திருவாசகமும் அரவாணியரும்
விளிம்பு நிலை மனிதர்கள் எனப் புறந்தள்ளப்பட்ட பெண்கள்,
குழந்தைகள்,தலித்துகள் இவர்களோடு அரவாணியர்களையும் இருபத்தியோராம் நூற்றாண்டு மைய நிலைக்கு
கொண்டு வந்து, அவர்களின்
வாழ்க்கையை நடுநிலையோடு அணுகக் கற்றுக் கொடுத்துள்ளது. இவர்கள் குறித்த
ஆய்வுகளும்> படைப்புகளும்
வெளிவரும் சூழலில், மரபிலக்கியங்களில்
இவர்களைப் பற்றிய புரிதலை ஆராய வேண்டியுள்ளது.
தொல்காப்பியர் வகுத்த இலக்கணத்திலிருந்து
தொடங்கி, அரவாணியர்களைப் பற்றிய குறிப்புகள்
தமிழிலக்கியம் முழுவதும் விரவிக் கிடக்கின்றன.ஆண்மை திரிந்தமனிதர்கள் பேடி என்றும், பெண்மை திரிந்த மனிதர்கள் அலி என்றும்
அழைக்கப்பட்டுள்ளனர்.
தொல்காப்பியர், உயர்திணையில் இவர்களை கூறியபின் பால்வகையில் அலி, பேடி, தெய்வம்
என்ற இம்மூவரையும் முதலில் மூன்றுபாலிற்குள்ளும் அடக்குகிறார்
அலி வ்நதான் அலி வந்தாள் அலி வந்தார்.(
இதுபோல் பேடிக்கும் தெய்வத்திற்கும் வரும்)
.மற்றொரு நூற்பாவில் உயர்திணையில்
பெண்பாலிற்குள் தான் இவர்களை அடக்குவது சிறந்தது என பெரும்பான்மை அடிப்படையில் இவர்களை பெண்பாலுக்குள் வரையறுக்கிறார். ஆணாக
இருந்து பெண்ணாக மாறுவதே பெரும்பான்மை. பெண்ணாக இருந்து ஆணாக மாறுவது சிறுபான்மை ஆகும்.
ஆண்மை
திரிந்த பெயர்நிலைக்கிளவி
ஆண்மை
அறிசொற்கு ஆகிடனின்றே.
என்ற நூற்பா, ஆணாக இருந்து பெண்ணாக மாறும்
பெரும்பான்மையினரைக் கருத்தில் கொண்டு, அவ்வாறு
மாறியவர்களை (பெண்பாலாகக் கருதி) பேடி என்றழைக்கவேண்டும் என்கிறது.ஆணாகப் பிறந்து, பெண்ணாக உணர்ந்து பெண்ணாகவே மாறியவர்ளை பெண் என்றே அக்காலச் சமூகம்
கருதியதாக இதன் மூலம் உணரலாம்.
இவ்வாறு உயர்திணையில் பெண்பாலாக
கருதப்பட்ட இவர்கள், வயிற்றுப்பிழைப்பிற்காக,
கூத்துக்கலையினை பொதுமக்கள் கூடும்
இடத்தில் நிகழ்த்தி
வாழ்ந்துள்ளனர் என்று அகநானூறு தெரிவிக்கிறது.தமிழகத்தில் பெண்பாலாகக் கருதி ஓரளவு மதிக்கப்பட்ட இவர்கள்,
துறவற நெறியைப் போதித்த புற சமயங்களான சமணமும்
பௌத்தமும், தமிழகத்தில்
நுழைந்தநிலையில் இழிவானவர்களாகக்
கருதப்பட்டனர். பெண்ணாகக் காட்டிக் கொள்வதற்காக மிகுதியான ஒப்பனையும் கூடுதலான அணிகலனும் அணிந்து பொது மக்கள்
கூடுமிடத்தில், பிறரை கவர்வதற்காக இவர்கள்
நடத்திய கூத்தினைக் கண்டு, இவர்களைப்
பாவம் செய்தவர்களாகச்
சித்திரித்தன.
