நீரின்றி அமையாது உலகு.

முனைவர் ஜ.பிரேமலதா,தமிழ் இணைப்பேராசிரியர், அரசு கலைக் கல்லூரி, சேலம் 636 007 DR.J.PREMALATHA,ASSOCIATE PROFESSOR IN TAMIL,GOVT ARTS COLLEGE,SALEM -636 007.

Thursday, 20 August 2015

நினைவு நாரில் கனவுப் பூக்கள்


நினைவு நாரில் கனவுப் பூக்கள் (சந்தக் கவிதைகள்)

 கவிஞர் சந்தர் சுப்ரமணியன் . தாரிணி பதிப்பக வெளியீடு

மிக அற்புதமான சந்தக் கவிதைகள் படிக்கும்போதே இசை இதயத்திற்குள் ஊற்றெடுக்கும், சொல்லடுக்கு மனதடுக்கை தாவி மேலறும் ஜாலவித்தை இக்கவிதை. இன்றைக்கு இசையோடு கூடிய கவிதை இல்லை என்பாருக்குத் தமிழ் போல் தழைத்து நிமிர்ந்திடுவேன் என்று நிமிர்ந்து நிற்குது சந்தர் கவிதை. இது சிந்துக்கவிதையா, தேன் சிந்தும் கவிதையா? புதுக்கவிதை போல் சந்தக்கவிதையிலும் பாடுபொருள் மாற்றம். இஃது ஒரு புரட்சிக்கான தோற்றம். மரபுப்பா புதிய புதிய புத்தாடை கட்டி உலவ வந்தால் யார்தான் பார்க்க மறுப்பார்? மன முதிர்ச்சியும் கருணையும் நிறைந்த கவிஞனின் பூங்காவனம் இது. மரபின் செழுமையை உள்வாங்கிக் கொண்ட எளிய சொற்களைக் கொண்டு புதுப்புதுப் பொருள்களால் ஆன இசைப் பாடல்கள் இவை. சொற்சிக்கனம், அடர்த்தி, செறிவு நிறைந்த உயிர்க்கவிதைகள் இவை. 
 பாடுபொருள் இசைந்திருப்பதே இக்கவிதைகளின் உயர்வு. உணர்வு நிலைப்பட்ட இக்கவிதைகள், நுட்பமாக வாழ்க்கையைச் சொல்லிச் செல்கிறது. மண்ணும் மரபும் மனசும் ஒன்றிணைந்த நவ கவிதைகள் புதுபாடுபொருள் பாடுவதற்குச் சிந்து வடிவம் கவிஞருக்கு கைகொடுத்து உதவியிருக்கிறது. இதுதான் தமிழ்க் கவிதையின் சிறப்பு. 
 சொல்வதைச் சரியாகச் சொல்லியிருக்கிறார். உண்மையாகச் சொல்லியிருக்கிறார். மிகையில்லாது சொல்லியிருக்கிறார்.
இக்கவிதைகள் நித வாழ்பவை, சம கால நெருக்கடிகளை நம்மைச் சுற்றியுள்ள உலகின் போக்கை எடுத்துப் பேசுகின்றன. வாழ்வு சார்ந்த நிகழ்ச்சிகளை எளிய சொற்களால் பேசுகின்றன. சமூக மாற்றங்களைப் பதிவு செய்துள்ளன.
குழந்தைத் தொழிலாளர் என்னும் ஒரு கவிதையின் சிறப்பு ஒரு பூவிற்கும் பெண்ணின் நிலையைத் திரும்பத் திரும்பக் கூறுகிறது. அப்படிக் கூறிய பின்னும் சொல்லித் தீராத விஷயங்கள் கவிதைக்குள்ளிலிருந்து வெளியேறி வாசகரின் இதயத்தைப் பற்றுகிறது.
மல்லி விற்க என்னை மட்டும்
மாட்டிவிட்ட பாவி யார்?
. . .
முல்லைமல்லி கூவுகின்ற
முறையெனக்கு மாத்திரம்
. . .
பாதை தன்னில் பூவிரிக்கும்
பாடெனதாய் ஆனதோ?
. . .
நினைவு நாளில் கனவு கட்டும்
நிலைமை என்று மாறுமோ?
. . .
பூத்தொடுக்கும் என் கரத்தில்
புண்படிந்து போகுமோ?
சுhலையோர பூவிற்கும் பிஞ்சுக்குழந்தைக் காணுந்தோறும் இக்கவிதை நினைவிற்கு வரும்.
ஒருபோன்சாய் மரத்தின் புலம்பல் என்ற தலைப்பிலான கவிதை ஓர் உருவகக் கவிதை. இதைப் படிப்பவர் பெண்ணியம், தலித்தியம், சூழலியம், அரவாணியம் எனப் பல பொருண்மைக்குள் வைத்துக் காணும் வாய்ப்புடையது.
சொல்லாய்ச் சுருங்கிய காவியம் நான் - நீர்த்
துளியாய் ஒடுங்கிய நீள் கடல் நான்;
புல்லாய்ப் பிறழிய வேய்ங்குழல்நான்-சிறு
போன்சாய் வடிவில் பெருமரம் hநன்
என ஒரு போன்காய் மரத்தின் கூற்றாகத் தொடங்கும் இக்கவிதை பல கேள்விகளைச் சமுதாயத்தை நோக்கி எழும்புகிறது.
உள்ளத் தெழுந்திடும் ஆசையினால் என்
உழுவைக் குறைக்க நினைத்தவர் யார்?
. . .
செய்கை அழகால் எனைச் சிதைக்கும் - விதி
செய்து தருபவர் யாருமக்கு?
. . .
தப்பாய் உருவை எனக்களித்து அதைச்
சாதனை என்று நினைப்பது யார்?
என்று வீசும் கேள்விக்கணைகள் சாட்டையடியாய் சமூகத்தின் மீது விழுகிறது. யாரோ ஒருவரின் ஆசைக்காக ஆற்றல் மிகுந்த பெருமரம் சிறு மரமாய்ச் சுருங்கிப் போன அவலம் இவ்வாறு உருவைச் சிதைத்ததைப் பெரிய சாதனையாய்க் கொண்டாடும் கள்ளத்தனம் நிறைந்த மாந்தர் வாழும் உலகமிது. காழ்ப்புணர்வு கொண்டு தம் சுயநலத்திற்காகப் பிறருடைய உரிமைகளைப் பறித்து அவர்களைச் சிறுமைக்குள்ளாக்கி, அடிமை செய்து அதனைத் தங்களின் சாதனையாகக் கருதும் வேடிக்கை மனிதர் நிறைந்த இந்த உலக்ததில் போன்சாயின் கேள்விகளாவது சென்று செவிகளைத் திறக்கட்டும்.
போன்சாய் மேலும் சொல்கிறது. இயற்கை அமைத்த இந்த உலகத்தில் எல்லாம் சமம். மேடும் பள்ளமும் இயற்கையின் அழகே. ஆதை இரசிக்காமல் பேதைமையை விதைத் பிறரைத் தாழ்மைப்படுத்தித் தன்னை உயர்வாகக் கருதி எக்களிக்கும் மனிதரை நோக்கி சவால் விடுகிறது.
புதுமை படைக்கும் துணிவிருப்பின் - உம்
புறத்தார் கரத்தை உடைத்திடுங்கள்,
வேறு வேலையில்லையா? உம் எதிரிகளை வெல்லும் ஆற்றலில்லை. உம் பொழுதைப் போக்க ஓர் அருமையான வழியுண்டு.
நிதம் உம் நகங்கள் பிரித்தெடுங்கள்-அதில்
நிம்மதி பெற்று நெகிழ்ந்திருங்கள்.
நகங்கள் விரல்களுக்கு அழகு மட்டுமல்ல. பாதுகாப்பும் கூட. ஆனால் அளவோடு இருக்கும்வரை தான். விரல்களைத் தாண்டி நீளமாக வளரும் நகங்கள் வளர்ப்பவர் உடலையே பதம் பார்க்கும்; கண்களைக் குத்தி விடும்.
கோபம் ஆசை போன்றவை அளவோடிருக்கும் வரையில் தான் மனிதனுக்கு அளவிற்கு மேல் மிஞ்சி விட்டால் அழிவுதான். ஏனவேதான் சாதனைகள் செய்ய நினைப்போர் பிறர் உரிமையைப் பறித்து அவர்களைச் சுருக்கி வெற்றிக் கொண்டதாகக் கொண்டாடும் சூழலை நீக்கி, விரல் தாண்டும் தம் நகங்களை வெட்டும் வேலையில் ஈடுபட வேண்டும். இல்லையென்றால் நகங்களை விரல்களை விட்டு பிரித்தெடுக்கும் வேலையாவது செய்யட்டும். அதை விடுத்துச் செயற்கையாக மரத்தைச் சுருக்கி விடவும் அதன் அழகை அழிக்கவும் யார் உரிமை கொடுத்தார்கள் அவர்களுக்கு என்கிறது போன்சாய்.
புத்தர் போன்ற மகாஞானிகளை உருவாக்கிய மரங்களின் நிலையோ இன்று தொட்டிகளில் சுருங்கிக் கிடக்கிறது. தென்றல் வராத வீட்டின் மூலையில் ஒடுங்கிக் கிடக்கிறது. கை கால் நீட்டி கிளை பரப்ப வழியுமில்லை. தாய் மடியாம் அன்னையின் மடியை அளவிடவும் நீண்ட வேருமில்லை. பொய்யாய் உருவை வளர்ப்பதுவும், வேர்மேனிக் குறுகிக் கிடப்பதும் இருந்தாலும் மெய்யாய் உணர்வே இருக்கிறது.  

