நீரின்றி அமையாது உலகு.

முனைவர் ஜ.பிரேமலதா,தமிழ் இணைப்பேராசிரியர், அரசு கலைக் கல்லூரி, சேலம் 636 007 DR.J.PREMALATHA,ASSOCIATE PROFESSOR IN TAMIL,GOVT ARTS COLLEGE,SALEM -636 007.

Thursday 7 March 2013

தீயின் நாக்கு நிரூபித்த தூய்மை

 

             
சிறுகதை

  தீயின் நாக்கு நிரூபித்த தூய்மை


              அரண்மனையே பேச்சற்று உறைந்து கிடந்தது.தீயின் நாக்கு நீருபித்தத் தூய்மையை மக்கள்  நம்பவி்ல்லை என ஒற்றர்கள் மூலம் செய்தியறிந்த பின் எங்கும் இதே பேச்சு. செய்தியறிந்த யாவரும் செய்வதறியாமல் திகைத்தனர். ஊர் வாயை மூட வழி தேடியறிந்தவர்கள் தாமே ஊர் வாயானார்கள்.

               செவிலிப் பெண்கள், சீதையும் இராமனும் வந்த பிறகு திரும்பப் பெற்ற இளமையை மீண்டும் தொலைத்துவிட்டார்கள். இலையுதிர்கால மரங்களைப் போல, வீரர்கள் களையிழந்து போனார்கள். இராமராஜ்ஜியக் கனவுகள் கண்முன் சிதைந்து போவதைக் கையற்றுப் பார்த்துக் கொண்டிருந்தார் வசிட்டர். தேரோட்டி சுமந்திரனோ இராமனின் கண்களில் பட்டு விடாமலிருக்க எங்கோ பதுங்கி விட்டான்.நாழிகை மணி கூட நாவசைக்க மறந்து விட்டது.


             அகலிகையின் சாபம் இராமன் காலில் ஒட்டிக்கொண்டு வந்து இங்கே உள்ளவர்களைப் பற்றிக்கொண்டதோ?கல்லாய் இறுகிப்போய் விட்டார்களோ அனைவரும்? தேனினும் இனிய சொற்களுக்காகக் காத்திருந்தவர் செவியில் தீயின் கங்குகள் அல்லவா விழுந்திருக்கிறது.இன்றோ நாளையோ என இளவரசனின் பிறப்புச் செய்தி வந்து சேரும் நாள் எந்நாளோ என ஏங்கிக் கிடந்தவர்கள் ஏமாந்து போனார்கள்.அக்னி சுடும் வேளையில் காலில் செருப்பின்றி நடப்பவர்கள் விரைவாக நடந்து கடப்பதைப்போல, இச்செய்தியும் விரைவாகக் கடந்துவிட ஏதாவது வழியண்டோ என ஏங்கித் தவித்தார்கள்.

               வம்பு பேசியவர்களை  ஏன் இன்னும் கைது செய்யவில்லை?அவர்களை  சிரச்சேதம் செய்துவிட இராமன் ஏன் இன்னும் ஆணையிடவில்லை? சம்புகனைக் கொன்ற இராமனுக்கு வதந்தி பரப்பி வருபவர்களைக்  கொல்ல என்ன தயக்கம்? சம்புகனின் தாய் அவன் இறந்தசெய்தி கேட்ட அக்கணமே இறந்தாளே?அந்தக் குடும்பம் பட்ட துயரை யார் அறிவார்?இராமன் இராவணவதம் முடிந்து அயோத்தி திரும்பும் செய்தி கேட்டு நாடே மகிழ்ச்சியில் திளைத்திருந்தபோது, அந்த சம்புகனின் இளவல்,  தாயும் அண்ணனும் புதைக்கப்பட்ட இடத்தில் சுடுநெருப்பு வெயிலையும் பொருட்படுத்தாது  விழுந்துகிடந்தானே அதை யாரறிவார்?அதிகாரம் படைத்தவரின் வாள் செய்ததை, அதிகாரமில்லா  நாவு இப்போது செய்து கொண்டிருக்கிறது.

