நீரின்றி அமையாது உலகு.

முனைவர் ஜ.பிரேமலதா,தமிழ் இணைப்பேராசிரியர், அரசு கலைக் கல்லூரி, சேலம் 636 007 DR.J.PREMALATHA,ASSOCIATE PROFESSOR IN TAMIL,GOVT ARTS COLLEGE,SALEM -636 007.

Wednesday 6 May 2015

சங்க காலத்தில் போரும் அமைதியும் 11



குறுநில மன்னர்கள் வாழ்க்கை சிறப்பு


இனக்குழு தலைவர்கள், மக்களுக்காக வாளை அடகுவைத்து உணவிட்ட செய்தியும், உழவுத்தொழில் தொடங்கிய ஆரம்பகாலத்தில் விதைக்காக வைத்திருந்த விதைகளையும் சமைத்துக் கொடுத்து பசி நீக்க முயன்றதையும், வீட்டிலிருந்த பழைய உணவு, இறைச்சி போன்றவற்றைக் கொடுத்து உதவுவதையும் புறநானூற்றுப் பாடல்கள் (333, 334, 331, 319, 320, 326) பதிவு செய்துள்ளன. இதுவே இனக்குழு வாழ்க்கையின் சிறப்பாகும்.


Image result for சங்ககால 

நெய்தல் நில மக்களாகிய பரதவர் கரையில் மீனைக்குவித்து வைத்தனர். மற்ற பரதவர்கள் அதைப் பகுத்துக் கொண்டு மகிழ்ந்து உண்டனர். (அகம்.10,70)
 
     
குரூஉத் திரைப் புணரி உடைதரும் எக்கர்ப்
     
பழந் திமில் கொன்ற புது வலைப் பரதவர்
     
மோட்டு மணல் அடைகரைக் கோட்டுமீன் கெண்டி,
     
மணம் கமழ் பாக்கத்துப் பகுக்கும்
     
வளம் கெழு தொண்டி அன்ன இவள் நலனே. (அகம். 10)
                      நெய்தல்-அம்மூவனார்

கொடுந் திமிற் பரதவர் வேட்டம் வாய்த்தென,
இரும் புலாக் கமழும் சிறுகுடிப் பாக்கத்துக்
குறுங் கண் அவ் வலைப் பயம் பாராட்டி,
கொழுங் கண் அயிலை பகுக்கும் துறைவன்(அகம். 70)
நெய்தல் - மதுரைத் தமிழ்க் கூத்தனார் கடுவன் மள்ளனார்

முல்லை நிலமோ ஆடு,மாடு, எருமைகளை முதலியவற்றை மிகுதியாகக் கொண்டிருக்கும் பகுதி. இங்குக் கால்நடைசார்ந்த வேளாண்மை நடைபெற்றது. அவை சார்ந்த உணவுப் பொருட்கள் மக்களின் உணவாயின. இங்கு வயல்களில் திணை, வரகு, கொள், அவரை (மது, 271.285), பெரும் (148-184) மலை (404-420) விளைவிக்கப்பட்டன.

கருங்கால் வரகே இருங்கதிர் தினையே
சிறு கொடிக்கொள்ளே பொறிகிளார் அவரையொ
டிந்நான்கல்லது உணவுமில்லை(புறம் 335/4-6)


Image result for சிறு தானியங்கள் 
முல்லை நிலப்பகுதியில் வரகு, திணை, எள், அவரைப் போன்ற பயிர்கள் போற்றப்பட்டுள்ளன. ஆனால், மருதநில ஆக்கத்தில் காடு அழித்து நாடாக்கிய சூழலில் நெல்லும், கரும்பும் முதன்மைப் பயிர்களாகப்போற்றப்பட்டமையால் குறிஞ்சி முல்லை நிலப் பயிர்கள் பின்னுக்குத்தள்ளப்பட்டன. முல்லை நிலம் சார்ந்து வாழ்ந்த சீறூர் மன்னர்களின் வயல்களில் திணை, வரகு உள்ளிட்ட பயிர்களே பயிரிடப்பட்டிருந்த செய்தியைப் புறநானூற்றுப்பாடல்கள் காட்டுகின்றன.