மரத்தடியில் ஞானம் பெற்ற புத்தன் கூறியஆசை அறுத்திடும் போதனையைஇன்னும் உலகம் கற்காததால், என்னைப் போன்றவர்கள் காலம் முழுதும் அதற்கு விலை கொடுக்க வேண்டியுள்ளது என்று சமூகத்தை நோக்கி ஓர் உழைப்பாளியின் குரலாகவும் குமுறலை வெளிப்படுத்துகிறது. இவ்வாறு பன்முகநோக்குக் கொண்ட இக்கவிதை இத்தொகுப்பின் சிறந்த கவிதை.
நிரவிளைக் கவிதை ஒரு சித்துக் கவிதை. ஆன்மா உடலை ஆடையாகப் பார்த்து அதை நீக்க முயலும் கவிதை. யாக்கை நிலையாமை அடிப்படையில் அமைந்துளூள இக்கவிதை நிசத்தை மறைக்கும் பொய் போல், மெய் (உடல்) என்பது ஆன்மாவை மறைக்கும் பொய் என்கிறார் கவிஞர். எத்தனை எத்தனையோ ஆடைகள், நித்தமும் நூறு முறை மாற்றும் ஆடைகள், இறைவனை அடைய தடையாகின்றன. பசி, காமம், காதல், விருப்பம், நிதி என எல்லாவற்றின் மீதும் பற்றுக் கொள்வதற்கு இந்த உடலே முதன்மை காரணமாக உள்ளது. எட்டும் தொலைவில் ஏகம்பன் இருந்தும் ஏறி அடைவதற்கு ஏணிகள் பல இருந்தும் தினம் தினம் ஆசையினால் அனைத்தையும் இழக்கின்ற நிலை.
அனைத்தையும் வெட்டி எறிந்து விட்டால் வாழ்வின் புதிர்கள் புரிந்துவிடும். புரிந்துவிட்டால் தேகத்தை வென்று விடலாம். வென்று விட்டால் இந்த உடலென்னும் ஆடை இங்கே தேவைப்படாது என்கிறார் கவிஞர்.

