நீரின்றி அமையாது உலகு.

முனைவர் ஜ.பிரேமலதா,தமிழ் இணைப்பேராசிரியர், அரசு கலைக் கல்லூரி, சேலம் 636 007 DR.J.PREMALATHA,ASSOCIATE PROFESSOR IN TAMIL,GOVT ARTS COLLEGE,SALEM -636 007.

Saturday, 30 April 2016

ஆசிரியர் - மாணவர் உறவு

ஆசிரியர் - மாணவர்  உறவு


Image result for professor 
கல்லூரிப் பேராசிரியர் பணி அவ்வளவு எளிதல்ல. அணைக்கட்டிலிருந்து திறந்து விடப்பட்ட காட்டாற்று வெள்ளம் போல் மாணவர்கள் கல்லூரிக்கு வருவர். நம்முடைய திரைப்படங்கள் அவர்கள் மனதில் பதிய வைத்துள்ள கல்லூரி பற்றிய பதிவுகள் நடப்பியலுக்கு அப்பாற்பட்டவை. இளமையில் அனுபவிக்கக் கூடிய உல்லாசமான பருவ வயது குறும்புகளை வெளிப்படுத்தவே கல்லூரி ஆரம்பிக்கப்பட்டுள்ளது என்பது போன்ற பதிவுகளே மிகுதி. குல்லூரியில் முறையாகக் கற்று கடினமாக உழைத்து, கல்வியினால் முன்னேறிய ஏழை மாணவன் செல்வந்தனமாக மாறுவது போல எந்தப் படத்திலாவது ஒரு காட்சியாவது பதிவாகியிருக்கிறதா என்றால். . . . சொல்லும்படி இல்லை.
கல்லூரி என்றாலே விதவிதமான ஆடை அலங்காரங்கள், முடி அலங்காரங்கள், கலாட்டா, கேலி, கிண்டல். . . . . இவை ஒருபக்கம். கல்லூரி ஆசிரியர்களை நையாண்டியாக்கி சித்தரிக்கும் காட்சிகள் மறுபக்கம். இந்த நினைவோடு கல்லூரிக்கு வரும் மாணவர்கள் முறையாக பாடம் நடத்தும் ஆசிரியர்களையும், முறையாக நடக்கும் வகுப்புகளையும் விரும்புவதில்லை. இயல்பிற்கு மாறாக, அவனுடைய சுதந்திரத்தைப் பறிப்பது போல கருதி அதற்கு எதிர்வினையாற்ற முயல்கிறான்.
இவையெல்லாம் ஆரம்ப கால நாட்களில் மிகுதியாக இருக்கும். நான் வேடிக்கையாக முதலாண்டு மாணவர்களிடம் சொல்வதுண்டு. பால்மணம் மாறாத பச்சிளம் குழந்தைகளின் முகத்தை வைத்தபடி கல்லூரிக்குள் நுழையும் மாணவர்கள் கொஞ்சம் கொஞ்சமாக மாறி பேராசிரியர்களே கண்டு பயப்படும் நிலைக்கு மாறிப் போய்விடுகிறார்கள் என்று.
 .Image result for professor
ஆனால் இவர்கள் மாற்ற முடியாதவர்களல்ல. முh முடியாதவர்களுமல்ல. ஆசிரியர்கள் சிறிது அக்கறையோடு அவர்களை ஆணுகினாலே போதுமானது. நான் கல்லூரிப் பணிக்கு சேர்ந்த ஆரம்ப நாட்கள். சிவராமன் என்றொரு மாணவன் விளையாட்டுத் துறையிலும் ஈடுபாடு கொண்டு, பயிற்சி பெற்று வந்தான். விளையாட்டைக் காரணம் காட்டி வகுப்பிற்கு எப்போதாவது வருவதுண்டு. ஒருமுறை அவன் வகுப்பிற்கு வந்திருந்தபோது அம்மாதத்திற்கான சிறு தேர்வு வைத்திருந்தேன். ‘நான் விரும்பும் புலவர்என்ற தலைப்பில் 3 பக்கம் எழுத வேண்டும். சிவராமன் விளையாட்டுப் பயிற்சிக்குப் போகவேண்டும் என்றான். அம்மாதம் கொடுக்க வேண்டிய மதிப்பெண் பட்டியலைக் கூறிசீக்கிரமா 3 பக்கம் எழுதிட்டு போஎன்றேன் பிடிவாதமாக