ஒழுக்கத்தைப் போதித்த அறஇலக்கியங்கள்
இவர்களை இழித்துரைத்தாலும்,
தமிழ்ச்சமூகம் தங்கள் வாழ்க்கையோடு
ஒன்றிணைத்தே இவர்களையும்
நடத்திய செய்தியை முதற்காப்பியங்கள் காட்டுகின்றன. சிலம்பில்
பாண்டியனின் மனைவிக்கு
பணிப்பெண்ணாகவும் (சிலம்பு- )சீவகசிந்தாமணியில் காந்தர்வதத்தையின்
தோழியாகவும் (சீவக ) அரவாணிகள்
அரண்மனை வாழ்வியலோடும் இணைந்துள்ளனர்.மணிமேகலையில் பொதுமக்கள் கூடுமிடத்தில்
இவர்கள் கூத்து நிகழ்த்திய செய்தி பதிவாகியுள்ளது. சமண சமய காப்பியமான நீலகேசி(76) அரவாணியரின் அக்கால நிலை ,அவர்கள் படும் துன்பம்,மக்கட்பேறற்ற நிலை,பிறரால் இழிவாகப் பார்க்கப்படல் போனறவற்றை கூறுகின்றது.எனினும்,
முற்பிறவியில் இவர்கள் செய்த பாவமே இப்பிறவியில் அரவாணியாகப்
பிறக்கக் காரணம் என்று தண்டனைப் பிறவிகளாகச் சித்திரித்துள்ளது.இவ்வாறு தமிழர் சமயமல்லாத புற
சமயங்கள் இழிபிறவிகளாக் கருதி இழிவுபடுத்திய இவர்களை, தமிழர் சமூக மரபினை மீட்டுருவாக்கம் செய்ய முயன்ற வைதீக
சமயங்கள் இறைநிலைக்கு
உயர்த்த முயன்றுள்ளன.
இறைவன் ஒருவனே ஆண் என்றும், உலக உயிர்கள் அனைத்தும் பெண் எனவும் கொண்டு,
இறைவனாகிய ஆணைச் சரணடைவதே உலகஉயிர்களாகிய
பெண்ணின் வீடுபேற்றிற்கு ஒரே வழி என்ற அடிப்படையில் இவை செயல்பட்டன.இதனடிப்படையிலேயே
நாயக-நாயகி பாடல்கள் புனையப்பட்டன. மாணிக்கவாசகர், திருவாசகத்தில் இறைவனை ஆணாகவும் பெண்ணாகவும் அலியாகவும் கண்டு மகிழ்கின்றார்.பெணகளாகப்
பிறந்தவர்களுக்கு இறைவனை ஆணாகக் கணடு சரணடைவதில் சிக்கலில்லை. ஆண்களைவிட பெண்கள் இறைப்
பற்றினை கூடுதலாக பெற்றிருப்பதனால்தான் ஆழ்வார்களில் மற்ற ஆழ்வார்களை விட மிக எளிதில் இறைவனைச் சரணடைந்து
இறைப் பிரேமையில் மூழ்கிவிடுகிறாள் ஆண்டாள்.
எனவே,
ஆண்களைவிட பெண்களுக்கு இறைப்பற்றும் சரணடைதல்
திறமும் எளிதில் கூடிவிடுகின்ற தன்மையை உணர்ந்தே பக்தர்களுக்கு வழிகாட்டும் விதமாக, இறைவனையே முதலில் ஆணாக இருந்து, பெண்தன்மை பெற்று,அதன் பின் இரண்டும் கலந்த அலி நிலைக்கு உயர்ந்து ஆகாசமாகிறான் என்கிறார்
மாணிக்கவாசகர்.
காரைக்காலம்மையாரும் இறைப்பற்றினை எளிதில் பெற்றுவிட்ட
காரணத்தினால் தான், இறைவனுக்கு
முன் அமரும் வாய்ப்பினைப் பெறுகின்றார். இறைவனே அவரை ‘அம்மையே’ என்றழைக்கும் பேறும் பெறுகின்றார்.
“ஆண் பெண் அலி ஆகாசமாகி”(திருச்சதகம்.பாடல்.29)
ஆணின் இயல்பையும் பெண்ணின்
இயல்பையும் அறிந்த ஒருவரே அனைவரையும் அரவணைத்து காக்கவும் முடியம். எனவே தான், இறைவனை ஆணாகவும் பெண்ணாகவும் இரண்டும் இணைந்த அலியாகவும்
சமயங்கள் உருவகிக்கின்றன.
சைவத்திலும்
வைணவத்திலும் இறைவனை இம்மூன்று நிலைகளிலும் காணுகின்ற நிலையை நாயன்மார்களும்
ஆழ்வார்களும் பதிவுசெய்துள்ளனர்.