காயமே இது பொய்யடா காற்றடைத்த பையடா என்ற சித்தர் பாடலை நினைவிற்குக் கொண்டு வருகிறதுநிர்வாணம்என்ற பாடல்.

பட்டினத்தடிகள் ஒரு பாடலில் கூறுகிறார்,
""
மானிட வாழ்வென வாழ்வென நொந்து
விறசிட மூடி அழல் கொடு போட
வெந்து விழுந்து முதிந்திநிணங்கள்
உருகி எலும்பு கருகி அடங்கி
ஓர்பிடி நீறும் இலாத உடம்பை""

உடலைப் பெரிதென நினைத்து வாழும் நிலையில்லாத வாழ்வில் தாமே நிலையென்று வாழும் மனிதர்கள்யானே பொய் என் நெஞ்சும் பொய்என்ற மாணிக்கவாசகரின்மணிவாசகத்தையும் கேட்காதவர்களல்லவா?’
 
கவிதைக் கையூட்டுஎன்ற பாடல் கண்ணனை, தன் காதலனை நினைத்து ஏங்கும் ஒரு கோபிகையின் குரலாக வெளிப்பட்டு நிற்கிறது. கண்ணில் இருக்கும் காதலன் கண்முன் வருவதில்லை. காரணமும் தெரிவதில்லை. கற்பனையிலாவது அவன் வருவானா எனப் பார்த்தால் காலம்தான் கரைகின்றது. கனவிலாவது வருவானா? என்றால் கனவிலும் வரவில்லை. அவன் காணாத பொழுது கண்ணில் சிறை பிடித்தால், சொக்கும் வழிகளை விலக்கி விழிகள் படபடக்க அவனோ பறந்து விட்டான். காக்கும் தனை விடுத்து பிறரோடு சேர்ந்து திரியும் அவனை நினைத்தால் மனம் நொந்து போகின்றது. வெந்து போகும் அவ்வேளை பார்த்து அவன் முன்னே வந்து நிற்பான். நீ செய்வது சரியோ என வினா விடுப்பதற்கு முன் விடைபோல் இதழ் பதிப்பான்.என்னைக் கண்ணுக்குள்ளே சிறை பிடித்த கள்ளி எனப் பழித்துப் பேசிடுவான். எதிர்த்துக் கேள்விகள் கேட்டாலோ? எதற்கும் விடையளிக்காமல் பேச்சிலேயே மயக்கி எதை எதையோ சொல்வான். கவிதைகளை வடிப்பான். அவன் கவிதையிலேயே மெய்மறந்து போகையிலே ஒன்றுபுரியும் எனை ஏய்க்க கொடுக்கப்பட்டது தான் அக் கவிதை கையூட்டு. மல்லிகைப்பூ, அல்வா வரிசையில் கவிதையும்சேர்ந்து விடுகிறது. 

 கண்ணன் எப்போதும் தீராத விளையாட்டுப் பிள்ளையல்லவா

இப்பாடல் வரிகளில் கோபிகையின் காதல் வரிகள் தோறும் நிரம்பி வருகிறது. கவிஞர் கோபிகையாகவே மாறிப் போய் விடுகிறார். உலகிலுள்ள ஒரே ஆண் இறைவன் தான். மற்ற உயிர்களெல்லாம் அந்த இறைவனாகிய ஆணை அடையத் துடிக்கும் பெண்கள்தான் என்பதை நாயக-நாயகிப் பாடல் வழி மாணிக்கவாசகரும், திருமங்கையாழ்வாரும் இந்த உலகிற்கு உண்மை உரைத்துப் போனார்கள். கவிஞர் அவ்வழியை மிகக் கச்சிதமாகப் பன்பற்றியுள்ளார்.
 
