நீரின்றி அமையாது உலகு.

முனைவர் ஜ.பிரேமலதா,தமிழ் இணைப்பேராசிரியர், அரசு கலைக் கல்லூரி, சேலம் 636 007 DR.J.PREMALATHA,ASSOCIATE PROFESSOR IN TAMIL,GOVT ARTS COLLEGE,SALEM -636 007.

Wednesday, 6 May 2015

சங்க காலத்தில் போரும் அமைதியும் 17



Image result for இனிப் பாடுவோரும் இல்லை; பாடுவோருக்கு ஒன்று ஈவோரும் இல்லை. 




கொடை என்றால் என்ன?


சீறூர் மன்னர்கள் தமக்கென எதையும் சேர்த்து வைத்துக்கொள்ளாமல், உறவினர்களுக்கும், பாணர்களுக்கும் வாரி வழங்கியுள்ளனர். பிறருக்காக வழங்குவதற்கானப் பொருள் தேடவே போரிலும் ஈடுபட்டுள்ளனர். தன்னுயிரையும் பொருட்படுத்தாது பெற்ற பெருஞ் செல்வத்தைப் பகிர்ந்து கொடுத்து மகிழ்ந்துள்ளனர். விதைக்காக வைத்திருந்த தானியங்களையும் உணவாக்கி விருந்தோம்பியுள்ளனர்


Image result for கொடை 

ஆனால் வேந்தர்கள் பெருஞ்செல்வம் சேர்ந்த நிலையில், பிறருக்குக் கொடுப்பதில் தயக்கம் காட்டியுள்ளனர். காலம் தாழ்த்தியுள்ளனர். சீறூர் தலைவர்களிலிருந்து வேந்தர்கள் மாறுபட்டு மக்களிடமிருந்து விலகிச் சென்றுள்ளனர். தம் வாரிசுகளுக்காகப் பொருள் சேர்க்கும் ஆசையில் பாணர்களை விலக்கி வைத்துள்ளனர். இதை ஒரு பாடலில் வடம வண்ணக்கண் பேரிச்சாத்தனார் கூறுகிறார்.



பாண்டியன் இலவந்திகைத் துஞ்சிய நன்மாறனின் விருந்தினரைக் காண மறுக்கும் செயலைக் கண்டு, மனம் வெறுத்து அவனை வெளிப்படையாக இகழ வழியில்லாது வாழ்த்துவதுபோல இகழ்கிறார்.


திருமால் போன்ற நின் செல்வத்தைக் கண்டேன். தமிழகம் முழுதும் கவர்ந்து, பிறர் பொருளையெல்லாம் கவர்ந்து வந்து சேர்த்து வைத்திருக்கம் நீ பெரிய வலிமையுடைய படைகளைக் கொண்டிருக்கிறாய். பின் புதல்வரும் உன்னைப் போலப் பகைப்புலத்தைக் கவர்ந்து வந்து பெருஞ்செல்வத்தைச் சேர்க்கட்டும் நின் புதல்வரின் புதல்வர்களைக் காணும் தோறும் மேலும் செல்வங்களைச் சேர்க்கவிரும்பும் நீ உன் செல்வத்துடன் நீடு வாழ்வாயாக. என்னிடத்து நீ செய்த கொடுமையால் தீங்கு வரும். அத்தீங்கு உனக்கும் உன் புதல்வர்க்கும் வராதிருக்கட்டும். நீயும் உன் குலமும் இதுபோன்ற செல்வங்களை யாண்டும் நாளும் பெருக்கி நீடு வாழியநான் தொலைவிலுள்ள சீறூர் மன்னர்களின் நாட்டிற்குச் செல்கிறேன் என்று கூறி விடைபெறுகிறார்.
சீறூர் மன்னர்களுக்கும் வேந்தர்களுக்கும் இடையே உள்ள இது போன்ற கொடை வேறுபாடுகளைப் பல பாடல்கள் சுட்டுகின்றன.


