ஆர்.சண்முகசுந்தரம் பார்வையில்
கொங்குநாட்டுப் பெண்களின் மரபும் மாற்றங்களும்
மனித வாழ்க்கை
அவர்கள் வாழும் மண்ணில் வேர்கொண்டிருக்கிறது. மண்ணின் தன்மையோடு தன்னை
இணைத்துக்கொண்ட கொங்கு வட்டார மக்களின் வாழ்க்கையை அவர்களுக்குரிய பின்னணியைக்
கொண்டு ஆர்.ச. படைத்துச் சென்றுள்ளார்.
கொங்கு நாட்டில் சிறு விவசாயிகள் கையகல
நிலத்தைக் கொண்டு வாழ்வின் அத்தனை தேவைகளையும் பூர்த்தி செய்ய வேண்டிய நிலையில், குடும்பத்தைக் கரையேற்றப் படாதபாடு படுகிறார்கள். அவர்களோடு சேர்ந்து அவர்களது
பெண்களும் மண்ணில் சரிக்குச் சமமாகப் பாடுபடுகிறார்கள். ஆடுமாடு மேய்த்தல், விவசாயம் செய்தல், கூலி வேலைக்குச் செல்லல், குடும்பத்தை நிர்வகித்தல் எனப் பெண்கள்
ஓய்வு ஒழிச்சலின்றி உழைக்க வேண்டிய சூழலில் இருக்கிறார்கள். இச்சூழலில் கொங்கு
கிராமத்தைச் சார்ந்த நகரப்பகுதியான கோவையின் தொழில் வளர்ச்சி, பிற மக்களின் வருகை, புதுத் தொழில்கள், நகரத்துக்குச் சென்று பணிபுரியும் மக்களின் பொருளாதாரப் பின்னணி, பல நிலைகளிலிருந்து ஏழை எளிய கிராம மக்களின் வாழ்வை நெருக்குதலுக்கு
உள்ளாக்குகின்றன. எனினும்,
கொங்குப் பெண்கள் மண்ணையும், உழைப்பையும் உயிர்
மூச்சாகக் கருதிப் போராடுகின்றனர். மண்ணில் காலூன்றிப் பாடுபட்டு, அம்மண்ணையே தெய்வமாகக் கருதி, அம்மண்ணிற்கே உரமாகிப் போகும்
மானுடவாழ்வில் மண்ணுக்கும் மனிதனுக்கும் இடையே பாலமாக நின்று பெண்கள்
நிலைத்திருத்தலுக்காகப் பாடுபடுகிறார்கள்.
காலங்கள் கடந்து போனாலும், நாகரிகம்
தொழில்வளர்ச்சி என்ற பெயரில் உள்ளே நுழைந்தாலும் கொங்குப் பெண்களிடம் உடலுழைப்பும், மனஉறுதியும், கற்புநெறியும் கனன்று கொண்டிருக்கிறது. கொங்குப் பெண்கள் குடிப்பெருமையைக்
கட்டிக் காக்கும் வல்லமை உடையவர்களாகத் திகழ்கின்றனர். நடுவு நிலைமை பழிக்கும்
அஞ்சும் குணம், கடின உழைப்பு, மரபைக் காக்கும் மேன்மை, சுயமாகச் சிந்திக்கும் தன்மை, நியாயமென்று தோன்றிவிட்டால் எதையும் யாரையும் எதிர்க்கும் துணிவு, வெற்றி தோல்வி கருதாது இறுதிவரை போராடும் மாண்பு போன்ற பண்புகளின் ஒட்டுமொத்த
வடிவமாக ஒவ்வொரு கொங்குப் பெண்ணும் திகழ்வதை ஆர்.ச. துல்லியமாகப் பதிவு
செய்துள்ளார். கொங்கு மண் கடினத்தன்மை உடையது. வானம் பார்த்த பூமியாதலால் காலந்தோறும்
உழைக்க nவ்ணடிய சூழல் உள்ளது. இதனால், பொருளாதாரத் தேவையை நிர்வகிக்கும்
பெண்கள் சற்றுக் கறாராகவே நடந்துகொள்ள வேண்டிய சூழல் ஏற்படுகிறது. எனவே ஆம்
மண்ணைப் போலவே அவர்களின் மனமும் இறுகிப் போயிருக்கிறது. உழைக்கும் வர்க்கத்துப்
பெண்களாதாதலால் தன்மானம் உடையவர்களாக யாருக்கும் தலைவணங்காதவர்களாகத்
திகழ்கிறார்கள். எனவே, கற்பு நிலையில் மிக உறுதி படைத்தவர்களாக, நெஞ்சுறுதி மிக்கவர்களாக, குடும்ப மானம் தன் கையில் என்ற உணர்வுடையவர்களாகத் தென்படுகின்றனர்.
