நீரின்றி அமையாது உலகு.

முனைவர் ஜ.பிரேமலதா,தமிழ் இணைப்பேராசிரியர், அரசு கலைக் கல்லூரி, சேலம் 636 007 DR.J.PREMALATHA,ASSOCIATE PROFESSOR IN TAMIL,GOVT ARTS COLLEGE,SALEM -636 007.

Friday 27 March 2020

திருவாசகம் ஒப்புயர்வற்ற ஞானப்பனுவல்


   திருவாசகம் ஒப்புயர்வற்ற ஞானப்பனுவல்



திருவாசகம் (Thiruvasagam) | Arulakam (அருளகம்) 

                தமிழ் மொழிக்கண் உள்ள பெருஞ்சிறப்புப் பெற்ற நூல்களுள் திருவாசகமும் ஒன்று. இதனை இயற்றியவர் மணிவாசகராவார். குருவாக வந்த இறைவனை நேரில் கண்டு, அந்த இறைக்காட்சியின் இன்பத்தில் தினைத்து, தித்திக்க அனுபவித்துப் பாடிய நூலே திருவாசகம். நிறைந்த அன்பிலே ஊறி வெளிப்பட்ட வாசங்களை உடையதாலாலே இந்நூல் கருங்கல் மனதையும் கணிவிக்கும் உருக்கமுடையதாகத் திகழ்கிறது. அளப்பரிய பொருளும், எளிமையும், இனிமையும் மிக்கது இந்நூல். சைவத் திருமுறைகள் பன்னிரண்டில் எட்டாம் திருமுறையாக வைத்து எண்ணப்படும் ஏற்றமுடைதாகும். இலக்கியம், மொழி, சமயம், ஞானம் முதலிய பலதுறைகளிலும் பெருஞ்சிறப்பு வாய்ந்ததாகவும் சைவ சமயப் பெருமக்கள் அனைவராலும் போற்றப்படும் சிறப்புடையதாகவும் திகழ்கிறது இந்நூல். பக்தி இலக்கியங்களும் சிறந்த விளங்கும் திருவாசகத்தின் தனிச்சிறப்பினையும், மணிவாசகரின் பக்தியினையும் இவ்வியல் விளக்குகிறது.



Thiruvasagam by Mannikkavasagar - மாணிக்க வாசகர் ... 
பக்தி இலக்கியங்கள்
                தமிழக வரலாற்றில் பக்தி இலக்கியங்கள், பல்லவர் காலத்தில்தான் அதிகமாகக் காணப்படுகின்றன. பல்லவர்கள் காலத்தில் சமணர்களின் செல்வாக்கு மிகுந்திருந்தது. இக்காலக் கட்டத்தில் சமணர்களின் கோட்பாடுகளான புலால்மறுப்பு. கலை, எதிர்ப்பு, பெண்டிர் வெறுப்பு போன்றவை மக்களுக்குச் சமணச் சமயத்தின் மீது மிகுந்த வெறுப்பை ஏற்படுத்தியது. இச்சமயத்தில் தான், தமிழகத்தில் சைவசமயத்தை நிலைநிறுத்தும் பொருட்டுத் தோன்றியவர் சைவசமயக் குரவர்கள், சமணர்களைப் போல் பெண்களை வெறுக்காமலும், கலைகளைப் புறக்கணிக்காமலும் அவற்றைப் போற்றி வளர்த்தனர்.
                சமணர்கள் பெண்களை வெறுத்து, பெண் சுகத்தைக் கண்டித்தனர். இல்லற வாழ்க்கையை மறுத்தனர். ஆனால், சைவ சமயமோ பெண்ணைத் தன் ஒருபாகத்தில் கொண்டு இன்ப வாழ்விற்கு அடையாளமாகத் தோன்றும் சிவபெறுமானை வணங்கினால், இன்பமாய் வாழலாம் என்று கூறி இல்லறத்தை ஆதரித்தது. மேலும், சைவர்கள் திருமணம் செய்து கொண்டு, இறைப்பணியிலும் ஈடுபட்டு வழிகாட்டினார்கள். இறைவனைப் பற்றிய பாடல்களையும் பாடினர். இசையுடன் இனியநடையில் கவிதை புனைந்தனர். இதனால் கவரப்பட்டு, மக்கள் சைவ சமயத்தில் ஈடுபாடு கொண்டனர். சைவ சமயம் தழைத்தோங்கியது. பக்தி இலக்கியங்கள் பல தோன்றின.               
          

கல்லையும் உருக்கும் குரலில் ... 


பக்தி இலக்கியங்கள் எவை?

