நீரின்றி அமையாது உலகு.

முனைவர் ஜ.பிரேமலதா,தமிழ் இணைப்பேராசிரியர், அரசு கலைக் கல்லூரி, சேலம் 636 007 DR.J.PREMALATHA,ASSOCIATE PROFESSOR IN TAMIL,GOVT ARTS COLLEGE,SALEM -636 007.

Wednesday, 6 May 2015

போரும் நில அழிப்பும்



போரும் நில அழிப்பும்

சங்ககாலத்தின் போர்களில் எதிரிகளின் வயல்கள் ஏன் அழிக்கப்பட்டன? நீர் நிலைகள் ஏன் பாழ்படுத்தப்பட்டன? விளைபொருட்கள் ஏன் கொள்ளையடிக்கப்பட்டன? அரசு உருவாக்கத்தில் இத்தகைய செயல்கள் ஆற்றிய பங்கு என்ன? பயன் என்ன? என ஆராய்ந்து பார்த்தால் ஆதி மக்கள் வேட்டைச்சமுதாய வாழ்க்கைமுறையிலிருந்து வேளாண் சமுதாய வாழ்க்கை முறைக்கு மாறிய நிலையில் நிலங்கள் பெற்ற முக்கியத்துவம் விளங்கும்.

நிலத்தைப் பயன்படுத்தி விளைவித்துப் பாதுகாக்கும் நிலை ஒரு புறம், தன் ஆட்சியை அதிகாரத்தை நிலைநிறுத்த/பரவலாக்க எதிரிகளின் வயல்களை அழித்தல் மறுபுறம்.

ஆதிச் சமுதாயம் இனக்குழு சமுதாயமாக வாழ்ந்திருந்தது. உணவு தேடி வேட்டையாடி, கிடைத்த உணவைப் பகுத்துண்டு வாழ்ந்திருந்தனர். உடைமை என்பது குறித்தோ நிலத்தை உடைமைப் பொருளாக்க வேண்டுமென்றோ யாரும் சித்தித்தறியாத காலகட்டம் அது. உணவிற்காகக் காட்டிலுள்ள ஆநிரைகளை வேட்டையாடி கொன்று, அதைப் பகிர்ந்து உண்டு வாழ்ந்தனர். சங்க இலக்கியத்தில் இதற்குச் சான்றுண்டு.
    
Image result for முள்ளம்பன்றி வேட்டை

""""கானவன் எய்த முளவு மான் கொழுங்குமுறை
நேம்கமழ் கறுப்பின் கொடிச்சி, கிழங்கொடு
காந்தள் அம் சிறு குடிப் பகுக்கும்"""" (85)

முள்ளம்பன்றியை வேட்டையாடி வந்த ஒருவன்காட்டில் வாழும் ஒரு கொடிச்சியிடம், கொடுக்க அவள் முள்ளம் பன்றியைத் தூய்மை செய்து, அதன் தலையைத் தம் குடிகளுக்குப் பகிர்ந்து கொடுத்தாள் என மேற்கண்ட நற்றினைப்பாடல் கூறுகிறது.



Image result for ஐவகை நிலம் 

மருத நில வாழ்க்கை தொடங்குவதற்கு முன்னர் இருந்த குறிஞ்சி, முல்லை, நெய்தல் நில மக்கள் கிடைத்தவற்றைப் பகுத்துக்கொண்டு வாழ்ந்தவராகவே இருந்தனர். இவர்களைப் பாதுகாக்க ஒரு தலைவனும் இருந்தான். அவனே இனக்குழு தலைவன், சீறூர் தலைவன் எனவும் அழைக்கப்பட்டிருக்கிறான். இவன் மக்களோடு மக்களாக இணைந்து வாழ்ந்தவன். அரண்மனைப்போல் வீடோ, வசதிகளோ இவனுக்கு இருக்கவில்லை. மக்களில் ஒருவனாகவே இவனும் வாழ்ந்தான். சிலநேரங்களில் வேட்டை மிகுதியாகக் கிடைத்தால் மக்களோடு தானும் உண்டான். இல்லாதபொழுது பிறருக்குக்கொடுத்து மகிழ்ந்திருந்தான். தனக்கென வாழாமல் பிறருக்கு என வாழும் பண்பே தலைவனின் செல்வமாகக் கருதப்பட்டது. இவன்சீறூர் மன்னன், சீறூர் வன்மையோன், சிறு குடிக்கிழான்எனப் பலவகையில் அழைக்கப்பட்டான்.

