நீரின்றி அமையாது உலகு.

முனைவர் ஜ.பிரேமலதா,தமிழ் இணைப்பேராசிரியர், அரசு கலைக் கல்லூரி, சேலம் 636 007 DR.J.PREMALATHA,ASSOCIATE PROFESSOR IN TAMIL,GOVT ARTS COLLEGE,SALEM -636 007.

Friday 27 March 2020

மணிவாசகரின் பக்திநெறி

மணிவாசகரின் பக்திநெறி

பக்தி சூஃபி இயக்கங்கள்-1 | ExamsDaily Tamil

ஆதி மனிதனின் அறிவு மலர்ந்த நிலையில், அவன் தன்னையும் விஞ்சிய ஓர் ஆற்றல் உலகில் இருப்பதாக உணர்ந்தான். இயற்கையின் எழுச்சி மிக்கப் படைப்புகளிலும், நிகழ்ச்சிகளிலும் ஏதோ ஓர் ஆற்றல் இருப்பதாக அறிந்து தெளிந்தான். தன் அறிவிற்கு அப்பாற்பட்டு விளக்கும் அந்த ஆற்றலை, தன் அனுபவங்களுக்கேற்ப பலரும் பலவிதமாக உரைத்தனர். நிலையற்ற இவ்வுலகில் நிலைபெறுவதற்கு அந்த ஆற்றல் உதவும் என்று கூறி, அதைப் பெற சில வழிமுறைகளையும் கூறினர். அந்த ஆற்றலை இறைஎன்று போற்றி, இறையை நினைத்து வழிபட்டால் பேரின்பம் கிட்டுமென்றும், நிலையான வாழ்வு வாழலாம் என்றம் தங்களுக்குத் தோன்றியதைக் கூறினர்.


                ‘‘உலகம் பெரியது, அது எங்கேயிருந்து வந்தது, அதன் தன்மை என்ன முடிவு என்ன என்று தெரிந்திருந்தால், ஒரு பரம்பொருளைப் பற்றிய அறிவு தேவையில்லை. அவ்வாறு தெரியாமையின், ஒரு பரம்பொருளைப் பற்றிய எண்ணம் தேவைப்படுகிறது. ஒரு காரியத்திற்குக் காரணம் தேவை. அதுபோலவே இந்த உலகைப் படைத்த ஒருவன் இருக்கிறான் என்று மனிதன் கற்பனை செய்கிறான்’’ என்கிறது வாழ்வியற்களஞ்சியம் (1991-252).
மேலும் ‘‘அடுத்தபடியாக ஒழுக்கம் சார்ந்த தன்மையுடையவர் கடவுள்’’ என்றும் (1991-2520 குறிப்பிடுகிறது. எனவேதான், உடலால் பெறும் இன்பங்கள் யாவும் சிற்றின்பங்கள் என்றுரைத்து மனிதர்களை ஒழுக்க நெறியில் செல்ல அறிவுத்தினர். மனிதர்கள் தங்களுடைய குறுகிய கால வாழ்க்கையில் நேர்மையுடனும், மனிதநேயத்துடனும் வாழ சில வழிமுறைகளை மேற்கொள்ள வேண்டுமென்று எண்ணி அறிவில் உயர்ந்த சான்றோர்கள் அதற்கான வரையறைகளை இறைஎன்னும் பொருள் மேல் ஏற்றி மக்களை நல்வழிப்படுத்தினர். அந்நெறியே பக்தி நெறியாயிற்று.


பக்தி என்றால் என்ன?