                ‘‘பக்தியைத் தோற்றிவிக்கும் இறைவன் மேல் தோத்திரப் பாடல்களாக அமையும் எவ்வகை இலக்கியமும் பக்தி இலக்கியம் என்ற பாகுபாட்டில் அமையும் பெற்றியதாகும்’’ என்கிறார் கோபாலன் (1993-103). இறைவன் இருக்கிறான். அவனே வாழ்விற்கு என்ற கருத்தே பக்தியைத் தோற்றுவித்தது எனலாம்.
                ‘‘உலகத்திலுள்ள நாடுகள் அனைத்திலும் இந்தியாவே பெரும்பாலான எண்ணிக்கையில் பக்த சிரோண்மணிகளையும் மெய்ஞ்ஞானிகளையும் பிறப்பித்தும், பிறப்பித்துக் கொண்டும் இருக்கின்றது. அதிலும் இந்தியத் தென்கோடியில் உள்ள தமிழ்நாடே பிறமாநிலங்களைவிட அதிகமாக அளித்துள்ளது’’ என்கிறார் வன்மீகநாதன் (1993-12). எனவேதான், தமிழ் இலக்கியத்தில் பெரும்பகுதி சமய இலக்கியங்களாகவே காட்சியளிக்கிறது. நம்நாட்டில் சைவம் வைணவம், பௌத்தம், சமணம் போன்ற பல சமயங்கள், பல்வேறு காலகட்டங்களின் சிறப்புடன் பரவி வளர்ந்து வந்திருக்கின்றன. இவற்றுள், சிவபெருமானை முழுதற்கடவுளாகக் கொண்டு வழிபடும் சமயமான சைவ சமயம் இமயம் முதல் குமரி வரை பரவியுள்ள பெருமை உடையது. இதன் பிறப்பும் சிறப்பும் தமிழ்நாடே என்பர். தமிழ்நாட்டில் தோன்றிய சைவ சமயவாதிகள் பாடிய இறைப்பாடல்களைப் பன்னிரண்டு திருமுறைகளாகப் பகுத்துள்ளனர். அப்பன்னிரண்டு திருமுறைகளுள், எட்டாவது திருமுறையாகத் திருவாசகமும், திருக்கோவையாரும் அமைந்துள்ளன.
                பன்னிரண்டு திருமுறைகளுள் சிறப்பாகப் போற்றப்படுவன மூவர் தேவாரமும் திருவாசகமுமேயாகும். இவற்றையருளிய திருஞானசம்பந்தர், சுந்தரர், திருநாவுக்கரசர், மணிவாசகர் ஆகிய நால்வரும் சைவ சமயக் குரவர்கள்என்று பாராட்டப்பட்டு, ‘நால்வர்என்ற இடுகுறிப் பெயராலும் குறிக்கப்பெறுகின்றனர். ஆனால், பெரியபுராணத்தில் அறுபத்துமூன்று நாயன்மார்களுன் பெருஞ்சிறப்புப் பெறும் மூவரோடு மணிவாசகர் பெயர் குறிக்கப்படவில்லை. இதற்கு இரண்டு காரணங்கள் குறிப்பிடப்படுகின்றன.
                ஒன்று, சேக்கிழார் பெருமாள் இயற்றிய பெரியபுராணமானது, சுந்தரரது திருத்தொண்டத் தொகையைப் பின்பற்றி எழுதப்பட்டது. சுந்ததர் இந்நூலில் மணிவாசகர் பற்றி எதுவும் குறிப்பிடவில்லை. எனவே, சேக்கிழார் பெருமாலும் மணிவாசகரைப் பற்றிக் குறிப்பிடவில்லை என்பது. மற்றொன்று, சுந்தரர், தனது காலத்திற்குத் சற்றேறக்குறைய அருகாமையில் வாழ்ந்திருந்த சிவத்தொண்டர்களைப் பற்றி மட்டுமே தனது நூலில் குறிப்பிட்டுள்ளார். மேலும், சுந்தரர் வாழ்ந்தது மிகக் குறுகிய காலம். இதனால், குறைவான தலங்களை மட்டுமே தரிசித்து, குறைவானப் பாடல்களை மட்டுமே பாடியுள்ளார். இதனால், தனக்குத் தெரிந்தவர்களின் பெயர்களை மட்டுமே, தெரிந்த செய்திகளைக் கொண்டு பாடிச் சென்றுள்ளார். மணிவாசகர் பற்றி முழுமையாக அறியாத நிலையில் விட்டுச் சென்றிருக்கலாம். சுந்தரரது, திருத்தொண்டத்தொகையைப் பின்பற்றிப் பெரியயுராணம் இயற்றிய சேக்கிழார் பெருமாலும்,மணிவாசகர் பற்றி முழுமையாக அறியாத நிலையில் விட்டுச் சென்றிருக்கலாம். (1983-11) என்கிறார் வன்மீகநாதன்.
திருவாசகச் சிறப்பு
                திருவாசகத்துக்கு உருகார் ஒருவாசகத்துக்கும் உருகார்என்பது பழமொழி. தமிழ் பக்தி இலக்கியங்களுள், திருவாசகத்திற்குத் தனிப்பெருஞ் சிறப்பிடம் உண்டு. தமிழ்நாட்டில் தோன்றிய பல சான்றோர்கள் மணிவாசகர் பாடிய திருவாசகத்தினைப் போற்றிப் பாராட்டியுள்ளனர். உலக இலக்கியங்களோடு ஒப்பிட்டு அதன் மூலம் பெருமகளை எடுத்துக்காட்டியுள்ளார்.
