நீரின்றி அமையாது உலகு.

முனைவர் ஜ.பிரேமலதா,தமிழ் இணைப்பேராசிரியர், அரசு கலைக் கல்லூரி, சேலம் 636 007 DR.J.PREMALATHA,ASSOCIATE PROFESSOR IN TAMIL,GOVT ARTS COLLEGE,SALEM -636 007.

Saturday, 30 April 2016

வாழ்க்கைக்கும் வகுப்பறைக்குமான இடைவெளி – சில காரணிகள்




வாழ்க்கைக்கும் வகுப்பறைக்குமான இடைவெளி – சில காரணிகள்

Image result for schools
 ஒரு காலத்தில் படித்துப் பட்டம் பெறுவது மிக உயர்வாகக் கருதப்பட்டது. ஆனால் அப்பட்டங்கள் இன்று தேர்வில் வெற்றி பெற்றதற்கான ஒரு அடையாளச் சீட்டாக மட்டுமே உள்ளது. கல்வி ஒரு விபத்தாகவும், பல்கலைக்கழகம் தரும் பட்டம் அதற்கான நிவாரணமாகவும் மாறிப் போய்விட்டது.

பிஎச்.டி உள்ளிட்ட  உயர்ந்த   பட்டங்களைப்   பெற்ற   மாணவர்கள்   கூட தன்னம்பிக்கை இழந்தவர்களாக, வாழ்வைச் சுமையாகக் கருதுவோராக மாறிப் போயுள்ளனர். நாடு விடுதலை பெற்றுப் பல்லாண்டு ஆகியும் வறுமை, அறியாமை, வேலையில்லாத் திண்டாட்டம் போன்ற சிக்கல்கள் நீங்காததால், நாட்டின் நிலை ஆரம்பித்த இடத்திலேயே நிற்கிறது. கல்வியைப் பெற்ற மாணவர்கள் வேலையில்லாப் பட்டதாரிஎன்ற புதிய பட்டத்தைத் தவிர வேறொரு பயனையும் பெறுவதில்லை. இவர்களின் சிக்கலை அரசாங்கமோ, அரசியல்வாதிகளோ கண்டு கொள்வதில்லை. இந்தப் பல்கலைக்கழகங்கள் வேலையில்லாதவர்களை உற்பத்தி செய்யும்/தொழிற்சாலைகளா? என்று சாடுகிறார் ஒரு கவிஞர். கல்வியின் நோக்கம், கல்வியைக் கற்பவர் தமது வாழ்நாளெல்லாம் தமக்குத் தேவையான கல்வியைத் தொடர்ந்து சுயமாகக் கற்றிடும் திறமையுடையவர்களை உருவாக்குவதாக இருக்கவேண்டும். நல்ல பாடத்திட்டம், உயரிய ஆசிரியர்களின் வழி மாணவர்களைச் சென்றடைய வேண்டும். ஆனால் நடப்பியல் கல்வி, வியாபாரமாகிவிட்ட சூழலில், மாணவர்களையும் பெற்றோர்களையும் கடனாளியாக்குகிறதேயன்றி சிந்தித்து உழைப்பால் உயரும் முதலாளியாக்குவதில்லை. ஒருவித  குற்ற உணர்வை, தாழ்வு மனப்பான்மையைத்தான் மாணவர்களிடம் தற்போதைய கல்வி  முறை      ஏற்படுத்துகிறது.      ‘ஒவ்வொரு    தலைமுறையும்    அதற்கு     முந்தைய தலைமுறையைக் காட்டிலும் சீர்கேடு அடைகிறதுஎன்பது சீனப் பழமொழி.

சுதந்திரமடைந்து 65 ஆண்டுகளுக்கும் மேலாகி விட்டது. எனினும் கல்விக்காக ஏங்கும் குழந்தைகள், பள்ளி செல்ல முடியா வறுமையில் உள்ள குழந்தைத் தொழிலாளர்கள், உயர்கல்வி கற்க முடியா மாணவர்கள் இருக்கத்தானே செய்கிறார்கள். இன்று தனியார் மயமாகி வரும் சூழலில் ஆங்கிலப் பள்ளிகளின் மோகத்தில் சொத்தை விற்றாவது கல்வி கற்கச் செய்ய வேண்டுமென்று நடுத்தர வர்க்கம் முயல்கிறது. இதனால் பாதிக்கப்படுவது அரசு பள்ளிகளும் அரசு கல்லூரிளுமே. தனியார் பள்ளிகளின் பெருக்கத்தில் இழுத்து மூடிவிடக்கூடிய நிலையிலுள்ள அரசு பள்ளிகளும், அரசு பொறியியல் கல்லூரிகளும் பெருகி வருவது கண்கூடு. இதனால் அரசு பள்ளிகளில், கல்லூரிகளில் படிப்பதென்பதுகூட கனவாகி உள்ள கீழ்மட்ட ஏழைகளின் பிள்ளைகளுக்கு இனி அந்த கதவும் நிரந்தரமாக மூடப்படும் அபாயம் வெகு தொலைவில் இல்லை.

