எம்.ஜி.சுரேஷின் இரு நாவல்களை முன் வைத்து.......
(அலெக்சாண்டரும் ஒரு கோப்பைத் தேநீரும், சிலந்தி)
தமிழ் நாவலாசிரியர்களில் மேலை நாட்டு கொள்கைகளின் தாக்கத்தின் அடிப்படையில் பல புதிய முயற்சிகளை மேற்கொண்டு வருபவர்களில் தமிழவன், சாருநிவேதிதா, ஜெயமோகன், எம்.சுரேஷ்.ஜி போன்றவர்கள் குறிப்பிடத்தக்கவர்கள். இதில் பின்நவீனத்துவத்தை உள்வாங்கிக் கொண்டு அதைப் படைப்புகளில் வெளிப்படுத்துபவர் எம்.சுரேஷ்.ஜி. இவர் தன்னுடைய நாவல்களே தமிழின் முதல் பின்நவீனத்துவ
நாவல்கள் என்று இணையதளத்தில் பேட்டி கொடுத்துள்ளார். பின்நவீனத்துவம் பற்றியும் அவை அவருடைய நாவல்களில் பயன்படுத்தப்பட்டுள்ள முறைகள் பற்றியும் அவருடைய அலெக்சாண்டரும்
ஒரு கோப்பைத் தேநீரும், சிலந்தி என்ற இரு நாவல்களில் மட்டுமே இக்கட்டுரை ஆராய்கிறது.
இலக்கியங்கள் சமூக மாற்றத்திற்கான கருவியாக விளங்குகின்றன. தற்காலத் தொழில்நுட்பம் மிகுந்த சூழலின் நவீனத்தன்மைக்கேற்ப படைப்பிலக்கியங்களிலும் நவீனத்துவமும், அதிலும் மேம்பட்ட பின்நவீனத்துவமும் தேவைப்படுகின்றன. நவீனத்துவம் என்பது மரபிலிருந்து விடுவித்துக் கொள்வதை முதன்மை நோக்கமாகக் கொண்டது. இது பன்முகம், நடப்பியல், மிகை நடப்பியல், இருத்தலியல் என்ற பல கொள்கைகளை வளர்த்தெடுத்தது. அதிலிருந்து பிறந்த அதனினும் மேம்பட்ட பின்நவீனத்துவம் தற்கால உலகில் பேசப்படுகிற பொருளாக வளர்ந்துவிட்ட சூழலில் அதன் கொள்கைகளாகத் தலித்தியம், பெண்ணியம் போன்ற கொள்கைகள் உருவாயின. நாவல்களில் பின் நவீனத்துவத்தின் தேவை குறித்து """"வாழ்க்கை முழுமைகளில் இல்லை. பின்னங்களின் தென்பட்ட வாழ்வு பிறகு அப்படியும் இல்லை என்றாகிவிடும் நிலைமை வாழ்க்கையில் எல்லாமே குழம்பிவிட்டது. வாழ்வின் பல்வேறு பரிமாணங்கள் தாறுமாறாகிக் கிடக்கின்றன. உறவுகள் எல்லாம் சிக்கலாகிவிட்டன. எதிலும் நிச்சயமில்லை. எதுவும் நேரலாம். பற்றிக் கொள்வதற்கான எதார்த்தம் என ஒன்றுமில்லை. நிரந்தரம் என்று எதுவுமில்லை. இந்தச் சூழலில்தான் பின் நவீனத்துவம் பேசப்படுகிறது (ப.81-82) என்று சிவ மங்கையர்க்கரசி இலக்கிய இயக்கங்கள் நூலில் குறிப்பிடுகிறார்.
பின்நவீனத்துவம் இலக்கியத்திற்கு என வரையறுக்கப்பட்ட எல்லாவிதமான எல்லைகளையும் மீறுவதையும், பல வடிவச் சோதனைகளில் ஈடுபடுவதையும், உலகில் தோற்றுவிக்கப்பட்ட பல கருத்துக்களின் போதாமையையும், மையத்தை மறுத்து அனைத்தையும் பரவலாக்குவதையும் அடித்தளமாகக் கொண்டுள்ளது. இந்தப் பிரபஞ்சத்தில்
தோன்றியுள்ள ஒவ்வொன்றிற்குமான முக்கியத்துவத்தை உணர்ந்து எதையும் பொதுமைப்படுத்த
முயலாமல், அதனதன் இயல்பிலேயே இருக்க மனித மனம் விட்டுவிடவேண்டும் என்கிறது. இக்கருத்தியல்
தளத்தில் எம்ஜி.சுரேஷின் இருநாவல்களும்
இயங்குகின்றன.
வடிவ சோதனை-அலெக்சாண்டரும் ஒரு கோப்பைத் தேநீரும், சிலந்தி என்ற இரு நாவல்களிலும் வடிவச் சோதனைகளைச் செய்திருக்கிறார். அலெக்சாண்டரும் ஒரு கோப்பைத் தேநீரும் நாவலில் ஒரு கதையல்ல பல கதைகள் இடம்பெற்றுள்ளன. ஒன்றோடு ஒன்று தொடர்பில்லாத கதைகளைப் பல பரிமாணத்தில் காலங்களை மாற்றி, களங்களை மாற்றி, பாத்திரங்களை மாற்றிச் சொல்லிச் செல்கிறார். நேர்க்கோட்டிலும் முன்னும் பின்னும், குறுக்கும் நெடுக்குமாகக் கதைகள் நகர்கின்றன. இதில் அத்தியாயங்களும், பாகங்களும் இடம்பெறவில்லை. தலைமைப்பாத்திரம், துணைப்பாத்திரம் என்ற பாகுபாடுகளும் இல்லை. நாவலின் நடுப்பக்கத்தில் கதை இரண்டாக ஒரே பக்கத்தில் பிரிக்கப்படுகிறது. மேல்பகுதியில் ஒரு காலத்திற்கான கதையும், கீழ்ப்பக்கத்தில் வேறொரு காலத்திற்கான கதையும் சொல்லப்படுகின்றன. நான்கு வகையான அலெக்சாண்டர்களின் வாழ்க்கையின் வழி கதை நகர்கிறது.
சிலந்தி நாவலில் வாசகர் ஆணாக இருப்பின், ஒரு போக்கிலும், பெண்ணாக இருப்பின் மற்றொரு போக்கிலும் கதை புரிந்துகொள்ளப்படுகிறது. பொதுவாக வாசகன் நாவல்களில் பங்கு பெறுவதில்லை. ஆனால் இந்நாவலில் வாசகன் தான் துப்பறிவாளன். நடந்த கொலைகளையும், நடக்கும் கொலைகளையும், இனி நடக்கப்போகும்
கொலைகளையும் வாசகன் தான் பொறுப்பேற்றுக்
குற்றவாளி யார் எனக் கண்டறிய வேண்டும். இதில் கொலையாளிகள் என்று தன்னைக் கூறிக் கொள்பவர்கள் அனைவரும் மன நோயாளிகள் என்பதால் வாசகன் முழு விழிப்புணர்வோடு ஒவ்வொரு நிகழ்ச்சியையும் கூர்ந்து கவனிக்கும் வகையில் கதை அமைந்துள்ளது. இந்நாவலிலும் பல கதைகள் இடம்பெற்றுள்ளன. வாசகனும் நாவலில் பங்கு பெறும் வகையில் பின் நவீனத்துவப் போக்கை எம்.ஜி.சுரேஷ்
கடைப்பிடித்துள்ளார். இந்நாவலிலும் 274ம் பக்கம் முதல் 307ம் பக்கம் வரை கதையை இரு கூறாகப் பிரித்து ஆண்வாசகர் எனில் ஒரு மாதிரியான கதைப்போக்கும், பெண் வாசகர் எனில் மற்றொரு வகையான கதைப்போக்கும்
என்ற முறையில் இடமும் வலமுமாகக் கதை நகர்கிறது. பொதுவாக நாவல் ஒரு முடிவைத்தான் கொண்டிருக்கும்
இந்நாவல் ஆண் வாசகருக்கு வேறு முடிவையும், பெண் வாசகருக்கு வேறொரு முடிவையும் தருகிறது. ஏழு நாள்கள் ஏழு நிகழ்ச்சிகள் பல குறுக்கீடுகள், கட்டட அமைப்பிற்கான வரைபடங்கள் என நாவல் பின்நவீனத்துவப்பாணிக்கேற்ப கட்டமைக்கப்பட்டுள்ளது.
தளங்கள்-அலக்சாண்டரும் ஒருகோப்பைத் தேநீரும் என்ற நாவலில் எதிர்கால மனிதர்களைச் சந்திக்கும் மகாஅலெக்சாண்டர் எல்லா உலகங்களுக்கும் போய் வருகிற சாத்தியம் இருப்பதை அறியும்பொழுது, ‘அந்த அந்தக் காலங்களுக்குப் போய் எல்லா உலகங்களையும் ஜெயிக்கவேண்டும்’ என்ற உந்துதல் ஏற்படுவதாகக் கூறுகிறான் (ப.378). இந்த மோசமான உந்துதல் தான் மனித குலத்துக்கு எதிராகத் திரும்பியிருப்பதாகவும், யாரோ ஒருவனின் உந்துதலினால் ஒட்டு மொத்த உலகமே பாதிக்கப்படுவது எவ்வகையிலும் நியாயம் என்று எம்.ஜி.சுரேஷ் மற்றொரு அலக்ஸின் வழியாகக் கேள்வி கேட்கிறார். இந்த மோசமான உந்துதல்தான் மனிதனைச் சாதி, மதம், சமயம், அரசியல், பொருளாதாரம் எனப் பல பிரிவாகப் பிரித்தாள்கிறது என்பதை இவ்விரு நாவல்களும் பல்வேறு கோணங்களிலிருந்து எடுத்துரைக்கின்றன. எனவேதான் இவருடைய நாவல்கள் தமிழகச் சூழலையோ, இந்தியச் சூழலையோ உள்ளடக்கமாகக் கொள்ளாமல் உலகளாவிய சூழலையே குறிவைக்கின்றன. உலகளாவிய வரலாறு, பொருளியல், ஆதிக்க அரசியல், இனவெறி உலகின் எதிர்கால நிலை, எளிய மக்களின் வாழ்க்கை, நாகரிகம் குறித்தான ஐயம் போன்ற பல்வேறு தளங்களில் இரு நாவல்களும் பயணிக்கின்றன.