உழைப்பே அவர்களின் மூச்சு. மண்ணில் காலூன்றப்
பாடுபட்டு, அம்மண்ணையே தெய்வமாகக் கருதி
அம்மண்ணிற்கே உரமாகிப் போகும் மானுட வாழ்வில் மண்ணுக்கும் மனிதனுக்குமிடையே
பெண்கள் பாலமாகத் திகழ்கின்றனர். உடல் உழைப்பு, மன உறுதி, அலட்சியப் போக்கு, நியாயமென்று தோன்றிவிட்டால் எவரையும் எதிர்க்கும் துணிவு, வெற்றி தோல்வி கருதாது இறுதிவரை போராடும் துணிவு போன்ற குணங்களின் ஒட்டுமொத்த
வடிவம்தான் கொங்குப் பெண்கள். ஆணுக்குப் பின்னிருந்து செயல்படுபவர்கள் அல்லர்
இவர்கள். சுயமாகச் சிந்தித்து செயல்படும் வல்லமை உடையவர்கள்.
கிராமங்களில் ஒருவரைப் பற்றி ஒருவர் கருத்து பரிமாறிக்
கொள்ளும் நிலை உள்ளது. நான்குபேர் சேர்ந்தால் மற்றவர்களைப் பற்றி கவலைப்
படுகின்றனர். ஆனால், நகர்ப்புறத்தில் இதைக் காண முடிவதில்லை. கள்ளங்கபடமற்ற, எதிர்பார்ப்புத் தன்மையற்ற உறவுகளை ஆர்.ச. புதினம் அன்பினை அடித்தளமாகக்
கொண்டு, தனது சுற்றங்களை அரவணைத்துச் செல்லும் பெண்களை மிகுதி. உறவுகளைப் பகடைக்
காய்களாகப் பயன்படுத்தி தனது சுயநலத்திற்கு அவர்களை மூலதனமாக்கிக் கொள்ளும்
போலித்தனமான மாந்தர்கள் இல்லை. அறிவியலின் ஆக்கமும், கல்வி நாகரிக வளர்ச்சி
போன்றவை பல தாக்கங்களை மாற்றங்களை கொங்குமக்கள் வாழ்வில் ஏற்படுத்தியிருந்தாலும்,
கொங்கு மண்ணிற்கே உரித்தான கற்பு உறுதியும், துணிச்சலும், தனித்த ஆளுமையும் உடையவர்களாகப் கொங்குப் பெண்கள் திகழ்கின்றனர்.
கொங்கு மண் கடினத்தன்மையுடையது. இதில்
உழைத்து உழைத்து உரமேறிய பெண்கள், மண்ணைப் போலவே நெஞ்சுறுதி மிக்கவர்கள். குடும்ப
மானத்தைக் காக்க தயங்காதவர்கள். பழிக்கும் அஞ்சும் குணம் படைத்தவர்கள்.
சகமனிதர்கள் மீது கரிசனம் உடையவர்கள். அதேசமயம், உறவுகளைப் பகடைக் காய்களாகத் தனது
சுயநலத்திற்காகப் பயன்படுத்திக் கொள்ளாதவர்கள், போலித்தனம் அற்றவர்கள், கற்பில் உறுதியும், துணிச்சலும், தனித்த ஆளுமையும்
உடையவர்கள்.
ஆர்.ச. தன் நாவலுக்கானப் பாத்திரங்களைக்
கொங்கு மக்களின் வாழ்க்கையிலிருந்தே எடுத்துக் கொண்டிருக்கிறார். இப்பாத்திரங்கள்
கற்பனை மாந்தர்கள் அல்லர். அச்சு அசலான உண்மை மாந்தர்கள்.வெளிநாட்டிலிருந்து
இந்தியாவிந்கு பணி புரிய வந்த தாமஸ்மன்றோ தான் பார்த்த கொங்குப் பெண்களைப் பதிவு
செய்திருக்கிறார்.
