ஆயுதங்கள் எடு.
அணுகுண்டு வீசு.
போர் தந்திரங்களைப் பயன்படுத்து.
பலப்படுத்திய படைகளைக் களமிறக்கு.
ஏன்
கை கட்டி ...
வாய் பொத்தி....
முடங்கிவிட்டாய்?
அற்ப மனிதனே.....
மார் தட்டிக் கொண்டாயே?
பார் விட்டு
விண்ணில் ஏறி
பக்கத்து கிரகத்தில்
என்ன தேடினாய்?
வசிக்க வாய்ப்பையா?
உன் காலடி மண்ணுக்குள்
மறைந்திருக்கும் மர்மத்தை மறந்து போனாய்.
கண்ணில் பட்ட
அனைத்தையும்
கைக்குள் கொணர்ந்தாய்.
சில பேர் வாழ
பல பேர் பலியாயினர்.
விதி வலியது.
இயற்கை மனிதனிடம் கற்றுக் கொண்டது.
சில கிருமிகள்
வாழ....
பல பேர் பலி.
2ம் உலக போர்
3ம் உலகப் போர் என
பெருமை பேசிய மனித குலமே!
வல்லரசு நாடாக
ஆயுதக் குவிப்பில் குறியாய் இருந்தாய்!
கண்ணாமூச்சி காட்டி
அணுகுண்டு வெடிப்பு
செய்தாய்.
இன்றுன்
கண்ணாமுழியைப்
பிதுங்க வைத்துக் கொண்டிருப்பது
ஆயுதங்கள் அல்ல.
அற்ப அரை உயிரி.
தொண்டை கிழியப்
பெருமை பேசிய உன் தொண்டையைக்
குறி வைத்தே உன் வாயடைத்து விட்டது.
மெய்ஞ்ஞானம் இல்லா விஞ்ஞானமும்
விஞ்ஞானமில்லா மெய்ஞ்ஞானமும்
தோற்றே போகும்.
எத்தனை மதங்கள்
எத்தனை சமயங்கள்
எத்தனை கதைகள்
எத்தனை சாதிகள்
எத்தனை குளறுபடிகள்.
மனிதா....
அத்தனையும் துடைத்தெறிய,
எத்தனையும்
ஏமாளியாக்க
வந்தது பார்
ஒரு கிருமி.
இனியாவது
இயற்கையை வாசி.
இயல்பை நேசி.
இனி திரும்பு.
இனி திருப்பு.
இல்லையேல் இல்லை
புவியில்
உனக்கு இருப்பு !
காதல் கொரானா
பார்வையில் ஒரு தவிப்பு.
இமைகளில் ஒரு துடிப்பு.
யாரும் யாரையும் முழுதாய் பார்க்கவில்லை.
எங்கள் இருவருக்கும் இடையே
எங்கள் இதயங்கள் கை குலுக்கிக் கொண்டிருந்தன.
வாய் ஒப்பித்துக் கொண்டிருந்தது.
பணிகள் பகிரப்பட்டுக் கொண்டிருந்தன.
எங்களைச் சுற்றி ஒரு ஒளிவட்டம்.
இது என்ன இதயமே
இப்படியாகிவிட்டது.
உன் கணிப்பு மாறியதே.
ஒரு கணமேனும் நினைத்திருப்பாயா?
நீ பல்லாண்டுகளாகக் கட்டமைத்திருந்த
அடித்தளம் காலினடியில்
நழுவிக் கொண்டிருக்கிறதே?
உன் வைராக்கியம் ....
திமிர்....
தன்னம்பிக்கை....
இயல்பான பேச்சு ....
எங்கே?எங்கே?
இதயம்
இடம் மாறியபோது
கையறு நிலையிலிருந்தாய்.
இ்டம் மாறியதா? இல்லை இதயம்
தனை இழந்ததா?
திரும்பப் பெற்றாயா?
உன் பின்னிருந்தது தேவனா? சாத்தானா?
எப்போதும் போல் இப்போதும்
இழப்பு தானா?
பெறுதல் என்பதே உன் பரம்பரையில் இல்லை தான்.
அதற்காக இப்படியா?
கெட்டாலும் மேன் மக்கள் மேன்மக்கள் தான்.
நெஞ்சழிந்து போவதிலும்
நைந்துருகி சாவதிலும்
மேன்மை எங்கிருக்கிறது?
காதலும் கொரானாவும்
ஒன்றுதான்.
வலுவற்றவற்றையே பற்றும்.
தொண்டையில் அடைப்பை ஏற்படுத்தும்.
வேகமாக பரவும்.
ஆளை உயிரோடு கொல்லும்.
மருந்து எதுவுமில்லை.
சரி இனியாவது....
தனிமைப்படுத்திக் கொள்.
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்களைப் பதிவு செய்யலாமே?