இன்றைய இந்தியாவின் நிலை குறித்த கவலையும் இதை மாற்றுவதற்கான முயற்சியும் என்ற நிலையில் ஆசிரியர்களின் நிலை என்ன என்பது குறித்து ஆராய்ந்தால், ஆசிரியர்கள் அடுத்தவரிடமிருந்து அந்நியப்பட்டு நிற்பதையும், தங்களைச் சுற்றி ஒரு வட்டத்தை ஏற்படுத்திக் கொள்வதையும், சிந்தனை வறட்சியில்  எதையும்  வெறுத்துப் பேசுவதையும் போக்காகக் கொண்டுள்ளதைக் காண முடிகிறது. மாணவர்கள், நெருக்கடி வாழ்வின் தினசரிகளுக்கிடையே காணாமல் போய்கொண்டிருக்கும் மனிதத்தைப்  படித்த ஆசிரியர்களிடமிருந்தாவது கிடைக்காதா என எதிர்பார்க்கிறார்கள். ஆசிரியர்கள் மட்டுமல்ல, படித்த இளைஞர்களும் தன் சொந்த வாழ்வைத் தாண்டி இந்த நாட்டிற்குச் செய்வது என்ன?

குடும்பத்தைக் காப்பாற்றவும் தேவைகளுக்குச் சம்பாரிக்கவும், விலைவாசியோடு போராடுவதும் இளைய தலைமுறையோடு தலைமுறை இடைவெளி சிக்கலைச் சமாளிப்பதுமாய் இன்றைய ஆசிரியர்கள் சிக்கித் தவிப்பது உண்மைதான். ஆனால், எல்லாச் சிக்கல்களுக்கப் பின்னாலும் அரசின் கொள்கைகளும், மாணவர்களின் எதிர்காலமும் அவரவர் பிள்ளைகளின் எதிர்காலமும் உள்ளன என்பதை யாரும் மறுக்க முடியாது. அதேசமயம் ஒவ்வொரு மாணவனின் முன்னேற்றத்தின் பின்னும் ஒட்டு மொத்தச் சமூகத்தின் முன்னேற்றமும் உள்ளது என்பதை அனைவரும் எண்ணிப் பார்க்க வேண்டும்.

Image result for deschooling 
இந்நிலை மாற இரண்டு மாற்றங்கள் தேவை. ஒன்று மேலை நாட்டினரின் பொருள் நெறி சார்ந்த பாடத்திட்டத்தை நீக்கிவிட்டு, தமிழ்நாட்டின் அறநெறிசார்ந்த கல்வித்திட்டத்தை கொண்டு வருவது. அடுத்த நூற்றாண்டை மனதில் வைத்து, மனிதத்தை மையமாக வைத்து கல்வித்திட்டம் உருவாக்கப்பட வேண்டும். மனித மதிப்பு, இயற்கை மதிப்பு, அற நெறி மதிப்பு, வாழ்க்கை மதிப்பு  போன்ற மதிப்புகளை வாழ்க்கை விழுமியங்களைக் கற்றுத் தருவதாக கல்வி இருக்க வேண்டும். ஒழுக்கத்தைக் கற்றுத் தருவதே கல்வியாகும். ஒவ்வொரு மனிதனுக்குள் உறங்கிக் கொண்டிருக்கும் நல்ல தன்மைகளை வெளிக் கொணர்ந்து அவற்றை பிரகாசிக்கச் செய்வதாக கல்வி அமைக்கப்படவேண்டும். இன்றைய சமூகத்தில் ஆசிரியர் –மாணவர் இருவரிடமும் ஒழுக்கமும் கட்டுப்பாடும் மிகவும் தாழ்ந்து போயுள்ளது. சமீபத்தில் வெளியாகியுள்ள ஆசிரியர் பாலியல் வன்முறை சம்பவங்கள் மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இது போன்ற சம்பவங்கள் கிராமப்புறங்களில் நடக்கும் பொழுது பெண்களை மீண்டும் வீட்டிற்குள் முடக்கிவிடக் கூடிய அபாயம் உள்ளது.