                 கோசலை கோயில் தூணில் தலைசாய்த்து கண்ணீர்த் துடைக்க மறந்து மயங்கிக் கிடந்தாள்.சுமத்திரை, சீதையிடம் யாரும் எதுவும் சொல்லிவிடாதபடி கண்காணித்துக் கொண்டிருந்தாள்.சொன்னது மக்களில் சிலரா அல்லது கைகேயியா என்று யாரும் கேட்டுவிடப்போகிறார்களோ  எனப் பயந்து அறையையே சிறையாக்கிக் கொண்டாள் அன்னை கைகேயி.

            அரண்மனையில் தனது அறையில் சன்னலில் கைப்பதித்து நெடுங்தூரம் வரை தெரியும் நாட்டின் பரப்பை பார்த்துக் கொண்டிருந்தான் இராமன். இல்லையில்லை அவன் கண்கள் மட்டும்தான் பார்த்துக் கொண்டிருந்தன. மனதின் அக்னி அலைகள் அவன் மேனியில் வெளிப்பட்டுக் கொண்டிருந்தன.நெற்றியிலிருந்து கன்னத்தில் வழிந்து கொண்டிருந்த வியர்வை நதியைக் கூட அவன் உணரவில்லை.அவன் கவனமெல்லாம் சீதை இச்செய்தியறிந்த பின் என்ன செய்வாள்? இது நாட்டிற்கு நேர்ந்த அவமானமா? தன் குடும்பத்திற்கா? தனக்கா? அந்த வதந்தி பரப்பியவர்களுக்கு என்ன தைரியம்? தீயின் நாக்குகள் நிரூபித்ததே அது போதாதா? தந்தை போலின்றி சீதைதான் வாழ்வின் முதலும் முடிவும் என வாழ்ந்து வரும் எனக்கு இத்தனை சோதனைகளா?

             முன்பு கைகேயி,இடையில் இராவணன்,இப்போது வதந்தீ......போதுமப்பா....போதும். எத்தனை இராவணன்களை வேண்டுமானாலும் வென்றழி்க்கத் தயாராகி தினவெடுக்கும் தோள்கள் இந்த வதந்தியால் துவண்டு போய்க் கிடக்கின்றனவே?  சீதையுடன் நான் வாழ விரும்பும் வாழ்வு பாடாய்ப்படுத்துகிறதே. பதினான்கு ஆண்டுகளுக்குப் பின்னர் அந்த இனிய வாழ்வு இதோ ஓராண்டு கூட நிறைவேறவில்லை.....குழந்தைப் பிறப்பிற்காகக் காத்திருக்கைகையில் இது என்ன பேரிடி..... நெடுநேரம் நின்றிருந்ததால் அவன் கால்கள் மரத்துப் போய்விட்டன.

              பதினான்கு ஆண்டுகள்.காட்டிலும் மேட்டிலும் மலைகளிலும் கரடுமுரடான பாதைகளிலும் நடந்து நடந்து சலித்துப் போயிருந்தன அவன் பாதங்கள்.இதோ இப்போதுதான் ஒன்பது மாதங்களாகப் பட்டு விரிப்பில் பழகி சுகத்தை அனுபவித்துக் கொண்டிருந்தன. இராமனின் கட்டைச் செருப்புகள் பரதனிடமே தங்கிவிட்டன. அதை அவன் வணங்கிக் கொண்டிருந்ததால், இராமனுக்காகச் சிறப்பாகச் செய்யப்பட்டப் பட்டினாலும், பஞ்சினாலும் செய்யப்பட்டப் புதிய செருப்பினை அணிந்து கொண்டிருந்தான்.

           காட்டில் பழங்கள் பறிக்கவும், தேனெடுக்கவும் இலக்குவன் மரத்தில் ஏறி இறங்கும் வரையிலும், கால் கடுக்க பல மணிநேரம் நின்றிருந்த போதெல்லாம் மரத்துப் போகாத கால்கள் இப்போதெல்லாம் சில மணித்துளிகளிலேயே மரத்துப் போய்விடுவதன் காரணம் என்ன?பதினான்கு ஆண்டுகள். நீண்ட நாள்கள்....நெடிய ஆண்டுகள்....சீதைக்காகப் பட்ட துயரங்கள்......இராமன்  நினைவின் தனலில்  பெருமூச்சு விட்டான். மெல்ல நகர்ந்து கட்டிலில் அமர்ந்தான்.பஞ்சு மெத்தை உள் வாங்கிக்கொண்டது. தரையிலும் கற்பாறைகளிலும் அமர்ந்த காட்டு வாழ்க்கை ஏனோ நினைவிற்கு வந்தது.