மனிதர்கள் காமம், பணம், வெற்றி, மொழி, இனம், அதிகாரம், திரைப்படம், அறிவியல் போன்றவற்றின் மீது வெறிகொள்ளும்போது, அந்த வெறி உச்சநிலைக்குச் செல்லும்போது உளவியல் சிக்கல்களுக்கு ஆளாவதை இவ்விரு நாவல்களும் பரக்கப் பேசுகின்றன. மனிதர்களின் குரூரமான ஆசையை நோக்கிய பயணம் ஒருபக்கம் தன்னழிவையும், மறுபுறம் உலக அழிவையுமே சந்திக்கும் என்பதை இருநாவல்களும் பல மாந்தர்கள் வழி எடுத்துரைக்கின்றன. மனிதனை இயல்பாக இருக்கவிடாமல், நாகரிகம் என்ற பெயரில் செயற்கையைப் புகுத்தும் சமூகம் மனப்பிறழ்வுடைய மனிதர்களையே உற்பத்தி செய்கின்றது. சமூகத்தில் வாழும் எந்த மனிதனும் சமநிலை மனநிலையோடு வாழ்வதற்குத் தடையாக இருப்பவை ஆளும் வர்க்கமும், அதிகார வர்க்கமுமே என்பதே இருநாவல்களின் அடித்தளம். மன்னர்களின் காலம் முதல் சிலந்தி நாவல் குறிப்பிடும் தற்காலம் வரையிலும் மனிதர்கள் ஆளும் வர்க்கத்தினரின் ஆசைக்கே தம் வாழ்வைத் தொலைத்து வருவதைப் பதிவு செய்கிறார். தொடக்கக் கால மனிதனை விடத் தற்கால மனிதன் மிகப்பெரும் குழப்பத்திற்கு ஆளாகியுள்ளான். அவனுடைய மனநிலைப் பிறழ்விற்குக் காரணமான சமூகச் சூழலின் சீரழிவை எடுத்துக்கூறி, இன்றைய நவீன மனிதன் தனக்கே எதிரியாகி இருப்பதையும் இதனால் ஏற்படப்போகும் பின் விளைவுகளையும் எச்சரிக்கும் உணர்வோடே கதையை நகர்த்திச் செல்கிறார். சிலந்தி நாவல் மொழி, அரசியல், திரைப்படம், மருத்துவம், இலக்கியம் உள்ளிட்ட அனைத்து சமூக மதிப்பீடுகளையும் சந்தேகமுற்று, ஒவ்வொன்றிற்குள்ளும் ஒழுங்கீனங்களைக் கண்டறிந்துள்ளது. அலெக்சாண்டரும் ஒரு கோப்பைத் தேநீர், மகாஅலெக்சாண்டர் முதல் எதிர்கால அலெக்சாண்டர்கள் வரையுள்ள அனைத்துப் பாத்திரங்களையும் அவற்றின் பலங்களோடும் பலவீனங்களோடும் வெளிப்படுத்துகிறது. புதுமை, பழமை, மரபு போன்றவை கேள்விக்கும் கேலிக்கும் ஆளாக்கப்பட்டு மனிதத்தை மட்டுமே இருநாவல்களும் முன்னிறுத்துகின்றன. எல்லாச் சமூக மதிப்பீடுகளையும் மாற்றுக் கோணத்தில் ஆராய்ந்து, அவற்றிற்கான காரணம் மனிதன் இயல்பாக இல்லாமல் இருப்பதுதான் என்ற கருத்தியலை முன் வைக்கின்றன.
கடந்தகால அலெக்ஸாண்டர்-அலெக்ஸாண்டரும் ஒரு கோப்பைத் தேநீரும் என்ற நாவலில், தாய் ஒலிம்யாசும் தந்தை பிலிப்பும், ஆசான் சாக்ரடிஸீம் குறிக்கோள் என்ற பெயரில் மகா அலெக்சாண்டரின் மென்மைத்தன்மையே அசுரத்தன்மையாக மடைமாற்றம் செய்கிறார்கள். இதன் விளைவாக, இருமை நிலையில் மனப்போராட்டத்திற்கு ஆளாகும், மகா அலெக்சாண்டர் அகச்சீரழிவையும் புறச்சீரழிவையும் சந்திக்கிறான். மனதினால் மேலும் மேலும் கோழையாகிறான். தன் நண்பர்களையும் நலம் விரும்பிகளையும் இழக்கிறான்.
தாய் ஒலிம்பியாசும் தந்தை பிலிப்பும் கிரேக்க மாவீரன் அகிலஸின் வாரிசாக அவனைப் பார்க்கிறார்கள். ஆசான் அரிஸ்டாட்டிலும் ஓருலகக் கூட்டாட்சி அலெக்சாண்டர் போன்ற மாவீரர்களால் சாத்தியமே என்று நம்புகிறார். இதனால் அன்பும் மென்மையும் கொண்ட மகாஅலெக்சாண்டர் போர் என்ற பெயரில் பல இனமக்களைக் கொன்று குவிக்கிறான். மிகக் கொடூரமான முறையில் வெற்றிப் பெறுகிறான். மறுபுறம் அவனுடைய மென்மை உணர்வு அவன் நிகழ்த்திய பேரழிவுகளை ஏற்றுக்கொள்ள மறுக்கிறது.
பாரசீக இளவரசி ருக்ஸானாவைச் சந்திக்கும்பொழுது அவனுடைய அடக்கி வைக்கப்பட்ட மென்மை உணர்வுகள் விழித்துக்கொள்கின்றன. போர்க்குணம் மறைந்து அன்பு மேலோங்குகிறது. அன்பு மேலோங்கிய நிலையில் இதுவரை அவன் நம்பி வந்த பிம்பங்கள் உடையத் தொடங்குகின்றன.
கிரேக்கர்கள்தான் அறிவாளிகள், பண்பானவர்கள், நாகரிகம் மிகுந்தவர்கள், நிர்வாகிகள் என்ற பிம்பம் உடைந்து அவர்களைவிடப் பாரசீகர்கள் பல வகைகளில் உயர்ந்தவர்களாக இருப்பதை அறிகிறான். அதுவரை கிரேக்கம் பாரசீக மக்களைக் காட்டு மிராண்டிகள் என்று கருதி வந்தது பொய் என உணர்கிறான். பாரசீகத்திலேயே நீண்ட நாள் தங்குகிறான். அவர்களுக்கும் தன் அரசாட்சியில் சம பங்கு தருகிறான். போர் வெறி கொண்டலைந்தபோது கிரேக்கர்களைத் தவிர மற்ற அனைத்து இனங்களையும் காட்டுமிராண்டிகள் என நினைத்து அவர்களை இனப்படுகொலை செய்ததை நினைத்து வருந்துகிறான். எந்த இனத்திற்காகப் படுகொலைகள் செய்தானோ அவன் அந்த இனத்தைச் சேர்ந்தவன் இல்லை என்ற உண்மையும் அவனைப் பலமுறை நிலை குலைய வைக்கிறது.தாய் ஒலிம்பியா கிரீஸில் பிறந்தவள். தந்தை பிலிப் மாசிடோனியன். இருநாடுகளும் கிரேக்கத்திலிருந்தாலும் கீரிஸில் பிறந்தவர்களே கிரேக்கர்கள் எனத் தாய் ஒலிம்பியா கூறிக்கொள்கிறாள். அவளிடம் எதிர்த்துப் பேசாமல் தந்தை பிலிப் ‘தானும் ஒரு கிரேக்கனே’ எனத் தனக்குள் சமாதானப்படுத்திக் கொள்கிறான். இதே சிக்கலே மகாஅலெக்சாண்டருக்கும் எழுகிறது. ஓர் அரண்மனை விருந்தில் கிரீஸில் பிறந்தவனிடம் மாசிடோனியனைத் தாழ்ந்தவனாகக் கருதுகிறாயா எனத் தானாகவே கேட்கிறான். அவன் ஆம் என்று சொல்ல அவனைக் கொன்றுவிடுகிறான். அவனுடையே முதல்போரே கிரீஸைத் தாக்கி அம்மக்களை அழித்து அந்நாட்டைக் கைப்பற்றியதுதான். அவனுடைய தாழ்வு மனப்பான்மை எதிர்வினையாற்றிக் கிரீஸை அடிமைப்படுத்தி மகிழ்கிறது. மறுபுறம் கிரேக்கர்கள், மாவீரர்களைத் தேவ தூதர்களாகக் கருதியதுபோலத் தன்னையும் கடவுளாகக் கருதவேண்டும் என விரும்புகிறான். கிரேக்க மாவீரனான அகிலஸின் வாரிசாகவே தன்னைக் கருதிக்கொண்டு, அவன் வெல்லாத உலகை தான் வெல்ல வேண்டும் என அகிலஸின் வெற்றிகளை விஞ்ச விரும்புகிறான். இதற்காக உளவியல் ரீதியாக எதிரிகளை நிலைகுலைய வைத்தும், பின்புறமிருந்து தாக்கியும், மூர்க்கமாக முன்னறிவிப்பின்றி மக்களை அழித்தும். கொடூரமான தண்டனைகளைக் கொடுத்தும், அறமற்ற வழியில் நாடுகளைக் கைப்பற்றுகிறான். மக்களை அழித்தொழித்து அவர்கள் பிணங்களின் மீது ஆட்சி செலுத்தும் தன்னை, பாதிக்கப்பட்ட மக்கள் அன்பின் திருவுருவமான கடவுளாக வணங்கவேண்டும் என்று எதிர்பார்க்கிறான்.
