நீரின்றி அமையாது உலகு.

முனைவர் ஜ.பிரேமலதா,தமிழ் இணைப்பேராசிரியர், அரசு கலைக் கல்லூரி, சேலம் 636 007 DR.J.PREMALATHA,ASSOCIATE PROFESSOR IN TAMIL,GOVT ARTS COLLEGE,SALEM -636 007.

Saturday, 30 April 2016

‘மம்மர் அறுக்கும் மருந்து’


 Image result for graduates clip art

மம்மர் அறுக்கும் மருந்து

 ஒரு மனிதனின் முன்னேற்றத்திற்குக் காரணமாக இருப்பது கல்விதான். அறியாமை என்னும் உயிர்ப்பிணியை நீக்கும் மருந்து கல்விஎன்பதால்தான், கல்வியைமம்மர் அறுக்கும் மருந்துஎன்கிறது ஒரு பழம்பாடல். கல்வி என்பது வெள்ளத்தால் போகாது; வெந்தனலால் வேகாது, வேந்தராலும் கொள்ள முடியாது; கொடுத்தாலும் குறையாது; கள்ளர்களால் திருட முடியாது; காவலுக்கும் மிக எளிதுஎன்கிறது கொன்றை வேந்தன்.ஒருவன் தன் உள்ளத்தில் சேர்க்கும் அரிய பொருள் கல்வி  ஒன்றுதான். அதை சேர்த்துவிட்டால், உலகிலுள்ள மற்ற பொருள்களெல்லாம் தானே கிட்டும்; ஒருவன் கற்ற கல்வி இப்பிறவிக்கு மட்டுமின்றி ஏழு பிறவிக்கும் பயன்தரும்என்கிறது குறள். ஒரு மனிதன் வாழ்வில் அவனுக்குக் கண்ணாக இருப்பது கல்விதான். எனவேதான், ‘பிச்சை எடுத்தாவது கற்பது நல்லதுஎன்கிறது நாலடியார்.

இப்படி பன்னெடுங்காலத்திற்கு முன்னரே கல்வியின் இன்றியமையாமையை உணர்ந்து அதை எப்படியாவது பெறவேண்டும் என வலியுறுத்தியது தமிழ்ச் சமூகம். இப்படிக் காலங்காலமாக கல்வியின் பெருமையைக் கூறி வந்ததின் பயன் இன்றைக்குப் படித்தவர்களின் எண்ணிக்கை தமிழத்தில் அதிகரித்துள்ளது. கல்வி கற்பதென்பது ஞானம் பெறுவதற்கும்,தன்னிலை உணர்வதற்கும்  என்ற நிலையிலிருந்து மாறி பின்னர் இறைவனையடைவதற்கு என்ற நிலையடைந்து, தற்போது  வயிற்றுப் பிழைப்பிற்காக என்ற நிலைமைக்கு வந்துள்ளது.

சரி.கல்வி பெற்றதினால் கிடைக்கும் இது போன்ற பயன்களை இச்சமூகமும் நாடும், மக்களும் பெற்று முழுப்பயன்களையும் பெற்றுள்ளார்களா?  தன் சொத்துக்களை விற்றும், கடன் வாங்கியும் கல்வி கற்றவனின் உயிர்ப்பிணி முழுமையாக நீங்கியுள்ளதா?

 உண்மையில் நிலைமை தலைகீழாக உள்ளது.கல்விக்காகச் சொத்துக்களை விற்றவன் வேலையில்லாதவனாக’, ‘கல்விக்கடனை வாங்கியவன் கடனாளியாகவிரக்தியிலும் வேதனையிலும் மடிந்து தனக்கும் தன் குடும்பத்தாருக்கும் நாட்டிற்கும் பெரும் சுமையாகிக் கொண்டிருக்கிறான். கல்வி கற்பதற்காகப் பிச்சை என்ற நிலையிலிருந்து கல்வி கற்றபின்னும் வேலைக்காகப் பிச்சை என்று வளர்ச்சி பெற்றுள்ளது.

            இதற்குக் காரணம் வாழ்க்கைக்கும் வகுப்பறைக்குமான இடைவெளி மிகப்பெரியதாக இருப்பதுதான். பிஎச்.டி உள்ளிட்ட  உயர்ந்த   பட்டங்களைப்   பெற்ற   மாணவர்கள்   கூட "தன்னம்பிக்கை" இழந்தவர்களாக, வாழ்வைச் சுமையாகக் கருதுவோராக மாறிப் போயுள்ளனர். இன்றைய தனியார் கல்விக்கூடங்களில் இலட்சம் இலட்சமாகக் கொட்டிப் படித்த பட்டதாரிகள்  சொத்தும் போனது,                       வயதும் போனது என்று  சலிப்புடன் பெற்ற கல்வியை வெறுக்கும் நிலையில் உள்ளனர்.