                ‘‘ஒரு தோத்திர நூல் கிட்டத்தட்ட 2,000 ஆண்டுகளாக ஒருநாட்டு மக்களின் மனத்தைக் கவர்ந்து நிற்பதென்பது அபூர்வம்தான். கிருத்துவக் திருமுறையாகிய பைபிள், பகவத்கீதை, திருக்குறள், திருவாசகம் ஆகிய நான்கு நூல்களுக்கும் ஒரு தனிப்பெருமையுண்டு. தமிழ் நாட்டைப் பொறுத்தவரையில் திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரமூர்த்தி சுவாமிகள் ஆகிய மூவராகிய முதலிகளின் திருமுறைகள் திருவாசகத்துடன் இப்பெருமை வாய்ந்த இடத்திற்குப் போட்டியிடலாமென்று எதிர்பார்க்கலாம். ஆனால், அவை போட்டியிட ஆற்றல் உடையனவாக இல்லை’’ என்று குறிப்பிடும் வன்மீகநாதன் (1993-86) கீழ்க்காணும் வேறுபாடுகளைக் காட்டி திருவாசகமே உயர்ந்தது என்று எடுத்துக்கூறுகிறார்.
1 .தேவாரத்தில் சம்பந்தர், அப்பர் ஆகியோரின் திருமுறைகள் உதிரி உதிரியான பதிகங்களின் தொகுப்பாகவே அமைந்துள்ளன. அவை அறிவுறுத்தும் பொருட்டும், ஊக்குவிக்கும் பொருட்டுமே பாடப்பட்டுள்ளன. மேலும், சொன்னதையே திரும்பக்கூறும் குற்றம் உடையனவாக உள்ளன.
                திருவாசகம், அறிவுறுத்தும்பொருட்டே ஊக்குவிக்கும் பொருட்டோ அமையாமல், உணர்ச்சி மேலீட்டால் வெளிப்படும் அனுபவ வாசகங்களாக அமைந்துள்ளது. ஒவ்வொரு பாடலும் ஒவ்வொரு தனிமனிதனின் இதயமாகும்.
                2 .தேவாரமோ வெளிநோக்கும் தன்மையனவாக விளங்குகிறது. ஆனால், திருவாசகம் உள்நோக்கம் தன்மையுடையதாக அமைந்துள்ளது.
                இவ்வாறு திருவாசகத்தின் சிறப்பினை எடுத்துக்கூறுகிறார்.
                தேவார மூவருக்கும், மாணிக்கவாசகருக்கும் இடையிலுள்ள வேறுபாடாக நால்வரும் பாடிய பாட்டின் முதற்சொல்லையே கொண்டு அவர்தம் பெருமையை விளக்குகிறார்
 வே. மாணிக்கவாசகம்பிள்ளை (1967 -2)
                ‘‘திருஞானசம்பந்தர் திருமுறை தோடுஎனத் தொடங்குகிறது.
திருநாவுக்கரசர் திருமுறை கூற்றுஎனத் தொடங்குகிறது.
சுந்தரர் திருமுறை பித்தாஎனத் தொடங்குகிறது.
 தோடு, கூற்று, பித்தாஎன்ற மூன்றும் பாட்டுடைத் தேசிகன் பேரருளாகும்.
திருவாசகம் இறைவன் திருப்பெயராகிய நமச்சிவாயஎன்னும் திருஜந்தெழுத்தால் தொடங்குகிறது. ‘நாதன் நாமம் ஆகிய நமச்சிவாய வா அழ்க‘ எனத் தொடங்குவது இந்நூற்கு ஒரு தனிச் சிறப்பாகும்.
                இவ்வாறு திருவாசகத்தின் அகநோக்கையும், முதற்சொல்லையும் கொண்டு அதன் சிறப்பு வெளிப்பபடுத்தப்படுகிறது. அதன் பா அமைப்பினையும், பதிக அமைப்பினையும் சுட்டி மேலும் சிறப்புடையதாக்குகிறார் செங்கல்வராயப்பிள்ளை. (1997-625)
திருவாசகம் - ஒரு முத்தமிழ்நூல்
                திருவாசகமானது அகவற்பா மற்றும் வெண்பா போன்ற பாவினங்களால் இயற்றப்பட்டுள்ளது. அதிலுள்ள பதிகங்களுக்குப் பண்களும் வகுக்கப்பட்டுள்ளள. இதனால் சில அறிஞர்கள், ‘திருவாசகம் ஒரு இயற்றமிழ் நூல்‘ என்பர். ஆனால், செங்கல்வராயபிள்ளை இக்கூற்றை மறுத்து, திருவாசகம் இயற்றமிழ் நூல் மட்டுமின்றி அது ஒரு முத்தமிழ் நூல்என்ற கூறுகிறார். திருவாசகம் இயற்றமிழ், இசைத்தமிழ், நாடகத்தமிழ் என்ற மூன்றையும் தன்னுள்ளடக்கிய நூல் என்பதற்கு, அவர் காட்டும் சான்றுகள் பின்வருமாறு அமைகின்றன.




