நீரின்றி அமையாது உலகு.

முனைவர் ஜ.பிரேமலதா,தமிழ் இணைப்பேராசிரியர், அரசு கலைக் கல்லூரி, சேலம் 636 007 DR.J.PREMALATHA,ASSOCIATE PROFESSOR IN TAMIL,GOVT ARTS COLLEGE,SALEM -636 007.

Saturday, 22 August 2015

புத்தக வாசிப்பு



புத்தக வாசிப்பு



 நாளுக்கு நாள் புத்தக வாசிப்பு குறைந்த வண்ணம் உள்ளது. டீவீ வந்துவிட்டது மொபைலில் வாட்ஸப் வந்துவிட்டது. கிண்டில் வந்து விட்டது என்று பல காரணங்கள் கூறப்படுகின்றன.அதற்குக் காரணங்கள் காண்பதோ, இப்படி ஆகிவிட்டதே என்று குறைகள் கூறி ஆதங்கப் படுவதோ நல்ல விளைவுகளை ஏற்படுத்தப்போவதில்லை. 

  சிறுவயதிலிருந்தே இருந்தே அந்த வழக்கத்தைத தொடங்க வேண்டும். என்ன செய்து எப்படி புத்தக வாசிப்பை வளர்க்கலாம் என்று தாங்கள் மிக சுருக்கமாக ஒரு சில விடைகளில் வழிகாட்டல் தாருங்கள். தாங்கள் வாராவாரமோ அன்றாடமோ வாசிக்கும் நேரமும் குறித்து அனுப்பினால் பிறரை ஊக்கப்படுத்த உதவும்.தங்கள் அரிய நேரத்தில் தரும் இத்தொல்லைக்கு வருந்துகிறேன். ஏதாவது யாராவது செய்யா விட்டால் புத்தகப்படிப்பே அனாவசியம் என்ற போக்கு வளரும். அந்த போக்கு புத்தகம் வாசிக்கிற நேரத்தை தீய மற்றும் உதவாத வீண் காரியங்களில் விரயம் செய்யும் வழக்கத்தை தடுக்கும்.

ஒரு கனவு .......

.



ஒரு கனவு


இன்று அதிகாலையில் ஒரு கனவு. பெரும்பாலும் கனவுகள் நினைவிற்கு வருவதில்லை என்பதும் கனவு பலன்களில் நம்பிக்கையில்லை என்பதும் கனவுகளைப் பற்றி நான் எப்போதும் பேசாததற்குக் காரணங்கள். கனவுகளைக் கண்கள் விரிய விரிய விவரிப்பவர்களை நான் வியப்புடனும், சில சமயம் அசட்டையுடனும் கவனித்திருக்கிறேன். ஆனால் என்னை இன்று முழுதும் ஆட்கொண்ட கனவை சொல்லியேயாக வேண்டும். கண்கள் விரிய, வாய் கிழிய கனவுகளைச் சொல்வதில் எப்போதும் விருப்பமிருந்ததில்லை என்பதால் எழுதுகிறேன்.

ஒரு பலதளங்களுள்ள வீடு. ஒரு குடும்பத்தினருக்குச் சொந்தமானது. வீட்டுத் தலைவன் இல்லாதபோது ஒரு பேய் (ஆமாம் பேய்தான். சிரிக்காதீர்கள்) அந்த வீட்டினரை பல வகைகளில் பயமுறுத்வும், பற்றிக் கொள்ளவும் முயற்சி செய்கிறது. சுவிட்ச் போர்டிலும், டிவியிலும், மிக்ஸி ஜாரின் வழியாகவும், செல்போனிலும் மேசை இழுப்பறை வழியாகவும், மாடிப்படியின் பக்கவாட்டிலிருந்தும் பயமுறுத்தப் பார்க்கிறது

