நீரின்றி அமையாது உலகு.

முனைவர் ஜ.பிரேமலதா,தமிழ் இணைப்பேராசிரியர், அரசு கலைக் கல்லூரி, சேலம் 636 007 DR.J.PREMALATHA,ASSOCIATE PROFESSOR IN TAMIL,GOVT ARTS COLLEGE,SALEM -636 007.

Friday 27 December 2013

சிலப்பதிகாரம் மதுரைக்காண்டம் 11. காடு காண் காதை

இரண்டாவது

மதுரைக்காண்டம்

11. காடு காண் காதை

உறையூரில் தங்கிய கவுந்தி முதலிய மூவரும் வைகறையில் புறப்பட்டத்
தென் திசை நோக்கிச் செல்லுகின்ற வழியில்
உதயகாலத்தில் ஓர் இள மரக் காவில் புகுதல்

திங்கள் மூன்று அடுக்கிய திரு முக் குடைக் கீழ்,
செங் கதிர் ஞாயிற்றுத் திகழ் ஒளி சிறந்து,
கோதை தாழ் பிண்டிக் கொழு நிழல் இருந்த,
ஆதி இல் தோற்றத்து அறிவனை வணங்கி,
கந்தன் பள்ளிக் கடவுளர்க்கு எல்லாம்                                            5

அந்தில் அரங்கத்து அகன் பொழில் அகவயின்
சாரணர் கூறிய தகைசால் நல் மொழி
மாதவத்து ஆட்டியும் மாண்புற மொழிந்து, ஆங்கு,
அன்று, அவர் உறைவிடத்து அல்கினர் அடங்கி,
தென் திசை மருங்கில் செலவு விருப்புற்று,                                        10
வைகறை யாமத்து வாரணம் கழிந்து,
வெய்யவன் குண திசை விளங்கித் தோன்ற,
வள நீர்ப் பண்ணையும் வாவியும் பொலிந்தது ஓர்
இள மரக் கானத்து இருக்கை புக்குழி-

மாங்காட்டு மறையோன் தென்னனை வாழ்த்தியவண்ணம்
இள மரக் காவில் புகுதல்

‘வாழ்க, எம் கோ, மன்னவர் பெருந்தகை!                                        15
ஊழிதொரு ஊழிதொரு உலகம் காக்க!’
அடியில் தன் அளவு அரசர்க்கு உணர்த்தி,
வடி வேல் எறிந்த வான பகை பொறாது,
பஃறுளி யாற்றுடன் பல் மலை அடுக்கத்துக்
குமரிக் கோடும் கொடுங் கடல் கொள்ள                                        20
வட திசைக் கங்கையும் இமயமும் கொண்டு,
தென் திசை ஆண்ட தென்னவன் வாழி!
திங்கள் செல்வன் திருக் குலம் விளங்க,
செங் கண் ஆயிரத்தோன் திறல் விளங்கு ஆரம்
பொங்கு ஒளி மார்பில் பூண்டோன் வாழி!                                        25
""""முடிவளை உடைத்தோன் முதல்வன் சென்னி"""" என்று,
இடி உடைப் பெரு மழை எய்தாது ஏக,
பிழையா விளையுள் பெரு வளம் சுரப்ப,
மழை பிணித்து ஆண்ட மன்னவன் வாழ்க!’ என,
தீது தீர் சிறப்பின் தென்னனை வாழ்த்தி,                                        30
மா முது மறையோன் வந்திருந்தோனை-

கோவலன் மறையோனுடைய வருகை பற்றி வினவுதல்

‘யாது நும் ஊர்? ஈங்கு என் வரவு?’ எனக்
கோவலன் கேட்ப-

மறையோன் தன் வரவின் நோக்கத்தை எடுத்துரைத்தல்

குன்றச் சிறப்பின்
மா மறையாளன் வருபொருள் உரைப்போன்;

திருவரங்கத்தில் திரு அமர் மார்பன் கிடந்த வண்ணம்

‘நீல மேகம் நெடும் பொன் குன்றத்துப்                                            35
பால் விரிந்து அகலாது படிந்ததுபோல,
ஆயிரம் விரித்து எழு தலை உடை அரும் திறல்
பாயல்-பள்ளி, பலர் தொழுது ஏத்த,
விரி திரைக் காவிரி வியன் பெரும் துருத்தி,
திரு அமர் மார்பன் கிடந்த வண்ணமும்-                                        40