""கற்பினை மத்தெடுத்தும்
காலம் கரைத்து நின்றேன்""
என்ன அழகான உருவகங்கள்.
""
காக்கும் எனைவிடுத்துக்
காமத் துழல்பவனாய்
நோக்கும் உலகுரைக்கும் - கிளியே
நொந்திடும் என் மனமும்""
 
இந்த வரிகளில் தான் எத்தனை வேதனை படிந்து கிடக்கிறது.
தப்பிதம் செய்யவில்லை-கிளியே
தண்டனை எதுக்கடி? என்று
கேள்விகளாலேயே தன்னை மாய்த்துக் கொள்ளும் ஒரு பெண்ணின் மெல்லிய காதல் உணர்வினை மிக அழகாகப் படம் பிடித்துள்ளார்.
ஆனால் காதலன் வந்தால் ஓராயிரம் கேள்விகள் கேட்கவேண்டும் என்று துடிக்கும் இதழ்கள் அவன் நேரில் வந்துவிட்டாலோ, ஒரு கேள்வியை உதிர்ப்பதற்கே ஓராயிரம் பாடுபடுகிறது.
 
என்னுள் இருந்திருந்தும்-
இத்தனை நாழிகையாய்
முன்னர் வரவில்லை ஏன்?’ 

 என்று மிகப் பாடுபட்டு உரைத்த ஒரு கேள்விக்கு உரிய பதில் தராமல்  
கண்ணன் ஓராயிரம் கதைகளைக் கதைக்கின்றான். அவளுக்குப் பிடித்த கவிதைகளைப் படிக்கின்றான். காதலுக்குக் கையூட்டாய் கவிதை தரும் கண்ணன் கள்ளனல்லவோ? ஏன தெரிந்திருந்தும் மனதை திருடக் கொடுக்கும் காதலியின் கவிதை ஒரு தனிச்சுவை.
கவிதை ஒரு நுட்பமான செயல். கவிதையின் நுட்பத்தைக் கைவரப்பெற்றவர்கள் வெகுசிலரே. காதல் போலவே காமமும் ஓர் உணர்வே. குhதல் உள்ளம் சார்ந்தும், காமம் உடல் சார்ந்தும் இயங்கக் கூடியது. ஒருவன் தனிமையிலிருக்கும் பொழுது காமம் வெளிப்பட்டு அவனிடம் விளையாடத் தொடங்கி விடுகிறது.
 
சொல்லுக தாமதமேன்
சொற்கள் வருமுன்பே
மெல்ல இதழ்பதிப்பான்-கிளியே
மேற்சொலல் ஏதங்கே? (ப-16)
 
காதலன் வருகையை எதிர்பார்க்கும் காதலியின் மனநிலையை அழகாகக் கவிஞர் படம் பிடித்துள்ளார்.
 
இருட்டில் வெளிச்சம்என்ற கவிதையும் கனவுலகில் வாழும் ஒரு பெண்ணின் நிலையையும், கனவை கலைத்து நனவுக்குள் அவளை இழுத்து வரத் துடிக்கும் தோழிக்கும் இடையே நடக்கும் உரையாடல் வீதத்தில் அமைந்துள்ளது.
 
கொஞ்சம் அவரெழிற் கோலம் நிறைந்து
குழையும் கனவுலகில்
நெஞ்சம் நெகிழும் நிமிடம் இமையை
நீயேன் பிரிக்கின்றாய்? தோழி
பின்றேன் குறைக்கின்றாய்? எனத்
 
தொடங்கும் பாடல் தாளம் மாறாமல் இறுதிவரை அழகாகக் கவிநடை நடக்கிறது. தோழி சொல்கிறாள் கனவென்று எதையோ கற்பனை செய்து உன் காலம் கழிக்கின்றாய். அதுவே நனவிலும் நடக்கும் என்று ஞானம் படிக்கின்றாய் என்று இடித்துரைக்கிறாள். தினம் தினம் காதலனை நினைத்து கரைதலும் வீண், காதலன் பொய், காதல் ஒரு கானல் நீர், தலைவன் ஒரு புதிர் என்றெல்லாம் வராத தலைவனை வந்ததாக ஏன் நம்பிக் கெடுகின்றாய் தோழி அறிவுரை கூறுகின்றாள்.
 
ஆனால் தலைவியோ, கண்ணள் அவருருவே, என்றுரைத்து என் உண்மை மனதின் உணர்வுகள் மெய்யென்றால், காதலும் மெய், காதலனும் மெய் என்கிறாள். அதற்குத் தோழி, ‘அப்படிக் காதல் மெய், காதலன் மெய்என்றால் அவரைக் கண்டவுடன் சினக்கும் முறையும் தொடரும் பகையும் ஏன்? உனக்குத் தெரிந்தவர் அவர் ஒருவர் தாம் எனில் அவருடன் உணர்வில் உறைந்துவிடு உள்ளம் திறந்து விடுஎன்று அறிவுரை கூறுகின்றாள்.
 
கவிதை என்பது உணர்வு. உணர்வின் வெளிப்பாடாகிய கவிதையே வாசகர் மனதை கவர்கிறது. காதலின் வெற்றி என்பது ஒருவர் உணர்வில் ஒருவர் உறைந்து விடுவதும் எதையும் மறைக்காமல் உள்ளம் திறந்து உண்மைகளை வெளிப்படுத்தி விடுவதும் தான் என்பதை இக்கவிதை அழகாகப் புலப்படுத்துகிறது.
 