தனிமனிதனோ, அரசனோ தம் இனவரலாறுகளின்
மீதான மிகைப் புனைவுகளினால்
இயல்பான வாழ்க்கையைத் தொலைத்து மனப்பிறழ்விற்கு ஆளாவதால், எம்.ஜி.சுரேஷ் நாவல் முழுக்க வரலாற்று வாதத்தைக் கேலிக்குள்ளாக்குகிறார். வட்டாரம் சார்ந்த தனித்தன்மைகள்
புறக்கணிக்கப்பட்டு, இனம் சார்ந்த மிகைப் புனைவுகளினால்
உலகம் இன்று சந்தித்து வரும் உளவியல் சிக்கல்கள் ஏராளமானவை. எனவேதான் எம்.ஜி.சுரேஷ்
உலகப்பொதுமை குறித்து எதிர்காலத் தேவையை நிராகரிக்கிறார். அதைப்போலவே வரலாறு குறித்தான கருத்தியலையும்
நிராகரிக்கிறார். வரலாறு சொல்லப்பட்ட கண்ணோட்டத்திலேயே நாம் வரலாற்றைப் புரிந்துகொள்ள
வேண்டிய அவசியமில்லை என்பதை மகாஅலெக்சாண்டரின் வாழ்க்கை வழி விளக்குகிறார். மகாஅலெக்சாண்டர் மாவீரன், அஞ்சாநெஞ்சன், கடவுளாக வழிபடப்பட்டவன்
போன்ற அவனைப் பற்றிய வரலாற்றுப் பதிவுகளை உடைத்தெறிகிறார். இசைக் கலைஞனான அலெக்சாண்டர் மன்னர் மரபில் பிறந்ததினால் இறக்கும் வரை தான் விரும்பிய வாழ்வை வாழ முடியாமல் தன் மென்தையான மனநிலைக்கு மாறான போர்ச்சூழலிலேயே வாழ்கிறான். தந்தை பிலிப்பை விட, மாவீரன் அகிலஸைவிடதான்
உயர்ந்த மாவீரனாகப் போற்றப்பட வேண்டுமே என்ற அச்சம் அவனைச் சதா அரித்துக் கொண்டே இருக்கிறது. ஒருபுறம் யாரும் நினைத்துப் பார்க்க முடியாத கொடூரங்களையும்
கொலையும் நிகழ்த்தும் அவன் மறுபுறம் கொல்லப்பட்ட அப்பாவி மக்களை நினைத்துத் துடிதுடிக்கிறான்.
பாரசீக மன்னனைக் கொன்று பாரசீகம் தன்காலில் விழக் காரணமாக இருந்த படைவீரனைப் பாராட்டுவதற்குப் பதில், பாரசீகமன்னனின் மகளை மணந்திருந்த நிலையில் அவளை மகிழ்விக்கும் நோக்கில் அவள் தந்தையைக் கொன்றவனை அவள் கண்முன்னாகவே கொடூரமாகக் கொல்கிறான். இதனால் ருக்ஸானா மகிழ்வாள் என நினைத்திருக்க, அவளோ பயந்து மனதினால் அவனைவிட்டு விலகிவிடுகிறாள். இது அலெக்சாண்டருக்கு மிகப்பெரிய மனப்போராட்டத்தை ஏற்படுத்திவிட, மனைவியையும், அவள் நாட்டு மக்களையும் மகிழ்விக்க அவர்களைப் போல உடையணிவதும், அவர்களின் கடவுளைப் போலத் தன்னை அலங்கரித்துக் கொள்வதுமான வேடிக்கைப் பொருளாக மாறி பலரின் நகைப்பிற்கு ஆளாகிறான்.மீண்டும் படைதிரட்டி தன்னை மாவீரன் என நிரூபிக்க, நினைத்துப் படைத்திரட்டும்போது அவனுடைய பரைவீரர்களே அவனை எதிர்க்கிறார்கள். ஒரு மன்னனாக இருந்து ஆணையிடாமல், உண்ணாவிரதமிருந்தும், அறைக்குள் நுழைந்து கதவைச்சாத்திக் கொண்டும்தான் நினைத்ததைச் சாதித்துக்கொள்கிறான். ஞானி டயோஜினஸிடம் ‘தன்னால் எதையும் சாதிக்கமுடியும் என்று திமிராகப் பேசும்பொழுது’ மனதால் ஒரு செயலை நடத்திப் பார்த்த பின்பே உடம்பு ஜெயிக்கிறது என்று தன் மன வலிமையை மிகைப்படுத்திக் கூறுகிறான். அவரோ ‘உடம்பு மறுத்துவிட்டால்?.. என்று எதிர்கேள்வி எழுப்புகிறார். மரணப்படுக்கையில்தான் உண்மை உணருகிறான். குதிரை புலி பாலஸ்தான் நிழலைக் கண்டு தானே பயந்து மிரண்டது போல, தன் நிழலைக் கண்டு பிரமித்து உலகை வெல்ல முடியும் என்று நினைத்து இயல்பு வாழ்வைத் தொலைத்ததை உணர்கிறான். உண்மையில் மன்னனாக வாழாமல் வெற்றியை யாசிக்கும் பிச்சைக்காரனாக வாழ்ந்திருப்பதையும், தன் அகந்தையைச் சாதாரணக் காய்ச்சல் வீழ்த்திவிட்டதையும் உணர்க்கிறான் மகா அலெக்சாண்டர். மாவீரன் என்ற போர்வையை நீக்கி, மனப் போராட்டமும், தாழ்வு மனப்பான்மையும், மனப்பிறழ்வும் கோமாளித்தனங்களும், மனசாட்சியும் உடைய எளிய மனிதனாக எம்.ஜி.சுரேஷ் காட்டியுள்ளார். பருவ வயதில் காதல் வயப்பட்ட அனீலியாவை நினைத்து மரணப்படுக்கையில், தன் இழந்துபோன வாழ்விற்காக ஏங்குகிறான். பல இளவரசிகளை மணந்திருந்தாலும், அவர்களுடன் வாழாமலே போரில் ஈடுபட்டது, ருக்ஸாவின் வயிற்றில் வளரும் குழந்தையைக் காண வாய்ப்பில்லாமல் மரணத்தை நெருங்குவது, அவன் பெற்ற வெற்றிகளை அவன் காதுபடவே வீரர்கள் கேலி பேசுவது, இலட்சியம் முழுமையாவதற்குள் எழமுடியாமல் வீழ்ந்து கிடப்பது போன்றவையெல்லாம் மாவீரன், பேரரசன் என்ற பிம்பத்தை உடைத்து அவன் கடவுள் அல்ல, எளிய சாதாரண மனிதனே என்பதை அவனுக்கு உணர்த்துகின்றன. படைத்தளபதி அலெக்ஸாண்டரின் முரண்பாடுகளைக் கண்டு ”நீ ஒன்றும் கடவுள் அல்ல.முட்டாளே உன் தோலைக்கீறிப்பார்.வலிக்கும். ரத்தம் முத்துக்களாக உயிர்க்கும்.சாகப்போகும் அற்ப மனிதன்தான் நீயும்...”(ப.170) என்றதைத் தாங்கிக் கொள்ள முடியாமல் அவனை ஈட்டி எறிந்து கொள்கிறான்.தன்னுடைய சிறந்த தளபதியான அவனைக் கொன்றதற்காக மனம் வருந்தி ஒரு குறுவாளால் தன் கழுத்தைத் தானே அறுத்துக்கொள்ள முயல்கிறான்.நாவலில் இரண்டு இடங்களில் மகா அலெக்சாண்டர் அழுகிறான். அவனுடைய கோமாளித்தனங்களைக் கண்டு அவனுடைய படைவீரர்கள் கிழக்குநோக்கிப் போரிட வரமுடியாது என மறுக்கும் பொழுது ‘தான் தோற்றுவிடுவோமோ என்ற அச்சத்தினால்’ அழுகிறான். வரலாற்று ஆசிரியர்கள் தன்னைப் பாடாமல் போய்விடுவார்களோ என்று அச்சப்படுகிறான். மரணப்படுக்கையில் தந்தை பிலிப்பிடம் கனவுலகில் பேசும்பொழுது ‘அலெக்ஸ் நீ அம்மானின் மகனல்ல. மனிதனாகிய தன் மகன் என்பதால் நீயும் இறப்பாய் என்று பிலிப் கூறும்பொழுது ‘போரில் வென்ற மக்களைக் கட்டுப்படுத்தவே தான கடவுளாக’ நடித்ததாகவும், புரியாமல் தன் வீரர்கள் தன்னைப் பைத்தியம் என்று கேலி பேசியதாகவும்’ கூறி அழுகிறான். நண்பன் ஹெபாஸ்டின் குடிப்பழக்கத்தினால் இறந்துவிட, அவன் ஆத்மா சாந்தியடைய ஒரு பழங்குடி இனம்தையே பலியிடுகிறான். அப்பாவி மக்களைக் கொன்று குவித்தற்காக ஏற்பட்ட மன உறுத்தலைப் போக்க மிதமிஞ்சி குடிக்கிறான். இவ்வாறு இருமை நிலையில் போராடும் உளவியல் நோயாளியாகவே இறுதி வரை வாழ்கிறான்.
நிகழ்கால - இலங்கை
அலெக்ஸ்-இலங்கை அலெக்ஸ் தமிழர்களுக்கும் சிங்களர்களுக்கும் ஏற்பட்ட போரின் விளைவுகளில் அகதியாகி நாடுநாடாக அலைகிறான். கலைஞனான சர்வதேச குற்றவாளி கார்லோஸின் உதவியினால் பணம் சம்பாதிப்பதற்காகக் கிரேக்கம் வருகிறான். கிளியோபாட்ரா போல ஒரு பழைய மம்மியை மாற்றி விற்பனை செய்து பெரும் பணம் ஈட்டி நிம்மதியான வாழ்வை அமைத்துக் கொள்வதே அவனுடைய நோக்கம். ஓவியக் கலைஞனான அவன் சர்வதேச குற்றவாளியான கார்லோஸிடம் பழகுகிறான். இதையறியாத சிங்கள ராணுவம் அவனை வேவு பார்க்க ரனிலை அனுப்புகிறது. அகதியான அலெக்ஸ் படும் சிரமங்களுக்குச் சற்றும் குறைந்ததில்லை ரனில் படும் துன்பங்கள். ஒரு நாட்டின் எதிரிகளாகக் கருதும் மக்களை மட்டுமல்லாமல்
தன் சொந்த நாட்டு மக்களையும் போர் துன்புறுத்துவதை எம்.ஜி.சுரேஷ் இப்பாத்திரம் வழி பதிவு செய்கிறார். கிரேக்க நாட்டில் இலங்கை அலெக்ஸ் சந்திக்கும் ருக்ஸானா குர்திஸ்தான் தீவிரவாதி என்று தன்னை வெளிப்படையாகவே
அறிவித்துக் கொள்கிறாள். இலங்கைத் தமிழர்களைப் போலவே குர்திஸ்தான் மக்களும் தம் உரிமைக்காகப் போராடி வருவதை வெளிப்படுத்தும் அவள் சர்வதேச அரசியலை அறிந்து வைத்திருக்கிறாள். வரலாற்றுப் பேராசிரியை என்ற பெயரில் சர்வதேச குற்றவாளி கார்லோஸைச் சந்தித்து உதவி கேட்கிறாள். உலகெங்கும் நிகழ்த்தப்படும் போர் வன்முறைகளினால் கலைஞர்களும் பெண்களும் அகதிகளாகவும் தீவிரவாதிகளாகவும் மாறி வாழ்க்கையைத் தொலைத்திருப்பதைச் சற்று அழுத்தமாகவே எம்.ஜி.சுரேஷ்
கூறுகிறார்.
