நீரின்றி அமையாது உலகு.

முனைவர் ஜ.பிரேமலதா,தமிழ் இணைப்பேராசிரியர், அரசு கலைக் கல்லூரி, சேலம் 636 007 DR.J.PREMALATHA,ASSOCIATE PROFESSOR IN TAMIL,GOVT ARTS COLLEGE,SALEM -636 007.

Wednesday 6 May 2015

சங்க காலத்தில் போரும் அமைதியும் 14



Image result for குறுநிலமன்னர்கள் 




கடுகு சிறுத்தாலும் காரம் போகுமா?


குறிஞ்சியும் முல்லையும் முறைமையில் திரிந்து பாலை என்பதோர் வடிவம் கொள்ளும் நிலப்பகுதிகள். இப்பகுதி மக்கள் வளமான காலத்தில் வசதியாக வாழ்ந்தார்கள். வசதியற்ற காலத்தில் வறுமையால் வாடினார்கள். என்றாலும் இவர்களின் வீரம் எப்போதும் மாறாமல் இருந்தது.

போரினால் வறுமையுற்ற முல்லை நிலப் பகுதியைச் சேர்ந்தவன் ஒரு சீறூர் மன்னன். புல்லரிசி மட்டுமே கிடைக்கும் சூழலில் வாழ்பவன். இந்தப்புல்லரிசியை மட்டுமே உண்டு வந்தாலுமே வீரத்தில் சிறிதும் சளைக்காதவன். பகைவர் அஞ்சத்தக்கப் பெரிய தோள்களையுடையவன். இப்படிப்பட்ட இவன் போர்க்களத்தில் நுழைந்து ஆயுதம் ஏந்திநின்றால், எதிரிபடைவீரர்களுக்கெல்லாம் அச்சத்தைத் தருவான் (புறம்.84) என்கிறது ஒரு பாடல். வறுமையிலும் வீரத்தில் செம்மையைக் கொண்ட மக்களைக் கொண்ட நாடு என் நாடு என்று பெருமை பேசும் நிலையை இதில் காண முடிகிறது.

என், புற்கை யுண்டும் பெருந்தோ ளன்னே;
யாமே, புறஞ்சிறை இருந்தும் பொன்னன் னம்மே
போறெதிர்ந்து என் போர்க்களம் புகினே,
கல்லென் பேரூர் விழவுடை ஆங்கண்,
ஏமுற்றுக் கழிந்த மள்ளர்க்கு (புறம்.84)
Image result for சங்க கால போர் 



சீறூர் மன்னர் நிலை

தொடர்ச்சியாக நடந்த போர்களில் வேந்தர்களால் சீறூர் மன்னர்கள் அழிக்கப்பட்டனர். இவ்வாறு சீறூர் மன்னர்கள் அழிக்கப்பட்ட நிலையை நற்றிணைப் பாடலொன்று (43) எடுத்துரைக்கிறது. அகப்பாட்டான நற்றிணையில் புறஞ்செய்தியை அழகுற எடுத்துரைத்துள்ளார் எயினந்தையார் என்னும் புலவர். இருமன்னர்களுக்கிடையே ஏற்பட்ட பகை, போராக வளர்ச்சியுற்றது. இதில் ஒருமன்னன் ஓரெயிலை மட்டுமே உடைய சீறூர் மன்னன். இவனுடைய எதிரிமன்னன் படைபலம் மிக்கவன். தன்னை எதிர்த்தவர்களைப் பூண்டோடு அழிக்க முடிவெடுத்துப் படைதிரட்டினான். இதை யறிந்த ஓரெயில் மன்னன் தன் எதிரியின் படைபலத்திற்கு நிகராகத்தானும் படைதிரட்ட முடிவெடுத்தான். தனனைப்போன்ற ஒரு சீறூர் மன்னனை உதவி கேட்டான்.
நட்பிற்குரிய சீறூர் மன்னனும் தன் படைபலங்களை அனுப்பி இறுதி வரை போரில் உதவுவதாக வாக்களித்தான். இதை நம்பிய ஓரெயில் மன்னனும் தானும் போருக்குத் தயார் எனத் தூதனுப்பினான்.