தேக்குவதற்குக் குளங்கள் அமைக்கப்படாத காலகட்டத்தில் முல்லை நிலத்தில் பெய்த மழையானது நிலத்தால் உறிஞ்சப்பட்டும், இயற்கையாகத் தோன்றிய பள்ளங்களில் தேங்கியும் இருக்கும். இந்நீர் கலங்கியிருக்கும். இந்நீரை பசுக்கள் அருந்தும். வேட்டையாடி களைத்து வரும் இளைஞர்களும் இந்தப் பள்ளங்களில் தேங்கிய நீரைப்பருகுவர் என்கிறது புறநானூறு (325/ 1-6)


மழை பெய்தாலும் நீரைத்தேக்கி வைக்கக் குளங்களற்ற இப்பகுதியில் மழை பெய்யாத காலகட்டங்களில் திணை, வரகு போன்றவை குறைவான விளைச்சலையே தந்துள்ளன. எனவே, விதைக்காக வைக்கப்பட்டிருந்த திணை, வரகு போன்றவற்றைச் சமைத்து உண்ணும் நிலைக்கு இம்மக்கள் தள்ளப்பட்டனர்.

குரலுணங்கு விதைத்தினை யுரல் வாய்ப்பெய்து
சிறிது புறப்பட்டன் றோவில் டன்னூர் (புறம். 12/13)

இதனால் உண்பதற்கு ஏதுமற்ற இம்முல்லை நில மக்கள் வேறுவழியில்லாமல், பெருநில வேந்தர்கள் நடத்திய போர்களில் கூலிப்படைவீரர்களாய் பங்கேற்றனர். (புறம் 316,318,319, 320, 324)


முல்லை நிலத்தில் வாழ்ந்த இனக்குழு மக்கள், பகிர்ந்துண்டு வாழும் பண்பினர். தமக்கு உணவில்லாத நிலையிலும் வந்த விருந்தினர்க்கு விதையாக வைத்திருக்கும் தானியங்களையாவது சமைத்துப்போடும் உயர் எண்ணமுடையவர் என்பதால், தம் வயிற்றுக்காக இல்லாமல் போனாலும் தம்மைச் சார்ந்து வாழும் தம்குடிமக்களின் பசியாற்றுவதற்காகப் பெருவேரந்தர்கள் மேற்கொண்ட போர்களில் கலந்துகொண்டனர். மக்களின் வறுமையை நீக்க வேந்துவிடு தொழிலை விரும்பி மேற்கொண்டனர். வறுமை நிலையிலும், சீறூர் மன்னனின் விருந்தோம்பலின் சிறப்பை ஒருபாடல் காட்டுகிறது.


