நீரின்றி அமையாது உலகு.

முனைவர் ஜ.பிரேமலதா,தமிழ் இணைப்பேராசிரியர், அரசு கலைக் கல்லூரி, சேலம் 636 007 DR.J.PREMALATHA,ASSOCIATE PROFESSOR IN TAMIL,GOVT ARTS COLLEGE,SALEM -636 007.

Monday 20 April 2015

தற்கால உலக அமைதி கொள்கைகளும் சங்கப் புலவர்களும்

 

 தற்கால உலக அமைதி கொள்கைகளும் சங்கப் புலவர்களும்

 

  “போரே இல்லாத சமுதாயம்தான் மிகவும் மேம்பட்ட சமுதாயம் ஆகும், மனிதன் பண்பட்டவன் என்பதைக் காட்டுவதும் ஆகும். போரினால் ஏற்படும் அழிவு ஒருபுறம் இருக்க, உலக நாடுகள் இராணுவத்திற்கெனச் செலவிடும் தொகையினை ஆக்கபூர்வச் செயல்களுக்கெனச் செலவிட்டால் உலகில் எங்கும் வறுமையும் கல்வியறிவின்மையும் வேலையின்மையும் போன்ற கொடுமைகளே இருக்கமாட்டா என்பதனை எத்தனையோ சான்றோர்கள் எத்தனையோ விதங்களில் அறிவுறுத்தியுள்ளனர். போர்விதிகள், ஒழுங்குமுறைகள் பற்றிய ஆய்வெல்லாம் இறுதியில் போரற்ற ஒரு சமூகத்தை உருவாக்குவதற்கே பயன்படவேண்டும் என்கிறார் பேராசிரியர் க. பூரணசந்திரன்.

அமைதியை நிலை நாட்ட
பாரெங்கும் போராட்டம் - இன்னும்
நூறாண்டு தள்ளிப் பார்த்தால்
நிச்சயமாய் அமைதி வரும் ஆனால்
அது மயான அமைதியாய் இருக்கும்...!!என்கிறது ஒரு புதுக்கவிதை.


உலக அமைதி குறித்த பல கொள்கைகளில் ஒன்று இராணுவக் கொள்கை ஆகும்.

  அணு ஆயுதங்களைக் கைவசம் கொண்டுள்ள இரு நாடுகள் அந்த ஆயுதங்களை முழுப்போரில் பயன்படுத்தும்போது எந்தவொரு நாடுமே வெற்றிபெற முடியாது; மாறாக ஒரு நாடு மற்ற நாட்டை அழிக்கின்ற அதே வேளையில் தானும் அழிந்துபோகும். தாக்கிய நாடும் தாக்கப்பட்ட நாடும் அழியும் என்கிறது இக்கொள்கை. இக்கொள்கைப்படி ஆராய்ந்து பார்த்தால்  அணு ஆயுதப் போரில் எந்த நாடுகள் ஈடுபட்டாலும் அது உலகிலுள்ள  அனைவருக்கும் அழிவையே தரும் என்பதாகும். இந்த எச்சரிக்கையானது  உலக அமைதிக்கு வழிவகுக்கிறது.  Parrington, Col. Alan J (Winter 1997), Mutually Assured Destruction Revisited, Strategic Doctrine in Question, Airforce journal, USA: Air (நன்றி.விக்கிப்பீடியா)
இதை அக்காலத்திலேயே உணர்ந்திருந்ததினாலேதான் சங்கப்புலவர்கள் மன்னர்களிடையே தொடர்ந்து அமைதியை ஏற்படுத்த முனைந்து செயல்பட்டுள்ளனர். மன்னர்கள் புலவர்களை அனுப்பும் தூது அரசியற்பாற்பட்டது. ஆனால் புலவர்கள் தாமே விருமபி மேற்கொண்ட அமைதித் தூதுக்கள் உலக நலனுக்கானவை. போர் நினைவை அகற்றி மக்கள் நலன் குறித்த சிந்தனையை மன்னர்கள் மனதில் பதிய வைக்க முயலும் ஒரு காட்சியைக் காணலாம்.
“நீ ஓர் ஆகலின், நின் ஒன்று மொழிவல்;
அருளும் அன்பும் நீங்கி, நீங்கா
நிரயம் கொள்பவரோடு ஒன்றாது, காவல்,
குழவி கொள்பவரின், ஓம்புமதி !
அளிதோ தானே; அது பெறல் அருங்குரைத்தே“ (புறம்.5)