திருவேங்கடத்தில் நெடியோன் நின்ற வண்ணம்

வீங்கு நீர் அருவி வேங்கடம் என்னும்
ஓங்கு உயர் மலையத்து உச்சி மீமிசை-
விரி கதிர் ஞாயிறும் திங்களும் விளங்கி,
இரு மருங்கு ஓங்கிய இடைநிலைத் தானத்து,
மின்னுக் கோடி உடுத்து, விளங்கு வில் பூண்டு,                                    45
நல் நிற மேகம் நின்றது போல-
பகை அணங்கு ஆழியும், பால் வெண் சங்கமும்,
தகை பெறு தாமரைக் கையின் ஏந்தி,
நலம் கிளர் ஆரம் மார்பில் பூண்டு,
பொலம் பூ ஆடையின் பொலிந்து தோன்றிய                                        50
செங் கண் நெடியோன் நின்ற வண்ணமும்-
என் கண் காட்டு என்று என் உளம் கவற்ற
வந்தேன்.
மறையோன் தனது ஊரையும், தான் தென்னனை வாழ்த்திய
காரணத்தையும் உரைத்தல்

குட மலை மாங்காட்டு உள்ளேன்;
தென்னவன் நாட்டுச் சிறப்பும் செய்கையும்
கண்மணி குளிர்ப்பக் கண்டேன் ஆதலின்,                                        55
வாழ்த்தி வந்திருந்தேன்; இது என் வரவு’ என,
தீத்திறம் புரிந்தோன் செப்பக் கேட்டு-

மதுரைக்குச் செல்வதற்கு உரிய நல்ல வழியைப் பற்றி
மறையவனிடம் கோவலன் வினவுதல்

‘மா மறை முதல்வ! மதுரைச் செந் நெறி
கூறு நீ’ என-

மாங்காட்டு மறையோன் கூறிய மதுரை வழி
கால நிலைமையையும் வழியின் அருமையையும் உணர்த்தல்

கோவலர்க்கு உரைக்கும்;
‘கோத்தொழிலாளரொடு கொற்றவன் கோடி,                                        60
வேத்தியல் இழந்த வியல் நிலம் போல’
வேனல் அம் கிழவனொடு வெங் கதிர் வேந்தன்
தான் நலம் திருக, தன்மையில் குன்றி,
முல்லையும் குறிஞ்சியும் முறைமையின் திரிந்து,
நல் இயல்பு இழந்து, நடுங்கு துயர் உறுத்து,                                        65
பாலை என்பது ஓர் படிவம் கொள்ளும்
காலை எய்தினிர் காரிகை - தன்னுடன்;
அறையும், பொறையும், ஆர் இடை மயக்கமும்,
நிறை நீர் வேலியும் முறைபடக் கிடந்த இந்
நெடும் பேர் அத்தம் நீந்திச் சென்று-                                            70

கொடும்பாளூரை அடுத்த நெடுங் குளக்கரையில்
வழி முப் பிரிவாக பிரிதல்

கொடும்பை நெடுங் குளக் கோட்டகம் புக்கால்-
பிறை முடிக் கண்ணிப் பெரியோன் ஏந்திய
அறை வாய்ச் சூலத்து அரு நெறி கவர்க்கும்-

வலப் பக்கம் செல்லும் வழி

வலம்படக் கிடந்த வழி நீர் துணியின்,
அலறு தலை மராமும், உலறு தலை ஓமையும்,                                        75
பொரி அரை உழிஞ்சிலும், புல் முளி மூங்கிலும்,
வரி மரல் திரங்கிய கரி புறக் கிடக்கையும்;
நீர் நசைஇ வேட்கையின் மான் நின்று விளிக்கும்
கானமும்; எயினர் கடமும்; கடந்தால்,
ஐவன வெண்ணெலும், அறைக் கண் கரும்பும்,                                    80
கொய் பூந் தினையும், கொழும் புன வரகும்,
காயமும், மஞ்சளும், ஆய் கொடிக் கவலையும்,
வாழையும், கமுகும், தாழ் குலைத் தெங்கும்,
மாவும், பலாவும், சூழ் அடுத்து ஓங்கிய
தென்னவன் சிறுமலை திகழ்ந்து தோன்றும்;                                        85
அம் மலை வலம் கொண்டு அகன் பதிச் செல்லுமின்-