ஒரு சீறூர் மன்னனின் ஊரில் மக்கள் உணவின்றி வாடுகின்றனர். எனினும், சீறூர் மன்னனின் மனைவி வந்த தம் குடிமக்களுக்காகச் சில கீரைகளைப் பறித்து வருகிறாள். விறகுகளை எடுத்து வருகிறாள். விறகுகளை எரியூட்டி, இலைகளைச் சமைத்துத் தம்மக்களுக்கு உணவிடுவதற்கான ஏற்பாடுகளைச் செய்து கொண்டிருக்கிறாள். அப்போது போர் முரசு ஒலிக்கிறது, உடனே சீறூர் மன்னன் போருக்குப்புறப்படுவதற்குத் தன் அம்பையும் கருவிகளையும் சேகரித்து, தன்னொத்த மக்களைப் போருக்கு அழைக்கிறான். இந்த நிலையில் தன் கணவனுக்கும், போருக்குக் கிளம்ப முயலும், போர் வீரர்களுக்கும் உதவி செய்ய அவன் மனைவி ஈடுபடுகிறாள். உப்பில்லாத கீரையைச் சமைத்து மக்களுக்கு உணவிடுவதற்கு முன்னரே போர் முரசு ஒலித்து விட்டதால், பசியோடு காத்திருக்கும் அம்மக்கள் இனி நல்ல உணவை உண்பர் என்பது உறுதி என மகிழ்ச்சி கொள்கிறாள். இச்சீறூர் மன்னன் பேரரசனுடன் சேர்ந்து, அவனுடைய பகையரசனை விரைவில் வென்று அரிசியோடும், இன்னும் பிற பொருட்களோடும் விரைந்து வருவான். அவ்வாறு அவ்வீரன் வரும் காலத்தில் இவ்வூர் வளம்பல பெற்று பொலியும். இவன் வீட்டிலுள்ள குருவிகளும் அரிசியை உண்டு தம் கூட்டில் மகிழ்வோடு இருக்கும் எனத் தலைவி மகிழ்வதாகப்பெருங்குன்றுர் கிழார் பாடுகிறார். (புறம்-318)


ஆலங்குடி வங்கனார், ஒரு சீறூர் மக்களில் ஒருவன் தன்னை நாடி வந்த ஒரு பாணனிடத்து கூறும் செய்திகளை ஒரு பாடலில் சுட்டுகிறார்.


""""பாணனே உன் வரவு நல்வரவாகுக. இம்முல்லை நிலத்தில் அமைந்த ஒரு மடுவில் தேங்கிய மழை நீரை அகன்ற சாடியில் எடுத்து வைத்துள்ளேன். அந்நீரைத் தெளியச்செய்வதற்காக நான் கடுக்காயை இட்டு வைத்துள்ளேன். என்னிடம் வேட்டையாடிய முயலின் கறித்துண்டு உள்ளது. அதை நீ உன் சுற்றத்தோடு உண்டு பசியாறுவாயாக, இந்த ஊரின் சீறூர் மன்னன் நேற்று வேந்தன் ஏவ, பகையரசனை வெல்ல போருக்குச் சென்றிக்கிறான். போரில் வெற்றி பெற்று பெரும் பரிசினைப் பெற்றுவருவான். வேந்தன் கொடுத்த பெரும்பரிசினைப் பெற்று வரும் எம் சீறூர் மன்னன் உனக்கு நல்ல விருந்திட்டு, உன் தகுதிக்கேற்ப பரிசினையும் வழங்குவான். அதுவரை எம் இல்லத்தில் நீ தங்கியிருப்பாயாக"""" (புறம். 319) என்று கூறுகிறான்.

""""
வேந்து விடு தொழிலொடு சென்றனன் வந்து, நின்
பாடினி மாலை அணிய,
வாடாத தாமரை கட்டுவன் நினக்கே"""" (319. 13-15)

என் தலைவன் உன் பாடினிக்கு பொன்மாலையும், உனக்குப் பொன் தாமரை மலரையும் வழங்குவான் என்கிறான்.


முல்லை புன்செய் நிலத்தில் தேவைக்குப் போதுமான உணவு கிடைக்காமையும், நீர்வளமின்மையும் வறுமைக்குக் காரணங்களாயுள்ளன. முல்லைநிலம் பெரும் பரப்பை உடையதாக இருப்பினும் நிலையான உணவுத் தேவைக்கும், சிறப்பான ஆட்சிக்கும் பயன்படவில்லை. எனவேதான் காடு அழித்து நாடாக்கி, நீர்நிலைகள் பெருக மழைநீரைத் தடுத்துநிறுத்தி தேக்கச் செய்யக் குளம் பெருக்க வேண்டும் என்று சங்கப்பாடல்கள் அரசினை வேண்டுகின்றன.

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்களைப் பதிவு செய்யலாமே?