ஒற்றைச் சிலம்பின் ஒருபரல் நான்என்ற கவிதை புதிய கோணத்தில் பரலின் குரலாக வெளிப்பட்டுச் சிலப்பதிகாரத்தை உரைக்கிறது.
ஒற்றைச் சிலம்பின் ஒருபரல் நான்-மெய்
உதிர்த்த உதிரத்தொடு துளிநான்
குற்றப் புதிருக்கொரு விடைநான்- பெருங்
கொடுமை எதிர்த்த குறு மணி நான்
 
எனத் தொடங்கும் மாணிக்கப்பரலின் குரல் கண்ணகியின் குரலாக வெளிப்பட்டுப் பாண்டியனின் இதழ் கிழித்து உண்மையை வெளிக் கொணர்ந்த சிறப்பை பேசுகிறது.
அழகு நடையில் முச்சீரிரட்டைச் சிந்துவில் அமைந்துள்ள இக்கவிதை, அரசவை மண்டபத்தில் கண்ணகி வழக்குரைத்த போது நடந்ததை அப்படியே கண்முன் கொண்டு வந்து நிறுத்துகிறது.
ஆனால் மன்னனின் இதழ் கிழித்து, தரையெங்கும் தாவித் திரிந்து உண்மையுரைத்த பின் நடந்த கதை அறியாமல் துடிக்கிறது. சகோதரன் சிலம்பிற்கு ஆனநிலை அறியவில்லை எனப் புலம்புகிறது. மதுரை மண்ணில் கேட்பாரற்று கிடக்கும் அப்பரல் மணி கண்ணகி புதிதாய்ப் பிறந்து வந்து மாணிக்கப்பரலைத் தேடி அணிந்து புதுப்போர் தொடுப்பாளோ? ஏன ஏங்கி நிற்கிறது.
 
மெய் உதிர்த்த உதிரத் தொடு துளி நான்-
பெருங்கொடுமை எதிர்த்த குறுமணி நான்-
என்று மாணிக்கக் கல்லின் வடிவத்தினையும், அதன் குணத்தையும் அழகுற காட்டுகிறார் கவிஞர்.
 
புத்தம் புதிய புத்தகமேஎன்ற திரைப்படப்பாடல் பெண்ணோடு புத்தகத்தை ஒப்பிட்டுப் பாடப்பட்ட பாடல்.
 
இதே பாணியில் கவிஞர் தானும் ஒரு கவிதை வரைந்திருக்கின்றா. பல வரிகள்அடடாஎன்றும் பல வரிகள்ஆஹாஎன்றும் பாராட்ட வைக்கின்றன.
 
""சொல்லால் சுகம் பல ஊட்டுகிறாள் புதுச்
சுருதியை நெஞ்சினில் மீட்டுகிறாள்!
எல்லாம் முடித்தேன் எனும் போதும் - வே(று)
எதையோ தினந்தினம் காட்டுகிறாள்""
 
படிக்கப் படிக்கப் புதுப்புதுக் கருத்துக்கள் படிப்பவர் நெஞ்சினில் தோன்றுவது இயல்பு. இதுவே நல்ல புத்தகத்திற்கான அடையாளம். மனக் காயத்திற்கு மாற்று நல்ல புத்தக வாசிப்பே என்பதை அனுபவித்தவர்கள் ஒப்புக் கொள்வார்கள். மாற்று மட்டுமல்ல நல்ல புத்தகங்கள் மனக்காயம் ஆற்றும் மருந்தாகவும் ஆசிவிடும். மனிதரைப் புதியதாய்ப் பிறப்பெடுக்க வைக்கும் மாயம் செய்யும்.
 
""கண்ணால் அவளுடல் மேய்ந்திடினும்-அவள்
காட்டும் அதிசயம் தீரவில்லை
எண்ணா துறங்கும் கணமாயும்-என்
இமையைத் துளைக்கும் அவள் சொழிகள்""
 
இந்த அற்புத சுகத்தை இன்றைய தலைமுறையினர் பெறாமல் இழந்து வருகின்றனர் எனும்பொழுது வருத்தம் மேலிடுகின்றது.ஒரு நூலகம் திறக்கப்படும்போது ஒரு சிறைச்சாலை மூடப்படுகிறதுஎன்றார்ல விக்டர் ஹ்யூகோ. புத்தகங்கள் காலமென்னும் அலைகடலின் ஓரம் உயர்ந்து நிற்கும் கலங்கரை தீபங்கள். அத்தீபங்களைப் பாராமலே பல பேரின் வாழ்க்கை திசைமாறிப் போய் அலைகழிக்கப்படுகின்றது.
 
நல்ல புத்தகங்கள் இரவல் கொடுப்பதற்குக் கூடாதவை. அவை வீட்டில் ஏட்டில் வைக்கும் தங்கத்தினும் மேலானவை. கவிஞர் கற்புடைய பெண்ணோடு ஒப்பிட்டுக் கூறுகின்றார்.
 
""என்னவள்!நான்தான் இதழ் சுகிப்பேன்!-முறை
எத்தனை ஆயும் இனிப்பெனக்கே!
பொன்னவள் நெஞ்சில் பெயரெழுதி-என்
பொறுப்பில் புதிதாய்த் துகில் கொடுத்தேன்""
 
கணவனுக்கு மட்டுமே மனைவி ஆடை வாங்கிக் கொடுக்கும் உரிமை உண்டு. மனைவியின் மானத்தைக் காக்க வேண்டியது நல்ல கணவனின் கடமை. நல்ல புத்தகம் கற்புடையை மனைவியென்றால் அதற்கு அட்டை என்னும் துகில் கொடுத்து காக்க வேண்டுவதும் அவசியம் என்பதைக் கவிஞர் நயமாய் வெளிப்படுத்துகிறார்.
புத்தகத்தை எப்படிப் படிக்க வேண்டுமென்பதை வள்ளுவரின் வரிகளோடு இணைத்துச் சொல்கிறார்.
 
