நீரின்றி அமையாது உலகு.

முனைவர் ஜ.பிரேமலதா,தமிழ் இணைப்பேராசிரியர், அரசு கலைக் கல்லூரி, சேலம் 636 007 DR.J.PREMALATHA,ASSOCIATE PROFESSOR IN TAMIL,GOVT ARTS COLLEGE,SALEM -636 007.

Tuesday 4 October 2016

முன்னேற்றத்திற்குக் காரணம்


முன்னேற்றத்திற்குக் காரணம் எது?


Image result for ஐசக் நியூட்டன் 
ஐசக் நியூட்டன் இருபது ஆண்டுள் ஒவ்வொரு நாளும் பலமணி நேரம் உழைத்து அரிய ஆராச்சிக் குறிப்புகளை சேகரித்து வைத்திருந்தார். ஒரு நாள் அவர் வீட்டில் இல்லாத பொழுது அவருடைய நாய் எரியும் மெழுகு வர்த்தியைத் தட்டிவிட்டது. மேசைமேலிருந்த அத்தனையும் ஆராய்ச்சிக் குறிப்புகளும் எரிந்து சாம்பலாயின. வீடு திரும்பிய ஐசக் நியூட்டன் அதிர்ச்சியடைந்தார். எனினும் நாயின் மீது கோபம் கொள்ளாமல் அதைப் பரிவுடன் தடவிக் கொடுத்து, ‘இதன் மதிப்பு உனக்குத் தெரிந்தால் இவ்வாறு செய்திருக்க மாட்டாய்என்று அமைதியாகக் கூறினார்.


பின் தொடர்ந்து பல ஆண்டுகள் உழைத்து புதிய ஆராய்ச்சிக் குறிப்புகளை எழுதினார். அவை முன்பிருந்ததை விட மிகச் சிறப்பாக இருந்ததால் உலகப் புகழ் பெற்றார். அவருடைய உழைப்பு அவருக்கு சாதனைச் சிகரத்தை அடைய உதவியது. எனவேதான் வள்ளுவரும் முயற்சி திருவினை யாக்கும்என்கிறார்.
உலகப்புகழ் பெற்ற ராக்பெல்லரிடம் தங்களின் முன்னேற்றத்திற்கு காரணம் என்னஎன்று கேட்டபொழுது தோல்வியிலும் துவண்டு விடாத கடின உழைப்பேஎன் வெற்றிக்குக் காரணம் என்றார். உழைப்பின் சிகரம் வெற்றியாகத்தானிருக்கும். ஓட்டைப்பானை தன்னிடமிருந்த முறையை பெரிதாகக் கருதாமல், சிந்திய நீரை வீண் எனக் கருதாமல் தொடர்ந்து உழைத்தால் இறுதியில் வெற்றியை அடைந்தது. ஒருவன் எடுத்துக் கொண்ட முயற்சியில் வெற்றி பெற்றே தீருவேன் என்று அசைக்க முடியாத நம்பிக்கையுடன் அயராது உழைத்தால், அவன் வெற்றி பெறுவதிலிருந்து யாரும் அவனைத் தடுக்க முடியாது. 

Image result for கடல் வாணிகம் 
சீவக சிந்தாமணியில் வரும் சீதத்தன் என்பவன் ஒரு கடல் வணிகன். அவன் கடலில் தன் பெருஞ் செல்வங்களையெல்லாம் திரட்டி வணிகம் செய்யச் சென்றான். ஆனால் கடல் சீற்றத்தினால் அத்துணைச் செல்வங்களையும் பணியாளர்களையும் இழந்தான். எப்படியோ உயிர்ப்பிழைத்து தன் நாடு திரும்புகிறான். பல ஆண்டுகள் கடுமையாக உழைத்து மீண்டும் பொருளீட்டுகிறான்.  ஒரு மரக்கலத்தை வாங்கி அதில் பொருட்களை ஏற்றி, சில பணி மக்களோடு மீண்டும் கடல் வாணிகம் மேற்கொள்ள கிளம்புகிறான். பல பேர் தடுத்துப் பார்த்தார்கள். ஆனால் சீதத்தன் மனந் தளராமல் தன் பயணத்தைத் தொடங்கினான். பெரும் பொருளீட்டி திரும்பி வருகிறான். கடலில் வரும் வழியில் ஏற்பட்ட புயலால் தான் ஈட்டிய பொருள் அனைத்தையும் மீண்டும் இழக்கிறான். ஒரு மரக்கட்டையைப் பற்றி வெள்ளிமலை என்ற தீவை அடைகிறான். அது பொன் விளையும் பூமி. அங்குள்ள மக்களிடம் கேட்டு மன்னனைச் சந்திக்கிறான். அங்கு அரசு செலுத்தும் மன்னன், சீதத்தனின் முயற்சியைக் கேட்டு வியப்படைகிறான். அம்மன்னன் சீதத்தனின் முன்னோர்களை அறிந்தவன். தன் மாய வித்தையால் சீதத்தனின் மரக்கலம், பணிமாந்தர் பொருள் முதலியவை கடல் சீற்றத்தால் அழிவுபட்டதுபோலத் தோன்றச் செய்து தன் தீவிற்கு சீதத்தனை வரவழைத்தக் கதையைக் கூறுகிறான். பின் சீதத்தனின் விடாமுயற்சியைப் பாராட்டி அவன் இழந்த பொருள்களுக்கு மேலான பொருளைக் கொடுத்து வழியனுப்பி வைக்கிறான்.

சீதத்தன் கடல் வாணிபத்தில் முன்பு பொருளை இழந்திருந்தாலும், மீண்டும் தன் வணிகத்தைக் கடல் வழியிலேயே துணிவுடன் தொடங்குகிறான். முயற்சியாற் கிடைக்கும் பொருளே பொருள் எனத் துணிந்து அவன் மேற்கொண்ட கடல் வாணிகமே அவனுக்கு அவன் இழந்த பொருட்களையெல்லாம் பெற்றுத் தந்திருக்கிறது. உள்ளமுடையவன் முயற்சி செய்தால் ஒரு நாளிலே பெருஞ்செல்வம் அவனைத் தேடி வரும் என்பதற்கு சீதத்தனின் வாழ்க்கையே சான்று. இதைச் சீவக சிந்தாமணி இவ்வாறு கூறுகிறது.

உள்ளமுடையான் முயற்சி செய்யவொரு நாளே
வெள்ள நிதி வீழும் விளையாதது அதனினில்லை

அசையும் கொம்பாகி விழியில் நின்ற இளஞ்செடியும் கூட தொடர்ந்து நீரூற்றி வந்தால், ஒரு நாள் உறுதி கொண்ட பெரிய மரமாகி யானையைக் கட்ட உதவும் என்கிறது நாலடியார். 

ஆடு கோடாகி அதரிடை நின்றதூஉம்
காழ்கொண்ட கண்ணே களிறணைக்கும் கந்தாகும் (நாடியார்)

அதுபோல ஒருவன், தாழ்ந்த நிலையிலிருந்தாலும் தொடர்ந்து முயற்சி செய்தால் அவனுடைய வாழ்வு ஒருநாள் பெருமை உடையதாக மாறிவிடும்.

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்களைப் பதிவு செய்யலாமே?