கி.பி.1800ல் கொங்குநாட்டை ஆட்சிபுரிந்த தாமஸ் மன்றோ
அவர்கள் கொங்குநாட்டுப் பெண்களைப் பற்றி இவ்வாறு வர்ணிக்கிறார். தமிழ்நாட்டுப்
பெண், அதுவும் கொங்குநாட்டின் ஒரு பகுதியான சேலத்திலுள்ள ஓமலூரிலுள்ள ஒரு பெண்ணைப்
பற்றிய நிகழ்ச்சியைக் குறித்துத் தன் தந்தைக்குக் கடிதம் எழுதுகிறார் மன்றோ (1796
மே,10).
‘. . . இந்தப் பகுதி
மக்களின் வறுமைக்குக் காரணம் அரசாங்கம்தான். அவர்களின் சோம்பலோ, கொளுத்தும் வெயிலோ அல்ல. அவர்களிடையே பல சாதிப் பிரிவுகள் உள்ளன; வேலையில் ஈடுபடும் ஊக்கம், வெவ்வேறு சாதி
மக்களிடம் வெவ்வேறு அளவில் உள்ளது; தீர்வையை நிர்ணயிக்கும்போது நிலத்தின் திறனையும் கணக்கில் கொள்ள வேண்டும்.
பிராமணர்கள் எல்லா வகையான விவசாய வேலைகளையும் செய்யலாகார். ஏர் உழுவதைத் தவிர; அவர்களுடைய பெண்கள் வயல் வேலைகளில் ஈடுபடுவதில்லை. எனவே அவர்களுக்குப்
பாதியளவு அல்லது முக்கால்வாசித் தீர்வைதான்.................‘சில சாதிகளைச் சார்ந்த பெண்கள், ஆண்கள் செய்யும் அனைத்து (விவசாய) வேலைகளையும் செய்கிறார்கள்; மற்ற சாதிப் பெண்கள் ஏர் உழுவதைத் தவிர பிற வேலைகளைச் செய்வார்கள்; வேறு சில சாதிப் பெண்கள் எந்த வகையான விவசாய வேலைகளிலும் ஈடுபடுவதில்லை. இதில்
நல்லதொரு அம்சம் என்னவென்றால் ஆண்-பெண் என்று இருவகையினரும் ஊக்கமுடன் வேலை
செய்யும் சாதியினர்தான் எண்ணிக்கையில் அதிகம். இந்த சாதியில் பெண்கள்தான் எல்லா
நிர்வாகத்தையும் கவனித்துக் கொள்கின்றனர்; அவர்களின் உத்தரவுகளை ஆண்கள் மறுத்துச் சொல்வதில்லை. பெண்கள்தான் வாங்குவது, விற்பது, கடன் கொடுப்பது, கடன் வாங்குவது போன்ற சமாச்சாரங்களைக் கவனிக்கிறார்கள். தீர்வை சம்பந்தமாகக்
கச்சேரிக்கு வரும் ஆண், வீட்டிலிருந்து
கிளம்பும் முன், தன் மனைவியிடமிருந்து உத்தரவுகளை
வாங்கிக் கொண்டுதான் வருகிறான். கச்சேரிக்கு வந்து, தனது முறையீட்டில் காரியம் ஆகவில்லை என்றால், அது எவ்வளவு சிறிய சங்கதியாக இருந்தாலும், வீட்டிற்கு வந்தபின் அவனுக்குக் ‘கச்சேரி’ இருக்கும்.
‘அடுத்த நாள் அந்தப் பெண் என்ன செய்கிறாள். . . ? கணவனை வீட்டில் இருக்கச் சொல்கிறாள்; சீற்றத்துடன் கச்சேரிக்குக் கிளம்புவாள்
அங்கிருந்தே வருவாய்த் துறையின் அனைத்து அலுவலர்களையும் திட்டிக்கொண்டு
வருவாள். கச்சேரிக்கு வந்ததும் ஒரு மணி நேரத்திற்கு நாடக பாணியில் ஏற்ற
இறக்கத்துடன் பேச ஆரம்பிப்பாள். தன் புருஷன் மீது இந்த ‘ராஸ்கோல்’ ஆட்கள் அநியாயமாகத் தீர்வையை
ஏற்றிவிட்டார்கள் என்று பேசுவாள். முடிவுரையாகச் சொல்லுவாள்: ‘மாடுங்க இல்லாம நான் ஏர் உழ முடியுமா? எப்படித் தங்கம் வாங்க முடியும்? இந்தப் புடவையை விற்றா வாங்க முடியும்?’- அரைகுறையாக உடுத்தியிருக்கும் அழுக்கடைந்த புடவையைச் சுட்டிக் காட்டுவாள்.