சீறூர் மன்னர்களில் ஒருவனான ஆய் அண்டிரன் தன்னை நாடிவருபவர்களுக்கு, யானையுடன் தேரையும் வழங்குவான். அதுமட்டுமின்றி அவன் வழங்கும் செல்வமானது, அதைப் பெற்ற ஒருவன் துறையூர் முன்றுறையில் உள்ள நுண்ணிய மண்ணின் எண்ணிக்கையைவிட மிகுதியான நாட்களுக்கு அதைப் பயன்படுத்திக் கொள்வான்’. (புறம். 136) என்கிறார் ஓடைகிழார்.

யாழ்ப்பத்தர்ப் புறம்கடுப்ப
இழைவலந்த பஃறுன்னத்து
இடைப்புரைபற்றிப் பிணிவிடாஅ
ஈர்க்குழாத்தொடு இறைகூர்ந்த
பேஎன்பகையென ஒன்றுஎன்கோ?
உண்ணாமையின் ஊன்வாடித்
தெண்ணீரின் கண்மல்கிக்
கசிவுற்றஎன் பல்கிளையொடு
பசிஅலைக்கும் பகைஒன்றுஎன்கோ?
அன்னதன்மையும் அறிந்துஈயார்
நின்னதுதாஎன நிலைதளர
மரம்பிறங்கிய நளிச்சிலம்பின்
குரங்குஅன்ன புன்குறுங்கூளியர்
பரந்தலைக்கும் பகைஒன்றுஎன்கோ?
 
ஆஅங்கு எனைப்பகையும் அறியுநன்ஆய்
எனக்கருதிப் பெயர்ஏத்தி
வாயாரநின் இசைநம்பிச்
சுடர்சுட்ட சுரத்துஏறி
இவண்வந்த பெருநசையேம்;
எமக்குஈவோர் பிறர்க்குஈவோர்
பிறர்க்குஈவோர் தமக்குஈபவென
அனைத்துஉரைத்தனன் யான்ஆக
நினக்குஒத்தது நீநாடி
நல்கினை விடுமதி பரிசில் அல்கலும்
தண்புனல் வாயில் துறையூர் முன்றுறை
நுண்பல மணலினும் ஏத்தி
உண்குவம் பெருமநீ நல்கிய வளனே.


சீறூர் மன்னரை நாடிச் செல்பவர்கள் பகலில் அவரை விதை, மூங்கிலரிசி, நெல்லரிசி இவற்றைக் கொண்டு சமைத்த புளிங்கூழைப் பெறுவர். மருத நிலமக்கள் நடு இரவாக இருப்பின் , விருந்தினர் வருவராயின் அதை மகிழ்வோடு ஏற்று உபசரிப்பர்(மலை,155-158) எனவே, இரவு நேரத்தில் பயணம் தவிர்த்து, கானவர் சிறுகுடியில் தங்கிச் செல்லுங்கள் என ஒரு கூத்தன் மற்றொரு கூத்தனை ஆற்றுப்படுத்துகிறான்.


இவ்வாறு இரவு நேரமாயினும் விருந்தினர்களை அன்போடு வரவேற்று அவர் நிலையறிந்து, அவர்களுக்கு உணவிடும் மாண்பு சீறூர் மக்களுக்குரியது. பெருநில வேந்தரோ பகல் பொழுதினும் விருந்தினராகிய பாணர் வரின் அவர்களைப் பாராது தன்மையுடையவர் எனபதான திருப்பியனுப்பும் பாடல்கள் புறத்தில் மிகுதி.

மறுமை நோக்கின்றோ வன்றே
பிறர் வறுமை நோக்கிறைவன் கைவண்மையே(புறம். 141/14-15)

எனப் பேகனின் விருந்தோம்பல் திறனும் பண்பும் பாராட்டப்படுகிறது.

""""
மரியன்ன வண்மைத்
தேர்வே லடாயைக் காணிய சென்றுமே""""(புறம்.133/6-7)

மாரியைப்போல எதையும் எதிர்ப்பாக்காமல், எல்லோரையும் சமமாகப் பாவித்து உதவி செய்யக் கூடியவன் என ஆய் பாராட்டப்படுகிறான்.

