நீரின்றி அமையாது உலகு.

முனைவர் ஜ.பிரேமலதா,தமிழ் இணைப்பேராசிரியர், அரசு கலைக் கல்லூரி, சேலம் 636 007 DR.J.PREMALATHA,ASSOCIATE PROFESSOR IN TAMIL,GOVT ARTS COLLEGE,SALEM -636 007.

Thursday, 3 November 2016

சுயபுராணம்



ஜோதிர்லதா கிரிஜா நாவல்களில் பெண்ணியம்

3.11.2016.பொதுவாய்மொழித் தேர்வு  என் மாணவி மா.ஜெகதாம்பாள் அவர்களுக்கு,  தலைப்பு - ஜோதிர்லதா கிரிஜா நாவல்களில் பெண்ணியம்.  தமிழ்த்துறைத்தலைவர் சீ.குணசேகரன் தொடங்கி வைக்கிறார். இடம். அரசு கலைக்கல்லூரி, சேலம் -7

என்னுடைய உரை















ஆய்வாளர் ஆய்வுரை

புறத்தேர்வாளர் க.திலகவதி தமிழ்ப்பல்கலைக்கழகம் தஞ்சாவூர்


ஜோதிர்லதா கிரிஜா நாவல்களில் பெண்ணியம்

ஆய்வாளர் 
மா.ஜெகதாம்பாள்   

முனைவர் பட்டத்திற்காகப் பெரியார் பல்கலைக்கழகத்திற்கு அளிக்கப்பெற்ற  இந்தஆய்வேடு பெண்ணின் நிலையை ஜோதிர்லதாகிரிஜா நாவல்களின் வழி ஆராய்ந்துள்ளது.  



 பெண் கல்வி இன்று சாதாரணச் செயலாகி, அலங்காரத்துக்காக கல்வி கற்றது போய், அவசியத்துக்காகக் கல்வி கற்பது இன்றியமையாததாகி விட்டது. பெண்கள் இரட்டை பணியைச் சுமக்க வேண்டியவர்களாகி விட்டனர். வீட்டிலும், வெளியிலும் சுமக்கவேண்டிய பொறுப்புகளின் கனம் கூடியிருக்கிறது. பெருகிவரும் பொருளாதாரச் சிக்கல்களும் மாறி வரும் சமூக நியதிகளும் பெண்களின் பிரச்சினைகளை, வீட்டிலும் வெளியிலும் அதிகரிக்கச் செய்திருக்கின்றன. இவை பெண்களின் மனநிலையை பெருமளவு பாதிக்கத்தான் செய்திருக்கின்றன. இந்தப் பாதிப்பை ஜோதிர்லதா கிரிஜா தனது படைப்புகளில் எங்ஙனம் பிரதிபலிக்கிறார் என்பதே ஆய்வின் நோக்கம்என்று ஆய்வாளர் குறிப்பிட்டுள்ளார்.


மக்களின் வாழ்வை பிரிதிபலிக்கும் சமகால இலக்கியங்களுள் நாவலும் ஒன்று. எங்குப் பார்த்தாலும் பெண்களின் சிக்கல்கள் பெரிதாகப் பரிணமித்துக் கொண்டு வருகின்றன. நம் இந்திய நாடு சுதந்திரம் பெற்று 65 ஆண்டுகள் ஆகியும், பெண்களின் வாழ்வில் குறிப்பிடத்தக்க மாற்றம் எதுவுமில்லை. எவ்வாறெல்லாம் பெண்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்பதைத் தமிழ்நாட்டுப் பெண் எழுத்தாளர்கள் பதிவு செய்து வருகின்றனர். அவ்வகையில் ஜோதிர்லதா கிரிஜாவின் நாவல்கள் ஆய்வுக்கு எடுத்தாளப்படுகின்றன. அப்படைப்புகளில் காணப்படும் பெண்களின் நிலை பற்றி இக்கட்டுரை ஆராய்கிறது.


சமூக உருவாக்கத்தில் மாற்றமடைந்த பெண்களின் அடிப்படைப் பண்புகள் பற்றியும், அதற்கான கடுமையான சட்டதிட்டங்களுக்கு ஆளாகும் பெண்களின் நிலை பற்றியும், பெண் பிறப்பு, பெண் சிசுக்கொலை, பெண் வளர்ப்பு, பெண் கல்வியும் சமுதாயமும், பெண் கல்வி மறுப்பு, பெண் கல்வியின் பயன், பெண் கல்வியும் சமூக சேவையும் பெண்ணிற்கு கட்டுப்பாடு, திணிக்கப்படுதல், ஆண் - பெண் நட்பு போன்றவை ஆய்விற்கு எடுத்துக் கொள்ளப்படுகின்றன. பெண்களுக்கு சிக்கல்கள் காரணமான சமூக அமைப்பின் தன்மைகள் பெண்ணிய நோக்கில் ஆராயப்பட்டுள்ளது.