இடப் பக்கத்துச் செல்லும் வழி

அவ் வழிப் படரீர்ஆயின், இடத்து,
செவ்வழிப் பண்ணின் சிறை வண்டு அரற்றும்
தடம்  தாழ் வயலொடு தண் பூங் காவொடு
கடம் பல கிடந்த காடுடன் கழிந்து,                                                90
திருமால் குன்றத்துச் செல்குவிர்ஆயின்,
பெரு மால் கெடுக்கும் பிலம் உண்டு. ஆங்கு,
விண்ணோர் ஏத்தும் வியத்தகு மரபின்
புண்ணியசரவணம், பவகாரணியோடு,
இட்டசித்தி, எனும் பெயர் போகி,                                                95
விட்டு நீங்கா விளங்கிய பொய்கை
முட்டாச் சிறப்பின் மூன்று உள. ஆங்கு,
புண்ணியசரவணம் பொருந்துவிர் ஆயின்,
விண்ணவர் கோமான் விழு நுhல் எய்துவீர்;
பவகாரணி படிந்து ஆடுவிர் ஆயின்,                                            100
பவ காரணத்தின் பழம் பிறப்பு எய்துவீர்;
இட்டசித்தி எய்துவீர் ஆயின்,
இட்டசித்தி எய்துவிர் நீரே.
ஆங்குப் பிலம்  புக வேண்டுதிர் ஆயின்,
ஓங்கு உயர் மலையத்து உயர்ந்தோன் தொழுது,                                    105
சிந்தையில் அவன் - தன் சேவடி வைத்து,
வந்தனை மும் முறை மலை வலம் செய்தால்,
நிலம் பக வீழ்ந்த சிலம்பாற்று அகன்தலை,
பொலங் கொடி மின்னின் புயல் ஐங் கூந்தல்,
கடி மலர் அவிழ்ந்த கன்னிகாரத்து,                                                110
தொடி வளைத் தோளி ஒருத்தி தோன்றி,
""""இம்மைக்கு இன்பமும், மறுமைக்கு இன்பமும்,
இம்மையும் மறுமையும் இரண்டும் இன்றி ஓர்
செம்மையில் நிற்பதும், செப்புமின், நீயிர்? இவ்
வரைத் தாள் வாழ்வேன்;  வரோத்தமை என்பேன்;                                     115
உரைத்தார்க்கு உரியேன்;  உரைத்தீர் ஆயின்,
திருத்தக்கீர்க்குத் திறந்தேன் கதவு"""" எனும்,
கதவம் திறந்து, அவள் கட்டிய நல் நெறிப்
புதவம் பல உள, போகு இடைகழியன;
ஒட்டுப் புதவம் ஒன்று உண்டு; அதன் உம்பர்                                        120
வட்டிகைப் பூங்கொடி வந்து தோன்றி,
""""இறுதி இல் இன்பம் எனக்கு ஈங்கு உரைத்தால்,
பெறுதிர் போலும் நீர் பேணிய பொருள்"""" எனும்;
""""உரையீர் ஆயினும் உறுகண் செய்யேன்;
நெடு வழிப் புறத்து நீக்குவல் நும்"""" எனும்,                                        125
உரைத்தார் உளர் எனின், உரைத்த மூன்றின்
கரைப்படுத்து, ஆங்குக் காட்டினள் பெயரும்.
அரு மறை மருங்கின், ஐந்தினும் எட்டினும்,
வரு முறை எழுத்தின் மந்திரம் இரண்டும்
ஒரு முறையாக உளம் கொண்டுஓதி,                                            130
வேண்டியது ஒன்றின் விரும்பினிர் ஆடின்,
காண்தகு மரபின அல்ல மற்றவை.
மற்றவை நினையாது மலைமிசை நின்றேன்
பொன் தாமரைத் தாள் உள்ளம் பொருந்துமின்.
உள்ளம் பொருந்துவிர் ஆயின், மற்று அவன்                                        135
புள் அணி நிள் கொடி புணர்நிலை தோன்றும்;
தோன்றியபின், அவன் துணை மலர்த் தாள் இணை
ஏன்று துயர் கெடுக்கும் இன்பம் எய்தி,
மாண்பு உடை மரபின் மதுரைக்கு ஏகுமின்;
காண்தகு பிலத்தின் காட்சி ஈது.                                                140