2300ம் ஆண்டில்
உலகின் நிலை-தீவிரவாதி ருக்ஸானாவுடன்
இணைந்து 2300ம் ஆண்டிற்குச் செல்லும் அலெக்சாண்டர் அங்குக் கடலுக்கடியில்
குப்பைகளாக ஒதுக்கப்பட்ட ஐம்பது வயதிற்கு மேற்பட்ட மனிதர்களைச் சந்திக்கிறான். தொடர்ந்த போரினால் விளைநிலங்கள் பாழாகி விவசாயம் குறைந்து, உணவு பஞ்சத்தினால் ஐம்பது வயதிற்குமேல் வாழும் மனிதர்கள் குப்பைகளைப்போலக் கடலுக்கடியில் வாழிடம் அமைத்து ஒதுக்கப்பட்ட நிலையை அறிகிறான். வெள்ளைக்காரர்களும், நீக்ரோக்களும்
முழுமையும் அழிந்த அந்த எஞ்சிய உலகினை மக்கள் தொகை மிகுதி உடையவை என்பதினால் சீனாவும் இந்தியாவம் ஆள்கின்றன. இந்த நிலைமை ஏற்படக் காரணமான மூன்றாம் உலகப்போரை எந்த நாடும் தொடங்கவில்லை. எல்லா நாடுகளும் அணு ஆயுதங்களைக் குவித்தல், தற்செயலாக ஒரு நாட்டில் வெடித்த குண்டை, எதிரிதான் போட்டு விட்டான் எனக்கருதி அனைத்து நாடுகளும் தன் பலத்தைக் காட்ட யுத்தத்தைத் துவங்கியதே காரணம் என்கிறார். இப்படி நடப்பதற்கு வாய்ப்புகள் அதிகம் என்பதை ஓர் எச்சரிக்கையாக
முன்வைக்கிறார்.
இன்டியானாபோலிஸ்-இலங்கை அலெக்சாண்டர் செல்லும் எதிர்காலம் ‘இன்டியானாபோலிஸ்’ இன்னும் நாகரிகம் மிகுந்ததாக இருக்கிறது. குளோனிங் மனிதர்கள் குரங்குகளைப் பேசவைக்கும் கருவிகள், பறக்கும் கார்கள் வந்துவிட்டன. இது பல போர்களுக்குப்
பின் எஞ்சிய பகுதி. இதை ஆளும் சேர்மன் அலெக்ஸாண்டர் இந்திய, பாகிஸ்தான் உள்ளிட்ட மக்கள் தொகையில் எஞ்சிய மக்களைச் சர்வாதிகாரியாகி ஆள்கிறான். குளோனிங் மனிதர்கள் சாதாரண மனிதர்களாகிய அதீத மனிதர்களுக்கு
எதிராகக் கிளர்ச்சி செய்கிறார்கள். இதற்குக்காரணம் குளோனிங் பெண்களைக் கடத்திச் செல்ல அதீத மனிதர்களுக்கு
உரிமை உண்டு. ஆனால் அதீத மனிதர்களின் பெண்களைக் குளோனிங் மனிதர்கள் நினைத்துப் பார்க்க உரிமையில்லை. பேசும் மனிதக் குரங்குகள் குளோனிங் பெண்களைக் காதலிக்கின்றன. குளோனிங் பெண்களும் மனிதக் குரங்களை ஏற்றுக் கொள்கின்றனர். குளோனிங் மனிதர்கள் உதிரி பாகங்களுக்காகவே உருவாக்கப்படுவதால் அவர்கள் அதீத மனிதர்களுக்கெதிராகப் போரிடுகின்றனர். கிளர்ச்சி செய்யும் குளோனிங் மனிதர்களை எப்போதும் அதீத மனிதர்கள் அழிக்கக் காத்திருக்கிறார்கள். எனவே நகரமெங்கும் பதுங்கு குழிகள். மறுபுறம் சேர்மன் அலெக்சாண்டரை உபமனிதர்களாகிய
மனிதக்குரங்குகளும் எதிர்க்கின்றன. இந்த எதிர்காலத்தில்
உபமனிதர்களாகிய மனிதக்குரங்குகள் அதீத மனிதர்களுக்கும், குளோனிங் மனிதர்களுக்கு
எதிராக யுத்தத்தைப் புரிகின்றன. பேசவும், ஆயுதங்களைக் கையாளவும் சிந்திக்கவும்
தெரிந்த இந்த உபமனிதர்கள் ஓருலகக் கூட்டாட்சி நடத்தும் அலெக்ஸாண்டரை பாதுகாப்புகளை
மீறி கொல்ல முயல்கின்றன. பொட்டல் வெளிகளாக எஞ்சியிருக்கும் உலகை மனிதர்கள் மட்டுமின்றி அவர்கள் தொழில்நுட்பத்தில் உருவான குளோனிங் மனிதர்களும், உபமனிதர்களும்
அழிப்பார்கள் என்று எதிர்காலத்தைக்
கணித்துள்ளார் எம்.ஜி.சுரேஷ்.
ருக்ஸானா செல்லும் எதிர்காலம்-கம்யூன் போன்ற கூட்டுச் சமுதாய வாழ்வை மேற்கொள்ளும் உலகில் எஞ்சிய மக்களின் உலகம். இங்கு ஆண்பெண் பேதமில்லை. தனிமனிதனின் வெற்றி தோல்விகள் கொண்டாடப்படுவதில்லை. எங்கும் சமத்துவம் வேண்டும் என்பதற்காக, அதீத அறிவுத்திறன் கொண்டவர்கள் குழந்தைகளாக இருக்கும்பொழுதே தனிமைப்படுத்தப்படுகிறார்கள். அதீத அழகு கொண்ட பெண்களின் நிலையும் இதுவே. இவர்களின் ஆற்றல் மட்டுப்படும் வகையில் பயிற்சி கொடுக்கப்படுகிறார்கள். போக்குவரத்து, தொழில் நுட்பம் போன்றவற்றில் அறிவியலின் தாக்கம் மிகுந்து வாழ்க்கை எல்லோருக்கும்
எல்லாம் என வளமாகவே இருக்கிறது. ஆனால் குடும்பம் என்ற அமைப்பு தகர்க்கப்பட்டு, மனிதப் பிணைப்புகள் அற்றுப்போய், வசதிகள் மட்டுமே கிடைக்கும் சூழலை வெறுக்கும் மக்கள் பெருகிப் போகிறார்கள். எந்தவித குறிக்கோளுமற்ற, உந்துதலுமில்லாத வாழ்க்கையை வெறுக்கும் மக்கள் கூட்டங்கூட்டமாகத் தற்கொலை செய்து கொள்கிறார்கள்.
மாற்றுப் பார்வை-சர்வதேசத் தீவிரவாதியான கார்லோஸை கருணைமிக்கவனாக, பாதிக்கப்படும்
மக்களின் வாழ்விற்கு நலம் சேர்ப்பவனாகக்
காட்டுகிறார். அமெரிக்காவிற்கும் இஸ்ரேலுக்குமான அணுபரிமாற்றத்தில் குர்திஸ்தான் போன்ற எளிய நாடுகள் பாதிக்கப்படுமென்று அணு ஆயுதங்களைக் கடத்திக் கடலுக்குள் ஒளித்து வைக்கிறான்.
இலங்கை அலெக்ஸின் வாழ்விற்கு உதவுவதுபோல், அவனை ஒற்றரிய வந்துள்ள ரனிலுக்கும் உதவுகிறான். தன் கூட்டாளிகள் மனம் திருந்தி வாழ விரும்பும்பொழுது, பொருளாதார ரீதியாக அவர்களுக்கு உதவ முன் வருகிறான். குர்திஸ்தான் மக்களின் நியாயமான போராட்டத்திற்கு மறைமுகமாகப் பல உதவிகள் செய்கிறான். இந்நாவல் ஆளும் அதிகாரவர்க்கத்தைச் சேர்ந்த மன்னர்களின் முகத்தைத் துகிலிரிக்கிறது. அவர்களின் போர் வெறியினால் உலகம் சீரழிந்துவிட்டதோடு, கோடிக்கணக்கான மக்கள் தங்கள் அடிப்படை வாழ்வாதாரத்தை இழந்து நிற்பதைப் பதிவு செய்கிறது. மக்களைக் காக்க வேண்டிய ஆட்சியாளர்களும், மன்னர்களும் புகழ்போதையினால் மக்களைக் கொன்று குவித்து அவர்களின் பிணங்களின் மீது வெற்றிக் கொடி நட்டுக் கொண்டிருக்க, அவர்களை எதிர்க்கும் மக்கள் நலனுக்காகப் பாடுபடும் ஒருவனோ தீவிரவாதி என்ற பெயரில் சர்வதேச குற்றவாளியாகி தலைமறைவு வாழ்க்கை வாழ்கிறான். எனவேதான் எம்.ஜி.சுரேஷ் மார்க்ஸியமும் ஜனநாயகமும் படுதோல்வி அடைந்துவிட்டதாகத் தெரிவிக்கிறார்.
இலங்கை அலெக்ஸின் வாழ்விற்கு உதவுவதுபோல், அவனை ஒற்றரிய வந்துள்ள ரனிலுக்கும் உதவுகிறான். தன் கூட்டாளிகள் மனம் திருந்தி வாழ விரும்பும்பொழுது, பொருளாதார ரீதியாக அவர்களுக்கு உதவ முன் வருகிறான். குர்திஸ்தான் மக்களின் நியாயமான போராட்டத்திற்கு மறைமுகமாகப் பல உதவிகள் செய்கிறான். இந்நாவல் ஆளும் அதிகாரவர்க்கத்தைச் சேர்ந்த மன்னர்களின் முகத்தைத் துகிலிரிக்கிறது. அவர்களின் போர் வெறியினால் உலகம் சீரழிந்துவிட்டதோடு, கோடிக்கணக்கான மக்கள் தங்கள் அடிப்படை வாழ்வாதாரத்தை இழந்து நிற்பதைப் பதிவு செய்கிறது. மக்களைக் காக்க வேண்டிய ஆட்சியாளர்களும், மன்னர்களும் புகழ்போதையினால் மக்களைக் கொன்று குவித்து அவர்களின் பிணங்களின் மீது வெற்றிக் கொடி நட்டுக் கொண்டிருக்க, அவர்களை எதிர்க்கும் மக்கள் நலனுக்காகப் பாடுபடும் ஒருவனோ தீவிரவாதி என்ற பெயரில் சர்வதேச குற்றவாளியாகி தலைமறைவு வாழ்க்கை வாழ்கிறான். எனவேதான் எம்.ஜி.சுரேஷ் மார்க்ஸியமும் ஜனநாயகமும் படுதோல்வி அடைந்துவிட்டதாகத் தெரிவிக்கிறார்.