பொதுவாக ஆணுக்குள் இருக்கும் உணர்வுகள் தான் பெண்ணுக்குள்ளும் காணப்படுகின்றன. ஆணுடைய பலங்கள், பலவீனங்கள் போல் பெண்ணிடத்திலும் அவை காணப்படுகின்றன. பெண்களுக்கு மட்டும் இப்படித்தான் நடக்க வேண்டும் என்று சமுதாயம் விதிக்கிறது. சட்டத்தில் இல்லாத விலங்கினை உடைத்தெறிய எழுந்ததே பெண்ணியமாகும்.


பெண் ஆணைவிட எவ்விதத்திலும் குறைந்தவள் இல்லை என்பதை, அவள் கல்வி கற்றாலொழிய நிரூபிக்க இயலாது. அக்கல்வி இன்றேல் ஆண்களும் அவளை இணையாக மதிக்கப்பட மாட்டார்கள்என்ற பாரதியின் கருத்துகளுக்கு உருவம் கொடுக்கக்கூடிய வகையில் ஜோதிர்லதா கிரிஜாஅவரது நாவல்களில் முத்துலட்சுமியும், துர்க்காவும், பங்கஜமும் உருவாக்கப்பட்டுள்ளனர். ஜோதிர்லதா கிரிஜாஅவரது நாவல்களில் நாங்களும் வாழ்கிறோம்’, ‘போராட்டம்’, ‘மன்மதனைத் தேடி’ ,‘ தனிமையில் இனிமைக் கண்டேன்’, ‘துருவங்கள் சந்தித்த போது’, ‘மறுபடியும் பொழுது விடியும்’, ‘அழகைத் தேடி’, ‘வித்தியாசமானவர்கள்ஆகிய கதைகளில் பெண்கல்வி, ஆண் - பெண் நட்பு, வரதட்சணைக் கொடுமை, மறுமணம், பொருந்தா மனம், பாலியல் வன்முறை, ஆணாதிக்கம், கற்புநிலை, சந்தேக குணம், திருமண ஏக்கம் என்று பல்வேறு கோணங்களில் ஜோதிர்லதா கிரிஜாபல கருத்துக்களைக் கூறியுள்ளார்.


குடும்ப அமைப்பில் கட்டுப்பாடுகள்


குடும்ப அமைப்பின் கீழ் மனைவி, தாய், மகள், சகோதரி போன்ற பல உறவு நிலைகளைப் பெற்றிருக்கும் பெண், ஆணின் கட்டுப்பாட்டின் கீழ் வாழும்போதுதான் கௌரவம் பெறுகிறார்கள். குடும்ப அமைப்பின் அனைத்துத் தேவைகளையும் பூர்த்தி செய்து, முழுமையான ஈடுபாட்டையும், உழைப்பையும் தரவேண்டுமென்று எதிர்பார்க்கப்படுகிறார்கள். இதனால் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வளர்ப்பின்மூலம் பக்குவப்படுத்தப்படுகின்றனர்.

 குடும்ப அமைப்பில் ஆணுக்குரிய கடமைகளை நிறைவேற்றுவதும், கைவிடுவதும் அவனுடைய விருப்பத்தைச் சார்நதது. ஆனால், பெண்கள் குடும்பப் பொறுப்புகளை எப்பாடு பட்டேனும் நிறைவேற்றியாக வேண்டும் என்ற மரபுசார் கட்டுப்பாடு நடைமுறையில் பெண்ணுக்குச் சுமையாகி உள்ளது. தனிக்குடும்ப அமைப்பில் பிரச்சனைகள் இல்லைதான். என்றாலும் நாவலாசிரியர் கூட்டுக்குடும்பமே சிறந்தது என்பதை கூறியுள்ளார்.


பெண்கள் கல்வி கற்றாலும், கற்கவில்லையென்றாலும் ஆண்களிடம் அடிமைகளாகத்தான் வாழ்கிறார்கள். வாழ வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள்.  அதை எதிர்த்து போராடிக் கொண்டும் இருக்கிறார்கள் என்பதை ஆசிரியர் சுட்டிக் காட்டியுள்ளார்.