இடைப்பட்ட வழி

‘ஆங்கு
அந் நெறிப் படரீர்ஆயின், இடையது
செந் நெறி ஆகும்; தேம் பொழில் உடுத்த
ஊர் இடையிட்ட காடு பல கடந்தால்,
ஆர் இடை உண்டு, ஓர் ஆர் அஞர்த் தெய்வம்;
நடுக்கம் சாலா நயத்தின் தோன்றி,                                                145
இடுக்கண் செய்யாது இயங்குநர்த் தாங்கும்.
மடுத்து உடன் கிடக்கும் மதுரைப் பெருவழி.
நீள் நிலம் கடந்த நெடு முடி அண்ணல்
தாள் தொழு தகையோன் போகுவல் யான்’ என-

கவுந்தி அடிகளின் கட்டுரை

மா மறையோன் வாய் வழித் திறம் கேட்ட                                        150
காவுந்தி ஐயை ஓர் கட்டுரை சொல்லும்;
‘நலம் புரி கொள்கை நான்மறையாள!
பிலம் புக வேண்டும் பெற்றி ஈங்கு இல்லை;
கப்பத்து இந்திரன் காட்டிய நுhலின்
மெய்ப்பாட்டு - இயற்கையின் விளங்கக் காணாய்;                                    155
இறந்த பிறப்பின் எய்திய எல்லாம்
பிறந்த பிறப்பில் காணாயோ, நீ?
வாய்மையின் வழாது மன் உயிர் ஓம்புநர்க்கு
யாவதும் உண்டோ, எய்தா அரும் பொருள்?
காமுறு தெய்வம் கண்டு அடி பணிய                                            160
நீ போ; யாங்களும் நீள் நெறிப் படர்குதும்’
என்று அம் மறையோற்கு இசை மொழி உணர்த்தி-

மூவரும் மேற்செல்லும் போது, வழி நடந்த வருத்தத்தால்
கவுந்தி அடிகளும் கண்ணகியும் வழிமருங்கு இருப்ப, கோவலன்
அண்மையிலுள்ள ஒரு பொய்கைக்கு நீர் அருந்தச் செல்லுதல்

குன்றக் கொள்கைக் கோவலன் - தன்னுடன்
அன்றைப் பகல் ஓர் அரும் பதித் தங்கி,
பின்றையும் அவ் வழிப் பெயர்ந்து செல் வழி நாள்-                                    165
கருந் தடங் கண்ணியும் கவுந்தி அடிகளும்
வகுந்து செல் வருத்தத்து வழிமருங்கு இருப்ப -
இடை நெறிக் கிடந்த இயவு கொள் மருங்கின்,
புடை நெறிப் போய், ஓர் பொய்கையில் சென்று,
நீர் நசைஇ வேட்கையின் நெடுந் துறை நிற்ப-                                    170




வனதேவதை வசந்தமாலையின் உருவில் தோன்றி
கோவலனிடம் முறையிடுதல்

கான் உறை தெய்வம் காதலின் சென்று,
‘நயந்த காதலின் நல்குவன் இவன்’ என,
வயந்தமாலை வடிவில் தோன்றி,
கொடி நடுக்கு உற்றது போல, ஆங்கு - அவன்
அடிமுதல் வீழ்ந்து, ஆங்கு, அரும் கணீர் உகுத்து,                                    175
""""வாச மாலையின் எழுதிய மாற்றம்
தீது இலேன்;  பிழை மொழி செப்பினை;  ஆதலின்,
கோவலன் செய்தான் கொடுமை"""" என்று, என் முன்
மாதவி மயங்கி, வான் துயர் உற்று,
""""மேலோர் ஆயினும், நுhலோர் ஆயினும்,                                            180
பால் வகை தெரிந்த பகுதியோர் ஆயினும்,
பிணி எனக் கொண்டு, பிறக்கிட்டு ஒழியும்
கணிகையர் வாழ்க்கை கடையே போனம்"""" என,
செவ் வரி ஒழுகிய செழுங் கடை மழைக் கண்
வெண் முத்து உதிர்த்து, வெண் நிலாத் திகழும்                                    185
தண் முத்து ஒரு காழ் தன் கையால் பரிந்து,
துனி உற்று என்னையும் துறந்தனள்; ஆதலின்,
மதுரை மூதூர் மா நகர்ப் போந்தது
எதிர் வழிப் பட்டோர் எனக்கு ஆங்கு உரைப்ப,
சாத்தொடு போந்து தனித் துயர் உழந்தேன்;                                        190
பாத்து - அரும் பண்ப! நின் பணி மொழி யாது? என-