""கண்டும் கேட்டும் உண்டு யார்த்தும்-அவள்
கலை எழிலை உற்றறிந்தும்
அண்டி அவளின் அரவணைப்பில் மனம்
ஆழ்ந்து கிடக்க அவை பாயும்!""

ஒவ்வொரு வாசகனும் இப்படி ஆழ்ந்து நல்ல நூல்களைக் கற்றால் தவறான எண்ணங்கள் ஏது? தவறான பாதைகள் தான் ஏது? தவறான மனிதர்கள் தான் ஏது? கம்பரின்வண்மை இல்லை ஒரு வறுமையில்மையால்என்ற பாடல் வரிகள் காட்டும் சமுதாயம் நடைமுறைக்கு வந்திடாதோ?
வாழ்க்கையில் எந்தச் சூழலையும் எதிர் கொள்கிற பேராற்றலை புத்தகங்களே மனிதர்களுக்குத் தருகின்றன. பாட நூல்களைப் படிப்பது மிகையாது மதிப்பெண் பெறுவதை நோக்கமாகக் கொண்டது. நல்வாழ்விற்கு அடித்தளம் அமைப்பது நற்குணங்களே. அந்த நற்குணங்களை மனிதர்களுக்குள் விதைப்பவை நல்ல புத்தகங்களே. புத்தகம் படிப்பது கூட ஒரு வகையான தியானக்கலை தான். புற உலகத் தாக்கம் ஏதுமின்றி ஒருவரை ஒரே நினைவில் ஆழ்ந்திருக்கச் செய்யும் ஆற்றல் புத்தகத்திற்கு உண்டு.
 
""புத்தம் புதிதாய் இன்றிருந்தும் - நிலை
புதிதிலை நித்தம் பரிச்சயமே""

உழைப்பாளர் தினம் தொடர்பான ஒரு கவிதை கோபத்துடன் கேள்விகளோடு ஆரம்பிக்கிறது. இஃது எல்லாத் தினத்திற்குமே பொருந்துமென்றாலும் கவிஞரின் கேள்வி நியாயமானதே.
ஓடப்பராயிருக்கும் ஏழையப்பர் உயரப்பர் ஆகிவிட்டால் ஓடப்பர் உயரப்பர் எல்லாம் மாறி ஒப்பப்பர் ஆகி விடுவார் உணரப்பா நீ என்ற பாரதிதாசனின் எச்சரிக்கை சிறிதும் குறையாமல் இக்கவிதையிலும் இடம்பிடித்திருப்பது காலம் மாறியும் ஏழையர்களின் நிலை மாறாமலிருப்பதையே காட்டி நிற்கிறது.
 
பாடுபட்ட ஏழைமகன் மண்ணில் புரள, அவன் பாடுகளை உழைத்துண்ட குலம் அவன் முதுகில் ஏறி அவனை மிதித்து அவமானப்படுத்தி வருவதைப் பொறுக்காத தொழிலாளர் இனம் வடிக்கும் வேதனைக் கண்ணீர் இவ்வரிகளில் எங்கும் எழுத்துத் துளிகளாக, இல்லையில்லை இரத்தத்துளிகளாகச் சிதறியிருக்கிறது.

மாடியில் அமர்ந்தவர் சிரிக்கின்றார்-வேர்
மண்ணில் இருந்தும் மறுக்கின்றார்!
என்ற வரிகள் தொடர்ந்து மாற்றம் வரும் என்ற நம்பிக்கையை வெளிப்படுத்துகிறது.
எத்தனை நேரம் இருளுரையும்? அதை
எதிர்த்துக் கதிரவன் நின்றெரியும்
கொசுவலைக்குள் ஒரு கொசு  

என்ற பாடலும் உழைப்பாளர் குறித்துப் பேசுகிறது. கொசு போல் பிறர் உழைப்பை உறிஞ்சி வாழும் எத்தர்களின் குரலாய் ஒலிக்கிறது. முதலாளித்துவத்தின் குரலாய் வெளிப்பட்டு நிற்கும் இக்கவிதை,

""
சூழ்நிலை வாய்க்குமெனின் - தமிழ்ச்
சொல்லையும் விற்பவன் நான்- என்
வாழ்நிலை ஓங்குதற்காய் மண்ணில்
வன்மை விதைப்பவன் நான்""