""""
நாடுங்குன்று மொருங்கீயும்மே"""" (109.18)

எனப் பாரி நாட்டையும் குன்றையும் கூட இரவலர்க்கு வழங்கி விடக் கூடியவன் என்போற்றப்படுகிறான்.
 Image result for பாரி 

""""
நன்னோடு பாட வென்னை நயிந்து"""" (புறம்.146/3) எனப் பேகனின் நயமான கொடைத்திறம் பாராட்டப்படுகிறது.

""""
ஓம்பா வீதை விறல் வெய்யோன்"""" (புறம். 152/32)என ஓயாது வழங்கும் ஓரியின் சிறப்புப் பாராட்டப்பட்டுள்ளது.

""""
ஏத்தினம் தரூ உங்கூழே நுங்குடி
வாழ்த்தினர் வநீ உமாரவலரதுவே"""" (புறம் 122/ 6-7)

எனக் காரியை நாடிச் சென்றவர்கள் அவன் மகிழ்வோடு தரும் விருந்தை உண்டு அவன் குடியை வாழ்த்துவதைக் கேட்டு, இரவலர் காரியையே நாடிச்சென்றனர் என இப்புலவர் கூறுகிறார்.

""""
சிறு சோற்றானது நனிபல கலத்தன் மன்னே"""" (புறம். 235/4)
Image result for பாரி 

சிறு சோறாயினும், பெருஞ்சோறாயினும் மிக மகிழ்வோடு விருந்தளிக்கக் கூடியவன் அதியன் என ஔவை பாராட்டுகிறார்.

சீறூர் மன்னர்களிடம் மிக உரிமையாக பரிசில் கேட்கும் இரவலர்களின் நிலையை ஒரு பாடல் காட்டுகிறது.
சுவல் அழுந்தப் பல காய
சில் ஓதிப் பல் இளைஞருமே,
அடி வருந்த நெடிது ஏறிய
கொடி மருங்குல் விறலியருமே,
வாழ்தல் வேண்டிப்
பொய் கூறேன்; மெய் கூறுவல்;
ஓடாப் பூட்கை உரவோர் மருக!
உயர் சிமைய உழாஅ நாஞ்சில் பொருந!
மாயா உள்ளமொடு பரிசில் துன்னி,
கனி பதம் பார்க்கும் காலை அன்றே;
ஈதல் ஆனான், வேந்தே; வேந்தற்குச்
சாதல் அஞ்சாய், நீயே; ஆயிடை,
இரு நிலம் மிளிர்ந்திசினாஅங்கு, ஒரு நாள்,
அருஞ் சமம் வருகுவதுஆயின்,
வருந்தலும் உண்டு, என் பைதல் அம் கடும்பே. (புறநானூறு: 139)
நாஞ்சில் வள்ளுவனை மருதன் இளநாகனார் பாடியது.
வாழ்தல் வேண்டிப் பொய் கூறேன்; மெய் கூறுவல்; இப்பாடலில் சிறப்பான வரிகள்..
நின்னைக் காண, தோல்களில் தழும்பு உண்டாகுமளவு சுமைகளைச் சுமந்து வந்த இளைஞர்கள் மிகப்பலர். எம்முடைய விறலியர்கள் மெல்லிய அடிவருந்தும் அளவுக்கு நெடுநேரம் மலைப் பகுதிகளில் ஏறிவந்ததினால் களைத்துப்போயினர். இவர்கள் உயிர் வாழ வேண்டுமே என்பதற்காக பொய் சொல்லவில்லை. உண்மையைதான் உன்னிடம் கூறவிரும்புகிறேன்.
போரில் தோல்வியை என்றும் அறியாத வீரர் வழிவந்தவனே...! உயர்ந்த உச்சியை உடைய நாஞ்சில் என்னும் நாட்டின் தலைவனே...!.. நான் சொல்வதைக் கேள்...