கோவலன் மந்திரத்தால் உண்மையை அறிய முயலுதல்

‘மயக்கும் தெய்வம் இவ் வன் காட்டு உண்டு’ என
வியத்தகு மறையோன் விளம்பினன்; ஆதலின்,
வஞ்சம் பெயர்க்கும் மந்திரத்தால் இவ்
ஐஞ் சில் ஓதியை அறிகுவென் யான்’ என-                                        195


தெய்வம் மந்திர வலிமைக்கு ஆற்றாது, உண்மை உரைத்து நீங்குதல்

கோவலன் நாவில் கூறிய மந்திரம்
பாய் கலைப் பாவை மந்திரம் ஆதலின்,
‘வன - சாரிணி யான்; மயக்கம் செய்தேன்;
புன மயில் சாயற்கும், புண்ணிய முதல்விக்கும்,
என் திறம் உரையாது ஏகு’ என்று ஏக-                                            200

கோவலன் தாமரை இலையில் தண்ணீர் கொணர்ந்து,
கண்ணகியின் தாகத்தைத் தீர்த்தல்

தாமரைப் பாசடைத் தண்ணீர் கொணர்ந்து, ஆங்கு,
அயா உறு மடந்தை அரும் துயர் தீர்த்து -

வெயிலின் வெம்மை மிகுதலால் கானத்தில் செல்லுதல் அரிது என்று,
அண்மையிலுள்ள ஐயை கோட்டத்தை மூவரும் அடைதல்

மீது செல் வெங்கதிர் வெம்மையின் தொடங்க,
‘தீது இயல் கானம் செலவு அரிது’ என்று,
கோவலன் - தன்னொடும் கொடுங் குழை மாதொடும்                                205
மாதவத்து ஆட்டியும் மயங்கு அதர் அழுவத்து,
குரவமும் மரவமும் கோங்கமும் வேங்கையும்
விரவிய பூம் பொழில் விளங்கிய இருக்கை,
ஆர் இடை அத்தத்து இயங்குநர் அல்லது,
மாரி வளம் பெற வில் ஏர் உழவர்                                                210
கூற்று உறழ் முன்பொடு கொடு வில் ஏந்தி,
வேற்றுப் புலம் போகி, நல் வெற்றம் கொடுத்து,
கழி பேர் ஆண்மைக் கடன் பார்த்து இருக்கும்
விழி நுதல் குமரி,  விண்ணோர் பாவை,
மை அறு சிறப்பின் வான நாடி,                                                215
ஐயை - தன் கோட்டம் அடைந்தனர் ஆங்கு - என்.

12. வேட்டுவ வரி

ஐயையின் கோட்டத்தில் ஒரு பக்கத்திலே
கோவலன் முதலிய மூவரும் இளைப்பாறி இருத்தல்

கடுங் கதிர் திருகலின், நடுங்கு அஞர் எய்தி,
ஆறு செல் வருத்தத்துச் சீறடி சிவப்ப.
நறும் பல் கூந்தல் குறும் பல உயிர்த்து - ஆங்கு,
ஐயை கோட்டத்து எய்யா ஒரு சிறை
வருந்து நோய் தணிய இருந்தனர். உப்பால் -                                        5

சாலினி ஆவேசம் கொண்டு மறக்குடி மக்களுக்கு அறிவுறுத்தல்

வழங்கு வில் தடக்கை மறக் குடித் தாயத்துப்
பழங் கடன் உற்ற முழங்கு வாய்ச் சாலினி
தெய்வம் உற்று, மெய்ம் மயிர் நிறுத்து,
கை எடுத்து ஓச்சி, கானவர் வியப்ப,
இடு முள் வேலி எயினர் கூட்டுண்ணும்                                            10
நடு ஊர் மன்றத்து அடி பெயர்த்து ஆடி,
‘கல் என் பேர் ஊர்க் கண நிரை சிறந்தன;
வல் வில் எயினர் மன்று பாழ்பட்டன;
மறக் குடித் தாயத்து வழி வளம் சுரவாது,
அறக் குடி போல் அவிந்து அடங்கினர் எயினரும்;                                    15
கலை அமர் செல்வி கடன் உணின் அல்லது,
சிலை அமர் வென்றி கொடுப்போள் அல்லள்;
மட்டு உண் வாழ்க்கை வேண்டுதிர் ஆயின்,
கட்டு உண் மாக்கள்! கடம் தரும்’ என - ஆங்கு -