என்ற மிக எக்காளத்தோடு தொடங்கும் இக்கவிதை, பிறரது தலைகளைச் சாய்த்திடுமவன் என்றும் ஏய்ப்பினைக் கண்டவர்தம் கண்களைக் கீறிடுவேன் தலை தேய்த்தெனும் சாகடிப்பேன் - எம்மைப் போன்ற பெருமுதலாளிகளை எதிர்ப்பவர் செத்து மடியும் கொசுக்களன்றோ என்று உழைப்பாளர்களை அற்பமாய் நினைத்து அறைகூவல் விடுக்கின்றது. எனினும் காலம் மாறாமலிருப்பதில்லை. இப்படி மாயையின் பொய்வலையில் மனம் மயங்கியபடி கிடக்கும் நிலை என்றும் தொடர்ந்திடுவதுமில்லை. கொசுக்கள் தான், அற்பக்கொசுக்கள் தான், கைத்தட்டுதலில் கைக்குள் bச்ததுமடியும் இரத்தம் செத்த கொசுக்கள் தான். எனினும் அவை ஒன்றல்ல ஆயிரமாயிரம் எண்ணிக்கையில் பல்கிப் பெருகினால் என்ன ஆகும்? மயாத்திரை கிழிந்து போயின முதலாளித்துவ இன்பமெல்லாம் உழைப்பாளர் என்னும் அற்பக் கொசுக்களெல்லாம் ஒன்று சேர்ந்து எழுப்பிடும் பேரொலியில் என்று முடிக்கிறார் கவிஞர். இதில் உழைப்பாளர் ஒற்றுமையால் எதையும் சாதிக்க முடியும் என்ற நம்பிக்கையை விதைக்கிறார் கவிஞர்.

உடையவர், உழைப்பவர் இருவரும் இரு முனையாகப் பிரிந்து நிற்காமல் உலகத்தை நினைத்து ஒரு முனையில் நின்று பகுத்துண்டு வாழ்ந்திட்டால் உலகம் வாழும். அவ்வாறில்லையெனில் உடலினை வருத்தி இந்த உலகினை தன் உழைப்பின் தியாகத்தால் காத்திடும் மாந்தர் உடையவர்களை எதிர்த்து நின்றிட்டால் பகைமை பெருகி, நாடு இருகூறாகிப் பிளந்து நிற்குமேயன்றி நன்மை என்றும் விளைந்திடாது. பாரதிதாசன்தொழிலாளர் விண்ணப்பம்என்ற பாடலில்காடு களைந்து, கழனி திருத்தி, உழவு புரிந்து, நாடுகள் செய்க, நாற்றிசையும் வீதிகள் சமைத்து, வீடுகள் கட்டி, வேண்டிய பயன் பொருட்களை உழைப்பினால் எளிதாகக் கிடைக்கச் செய்தோம். மலைகள் பிளந்து, ஆழ்கடல் தூர்த்து, பாதாளம் சென்று பசும்பொன் எடுத்து வந்தோம். கூடை கலங்கள் முதல் கோபுர சுதை வரை எல்லாம் நாங்கள் செய்ததே. எனினும் தங்கிட வீடுமின்றிச் சிந்தை மெலிந்தோம். எங்கள் உழைப்பை உண்டு கொள்ளையடித்திட்ட அண்ணாத்தைமாரே இப்போதே நீர் உங்கள் சொத்தை ஒப்படைப்பீர் எங்கள் உடலில் இரத்தம் கொதிப்பேறுமுன்பேஎன்பார்.

கொசுக்கள் ரீங்காரத்திலிருந்து தப்பிக்க மாயவலைகட்டி நுழைந்த பின்னும் கொசுவின் ரீங்காரம் அதுதான் மனசாட்சியின் ஓங்காரம் என முடிக்கிறார் கவிஞர்.

சுய பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டிய வகையிலான கவிதைகள்விட்டில்களுக்கு விலையான விளக்கு’, ‘எப்படி உள்ளதுன் நந்தவனம்முதலான கவிதைகள்.

கற்பனை என்னும் வெறும் மாயை அதில்
காலம் நகர்த்தும் அதன் காயை
நின்றிடும் நீயும் அதி லங்கம் - தினம்
நிகழ்த்தும் புதிராய்ச் சதுரங்கம்

என்ற கவிதை வரிகள் கற்பனையில் தம் வாழ்க்கையை நடத்துபவர்களின் நிலையை எடுத்துரைக்கிறது. கற்பனை வலைதான் கவலை என்பதைப் புரிந்து கொள்ளாதவர்களின் நிலை என்னாகும்? பாலையில் தோன்றிடும் காணi, உண்மை என்று எண்ணி வீண்கனவு காண்பவர்கள் நிலை என்னாகுமோ அது போலாகும். மாயை விழிகளை மறைத்திருக்கும். அதன் ஏற்படும் மன மயக்கம் அறிவைக் குறைத்தருக்கும் ஐம்பொறிகளும் மாயையின் வலைக்குள் ஆழ்ந்துவிடும். பொய்ம்மை அங்குப் போற்றப்படும். இதை உணராமல் வாழும் பொய்யான வாழ்வை நந்தவனம் என வாழும் நிலை என்று தான் தெளியுமோ என வினவுகின்றார்.விட்டில்களுக்கு விலையான விளக்குஎன்ற கவிதை பாலியல் தொழில் மேற்கொள்ளும் விலை மகளிரை நோக்கிய கவிதை.

விலைபேசும் விட்டில்கள்
விழைகின்றபோதெல்லாம்
விருந்தாக விளக்கானதேன்? அது
விளங்கிடினும் விலக்காததேன்? (ப-35)
என்ற கேள்விகள் கேள்விகளாகவே நின்று விடுகின்றன.

வெஞ்சுடரின் மையத்து விதையான கருமை நான் வெளிப்பாடு அறியாதவள்! நூன் விடியல்கள் அறியாதவள் என்ற விலைமகளிரின் நிலை மீளமுடியாத நிலை மீள வழி தெரியாத நிலையை எடுத்துரைக்கிறது.