               வீட்டுத் தலைவன் இல்லாதபோதுதான் இந்தச் சேட்டைகளெல்லாம். எனவே, மற்றவர்கள் சொல்வதை வீட்டுத்தலைவன் நம்புவதில்லை. அவன் பெரிதாக எடுத்துக் கொள்ளாதது பேய்க்குக் கொண்டாட்டமாகி விட்டது. தன் விருப்பத்திற்கு விளையாடுகிறது. வீட்டில் அடித்தளத்தில் ஒருமுறை தலைவன் ஓய்வாக அமர்ந்திருக்கையில் அவனையும் தான் பயமுறுத்திப் பார்க்கலாம் எனப் படிக்கும் பேப்பரிலிருந்து தன் தலையை நீட்டுகிறது. தலைவன் முதலில் மிரள்கிறான். பின் சுதாரித்துக் கொண்டு, பேப்பரை கீழே எறிகிறான்.

 
 பத்திரிக்கை உடனே பேப்பர் மனிதனைப் போல உருமாறுகிறது. அவனை நோக்கி காற்றில் அலைந்தபடி வருகிறது. உடனே வீட்டுத்தலைவன் நீண்ட மண்வெட்டியால் அதன் தலையில் போடுகிறான் (மண்வெட்டி எப்படி அவன் கையில் வந்ததென்று கேட்கக்கூடாது. இது கனவு) உடனே அவனை அச்சுறுத்த வேறொரு முகம் எடுக்கிறது. திகைத்த அவன் சுதாரித்துக் கொண்டு மீண்டும் ஒரு போடு போடுகிறான். உடனே அவனின் நண்பனின் முகத்திற்கு மாறுகிறது. கையை ஓங்கியவன் திகைக்கிறான். அந்த இடைவெளியைப் பயன்படுத்திக் கொண்டு பேப்பர் பேய் விரைவாக அவனைப் பற்ற வருகிறது. நண்பன் முகமாய் இருந்தாலும் ஒரே போடு. அவன் காதலியின் முகமாய் மாறுகிறது. மீண்டும் ஒரே போடு. இப்படித் தாய் முகம், தந்தை முகம் என அவனுக்குப் பிடித்தவர் முகமாக முதலில் மாறி அடி வாங்கிய பேய், பின்பு தன் கோர முகத்தைக் காட்ட ஆரம்பிக்கிறது. இப்படிப் பல முகங்களில் அடி வாங்கிய படியே அது இருக்கத் தலைவன் கோடாரியால் விடாமல் போட்டபடியே இருக்கிறான். 


ஒரு கட்டத்தில் அதன் மீது பரிதாபம் வர நிறுத்துகிறான். உடனே சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொள்ள நினைத்த பேய் விசுவரூபம் எடுக்கிறது. தலைவன் இம்முறையும் சிறிதும் அசரவில்லை. தொடர்ந்து அடித்து அதனை இல்லாமலாக்கிவிட முடிவெடுத்து அடித்தபடியே இருக்கிறான். இத்தோடு கனவு கலைந்துவிட்டது. எனக்கு ஒரே குழப்பம். இது கனவா? இல்லை எப்போதோ பார்த்த ஏதாவது ஒரு படமா? பேய் படங்கள் பார்த்து பல வருடங்களாகிவிட்டது. பேய் பார்க்கும்போதெல்லாம் எப்படி மேக்கப் போட்டிருக்கான், எப்படியெல்லாம் கிராபிக்ஸ் வளர்ந்திருக்கிறது என்ற கோணத்திலேயே பார்ப்பதால் எந்தப் பேய் படமும் பயமுறுத்தியதில்லை.