Image result for கோப்பெருஞ்சேரல் 

நரிவெறூஉத் தலையார் சேரமான் கருவூர் ஏறிய ஒள்வாட் கோப்பெருஞ்சேரல் இரும்பொறையைப் பார்த்து, குழந்தையைக் காக்கும் தாய் போல உன் நாட்டை நீ காப்பாற்றுக. அது கிடைத்தற்கு அரிய பேறு ஆகும் என நாட்டைக் காக்க    வேண்டிய இன்றிமையாமை எடுத்துரைத்து போர் உணர்வைத் தவிர்த்து வழி காட்டுகிறார்.

"வெள்ளைப் பூக்கள் உலகம் எங்கும் மலர்கவே
விடியும் பூமி அமைதிக்காக விடிகவே
மண்மேல் மஞ்சள் வெளிச்சம் விழுகவே
மலர்கள் சோம்பல் முறித்து எழுகவே
குழந்தை விழிக்கட்டுமே தாயின் கதகதப்பில்
உலகம் விடியட்டுமே பிள்ளையின் சிறுமுக சிரிப்பில்"

என்கிற வைரமுத்துவின் கவிதை வரிகள் உலக  அமைதிக்கான ஏக்கத்தை வெளிப்படுத்துகின்றன.

Image result for தாய்            

 “நாடுகள் அமைதியைப் பேணி, நல்லுறவோடு வாழ வேண்டும் என்றால் மற்ற நாடுகளின் உள் ஆட்சிப்போக்கில் தலையிடாமல் இருக்க வேண்டும் என்னும் கொள்கை எனப்படுகிறது "தலையீடு தவிர்க்கும் கொள்கை, ஒவ்வொரு நாடும் தனது சொந்த ". ஆட்சிமுறையில் கவனம் செலுத்தி நல்லாட்சியை ஏற்படுத்தும்போது அமைதி நிலவும் என்பது இக்கொள்கையின் கருத்தாகும். (நன்றி.விக்கிப்பீடியா)  இக்கொள்கை சப்பான் நாட்டினரின் கொள்கையாகும். சப்பானின் இராணுவத் தளபதிகளாக ஆட்சிசெய்த தோக்குகாவா மரபினர் 1603-1868 ஆண்டுகளில் தனித்தியங்கும் கொள்கையைத் தீவிரமாகக் கடைப்பிடித்தனர். ஆனால் நம் பண்டைத் தமிழர் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே இக்கொள்கையை வலியுறுத்தி வந்துள்ளனர் என்பதற்கு மேற்கூறிய பல புறநானூற்றுப் பாடல்கள் சான்றாக உள்ளன. நலங்கிள்ளி – நெடுங்கிள்ளி போர், அதியமான் – தொண்டைமான் போர் முதலான போர்கள் தவிர்க்கபட்டிருப்பதே இதற்குச் சான்றாகும். போரைத் தடுத்து நிறுத்திய புலவர்களாகக் கருதப்படும் கருங்குழலாதனார், ஔவையார், கபிலர், காவிரிப்பூம்பட்டினத்துக் காரிக்கண்ணனார், கோவூர் கிழார், ஆலத்தூர் கிழார், புல்லாற்றூர் எயிற்றியனார், உறையூர் ஏணிச்சோரி முடமோசியார் போன்றோர் இக்கொள்கையை உடையவர்களாகக்  காணப்படுகின்றனர்.

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்களைப் பதிவு செய்யலாமே?