‘அவள் வேண்டுகோள் என்னவோ, அது நிறைவேறினால்
முகத்தில் சிரிப்புடன் அங்கிருந்து கிளம்புவாள். இல்லாவிட்டால் அவள் குரல் ஓங்கி
ஒலிக்கும். நீண்ட நாள் பழக்கத்தால், அந்தச் சமயங்களில் அவளுடைய குரல் ஆண் குரலைவிட வேகமாக ஒலிக்கும். கச்சேரியில்
இருப்பவர்கள் கேலியாகச் சிரிப்பார்கள்.
‘வீட்டிற்கு வந்ததும் ராசியில்லாத கணவனைப் பார்ப்பாள். அவள் வாதம் சரியோ தப்போ, தன் ஆதங்கத்தைக் கொட்டுவாள். ஆனால் ஒன்றுமட்டும் நிச்சயம் - அன்றிரவு அவள்
வழக்கம் போலத் தூங்குவாள். அடுத்த நாள் விடியற்காலையில் அவள் வீட்டுப்பக்கம்
யாராவது போனால் அவளைக் காண முடியும். முன்தினம் எதுவும் நடக்காதது போல நுhல் நூற்றுக் கொண்டிருப்பாள். நான் பார்க்கவில்லையானாலும், கேள்விப்பட்டிருக்கிறேன். பாதையில் சரியாக வழி புலப்படாத அந்த இருட்டு
நேரத்தில் அவள் நூற்றுக் கொண்டிருப்பாள். இப்படிப்பட்ட விவசாயக்குடிப் பெண்கள்தான்
இந்தியாவில் உற்பத்தியாகும் துணிகளுக்கு நூல் நூற்றுத் தருபவர்கள்.’”
ஒரு கொங்கு கிராமத்துப் பெண்ணின் உழைப்பையும், நிர்வாகத் திறனையும், தலைமைப் பொறுப்பையும், சீரான வாழ்க்கையைப் புரிந்து கொண்டு நடப்பதையும், பாங்காகப் படம் பிடித்துக் காட்டுகிறார் எழுத்து வித்தகர் மன்றோ!
தாமஸ் மன்றோ தன் வாழ்வில் சந்தித்த கொங்கு பெண்கள் பற்றிய
சித்திரத்தை இவ்வாறு பதிவு செய்துள்ளார். கொங்கு பெண்களின் எளிமை, அறியாமை, அமைதி, பழமை கட்டுப்பாடு, சாதி உணர்வு, கடின உழைப்பு, கற்பில் திண்மை, தோற்றத்தில் மிடுக்கு, மனதில் அன்பு போன்ற
குணங்களின் ஒட்டுமொத்த வடிவத்தை தாமஸ் மன்றோ “ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்” என்பது போல மிக அழகாக இந்த ஒரு பெண்ணின் வாயிலாக வெளிப்படுத்தியுள்ளார்.
ஆர்.ச.வும் தன் படைப்பில் சிறிதும்
மாற்றமின்றி அச்சு அசலாகவே அவர்களை உலவ விட்டுள்ளார். தன்மானம், சுயமரியாதை, நெஞ்சுறுதி உடைய இப்பெண்கள்
உழைப்பினாலேயே இத்தன்மைகளைப் பெற்றுள்ளனர். ஆர்.ச. புதினங்களில் வரும் இலட்சிய
மாந்தர்கள் எவ்விடத்தும் தலைசாய்வதில்லை.. தனது உறவுகளுக்கும் அண்டை அயலாருக்கும்
உதவிகளைச் செய்து எவ்வித எதிர்பார்ப்புமில்லாமல் உழைக்கும் உன்னத மனிதர்களாகத்
திகழ்கிறார்கள். எனினும்,
வாழ்வின் சிக்கலில் சிக்கித் துன்பப்படுபவர்களாகவும்
உள்ளனர்.