இருபக்கமும் போருக்கான நடவடிக்கைகள் தொடங்கின. போர்க்கருவிகள் கூர்த்தீட்டப்பட்டன. படைவீரர்கள் திரட்டப்பட்டனர். அவர்களுக்குரிய உணவு, உடை,மருந்துகள் சேகரிக்கப்பட்டன. போர்ப்பாசறை அமைப்பதற்கு இடம் தேர்வு செய்யப்பட்டது. போர்க்களமும் தயார் படுத்தப்பட்டது. போருக்குரிய நாளும் குறிக்கப்பட்டது. அந்நாளும் வந்து விட்டது. நண்பனாகிய சீறூர் மன்னனுக்கும் போர் நாள் குறித்துச் செய்தி அனுப்பியாயிற்று. ஆனால் போரில் துணைக்கு வருவேன், படைகளைத் தருவேன் என்று உறுதி கொடுத்த சீறூர் மன்னன் போர் தொடங்கிய தகவல் கொடுத்த பின்னும் படைகளை அனுப்பவில்லை. தானும் வரவில்லை. கொடுத்த உறுதி குறித்த மாற்றுக் கருத்தையும் தூதுவரிடம் கூறி அனுப்பவில்லை. இந்நிலையில் நண்பனை நம்பி போருக்கு ஒப்புதல் கொடுத்த ஓரெயில் மன்னனின் நிலை எப்படியிருக்கும்?


Image result for மதில் 
எதிரி மன்னனோ யானைப் படைகளைக் கொண்டுவந்து ஓரெயில் மன்னனின் மதிற்புறத்தே குவிக்கத் தொடங்கிவிட்டான். பாசறையமைத்து தன் படைகளோடு தங்கிவிட்டான். இந்த இரவு கடந்த அடுத்த நாள், போரைத் தொடங்க வேண்டிய நிலை. ஏற்கனவே,ஓரெயில் மன்னனின் மதிலோ சிதலமடைந்து உடைந்த நிலையில் உள்ளது. அது ஓரெயில் மன்னயையும் அவன் நாட்டு மக்களையும் காக்கும் வலிமையற்றது. நண்பனையும், அவன் படையையும் நம்பி போருக்கு ஒப்புதல் கொடுத்த ஓரெயில் மன்னன்தன் அழிவும் தன் நாட்டின் அழிவும் உறுதிஎன்று நினைத்து மனங்கலங்கி கையிற்று நிற்கிறான்.

Image result for போரில் வேல் 
இம்மன்னைப் போலத்தான் தலைவியின் நிலையும் நாளை இருக்கும் என எச்சரிக்கிறாள் தோழி. தலைவன் மணநாளில்நின் தோள் என்றும் பிரியேன்என உறுதி கொடுத்திருந்தான். ஆனால் வறுமை சூழலை நினைத்து பொருள் தேட வேறுர் செல்ல முடிவெடுத்தான். அவன் செல்ல நினைத்த வழியோ கொடிய பாலை வழி. பசித்த செந்நாய்கள் பசியில் வாடிய காட்டு மானை உண்டு எஞ்சிய பகுதியை விட்டுச்செல்லும். அவ்வழிச்செல்வோருக்கு அதுவே உணவு. அப்பாலை நில வழியில் தலைவன் செல்ல முடிவெடுத்ததை அறிந்தளவில் தலைவி, ‘போரில் கைவிட்ட நண்பனின் துரோகத்தை நினைத்தும் தன் நாட்டின் அழிவு குறித்தும், எதிரி மன்னனின் முற்றுகையை நினைத்தும், எதுவும் செய்யஇயலாமல் நிற்கும் தன் நிலைமையை நினைத்தும் கலங்கி நிற்கும் ஓரெயில் மன்னன் போலகலங்கி நின்றாள் எனத்தோழி தலைவனுக்குத் தலைவியின் நிலையை எடுத்துரைக்கிறாள். (நற்-43)


“அஞ்சல் என்ற இறை கைவிட்டென
பைங் கண் யானை வேந்து புறத்து இறுத்தலின்
களையுநர்க் காணாது கலங்கிய உடை மதில்
ஓர் எயில் மன்னன் போல
அழிவு வந்தன்றால் ஒழிதல் கேட்டே“