மறக் குடி மக்கள் குமரி ஒருத்திக்குக் கொற்றவையின் கோலம் புனைவித்து,
வழிபடு பொருள்களுடன் ஐயையின் கோட்டம் செல்லுதல்

இட்டுத் தலை எண்ணும் எயினர் அல்லது                                        20
சுட்டுத் தலை போகாத் தொல் குடிக் குமரியை-
சிறு வெள் அரவின் குருளை நாண் சுற்றி,
குறு நெறிக் கூந்தல் நெடு முடி கட்டி,
இளை சூழ் படப்பை இழுக்கிய ஏனத்து
வளை வெண் கோடு பறித்து, மற்ற அது                                            25
முளை வெண் திங்கள் என்னச் சாத்தி;
மறம் கொள் வயப் புலி வாய் பிளந்து பெற்ற
மாலை வெண் பல் தாலி நிரை பூட்டி;
வரியும் புள்ளியும் மயங்குவான் புறத்து
உரிவை மேகலை உடீஇ; பரிவொடு                                            30
கரு வில் வாங்கி, கைஅகத்துக் கொடுத்து;
திரிதரு கோட்டுக் கலைமேல் ஏற்றி;
பாவையும், கிளியும், தூவி அம் சிறைக்
கானக்கோழியும், நீல் நிற மஞ்ஞையும்,
பந்தும், கழங்கும், தந்தனர் பரசி;                                                35
வண்ணமும், சுண்ணமும், தண் நறுஞ் சாந்தமும்,
புழுக்கலும், நோலையும், விழுக்கு உடை மடையும்,
பூவும், புகையும், மேவிய விரையும்,
ஏவல் எயிற்றியர் ஏந்தினர் பின் வர;
ஆறு எறி பறையும், சூறைச் சின்னமும்,                                            40
கோடும், குழலும், பீடு கெழு மணியும்,                                           
கணம் கொண்டு துவைப்ப; அணங்கு முன் நிறீஇ-
விலைப் பலி உண்ணும் மலர் பலி - பீடிகை,
கலைப் பரி ஊர்தியைக் கைதொழுது ஏத்தி-

ஆவேசமுற்ற சாலினி கண்ணகியைப் புகழ்தல்

இணை மலர்ச் சீறடி இனைந்தனள் வருந்தி,                                        45
கணவனோடு இருந்த மணம் மலி கூந்தலை,                                       
‘இவளோ, கொங்கச் செல்வி; குடமலை ஆட்டி;
தென் தமிழ்ப் பாவை; செய்த தவக் கொழுந்து;
ஒரு மா மணி ஆய், உலகிற்கு ஓங்கிய
திரு மா மணி’ எனத் தெய்வம்உற்று உரைப்ப-                                    50

கண்ணகி நாணமுற்று, புன்முறுவல் பூத்து நிற்றல்

‘பேதுறவு மொழிந்தனள் மூதறிவு ஆட்டி’ என்று,
அரும் பெறல் கணவன் பெரும் புறத்து ஒடுங்கி,
விருந்தின் மூரல் அரும்பினள் நிற்ப-

மறக் குடிக் குமரியின் வரிக்கோலத்திற்கு ஐயை அருள்புரிதல்

மதியின் வெண் தோடு சூடும் சென்னி,
நுதல் கிழித்து விழித்த இமையா நாட்டத்து,                                        55
பவள வாய்ச்சி; தவள வாள் நகைச்சி;
நஞ்சு உண்டு கறுத்த கண்டி; வெஞ் சினத்து
அரவு நாண் பூட்டி, நெடு மலை வளைத்தோள்;
துளை எயிற்று உரகக் கச்சு உடை முலைச்சி;
வளை உடைக் கையில் சூலம் ஏந்தி;                                            60
கரியின் உரிவை போர்த்து, அணங்கு ஆகிய
அரியின் உரிவை மேகலைஆட்டி;
சிலம்பும் கழலும் புலம்பும் சீறடி,
வலம் படு கொற்றத்து வாய் வாள் கொற்றவை;
இரண்டு வேறு உருவின், திரண்ட தோள் அவுணல்                                65
தலைமிசை நின்ற தையல்; பலர் தொழும்
அமரி, குமரி, கவுரி, சமரி,
சூலி, நீலி, மால்-அவற்கு இளங்கிளை;
ஐயை, செய்யவன், வெய்ய வாள் தடக்கைப்
பாய் கலைப் பாவை; பைந் தொடிப் பாவை;                                        70
ஆய் கலைப் பாவை, அருங்கலப் பாவை;
தமர் தொழ வந்த குமரிக் கோலத்து
அமர் இளங் குமரியும் அருளினள்-
வரி உறு செய்கை வாய்ந்ததால் எனவே,