அவனும்,  மேடம் 3 பக்கம் தானே?’ என்றான். ‘ஆமாம்என்றேன். தலைப்புநான் விரும்பும் புலவர் தானேஎன்றான். நானும் சரி வழிக்கு வந்துவிட்டான் என மகிழ்வோடுஆமாம்என்றேன். ‘சரி எழுதிட்டா அனுப்பிடுவீங்களா?’ என்றான். ‘சொன்னபடி அனுப்பிவிடுகிறேன்என்றேன். மற்ற மாணவர்கள் அமைதியாக எழுத ஆரம்பித்திருந்தார்கள். சிவராமன் கட்டுரை நோட்டை வாங்கிக் கொண்ட தன் இடம் சென்றான். ஒரு நிமிடம் கூட ஆகவில்லை. ‘மேடம் எழுதிட்டேன். நான் கிளம்பட்டுமாஎன்றான். எனக்கு வியப்புத் தாளவில்லை. ‘அதற்குள்ளாகவா எழுதிவிட்டாய்என்றேன். ‘சந்தேகம்னா பார்த்துக் கொள்ளுங்கள்என நோட்டை விரித்துக் காண்பித்தான். நான் வியந்து போனேன். 3 பக்கம் எழுதியிருந்தான். 1 நிமிடத்தில் எப்படி என்கிறீர்களா?
ஒரு பக்கத்தில் மிகமிகப் பெரியதாகநான்என எழுதியிருந்தான். வேறெதுமில்லை அடுத்த பக்கத்தில்விரும்பும் புலவர்’ 3வது பக்கத்தில்பாரதியார்’. அவ்வளவுதான் ஒரு நிமிடத்தில் 3 பக்கமும் எழுதப்பட்டு விட்டது. எனக்குக் கோபம் வந்தாலும் அவனுடைய துணிச்சலையும், புத்தி கூர்மையையும் நினைத்து வியந்து போனேன்.
சரி. நீ கிளம்பு என்றேன். சிரித்தபடி அவனே எதிர்பார்க்கவில்லை போலும் என் அனுமதியை. ‘மேடம் தப்பா நினைத்துக் கொள்ளாதீர்கள். இன்று கண்டிப்பாக பயிற்சிக்குப் போகணும்அதான் என்றான்.
அதற்குப் பிறகு என்னுடைய எந்த வகுப்பையும் அவன் தவற விட்டதேயில்லை. தற்போது வங்கியில் பணிபுரியும் அவன் இத்தனை வருடங்கள் கடந்த பின்னும் எப்போதாவது தொலைபேசியில் உரிமையோடு பேசுவான்.
அன்றைக்கு நான் கோபப்பட்டிருந்தால் நல்ல புத்திசாலி மாணவனை இழந்திருப்பேன். ஆசிரியர் தொழிலுக்கு அடிப்படை ஆழ்ந்த அறிவு மட்டுமல்ல. கனிவான நடத்தையும் தான் என்று இந்த சம்பவம் எனக்கு உணர்த்தியது. கீற்றாய் எழும் நம்பிக்கைகள் பெரும் காற்றாய் மாறிடும் விந்தைகள் நம் வாழ்வில் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. உண்மையில் கட்டாயம் மாணவர் வகுப்பறையில் அமர்ந்து தான் இருக்க வேண்டும். கட்டுப்பட்டுத் தான் நடக்க வேண்டும் என்று திணிக்கும்பொழுது அது எதிர்மறையான கருத்துக்களையே தோற்றுவிக்கிறது. மேலதிகாரியிடமிருந்துகட்டாயம்என்ற சொல்லை ஆசிரியர் வெறுப்பது மாதிரியே மாணவர்களும் வெறுக்கத்தானே செய்வார்கள்.