 

உடனே மறந்துபோய் விடும். ஆனால் இந்தக் கனவு இதில் ஏதோ ஆழ்மனது கூறும் செய்தி ஒளிந்திருக்கிறது என்ற எண்ணத்தை ஏற்படுத்தியபடியே இருந்தது. பின் நானே ஒரு முடிவிற்கும் பின் தெளிவிற்கும் வந்தேன். பல அடுக்கு மாளிகை நம் உடல். குடும்ப உறுப்பினர்கள் நம் உடல் உறுப்புகள். தலைவன் தான் அறிவு. கீழே உள்ள அடுக்கிலிருந்து தான் மேலே பல தளங்களுக்கும் பேய் சென்று பயமுறுத்தியிருக்கிறது. நம் மூலாதாரம் தான் ஆசைகளின் பிறப்பிடம். அதுதான் கீழ் அடுக்கு. அட அந்தப் பேய் வேறு யாருமில்லை. நம் ஆசைதான். அது குடும்ப
உறுப்பினர்களைப் பற்றப் பார்த்திருக்கிறது. 

 அதாவது மெய், வாய், கண், மூக்கு, காது, நாக்கு என்ற உறுப்பினர்களைப் பற்றி விட முயற்சித்திருக்கிறது. அறிவு என்னும் தலைவனைக் கண்டு அதற்குப் பயம் மற்ற உறுப்புகள் அறிவிடம் பேய் பற்றவிருப்பதைக் கூறி எச்சரித்திருக்கின்றன. ஆனால் தலைவன் அதை அலட்சியம் செய்து விட்டான். இறுதியில் அவனையே பற்ற பார்த்திருக்கிறது. இறுதியாக அவன் சுதாரித்துக் கொண்டான் என்றாலும் பேய், அவன் காதலியாக, நண்பனாக, உறவினராகவெல்லாம் பல வடிவெடுத்து அவனை முடக்கிப் போட முயன்றிருக்கிறது. ஆனால் தலைவன் எச்சரிக்கையாக இருந்ததால் திரும்பத் தலையெடுக்க விடாமல் தொடர்ந்து பேயின் தலையை அடித்துக் கொண்டேயிருநதிருக்கிறான். 

எனவே ஆழ்மனது ஆசையில் விழிப்புணர்வோடு இரு என்பதை ஒரு பேய்க் கனவின் வழி என்னை எச்சரித்திருக்கிறது என நான் புரிந்து கொண்டேன். நான் என் ஆசைகளைக் குறித்து (அது காதலோ, காமமோ, இச்சையோ, இம்சையோ, கைக்கு வளையலோ, காதுக்கு இசையோ, கண்ணுக்குத் தொலைக்காட்சியோ, காலுக்கு உயர்ந்த காலணியோ) இப்போதிருந்தே எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும் ஆசைகள் தோன்றும்போதே அதைத் தலையெடுக்க விடாமல் விழிப்புணர்வு என்னும் சம்மட்டியால் அதன் தலையில் ஒரு போடுபோடுவதென்று தீர்மானித்துக் கொண்டேன்.

எதிர்காலத்தில் யாரறிவார்? யார் யார் தலையில் சம்மட்டியால் போடுவாரென்று? உங்களுக்கு இப்படி ஏதாவது கனவு தோன்றி அதற்கு நீங்களே இப்படி விளக்கம் கொடுத்துக் கொண்டதுண்டா?

Thursday, 20 August 2015

நினைவு நாரில் கனவுப் பூக்கள்


நினைவு நாரில் கனவுப் பூக்கள் (சந்தக் கவிதைகள்)

