தைரியம்
மனிதனுக்கு முதலாவது வேண்டிய குணம் தைரியம்தான். அதுவே மற்ற குணங்களை விட மேலானது. பயமுறுத்தும் அபாயத்திலிருந்து புறமுதுகு காட்டி ஓடக்கூடாது. அவ்விதம் செய்தால் அபாயம் இரட்டிப்பாய் விடும். தைரியமாக அதை எதிர்த்து நின்றால் அபாயம் பாதியளவாகக் குறைந்து விடும். போஜராசன் என்னும் தினமும் எட்டு லட்சுமிகளை வைத்து வழிபடுவது வழக்கம். அவனிடம் ஒரே ஒரு லட்சுமியை மட்டும் வழிபடுமாறு தேவர்கள் கேட்டுக் கொண்டார்கள். உடனே போஜராஜன் தைரிய லட்சுமியை மட்டும் வைத்து வழிபட அனுமதி கேட்டான். இதனால் மற்ற லட்சுமிகளும் அங்கேயே இருக்க வேண்டியதாயிற்று. தைரிய லட்சுமி எங்கு இருக்கிறதோ அங்குதான் மற்ற லட்சுமிகளும் இருப்பார்கள். இதை அறிந்தே போஜராஜன் அவ்வாறு கேட்டான்.
ஒருவன் வாழ்க்கைப் போராட்டத்தில் வெற்றி பெறுவானா அல்லது தோல்வி அடைவானா எப்தை அவனுடைய குண நலன்கள் மூலம் அறியமுடியும். வெற்றியோ தோல்வியோ யாருக்கும் குருட்டாம் போக்கில் வந்து அமைவதில்லை. வெற்றி அல்லது தோல்விக்குரிய வித்து அவன் உள்ளத்திலும், நடத்தையிலும், ஆளுமையிலும் ஏற்கனவே அமைந்துள்ளது.
வீரமும், துணிவும், அச்சமின்மையும் இருந்தால்தான் எக்காரியத்திலும் வெற்றி பெற முடியும். எந்தப் பிரச்சனையாக இருந்தாலும் அதிலிருந்து விலகிச் செல்லாமல், அப்பிரச்சனையை நேருக்கு நேர் சந்திக்க வேண்டும். ‘விளைவு எவ்வாறு ஆயினும் ஆகுக’ என்று துணிந்து ஒரு செயலில் ஈடுபடுவதற்கு அளவற்ற துணிச்சல் வேண்டும். போர்க்களத்தில் பகை வீரர்களுடன் போரிடுவதைத் தான் வீரம், துணிச்சல் என்று பலர் தவறாகக் கருதுகிறார்கள்.
ஆனால் அன்றாட வாழ்க்கையில் நிகழும் பல நிகழ்ச்சிகளையும் சோதனைகளையும் தாங்கி வெற்றிகரமாக வாழ நமக்கு அளவில்லாத துணிச்சல் மிக்க வீரம் தேவைப்படுகிறது. தினசரி வாழ்க்கையில் எதிர்ப்படும் சோதனைகளில் வெற்றி பெறுபவனே சிறந்த வீரன்.
வெற்றியடையும் ஆளுமையுடைய மாந்தரின் தன்மைகளை நாம் அறிந்து கொண்டாலே, நாமும் அவரைப் போல வெற்றியடைய முடியும். மனம் எதை நினைக்கிறதோ அதைப் போலவே ஆகிறது என்பது கோட்பாடு.
சோதனை என்ற வார்த்தையில் முன் உள்ள இரட்டைக் கொம்பை நீக்கி விட்டால், சாதனை என்னும் வார்த்தை கிடைக்கும். எனவே சோதனையின் கொம்பை ஒடித்துச் சாதனை புரிய வேண்டும்.
ஒரு காரியத்தில் இறங்கும்போது தவறுவது இயற்கை. அதற்கு அஞ்சிக் காரியத்தை நிறுத்திவிடக் கூடாது. தவறு செய்வதற்கும், தோல்வியைத் தழுவுவதற்கும், எதிர்பாராத முறையில் வந்து சேரும் அவமானத்தைத் தாங்கிக் கொள்வதற்கும் அஞ்சக் கூடாது. எதிலும் துணிந்து ஈடுபடாமல் இருப்பது, தயங்கி தயங்கி இருப்பதை விட மேலானது. இருந்த இடத்திலேயே இருப்பதைவிட துணிச்சலுடன் செயல்பட்டு தோல்வியடைவது தவறு ஆகாது. ஒரு செயலைச் செய்யும் பொழுது தவறுகள் ஏற்படலாம். ஆனால் சரி செய்து கொண்டே செல்வோமானால் இறுதியில் மிகப் பெரிய வெற்றி கிட்டும்.
நாம் முக்கியமாகக் கருதுகின்ற நமது குறிக்கோள் நிறைவேறாத பொழுது ஏமாற்றத்தால் மனத்தளர்ச்சி ஏற்படலாம். நாம் மனிதர் என்ற முறையில் குறைபாடு உடையவர்களே. குறைபாடும் ழுமுமையின்மையும் இல்லாத மனிதரை எங்கும் காண முடியாது. ஆனால் தொடர் முயற்சியின்மூலம் இக்குறைகளை நீக்கி நாம் வெற்றி பெற முடியும்.
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்களைப் பதிவு செய்யலாமே?