உரைப் பாட்டு மடை
முன்றிலின் சிறப்பு

நாகம், நாறு நரத்தை, நிரந்தன;
ஆவும் ஆரமும் ஓங்கின; எங்கணும்,
சேவும் மாவும் செறிந்தன-கண்ணுதல்
பாகம் ஆளுடையாள் பலி முன்றிலே.                                            1

செம் பொன் வேங்கை சொரிந்தன; சேயிதழ்,
கொம்பர் நல் இலவங்கள், குவிந்தன;
பொங்கர் வெண் பொரி சிந்தின புன்கு-இளந்
திங்கள் வாழ் சடையாள் திரு முன்றிலே.                                            2

மரவம், பாதிரி, புன்னை, மணம் கமழ்
குரவம், கோங்கம், மலர்ந்தன; கொம்பர்மேல்,
அரவ வண்டு இனம் ஆர்த்து, உடன் யாழ்செயும்-
திருவ மாற்கு இளையாள் திரு முன்றிலே.                                        3

வள்ளிக் கூத்து

கொற்றவை கொண்ட அணி கொண்டு நின்ற இப்
பொன் தொடி மாதர் தவம் என்னை கொல்லோ?
பொன் தொடி மாதர் பிறந்த குடிப் பிறந்த
வில் தொழில் வேடர் குலனே குலனும்!                                            4

ஐயை திருவின் அணிகொண்டு நின்ற இப்
பை அரவு அல்குல் தவம் என்னைகொல்லோ?
பை அரவு அல்குல் பிறந்த குடிப் பிறந்த
எய் வில் எயினர் குலனே குலனும்!                                                5

பாய் கலைப் பாவை அணி கொண்டு நின்ற இவ்
ஆய் தொடி நல்லாள் தவம் என்னைகொல்லோ?
ஆய் தொடி நல்லாள் பிறந்த குடிப் பிறந்த
வேய் வில் எயினர் குலனே குலனும்!                                            6

முன்னிலைப் பரவல்

ஆனைத் தோல் போர்த்து, புலியின் உரி உடுத்து,
கானத்து எருமைக் கருந் தலைமேல் நின்றாயால்-
வானோர் வணங்க, மறைமேல் மறை ஆகி,
ஞானக் கொழுந்து ஆய், நடுக்கு இன்றியே நின்பாய்!                                7

வரி வளைக் கை வாள் ஏந்தி, மா மயிடன் செற்று,
கரிய திரி கோட்டுக் கலைமிசைமேல் நின்றாயால்-
அரி, அரன், பூமேலோன், அக-மலர்மேல் மன்னும்
விரி கதிர் அம் சோதி விளக்கு ஆகியே நிற்பாய்!                                    8

சங்கமும் சக்கரமும் தாமரைக் கை ஏந்தி,
செங் கண் அரிமான் சின விடைமேல் நின்றாயால்-
கங்கை முடிக்கு அணிந்த கண்ணுதலோன் பாகத்து,
மங்கை உரு ஆய், மறை ஏத்தவே நிற்பாய்!                                        9

வென்றிக் கூத்து

ஆங்கு,
கொன்றையும் துளவமும் குழுமத் தொடுத்த,
துன்று மலர்ப் பிணையல் தோள்மேல் இட்டு - ஆங்கு,
அசுரர் வாட, அமரர்க்கு ஆடிய
குமரிக் கோலத்துத் கூத்து உள்படுமே.                                            10

கூத்து உள்படுதல்

ஆய் பொன் அரிச் சிலம்பும் சூடகமும் மேகலையும்
ஆர்ப்பஆர்ப்ப,
மாயம் செய் வாள் அவுணர் வீழ, நங்கை மரக் கால்மேல்
வாள் - அமலை ஆடும் போலும்;
மாயம் வெய் வாள் அவுணர் வீழ, நங்கை மரக் கால்மேல்
வாள் - அமலை ஆடும்ஆயின்,
காயா மலர் மேனி ஏத்தி, வானோர் கை பெய் மலர் - மாசி
காட்டும் போலும்.                                                    11