 கவிஞர் சந்தர் சுப்ரமணியன் . தாரிணி பதிப்பக வெளியீடு

மிக அற்புதமான சந்தக் கவிதைகள் படிக்கும்போதே இசை இதயத்திற்குள் ஊற்றெடுக்கும், சொல்லடுக்கு மனதடுக்கை தாவி மேலறும் ஜாலவித்தை இக்கவிதை. இன்றைக்கு இசையோடு கூடிய கவிதை இல்லை என்பாருக்குத் தமிழ் போல் தழைத்து நிமிர்ந்திடுவேன் என்று நிமிர்ந்து நிற்குது சந்தர் கவிதை. இது சிந்துக்கவிதையா, தேன் சிந்தும் கவிதையா? புதுக்கவிதை போல் சந்தக்கவிதையிலும் பாடுபொருள் மாற்றம். இஃது ஒரு புரட்சிக்கான தோற்றம். மரபுப்பா புதிய புதிய புத்தாடை கட்டி உலவ வந்தால் யார்தான் பார்க்க மறுப்பார்? மன முதிர்ச்சியும் கருணையும் நிறைந்த கவிஞனின் பூங்காவனம் இது. மரபின் செழுமையை உள்வாங்கிக் கொண்ட எளிய சொற்களைக் கொண்டு புதுப்புதுப் பொருள்களால் ஆன இசைப் பாடல்கள் இவை. சொற்சிக்கனம், அடர்த்தி, செறிவு நிறைந்த உயிர்க்கவிதைகள் இவை. 

Sunday, 16 August 2015

சுயபுராணம்,

சுயபுராணம், 


                         பெற்றோர் மற்றும் விருதுடன்

விருது வழங்கிய நண்பர் குழுவுடன்

எது சுதந்திரம்?

எது சுதந்திரம்?


பிறரது உரிமையில் தலையிடுவதா சுதந்திரம்?
பிறருக்கும் உரிமை கொடுப்பதே சுதந்திரம்.



விருப்பப்படி எல்லாம் வாழ்வதா சுதந்திரம்?
பிறர் விரும்பும்படி வாழ்வதே சுதந்திரம்.


பிறரை அடிமை கொள்வதா சுதந்திரம்?

பிறருக்கும் சுதந்திரம் கொடுப்பதே சுதந்திரம்.


வாகனத்தில் வேகமாகச் செல்வதா சுதந்திரம்?
 
கட்டுப்பாட்டுடன் பாதுகாப்பாகச் செல்வதே சுதந்திரம்.
 

கண்ட இடத்தில் எச்சில் உமிழ்வதா சுதந்திரம்?
கண்கள் இரசிக்கும்படி சூழல்காப்பே சுதந்திரம்.



 
ஆடை குறைப்பா பெண்களின் சுதந்திரம்?
அறிவும் ஆற்றலுமே பெண்களின் சுதந்திரம்.


 
கடல்கடந்த   முந்தைத் தமிழன் அறிவானா சுதந்திரம்?
வணிகப்பொருட்டு  நாட்டை அபகரிக்காததே சுதந்திரம்.


 
பெற்றோரை முதியோரில்லத்தில் தள்ளுவதா சுதந்திரம்?
பொற்றாமரைப்போல் அவரைக் காப்பதே சுதந்திரம்.




யார்எடுத்துக்  கொள்ளலாம் எங்கும் சுதந்திரம்?
கடமை பொறுப்புணர்ந்தோரை தேடிவரும் சுதந்திரம்.

Monday, 10 August 2015

சுயபுராணம்



சுயபுராணம்


விருது பட்டயத்துடன்...


குடும்ப உறவுகளுடன்.......

சிற்றிலக்கிய ஆய்வுகள் -1



சிற்றிலக்கிய ஆய்வுகள்
முன்னுரை
96 வகை சிற்றிலக்கியங்கள் உள்ளதாகப் பாட்டியல் நூல்கள் கூறுகின்றன. ஆனால், இந்த எண்ணிக்கைக்கு மேலும் சிற்றிலக்கிய நூல்கள் உள்ளன. அப்பட்டியலையும் அவை தொடர்பாக வந்துள்ள ஆய்வுகளையும் இனி வர வேண்டிய ஆய்வுகளையும் குறித்து இக்கட்டுரை  ஆராய்கிறது.