 பள்ளிகளில் மட்டுமல்ல உயர்கல்விக் கூடங்களில் கூட ஆய்வாளராகச் சேரும் மாணவியரிடம் தவறாக நடக்கும் நெறியாளர்கள பெண்களின்  உயர்கல்விக்கு உலை வைக்கிறார்கள். இதற்குக் காரணம் இன்றய கல்விமுறை வாழ்க்கை வசதிகளை உயர்த்திய அளவிற்கு  வாழ்க்கையின் மீதான மதிப்புகளை உயர்த்தவில்லை என்பதே. தேர்வு முறை, வேலைவாய்ப்பு, வசதியான வாழ்க்கை இவற்றை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு கல்விமுறை வகுக்கப்பட்டிருப்பது இப்படிப்பட்ட சிக்கல்களுக்குக் காரணங்களாகும். மனிதர்களிடம் மன சிக்கல்கள் பெருகிக் கொண்டேதான் போய்க்கொண்டிருக்கிறது. உண்மையான நேர்மையான ஆசிரியர்கள் முறையான ஆய்வைச் செலுத்த விழையும் போது பட்டத்திற்காகவே படிக்க வந்த திறமைக் குறைவான மாணவர்கள் ஆசிரியர் பாலியல் ரீதியாகத் தொந்தரவு கொடுக்கப்பதாகக் கூறி மிரட்டி பட்டத்தைப் பெற முனையும் போக்கு  கலாச்சார அதிர்ச்சியை மறுபுறம் தந்து கொண்டிருக்கிறது.  இந்நிலைமை கல்வியில் விழுமியக் குறைவை காட்டி நிற்கிறது.

Image result for life in school 

மாணவர் –ஆசிரியர் இடைவெளி அதிகரித்து வருவதும், ஆசிரியர்கள் தங்கள் இச்சைகளுக்கு மாணவர்களைப் பயன்படுத்த நினைப்பதும் ஆசிரியர்களுக்கு எதிரான மனநிலையில் மாணவர்கள் வளர்வதும் கண்டிப்பாகத் தவிர்க்கப்படவேண்டும்.

வகுப்பறையில் ஆசிரியர்கள் கல்வியை கற்பிக்கும் போது மாணவர்களிடையே ஒற்றுமை, ஒழுக்கம்,  பிறருக்கும் உதவும் குணம், அன்பு பாராட்டுதல், சாதி மத வேற்றுமை பாராட்டிருத்தல் போன்ற குணங்களை உருவாக்கிட வண்டும். இதற்கு ஆசிரியர்கள் மனிதநேயம் மிக்கவராக நன்னடத்தை உள்ளவர்களாக நடந்து கொள்ள வேண்டும். கற்கள் கடவுளாவது சிற்பியால். விதைகள் விருட்சமாவது விவசாயியால். மாணவர்கள் பண்பாளர்களாவது ஆசிரியரால். அறிவால் உலகை வெல்லும் ஆற்றல் ஆசிரியர்களுக்குண்டு. எழுத்தறிவித்தவன் இறைவன் என்பார் அதிவீரராம பாண்டியர்.


ஒவ்வொரு ஆசிரியரும் மாணவனுக்கு நம்பிக்கை தரும் வேர் போன்றவர். இந்த வேர் மாணவர்களிடத்தில் உள்ள ஆளுமைப் பண்புகளை வளரச் செய்ய வேண்டும். உளவியல் அறிஞர் வாட்சன் ‘என்னிடம் குறிப்பிட்ட குழந்தைகளைத் தாருங்கள். அந்தக் குழந்தைகளை நீங்கள் விரும்பும் வண்ணம் அறிஞராக, மருத்துவராக, குற்றவாளியாக மாற்றிக் காட்டுகிறேன்‘ என்று சவால் விட்டார். எனவே ஆசிரியர் பணி என்பது மாணவர்களுக்கு தன்னம்பிக்கை ஊட்டி, அவர்களைப் பிறருக்குப் பயன்படும் வகையில் நிழல் தரு மரங்களாக, கனிகளாக மாற்றிக் காட்டும் மகத்தான பணியாகும். எனவேதான் ஆசிரியர் பணி அறப்பணி என்றார்கள் . அர்ப்பணிப்பு இதயம் உள்ளவர்களால் மட்டுமே இந்த மகத்தான பணியை மேற்கொள்ள முடியும். தற்போதைய நிலைமையில் ஆசிரியர் பணி ‘சேவை‘ என்ற நிலையிலிருந்து முழுக்க முழுக்க மாற்றமடைந்து தொழில் என்ற நிலைமைக்கு வந்து விட்டது.