திருவாசகத்தில்,
“பெண்ணாளும்
பாகன்” (.திருஅம்மானை.10)
“ஆண் எனத்
தோன்றி அலி எனப் பெயர்ந்து”(திருவண்டப்பகுதி.138)
“பெண்மையனே
தொன்மை ஆண்மையனே அலிப் பெற்றவனே”(நீத்தல்விண்ணப்பம்.பாடல்.22)
“ஆணோ
அலியோ அரிவையோ”(திருப்
பொன்னூசல்.பாடல்.5)
தேவாரத்தில்,
“ஓருடம்புக்குள்ளே
உமையொரு பாகம்”(சம்பந்தர்.100-3)
“பெண்ணுறுமுடலினர்”(சம்பந்தர்.343.2)
“பெண்தமாம்
உருவத்தான்”(சம்பந்தர்.176-5)
“பெண்ணற
நின்றவர் தம்முருவம்”(சம்பந்தர்136-3)
“பெண்நயங்கொள்
திருமேனியன்”(சம்பந்தர்211-1)
என
நாயன்மார்களும் ஆழ்வார்களும் இறைவனை மூன்று கோலத்திலும் கண்டு பாடியுள்ளனர்.
இப்பாடல்கள் ஆணாக இருந்து பெண் உணர்வு
பெற்றதால் பெண்ணாகி பின் இரண்டும் இணைந்த அலி உருவம் பெற்ற இறைவனின் தன்மைகளை
சுட்டுகின்றன. ஆணாக இருந்து பெண்ணாக மாறுபவர்களைக் குறிக்கும் சொல் பேடி
என்பதாகும். அது போல பெண்ணாக இருந்து ஆணாக மாறியவர்களைக் குறிக்கும் சொல் அலி
என்பதாகும். தொல்காப்பியர் காலத்தில் வழக்கில் இருந்த இச்சொற்கள், மாணிக்கவாசகர் காலத்தில் அருகி இருதன்மையுடையவரையும் அலி என்ற ஒரு சொல்லாலே குறிக்கும் வகையில் குறுகிவிட்டது. மாணிக்கவாசகர் இவ்விரு
தன்மையுடையவர்களையும் அலி என்ற ஒரு சொல்லாலே தான் குறிக்கின்றார்...
“ஆண் பெண்
அலி ஆகாசமாகி”(திருச்சதகம்.பாடல்.29)
என்ற பாடல் வரிகள் ஆணாக இருந்து இறைவன்
பெண்ணாகி அலியாகிய தன்மையையும்,
“பெண் அலி
ஆணென” (திருப்படையாச்சி.பாடல்.5)
என்ற பாடல்
பெண்ணாக
இருந்து ஆணாக மாறிய இறைவியின் தன்மையையும் சுட்டி நிற்கின்றன.
என்ற பாடல் இறைவனின்
அலிகோலத்தை காட்டுகிறது. இப்பாடலில் வரும் தோல், குழை, நீறு,
சூலம் முதலானவை சிவனுக்குரியவை.தோடு,சாந்து,கருவளை முதலானவை இறைவிக்குரியவை.இவை இரண்டும் இணைந்த கோலத்தைப்
பாடியிருக்கும் இப்பாடல் அர்த்தநாரீசுவரர் கோலத்தை கண்முன் நிறுத்துகிறது.
சிவன் ஆணாக இருந்து பெண்தன்மை பெற்று
அலியாக மாறுவதைப் போல, பார்வதியும் பெண்ணாக இருந்து
ஆண்தன்மை பெற்று அலியாக மாறுகிறாள். சிவன், தன் உடலில் சக்திக்கு இடம் கொடுத்தது போல, சக்தியும் சிவனுக்கு தன் உடலில் இடம் கொடுத்ததால் உண்டானதே
அலி என்னும் அர்த்தநாரீஸ்வரக் கோலம்.
“தோலும் துகிலும் குழையும் சுருள் தோடும்
பால்வெள்ளை
நீறும் பசுஞ் சாந்தும் பைங்கிளியுஞ்
சூலமும்
தொக்க வளையு முடைத் தொன்மைக்
கோலமே
நோக்கிக் குளிர்ந்தூதாய் கோத்தும்பி”(திருக் கோத்தும்பி.18)
ஆணாக இருந்து பெண்ணாகி அலியாக
மாறியவர்களே மிகுதி. பெண்ணாக பிறந்து ஆணாக மாறியவர்கள் குறைவு. எனினும் இவ்விரு தன்மைகளும்
உலகில் உண்டு என்பதைக் காட்ட உருவானதே அலி என்னும்கோலம் எனலாம்.