வெட்சி

உட்கு உடைச் சீறுhர் ஒரு மகன் ஆன் நிரை கொள்ள
உற்றகாலை,
வெட்சி மலர் புனைய, வெள் வான் உழத்தியும்
வேண்டும் போலும்;
வெட்சி மலர் புனைய, வெள் வாள் உழத்தியும்
வேண்டின், வேற்றுhர்க்
கட்சியுள் காரி கடிய குரல் இசைத்து,
காட்டும் போலும்.                                                    12

வெட்சிப் புறநடை

கள் விலைஆட்டி மறுப்ப, பொறு மறவன்
கை வில் ஏந்தி,
புள்ளும் வழிப் படர, புல்லார் நிரை கருதி,
போகும் போலும்;
புள்ளும் வழிப் படர, புல்லார் நிரை கருதி,
போகும்காலை,
கொள்ளும் கொடி எடுத்து, கொற்றவையும் கொடுமரம் முன
செல்லும் போலும்.                                                    13

கொடை

இள மா எயிற்றி! இவை காண், நின் ஐயர்
தலைநாளை வேட்டத்துத் தந்த நல் ஆன் நிரைகள்;
கொல்லன், துடியன், கொளை புணர் சீர் வல்ல
நல் யாழ்ப் பாணர் - தம் முன்றில் நிறைந்தன.                                        14

முருந்து ஏர் இள நகை! காணாய், நின் ஐயர்
கரந்தை அலறக் கவர்ந்த இன நிரைகள்;
கள் விலைஆட்டி, நல் வேய் தெரி கானவன்,
புள் வாய்ப்புச் சொன்ன கணி, முன்றில் நிறைந்தன.                                15

கய மலர் உண் கண்ணாய்! காணாய், நின் ஐயர்,
அயல் ஊர் அலற, எறிந்த நல் ஆன் நிரைகள்;
நயன் இல் மொழியின் நரை முது நாடி
எயினர், எயிற்றியர், முன்றில் நிறைந்தன.                                        16


துறைப் பாட்டு மடை
அவிப் பலி

சுடரொடு திரிதரு முனிவரும் அமரரும்
இடர் கெட அருளும் நின் இணை அடி தொழுதேம்;
அடல் வலி எயினர் நின் அடி தொடு கடன் இது,
மிடறு உகு குருதி; கொள், விறல் தரு விலையே.                                    17

அணி முடி அமரர் தம் அரசொடு பணிதரு
மணி உருவினை! நின மலர் அடி தொழுதேம்;
கண நிரை பெறு விறல் எயின் இடு கடன் இது,
நிணன் உகு குருதி; கொள், நிகர் அடு விலையே.                                    18

துடியொடு, சிறு பறை, வயிரொடு துவைசெய,
வெடி பட வருபவர் எயினர்கள் அரை இருள்;
அடு புலி அனையவர், குமரி! பின் அடி தொடு
படு கடன் இது, உகு பலி முக மடையே.                                            19

பலிக் கொடை

வம்பலர் பல்கி, வழியும் வளம் பட;
அம்பு உடை வல் வில் எயின் கடன் உண்குவாய்-
சங்கரி, அந்தரி, நீலி, சடாமுடிச்
செங் கண் அரவு பிறையுடன் சேர்த்துவாய்!                                        20

துண் என் துடியொடு துஞ்சு ஊர் எறிதரு,
கண் இல் எயினர் இடு கடன் உண்குவாய்-
விண்ணோர் அமுது உண்டும் சாவ, ஒருவரும்
உண்ணாத நஞ்சு உண்டு, இருந்து, அருள் செய்குவாய்!                            21

பொருள் கொண்டு புண் செயின் அல்லதை, யார்க்கும்
அருள்இல் எயினர் இடு கடன் உண்குவாய்-
மருதின் நடந்து, நின் மாமன் செய் வஞ்ச
உருளும் சகடம் உதைத்து, அருள் செய்குவாய்!                                    22

பாண்டிய மன்னனை வாழ்த்துதல்

மறை முது முதல்வன் பின்னர் மேய
பொறை உயர் பொதியில் பொருப்பன், பிறர் நாட்டுக்
கட்சியும் கரந்தையும் பாழ்பட,
வெட்சி சூடுக - விறல் வெய்யோனே!                                            23

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்களைப் பதிவு செய்யலாமே?