ஆசிரியர்களை மட்டும் இதற்குக் காரணம் காட்டிவிடமுடியாது. கல்வி நிறுவனங்களும் சேவை என்ற நிலையிலிருந்து மாறி வணிகம் என்ற நிலைமைக்கு மாறி விட்டன. இந்நிறுவனங்களுக்கு பெற்றோர்கள் வாடிக்கையாளர்கள். வாடிக்கையாளர்களாகிய பெற்றோர்கள் விரும்பும் வகையில் மாணவர்களை உருவாக்கித் தர வேண்டிய நிலையில் கல்வி நிறுவனங்கள் உள்ளன. பாடத்திட்டங்களை அப்படியே மனனம் செய்து எல்லா மாணவர்களும் நூறு மதிப்பெண்கள் எடுக்க வேண்டும். ஆழமாகப் படித்து பொருள் புரிந்து கொண்டுதான்  மதிப்பெண் எடுத்தானா என்பதெல்லாம் தேவையில்லை. பாடத்திட்டம் எப்படியிருந்தாலும் புரிந்தாலும் புரியாவிட்டாலும் யாருக்கும் கவலையில்லை. நடைமுறைக்கு அப்பாடத்திட்டம் தொடர்புடையதாக இருக்கிறதா? அவனுடைய உள் ஆற்றலை வளர்க்கிறதா ?  புரியும் மொழியில் தான் பாடத்திட்டம் உள்ளதா? அதையெல்லாம் குறித்து யாருக்கும் கவலையில்லை. பள்ளி மாணவனா விரும்பும் மேற்படிப்பை  எடுக்குமளவிற்கு மதிப்பெண் எடுக்க வேண்டும். கல்லூரி மாணவனா பன்னாட்டு நிறுவனத்தில் சென்று எடுக்குமளவிற்கு மதிப்பெண் எடுக்க வேண்டும். பணிபுரிய வேண்டும்.


இவையெல்லாம் மாணவர்களின் சிந்தனையாற்றலைச் சிதைத்து விடுகின்றன. சுய சிந்தனையால் புதியனவற்றை கண்டுபிடிக்கும் ஆற்றலுடையவன்,  சொந்தத் தொழில் தொடங்கி முதலாளியாக வேண்டியவன் காலம் முழுவதும் ஒரு நிறுவனத்தில் தொழிலாளியாகியே மடிந்து போக விதிக்கப்படுகிறான். பன்னாட்டு நிறுவனமென்னும் புல்டோசர்கள் பல விருட்சங்களை முளையிலேயே மிதித்து கொன்று விடுகின்றன.

 அப்துல் ரகுமான் கூறுவது போல குழந்தைகளைக் கிழித்துவிடாத பாடப்புத்தங்கள் தேவை’. படைப்பு மனதைப் பாழாக்கிச் சொன்னதைச் செய், சொல்லிக் கொடுத்ததைத் திரும்ப எழுது என்று கட்டளைக்கு அடி பணிந்து சேவகம் செய்யும் அடிமை மாணவர்களை உருவாக்கும் இன்றைய கல்வித்திட்டம் கண்டிப்பாக மாற்றப்படவேண்டும்.

பெரும்பாலான அரசு பள்ளிகளும் கல்லூரிகளும் பரந்து பட்ட இடங்களை அல்லது உயர்ந்த கட்டடங்களைக் கொண்டுள்ளன. இந்தியா போன்ற விவசாய நாடுகளில் எப்பாடத்திட்டமாயினும் வேளாண் சார்ந்த கல்விமுறையை இணைத்து பாடத்திட்டங்களை அறிமுகப்படுத்தலாம். மண்சார்ந்த இடங்களில்  காய்கறிகளைப் பயிரிடவும், நல்ல மரங்களை, செடிகளை நடவும் அவர்களுக்குக் கற்றுக் கொடுக்கலாம். நாட்டுநலப்பணித்திட்ட மாணவர்கள் மட்டுமே பங்கேற்கும் இத்திட்டத்தை அனைத்து தரப்பு மாணவர்களுக்கும் கொண்டு செல்லலாம். மொட்டை மாடியில் பாதுகாப்பான முறையில் சாக்குப் பைகளில் மண்ணை நிரப்பி ஆழமில்லாத வேர்களையுடைய செடிகளை நட்டு பராமரிக்கச் செய்யலாம். இயற்யையோடு இணைந்த வாழ்வின் அவசியத்தை உணர்ந்து வாழச் செய்யலாம்.

