கால்கள்
உடல் பெருத்தது
வளர்ச்சியல்ல வீக்கம்...
நடை பயின்றேன்.....கால்கள் தளர்ந்தன...
அறிவு கட்டளையிட்டும்
கால்கள் நகர மறுத்துவிட்டன.
ருசியாய் உண்ட வாய்க்கும்
வந்ததை வாங்கிய வயிற்றுக்கும்
உட்கார்ந்து சலித்த இடுப்பிற்கும்
தண்டனையில்லை
நான் மட்டும் பாவம் செய்தவனா?
கேட்டன கால்கள்!
அறிவு அமர்த்தலாய் சொன்னது
இது உலக நியதி
கீழிருக்கும் நீதான் பாவ பலனை
அனுபவிக்க வேண்டும்!
திகைத்த கால்கள்
அறிவை நோக்கி வீசத்தொடங்கியது
குற்றச்சாட்டை!
நீ சரியாய் இருந்திருந்தால்
இது நேர்ந்திருக்காது!
அறிவு அதிர்ந்து தலைகுனிந்தது!
நானின்றி நீ
வீடு போக இயலாது
நானே உன் முன்னேற்றம்!
நானே உன் அடித்தளம்!
நகர்ந்தன கால்கள்
உற்சாகத்துடன்
ஒரு புரிதலுக்குப் பின்....
********படி படி.......
தேர்வு நேரத்தில் தவிர்க்க இயலாத
ஒருநாள் அம்மா ஊருக்குக்
கிளம்பிய நாளில்..
எதிர்பாராமல்
கிராமத்து பெரியப்பா .....
புத்தகமும் பேனாவுமாய்
திகைத்து நிற்கையில்
ஒட்டலுக்கு பையுடன் கிளம்பிய
அப்பாவைப் பார்த்து இகழ்ச்சியுடன்
‘பெண்ணை வளர்த்திருக்க இலட்சணமா‘
என கேலி பேசியவர்முன்
எப்படிச் சொல்ல
என் கைகள் கரண்டி பிடிப்பவையல்ல
கரன்சி பிடிப்பவையென்று!
***********************
அழகின் அழகே .......
கையில் காதில்...
கழுத்தில் மூக்கில்...
காலில் விரலில்...
தங்கம் வைரம்
பிளாட்டினம் அணிந்து
அலட்சியமாய்
நோக்கும் பெண்ணே!
இலட்சங்களல்ல
என்னிடமிருப்பவை
இலட்சியங்கள்!
என் கையிலுள்ள
பேனாவிற்கு நிகரான
ஓர் அணிகலன்.......
உலகத்தில் உண்டோ?
**************************
உலகம் ஒர் இருட்டறை......
ஆணாய் பிறந்ததினால்
அத்தனையும் உனக்கு சொந்தம்
எனக்கோ அரிகரண்டி மட்டும்!
அறிவில் ஆளுமையில் நிகராயிருந்தும்
அஃறிணைப் பொருட்களுக்காக
அடிமையாக்கினாய் !
காற்றை விஞ்சி பிணக்குவியலில் கொடிநாட்டி
இப்பூவுலகிற்கு அபாயஅணுகுண்டானாய்!
நீரை நிலத்தைப் பிரித்து
மதம்பிடித்த யானையாகி
தந்திரத்தில் நரியாகி
பெண்ணின் உழைப்பை உறிஞ்சும்
வெறி கொண்ட புலியானாய்!
அகிலத்தை அடக்க நினைத்தாலும்
உண்மையில் எனக்குள் நீ அடக்கம்!
இருட்டிலேயே இருக்கமாட்டேன்
தீபமா தீயா
முடிவெடுத்துக் கொல்!
**************************
கூலி......
கூட்டும் வேலை
கணிப்பொறி வேலை
கவர்னர் வேலை
சித்தாள் வேலை
சிங்காரிக்கும் வேலை
நடிக்கும் வேலை
ஆள் பிடிக்கும் வேலை
அத்தனைக்கும் கூலி உண்டு
இவர்களை உற்பத்தி செய்யும்
பெண்ணுக்கோ கூலியில்லை
மனித இன ஆதாரம்
வாழ்வதற்கு வரன் கூலி கொடுக்கிறது
வலி தாங்கும் பெண்ணோ
பெண்ணின் வலிமை உணர்வதில்லை
வலி பொறுக்க மறுத்துவிட்டால்
அச்சோ அச்சாணி நின்றுவிடும்.
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்களைப் பதிவு செய்யலாமே?