“அர்த்தநாரீஸ்வரர் ஆணுக்கு பெண்ணை ஒளிக்க முடியாமல்
அம்பலப்பட்டு நிற்கம் அரவாணித் தன்மையின் பருண்மையான மறு உள்ளீடுதான் ” என்று இத்தோற்றத்தை மு.இராமசாமி குறிப்பிடுகிறார்.(மகாராசன்.2007.17)
கிருத்துவ சமயத்தில் திருநங்கைகளான
அரவாணிகளை ஆயராக நியமிக்கலாமா என்ற கேள்விக்கு,ஜோ.தமிழ்ச்செல்வன் என்பவர் இவ்வாறு கூறுகிறார்.“கடவுளை ஆணாகவும் பெண்ணாகவும், தாயாகவும் தகப்பனாகவும், அம்மை அப்பனாகவும் விசுவசிப்பவர்கள் கடவுளை ஒரு திருநங்கையாக ஏற்பதுதான்
பொருத்தமானதாக இருக்கும். திருநங்கைக்கு மட்டும்தான் ஆண்பால்(அவன்), பெண்பால்(அவள்), மூன்றாம்பால்(அவர்) ஆகிய முப்பால்களை அறியவும் உணரவும்
முடியும். அனைத்தையும் அறிந்தவரும் உணர்ந்தவரும்தான் கடவுளாக இருக்க முடியும். கடவுள் ஒரு திருநங்கை
என்று சொன்னால் அதில் தவறொன்றும் இல்லை. திருநங்கை ஆயராக நியமிக்கப்படுவதில்
பிழையொன்றும் இல்லை.”
ஆணாக பிறந்த ஒருவன் உள்ளத்தளவில் தன்னைப் பெண்ணாக நினைக்கும்
பொழுது, உடலளவிலும்
உள்ளத்தளவிலும் சந்திக்கும் சிக்கல்கள் ஏராளம். பித்துப் பிடித்தாற் போன்ற நிலைக்கு செல்லும் இவர்கள், மரபு வழிப்பட்ட வாழ்க்கை முறையோடு ஒத்துப் போக முடியாமல்
தடுமாறுகின்றனர் பலர் தற்கொலை செய்து கொள்கின்றனர். வெகு சிலரே இதிலிருந்து மீண்டு
குடும்பத்தினரோடும் சமூகத்தோடும் ஏன் தன் உள்ளத்தோடும் உடலோடும் போராடி மீள்கின்றனர்.
பெரும்பாலும் பருவவயதில்தான் இவ்விரு
மாறுபட்ட தன்மையை உணர்வதால், சரியான வழிகாட்டுதல் இல்லாமல்
வீட்டைவிட்டே ஓடிவிடுகின்றனர். பெண்களை விட ஆண்களே இதில் பெரிதும் பாதிப்படைகின்றனர். “பெண்கள் பூப்படைகிற அல்லது ஆண்களுக்கு மீசை முளைக்கிற
பருவத்தில்தான் மிகப்பெரிய சிக்கல்கள் அவர்களுக்கு எழுகின்றன.பைத்தியம் பிடிப்பது மாதிரி
உணர்வதும்,வாழ்வதே சரியில்லை எனப் புலம்பிக் கொள்வதும்,என்னவோ ஆகப்போகிறது என்ற பயமும் அவர்களுக்கு
அடிக்கடி ஏற்படும்.
பெரும்பாலான அரவாணிகள் அந்தப்பருவத்தில் பைத்தியம் ஆகியிருக்கவேண்டும் அல்லது தற்கொலை செய்திருக்க
வேண்டும்.”என்று மகாராசன் குறிப்பிடுகிறார்.(2007.11)
இருவேறுபட்ட
சூழலில் காணப்படும் இந்நிலையை ஒரு பாடலில் மாணிக்கவாசகர் வெளிப்படுத்துகிறார்.
“நான்
யார் என் உள்ளம்யார் ஞானங்களார் என்னை யாரறிவார்?”
(திருக்கோத்தும்பி.1)
இந்தப்
புரிதல் ஏற்பட்ட பிறகு ஆண் பெண் பேதங்களோ அதன் மீதான ஈர்ப்போ ,உளவியல் உணர்வு நிலையில் ஏற்படும் வெறுப்போ அவர்களை
விட்டு நீங்கி விடுகின்றன.இவ்வுலகம் ஆண்மையநோக்கில் கட்டமைத்துள்ள படிநிலைகள் தேவையற்றதாகி
விடுகின்றன.
நான் என்பது உடலா?அல்லது உள்ளமா? நான் இதுவரை பெற்ற ஞானங்கள் என்ன? என்னை யாரறிவார்?
என்று புலம்பி அறிவு தடுமாறி நிற்கும்
நிலையை, பருவவயதில் அரவாணிகள் பெறுகின்றனர்.