உடல் உழைப்பைக் கேவலமாகக் கருதக் கூடிய கல்வி முறைதான் வேலையில்லாத் திண்டாட்டத்திற்கு அடிப்படைக் காரணம்.
கல்வி ஒருவருக்கு மற்றவரை வழி நடத்தும் தகுதியைத் தரவேண்டும். தன் படிப்பை முடித்துவிட்டு வெளிவரும் ஒருவன், தன் வாழ்வாதாரங்களை மட்டும் தேடுபவனாக இல்லாமல், குடும்பத்திற்கும் சமூகத்திற்கும் ஆற்ற வேண்டிய கடமை குறித்தும், சமூகத்தைப் பாதிக்காத நன்மை குறித்தும், அறியும் அறிவையும் விழிப்புணர்வினையும் கொண்டவனாக இருக்கவேண்டும்.

இந்தியா போன்ற மக்கள் தொகை மிகுந்த நாடுகளில் வேளாண் தொழில் புறக்கணிப்பு, கைத்தொழில் புறக்கணிப்பு, எந்திரமயமாக்கல், உலகமயமாக்கல் போன்றவை வேலையில்லாத் திண்டாட்டத்தை உருவாக்குகின்றன. காந்தியின் சுதேசி பொருளாதாரமுறை, எந்திரமயமாக்களைத் தவிர்த்தல், வேளாண் சார்ந்த கல்விமுறை போன்றவை வேலையில்லாத் திண்டாட்டத்திற்குத் தீர்வாகும்.

படித்தவர்    உடலுழைப்பில்    ஈடுபட்டால்   அவர்    மட்டுமின்றிஅவர்   குடும்பமும் நாடும் உயரமுடியும். உடல் உழைப்பிற்குரிய மதிப்பும் மரியாதையும் கூடும். படிப்பும், உடல் உழைப்பும் இணைந்தால் அனைவருக்கும் வேலை கிடைக்கும் ; யாருக்கும் வேலை கொடுக்கவும் முடியும் என்ற நிலையை இளைஞர்கள் உருவாக்க வேண்டும்.உடலுழைப்பு கேவலம் என்று நினைத்துநம்மை நாமே பிணித்துக் கொண்டுள்ளோம். உடலுழைப்பைக் கேவலமாய்க் கருதி அந்த எண்ணமென்னும் விலங்கை உடைத்தெறிய உழைப்பு என்னும் ஆயுதம் தேவை. அதுவும் நம் கையில் தான் உள்ளதுஎன ஒவ்வொரு இளைஞனும் நினைக்க வேண்டும்.
வாழ்க்கையைப் பூஞ்சோலையாக மாற்றுவதற்கு உடல் உழைப்புதான் உரம்என்கிறார். இதனால், அரசு வேலை கொடுத்து மக்களைக் காப்பாற்றும் என்ற நிலைமாறி, உடல் உழைப்பின் மேன்மையினால், இளைஞர்கள் இந்தியாவைக் காத்திடும் நிலை உருவாகிவிடும் என்கிறார்.

கல்வி வேறு, உடல் உழைப்பினால் உருவாக்கப்படும் கலைகள் வேறு என்று பிரித்துப் பார்க்காமல், இரண்டையும் ஒன்று போலவே பாவிக்கும் மனநிலையை இளைஞர்கள் பெற வேண்டும். உடலுழைப்பின் இன்றியமையாமையை உணரந்துவிட்டால், உண்மையான சுதந்திரத்தின் மேன்மையை உணர்ந்திடுவர். பெற்றோர் மனநிலையிலும் மாற்றம் வரவேண்டும். கல்வியாளர்கள், நிறுவனங்கள், ஆசிரியர்கள், அரசு,மாணவர்கள் என்று ஒட்டு மொத்த சமுதாயமுமே ஒன்றிணைந்து செயல்பட்டால் எதையும் சாத்தியமாக்கலாம்.

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்களைப் பதிவு செய்யலாமே?