பக்தி யாருக்கு வேலை செய்யும் ...                பக்தி என்பது ஆணவ நீக்கம் என்று கூறலாம். பக்தியின் இன்றியமையாமை நான். தான் என்ற எண்ணங்கள் மனதிலிருந்து நீங்குவதேயாகும். அதற்கு ஆணவம், கன்மம், மாயை என்னும் மும்மலங்கள் அழிய வேண்டும். இவையழிய நான் என்ற எண்ணம் நீங்க வேண்டும். அவ்வாறு நான் என்ற எண்ணம் அழிய உதவும் நெறியே பக்திநெறியாகும்.
                ‘‘உண்மைப் பொருளான இறைவனை உள்கி உருகுகின்றாயே, அப்போது நான் என்ற அகங்கார எண்ணமாகிய இரும்புப் பாறை இளகுகின்றது. அகந்தை என்ற கருங்கல் பாறை  கரைகின்றது. நாளடைவில் அது அழிந்து போகின்றது’’ என்பார் சண்முகப்பிரமணியம் (1984-52). இதனையே கோபாலன் (1983-268) ‘ஆன்மாக்கள் பழவினைகள் ஒழிய மலமாக நீங்கப் பெற்றுச் சிவமாகி நிற்கும் முக்தி பெற உதவுவதே பக்திநெறி என்றும் மலத்தைச் சுட்டெரிக்க வல்ல சிவஞானமும் இரண்டிறக்கைகளாகக் கொண்டு ஆன்மாவை சிவனை நோக்கி மேலேற்றுவதே பக்தி என்று குறிப்பிடுகிறார். நான் என்ற எண்ணம் மனதிலிருந்து நீங்கவில்லையெனில் அறியாமை என்றும் இருள் நீங்காது. அறியாமை இருள் அழிய உதவுவதே பக்தி நெறியாகும்.
பக்தியினால் இறைவனோடு ஒன்றுபடும் நிலையானது, நான் என்பது மனதிலுருந்து நீங்கிய நிலையாகும். எனவே, நான் என்ற ஆணவம் அழிய வேண்டுமானால், இறைவனை நினைத்து உருக வேண்டும். பற்று அற்ற நிலையே பேரின்ப நிலையாகும். இதுவே பக்தியின் அடிப்படையாகும். நான் என்பது அழித்த அளவிலேயே, இவ்வுலக உயிர்கள் ஒவ்வொன்றையும் தன்னைப் போலப் பாவிக்கும் பெருநிலையை உயிரானது எய்திவிடுகிறது. இதுவே பக்திநெறியாகப் போற்றப்படுகிறது.
வழிமுறைகள்
                நான் என்ற எண்ணம் ஒழிந்து இறைவனோடு ஒன்றுவதற்கு, சில நெறிமுறைகளைப் பின்பற்றிவேண்டுமென்று சமயவாதிகள் கூறியுள்ளார். இதனால்தான், பல வழிபாட்டு முறைகள் தோன்றின. இவற்றைச் சமயங்கள்என்று பாகுபடுத்தினர்
‘‘மக்கள் செம்மையுற வாழ்ந்து வாழ்க்கையில் நிறை பயனாகிய இறையின்பத்தை எய்துவதற்குரிய நெறியை வவவததுரைப்பதே சமயம்’’ என்பார் இராதா தியாகராஜன் (1986-3)
பொதுவாக வழிபடும் முறையாலும் கொண்ட நெறியாலும் சமயங்கள் பலவானாலும் அனைத்தும் இறைவன் என்ற இலக்கை என்ற இலக்கை நோக்கியே அழைத்துச் செல்கின்றன. அவ்வாறு தோன்றிய பல சமயங்களுள் சைவ சமயமும் ஒன்று. சைவ சமயக் கடவுளாகச் சிவனைப் போற்றிகின்றனர்.
 ‘‘கடவுளுக்குச் சிவம் எனப்பெயரிட்டு வழிபடும் சமயம், பண்டைய நாளில் தமிழகத்தில்தான் தோன்றி வளர்ந்தது. கடவுளைச் .வம் என்று குறிப்பிட்டுப் போற்றி வணங்குவதே சைவசமயமாகும்’’ என்று நடராஜதாசன் (1983-19) சைவ சமயத்தைப் பற்றிக் குறிப்பிடுகிறார்.
                சைவ சமயம் நான்கு வரிகளில் இறைவனை அடையலாம் என்று கூறுகிறது. ‘‘இறைவனை அடைவதற்குரிய நான்கு வழிமுறைகளையும் பற்றி ஊரன்அடிகள் சரியை, கிரியை, யோகம், ஞானம் எனச் சாதனங்கள் நான்கு. தசமார்க்கம், சற்புத்திர மார்க்கம், சகமார்க்கம், சன்மார்க்கம் என மார்க்கங்கள் நான்கு’’ என்று குறிப்பிடுகிறார் குருசாமி (1985-54)
 நான்கு சாதனங்கள் நான்கு மார்க்கங்களாக வேறு வேறு பெயர்களில் குறிப்பிடப்படுகின்றன. இவற்றின் சரியை என்பது தசமார்க்கம், கிரியை என்பது சற்புத்திரமார்க்கம், யோகம் என்பது சகமார்க்கம் ஞானம் என்பது சன்மார்க்கம் என்று குறிப்பிடலாம்.
                தாசமார்க்கம் இறைவனுக்கும் அடியவருக்கும் உள்ள உறவை ஆண்டான் அடிமை முறையில் குறிப்பிடுகிறது. அதாவது இறைவனுக்கு அடிமை போலப் பணி செய்தலே தாசமார்க்கம் என்பதாகும். திருநாவுக்கரசர் தாசமார்க்கத்தினராவார்.
                சற்புத்திரமார்க்கம், இறைவனுக்கும் அடியவர்க்கும் உள்ள உறவை தந்தை-மகன் உறவில் வைத்துக் குறிப்பிடுகிறது. இறைவனுக்கு உரிமையுடன் அருகில் நின்று பலி செய்வது சற்புத்திரமார்க்கம். திருஞானசம்பந்தர் இம்மார்க்கத்தினர்.
                சகமார்க்கம், இறைவனுக்கும் அடியவர்க்கும் உள்ள உறவை தோழமை நிலையில் குறிப்பிடுகிறது. இதில் அடியவர் இறைவனுக்குத் தோழமை நிலையில் நின்று சிவத்தையே தியானிப்பவராவார். சுந்தரமூர்த்தி சுவாமிகள் சகமார்க்கத்தினராவார்.
                சன்மார்க்கம், இறைவனுக்கும் அடியவர்க்கும் உள்ள உறவை குரு-சீடன் நிலையில் குறிப்பிடுகிறது. இதனை, ஞானமார்க்கம் என்றும் குறிப்பிடுவர். மணிவாச சுவாமிகள் சன்மார்க்ககத்தினராவார்.