புகழ், பணம், போர், வெற்றி இவையெல்லாம் மன்னர்களை மட்டுமல்ல விஞ்ஞானிகளையும் விட்டுவைப்பதில்லை என்பதை ஐன்ஸ்டீன் மூலம் வெளிப்படுத்துகிறார். வாழ்வின் கடைசிக் காலத்தில் மகாஅலெக்சாண்டரைப் போலவே ஐன்ஸ்டீனும் மீண்டும் வாழநேர்ந்தால்
யாரோ ஒரு முகம் தெரியாத மனிதனாகச் சாதாரணக் குடியானவனாக யாராலும் அறியப்படாத மனிதனாகவே வாழ விரும்புவதாகத்
தெரிவித்துத் தான் வாழ்வைத் தொலைத்து விட்டதாகப் புலம்பியதைப் பதிவு செய்கிறார்.
இயல்பாக வாழத் தெரியாததாலேயே
குர்திஸ்தான், ஈரான், பாலஸ்தீனம், இலங்கை போன்ற நாடுகள் போர் வெறிகொண்டு மக்களைத் துன்புறுத்தி வருவதையும் தற்காலத்தில் நாட்டில் நடக்கும் மத, இன, நிற, சாதிச் சண்டைகளுக்கு அதுவே பெரிதும் காரணமாக இருப்பதையும் சுட்டிச் செல்கிறார்.சின்ன நாடுகளில் போரைத் தூண்டிவிட்டு பெரிய நாடுகள் தங்களின் ஆயுத விற்பனையைச் சிறப்பாகச் செய்து வருகின்றன.
‘சிறிய நாடுகளிலுள்ள மக்கள், தீராத யுத்தத்தில் கண்ணி வெடியில் சிக்கி மாமிசம் சிதறினால்தான், பெரிய நாடுகளிலுள்ள மக்களின் மேஜைகளில் அந்த மாமிசத்தைப் பரிமாற முடியும். அதனால் தான் இந்த யுத்தங்களை யாரும் தடுத்து நிறுத்துவதில்லை’ (ப.
5) என்ற யதார்த்த குரூரத்தை வெளிப்படுத்துகிறார். போரின் காரணமாக ஏற்பட்ட நில அழிப்பும், நிலையற்ற ஆட்சியும், அணுஆயுதப் பெருக்கமும் ஒட்டுமொத்த பூமியையும் அழித்துவிடும்
என்ற எச்சரிக்கை விடுக்கும் வகையில் நாவலில் போர் பற்றிய பதிவுகள் அழுத்தமாப் பதிவு செய்யப்பட்டுள்ளன. கதையின் முடிவில் உண்மையிலே அழிந்துவிட்ட பூமியில், வசிக்க முடியாத எஞ்சிய பத்தாயிரம் மக்கள் மட்டும், ஒரு செயற்கை உலகை உருவாக்கி வாழ்வதையும், அங்கு மிகச்சிறிய உயிர்கள்கூடப்
பெரிதும் காக்கப்படுவது பற்றியும் எடுத்துரைத்து
தற்கால மக்களிடம் ‘இருப்பது ஒரு பூமி’ என்ற மறைமுக எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சிலந்தி-சிலந்தி நாவலில் உளவியல் சிக்கலுக்கு ஆளாகும் நபர்களைப் பற்றியும், அவர்கள் இன்னின்ன காரணங்களினால் உளவியல் சிக்கலுக்கு ஆளாகிறார்கள் என்பதையும் எம்.ஜி.சுரேஷ் வெளிப்படுத்துகிறார்.
காதல்-சாதி, மதம், சமயம், பொருளாதாரம் எனப் பல பிரிவுகளை உடைய இச்சமூகத்தில் பல காரணங்களினால் காதல் பலபேருக்கு நிறைவேறுவதில்லை. இளவயதில் ஏற்படும் காதல் மனமுறிவு பலவித உளவியல் சிக்கலை உருவாக்குகிறது. அகத்தியலிங்கம் கலை இலக்கியங்களில் ஈடுபாடு இல்லாதவன். பெலீக்ஸ் என்ற பெண்ணின் மீது ஏற்படும் ஈர்ப்பால் அவளுக்காகக் கலை இலக்கியங்களைப் படிக்கிறான். எனினும் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டுப் பிரிந்து விடுகிறார்கள். பெலீஸ் வேறொருவனை மணந்து கொண்டு தனக்குத் துரோகம் செய்துவிட்டதாக நினைத்து மனப்பிறழ்வடைகிறான். மனநலக்காப்பகத்தின் காப்பாளனாகிய சலீம் இந்துவாக இருந்து ஜஹனராவிற்காக இசுலாமியனாக மாறியவன். ஆனால் ஜஹனரா அவனை விரும்புவதில்லை. எனினும் அவள் தந்தையிடம் தனக்கு மணமுடித்துத்தரும்படி கேட்கிறான். அவரோ அவனைத் தனியறையில் சங்கிலி போட்டு கட்டி வைத்து துன்புறுத்துகிறார். இதனால் மனப்பிறழ்வடைந்து ஜஹனராவையும் அவள் தந்தையையும் கொல்வதோடு பல கொலைகளுக்கும் காரணமாகிறான். நிறைவேறாத காதலால் அகத்தியலிங்கமும், சலீமும் மனப்பிறழ்வடைகிறார்கள். மகாஅலெக்ஸாண்டரும் அனிலீயா மீது கொண்ட காதல் நிறைவேறாததை மரணப் படுக்கையிலும் நினைத்து வேதனை அடைகிறான்.
பொருளாதாரச் சூழல்-பணம் சார்ந்த வாழ்க்கையில் இன்று காதல், வீரம், அன்பு, மனிதநேயம் போன்றவை புறந்தள்ளப்பட்டுவிட்டன. பொருளாதார ஏற்றத்தாழ்வுகளும் வறுமையும் மனிதனை பெரிதும் பாதிக்கின்றன. உலகநாதன் பொறுப்பற்ற தநதையால் குடும்பபாரத்தைச் சுமக்கவேண்டி கல்வியைப் பாதியில் கைவிடுகிறான். இவனை விட மோசமாகப் படிப்பவர்கள் பிற்காலத்தில்
மேலதிகாரியாகி இவனை விரட்டி வேலை வாங்கும் பொழுது தாழ்வு மனப்பான்மை சிக்கலுக்கு ஆளாகிறான். அது ஒரு கட்டத்தில் உயர்வு மனப்பான்மையாகி
கண்ணில் பார்ப்பதெல்லாம் தனக்குரியதெனக்
கருதத் தொடங்குகிறான். எல்.ஐ.சி. கட்டிடம், தலைமைச் செயலகம் போன்றவை தன்னுடையது என அவற்றைக் கைப்பற்ற முயலும்போது மனப்பிறழ்வடைந்தவன் என மனநலக் காப்பகத்தில் சேர்க்கப்படுகிறான். மகா அலெக்சாண்டரும், சேர்மன் அலெக்சாண்டரும்
கூட ஒரு வகையில் இவனைப் போல உடைமைப் பைத்தியங்களே.
திரைப்படம்-வெள்ளியங்கிரி திரைப்படப் பைத்தியம். அதன் விளைவாகத் திரைப்படத் துறையில் ஈடுபட்டு பல படங்களை எடுக்கிறான். பல உலகத்திரைப்படங்களைத் திருடி படம் எடுத்ததால் தன் படம் எது என்று கண்டுபிடிக்க முடியாத மனநிலைக்கு ஆளாகிறான். மேலும் இவன் ஆதரித்தவர்களும், இவன் மனைவியும் இவனுக்கு எதிராகத் திரும்ப அவர்களைக் கொல்ல முயலும்போது மனம்பிறழ்வடைந்தவன் என அறியப்படுகிறான்.
மதம் - சோதிடம்-சிலந்தி நாவலில் வரும் சத்திதாசன் ஆன்மீகவாதி .தாய் தந்தை இருவரையும் சிறுவயதில் பிரிந்து தாத்தா, பாட்டியிடம் வளர்கிறான். தாத்தாவின் ஆன்மீகக் கருத்துக்களினால் ஈர்க்கப்பட்டு, ஆன்மீகத் தேடலில் ஈடுபடுகிறான். பூமியின் மீதுள்ள சக்திகோடுகளை இணைப்பதால் இந்தியா வல்லரசாகும். அந்த வல்லரசை ஆளப்போவது தான் தான் என்று நம்புகிறான். சிறுவயதில் தாய் தந்தையின் அன்பு முழுமையாகக் கிடைக்காததால்
பெண்களை வெறுக்கிறான். இந்து மதத்தின் மீது ஏற்பட்ட வெறியால் கிறித்துவ, இசுலாமியர்களைத் தாக்குகிறான். மதம் - சோதிடத்தின் மீதுள்ள வெறியால் மனப்பிறழ்வடைகிறான்.
தமிழ்ப்பற்று - இனப்பற்று-சிலந்தி நாவலில் வரும் இராஜாமணி தமிழ்ப் படித்தவன். ஆனால் தமிழ்ப் படித்தவர்களைத்
தமிழ்ச் சமூகம் தாழ்வாகப் பார்ப்பதினால்
ஏற்பட்ட மன உளைச்சலினால் அரசியல் மேடைகளில் தமிழ் முழக்கம் செய்கிறான். அரசியல் ஒதுக்கப்பட்ட பெருமாள், இராஜாமணியின் தமிழினால் கவரப்பட்டு நண்பர்களாகிறார்கள். பொருளாதார நிலையில் மேம்பட ‘மின்சார நாற்காலி’ திட்டத்தைத் தமிழர்களுக்கென்று ஆரம்பித்து அதனால் பலபேர் இறந்துவிட அதனால் இருவரும் மனப்பிறழ்வடைகிறார்கள்.