             யாரோடும் பகை வேண்டாம்.போரொடுங்கும்,புகழொடுங்காது என்றானே வசிட்டன்.தீராப் பழியல்லவோ வந்தது.

         ஓசையெழுப்பி சீதையை அழைத்து வரச் சொன்னான். பேறுகால பூரி்ப்பில் இன்றோ நாளையோ  என புது வரவிற்காகக் காத்திருந்த சீதை,சரிந்த வயிறோடு நடந்து வந்தாள். நாடறிந்த செய்தி நாயகி அறியவில்லை.அரண்மனை அறிந்த செய்தி அவளின்னும் அறியவில்லை.யாருக்குத் தைரியம் இருக்கிறது? செம்முதுபெண்டிர் தம்முகமே காட்டிக் கொடுத்துவிடுமோ எனப் பயந்து தொலைவில் நின்று விட்டனர்.இராமனின் அழைப்பைக்கேட்டளவில், அகமகிழ்ந்து சீதை யாரையும் உதவிக்கு அழைக்காமல் தானே இராமனின் அறை நோக்கி மெல்லச் சென்றாள். இராமனின் அறை தடாகத்தைப் பார்த்தவாறுஅமைந்திருந்ததால்,அருகில் செல்லச் செல்ல குளிர்ச்சியான இதமான காற்று அவளைத் தழுவிச் சென்றது.

                பரதன் பார்த்துப் பார்த்து அந்த அறையை வடிவமைத்திருந்தான். பேறுகாலத் தேவைக்காக தற்காலிகமாக சீதை அந்த அறையிலிருந்து வேறு அறைக்கு மாற்றப்பட்டிருந்ததால் .இராமனே சீதையைப் பார்க்க அங்கு சென்றுவிடுவான்.மீண்டும் இராமனின் அறையில் இராமனைச் சந்திக்கும் நாளை ஆவலோடு அவள் எதிர்பாபார்த்திருக்க இடையி்ல் இப்படி ஒரு வாய்ப்பு.

           பதினான்கு ஆண்டுகள் கழித்து அவர்களின் காதலுக்குப் பரிசாக பிறக்க இருக்கும் குழந்தை.சீதையின் மேலுள்ள காதலினால் அவளைத் தனிமையில் சந்திக்க வரச் சொல்லியிருக்கிறான்.சீதை பெருமிதமும் காதலும் மேலோங்க இராமனின் முகம் நோக்கினாள்.இராமனின் கனிந்த மொழிகளைக் கேட்க காதுகள் கூர்மையாகின.

           நெடுநேர அமைதி...இராமன் வாயே திறக்கவில்லை.இராமனின் கடுமையான முகம் கண்டு திடுக்கிட்டாள்.கசந்த பார்வை.அலட்சிய முகம். இது இராமனா?இராமன்தானா? நா உலர்ந்து போனது.ஏதாவது நடக்கக்கூடாதது நடந்துவிட்டதா, தன் தந்தை சனகனுக்கு ஏதாவது நடந்திருக்குமா? அவளால் அதற்கு மேல் சிந்திக்க முடியவில்லை. இராமன் பீடிகையின்றி வறண்ட குரலி்ல் மெல்ல இடியை அவள் காதில் இறக்கினான். வண்ணானின் நாக்கு அவள் மீது சேற்றை வாரி இறைத்திருப்பதை முகத்தில் சலனமின்றி சொன்னான். குரலில் ஏகத்திற்கும் வெறுப்பு. சீதை திகைத்தாள். வெறுப்பு வதந்தியின் மீதா? தன் மீதா ? காட்டில் எந்நிலையிலும் அவனிடமிருந்து வெளிப்படாத வெறுப்பு இப்போது முதன்முதலாய்...இராமனின் அகன்ற தோள்களையேப் பார்த்துக் கொண்டிருந்தாள். அவன் படுக்கையில் உட்கார்ந்திருந்ததும் நெடுநேரம் தான் நின்று கொண்டிருந்ததையும் கூட அவள் உணரவில்லை.

“அதுதான் தீயின் நாக்கு நிரூபித்துவிட்டதே?அதை மக்கள் அறியாரா? சீதை சிறுகுழந்தை போல் கேட்டாள்.