நான் என்பது உடலல்ல.உள்ளம். உடலை இயக்கும் உள்ளம்தான் ஆன்மா. உடல் இவ்வுலகில் வாழ்வதற்கான
ஒரு கருவியே தவிர வேறில்லை. அதனால் இந்த உடலில் உள்ள உறுப்புகளைப் பற்றி நினைத்து பெருமைப்படவோ,சிறுமைப்படவோ ஏதுமில்லை.உள்ளம் தான்
இயக்கம்.அதுதான் உண்மை. அதன்வழியே நடப்பதே உயர்நிலை.முற்றும் துறந்த
முனிவர்களும் உண்மையான ஆன்மீகவாதிகளும் தெளிவதைப்போல அரவாணிகளும் ஒரு
கட்டத்தில் தெளிகின்றனர்.
உடலுக்குத்தான் பால் பேதம் உள்ளத்திற்கு இல்லை.ஞானம் பெற, உடற்கூறுகள் ஒரு பொருட்டே இல்லை.இறைவன் படைப்பில் அனைவரும் சமம்.அவரவர்க்குரிய இயல்புகளுடனும் குணங்களுடனும் தனித்துவம் மிகுந்தவர்களாக இவ்வுலகில் வாழமுடியும் என்ற ஞானத்தை அரவாணிகள் பெறுகின்றனர். அதற்கேற்ப வாழ்க்கை முறையை அமைத்துக் கொள்கின்றனர். இவர்களின் நிலையில் நின்றுதான், நான் யார் என்ற கேள்விக்கான விடையைத் தேட முயல்கிறார் மாணிக்கவாசகர்.
ஆணாக பிறந்து, பெண்ணாக உணர்ந்து பெண்ணாகவே மாற விரும்பும்
அரவாணிகளுக்கு, தன் உடல்
உறுப்புகள் ஒரு குறையாகத் தோன்றுகிறது.வெளித்தோற்றத்தில் மிகுதியான ஒப்பனைகளால் தங்களைப் பெண் போலவே
மாற்றிக் கொள்கிற அரவாணிகள்,ஆண் உறுப்பை ஊனமாகக்
கருதுகின்றனர்.அதை நீக்கிய பின்னரே தங்களை பெண்ணாக முழுமையாக உணரமுடியும் என்ற நிலையில் அதனை
நீக்கி விடுகிறார்கள். மாணிக்கவாசகர் இதனை,
“ஊனந்தன்னை
ஒருங்குடனறுக்கும்
ஆனந்தம்மே
ஆறா அருளியும்
மாதிற்
கூறுடை மாப்பெருங் கருணையன்”(கீர்த்தி.105)
அவ்வாறு நீக்கிய பின்தான்,
முழுமையான ஆனந்தத்தை அடைகிறார்கள். 6666அதற்கு வழிகாட்டியாக இருப்பவன் மாதிற்கூறுடை
மாப்பெருங்கருணையன் என்கிறார்.
“முறையுளி
யொற்றி முயன்றவர்க் கொளித்தும்
ஒற்றுமை
கொண்டு நோக்கும் உள்ளத்
துற்றவர்
வருந்த உறைப்பவர்க் கொளித்தும்
இந்தந்திரத்
திற் காண்டும் என்றிருந்தோர்க்
கத்தந்திரத்
னவ்வயி னொளித்தும்
முனிவற
நோக்கி நனிவரக் கவ்வி
ஆணைனத்
தோன்றி அலியெனப் பெயர்ந்து
வாணுதற்
பெண்ணெண ஒளித்தும்,சேண்வயின்
ஐம்புலன்
செலவிடுத் தருவரை தொறும் போய்த்
துற்றவை”
என்ற இப்பாடல், திருமாலும் பிரம்மனும் அடியையும் முடியையும்
காணவியலாத வகையில், தன் உருவத்தைத்
தந்திரத்தினால் மறைத்தபடி, ஆணைனத்தோன்றி பின் அலிக்கோலமாக நெருப்புக் கோலம் கொண்ட இறைவனைப் பற்றிக் கூறுகிறது.
அரவாணிகளின் நிலையோடு
இப்பாடல்ஒத்துப்போகிறது. ஆணெனப் பிறந்து, பெண்தன்மை உணர்ந்து, அதை பிறர்
அறியாமல் ஒளித்து வாழ்ந்து, இருதலைக்
கொள்ளி எறும்பு போல ஆணாகவும் வாழமுடியாமல் பெண்ணாகவும் வாழ முடியாமல், தந்திரத்தினால் பெண்தன்மையை முதலில் மறைத்து வாழ்கின்ற மனப்போராட்டம் மிகுந்த சூழலில்,நடுநிலையோடு தன்நிலை குறித்து ஆராய்ந்து
மிகுதியான பெண்தனமையை மறைக்க முடியாது என்று பெண்ணாகவே வாழ்ந்துவிட அரவாணிகள் முடிவெடுக்கின்றனர்.