பன்முகத்தன்மை- எந்த ஓர் அமைப்பும் பன்முகத்தன்மை கொண்டதாக இருக்கின்றது. அதன் பொருண்மைத்தளங்கள் பலவாக விரிந்து செல்கின்றன. எதையும் மையப்படுத்துவதென்பது முழுமையானதாகாது. எல்லாவற்றையும் அதனதன் கோணத்திலிருந்து அவற்றின் சிக்கல்களையும், உண்மைத்தன்மையையும் ஆராயும் பார்வை தேவையானது என்ற அடித்தளத்தில் பின்நவீனத்துவம் இயங்குகிறது. இந்த அடிப்படையில் எம்.ஜி.சுரேஷ் இரண்டு நாவல்களிலும் பன்முகத்தன்மை கொண்ட பல நிகழ்ச்சிகளையும், பல பாத்திரங்களையும் படைத்துள்ளார். பின்நவீனத்துவம் என்ற சொல்லிற்கு ஏற்ப அறிவு சார்ந்த பல்வேறு சிந்தனைப் போக்குகளின் தொகுப்பாக இரு நாவல்களும் விளங்குகின்றன. அலெக்சாண்டரின் வரலாறு, பாலஸ்தீன, குர்திஸ்தான், ஈரான் வரலாறு, சர்வதேச தீவிரவாதிகள், தீவிரவாதம், எதிர்கால நிலை, ஐன்ஸ்டீனின் பிற்கால வாழ்க்கை, எகிப்து பிரமிடுகளைப் பற்றிய நுணுக்கமான பிற்கால வாழ்க்கை, எகிப்து பிரமிடுகளைப் பற்றிய நுணுக்கமான செய்திகள், குஃபு பிரமிடின் அதிசயம் முதலான செய்திகளை அலெக்சாண்டரும் ஒரு கோப்பைத் தேநீரும் நாவல் வழி விவரிக்கின்றார். போர்ச்சூழலினால் எளிய மக்களும், பூமியின் வளங்களும் பாதிக்கப்படுவது, அரிஸ்டாட்டில், டயோனிஜனஸ் முதலிய ஞானிகளின் எதிர்பார்ப்பு, உண்மையில் நடந்து கொண்டிருப்பவை என நாவலில் பல செய்திகள் பன்முகக் கோணத்திலிருந்து எடுத்துரைக்கப்பட்டுள்ளன.
சிலந்தி நாவலிலும் இதே பன்முகத்தன்மை உள்ளது. ஏழு நாளில் ஏழு கொலைகள் நடப்பதற்குக் காரணமாகக் கருதப்படும் ஆறு மனநிலை பிறழ்ந்தவர்களின் வாழ்க்கையில் ஏற்பட்ட சம்பவங்கள், அச்சம்பவங்கள் நடப்பதற்குக் காரணமான சமூகச் சூழல், நடப்பியலில் கல்வி, அரசியல், திரைப்படம், மொழி, உளவியல் போன்றவை செலுத்தும் ஆதிக்கங்கள் இந்நாவலின் இயங்கு தளங்களாக உள்ளன. படைப்பாக்கத்திற்கான சுதந்திரமான போக்கை இவ்விரு நாவல்களிலும் காணமுடிகிறது. முறைப்படுத்தப்பட்ட அமைப்பில் கதை நகராமல் பாத்திரங்களின் மனநிலைக்கேற்ப பல யதார்த்தமான திருப்பங்களுடன் கதை இயல்பாக நகர்கின்றது. பல இடங்களில் வாசகனைத் திறந்த விவாதத்திற்கு அழைக்கும் வகையில் உலக நடப்புகளையும், எதிர்கால உலகத்தையும் எடுத்துக்கூறி முடிவை வாசகனிடமே விட்டுவிடுகிறார்.ஆதிகாலத்திலிருந்த மனிதனிடம் ‘நான்‘ இல்லை. பின்பு நான் தோன்றி அவனை ஆட்டிப்டைத்தது. பின்பு அந்த நான் பலவாக மாறி ஒரு மனிதனுக்குள் பல நான்கள் தோன்றியது. பன்முகத்தன்மை கொண்ட அவனை உளவியல் சிக்கலுக்கு ஆளாக்கியது. எதிர்காலத்தில் நான்கள் என்பது குழம்பி உண்மையான நான் என்பது எதுவென அறியாமல் மனிதன் இருத்தலியல் சிக்கலுக்கு ஆளாகி தவிப்பான். தற்கொலைகள் பெருகிப் போகும் என்கிறார்.
கட்டுடைத்தல்-பிரமிடுகளைக் காவல் காக்கும் ஸ்பிங்ஸ் மூலமாகப் பல உண்மைகளைக் கட்டுடைக்கிறார். உண்மையில் காலம் என்ற ஒன்று இல்லை. எல்லாம் பாவனைதான். எல்லாக் காலங்களிலும் எல்லா மனிதனும் ஒரே மனிதனாகவே இருக்கிறான். இயல்பான வாழ்வை வாழாமல் அசாதாரண வெற்றிக்காக அலையும் மனிதர்கள் இறுதியில் தோற்றுப் போகிறார்கள். சமநிலை இழந்து உளவியல் சிக்கலுக்கு ஆளாகிறார்கள். சிலர் தற்கொலை செய்து கொள்கிறார்கள். எப்போதும் பாதிக்கப்படும் பாண்டவர்களும் அவர்களை ஏமாற்றும் கௌரவர்களும் நிறைந்ததாகவே உலகம் காணப்படுவதற்குக் காரணம் இயல்பாகவே இயற்கையாக வாழ விரும்பாத மனிதனின் மனநிலையே காரணம். அசாதாரண வெற்றிக்காக எல்லோருமே உந்தப்படுகிறோம். ஆனால் இயல்பான வாழ்வின் ஆனந்தத்தை அறியாமலே மடிகிறோம். இந்த அசாதாரண வெற்றியை நோக்கிய பயணத்தில் குடூரமான கடந்த காலத்தையம், அபத்தமான நிகழ்காலத்தையும், வைத்துக் கொண்டு வாழ்ந்துவரும் மனித இனத்தின் எதிர்காலம் மேலும் மோசமானதாகவே இருக்கும் என்கிறார். நிகழ்கால இலங்கை அலெக்சாண்டர் வழி 3 வகைக் கடந்த காலத்திற்கும் நிகழ்காலத்திற்கும் மூன்று வகையான எதிர்காலத்திற்கும் அழைத்துச் சென்று,இன்றைய மனிதன் இனி எப்படி வாழ்வது என்பது குறித்து விழிப்புணர்வு பெற வேண்டுமென்று கூறுகிறார். இந்நிலை இப்படியே நீடித்தால் எதிர்காலங்கள் எப்படி இனி இருக்கும் என்பதையும் பதிவுசெய்கிறார்.
போரும் மனித வாழ்வும்-இன்றைய நவீன உலகத்தில் எங்கேனும் ஓரிடத்திலாவது
அணுகுண்டு வெடிப்பு நிகழ்வதைப் பல ஊடகங்கள் வெளிப்படுத்தி
வருகின்றன. ஆளும் வர்க்கத்தின் போர் என்ற பெயரில் மனிதர்களைக் கூட்டம் கூட்டமாக அழித்து வருகின்றனர். மக்களின் வாழிடங்களையும்
வளமான நிலங்களையும் பாழ்படுத்தி வருகின்றனர்.
போரினால் குந்திஸ்தான், பாலஸ்தீன, இலங்கை இனமக்கள் அகதிகளாக மாறி தம் விடுதலைக்காகப் போராடி வருகின்றனர். துருக்கி, ஈரான், ஈராக் மூன்று நாடுகளும் போரடித்தால் குண்டுபோடும் இடமாக எங்கள் நிலம் பயன்படுத்தப்படுகிறது என்கிறார் ருக்ஸானா. இன சுத்திகரிப்பு என்ற பெயரில் குர்திஸ்தான் இனமக்கள், பாலஸ்தீன மக்கள், இலங்கைத் தமிழர்கள் கொன்றொழிக்கப்படுவது சர்வ சாதாரணமாக நிகழ்ந்து வருகிறது. பெரிய நாடுகள் ஆயுதங்களை விற்க சிறிய நாடுகளைத் தூண்டிவிட்டுப் போரை ஏற்படுத்துவதால் பல்லாயிரக்கணக்கான மக்கள் அழிந்ததோடு, எஞ்சியுள்ளவர்கள் சொந்தநாடு இல்லாமல் அகதிகளாக மாறிவருகின்றனர். உலகைத் தன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரவேண்டுமென்று நினைப்பவர்கள் நிகழ்த்தும் போர் வன்முறைகளினால் எதிர்காலத்தில் மனித இனமும், பூமியும் அழிந்துவிடும் அபாயம் இருப்பதை அலெக்சாண்டரும் ஒரு கோப்பைத் தேநீரும் நாவலில் சுட்டுகின்றார். போரின் விளைவுகளை ஆறுவகையான காலங்களுக்குக் கதையை நகர்த்திச் சென்று காட்டும் புதிய உத்தியை கையாண்டுள்ளார். ‘இன்றைய மனிதகுலம் தடைகளை உடைத்துக் கொண்டு இகாரஸ் போலப் பறக்கக் கற்றுகொண்டுவிட்டது. அதே சமயம் மிகத் தொலைவிற்குப் போய்த் தனக்கெதிராகவே தன் அழிவிற்கு வழி வகுத்துவிட்டது என்ற ஸ்பிங்ஸின் கூற்று ஆறு காலங்களுக்கும் பொருந்துமாறு கதையை அமைத்துள்ள விதம் பாராட்டுக்குரியது.
