நீரின்றி அமையாது உலகு.

முனைவர் ஜ.பிரேமலதா,தமிழ் இணைப்பேராசிரியர், அரசு கலைக் கல்லூரி, சேலம் 636 007 DR.J.PREMALATHA,ASSOCIATE PROFESSOR IN TAMIL,GOVT ARTS COLLEGE,SALEM -636 007.

Monday, 20 April 2015

சங்க காலப் போர் முறை – காலமாற்றம்




 சங்க காலப் போர் முறை – காலமாற்றம்



 சங்ககால மக்களில் போர் மரபைப் பின்பற்றிய இருவகை மக்கள் நிலையைக் காண்கிறோம். ஆதிகுடிகள் எனப்பட்ட பழங்குடியினர் எந்த நேரத்திலும் அறப்போர் முறைக்குப் புறம்பாகப் போரிட்டதில்லை. ஆனால் பின்னால் நாடு பிடிக்கும் ஆசையில் பல மன்னர்கள் அறப்போர் முறைக்கு மாறாக செயல்பட்டிருக்கின்றனர். தமிழரின் அறப்போர் முறைக்கு மாறான தன்மைகளையும் சில பாடல்கள் வெளிப்படுதியுள்ளன.   தகடூர் யாத்திரை என்னும் நூல் அதியமானின் மீது நடத்தப்பட்ட  போர் குறித்த ஒரு நூலாகும். முழுதும் கிடைக்காத ஒரு அரிய நூல். இதில் ஒரு மறக்குடி மறவனுக்கும் ஒரு முன்ன்னுக்கும் நடக்கும் உரையாடல் இடம்பெற்றுள்ளது.தன்னுடைய படைபலத்தைக் கொண்டு  எதிரியை வெற்றி பெற முடியாது என்று ஒரு மன்னன் உணர்கிறான். உடனே, படைத்தளபதியாக விளங்கும் மறக்குடி தலைவனை அழைத்து. இரவில் எதிரிப்படையைத் தாக்குமாறு அறிவுறுத்துகிறான். ஆணையிடுகிறான். அம்மறக்குடி மறவன்வேல் படைக்குத் தலைவன். வெறும் கூலி மட்டுமே பெற்று வாழும்  அவன் எப்படிப்பட்டவன் என்பதைக் கீழ்வரும் பாடல் தெரிவிக்கிறது. 



 Image result for காலாட்படை


பரவை வேல் தானைப் பகலஞ்சு வேனா
இரவே எறியென்றாய் என்னை - விரைவிரைந்து
வேந்தே நீ ஆயினாய் அன்றிப் புகுவதோ
போந் தென்னைச் சொல்லிய நா” - (தகடூர் யாத்திரை - பா - 14)

இப்பாடலில், கடல்போன்று விரிந்த வேற்படையை பகலில் தாக்காமல், இரவில் தாக்குமாறு கட்டளையிட்டாய். நீதான் அப்டையையைக் கண்டு அஞ்சுகின்றாய். மன்னனே, உன்னைப்போல் நானும் எதிரிப்படை வீரர்களைத் தாக்குவதற்கு அஞ்சுவேன் என்றெண்ணி இவ்வாறு நீ கூறினாயா? இவ்வாறு கூறிய நீ, என்னுடைய  வேந்தனாய் இருப்பதால் உன்னை ஒன்றும் செய்யாமல் விடுகின்றேன். வேறு யாராவது அவ்வாறு சொல்லியிருந்தால்,  அவ்வாறு சொன்ன நாக்கு மீண்டும் வாய்க்குள் போயிருக்காது என்று போர் வீரன் சினந்து கூறுகின்றான். அறுத்து எறிந்திருப்பேன் என்பது பொருள். அறப்போர் முறைக்குப் புறம்பாக ஆணையிட்ட வேந்தனைப் பார்த்து சீறும் வீரனின் கோபத்திலிருந்தே தமிழகப் பழங் குடியினர், அறப்போர் முறைக்குக் கொடுத்துள்ள முக்கியத்துவம் விளங்கும். ஆனால் இப்பாடலிலேயே மன்னர்கள் நாடு பிடிக்கும் ஆசையால் அறத்திற்கு மாறாக நடந்து கொள்கிற செய்தியும் பதிவாகியுள்ளது.

