முயற்சி இல்லாமல் உயர்ச்சி இல்லை
17-ம் நூற்றாண்டில் பெர்மா என்ற நீதிபதி இருந்தார்.
அவருக்கு கணிதத்தில் ஆழ்ந்த ஈடுபாடு இருந்தது. பெர்மா கணிதம் தொடர்பான
பல நூல்களைப் படித்து, அவற்றைப் போட்டுப்
பார்ப்பதிலேயே காலம் கழித்தார். ஒரு புதிய கணக்கைத் தானே உருவாக்கினார். ஆனால்
அதை முடிக்காமல் புதிராக விட்டு விட்டார். இறந்தும் போய் விட்டார்.
பின்னால் வந்த கணித மேதைகள் எவ்வளவு முயன்றும் அப்புதிரை விடுவிக்க
முடியவில்லை. இப்படியே 350 ஆண்டுகள் கழிந்தன.
358 ஆண்டுகள் கழித்து நூலகத்தில் பெர்மாவின் கணிதப் புதிர் என்ற நூலை வைல்ஸ் என்ற பத்து வயது சிறுவன்
படிக்கிறான். அந்த கணக்கு அவனை விடாமல் துரத்த, கணிதத்தையே பாடமாக எடுத்துக் கொள்கிறான்.
ஆராய்ச்சிப் பட்டத்தையும் பெறுகிறான். உலக கணித மேதைகளின் கணித
சமன்பாடுகளையெல்லாம் அறிகிறான்.
இறுதியாக பெர்மாவின் கணிதப் புதிருக்கு விடை
கண்டுபிடித்து உலக வரலாற்றில் இடம் பெறுகிறான். 350 ஆண்டுகள் கண்டுபிடிக்கப்படாத புதிரை தன் வாழ்நாள் முழுவதும் செலவிட்ட
அவனுடைய விடா முயற்சியை உழைப்பை உலக கணித வரலாறு பெருஞ் சாதனையாகக் கருதிப்
போற்றுகிறது.
மின்சார விளக்கைக் கண்டுபிடித்த தாமஸ் ஆல்வா எடிசன்
ஆயிரத்திற்கும் மேற்பட்ட முறை தோல்வியடைந்தார். ஆனால் ‘என் முயற்சிகள் என்னை
பலமுறை கைவிட்டாலும், நான் என் முயற்சியைக் கைவிட மாட்டேன்’ என்று இறுதிவரை போராடி
வெற்றி பெற்றார். அவர் தன் தோல்விகளைக் கண்டு துவண்டு முயற்சியைக் கைவிட்டிருந்தால் இன்று
வரை உலகம் இருளில்தான் மூழ்கியிருக்கும்.
முயற்சி இல்லாமல் உயர்ச்சி
இல்லை என்பது அனுபவ மொழி.
ஒரு மன்னர் நாட்டுக்குத் தகுந்த தளபதியை நியமிக்க
முடிவு செய்து அறிவித்தார். இதைக் கேள்விப்பட்ட பல பேர் தளபதியாவதற்கு
வந்தார்கள். மன்னர் அவர்கள் அனைவரையும் ஓரிடத்திற்கு வரச் சொல்லி, """"கோட்டையின் பின்பக்கம் 40 அடி உயரமுள்ள கனமான கதவு
இருக்கிறது. அதை இதுவரை யாராலும் திறக்க முடியலை. பல மல்யுத்த வீரர்களும்
முயற்சி செய்து பார்த்துவிட்டார்கள். உங்களில் யார் அதைத் திறக்கிறார்களோ
அவர்களுக்கே தளபதி பதவி’ என்றார்.
இதைக் கேட்ட பலரும், ‘40 அடி
கதவு, கனமான கதவு, பல பேர் முயற்சித்தும்
திறக்காத கதவு. நம்மால முடியாது’ என்று கிளம்பி விட்டார்கள். இறுதியில் 5 பேர் இருந்தார்கள். மன்னர்
அந்தக் கோட்டையின் பின்பக்க கதவை அவர்களை அழைத்துச் சென்று காட்டினார்.
மிகப் பெரிய கனமான கதவைப் பார்த்த நாலு பேரும் ‘நம்மால முடியாது’ என்று கிளம்பி விட்டார்கள். ஒருவன் மட்டும் ‘பக்கத்தில போய் தள்ளித்தான் பார்க்கலாமே’ என்று தள்ளிப் பார்த்தான்.
கதவு மிக எளிதாகத் திறந்து கொண்டது. அவனுக்கு ஆச்சர்யம். மன்னர் அவன்
தோளைத் தட்டிக் கொடுத்தார்.
‘தளபதி ஆகிற தகுதி உனக்குத்தான் இருக்கிறது’ என்றார்.
பல பேர் முயற்சி செய்ததினாலும்
மன்னர் சொல்கிறார் என்பதாலும் முயற்சி செய்யாமல் கோழைத்தனமாக
மற்றவர்கள் நழுவி விட்டார்கள். எதையும் முயற்சி செய்து பார்க்கிறவன் தான்
உண்மையான வீரன். அப்படிப்பட்ட வீரன்தான் தளபதி பதவிக்குத்
தகுதியானவன் என்று மன்னர், தான் அவனைத் தேர்ந்தெடுத்ததற்குக் காரணம் கொடுத்தார். இப்படித்தான்
பலபேர் முயற்சி செய்யாமல், மற்றவர்கள் ‘முடியாது’ என்று சொல்வதையே நம்பி முயற்சி செய்யாமல்
வாழ்க்கையை வீணடித்து விடுகிறார்கள்.
வணக்கம். இந்தப்பக்கத்தில் உள்ள தன்னம்பிக்கை தொடர் மாணவர்களின் கற்றலுக்குப் பயன்படுத்திக் கொண்டேன். ஒவ்வொன்றிற்கும் எடுத்தக்காட்டு தந்திருப்பது தங்களின் வாசிப்பையும் அதனை உள்வாங்கிக் கொண்டமையையும் தெளிவாகக் காட்டுகின்றன.மிகச்சிறப்பு. நன்றி
ReplyDeleteவணக்கம். நான் முனைவர். உஷா சுப்புசாமி. சிங்கப்பூரில் தமிழாசிரியராகப் பணிபுரிகிறேன்.
ReplyDelete