மாணவர்கள் கல்வியை விரும்ப வேண்டுமென்றால் கட்டாயம் என்பது தேவையில்லாதது. அதுவே மிக கேடு விளைவிப்பதாக மாறிவிடும் அபாயமும் உள்ளது. அதுவும் கல்லூரி மாணவர்களை கட்டாயப்படுத்தி, மிரட்டி, அடிபணிய வைப்பதென்பது சிக்கலுக்குரியது. அதற்குப் பதிலாக எவ்வித தூண்டுதலுமின்றி மாணவர்கள் வகுப்பறையில் அமர்ந்திருக்கும் சூழலை உருவாக்க வேண்டும். மாணவர்கள் கட்டாயம் வகுப்பறையில் அமர்ந்திருக்க வேண்டும் என்பது உண்மைதான். ஆனால் கட்டாயம் என்ற சொல்லை வெறுக்கிறேன். மாணவர்கள் தாங்களாகவே விரும்பி வகுப்பறைக்கு வரவேண்டுமென்பதையே யாவரும் விரும்புவர்.
வகுப்பறைகள் சிறைச்சாலைகளாக மாற்றம் பெறுவதை மாற்றிட முடியும். கதவுகளையும், ஜன்னல்களையும் திறந்திடச் செய்து மாணவர்களின் திறமைகளையும் புத்தி கூர்மைகளின் மீது வெளிச்சம் பாய்ச்சிடச் செய்ய வேண்டும். ‘கட்டாயம்என்ற சொல்லை நீக்கிஇனிமைஎன்ற நோக்கில் வகுப்பறைச் சூழலை மாற்றிட வேண்டும். படித்ததை அப்படியே ஒப்பிப்பது, தேர்வு நோக்கில் படிப்பது முதலானவற்றை நோக்கி செல்வதைத் தவிர்க்க வேண்டும். நெடுந்தூரம் நோக்கி மாணவர் கல்விப் பயணத்தை மாற்றிட வேண்டும். பாடப் புத்தகம் என்றாலே மாணவர்கள் வெறுப்புடன் அணுகும் முறையை மாற்றிட வேண்டும். அதற்கு ஆசிரியரின் பரந்த, ஆழ்ந்த வாசிப்பு துணை புரியும்.
 .Image result for professor
இன்றைய அவசர உலகத்தில் கல்வி போதிக்கப்படுவதற்குப் பதிலாக திணிக்கப்படுகிறது என்றுமாணவர்கள் கருதுகிறார்கள்’. ‘மாணவர்கள் முளையில் விதையைப் போல் தூவப்பட வேண்டிய அறிவு ஆணியைப்போல் அறையப்படுகிறது.’ என்கிறார் கவிஞர் வைரமுத்து. தேர்வு ஒன்றே குறிக்கோள் மனப்பாடம் செய்வதே கல்வி என்று பள்ளிக்கல்வி வரை பழகி வந்த மாணவர்கள் கல்லூரி வந்தவுடன் சுயமாக சிந்திக்கவும் திறனற்றவர்களாக மாறிப் போகிறார்கள். கல்வி என்பது மாணவர்களுக்கு அச்சத்தைப் போக்கி எதையும் சமாளிக்கும் ஆற்றலை வளர்ப்பதாக இருக்க வேண்டும். மாறாக அவர்களை வகுப்பறைக்குள் முடக்கி முரண்பட்ட சிந்தனைகளை வளர்த்து அவர்களுக்கு தன்னம்பிக்கை குறைவை ஏற்படுத்துகிறது. தேர்வு முறை ஒரு பயிற்சி முறை அவ்வளவே. நுன்றாகப் புரிந்து கொள்ளக் கூடியவன் அதை எழுத்தின் வழி வெளிப்படுத்த முடியாமல் போகலாம். சுய சிந்தனையற்றவன் மனனம் செய்து எழுத்தில் வெளிப்படுத்தி கூடுதல் மதிப்பெண்கள் பெறலாம்