1.சாதகம் 2. பிள்ளைக்கவி 3. பரணி 4. கலம்பகம் 5. அகப்பொருட்கோவை6. ஐந்திணைச்செய்யுள்      7. வருக்கக் கோவை 8. மும்மணிக்கோவை9. அங்கமாலை 10. அட்டமங்கலம் 11. அனுராகமாலை 12. இரட்டைமணிமாலை13. இணைமணி மாலை 14. நவமணிமாலை15. நான்மணிமாலை 16. நாமமாலை 17. பல்சந்தமாலை18. பன்மணிமாலை19. மணிமாலை20. புகழ்ச்சி மாலை21. பெரு மகிழ்ச்சிமாலை                        22. வருக்கமாலை23. மெய்க்கீர்த்திமாலை24. காப்புமாலை25. வேனின்மாலை26. வசந்தமாலை    27. தாரகைமாலை28. உற்பவமாலை29. தானைமாலை             30. மும்மணிமாலை 31. தண்டகமாலை      32. வீரவெட்சிமாலை33.வெற்றிக்கரந்தை மஞ்சரி34. போர்க்கெழுவஞ்சி35. வரலாற்று வஞ்சி    36. செருக்களவஞ்சி37. காஞ்சிமாலை38. நொச்சிமாலை39. உழிஞைமாலை40. தும்பைமாலை41. வாகைமாலை 42. ஆதோரணமஞ்சரி 43. எண்செய்யுள் 44. தொகைநிலைச் செய்யுள்
 45. இயலியலந்தாதி        46. பதிற்றந்தாதி 47. நூற்றந்தாதி48. உலா 49. உலாமடல்50. வளமடல் 51. ஒருபாவொருபஃது  52. இருபாவிருபஃது 53. ஆற்றுப்படை54. கண்படைநிலை 55. துயிலெடை நிலை56. பெயரின்னிசை    57. ஊரின்னிசை58. பெயர்நேரிசை 59. ஊர்நேரிசை 60. ஊர்வெண்பா 61. விளக்குநிலை 62. புறநிலை   63. கடைநிலை 64. கையறுநிலை 65. தசாங்கப்பத்து 66. தசாங்கத்தியல் 67. அரசன்விருத்தம் 68. நயனப்பத்து  69. பயோதரப் பத்து70. பாதாதிகேசம் 71. கேசாதிபாதம் 72. அலங்காரபஞ்சகம் 73. கைக்கிளை   74. மங்கலவெள்ளை75. தூது76. நாற்பது 77. குழமகன். 78. தாண்டகம் 79. பதிகம் 80. சதகம் 81. செவியறிவுறூஉ82. வாயுறைவாழ்த்து 83. புறநிலைவாழ்த்து84. பவனிக்காதல் 85. குறத்திப்பாட்டு     86. உழத்திப்பாட்டு87. ஊசல் 88. எழுகூற்றிருக்கை 89. கடிகைவெண்பா 90. சின்னப்பூ91. விருத்தவிலக்கணம்                      92. முதுகாஞ்சி 93. இயன்மொழி வாழ்த்து       94. பெருமங்கலம் 95. பெருங்காப்பியம் 96. சிறுகாப்பியம்

சிற்றிலக்கிய வகைகளின் இலக்கணத்தைப் பன்னிருபாட்டியல், வெண்பாப் பாட்டியல், நவநீதப்பாட்டியல், பிரபந்தமரபியல், சிதம்பரப் பாட்டியல், இலக்கண விளக்கம், தொன்னூல் விளக்கம், முத்துவீரியம், பிரபந்த தீபிகை, சுவாமிநாதம், சதுரகராதி, அபிதான சிந்தாமணி முதலியன இயம்புகின்றன என்று தமிழில் சிற்றிலக்கிய வரலாறு எனும் நூலை எழுதிய முனைவர் தா.ஈசுவரபிள்ளை குறிப்பிடுகிறார். சிற்றிலக்கியங்களின் எண்ணிக்கை 160 என்று `இலக்கிய வகையும் வடிவம்என்கிற நூலில் ச.வே.சுப்பிரமணியன் குறிப்பிடுகிறார்.