'நாங்கள் வறுமையுற்றிருக்கிறோம்' என்று பிறர் உன்காதுபட சொல்லிடும் நேரம்கூட காத்திருக்க முடியாத வறுமையுடையவர்கள் நாங்கள்.

உன்னுடைய அரசன், உனக்கு வேண்டியதை அளித்தனன்!! அவனுக்காகப் போரில் நீ சாகவும் அஞ்சமாட்டாய்.. ஒருகால் போர் ஏற்பட்டு விட்டால், எங்களுக்கு உதவும் முன் விருட்டென சென்றுவிடுவாய். அப்படி சென்றுவிட்டால் நானும் என் சுற்றமும் பசிக்கொடுமையால் அழிந்துப்போவோம். எனவே, எங்களுக்கு விரைந்து அருள் செய்து உதவு...!!.

மேற்கூறிய பாடல்களெல்லாம் சீறூர் மன்னர்களை நாடிச்சென்றவர்களின் மன மகிழ்வை வெளிப்படுத்துகின்றன. விருந்து பேணும் பண்பே உயர்ந்த பண்பாகப் புலவர்கள் கருதியுள்ளனர். வறுமை நிலையிலிருந்தாலும், சிறிதளவே உணவிருந்தாலும், நள்ளிரவாக இருந்தாலும், வறுமையுற்று வாடி வருகின்றவரின் நிலையை உணர்ந்து அவர் மனம் கோணாதவாறு அவர்கள் சிறு உணவு பெற்றாலும் பெருமகிழ்வு பெரும் வகையில் அவர்களை இன்முகத்துடன், வரவேற்று, உபசரித்து நன்முறையில் நடத்துகின்ற பாங்கு சீறூர் மன்னர்களிடமிருந்ததைப் புலவர்கள் பாராட்டுகின்ற பாடல்களிலிருந்து வெளிப்படுத்தப்படுகிறது. சீறூர் மன்னர்கள் ஒவ்வொருவராக அழிக்கப்பட்ட நிலையில், இரவலருக்கு உணவிடும் கலங்கள் நிரந்தரமாகக் கவிழ்ந்து வைக்கப்பட்டதை ஒரு பாடல் கூறுகிறது. (புறம்.235)

அருந்தலை இரும்பாணர் அகன்மண்டைத் துளையுரீஇ
இரப்போர் கையுளும் போகிப்
புரப்போர் புன்கண் பாவை சோர
அஞ்சொல்நுண் தேர்ச்சிப் புலவர் நாவில்
சென்றுவீழ்ந் தன்றுஅவன்
அருநிறத்து இயங்கிய வேலே;
ஆசாகு எந்தை யாண்டுஉளன் கொல்லோ?
இனிப், பாடுநரும் இல்லை; பாடுநர்க்குஒன்று ஈகுநரும் இல்லை;
பனித்துறைப் பகன்றை நறைக்கொள் மாமலர்
சூடாது வைகியாங்குப் பிறர்க்குஒன்று
ஈயாது வீயும் உயிர்தவப் பலவே. (பாடியவர்: ஔவையார்.)


இனிப் பாடுவோரும் இல்லை; பாடுவோருக்கு ஒன்று ஈவோரும் இல்லை. குளிர்ந்த நீர்த்துறையில் உள்ள தேனொழுகும் பெரிய பகன்றை மலரைச் சூடுவோர் இல்லாது வீணாவதுபோல், பிறர்க்கு ஒருபொருளையும் கொடுக்காமல் வாழ்ந்து இறப்பவர் மிகப் பலர் என ஔவையாரும் அதியமான் இறந்த வழி பாடியுள்ளார். சீறூர் மன்னர்களின் அழிவு பேரரசுகளின் உருவாக்கம் இவற்றில் சாதாரண மக்களின் வாழ்க்கை நசுக்கப்பட்டதை இப்பாடல்கள் காட்டி நிற்கின்றன.

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்களைப் பதிவு செய்யலாமே?