போரினால் குந்திஸ்தான், பாலஸ்தீன, இலங்கை இனமக்கள் அகதிகளாக மாறி தம் விடுதலைக்காகப் போராடி வருகின்றனர். துருக்கி, ஈரான், ஈராக் மூன்று நாடுகளும் போரடித்தால் குண்டுபோடும் இடமாக எங்கள் நிலம் பயன்படுத்தப்படுகிறது என்கிறார் ருக்ஸானா. இன சுத்திகரிப்பு என்ற பெயரில் குர்திஸ்தான் இனமக்கள், பாலஸ்தீன மக்கள், இலங்கைத் தமிழர்கள் கொன்றொழிக்கப்படுவது சர்வ சாதாரணமாக நிகழ்ந்து வருகிறது. பெரிய நாடுகள் ஆயுதங்களை விற்க சிறிய நாடுகளைத் தூண்டிவிட்டுப் போரை ஏற்படுத்துவதால் பல்லாயிரக்கணக்கான மக்கள் அழிந்ததோடு, எஞ்சியுள்ளவர்கள் சொந்தநாடு இல்லாமல் அகதிகளாக மாறிவருகின்றனர். உலகைத் தன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரவேண்டுமென்று நினைப்பவர்கள் நிகழ்த்தும் போர் வன்முறைகளினால் எதிர்காலத்தில் மனித இனமும், பூமியும் அழிந்துவிடும் அபாயம் இருப்பதை அலெக்சாண்டரும் ஒரு கோப்பைத் தேநீரும் நாவலில் சுட்டுகின்றார். போரின் விளைவுகளை ஆறுவகையான காலங்களுக்குக் கதையை நகர்த்திச் சென்று காட்டும் புதிய உத்தியை கையாண்டுள்ளார். ‘இன்றைய மனிதகுலம் தடைகளை உடைத்துக் கொண்டு இகாரஸ் போலப் பறக்கக் கற்றுகொண்டுவிட்டது. அதே சமயம் மிகத் தொலைவிற்குப் போய்த் தனக்கெதிராகவே தன் அழிவிற்கு வழி வகுத்துவிட்டது என்ற ஸ்பிங்ஸின் கூற்று ஆறு காலங்களுக்கும் பொருந்துமாறு கதையை அமைத்துள்ள விதம் பாராட்டுக்குரியது.
ஓர் இனத்தை மிகுதிப்படுத்தும் போக்கு உலகப் பேரழிவிற்கே வழிவகுக்கும் என்பதால் அது தேவையற்றது என்கிறார். இயல்பாக இருப்பதே ஆனந்த வாழ்வின் அடித்தளமென்பதை
ஞானி டயோனிஜஸ் வழி உணர்த்துகிறார்.
தீராதயுத்தமும் ஏராளமான பெயர்தலும் ஓர் இனத்தின் நாகரிகத்தை அழித்துவிடும் எனப்தை எதிர்கால அலெக்ஸாண்டர்களின் வாழ்க்கைகள் மூலம் வெளிப்படுத்துகிறார். இலங்கை அலெக்ஸாண்டர் மகாஅலெக்சாண்டரை சந்திக்கும்போது, ‘இப்படி எல்லாக் காலங்களுக்கும் போய் வருகிற வாய்ப்பு இருபப்தை அறியும்போது அனைத்து உலகங்களையும் ஜெயிக்க வேண்டுமென்று உந்துதல் ஏற்படுவதாக’ கூறுகிறான். இந்த, மோசமான உந்துதல்தான் மனித குலத்துக்கு எதிராகத் திரும்பியிருப்பதாக, யாரோ ஒருவனின் உந்துதலுக்காக ஒட்டு மொத்த உலகமே பாதிக்கப்படுவது எவ்வகையில் நியாயம் (ப. 378) என்று வினவுகிறார். ஓருலகக் கூட்டாட்சி, உலகமயமாக்கல் போன்றவை உலகை அழிவின் பாதைக்கே இட்டுச் செல்லும் என்பதால் அது தேவையற்றது. அந்தந்த வட்டாரத்திற்குரிய தனித்தன்மைகளே அழகானவை அர்த்தமுள்ளவை என்பதே எம்.ஜி.சுரேஷின் கருத்தாகும்.
தீராதயுத்தமும் ஏராளமான பெயர்தலும் ஓர் இனத்தின் நாகரிகத்தை அழித்துவிடும் எனப்தை எதிர்கால அலெக்ஸாண்டர்களின் வாழ்க்கைகள் மூலம் வெளிப்படுத்துகிறார். இலங்கை அலெக்ஸாண்டர் மகாஅலெக்சாண்டரை சந்திக்கும்போது, ‘இப்படி எல்லாக் காலங்களுக்கும் போய் வருகிற வாய்ப்பு இருபப்தை அறியும்போது அனைத்து உலகங்களையும் ஜெயிக்க வேண்டுமென்று உந்துதல் ஏற்படுவதாக’ கூறுகிறான். இந்த, மோசமான உந்துதல்தான் மனித குலத்துக்கு எதிராகத் திரும்பியிருப்பதாக, யாரோ ஒருவனின் உந்துதலுக்காக ஒட்டு மொத்த உலகமே பாதிக்கப்படுவது எவ்வகையில் நியாயம் (ப. 378) என்று வினவுகிறார். ஓருலகக் கூட்டாட்சி, உலகமயமாக்கல் போன்றவை உலகை அழிவின் பாதைக்கே இட்டுச் செல்லும் என்பதால் அது தேவையற்றது. அந்தந்த வட்டாரத்திற்குரிய தனித்தன்மைகளே அழகானவை அர்த்தமுள்ளவை என்பதே எம்.ஜி.சுரேஷின் கருத்தாகும்.
எதிர்காலவியல்-எதிர்காலத்தில் நிலங்கள் கந்தகப் பூமியாகி, உணவு உற்பத்தி குறைந்து கடும்பஞ்சம் ஏற்படும் என்கிறார். எனவே ஐம்பது வயதானவர்களை அரசே கொன்றுவிடும் என எச்சரிக்கிறார். எல்லா நாடுகளுமே அணு ஆயுதங்களை மணல் பரப்புகளில் குவித்து வைத்துள்ளன. இவற்றில் ஏதாவதொன்று தற்செயலாக வெடித்தால் கூட உலகப்போர் மூண்டுவிடும் வாய்ப்புள்ளதைத் தெரிவிக்கிறார். தொடரும் போர்களினால் உலகில் மக்கள் தெகை பெருக்கத்தினால் இந்தியாவும், சீனாவிம் மட்டுமே உலகில் வாழ நேரிடும். தேசம், இனம், மொழி, சாதி, சமயம் முதலான தனித்த அடையாளங்கள் அழிந்துவிடும். இனக்கலப்பு ஏராளமாக ஏற்படும். உலகப்பரப்பில் உள்ள அனைத்து மொழிகளும் கலந்த ஒரு பொதுமொழி இருக்கும். இவ்வேறுபாடுகள் அழிந்து போவதால் மனிதனுக்கு எந்த அடையாளத்தையும்
குறிக்கும் பெயர்களும் இருக்கப் போவதில்லை. அதிர்ஷ்டம், நம்பிக்கை, வாய்ப்பு என்றோ எண்களோ மட்டும்தான் மக்களுக்குப் பெயர்களாக இருக்கலாம். அறிவியல் வளர்ச்சியினால்புதுமையான நவீன கருவிகள், வாகனங்கள், ரேபோக்களின் பெருக்கம், தானியங்களி வாகனங்கள், குளோனிங் மனிதர்கள், மருத்துவத் தொழில் நுட்பத்தால் சிந்திக்கும் பேசும் குரங்குகள், பூமியின் எரிபொருள் வளங்கள் அழிந்து விட்டதால், காற்றாலும், சூரிய ஒளியாலும் இயங்கும் வாகனங்கள் என அறிவியல் தொழில்நுட்பம்
பெருகிப் போகும் என்கிறார். தொழில் நுட்பம் எவ்வளவு மேம்படுகிறதோ அந்த அளவிற்கு மனிதர்கள் பிரிந்து வாழ்வார்கள் என்பதையும் பதிவு செய்கிறார். கலை இலக்கியங்கள் போன்சாய்போல் சுருங்கி, இருத்தலியல் சிக்கல் மிகுதியாகிவிடும் என்கிறார்.
ஓருலகக் கூட்டாட்சி-ஓருலக அரசு வந்தாலும் அறிவியல் தொழில் நுட்ப மேம்பாட்டினால், புதிய ஆயுதங்களைக் கொண்டு புதிய கலவரங்களும் போர்களும் ஏற்பட வாய்ப்புண்டு. குளோனிங் மனிதர்கள், தொழில்நுட்பத்தில் மேம்படுத்தப்பட்ட மனிதக் குரங்குகள் போன்றவை மனிதனுக்கு எதிராகப் போர் புரியலாம். இதனால் தொடரும் நில அழிப்புகளாலும், இன அழிப்புகளாலும் மேலும் நிலைமை மோசமடைந்திருக்கும். இறுதியில் எஞ்சிய மக்கள் ஒரே குடும்பமாக வாழநேரிடுவர். ‘எல்லோருக்கும் எல்லாமும்’ என்ற நிலை வரும். ஆனால் சமத்துவம் என்ற ஒன்றிற்காக மக்களில் புத்திசாலிகளையும், அழகிகளையும், திறமைசாலிகளையும் ஒடுக்கி வைப்பார்கள். இதனால் பலர் தற்கொலை செய்து கொள்வார்கள். இதனால் தொடரும் புரட்சிகளில் எஞ்சிய பூமியும் அழிந்து இறுதியில் செயற்கைக்கோளில் மனிதர்கள் தொங்கிக் கொண்டு வளமான கிரகத்தைத் தேடியலைந்து கொண்டிருப்பார்கள் என்கிறார்.
பெண்களின் நிலை-மகாஅலெக்சாண்டர்களின் காலத்தில் வாழ்ந்த பெண்கள் மத, இன, சமயங்களாலும், போர்களாலும் பல்வேறு கொடுமைக்கு ஆளாகின்றனர். தொடர்ந்த போர்களினால் அரசி அடிமையாகிறாள். மகாஅலெக்சாண்டரின் மனைவி ருக்ஸானா, தன்னுடைய பாரசீக நாட்டையும், தன் தந்தையையும் அ ழித்த மகா அலெக்சாண்டரை மணந்துகொள்கிறாள். அவனுடைய வாரிசையே சுமக்கிறாள். அவனை மறுக்கும் நிலையில் அவள் இல்லை. அவனுடைய கொடூரங்களைக் கண்டு மிரண்டாலும், அவனை எதிர்க்கும் வலிமையின்றித் தன் நாட்டு மக்களுக்காக அவனுடன் மகிழ்ச்சியுடன் வாழ்வதுபோல நடிக்கிறாள்.