அவ்வாறு முடிவெடுத்த பின் இவ்வுலக
வாழ்வின் நிலையாமை உணர்ந்து, உடலின் தன்மை அழியக்கூடியது,
ஆன்மா ஒன்றே அழியாதது .ஆண் உடல் உண்டு.
ஆனால், ஆண்தன்மை இல்லை என ஐயுற்று
குழம்பி முன்பு பழகிய நிலைக்கும் தற்போதுள்ள தெளிந்த நிலைக்கும் உள்ள வேறுபாட்டை உணர்ந்த
பின், அலியான இறைவனைப் போல அவன் திருவடியைத்
தொடருங்கள் என்கிறார் மாணிக்கவாசகர். தன்னை உணரத் தனக்கொரு கேடில்லை என்கிள திருமூலரின்
வாக்கிற்கேற்ப தன்னை உணர்ந்த பின் ஆணாக இருப்பதை விரும்பாமல் முழுவதும் பெண்ணாக மாற
முயல்கின்றனர்.
“எப்பெருந்தன்மையும்
எவ்வெவர் திறமும்
அப்பரிசதனால் ஆண்டு கொண்டருளி”
(கீர்த்தி.125-226)
ஒருவரைப் பற்றி நன்கறிய அவர் நிலையில் நின்று
அவரை அறிய முயல வேண்டும்.அவரவர் நிலையில் நின்று அவரது இன்பத்தையும் துன்பத்தையும் அறிய முயலும் போதுதான்
முழுமையாக ஒருவரின் நிலை பற்றி அறிய முயலும். அப்போதுதான் உலக உயிர்களின் மீது அன்பு தோன்றும்.அன்பு
தோன்றிவிட்டால் யாரையும் தூற்றவோ இழிவாகக் கருதி ஒதுக்கவோ இயலாது.அதுதான்
இறைநிலை. இறைவன் காட்சிக்குரியவன் அல்லன் உணர்வதற்கு உரியவன்.இறைவன் உயர் பிறவியான மனிதப் பிறவி கொடுத்திருப்பது
போல ஒருஉடலில் ஆண் பெண் அலி என்ற மூன்று தன்மைகளையும் கொடுத்திருக்கிறான். அது இறைவன்
கொடுத்த பரிசாகும். அப்பரிசனை பெருந்தன்மையோடு ஏற்றுக் கொள்ள வேண்டும்.
“உண்டொரு ஒண்பொருள் என்றுணர்
வார்க்கெல்லாம்
பெண்டிர் ஆண் அலி என்றறியொண்கிலை”(திருச்சதகம்.42)
இப்பாடலின் முதலிரண்டு அடிகள் ஒரு பெண் வினா எழுப்புவது போலவும் அடுத்த பெண் அதற்கு பதி் தருவது போலவும் அமைக்கப்பட்டுள்ளது. இதில் முதல் பெண், சிவன் எதற்காக ஆணாகப் பிறந்து பெண்ணாக மாறினான்.அவ்வாறு மாறிய அவன் பித்தனல்லாமல் வெறென்ன? என்கிறாள். அதற்கு விடைதரும் பெண்,ஆணாகப் பிறந்து பெண்தன்மை பெற்று மாவில்லையெனில் யோக நிலை பற்றி அறியாமல் உலகத்தார் வீணே அழிவர் என்கிறார்.
இறைவனை உணர்வால்,அனுபவத்தால்,தவத்தால் உணர நினைப்பவர்களுக்கு இறைவன்,
ஆண் பெண் அலி என்கிற மூன்று நிலையிலுமிருக்கிறான்
என்பது புரியும் என்பதை இத்திருவாசகப்பாடல் எடுத்துரைக்கின்றது.ஆனால்
இத்தத்துவத்தை அறியாதவர்கள் அலிக் கோலத்தை தூற்றுகின்றனர்.குடும்பத்தினரே
வெறுக்கின்றனர்.அவமானச் சின்னமாக் கருதுகின்றனர்.தாயும் தந்தையுமே
புறக்கணிப்பதால் பெரும்பாலானோர் வீட்டை விட்டே வெளியேறுகின்றனர். தாய் இருந்தும் தந்தை
இருந்தும் நாடோடிப் பாடல்களாக மாறி அனாதையாகின்றனர்.ஆணாதிக்க சமூகமும் இவர்களை எள்ளி நகையாடுகின்றது.
சித்தர்களையும் பித்தர்களாகக் கருதி எள்ளி நகையாடிய இறைநிலை எய்தவியலாத இச்சமூகம் இவர்களை உணர
முடிவதில்லை.
இறைவனின் படைப்புகளில் அலிகளின் படைப்பு எதற்கு என்ற கேள்விக்கு மாணிக்கவாசகர் ஒரு பாடலில் விளக்கமும் தருகிறார்.