1.இயற்றமிழ் நூல்

                இயற்றமிழ் நூல் என்பதற்குப் பிற அறிஞர்கள் கூறும் காரணத்தையே இவரும் கூறுகிறார். ‘‘ (1) அதில் அகவற்பா, வெண்பா, விருத்தப்பா கலந்துள்ளமையாலும், (2) அதிலுள்ள பதிகங்களுக்குப் பண்கள் வகுக்கப்பட்டமையாலும்’’ (1967(625) திருவாசகம் இயற்றமிழ் நூல் என்கிறார்.

2.இசைத்தமிழ் நூல்

                ‘‘சில பாடல்கள் இயற்றமிழுக்கு அடங்காதனவாய்க் கலவைச் சீர்களை உடையனவாய்ச் சீர்கள் மிக்கும் குறைந்தும் விரவி உள்ளனவாய் இருப்பதாலும் அவை இசைத்தமிழுக்கே உரியன’’ (1967-625) என்று குறிப்பிடுவதோடு இன்னின்ன பாடல்களை, இன்னின்ன இராகத்தில் பாடலாம் என்றும் குறிப்பிடுகிறார். திருத்தசாங்கம், திருவெண்பா முதலானவற்றைச் சங்கராபரண ராகத்திலும், திருச்சதகத்தைப் பைரவி ராகத்திலும் பாடலாம் என்று விளக்குகிறார்.    

3.நாடகத்தமிழ் நூல்

                நாடகத்தமிழ் என்பதற்குத் திருவாசகத்தில் பல காட்சிகளைச் சான்று காட்டி, நாடகக் கூறுகள் திருவாசகத்தில் இடம்பெற்றிருப்பதைக் குறிப்பிடுகிறார்.
                திருவெம்பாவையில், தலைவி இறைவன் புகழைப் பாடிச் சென்று தோழியைத் துயிலெழுப்பும் காட்சி, திருஅம்மானையில் பெருமாள் புகழைப் பாடித் தோழியுடன் அம்மானை ஆடும் தலைவியின் காட்சி, இதுபோன்ற திருக்கோத்தும்பி, திருத்தெள்ளேனம் போன்றவற்றில் தலைவியும் தோழியும் ஈடுபடும் விளையாடல் காட்சி போன்ற செயல்களை மிக அழகாக ஒரு நாடகம் போல் மணிவாசகர் விவரிக்கும் பாங்கு முதலானவற்றை விளக்கி, நாடகக் கூறுகள் இடம்பெற்றிருப்பதாகக் கூறுகிறார். இவ்வாறு பல சான்றுகளை நிறுவி, ‘‘திருவாசகம் ஒரு முத்தமிழ் நூல் என்றும் மணிவாசகர் ஒரு முத்தமிழ் விரகர் என்பதும் ஒருவாறு புலப்படும்’’(1967-637) என்று குறிப்பிடுகிறார்.
                மூவர் தேவாரமாகிய ஏழு திருமுறைகளும், திருவிசைப்பா என்ற ஒன்பதாந் திருமுறையும் இசைத்தமிழ் நூல்களாகும். திருவாசகம் ஒன்றே இயல், இசை, நாடகம் என்ற மூன்று கூறுகளையும் தன்னுள் பெற்று விளங்கும் பெருமையுடையது என்பதை நம்மால் உணரமுடிகிறது.



No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்களைப் பதிவு செய்யலாமே?