ஆர்.ச. கற்பனைப் பாத்திரங்கள் அல்ல.
வாழ்க்கையிலிருந்து எடுக்கப்பட்ட மக்கள் கூட்டத்திலிருந்து
தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள். இப்படிப்பட்ட கொங்கு பெண்களை அச்சு அசலாகவே ஆர்.ச. தன்
நாவல்களில் உலவ விட்டிருக்கிறார். இவருடைய படைப்புகளில் கொங்கு வட்டாரத்து உண்மைப்
பாத்திரங்களையே காண முடிகிறது. ஆர்.ச. தன் புதினங்களில் கொங்கு சமூகத்தின் முழு
வாழ்வையும் அதன் இருண்டதும் ஒளிமிக்கதுமான எல்லாப் பகுதிகளையும் இயல்பு நவிற்சியாகக்
கலையழகுடன் தீட்டிக் காட்டியுள்ளார். சமூகத்தின் குறைபாடுகளையும் நிறைகளையும்
எடுத்துக்கூறும் இயல்புடன் அவற்றைத் தாங்கியும் நகர்கின்றன. பெரும்பாலும்
உழைக்கும் மக்களே இடம்பிடித்து ஓரிரு வசதி படைத்த பாத்திரங்களைத் தவிர; மற்ற அனைவருமே உடல் உழைப்பைக் கொண்டு பிழைப்பவர்களே. அன்றாட உழைப்பின் மூலமே
அவர்கள் வாழ்விற்கான பொருளை ஈட்டுபவர்களாக உள்ளனர். அவர்களது வாழ்க்கையை
நடத்தையைத் தீர்மானிக்கும் பெரும் சக்தியாகப் பொருளாதாரம் விளங்குகிறது.
பொருளாதாரமே அனைத்து வாழ்க்கை நீதிகளையும் தீர்மானிக்கிறது. இப்பொருளாதாரமே மக்களின்
வாழ்க்கையை தன் கையில் எடுத்துக் கொண்டுள்ளது. பொருளாதார ஏற்றத்தாழ்வுகளினால்
மாறுபடும் மக்கள் வெகுசிலரே பொருளாதாரத்தில் பின் தங்கியவர்களே மிகுதி. ஆர்.ச.
காட்டும் ‘கொங்கு கிராமங்கள் எளிமை, அறியாமை, அமைதி, இயற்கை நெறி, பழமை கட்டுப்பாடு, சாதி உணர்வு, உழைத்தாக வேண்டிய பொருளாதாரச்சூழல் போன்றவற்றை உள்ளடக்கியவையாக உள்ளன.
பிறந்த வீட்டின் பெருமையைப் புகுந்த வீட்டில் கட்டிக் காக்க
வேண்டிய பெரும்பங்கு பெண்ணைச் சார்ந்திருக்கிறது.
ஆர்.ச. புதினங்களில் வெளிப்படும் மற்றொரு
கோணம் நகர வளர்ச்சியின் காரணமாக உறவுகளுக்குள் ஏற்படும் விரிசல்களைக்
காட்டுவதாகும். நகரச் சூழல் என்பது மனதை மையமாக வைத்து வாழும் வாழ்க்கையைக்
கொண்டது அல்ல. பணத்தை மையமாக வைத்து வாழும் வாழ்க்கையைக் கொண்டது. இதனால் மனம்
சார்ந்த விஷயங்கள் புறக்கணிக்கப்படும் சூழலில் கிராமத்து மனிதர்களிடம் பிணக்குகள்
ஏற்படுகிறது.
