுக்கும் வாழ்க்கையில் ஒரு சிறப்பான குறிக்கோள் வேண்டும். அக்குறிக்கோளை அடைய அவன் ஓயாது முயற்சி செய்து கொண்டே இருக்க வேண்டும். குறிக்கோளை அடைய முயலும் போது பல தடைகள் வரலாம். அவற்றையெல்லாம் வென்று இலட்சியத்தை அடைய வேண்டும்.

1 comment:

  1. அருமையான தகவல்
    தொடருங்கள்

    ReplyDelete

உங்கள் கருத்துக்களைப் பதிவு செய்யலாமே?