சன்மார்க்கம்

பக்தி நிலை சொன்ன கதை | vanakkamlondon                தமிழகத்தில் பழங்காலத்திலிருந்தே வழங்கி வரும் மரபுகளுள் ஒன்று சன்மார்க்கமரபு. முத்திக்கு வித்தாகும் மரபும் இதுவேயாகும். ‘‘மார்க்கங்கள் நான்கில் சன்மார்க்கமே உயர்ந்தது. மற்ற மூன்று மாக்கங்களும் சன்மார்க்கத்தை அடைவதற்கான படிகளே. சன்மார்க்கம் ஒன்றே முடிவான பரமுக்தியைத் தரும்’’ என்கிறார் ஊரன்அடிகள் (1976-281)
இத்தகைய பெருநெறியில் நின்று அன்பும் சிவமும் பொருளெனக் கொண்டு வாழ்ந்தவர் மணிவாசகப்பெருந்தகை.
சன்மார்க்கம் பற்றிய கருத்துக்கள்
                சன்மார்க்கம் பற்றிப் பலரும் பலவிதமான கருத்துக்களைக் கூறிச் சென்றுள்ளனர்.
                ‘‘சாதி, மத, நாடு, மொழி, நிற வேற்றுமைகளைப் பாராட்டாது, எல்லா உயிர்களிடத்தும் ஒரேவித அன்பு செலுத்துமாறு ஏவுவதும், கைம்மாறு கருதாப் பணியாற்றுமாறு போதிப்பதும், தனக்கென வாழாது பிறர்க்கென வாழுமாறு அறிவுத்துவதும், தியாக உணர்வு நல்குவதும், உயர்வு தாழ்வுகளை ஒதக்குவதுமாகிய விழுமிய நோக்கங்களையுடைய சமயம் எதுவோ அதுவே சன்மார்க்க சமயம் எனப்படும்’’ என்பார் சாயபுமரைக்காயர் (1986-199)
                திருவாசகம் எக்காலத்துக்கு எம்மக்களுக்கும் பொதுவான சமயக் கருத்துக்கள் நிறைந்து விளக்கும் நூலாகும். எல்லா மக்களும் இறைவனிடம் அன்பைப் பெருக்கி நெஞ்சுருகும் வகையில் பாடல்கள் அமைக்கப்பட்டுள்ளன. மணிவாசகர் இவ்வுலகில் உள்ள எல்லா உயிர்களையும் பெண்களாகக் கண்டு, இறைவன் ஒருவனே ஏகநாயகன் என்ற உயர்ந்த தத்துவத்தை உலகிற்குத் தமது பாடல்கள் மூலம் உணர்த்துகிறார்.
 மகளிர் விளையாட்டுப் பாடல்கள், பெண்களாகிய உயிரானது இறைவனது திருவடியை நாடி இறைஞ்சுவதாக அமைத்துள்ளார். இப்பாடல்களில் பெண்கள் பிறரையும் இறைவனை வழிபட அழைக்கின்றனர். திருவெம்பாவையில் பெண்கள், தங்களது தோழிகளைத் துயிலெழுப்பிக் கொண்டு நீராடச் செல்வதாகப் பாடல்களை அமைத்துள்ளார். இதன்மூலம் அறியாமை என்றும் தூக்கத்தில் உள்ள உயிர்களை துயிலெழுப்புகிறார்.
                                 ‘‘அதியும் அந்தமும் இல்லா அரும்பெருஞ்
                                  சோதியை யாம் பாடக்கேட்டேயும் வாள்தடங்கள்
                                  மாதே வளருதியோ வன்செவியோ நின்செவிதான்’’ (7-1)
                மகளிர் பாடல்களில் இறைவனை நாயகனாகவும், உயிர்களைப் பெண்களாகவும் வைத்துப் பாடியுள்ளார். இதைப்போலவே பிற மகளிர் பாடல்களிலும், அனைத்து உயிர்களுக்கும் இறைவனது பெருமையைப் பாடி ஆட வாருங்கள் என்று அழைப்புவிடுக்கிறார்.
                                ‘‘அப்பாலுக்கு அப்பாலைப் பாடுதும்காண் அம்மானாய்’’           (8-11)
                                ‘‘சேவகன் நாமங்கள் பாடிப்பாடிச்
                                                செம்பொன்செய் சுண்ணம் இடித்தும் நாதே’’  (9-16)
                உயிர்களைப் பெண்களாக உருவகம் செய்ததுபோல் தும்பியாகவும், வண்டாகவும், குயிலாகவும் உருவகம் செய்துள்ளார்.
                                ‘‘மெய்த்தேவர் தேவர்க்கே
                                                சென்று ஊதாய் கோத்தும்பி’’  (10-5)
                                ‘‘கொம்பின் மிழற்றம் குயிலே
                                                சூகாகழி நாதனைக் கூவாய்’’   (    -6)
                இவ்வாறு அனைத்து உயிர்களையும் ஒன்றுபடுத்தி இறைவன் ஒருவனே என்று உரைத்து, அனைத்து உயிர்களையும் ஒன்றுபோல் எண்ணச் செய்கிறார்.