“தென்பால் உகந்தாடும் தில்லைச் சிற்றம்பலவன்
பெண்பால்
உகந்தாடும் பெரும்பித்தன் காணேடீ
பெண்பால்
உகந்திலனேற் பேதாய் இருநிலத்தார்
விண்பாலியோ
கெய்தி வீடுவர் காண் சாழலோ”(திருச்
சதகம்.9)
ஆண்மை எனில் வீரம் . வீரத்தின் விளைவு அழித்தல். பெண்மை எனில் அன்பு. அன்பின் விளைவு காத்தல்.முற்றுந்துறந்த முனிவர்களும்,சித்தர்களும், உலகத்தவர்களும் விரும்புவது அன்புநிலைதான். அன்பின் வழிபட்டது உயிர் நிலை என்கிற திருவள்ளுவரின் கூற்று இவண்நோக்கத்தக்கது.தூய அன்புநிலைக்கு மனதைப் பழக்குவதே உண்மையான யோகநிலையாகும்.அந்நிலைப் பெற்றவர்களிடம் பெண்மையின் தன்மை மிகுந்திருக்கும். அவர்களே உலகில் வெற்றியாளர்களாகத் திகழமுடியும்.
Add caption
|
“மக்களைப்
பெரிய அளவில் கவர்ந்திடும் ஆண் நடிகர்,பாடகர்,தலைவர்,சாமியார் போன்றோரின் உடல்கள் கணிசமாகப் பெண் தன்மையில் தோய்ந்திருக்கும். சமூகத்தில்
பிரபலமான பெண்ணுடலில் ஆண்தன்மை மெலிதாகப் பொதிந்திருக்கும்”(காவ்யா,செப்
2012.49)என்கிற முருகேச பாண்டியனின் கூற்று
கருதத்தக்கது. ஆணுக்குரிய தோற்றம், உடல்
வலிமை போன்ற குணங்களிலிருந்தாலும்,
பெண்மைக்குரிய அன்பு, தாய்மை முதலான குணங்களும்
இருப்பவரையே உலகம் விரும்புகிறது.
மாணிக்கவாசகர் இறைவனை அடையும் வழிமுறைகளைப் பற்றி கூறுமிடத்து, மகளிர் விளையாடல்களின. வழியே நின்றுரைக்கும் தன்மை பிற ஆழ்வார்களிடமும் நாயன்மார்களிடமும் காண முடியாத ஒன்றாகும்.ஆழ்வார்களில் ஆணடாள் கூடல் விளையாடல் பற்றி கூறியிருந்தாலும் அவர் பெண்ணாக இருப்பதால் அவ்வாறு மகளிர் விளையாடல்களைப் பற்றிக் கூறவது இயல்பானதாகும். ஆனால் ஆணாக இருக்கும் மாணிக்கவாசகர்,பெண்நிலையில் நின்று தன்னைப் பெண்ணாகவே பாவித்து மகளிர் விளையாட்டுக்களை விளையாடி மகிழ்வது சிறப்பானதாகும். திருவெம்பாவை திருத்தெள்ளேனம் திருச்சாழல் திருக்கோத்தும்பி திருப்பவல்லி திருஉந்தியார் திருத்தோணோக்கம் திருப்பொன்னூசல் போன்ற பத்து மகளிர் விளையாட்டுக்களில் மனந்தோய்ந்து பெண்ணாகவே மாறி விளையாடுகிறார்.
சூடுவேன் பூங்கொன்றை சூடிச் சிவந்திரள்தோள்
கூடுவேன்
கூடி முயங்கி மயங்கி நின்று
ஊடுவேன்
செவ்வாய்க் குருகுவேன் உள்ளுருகித்
தேடுவேன்
தேடிச் சிவன் கழலே சிந்திப்பேன்(திருஅம்மானை.17)
தலையில் பூச்சூடி அலங்கரித்துக்கொண்டு, இறைவனின் தோளைத் தழுவிடுவேன் . சில சமயம் அவரோடு ஊடல் கொள்வேன். ஊடிய பின் அவருடைய செவ்வாய்ச் சுவைக்காக ஏங்கி உருகுவேன். உள்ளுருகி வாடிய பின்னர் பெண்மைக்குரிய நாணத்தை கைவிட்டு அவரைத் தேடுவேன்.தேடி கிடைத்த பின,அவருடைய கழலே கதியென்று சிந்திப்பேன் என்று இறைவன் மேல் காதல் கொண்ட பெண்ணொருத்தியின் நிலையில் நின்று மாணிக்கவாசகர் பாடுகிறார்.