சீறூர் மன்னர்களுக்கிடையே பெருவேந்தர் தொடர்பான அச்ச உணர்வே அவர்களை அவர்களுக்கு எதிராக ஒன்று திரளத்தடையாக இருந்துள்ளது. மேலும், ஒரு சீறூர் மன்னனுக்காக உதவப்போய்ப் பெருவேந்தரை பகையாக்கிக்கொள்ள எச்சீறூர் மன்னனும் விரும்பவில்லை என்பது தெளிவாகிறது.வேந்தர்களிடம் பகைத்துக் கொள்ளவிரும்பாமல், ஒதுங்கி வாழ விரும்புவதை இப்பாடல் பதிவு செய்துள்ளது. சீறூர் மன்னர்களில் பலர் வீழ்ந்துவிட்ட நிலையில் எஞ்சியுள்ளோர் தற்காத்துக் கொள்ளுதலே முதன்மையாகக் கருதியுள்ளனர் எனவும் கருத இடமுண்டு.


சீறூர் மன்னர்கள் தங்களுக்குள் போரிட்டுக் கொணடதைப் பல பாடல்கள் எடுத்துரைக்கின்றன. கொல்லி மலையை ஆண்ட குறுநில மன்னன் ஓரி. மிகச் சிறந்த புரவர்களாகிய கபிலர், பரணர், பெருஞ்சித்திரனார், கல்லாடனார் போன்றோர் ஓரி கொல்லியைப் பாடியுள்ளனர். புகழ்வாய்ந்த ஓரி ஏனோ சேரனோடு பகைமை பூண்டான். மலையமான் திருமுடிக்காரி சேரனுக்கு நெருக்கமானவன். எனவே, கொல்லி மலைமீது படையெடுத்து ஓரியோடு போரிட்டான். பேராற்றல் மிகுந்த காரியோடு ஓரியால் சமமாகப் போரிட முடியவில்லை. போரில் ஓரியைக் கொன்று கொல்லிமலையைக் கைப்பற்றி சேரனிடம் ஒப்படைத்தான் காரி. 

அதியமான் நெடுமிடல், பதிற்றுப்பத்தில் நான்காம் பத்தைப் பாடிய புலவர் காப்பியாற்றுக் காப்பியனார் என்பார், சேர மன்னனைப் புகழ்ந்து பாடும்போது இம்மன்னனைப்பற்றிக் குறிப்பிட்டுள்ளார். இதன்படி, களங்காய்க்கண்ணி நார்முடிச் சேரல் என்னும் சேர மன்னனுடன் இடம்பெற்ற போரில் நெடுமிடல் கொல்லப்படுகிறான். அதியமான் நெடுமிடல் பசும்பூட் பாண்டியனுக்குச் சார்பாகவே சேர மன்னனுடன் போரிட்டதாகக் கூறப்படுகின்றது. அதியமான் நெடுமான் அஞ்சி இவனுக்குப் பின்னோன்.



ஒளவைப் பிராட்டிக்கு நெல்லிக்கனி கொடுத்து இறவாப் புகழ் கொண்டானே அதியமான் நெடுமான் அஞ்சி. அவன் தகடூரைத் தலைநகராகக் கொண்டு ஆண்டான். அது கொல்லி மலைக்கு வடக்கே 60 கல் தொலைவில் உள்ளது. அதியமானும் சேரனுடன் பகைமை பூண்டான். அதியமான், ஓரி, சோழன், பாண்டியன் ஆகியோர் கூட்டாக இணைந்து சேரல் இரும்பொறையை ஒடுக்க விரும்பினர். அதனால் இருதரப்பினருக்கும் கடும் போர் மூண்டது. அக்காலத்தில் மலைநாட்டை ஆண்ட மலையமான் திருமுடிக் காரி என்பவனுடன் போரிட்டு அவனது தலைநகரமான திருக்கோவிலூரை அஞ்சி கைப்பற்றியதாகத் தெரிகிறது.

காரிக்குச் சார்பாகச் சேர மன்னன் பெருஞ் சேரல் இரும்பொறை என்பான் நெடுமான் அஞ்சியுடன் போர் தொடுத்தான். சோழ மன்னனும், பாண்டியனும் அதியமானுக்கு ஆதரவாக இருந்தனர் எனினும் அஞ்சி இப்போரில் தோற்று இறந்தான். இப் போரை நேரில் கண்ட புலவர்கள் பாடிய நூலே தகடூர் யாத்திரை என்பது. இந்நூல் இன்று முழுமையாகக் கிடைக்கவில்லை. இவ்வாறு பெருநில வேந்தர்கள் சார்பாக குறுநில மன்னர்கள் தங்களுக்குள் போரிட்டு மாய்ந்தனர்.