வாழ்க்கையில் என்ன காண்கிறோமோ அதைப் பற்றிய அறிவு, எதிர் கொள்ள வேண்டிய சிக்கல்களுக்கான தீர்வு, அன்றாட வாழ்ககைப் போக்கு ஆகியனவற்றை ஒட்டிப் பாடங்கள் அமைக்கப்பட வேண்டும். வாழ்க்கைக்கும் வகுப்பறைக்குமிடையே மிகப்பெரிய திரைச்சீலை தொங்கிக் கொண்டிருக்கிறது. அதுபோல ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்குமிடையேயும் மிகப்பெரிய திரை உள்ளது. இதை ஆசிரியர் நினைத்தால் மாற்றலாம். மாணவர்களை படி, படி என்று கூறும் ஆசிரியர்கள் தங்களுக்கும் அது பொருந்தும் என நினைப்பதில்லை. புத்தகமின்றி வகுப்பிற்குச் செல்வது, முன் தயாரிப்பின்றி வகுப்பிற்குச் செல்வது, நடப்பியலை அறிந்து கொள்ளாமலிருப்பது, தனக்கு எல்லாம் தெரியும் என்ற தோரணையில் வகுப்பு எடுப்பது இவையெல்லாம் மாணவர்களை ஆசிரியர்களை விட்டு விலகச் செய்கின்றன. ஒரு குடத்தில் ஊற்றிய நீரை இரு நாட்களுக்கு மேல் மாற்றிக் கொண்டே இருப்பது போல தான் எடுக்க வேண்டிய பாடங்களையும் புதிது புதிதாக ஆசிரியர் இரண்டாண்டுக் கொருமுறையாவது மாற்றிக் கொள்ள வேண்டும். ஒவ்வொரு துறையிலும் எத்தனையோ பாடங்கள் உள்ளன. எல்லாவற்றையும் பற்றி ஆசிரியர் படித்து தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டும். சில பாடங்களிலாவது ஆழ்ந்த நுண்ணிய அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டும். மாறாக சில ஆசிரியர்கள் தாங்கள் படித்த காலத்தில் படித்த பாடங்களைத் தவிர பல புதிய தற்காலத்திற்கேற்ற பாடத்திட்டங்களைக் கையால் கூட தொடமாட்டார்கள். இன்னும் சில பேர் பழமை மட்டும் உயர்ந்தது. தற்காலத்தில் வருவனவெல்லாம் குப்பை என்பது போன்ற தங்கள் கருத்துக்களை மாணவர்கள் மீது திணிக்கச்செய்து விடுவதுண்டு. தனக்குத் தெரியாது என்பதற்காக அதைப் பற்றி மாணவர்களிடம் குறைவாக மதிப்பிட்டுக் கூறும்பொழுது மாணவர்களும் அதை உண்மையென்று நம்பி, அதுபோன்ற பாடங்களைப் புறக்கணிக்கிறார்கள்.  