 “அறியாதார் யார்? எனினும் ...” இராமன் தொடரமுடியாமல் தவித்தான்.

“எனினும்.........” சீதை தொடர்ந்தாள்.

“சமூகநியதிக்கு மன்னன் கட்டுப்பட்டவன்” இராமன் ஒருவழியாய் சொல்ல வந்ததை சொல்லிவிட்டான்.


 “இன்னொருமுறை இப்போது இங்கு அக்னிப்பிரவேசம் செய்யவா?”சீதை கேட்டாள்.

“ தேவையில்லை மீண்டும் காட்டிற்குப் போகவேண்டியதுதான்”.

              சீதை சிரித்து விட்டாள். இதற்காகவா இத்தனை துயரம் நாட்டு வாழ்வைவிட காட்டு வாழ்வே மேல் என்ற முடிவிற்கு இராமன் வந்துவிட்டானா? அதைச் சொல்லவா இத்தனைப் பீடிகை?தன் காதல் மனைவியின் மேல் களங்கம் சுமத்தும் இந்த நாட்டு வாழ்வே வேண்டாம் என்ற முடிவிற்கு வந்ததைச் சொல்வதற்கா இத்தனை தயக்கம்?அதற்காகவா வருத்தம்? நான் எந்த நிலையில் இருந்தாலென்ன?காடு எனக்குப் புதியதா?பதினான்கு ஆண்டுகாலப் பழக்கம். மீண்டும் இயற்கையின் மடியில் வாழ ஒரு சந்தர்ப்பம்.

            “என்னை இந்த நிலையில் எப்படி அழைத்துச் செல்வது என்றா கவலைப் படுகிறீ்ர்கள்? நீங்கள் அருகிருக்கையில் எனக்கு எல்லாம் சுகமாகவே அமையும்.மனம் தளரவேண்டாம். இம்முறை இலட்சுமணன் வேண்டாம். பாவம் ஊர்மிளை. நாம் மட்டும் சில வயதான சேடிப் பெண்டிரை அழைத்துக் கொண்டு செல்வோம்.நான் ஏற்பாடுகளை செய்கிறேன்.”சீதை மேல்மூச்சு கீழ் மூச்சு வாங்கச் சொல்லி முடித்தாள்.

              இராமன் திடுக்கிட்டுப் போனான். “நானா?நானா மீண்டும் காட்டிற்கு? நான் இல்லை. நீ மட்டும்தான் போகிறாய். என்றான்.

                சீதை நம்பமுடியாமல், “நான் மட்டுமா ஏன் நீங்கள்...” என்றாள்.இராமன் விளையாடுகிறானா?

              “நான் நாட்டை ஆள வேண்டும். இது என் தந்தையின் விருப்பம். இராமராஜ்ஜியம் காலத்தின் தேவை”இராமன் அழுத்தமாகப் பதிலிருத்தான். அவன் குரலில் விளையாட்டில்லை. அவன் எங்கோ பார்த்தபடி பதில் சொன்னதை சீதை கவனித்துக் கொண்டுதான் இருந்தாள்.

          “இதுவரை பரதன் இராமராஜ்ஜியத்தைத்தானே நடத்தினார். எக்குறையுமில்லையே” சீதை திருப்பிப் கேட்டாள்.

             “எனினும் அது என் பாதுகைகளின் ஆட்சி. என் ஆட்சியில்லை. என் நேரிடையான ஆட்சி போல வருமா?”இராமன் தடுமாறினான்.

            “நாட்டிற்கு ஆயிரம் இராமர் கிடைப்பார்கள். எனக்கு நீங்கள் மட்டும் தானே? ” சீதையின் கேள்விக்கு இராமன் பதில் தரவில்லை. 

           “ நீங்கள் காட்டிற்குச் சென்றபோது நானும் வந்தேனே” சீதை கனை தொடுத்தாள்.

            “அது மனைவியின் கடமை.நீயாகத்தான் வந்தாய். நான் அழைக்கவில்லை”. அவன் பதிலைக் கேட்டு அதிர்ந்தாள். திருப்பிக் கேட்டாள்.“கணவனுக்குக் கடமையில்லையா?.

          “கணவனா அரசனா என்ற சிக்கல் வரும்பொழுது நாட்டைக் காக்க அரசனாக இருப்பதே முதல் கடமை. நான் நாடாள்வது தந்தையின் விருப்பம். அதை நிறைவேற்றுவது மகனின் கடமை.” இராமன் பதில் தந்தான்.         