சிறுதுளிகள் என்னும் மொழிபெயர்ப்புக் கவிதை செயல்களின் இருவித தன்மைகளைக் காட்டுகின்றது. சின்னச் சின்ன நற்செயல்கள் மேலைச் சொர்க்கம் காட்டும் சின்னச் சின்னத் தவறுகள் மெதுவாய் நம்மைத் திசை திருப்பும்! அருமையான அனுபவ மொழிகள். சிறந்த மொழிபெயர்ப்புக் கவிதை.
மடலொன்று எழுத கவிதை சுவையான காதல் கவிதை. சொற்கள் வழுக்கிக் கொண்டு ஓடி வருகின்றன வரிகளில். காதல் என்றாலே உள்ளம் துள்ளிடும்மா கவிஞர்களுக்கு. இதில் இசையும் துள்ளி வருகிறது.

வகையாக என்வசம் வந்தாய் என்றன்
வண்ணக் கனவிலே பரிசெலாம் தந்தாய்
மிகையாமோ என்று நீ சொல்லி அந்த
மிச்சத்தைத் தாராது சென்றாயே கள்ளி!
எண்ணங்கள் ஒரு நூறு மின்னல் வந்தென்
இதயத்தைத் தீண்டினால் வாராதோ இன்னல்?
விண்ணெங்கும் மாமழைச் சாரல்- சென்ற
உன்னையே எண்ணியென் உள்ளத்தில்கீறல்!

காதலனின் நெஞ்சம் எண்ணங்களினால் கூர்மையால் கீறல்களானதாம். மற்றொரு வரிகளில் வரும் உருவகம் எண்ணி இன்புறத்தக்கது.

கயிறாக உன் சொற்கள் ஆகும் - உள்ளக்
கிணற்றூறு நீர் சேந்தி என் தாகம் போக்கும்

என யாசிக்கிறார் கவிஞர் காதலியிடம்.
  
சொற்கூட்டி ஒருமடல் யோசி அதைச் சுவைக்கின்ற
நானென்றும் உன் நெஞ்சு வாசி!’ 

காதலியின் நெஞ்சை வாசிப்பவருக்குக் காதலி எதற்காக மடலெழுத வேண்டும்? அல்லது காதலியின் நெஞ்சில் வசிப்பவருக்கு மடல்தான் தேவையா? எனினும் மடலால் மயங்கும் மனங்களல்லவா? எனவே தான் மடலை விழைகின்றது.
 
ஆயிரம் பாரதி வந்துமென்என்ற கவிதை தற்கால நடப்புகளைப் பட்டியலிட்டு ஆயிரம் பாரதி வந்தாலும் இச்சமூகத்தில் மாற்ற முடியாமல் சில கீழ்மைகள் பெரிதாகி வளருவதைச் சாடுகின்றது.
போயின போயின துன்பங்கள்என்னும் பேரொலி பொய்ம்மையாய்ப் போனதோ? என்று வினி எழுப்பும் கவிஞர் மண்ணிலுள்ள மனிதர் எண்ணமெல்லாம் கள்ளம், உண்மைக் காதலைக் காண முடிவதில்லை, கல்வி கற்பதில் தமிழ்மொழி புறக்கணிப்பு, தமிழ்த் தாயைக் காக்காமல் புறக்கணிப்பதால் அவள் சாகிறாள். மேலும் பெண்ணடிமையும் தீரவில்லை என்றெல்லாம் சமூகத்தில் காணலாகும் தீமைகளைப் பட்டியலிடுகிறார்.

பாண்டியன் அறிவுடைநம்பி உள்ளிட்டோர் ஏங்கித் தவமிருந்த குழந்தையைப் பெற்று மகிழ்ந்த பெருமிதத்தில் அதுவும் ஆண்குழந்தையை மட்டுமே குழந்தையாகப் பாவித்து, பெண் குழந்தையைச் சுமையாகப் பாவிக்கும் இக்காலத்தில் கவிஞர் சந்தர் சுப்ரமணியன் பெண் குழந்தையின் மழலையை, விளையாட்டை, அழகை வியந்து இரசித்துக் கவிதை வடித்திருக்கிறார்.

தென்றல் பிறக்கும் திசை அவளோ? மனம்
தெவிட்டா அமுதப் பொருளவளோ?
துன்னல் விளைக்கும் சுவையதுவும்-அவள்
கண்கள் விளைக்கும் சுகம் தருமோ

படிக்கப் படிக்கத் தெவிட்டாத கவிதைகள். மரபுக் கவிதைகளில் சந்த லயத்தோடு இலகுவாகச் சொற்களை நிரப்பி வாசகரைக் கட்டிப் போடும் ஆற்றல் சந்தர் சுப்ரமணியத்திற்குக் கைவரப் பெற்றுள்ளது. மிழில் மரபுக் கவிதைகள் எழுதுவோர் குறைந்து வரும் சூழலில் இவரது கவிதைகள் நம்பிக்கையூட்டுகின்றன.

1 comment:

  1. Thanks a lot for forwarding Smt Premalatha's comments. Thanks to her for her in-depth reading of my poems and commenting almost every page of the book. I owe her my sincere thanks. by sandar subramanian

    ReplyDelete

உங்கள் கருத்துக்களைப் பதிவு செய்யலாமே?