உண்மையில் இப்படி பிற பாடங்களை குறைவாக மதிப்பிடுபவர்களுக்கு தாம் அறிந்த பாடங்களிலும் ஆழ்ந்த அறிவு உண்டா என்றால் அதுவுமில்லை. வகுப்பறையில் பேசப்படும். நல்ல செய்திகளை விட தவறான செய்திகள் மிகப்பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தி விடுவதுண்டு. எதுவாயினும் தன் சொந்த கருத்தை கல்லூரி மாணவர்களிடம் திணிக்காமலிருப்பது நல்லது.
கல்லூரி மாணவர்கள் பரந்த ஆழ்ந்த கருத்துக்களை சுவையாகச் சொல்லும் ஆசிரியர்களையே விரும்புகிறார்கள். தற்காலத்து மாணவர்களிடம் நுhலகம் செல்வது என்பது மிக அருகி வருகிறது. நுhலகத்திற்குச் செல்வதற்கும், நுhல்கள் வாசிப்பதற்கும் மாணவர்களை ஆசிரியர்கள் கட்டாயப்படுத்த முடியாது. ஆனால் பல நுhற் கருத்துக்களை தம் பாடத்தோடு இணைத்துச் சொல்லும் ஆசிரியர்கள் மறைமுகமாக மாணவர்களை நுhலகத்திற்குச் செல்ல தூண்டுகிறார்கள். அது கதையாக இருக்கலாம். அல்லது கட்டுரையாக இருக்கலாம். ஒரு சிறு செய்தியாகக் கூட இருக்கலாம். அதற்கு ஆசிரியர்கள் தொடர்ந்து படிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டு தன்னை மேம்படுத்திக் கொள்ள வேண்டும். நுhலளவே ஆகுமாம் நுhலாம்பல் என்பது போலஓர் ஆசிரியரின் நுhலாலே ஆகுமாம் மாணவர்களின் உயர்வு! என்ற உண்மையை உணர வேண்டும். ஒரு நாட்டின் சிறந்த மாணவர்கள் அந்நாட்டின் முன்னேற்றத்திற்கு காரணமாகின்றனர். இதில் ஆசிரியரின் பங்கும் குறிப்பிடத்தக்க அளவில் உள்ளது. இந்த உண்மையை அடிப்படையாகக் கொண்டு கல்வி மேம்பாட்டிற்கான அடித்தளத்தை உணர்ந்து ஆசிரியர்களும் வலுவான அடித்தளமாக இருக்க உறுதிபூண்டு செயல்பட்டால் எதுவும் சாத்தியமே.
கல்லூரி மாணவர்கள் இளம் பருவ குமரப் பருவத்தினர். இவர்களிடம் அவர்கள்  வயதில் உலகில் பெரிய சாதனைகளைச் செய்த சாதனையாளர்களைப் பற்றிக் கூறி ஊக்கத்தை ஏற்படுத்தும் கடமை ஆசிரியர்களுக்குள்ளது. மேலும், பகுத்தறிவு சார்ந்த அறிவியல் கருத்துக்களை விதைக்க வேண்டிய பருவமும் இதுவே. இவ்வயதில் உள்ளவர்கள் மிக எளிதாக தடம் மாறிச் சென்று விடக்கூடியவர்கள். எனவே இப்பருவத்தினர் கண்ணாடிப் பாத்திரம் போன்றவர்கள். இவர்களைப் பக்குவமாக கையாள வேண்டும்.  எவ்வித கீறலும், தவறான கையாளும் முறையும் இவர்களை திசை திருப்பி விடும். ஆசிரியர்கள் சிந்திப்பதை விட மிக விரைவாக சிந்திக்கும் இளமைத் துடிப்புள்ள இப்பருவத்தினரை வாழ்ந்து காட்டி வழிகாட்டுவதைத் தவிர எவ்வகையிலும் நல்வழிக்கு கொண்டு வர முடியாது. இவ்வயதில்தான் சினிமா ஹீரோக்கள் இவர்களை கவருகிறார்கள். ஒரு நல்ல ஆசிரியரும் கூட ஹீரோ ஆக முடியும் இவர்கள் மனதில். பாடங்களுக்கு நெருக்கமாக இருக்க ஆசிரியர், மாணவரை புரிந்து கொண்டு நடக்கும் ஆசிரியர் உண்மையான ஹீரோதான்.

1 comment:

உங்கள் கருத்துக்களைப் பதிவு செய்யலாமே?