 இவனைப் புறநானூறு (197,299,308,330,388) பலபடப் பாராட்டுகின்றது. இனக்குழு தலைவர்களுக்கு உதாரணமாகக் கடையேழு வள்ளல்கள் போன்றோரைக் குறிப்பிடலாம்.
அகுதை, தித்தன், நன்னன்,எயினன், அதியன், பாரி, பேகன், ஆய், ஓரி,காரி போன்றோரெல்லாம் அக்காலத்தில் குறுநில மன்னர்களாக இருந்தவர்கள்.  மருதநில உருவாக்கத்திற்கு முன்பிருந்த நிலப்பகுதிகளை அரசாட்சி செய்தவர்கள். மக்களோடு மக்களாக வாழ்ந்தார்கள்.சிறந்த போர் வீராகளாக விளங்கியதால் இனக்குழு தலைவர்களாக மக்களால் போற்றப்பட்டவர்கள்.

இவர்களுள், பாரி பறம்பு மலையையும் அதைச் சுற்றியுள்ள முன்னூறு ஊர்களையும் ஆண்டவன். குறிஞ்சிப்பகுதியைச் சார்ந்த பாரியின் பறம்பு மலையானது, உழவரால் உழுது விதைக்கப்படாத இயற்கை வளங்களை உடையது. மலைசார்ந்த பகுதியாதலால், மலைவளத்தையும், புன்செய் வேளாண்மையையும் உடையது. இங்குள்ள மக்கள் உணவிற்காக இயற்கை விளைபொருட்களை உண்டும் வேட்டையாடி விலங்குகளைக் கொன்று புசித்தும், வாழ்ந்து வந்தனர். குறிஞ்சியின் இயற்கை வளம்பற்றி ஒருபாடல் இவ்வாறு குறிப்பிடுகிறது.

உழவர் உழாதன நான்கு பயன் உடைத்தே
ஒன்றே சிறியிலை வெதிரி னெல் வினையும்மே
இரண்டே தீஞ்சுளைப் பலவின் பழ மூழ்க்கும்மே (புறம் 109, 3-8) 

இவ்வாறு உழவர்கள் விளைவிக்காமலே விளையக்கூடிய உணவுப் பொருட்கள் ஏராளமாகக் கிடைத்ததால் பகைமன்னன் யாராக இருந்தாலும்,எத்தனை நாட்கள் முற்றுகையிட்டாலும் தாக்குப்பிடிக்க்க் கூடிய மலையாக பறம்பு மலை விளங்கியது. வளமிகுந்த பகுதியாதலால், விலங்குகளுக்கும் பஞ்சமில்லை. வேட்டையாடாமலே கிடைக்கும் உணவு பற்றி ஒரு பாடல் இவ்வாறு கூறுகிறது.

ஒரு புலி ஒரு யானையைத் தாக்கிக் கொன்றது. புலி உண்டு எஞ்சிய பின், யானையின் தசையின் ஒரு பகுதியை, அவ்வழி வந்த மறவர் சிலர், கோலில் கோத்துக்கொண்டு சென்றனர். அவர்கள் சென்ற திசையில் வந்த உமணர் உப்பை வைத்திருந்தனர். இரு குழுக்களும் இணைந்து அக்காட்டிலேயே அடுப்புமூட்டி, யானையின் சதையில் உப்பிட்டு நெருப்பில் சுட்டு பகிர்ந்துண்டனர் என்கிறது அகநானூறு .