                இறைமை ஞானம் பெறவேண்டும் என்று தவிக்கின்றனர் மக்கள். ஆனால் சமயவாதிகள் தத்தம் மதங்களில் தான் இறைவன் உள்ளதாகக் கூறுகின்றனர். ஒருவர் கூறுவதை மற்றொருவர் பொய் என்று மறுக்கிறார். இவ்வாறு ஒருவரின் கூற்றை மற்றொருவர் பொய் என்று மறுப்பதால், எச்சமயத்தில் இறைவன் இருக்கிறான் என்று சில நேரங்களில் தெரியாமல் தவிக்கின்றனர் மக்கள். சமயவாதிகள் இவ்வாறு தங்களுக்குள் மோதிக் கொள்வதைச் சாடுகிறார் மாணிக்கவாசகர்.
                                ‘‘சமைய வாதிகள் தம்தம் மதங்களில்
                                  அமைவது ஆக அரற்றி மலைந்தனர்’’          (4-52, 53)
                இவ்வாறு சமயவாதிகள், இறைவன் தத்தம் சமயத்தில்தான் இருப்பதாகக் கூறுவதோடு, வருந்தி நோன்புகள் நோற்றால் இறைவனை அடையலாம் என்றும் கூறுகின்றனர். இதனையும் சாடுகிறார் மணிவாசகர்.
                                ‘‘விரத மேபரம் ஆக வேதியரும்
                                  சரதம் ஆகவே சாத்திரம் காட்டினர்’’               (4-50, 51)
                இறைஞானம் மறைபொருளாக இருப்பதாலேயே இத்தகைய இழிநிலைகள் இருப்பதை உணர்ந்தார் மணிவாசகர். இந்நிலை மாறவேண்டும் என்றும் விரும்பினார். எனவே பாடல்வழி பரமனை அடையும் மெய்ஞ்ஞானத்தை எடுத்துரைக்கலானார். மக்களின் உள்ளுணர்வைத் திருவெம்பாவை முதலான மகளிர் பாடல்கள் வழி விழிப்புறச் செய்து அனைவரையும் ஒற்றுமைப்படுத்துகிறார்.
                மணிவாசகரின் ஞான மங்கையர்கள் மானம் அழிந்தோம் மதிமறந்தோம்’ (15-8) என்று இறைமை இன்பத்தை அனுபவிக்கும் பேரானந்த நிலையில் நான், எனது என்ற அகங்காரங்கள் அழிந்தவிட்டன என்று பாடுகின்றனர். மற்றொரு பாடலில்,
                                ‘‘உரைமாண் உள்ஒளி
                                                ஊத்தமன் வந்து உளம் புகலும்
                                  இரை மாண்ட இந்திரியப்
                                                பறவை இரிந்து ஓட’’ (15-14)
                என்று சூரியனின் முன்னால் சுடர்விளக்குகள் மங்குவது போல இறைமை இன்பத்திற்கு முன்னால் இந்திரிய இன்பங்கள் இழிந்துபோவதாகக் கூறுகின்றனர்.
                இவ்வாறு சாதி, மத பேதங்களைப் பாராட்டாது, அனைத்து உயிர்களையும் ஒரே முறையில் கருதி இறையின்பத்தைப் பெறும் ஞானநெறியை விதந்தோதுகிறார். சாதி, குலம், பிறப்பு முதலாகிய நீர்ச்சுழிப்பில் சிக்கிக் கொண்டு தானே தடுமாறுவதைப் பற்றி ஓரிடத்தில் குறிப்பிடுகிறார்.
                                ‘‘சாதி குலம் பிறப்பு என்னும் சுழிப்பட்டுத்
                                                தடுமாறும் ஆதமாலி நாயேன்’’ (31-5)
                இவ்வாறு தடுமாறும் தன்னை ஆதமிலி நாயேன்என்று விளித்து, குற்றத்தை ஒப்புக் கொள்கிறார். இந்த நீர்ச்சுழிலில் இருந்து தப்புவதற்கு ஒரேவழி இறைவன் மீது பக்தி செலுத்துவதுதான் என்று உணர்ந்து, உலக உயிர்கள் அனைத்திற்கும் பொதுவாக இறைவனைத் தாய்-தந்தையர் நிலையில் வைத்துப் பாடுகிறார்.
எ.கா
                                ‘‘யாவர்க்கும் தந்தை’’   (5-47)
                                ‘‘தாயாய் முலையைத் தருவானே’’      (50-5)
                                ‘‘யாவர்க்குந் தந்தைதாய் தம்பிரான்’’   (5-47)
                                ‘‘அன்னை ஒப்பாய் எனக்கத்தனொப்பாய்’’ (6-16)
                                ‘‘தாயிற் சிறந்த தயாவான தந்துவனே’’             (1-61)
                உலக உயிர்கள் அனைத்திற்கும் பொதுவான சிறப்பான உறவு தாய்தந்தை உறவு. தாய் தந்தையின் அன்பை அறியாதவர் யாருமில்லை. தாய் தந்தை இல்லாதவர்க்கு இறைவனே தாய்தந்தையாகிறான். அனைவர்க்கும் தாய்தந்தையானவன் இறைவன் ஒருவனே என்று கூறி சன்மார்க்கத் தத்துவத்தை நிலைநாட்டுகிறார்.