சான்றோன் எனப்பட்ட போர் வீரர்கள் நிலை



             சங்ககால அறப்போர் குடிகளான வீராகள் கீழ்நிலையிலுள்ள போர் வீரர்களைத் தாக்குவதை இழிவாகக் கருதியுள்ளனர். இத்தகைய அறநிலை பிறழாத வீரனையே சான்றோன் என்று புலவர் உலகம் போற்றியுள்ளது. சான்றோனாக்குதல் தந்தைக்கு கடனே என்கிறது மற்றொரு பாடல். இச்சான்றோன் தன்னையும் காத்து, தன் நாட்டு மக்களையும் காத்து,போரில் தன் வீராகளையும் காக்கக் கூடியவன் என்பதாலேதான் இவனை சான்றோர் மெய்ம்மறை (வீராகளுக்கு கவசம்போன்றவன்)  எனப் பதிற்றுப்பத்து போற்றுகிறது. சான்றோன் எனப்படுகின்ற இவனைப் போன்ற வீராகளையும் காக்கக் கூடியவன் என்பதால் சான்றோன் என்பது வீராகளில் தலை சிறந்த வீரனுக்கு கொடுக்கபடக்கூடிய பட்டமாக இருக்கலாம்.   .

காலாளாய்க் காலாள் எறியான், களிற்றெழுத்தின்
மேலாள் எறியான் மிக நாணக் - காளை
கருத்தினதே என்ற களிறெறியான் அம்ம
தருக்கினானே சான்றோர் மகன்” -(தகடூர் யாத்திரை - பாடல் 18)

Image result for போர் அறம்Image result for போர் அறம்


இச்சான்றோன் பற்றி இவனுடைய அறப்போர் முறை முறை பற்றி மேற்கூறிய பாடல் கூறுகிறது.பெருமிதம் மிக்க சான்றோன் மகன் காலாட்படை வீரனை வெட்டி வீழ்த்தமாட்டான், களிற்றையும் எறியமாட்டான், களிற்றின் மேன் அமர்ந்தவனுடனும் போரிட மாட்டாள், தேரில் இருந்து போர்புரியும் தகுதியுடைய தலைவனை மட்டுமே தனக்குச் சமமான எதிரியாகக் கருதி எதிர் நோக்கியுள்ளான் என்று கூறப்பட்டுள்ளது.



தேர் தர வந்த சான்றோ ரெல்லாம்
தோல் கண் மறைப்ப வொருங்குமாய்ந் தனரே” - (புறம் 63-பரி 56)

போர்களத்திற்கு, தேரில் வந்த சான்றோரெல்லாம் மாய்ந்தனர் என இப்பாடல் கூறுகின்றது. எனவே சான்றோர்கள் தேரில் சென்று போரிடக்கூடிய உயர்குடிப் போர் வீரர் எனப் புலனாகிறது.

சங்க காலத்தில் சான்றோர் என்ற சொல் அரசகுலப் போர்வீரரைக் குறித்து நின்றது என்கிறார் அறிஞர் மயிலை சீனி வேங்கடசாமி. இக்கருத்தை நான் மறுக்கிறேன். அறவழிப்பட்ட போர் வீரர்களாக  எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட பின்னரே தங்கள் வீரத்தின் காரணமாக சான்றோனாக (உயர்வீரனாக) உயர்ந்தவர்களே  தேரில் வந்து போர் புரியக்கூடிய போர் வீரராவர். இவற்றிலிருந்து தகடூர் யாத்திரை காட்டும் செருக்கு மிக்கச் சான்றோன் அறவழிப்பட்ட சிறந்த போர்வீரன் என்று அறியலாம்.

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்களைப் பதிவு செய்யலாமே?