பணம் என்னும் நச்சுவேர் குடும்ப உறவுகளை
ஆட்டிப்படைக்கும் சூழலை ஆர்.ச. பல புதினங்களில் பதிவு செய்துள்ளார். விவசாயத்தை
நம்பியவர்கள் பணம் தேடி நகரத்திற்குச் செல்லும்போது, கிராம உறவுகள்
புறக்கணிக்கப்படுகிறது. கிராமங்களுக்கு மீண்டும் மீளும் இவ்வுறவுகள் தம் சக
உறவுகளிடம் போலி வேடம் அணிந்து உலவுகின்றன. கிராம வாழ்க்கை உண்மையும் தூய்மையும்
உழைப்பும் நிறைந்த வாழ்க்கை. இதன் காரணமாக நகரத்துச் சூழலும், நகர மாந்தர்களின் சுயநலப் போக்கும் கண்டு கிராமத்து மக்கள் மிரளுகின்றன நிலை
ஏற்படுகிறது. அவர்களிடமிருந்து விலகி வாழவே விரும்புகின்றனர். எனினும், இளைய தலைமுறையினரை நகரத்து பகட்டு ஈர்க்கிறது.இதை ஆர்.சவின் நாவல்கள் பதிவு
செய்வதோடு நசரத்து நாகரிகத்தை சற்று அந்நியமாகவே நோக்குகிறது. கேலி செய்கிறது.
‘தனிவழி‘ நாவலில் வரும் நாச்சியப்பன் வேறு யாருமல்ல ஆர்.ச.வேதான். ஆலை மில்லின்
சங்கு ஒலி சாவு ஒலியாகத் தோன்றுகிறது. அதே சமயம் கல்வி வளர்ச்சி பெண்களை இரண்டு
விதமாக் பாதித்துள்ளதைப் பதிவு செய்துள்ளார். ஒன்று சுயமாகச் சிந்தித்து தனக்கு
சரியென்று பட்டதைத் துணிவோடு
செயல்படுத்தும் பெண்கள். இவ்வகைப் பெண்கள் தங்கள் குடும்ப உறவுகளுக்குள் ஏற்படும்
முரண்பாடுகளை தங்களின் நுண்ணறிவினால் களைய முயற்சி மேற்கொள்கின்றனர். சமூகத்திற்கு
நன்மை விளையும் என்று மனதில் பட்டு விட்டால், தான் கற்ற கல்வியைப்
பயன்படுத்தப்படும் சூழல் வரும் போது, துணிச்சலாகக் களம் இறங்குகின்றனர்.
கல்வியில்லாததினால் தன்னைவிட 50 வயது மூத்த கிழவரை மணக்க, (பொருந்தாமணத்திற்கு)
பெண்கள் தள்ளப்படுவதையும், கல்வி கற்ற பெண்கள் தனக்குப் பிடிக்காத இளவயது
மணமகனையும் கூட மறுத்து திருமணத்தை நிறுத்தி விடுவதையும் பதிவு செய்துள்ளார். கல்வியின் பயன் நன்மையே என்ற கருத்து இவ்வகைப்
பெண்களின் மூலம் பதிவு செய்யப்படுகிறது.
அதே சமயம் கல்வி பெற்றதினால், தனக்கு
கொடுக்கப்பட்ட உரிமையைத் தவறாகப் பயன்படுத்தும் பெண்களும் உள்ளனர். இவர்கள் தம்
குடும்பத்திற்கு பெருத்த அவமானத்தைத் தேடித் தருகின்றனர். நகரத்து நாகரிகம்
இவர்களது உண்மை இயல்பினைச் சிதைத்து இரண்டுங்கெட்டான்களாக இவர்களை மாற்றியிருக்கிற
அவலத்தையும் ஆர்.ச. பதிவு செய்துள்ளார். விரும்பியபடி வாழ்வது, பின் விளைவுகளைப்
பற்றி யோசிக்காமல் முடிவெடுப்பது, தான் தோன்றித்தனமாகச் செயல்படுவது, அலட்சிய
உணர்வு, பெரும்போக்கு போன்ற குணங்கள் சில கல்வி பெற்ற பெண்களிடம் பதிந்து, மண்ணின்
குணம் மாறிவருவதைப் பதிவு செய்துள்ளார். குடும்ப சூழலும் ஒரு காரணம் என்ற கருத்து
அடித்தளமாக இருக்கிறது. எனினும், குடும்ப உறுப்பினர்களின் கவனிப்பாலும்,
கண்டிப்பினாலும் இப்பெண்கள் நேர்வழிக்குத் திருப்பப்பட்டு, மண்ணிற்குரிய பண்பைப்
பெறுகிற நிலையும் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. மொத்தத்தில் ஆர்.ச. கொங்கு மண்ணின்
குணத்தை இப்பெண்களின் வழி அழகிய சித்திரங்களாக வரைந்து காட்டியுள்ளார்.
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்களைப் பதிவு செய்யலாமே?