அன்புநெறி

                இறைவனைத் தாய் தந்தை நிலையில் வைத்துக் ககண்பதால், அன்புநெறி ஒன்றே இறைவனை அடைய எளிய வழி என்கிறார். திருத்தலங்களுக்குச் சென்று வழிபடுதலோ, இறைவனுக்குப் பட்டாடை அணிவித்தலோ, மலர்தூவி வழிபாடுதலோ மணிவாசகருக்கு உடன்பாடில்லை. இவ்வாறெல்லாம் புறச்சடங்குகள் மூலம் இறைவனை அடைய முடியுமென்று அவர் நம்பவில்லை. இறைவனை அடைய ஒரேவழி அன்புவழியே என்றுணர்ந்து சைவம் காட்டும் சன்மார்க்க நெறியில் நின்று இறைவன் பெயரில் அனைத்து உயிர்களையும் ஒன்று சேர்க்க முயல்கிறார்.
‘‘அன்பு வித்திட்டு’’                                         (3-93)
‘‘அன்பெறும் ஆறு கரையது புரள’’      (4-81)
‘‘இடையறா அன்பு’’                                       (4-64)
‘‘நெரும் அன்பு’’                                              (5-60)
                இவ்வாறு இறைவன் மீது காட்டும் அன்பு உண்மையான இடையறா அன்பாக இருக்க வேண்டும் என்கிறார். மேலும், இறைவன் எல்லா நாட்டிற்கும் எல்லா மக்களுக்கும் பொதுவானவன் என்ற கருத்தை.
                                ‘‘எந்நாட்டவர்க்கும் இறைவா’’                                                 (4-165)
                                ‘‘தேசம் எல்லாம் புகழ்ந்தாடும் கச்சித்திரு ஏகம்பன்’’                (9-4)
                என்ற வரிகளின் மூலம் குறிக்கிறார். இதன்மூலம் அன்பு நெறியானது உலகம் முழுவதும் வரவ வேண்டும் என்ற குறிக்கோளுடன் செயல்பட்டிருப்பதை அறியமுடிகிறது.
                இவ்வாறு சன்மார்க்க நெறியின் மூலமாக, மனித குலத்தைப் பகுத்தும் பிரித்தும் வைக்கும் சாதி சமயங்களையெல்லாம் தகர்ந்தெறிந்து, மனிதர்களை ஒரே குடும்பமாக மாற்ற முயன்றுள்ளார் மணிவாசகர்.