அரசியின் நிலையே இவ்வாறெனில் மற்ற பெண்களின் நிலை எப்படியிருக்கும் என்பதை நம் ஊகத்திற்கு விட்டுவிடுகிறார். போர்களின்போது பல இனப் பெண்கள் கற்பழிக்கப்படுகிறார்கள், கொன்று புதைக்கப்படுகிறார்கள். மகா அலெக்சாண்டர் பல பெண்களை மணந்தாலும் எவருடன் வாழ்வதே இல்லை. இறக்கும் தருவாயில் அவர்களுக்குத்தான் இழைத்த கொடுமையை நினைத்து வருந்துகிறான்.இலங்கை அலெக்சுடன் வாழும் ருக்ஸானா படித்த வரலாற்றுப் பேராசிரியை. தன் குர்திஸ்தான் இன மக்களுக்காகப் போராடுகிறாள். சர்வதேச அரசியலை தெரிந்து வைத்திருக்கிறாள். தன்னைத் தீவிரவாதி என வெளிப்படையாகவே கூறிக் கொள்கிறாள். ஈரான், குர்திஸ்தான் போன்ற நாடுகளில் பெண்கள் உடைமைகளாகக் கருதப்படுவதையும், பர்தா பெண்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட ஆணாதிக்க அரசியல் என்றும் சிந்திக்கிறாள். ஆனால் தன் இனமக்களின் வாழ்வாதாரத்துக்கே வழிதேடி அலையும் நிலையில் இருக்கிறாள்.எதிர்காலப் பெண்கள் ஆண்களுக்குச் சமமாக உரிமை பெற்றவர்களாக இருக்கிறார்கள். உடையிலும் உடைமையிலும் சேதமில்லை. அலெக்சாண்டர் செல்லும் எதிர்காலத்தில் அவன் மனைவி அவன் வீட்டிற்கு வரத் தாமதித்தால் திருமண ஒப்பந்தத்தை முறித்துவிடுவதாகக் கூறுகிறாள். எதிர்காலக் கூட்டுக்குடும்ப முறையில் ஆணும் பெண்ணும் பெரும்பாலும் தனித்தே வாழ்கிறார்கள். ஆண், பெண், குழந்தைகள் எல்லோருக்கும் சமத்துவமும் சுதந்திரமும் சாத்தியமாகியிருக்கின்றன. கட்டுப்பாடுகள் எதுவுமே கிடையாது. பெண்கள் சமைப்பதே கிடையாது. எல்லோருக்கும் பொதுவாக உணவு விடுதிகள் இருக்கின்றன. அங்கே சமையல் செய்ய விருப்பமுள்ளவர்கள் அந்த வேலைகளைச் செய்யலாம். வீடுகள் என்பவை ஓய்வெடுக்கவும் தூங்குவதற்கும் மட்டுமே தேவைப்படுகின்றன. திருமணங்கள் கட்டாயமில்லை. அதுபோலவே திருமணம் முடிந்தபின் சேர்ந்து வாழ வேண்டுமென்ற கட்டாயமுமில்லை. அதைப்போலச் சுய இன்பத்திற்கான கருவிகள் வந்துவிட்டதால் ஆணுக்குப் பெண்ணோ, பெண்ணுக்கு ஆணோ தேவையில்லை.மாதவிடாய் காலங்கள் கூடக் கவனத்தில் கொள்வதில்லை. அதன்மீதான கட்டுப்பாடுகள் முற்றிலும் தளர்ந்து திருமண நாள் கூட அந்நாளில் நடத்தப்படும் என்பதால் படிப்படியாக எதிர்காலத்தில் பெண் முழுச் சமத்துவத்தைப் பெற்றுவிடுவாள் என்கிறார்..
முடிவுரை-எம்.ஜி.சுரேஷின் நாவல்கள் வரலாற்றை அப்படியே ஏற்றுக்கொள்வதில்லை. மாறாக வரலாற்றைத் தர்க்கப்பூர்வமாக ஆராய்கிறது. பல கருத்துக்களை நிராகரிக்கிறது. அரசனோ, ஆண்டியோ மையப்படுத்தலை நிராகரிக்கிறது.ஆண்டான் - அடிமை, அரசன் - அகதி, முதலாளி தொழிலாளி என்ற இருமைகளையும் மறுக்கிறது. தொன்மங்களையும் விமர்சனத்திற்குள்ளாக்குகிறது. அனைத்திற்கும் இடமுள்ள ஒரு சமூகக்கட்டுமானம் மிக இயல்பான முறையில் தேவை என்கின்றது. மன்னர்கள் மையமாகப் போற்றப்படும்போது படைவீரர்கள் ஒடுக்கப்படுகிறார்கள். இதைத் தகர்த்துப் படைவீரர்கள் இல்லையேல் மன்னன் இல்லை என்ற உண்மையைப் புரியவைக்க முயல்கிறது. அனைத்து தரப்பினருக்கும் மையத்தைத் தருகிறது. எல்லாப் பாத்திரங்களுக்குமே சமமான பங்களிப்புக் கொடுக்கப்பட்டுள்ளது. தன்னேரில்லாத் தலைவன் அல்லது ஒரு பாத்திரத்தை மையமாகக் கொண்ட கதையாக இல்லாமல் அனைத்தும் பரவலாக்கப்பட்டுள்ளதுலந்தி நாவல் மனநலக் காப்பகத்திலுள்ள பைத்தியங்களைப் பற்றிப் பேசுகிறது. அலெக்சாண்டரும் ஒரு கோப்பைத் தேநீர் மன நலக்காப்பகத்திற்கு வெளியே தங்களை வெற்றியாளர்களாகவும், புத்திசாலிகளாகவும் கருதி வாழ்க்கையைத் தொலைத்துக் கொண்டிருக்கும் பைத்தியங்களைப் பற்றிப் பேசுகிறது. மனநல காப்பகத்தில் அடைக்கப்பட்டவர்கள் மட்டுமே மனநோயாளிகள் அல்ல. பணம், புகழ், அறிவியல், போர், திரைப்படம், ஆன்மீகம் முதலானவற்றின் மீது வெறிகொண்டு அலையும் மனிதர்களும் மனநோயாளிகள்தான் என்பதையே எம்.ஜி.சுரேஷின் இரு நாவல்களும் முன்னிறுத்துகின்றன. வரையறை என்பதையே மறுக்கும் பின்நவீனத்துவ பாணியில் பல வடிவச் சோதனைகளை மேற்கொண்டு கடந்த கால வரலாறுகளின் வழியான நிகழ்காலத்தையும், நிகழ்காலத்தின் வழி எதிர்காலத்தையும் பதிவு செய்து தற்போதைய மனிதன் மேற்கொள்ள வேண்டியவை எவை என்பது குறித்துச் சிந்திக்க வைக்கிறார். இவ்விரு நாவல்களும் தற்கால மக்கள் எதிர்காலத்தைக் குறித்துச் சிந்திக்க வேண்டிய கட்டாயத்திலிருப்பதை அழுத்தமாகப் பதிவு செய்துள்ளன.போர், வெற்றி, காதல், பொருளாதாரம், திரைப்படம், ஆசை, மதம், சோதிடம், தமிழ், இனப்பற்று போன்றவற்றில் வெறிகொள்ளும் மனிதர்கள் மனப்பிறழ்வடைகிறார்கள். தான் எங்கே தோற்றுவிடுவோமோ என்று மனிதர்கள் மனதில் ஏற்படும் அச்சமும் அதனால் ஏற்படும் தாழ்வு மனப்பான்மையுமே உயர்வு மனப்பான்மையாக வெளிப்படுகிறது. மகாஅலெக்சாண்டர் முதல் சிலந்தி நாவலில் வரும் பெருமாள் வரை அனைவரும் எதையோ அடைய நினைத்து வாழ்க்கையைத் தொலைத்தவர்கள். ஐன்ஸ்டீன் முதலான மேதைகள்கூட வாழ்க்கையைத் தொலைத்துவிட்டதாகக் கூறுவதிலிருந்து, வாழ்ந்து கொண்டிருக்கும் நிமிடங்கள் மட்டுமே உண்மையானது என உணர்ந்து வாழவேண்டும் என்பதே இருநாவல்களும் முன் வைக்கும் கருத்தியலாகும்.
துணை நின்ற நூல்கள்
1.சுரேஷ் எம்.ஜி. இஸங்கள் ஆயிரம்,மருதாவெளியீடு, சென்னை முதற்பதிப்பு 2005
2.சுரேஷ் எம்.ஜி. அலெக்சாண்டரும் ஒரு கோப்பைத் தேநீரும், அடையாளம்வெளியீடு, திருச்சி முதற்பதிப்பு 2011
3.சுரேஷ் எம்.ஜி சிலந்தி அடையாளம்வெளியீடு, திருச்சி. முதற்பதிப்பு 2011
4.பூமிச் செல்வம்.ஆ, பின்னை நவீனத்துவம்,அகரம், தஞ்சாவூர். முதற்பதிப்பு 2009 5.மங்கையர்க்கரசி.சிவ. இலக்கிய இயக்கங்கள் தமிழிலக்கியத்தின் சமூக வரலாறு, என்.சி.பி.எச்.சென்னை முதற்பதிப்பு 2004.
1.சுரேஷ் எம்.ஜி. இஸங்கள் ஆயிரம்,மருதாவெளியீடு, சென்னை முதற்பதிப்பு 2005
2.சுரேஷ் எம்.ஜி. அலெக்சாண்டரும் ஒரு கோப்பைத் தேநீரும், அடையாளம்வெளியீடு, திருச்சி முதற்பதிப்பு 2011
3.சுரேஷ் எம்.ஜி சிலந்தி அடையாளம்வெளியீடு, திருச்சி. முதற்பதிப்பு 2011
4.பூமிச் செல்வம்.ஆ, பின்னை நவீனத்துவம்,அகரம், தஞ்சாவூர். முதற்பதிப்பு 2009 5.மங்கையர்க்கரசி.சிவ. இலக்கிய இயக்கங்கள் தமிழிலக்கியத்தின் சமூக வரலாறு, என்.சி.பி.எச்.சென்னை முதற்பதிப்பு 2004.
அருமையான திறனாய்வுப் பார்வை
ReplyDeleteஅம்மா!
"உலகில் முதல் தோன்றிய மொழி தமிழே!" என்ற மின்நூலை வெளியிடவுள்ளேன்.
அதற்கொரு கட்டுரை தாங்களால் ஆக்கி அனுப்பமுடியுமா?
முழு விரிப்புமறிய
https://seebooks4u.blogspot.com/2017/03/2017.html