கற்பூரம் நாறுமோ கமலப்பூ நாறுமோ
செம்பவள
வாய்தான் தித்திருக்குமோ”(நாச்சியார்
திருமொழி )என்ற பாடலிலுள்ள
ஆண்டாளின் ஏக்கம் மாணிக்கவாசகர் பாடலிலும் பொதிந்துள்ளது.
முத்து நல் தாமம்பூ மாலைதூக்கி
முளைக்
குடந் தூபம் நல் தீபம் வைம்மின்(திருப் பொற்.1)
இப்பாடலில்,பெண்கள் மேற்கொள்ளும் இறைநோன்புகளில் தானும் ஒரு பெண்ணாக மாறி கலந்து கொண்டு, சக பெண்களுடன் உரையாடி மகிழ்கிறார்.
இறைத்தன்மை என்பது பாலியலைக் கட்டுக்குள் கொண்டுவரும்
வழிமுறையாகும்.எனவேதான,சராசரியான
பாலுறவு,குழந்தைப்பேறு, இரத்த
உறவு கொண்ட குடும்பம்,
இவற்றைக் கடந்த வாழ்க்கை வாழும் அரவாணிகள் ஆன்மீகமே தனக்கு உகந்தது என்று நம்புகிறார்கள்.வடநாட்டில்
அரவாணிகளை தெய்வத்திற்கு இணையாகக் கருதி ஆசி பெறகிறார்கள். “நாங்கள் தெருவில் நடந்து சென்றால் வயது முதிர்ந்த பெரியவர்கூட எங்கள்
கால்களைத்தொட்டு வணங்குகின்றனர் என வடநாட்டில் வாழும் ஒரு அரவாணி கூறுகிறார். ”மகாராசன்.236)
பழங்குடி இன மக்கள் அரவாணிகளைக் கடவுளின் தூதுவர்கள் என்று கருதுகின்றனர்.எனவேதான்,“அமெரிக்காவில் சிகப்பிந்திய பழங்குடியினர் இந்த கடைபாலின குணமுள்ள குழந்தைகளை ஆணுக்கும் பெண்ணக்கும் நடுநிலையான இக்குழந்தை இறைவனுக்கும் மனிதர்களுக்கும் இடையே ஏற்பட்ட ஓர் தொடர்பு சாதனம் என நம்பியதால் இவர்களை பர்தாஷ் என சிறப்பு பெயரால் அழைத்து மருத்துவம்,மாந்திரீகம்,ஆன்மீகம் ஆகியவற்றைப் போதித்து பூசாரி ஸ்தானத்திற்கு உயாத்தினார்கள்”(மகாராசன்.197)என்கிறார் டாக்டர் ஷாலினி.இந்தியாவில் லடநாட்டிலும் அவ்வாறான ஒரு நம்பிக்கை உள்ளதால்தான் அரவாணிகள் தொடங்கி வைக்கும் எந்த ஒரு செயலும் சிறப்பாக இருக்கும் எனக் கருதி, அவர்கள் மூலம் எந்த தொழிலையும் தொடங்குகிறார்கள்.
ஆனால் தமிழ்நாட்டில் நிலைமை தலைகீழ். இவர்களை இழிவாக் கருதி மிக மோசமான சொற்களால் எள்ளி நகையாடுகிறார்கள் இவர்களை ஒன்பது என்று கேலி செய்பவர்கள் அதிகம். ஒவ்வொரு மனிதனும் ஒன்பதுதான் என்பதை அவரகள் உணர்ந்தால் அவ்வாறு அரவாணிகளை இழிவுபடுத்த மாட்டார்கள்.
“புறந்தோல்போர்தெங்கும் புழு அழுக்கு மூடி
மலஞ்
சொரும் ஒன்பது வாயிற் குடிலை
மலங்கப்
புலனைந்தும் வஞ்சனையைச் செய்ய” (சிவபுராணம்)
இப்பாடல் மனித உடல் ஒன்பது வாயிற் கொண்ட ஒரு கூடு என்கிறது. செவி இரண்டு, கண் இரண்டு, ,மூக்கு இரண்டு,வாய் ஒன்று., கருவாய் ஒன்று, எருவாய் ஒன்று என்ற ஒன்பது வாயிலை உடைய மனிதர்கள், தம் இனத்தைச் சேர்ந்த ஒருவரை அவ்வாறு கூறுவது தன்னையே தான் இழிவுபடுத்திக் கொள்வது போலத்தான் ஆகும்.
திருநங்கைகள் குறித்து விரிவான உங்களது பார்வையை இங்கு தந்திருக்கிறீர்கள். பயனுள்ள குறிப்புகள். நன்றிகள் பல. jo.tamilselvan@gmail.com
ReplyDelete