ஒளிநெறி

Free Light Worship Background "Glowing Golden Cross" | Church ...                திருவாசகத்தின் மற்றொரு சிறப்பு இறைவனை ஒளிவடிவில் காண்பதாகும். உலக உயிர்கள் அறியாமை என்னும் இருளில் உறைவதைக் கண்டு, அந்த இருளைப் போகக்கவல்ல ஒளியை இறைவனாகக் காண்கிறார். இறைவனாகக் காண்கிறார். இறைவன் சோதியாய் மிளிர்ந்து உலக உயிர்களின் மனதில் உறையும் படிந்திருக்கும் மலங்களை நீக்கி ஆட்கொள்வான் என்பதை உணர்த்தவே இறைவனை ஒளிஉருவாகக் குறிப்பிடுகிறார் மணிவாசகர்.
                                ‘‘உரை மாண்ட உள்ஒளி’’          (15-14)
                                ‘‘செஞ்சுடர்’’                                       (3-77)
                                ‘‘சோதி தனி உருவம்        (7-14)
                                ‘‘அரும்பெரும் சோதி        (7-1)
                                ‘‘மாசற்ற சோதி             (1-62)
                சோதியானது உருவமற்றது. அவ்வாறே இறைவனும் ஒருநாமம் ஒருருவம் இல்லாதவன் என்பதைக் குறிக்கவே இறைவனைச் சோதி வடிவில் காட்டுகிறார் என்பதை உணரமுடிகிறது.
அருவமானவன்
                                ‘‘அருவமும் உருவமும் ஆனாய்’’                        (4-193)
                                ‘‘அருவாய் உருவமும்’’                                              (11-2)
                                ‘‘அருவாய் மறைபயிர் அந்தணனாய்’’ (10-14)   
                இறைவன் இருக்கின்ற பொருள்களிலும், இல்லாப் பொருள்களிலும் உறைபவன். உலகிலுள்ள அனைத்துப் பொருள்களிலும் இநைவன் இருக்கிறான் என்பதை உணர்த்தவே இவ்வாறு அருவ-உருவ நிலையைக் குறிக்கிறார். எந்நாட்டவர்க்கும் இறைவன் என்று குறிப்பிட்டதோடு, அனைவரும் அறிந்த பொருளிலேயே, அதாவது ஒளியிலேயே இறைவன் உறைகின்றான் என்று குறிப்பிட்டதன் மூலம் இறைவன் ஒருவனே என்பதை உணர வைக்கிறார்.
திருவாசகத்தில் சன்மார்க்கம் பற்றிய குறிப்புகள்
                மணிவாசகர் சன்மார்க்க நெறியைப் பல பெயர்களின்வழி குறிக்கிறார்.
                                நன்நெறி      (5-39)
                                உய்யுநெறி    (51-7)
                                பெருநெறி    (23-7)
                                மெய்ந்நெறி   (26-10)
                                பக்திநெறி     (51-1)
                                தூயநெறி     (51-4)
                இவ்வாறு சன்மார்க்கத்தை நன்நெறி என்றெல்லாம் கூறுவதன் மூலம் அதன் பெருமையை உணர வைக்கிறார். சைவ நறிகளிலே சிறந்ததும் முதன்மையானதும் சன்மார்க்கநெறியே என்கிறார். மேலும், சன்மார்க்கமென்றும் நன்னெறியில் நிற்பதற்கு உயிர்கள் பெறவேண்டிய பக்குவத்தைச் சிறப்பாகக் குறிப்பிடுகிறார்.
                சன்மார்க்க நெறியில் நிற்பவர்கள் நான் என்ற அகந்தையை ஒழிக்க வேண்டும். அகந்தை அழியவில்லையானால், மனதிலிருந்து அறியாமை என்ற இருள் நீங்காது. நான் என்னும் குறுகிய வட்டம் இறைவனிடமிருந்து உயிர்களைப் பிரித்து விடக்ககூடியதாகும். எனவே, முதலில் நான் என்ற எண்ணத்தை நீக்க வேண்டும். இதற்கு இடையறாது இறைவனை நினைத்து ஒழுக வேண்டும். அறியாமையால் எழும் அகந்தையை இறைவன் போக்குகிறான் என்பதைத் தன் வாழ்க்கையில் நிகழ்ந்த செய்திகளை விளக்கிக் கூறுகிறார்.
                                ‘‘யான், எனது என்று அவரவரைக் கூத்தாட்டுவான்’’    (5-15)
                                ‘‘சித்தமலம் அறுவித்துச் சிவமாக்கி’’                                  (51-1)
                இவ்வாறு, இறைவன் தமது கருணையால் மனிதனின் அகந்தையை நீக்குகிறான் என்கிறார். பக்திநெறி என்னும் அன்புநெறியில் இறைவனை என்றும் பக்தி உணர்வோடு வழிபடுபவருக்கும் உய்யும் வழிகாட்டியாக இறைவன் அமைந்து முக்தியளிப்பான் எனத் தமது பாடல்களின் வழி எடுத்துரைக்கிறார் மணிவாசகர். உலக உயிர்களையெல்லாம் ஒன்றுபோல் எண்ணி அன்பு செலுத்துவதில் இறைவன் தாயைப் போன்றவன் என்கிறார். இதனையே ‘‘தாயிலும் சாலப் பரிந்து’’ (37-9) என்ற அவரது தொடர் விளக்குகிறது.
                                ‘‘அத்திக்கு அருளிய அரசே’’                    (4-163)
                                ‘‘தாயாய் முலையைத் தருவானே’’      (50-5)
                இறைவன் மனித உயிர்களுக்கு மட்டுமல்லாது அனைத்து உயிர்களுக்கும் அன்பு செய்து காக்கும் பேரருளைக் கண்டுவியக்கிறார். இறைவன் பேரொளியானவன், பெருங்கருணையானவன், யாவர்க்கும் எளிதில் வந்து அருள் புரிபவன் என்று இறைவனது சன்மார்க்க  நெறியினை விரித்துப் பேசுகிறார். தனக்கு அருள் புரிந்ததை,
                                ‘‘குருபரனாகியருளிய பெருமை’’                           (4-76)
                                ‘‘கோகதுயாண்ட குருமனிதன்’’                               (1-3)
‘‘மறையோர் கோலங்காட்டியருளலும்’’             (3-149)
                போன்ற வரிகளில் குருந்த மரத்தடியில் அந்தணர் கோலத்தில், குருவாக வந்து இறைவன் தன்னை ஆட்கொண்டதை விவரிக்கிறார். இறைவன் சன்மார்க்கநெறியில் சேருமாறு உபதேசம் செய்ததை,
                                ‘‘பக்திநெறி அறிவித்து’’               (51-1)
என்று விவரிக்கிறார்.