          

           “உங்கள் தந்தையின் கனவு நீங்கள் உங்கள் மனைவியை காட்டிற்கு அனுப்பிவிட்டு நாடாளவேண்டும் என்பதா? மனைவியின் வாக்கைக் காப்பாற்ற பெற்ற மகனையே காட்டிற்கு அனுப்பியவர் உங்கள் தந்தை. அறுபதினாயிரம் மனைவியர் இருந்தும் அவர் நல்ல கணவராக நடந்து கொண்டார்.ஒருவனுக்கு ஒருத்தி என்ற கோட்பாட்டினை உலகிற்கு உணர்த்துவேன் என்று வாழும் தாங்கள் அந்த மனைவிக்காக நாட்டைத் துறந்து காட்டிற்கு வர இயலாதா?”

             இராமனின் கனத்த மௌனம் சீதைக்கு எல்லாவற்றையும் புரிய வைத்துவிட்டது.

           “உங்களுக்காக எல்லாம் துறந்து வந்தேன். ஆனால் எனக்காக...வேண்டாம். நம் குழந்தைக்காக......சரி.நீங்கள் எதையும் துறக்க வேண்டாம். நான் வருகிறேன்”சீதை திரும்பிப் பார்க்காமல் விரைந்து நடந்தாள்.மரவுரியைத் தேடி அணிந்தாள். யாரிடமும் எதுவும் சொல்லாமல் கம்பீரம் சிறிதும் குறையாமல் தலைநிமிர்ந்து நடந்தாள். ஆனால் அவள் வயிறு இன்னும் இறங்கியிருந்தது.






             வாசலில் தயாராக தேர். தேரோட்டியாக இலட்சுமணன். எல்லாம் இராமனின் முன்னேற்பாடுகள். ஒருமுறை திரும்பிப் பார்த்தாள். இராமன் நிற்கிறானா? அங்கு யாருமில்லை. இது இராமனா? தீக்குளிக்கச் சொன்னது ஊருக்காகத்தானா? தன்னைக் காப்பாற்றியதுகூட அவனின் மானத்தைக் காப்பாற்றிக் கொள்வதற்காகத்தானா? வதந்திகள் கூட நன்மை செய்யுமா?  இராமனைப் புரிய வைத்து விட்டது.

               இலட்சுமணன் கேட்டான்.“ தந்தை ஜனகனிடா? இல்லை காட்டிற்கா? எங்கு தேரைச் செலுத்த?“அவளின் விருப்பம் முதன்முதலாய் கேட்கப் பட்டது.

                 “என் தந்தையும் ஒரு மன்னர்தானே?.இராமனின்றி தனித்து இப்படி நான் வருவதை விரும்பமாட்டார்.மனனர்க்கெல்லாம் மானம்தான் பெரிது. காட்டிற்கே தேரைச்செலுத்து“.சீதை  சிரித்தாள்.


              சீதை இறங்கியதும் இலட்சுமணன்,“ தாயே மன்னிக்க வேண்டும். உங்களுக்குப் பணி புரிய ஆசை.ஆனால்....”தயங்கினான். வார்த்தை வரவில்லை.

            “தேவையில்லை இலட்சுமணா.பதினான்கு ஆண்டுகள் நீ உறங்காமல்  இராமனுக்குப் பணிவிடை செய்தாய்.உன் மனைவியைப் பிரிந்து நீ ஆற்றிய தொண்டு  மகத்தானது. ஊர்மிளைக்காகவும் உனக்காகவும்  இராமன் சிறிதாவது மனங்கசிந்தானா? ஊர்மிளைக்காக நீ உள் அழுது வெளியே வீரம் காட்டினாயே. போதும். அக்னியை வலம் வந்து  இம்மையிலும் மறுமையிலும் உன்னைப்

 பிரிய மாட்டேன் என என் கைத்தலம் பற்றிய இராமன்தான் என்னைத் தனித்துக் காட்டிற்கு இப்போது அனுப்பியுள்ளான். நீ உடனே நாடு செல். ஊர்மிளை உனக்காகக் காத்திருப்பாள். சீதை காட்டை நோக்கி நடந்தாள்.


No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்களைப் பதிவு செய்யலாமே?