 கல்வி கற்றால் உயர்நிலையடையலாம் என்ற எண்ணத்தினால் பரம்பரை பரம்பரையாக மேற்கொண்டு வந்த குலத்தொழிலையும் கைவிட்டு, கிடைத்த பிற வேலைகளையும் மறுத்துவிட்டு கல்வி ஒன்றையே கருத்தாகக் கற்றுப் பட்டம் பெற்று வரும் இளைஞர்களுக்கு வேலை தேடுவதே இன்று வேலையாகிப் போய்விடுகிறது. உடலுழைப்பைக் கேவலமாகக் கருதுவதைத்தான்  இந்தப் படிப்பு கற்றுக் கொடுத்துள்ளது.

ஒரு காலத்தில் படித்துப் பட்டம் பெறுவது மிக உயர்வாகக் கருதப்பட்டது. ஆனால் அப்பட்டங்கள் இன்று தேர்வில் வெற்றி பெற்றதற்கான ஒரு அடையாளச் சீட்டாக மட்டுமே உள்ளது. கல்வி ஒரு விபத்தாகவும், பல்கலைக்கழகம் தரும் பட்டம் அதற்கான நிவாரணமாகவும் மாறிப்போய்விட்டது. நாடு விடுதலை பெற்றுப் பல்லாண்டு ஆகியும் வறுமை, அறியாமை, வேலையில்லாத் திட்டம் போன்ற சிக்கல்கள் நீங்காததால், நாட்டின் நிலை ஆரம்பித்த இடத்திலேயே நிற்கிறது.

கல்வியைப் பெற்ற மாணவர்கள் வேலையில்லாப் பட்டதாரிஎன்ற புதிய பட்டத்தைத் தவிர வேறொரு பயனையும் பெறுவதில்லை. இவர்களின் சிக்கலை அரசாங்கமோ, அரசியல்வாதிகளோ கண்டு கொள்வதில்லை. வேலையில்லாதவர்கள் போராடும் போது, வேறுவழியின்றி அறிக்கைகளை வெளியிடும் அரசியல்வாதிகள், பின் காணாமல் போய் விடுகிறார்கள். அறிக்கைகளும் திட்டங்களும் நடைமுறையில் மக்களை நீர்த்துப் போகச் செய்வதற்கே என்பது நடப்பியல் உண்மை. அறிக்கை வெளியிட்டவர்களை  நாடினால், ‘ஆசிரியர் வேலைக்கு ஐந்து, பேராசிரியர் பணிக்குப் பத்து கொடுத்தால் வேலை உறுதி‘ என்கிறார்கள். படிப்பிற்காக சொத்தை விற்றும், கடன் வாங்கியும் படித்துவிட்டு வேலை கிடைக்கவில்லையெனில் படித்தவர்களின் நிலை என்னவாகும்? அவர்களின் கோபம் சமூகத்தின் மீது திரும்புகிறது. இதற்கு அரசியல் மட்டுமல்ல கல்விக்கூடங்களும் முக்கியக் காரணங்களாகும்.

            மாணவர்களுக்கு அறிவூட்டி எழுச்சி பெற வைக்க வேண்டிய கல்விக் கூடங்கள், மாணவர்களைப் பொதி சுமக்கும் விலங்குகளாக, பணம் கொடுக்கும் இயந்திரங்களாக நினைக்கின்றன. பெற்றோரின் செல்வத்தை மட்டும் உறிஞ்சுவதை நோக்கமாகக் கொண்டு, கல்வியை வியாபாரமாக்கும் கல்வி வியாபாரிகள், மக்களின் ஆங்கில மோகத்தை, நன்கு பயன்படுத்திக் கொள்கின்றனர். இதனால்தான் படிக்கும் கல்விக்கான தொகை ஏறிக்கொண்டே போகிறது. கல்வியின் தரம் ஏறுவதில்லை. தாய் நாட்டில் உள்ள ஆங்கில் பள்ளிக்கூடங்களில்  தாய்மொழியில் பேசினால் தண்டனை என்பது இந்தியாவில் மட்டும்தான் நடக்கும். அதுவும் தமிழ்நாட்டில்.