சன்மார்க்க நெறி

                மணிவாசகர் இறைவனைப் பற்றிய சமயக் கருத்துக்களையெல்லாம் அறிந்து தெளிந்து பலபடக் கூறியுள்ளதோடு தன் வாழ்வையும் அதற்கேற்ப அமைத்துக்கொண்டு வாழ்ந்து காட்டியுள்ளார்.
                                ‘‘பொய்யிருள் கடிந்த’’                 (22-3)
                                ‘‘பொய்யிர் கிடந்து புரளாதே’’  (45-9)
                                ‘‘பொய் கெட்டு மெய்’’                 (1-86)
                இறைவனை அடைய வேண்டுமானால், முதலில் உள்ளத்திலிருந்து பொய்யினை அகற்ற வேண்டும் பொய் கடிந்த இதயத்தை இறைவன் நாடி வருவான். உள்ளத்தில் பொய் கடிந்நவரே உண்மையான அடியவராவார். பொய் கடிந்த இதயமே இறைவன் விரும்பும் ஆலயமாகும் என்பதை இதன்மூலம் உரணவைக்கிறார்.
ஒழுக்கநெறி
                புறச்சடங்குளை வெறுத்து, அக ஒழுக்கத்தையே தன் உயிராகக்கொண்டு உயர்ந்தவர் மணிவாசகர்ர் அக ஒழுக்கம், ‘‘இந்திரிய ஒழுக்கம், கரண ஒழுக்கம், ஜீவ ஒழுக்கம், ஆன்ம ஒழுக்கம்’’ (1985-62) என்று நால்வகைப்படும் என்கிறார் குருசாமி. இந்தால்வகை ஒழுக்கங்களைக் கடைபிடித்ததன் மூலம் இறைவனை அடைலாம் என்று வாழ்ந்து காட்டியவர் மணிவாசகர்.

இந்திரிய ஒழுக்கம்

                இந்திரியம் என்பது ஜம்புலன்களைக் குறிக்கும். ஜம்புலன்களின் ஆசைகளுக்கு ஆட்பட்டு அழியாமல், அவற்றை அடக்கி வாழ வேண்டும். புலன்களைத் தீய வழியில் செலுத்தாமல் நன்னெறியில் செலுத்த வேண்டும். மணிவாசகர் ஜம்புலன்களை வலிய யானைகளோடு ஒப்பிட்டுக் காட்டுகிறார். இவற்றை அடக்கி வாழவேண்டும் என்பதை,
                                ‘‘உடல்வாய் மூக்கொடு செவிகண் என்றிவை நின்கணேவைத்து’’      (28-5)
                                ‘‘வஞ்சப்புலன் ஜந்தின் வழியடைத்து’’                                                                (22-10
என்ற பாடல்வரிகளின் மூலம் வெளிப்படுத்துகிறார்.

கரண ஒழுக்கம்

                கரண ஒழுக்கம் என்பது மனதை ஒருமுகப்படுத்துவதாகும், இதற்கு உள்ளத்தைக் கோயிலாக மாற்ற வேண்ண்ம். சித்தம் சிவமாக வேண்டும். இத்தகு நிலையைத் தான் எய்தியதை,
                                ‘‘சித்தம் சிவமாக்கி’’                      (15-6)
                                ‘‘சிந்தனை நின் தனக்காக்கி’’   (5-26)
                                ‘‘மனம் நின்பால்’’                           (5-10)
என்று மனதினை இறைவன்பால் செலுத்திய நிலையில் தான் பெற்ற இன்பங்கள் இவையென்று,
                                ‘‘சிந்தனையுள் ஊற்றான உண்ணாரமுதே’’      (1-82)
                தெளிவுபடுத்துகிறார். அமுதமாகி உடல்தோறும் இனிக்கச் செய்பவன் இறைவன் என்கிறார். இதுமட்டுமல்லாது பழவினைகளையும் இஇறவன் அறுத்தெறிகிறான் என்பதை,
                                ‘‘பழவினைகள் மாறும் வண்ணம்’’       (51-1)
                                ‘‘பாசவினையைப் பறித்து           (7-4)
என்ற வரிகளில் உணர்த்துகிறார்.