ஆம்பல் அகல் இலை, அமலை வெஞ் சோறு  
தீம் புளிப் பிரம்பின் திரள்கனி பெய்து,
விடியல் வைகறை இடூஉம் ஊர! (அகநானூறு - 196. மருதம்)

ஆம்பலது அகன்றஇலையில், திரண்ட விருப்பந்தரும்சோற்றை, பிரம்பின் இனிப்புடன் கூடிய புளிப்பினையுடையதிரண்ட பழத்தினைப் பெய்து இருள் புலரும் விடியற் காலத்தே இடும் ஊரனே! எனச் சீறூர் தலைவன் விடியற்காலத்திலிருந்தே விருந்து செய்யத் தொடங்கி விடுவான் என விருந்தோம்பல் திறன் பாரட்டப்படுகிறது.

சிறியகள்பெறினே எமக்கீயும் மன்னேஎன்ற ஔவையின் பாடல், இத்தகைய இனக்குழு தலைவனாகிய விளங்கிய அதியனின் பண்பைப் பாராட்டுகின்றது. நிறைய உணவும், கள்ளும் கிடைத்தால் அனைவரோடும் தானும் இணைந்து உண்ணும் அதியன், சிறு கள்ளும் உணவும் கிடைப்பின், பிறருக்கு மட்டும் தந்து அவர்கள் உண்பதைப் பார்த்திருந்து பின்னர் எஞ்சியதை உண்டு மகிழ்வான் என்கிறார் ஔவையார்.

நள்ளி, காட்டிலுள்ள கலைஞர்களுக்காக, வேட்டையாடிய விலங்கைத்தானே சமைத்து தன்கையாலேயே அவர்களுக்குப் பரிமாறி மகிழ்ந்தான் என்கிறது மற்றொரு பாடல் (புறம் 150)

Image result for ஓரி 

ஓரி, அவனிடம் வந்த கூத்தர்களுக்கு பொன்னினால் குவளைமலர் செய்து வெள்ளி நாரிலே தொடுத்து மாலையாக அணிவித்து ஏராளமான செல்வத்தை அளிப்பான். நாட்டியம் புரிவோருக்கும் இசை வாணருக்கும் ஏராளமான செல்வத்தைக் கொடுத்ததாலேயே கடையேழு வள்ளல்களில் ஒருவனாக புலவர்களால் பாடப்பட்டான். அவன் கொடுத்த செல்வத்தால் கூத்தரும் விறலியரும் ஆடலையும் பாடலையும் கூட மறந்து விடுவாராம்.


ஆய் அண்டிரன், புலவர் பாடும் புகழுடையவனாய் விளங்கினான். அவன் காலத்தில் ஆய்குடி என்ற ஊர் சிறந்திருந்தது.

      “
தென்திசை ஆஅய் குடியின் றாயின்
     
பிறழ்வது மன்னோஇம் மலர்தலை உலகே
என்று மோசியார் அதன் பெருமையைப் புனைந் துரைத்தார்.

இத்தகைய இனக்குழுத்தலைவர்கள் மக்களோடு மக்களாக வாழ்ந்த காரணத்தினால்,இத்தகையத் தலைவர்களை நாடி உணவு கேட்டு மக்கள் வருவார்களாயினர்.இத்தலைவர்கள் வளமிகுந்த காலத்தில் பகுத்துண்டதைப்போல,வறுமையுற்ற காலத்தில் மக்களைக் காக்க வேண்டிய பொறுப்பை ஏற்றுக் கொண்டனர். போர்க்கலத்திற்குப் பயன்படும் தங்களின் வீரத்திற்கு அடையாளமாக விளங்கிய போர்க்கருவிகளையும்கூட விற்கவோ, அடகு வைக்கவோ இவர்கள் தயங்கவில்லை.

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்களைப் பதிவு செய்யலாமே?