                       
Image result for graduates clip art 
பெற்றோர்களின் மனநிலையைப் புரிந்து கொண்ட கல்வி நிறுவனங்கள், மாணவர்களை அம்மாஎன்று கூட தமிழில் அழைக்கக்கூடாது என ஆணை பிறப்பித்துள்ளதைப் பெற்றோரும் பெருமையாகக் கூறிக் கொள்ளும் நிலையை என்னென்பது?  பெற்றோர்களின் ஆங்கில மோகத்தால் தமிழ் நாட்டில் ஆட்டுத்தொழுவமும் மாட்டுத் தொழுவமும் கூட வகுப்பறைகளாக மாற்றப்பட்டு பெரிய தீ விபத்து ஏற்பட்டு மழலைகளை இழந்ததை யாரும் மறந்திருக்க முடியாது. ""ஆங்கில கல்வியின் மோகத்தில் தாய் மொழிப் பாடம் நிர்வாணம்" என்கிறார் ஒரு கவிஞர். மானம் காக்க வேண்டிய கல்வி, மாணவர்களை நிர்வாணமாக்கிக் கொண்டிருப்பதாகக் கூறுகிறார். தாய்மொழி தெரிந்தும் அம்மொழியில் பேச இயலாமல் சிந்தனை முடக்கப்பட்ட ஊமைகளாக வலம் வருகின்றனர்.

கல்வி என்பது மனிதனைப் பண்படுத்தும் ஒரு வழிமுறை.  கல்விக்கூடம் என்பது பண்பென்னும் வழிமுறையை மனிதனைக் கற்றுக் கொடுக்கும்  ஒரு நிறுவனமாகும். கல்வி கற்றவர்கள் மருத்துவராகலாம். பொறியாளராகலாம். ஆசிரியராகலாம். கல்வி அவர்களிடம் பண்பை வளர்த்திருந்தால் மட்டுமே அவர்கள் சிறந்த மனிதராகத் திகழ முடியும்.  அறிதல்,புரிதல்,தெளிதல், ஆராய்தல், சிந்தித்தல், திட்டமிடல், செயல்படுத்துதல், வெற்றி பெறுதல் எனப் படிப்படியாக வெற்றிக்கான படிநிலைகளைக் கற்றுத் தரும் கல்விமுறையே சிறந்த முறையாகும். எட்டாம் வகுப்பு வரை தேர்வு முறை இல்லை என்று பயின்றுவிட்டு திடீரென ஒன்பதாம் வகுப்பு முதல் பனிரெண்டாம் வகுப்பு வரை மிக அதிகமான மதிப்பெண்களைப் பெற வேண்டும் என்ற நெருக்கடியை ஏற்படுத்தினால் மாணவர்களுக்கு கல்வி மீது வெறுப்பே ஏற்படும்.  தனியார் நிறுவனங்களுக்கு இது ஒரு வாய்ப்பு. பனிரெண்டாம் வகுப்பில் மிக அதிகமான மதிப்பெண்களைப் பெற்றுத் தருவதாகக் கூறி சில நிறுவனங்கள் விளம்பரங்களின் மூலம் கல்வியை வியாபாரமாக்கி விடுகின்றன. அப்படி பணம் கொடுத்தபின் பள்ளியில் மதிப்பெண்கள் வாங்காமலிருந்தாலும் கவலையில்லை. கல்லூரி நிறுவனங்கள் அந்த இடத்தை நிரப்புகின்றன. நல்ல நிறுவனத்தில் வேலை வாய்ப்பைப் பெற்றுத் தருவதாகக் கூறி மீண்டும் ஒரு வியாபாரம் நடக்கிறது.

Image result for graduates clip art 

கடையில் வாங்கும் சரக்கைப் போல் கல்வி விலை கொடுத்து வாங்கப்படுகிறது. இதனால் மாணவர்களுக்கும் பயனில்லை. இது போன்ற மாணவர்களால் சமுதாயத்திற்கும் பயனில்லை. மாணவர்களின் பண்பை வளர்க்காமல், அவர்களின் உண்மையானத் திறமையை வெளிக் கொணராமல் புரியாமல் மனனம் செய்ய வைப்பதும், மதிப்பெண்ணை மதிப்பில்லாமல் ஆக்குவதும் இதனால் நடக்கிறது. கணிதத்தைக் கூட மனனம் செய்ய வைக்கின்றனர். மனனம் செய்பவர் புரியாமல் அதிக மதிப்பெண் பெறுவதால் அறிவாளி போல் கருதப்படுகிறார். திறமையுடைய புரிந்து படிக்கும் மாணவர்கள் படிப்பிற்கேற்ற விலை கொடுக்க முடியாததோடு, மதிப்பெண்களோடும் போட்டி போட முடியாமல் இறுதியில் விரக்தியடைகின்றனர். கல்வி மீதே வெறுப்பு ஏற்பட்டு சமுதாயத் தீமைக்குத் துணை போகின்றனர்.

சமூக ஏற்றத் தாழ்வுகளால் பாதிக்கப்படாத ஒரே மாதிரியான தரமான கல்வியை வழங்குவதே இதற்கு தீர்வாக முடியும். மாணவனுக்கு அளிக்கப்படும் பயிற்சி அதனால் வெளிப்படும் திறமை போன்றவை மிக முக்கியமாகக் கவனிக்கப்படவேண்டியவை. மதிப்பெண்ணுக்கு மட்டும் மாணவர்களைத் தயார்படுத்தும் இயந்திரமாக மாற்றாது அவனுடைய வளர்ச்சி, அதனால் விளையும் பயன் போன்றவற்றைக் கவனித்திட வேண்டும்.