ஜீவ ஒழுக்கம்

                இவ்வுலகத்திலுள்ள உயிர்களிலெல்லாம் இறைவனைக் காண்பது அன்பு நெறி எனப்படும். இந்நெறியைப் பின்பற்றுபவர்கள் எவ்வகைப் பொருள்களையும், இறைவனுடைய பொருள்களென்றே காண்பர். அவையே இறைவனென்று தெளிவர் என்பதே ஜீவ ஒழுக்கமாகும்.
                                ‘‘பைங்குவiiக் கார்மலரால் செங்கமலப் பைம்போதால்
                                  அங்கம் குருகுஇனத்தால் பின்னும் அரவத்தால்
                                  தங்கள் மலம்பழுவுவார் வந்து சாhhதலினால்
                                  எங்கள் பிராட்டியும் எங்கோனும் போன்று இசைந்த
                                  பொங்கும் மடுவில் புகப்பாய்ந்து பாய்ந்து’’ (8-13)
                என்ற மணிவாசகரது பாடல்வரிகள் அனைத்து உயிர்களையும் இறைவனாகக் காணும் அன்புவரியில் மணிவாசகர் நிற்பதை உணர்த்துகின்றன. அன்புநெறியில் வாழ்வதால் மணிவாசகருக்கு குளமும் அம்மையப்பராகத் தோன்றுகிறது. குளத்திலுள்ள பசுமையான குவளைமலர்கள் அம்மையின் திருமேனியாகவும், செந்தாமரை பூக்கள் ள்சிவபெருமானின் செம்மேனியாகவும், பறவைகள் அம்மையின் வளையல்களாகவும், பாம்புகள் போல் மடிந்து வரும் அலைகள் சிவபெருமானின் கழுத்திலுள்ள பாம்பாகவும் மணிவாசகருக்கு காட்சியளிக்கிறது. இவ்வாறு காணும் பொருளிலெல்லாம் பரம்பொருளைக் கண்டவர் மணிவாசகர்.

ஆன்ம ஒழுக்கம்

                ஆன்ம ஒழுக்கமாவது ஆன்மாவை ஒழுக்க நெறிக்குள் கொண்டு வருவதாகும். அதாவது இறைவனோடு ஒன்றவேண்டுமெனில் அதற்கு இடையறாது நினைக்க வேண்டும். உள்ளும் புறமும் இறைவனேயற்றி வேறொன்றும் நினையாத நிலையே, ஆன்மா இறைவனோடு ஒன்றும் நிலையாகும். இந்த ஒன்றிய நிலையில் மணிவாசகர் பரமானந்த அனுபவத்திலே திளைத்து இறைவனை, அ.புதன், அநேகன், சிந்தனைக் கரியசிவம் என்றெல்லாம் போற்றுகிறார். இறைமை நாட்டம் ஒன்றே இவரது குறிக்கோளாக இருப்பதினால் காணும் பொருள்களையெல்லாம் இறைவனாகக் காணும் தன்மை பெறுகிறார்.
                                ‘‘ஒருநாமம் ஓர்உருவம் ஒன்றும்இலாற்கு ஆயிரம்
                                  திருநாமம் பாடிநாம் தெள்ளேனம் கொட்டாமோ’’   (8-1)
என்றும்,
                                ‘‘அருவமும் உருவமும் ஆயபிரான்’’  (8-2)
                என்றும் போற்றுகிறார். இந்த ஆன்ம நெறியிலேயே ஞானம் பெற்ற இறைவன் வடிவமற்றவன், எல்லையில்லாதவன், உவமையில்லாதவன், உலக உயிர்கள் அனைத்திற்கும் ஒருவனே இறைவன் என்றெல்லாம் தெளிகிறார். மேலும், இறைவனிடம் ஒன்றுசேர்வதினால் உண்டாகும் பலன்கள் இவையென்று குறிப்பிடுகிறார்.
                                ‘‘செடிசேர் உடலம் நீக்கி’’                          (45-4)
                                ‘‘பிறப்பறுக்கும் பேராளன்’’                        (47-4)
                                ‘‘இன்பமரு முத்தி அருளைமலை’’      (19-5)
                                ‘‘பிறப்பறுக்கம் பிஞ்ஞகன்’’                       (1-7)
இவற்றின் மூலமாக, மணிவாசகர் மீண்டும் பிறப்பில்லாத முக்திநிலை கிடைக்கும் என்று எடுத்துக் கூறுகிறார்.

மணிவாசகரின் பக்திநெறி

1.             அன்பே சிவம் என்ற கொள்கையினடிப்படையில் அன்பு நெறியென்னும் சன்மார்க்க நெறியில் நின்று உலகத்தாரை ஒரு குடும்பமாக இணைக்கிற பேராண்மையை மணிவாசகரின் பாடல்கள் வெளிப்படுத்துகின்றன.
2.             இறைவனிடமே சன்மார்க்க நெறியினைக் கண்டு போற்றுகின்றார் மணிவாசகர்.
3.             அனைவருக்கும் இறைவன் பொதுவானவன் என்பதை உணர்த்தும்வகையில் இறைவனை சோதி வடிவில் காம் பெருநிலையை மணிவாசகரிடம் காணமுடிகிறது.
4.             சன்மார்க்கம் என்னும் அன்புநெறி இறுதியில் அளிப்பது மரணிமில்லாப் பெருவாழ்வு, பேரின்ப நிலை எண்ணம் அவரது வாழ்க்கையை எடுத்துக் காட்டுகிறது.


No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்களைப் பதிவு செய்யலாமே?