அறநெறியிழந்து மண்ணாசை காரணமாக வலிய போர்தொடுக்கும் வேந்தர்களைவம்ப வேந்தர்என்று அழைத்துள்ளதிலிருந்து வேந்தர் மேல் இனக்குழு மக்கள் கொண்டிருந்த வெறுப்புப் புலப்படும்.

எனினும், எல்லாவேந்தரையும் வம்ப வேந்தராகக் கருதினாரல்லர். இனக்குழு சமுதாயத்திலிருந்து வேந்தர் நிலைக்கு உயர்ந்த தம் குடிகளைச் சார்ந்த வேந்தரை, தம் வேந்தராகக் கருதி, அவ்வேந்தர் நிகழ்த்தும் போரில் கலந்து கொண்டு வெற்றியும் கிடைக்கக் காரணமாகியுள்ளனர்.

ஒரு சீறூர் மன்னன் தன் குடி சார்ந்த வேந்தனுக்காகப் போரிடுகிறான். எதிரி மன்னன் அமர்ந்து வந்த களிற்றின் மீது ஈட்டியை வீசி எறிந்து அந்தப் போர்க்களிற்றைக் கொல்கின்றான். அந்த யானை மீதமர்ந்து வந்த மன்னன் தன் களிற்றைக் கொன்ற சீறூர் மன்னன் மீது ஈட்டியெறிய அந்த ஈட்டி, சீறூர் மன்னன் மார்பில்பட்டு நெடுமரம் போலச் சாய்ந்து தரையில் விழுகின்றான். ஊகம்புல் நிறைந்த தரையில் கீழே விழுந்து கிடக்கும் அவன் வீரத்தைக் கண்டு, பகை மன்னனே வியந்து போனதாக வண்ணக்கன் சோருமாருங் குமரனார் (புறம். 307) ஒரு சீறூர் மன்னனின் வீரத்தைப்போற்றுகிறார்.

ஆசு ஆகு எந்தை யாண்டுஉளன் கொல்லோ?
குறைத்து அன்ன களற் றோடு பட்டோன், (புறம்-307)
 
என்று தொடங்கும் இப்பாடல் சீறூர் மன்னனின் நிலையை விளக்குகிறது. இவ்வீரனின் வீரத்தை வியக்கும் எதிரி மன்னன் நிலையை,
""""வெஞ்சின யானை வேந்தனும், ‘இக்களத்து,
எஞ்சலின் சிறந்தது பிறிது ஒன்று இல்என
பண்கொளற்கு அருமை நோக்கி,
நெஞ்சு அற வீழ்ந்த புரைமையோனே"""" எனப் பாடல் விளக்குவதாக உள்ளது.


Image result for யானை  வேல் 
மற்றொரு தலைவன் ஒரு சீறூர் தலைவன். இவன் பகை மன்னனின் வேல் தன் மார்பின் மீது நுழைந்தளவில், அவ்வேலை உடனே பறித்து, அந்த மன்னன் அமர்ந்து வந்த களிற்றின் நெற்றியின் மீது வீசிக் கொல்கிறான். வேல் நெற்றியைப் பிளந்ததால், அக்களிறு பெருங்குரலெடுத்து பிளிறியது. அதன் பிளிறலைக் கேட்ட மற்ற களிறுகள் அஞ்சி போர்க்களத்திலிருந்து விலகி புறங்காட்டி ஓடி விட்டான். இவ்வாறு ஒரு சீறூர் மன்னன் தன் மார்பில் வேல் நுழைந்து மறுபுறம் வந்த நிலையிலும், மனந்தளராது, அதைப் பிடுங்கி, வேந்தனின் களிறு மீது எதிந்து வேந்தனை புறமுதுகுகாட்டி ஓட விட்டதைச் கோவூர் கிழார் எடுத்துரைக்கிறார்.



No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்களைப் பதிவு செய்யலாமே?