இன்றைய வளர்ந்து வரும் சமுதாயத்தில் மாணவர்கள் எதிர்பார்ப்பவை அதிகம். மாணவர்களின் அறிவும் நடத்தையும் நேர்நிலை பெறுவது கல்விக்கூடங்களில்தான். பொறுப்புள்ளவர்களாக அவர்களை உருவாக்க வேண்டும்.


மனனம் செய்வதால் படைப்பாற்றல் குறையும். கற்பனை வளம் சிதைக்கப்படும். சவால்களை ஏற்கத் தயக்கம் ஏற்படும். சிக்கல்களை சமாளிக்க இயலாது.இந்நிலையை கவிஞர் வைரமுத்து,
 "பள்ளி செல்லும் சிறுவன் ஒவ்வோரு விடியலிலும்
தான் நாடு கடத்தப்படுவதாய் நசிந்து போகிறான்" என்கிறார். இந்நிலையை ‘அந்தச் சிறு பறவைகளின் சிறகுகளை-கொள்ளிக் கட்டைகளாலா கோதிவிடுவது? என்றும் ""அவர்கள் முளையில்/விதையைப் போல் தூவப்பட வேண்டிய அறிவு/ஆணியைப் போல் அறையப் படுகிறது"என்றும் சாடுகிறார்  மற்றொரு கவிஞர்.


மதிப்பெண்களை உற்பத்தி செய்யும் கல்வி நிறுவனங்களினால், மாணவர்களின் எண்ணிக்கை பெருகிவருகிறதேயொழிய பொரிய நன்மை ஏதும் விளைந்திடவில்லை.

வைரமுத்து இப்படி பட்டதாரிகளை உற்பத்தி செய்யும் கல்வி நிறுவனங்களை நோக்கி,
""இந்தப் பல்கலைக்கழகங்கள்
வேலையில்லாதவர்களை
உற்பத்தி செய்யும்/தொழிற்சாலைகளா?என்று சாடுகிறார்.
தொலைதூரக்கல்வி நிறுவனங்களுக்கும் இதில் பங்குண்டு.

            இப்படியெல்லாம் உற்பத்தி செய்யப்பட்டப் பட்டதாரிகள், எப்படியாவது வேலை பெற்றுவிட   வேண்டுமென்று   வேலைக்கானத்   தேர்விற்காக    மீண்டும்    படிக்கிறார்கள்.
எல்லாம் வேலை கிடைக்கும் வரைதான். வேலை கிடைத்துவிட்டால் படிப்பதை நிறுத்தி விடுகிறார்கள். கற்பதை சுமையாகக் கருதுமளவிற்கு குழந்தைகளின் மீது சுமைகள் ஏற்றப்படுவதால் நன்கு வளர்ச்சியடைந்த நிலையில் கற்கும் சுவையறியாமலேயே மூப்படைந்து விடுகிறார்கள்.

கல்வி கற்கும் மாணவர்களின் எண்ணிக்கை உயருவது வரவேற்கத்தக்கது. ஆனால் அவர்களே சுயமாகச் சிந்தித்து தொழில் புரியும் வகையில் பட்டப்படிப்புகளை உருவாக்கிடவேண்டும்.

மாணவர்களின் படைப்பாக்கத் திறனை ஊக்குவித்து சிந்தனைச் சிற்பிகளாக அவர்களை உருவாக்கிவிட்டால் தன்னம்பிக்கை, கல்வியில் பிடிப்பு. குழு மனப்பான்மை, எதையும் சமாளிக்கும் அறிவு, சுயபலம் அறிதல்,துணிவு போன்றவற்றைப் பெறுவர். உழைக்கத் தயாராக இருக்கும் சமுதாயத்தை உருவாக்கக் கூடிய கல்வித்திட்டம் காலத்தின் தேவையாகும். மாணவர்களின் தனித் திறன்களைக் கண்டறியும் வகையில் கல்வி கொடுக்கப்படவேண்டும்.

இந்தியா போன்ற விவசாய நாடுகளில் உடல் உழைப்பை மையமிட்ட கல்வியைக் கல்வியாளர்கள் வடிவமைத்து செயல்படுதினால் வேலையில்லாத் திண்டாட்டம் இல்லாமலாகிவிடும். எல்லாருக்கும் ஒவ்வொன்று எளிது என்பார் ஔவையார். ‘பணத்திற்கான சமுதாயம்‘ என்பதை ‘மனத்திற்கான சமுதாயமாக‘ மாற்ற வேண்டும்.

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்களைப் பதிவு செய்யலாமே?