பெண்ணுக்கு ஏற்படும் அநீதிகள்


ஏழைகளின் உழைப்பைச் சுரண்டிக் குடிக்கும் மேல்வர்க்க ஆணாதிக்கம் ஏழைப் பெண்களின் கற்பைச் சூறையாடவும் தயங்குவதில்லை. உயிரை காப்பாற்றக் கூடிய டாக்டர்களே தவறாக நடந்து கொண்டால் மற்ற ஆண்களுக்குச் சொல்ல வேண்டுமா என்ற யதார்த்த நிலையை ஆசிரியர் சுட்டிக்காட்டியுள்ளார். பாலியல் கொடுமைபோராட்டம்என்னும் நாவலில் பணக்கார வர்க்கத்தைச் சேர்ந்த விசக்கிருமிகள் எவ்வாறெல்லாம் பெண்களைத் துன்புறுத்துகின்றனர் என்பதனை பல்வேறு நிகழ்வுகளில் பச்சிளம் குழந்தைகள் தொடங்கி, பாரினிலே பாலியல் பலாத்காரம் என்பது பலவகைகளிலும் பெண்ணுக்கு அநீதிகள் நடந்தேறிக் கொண்டேதான் இருக்கின்றன என்பதை தம் நாவலில் கூறுகிறார். மன்மதனைத் தேடிஎன்னும் நாவலில் குடும்ப வறுமையின் காரணமாக வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு ஏற்படும் அநீதிகள் பற்றி கூறும்போது ஆண்களின் கீழ்த்தரமான நிலையைச் சுட்டிக் காட்டியுள்ளார் ஆசிரியர்.


கட்டுப்பாடுகள்


நம் இந்திய நாட்டில் பெண்களுக்கென்று தனியாக கட்டுப்பாடுகள் விதித்து, அதன்படி தான் நடந்து கொள்ள வேண்டுமென்று அவர்களின் மேல் தினிக்கின்றனர். இதனால் அவர்களால் வாய்விட்டு பேசவும் முடிவதில்லை. சிரிக்கவும் முடிவதில்லை. இந்தியாவிலுள்ள பெண்கள் எப்படியெல்லாம் ஆண்களால் பாதிக்கப்பட்டும், கட்டுப்படுத்தப்பட்டும் உள்ளார்கள் என்பதை ஆசிரியர் சுட்டிக் காட்டியுள்ளார். ஜோதிர்லதா கிரிஜாதமது படைப்புகளின் மூலம் ஒரு நடுத்தர வர்க்கத்தைச் சார்ந்த பெண்ணிற்கு உண்டாகும் பல்வேறு வகையான சிக்கல்களைப் பதிவுசெய்துள்ளார். இச்சிக்கல்கள் களையப்படும் வரை சமுதாய முன்னேற்றம் நிகழாது என்பதை வலியுத்துவதாக ஆய்வாளர் நாவல்கள் வழி  எடுத்துரைத்துள்ளார். ஒரு ஆணும், பெண்ணும் சந்தித்து கருத்து பரிமாற்றம் செய்து கொண்டேதான் ஆக வேண்டும் என்னும் சூழ்நிலையில் ஆண்-பெண் நட்பு பெண்ணை மட்டும் பாதிக்கிறது என்றும், ஆணும் பெண்ணும் பழகுவது தப்பில்லை என்பதையும் ஆசிரியர் சுட்டிக் காட்டுவதாக்க் கூறுகிறார். .""பெண் பார்த்தல் படலம்"" என்ற பெயரில் மாப்பிள்ளை வீட்டாரின் நிலையற்ற போக்கால் பெண்களின் வாழ்வில் நிரந்தர சிக்கலை ஏற்படுத்தி விடுகிறது என்பதை தம் புதினத்தில் ஆசிரியர் சுட்டிக் காட்டியுள்ளார்என்றும் பெண்கள் தாங்களே தங்கள் உரிமையை எடுத்துக் கொள்ள வேண்டும். அப்போதுதான் பெண்களின் வாழ்வில் திருமணம் சிக்கலாக இருக்காது என்பதையும்  தீர்வாக ஆசிரியர் சுட்டிக் காட்டியுள்ளார் என ஆய்வாளர் குறிப்பிடுகிறார். .

வரதட்சணைக்கு தீர்வு கலப்பு மணம் செய்து கொள்வதுதான் என்பதை ஆசிரியர் சுட்டிக் காட்டுகிறார். வரதட்சணை கேட்கவும் கூடாது, வாங்கவும் கூடாது. இவ்வாறு இருப்பவர்களைத்தான் திருமணம் செய்து கொள்வேன் என்று பெண்கள் கூற வேண்டும். இதுவே வரதட்சணைக்கு தீர்வாக இருக்க முடியும் என்பதை ஆசிரியர் சுட்டிக் காட்டுவதாக்க் காட்டுகிறார். பெண்களின் விருப்பப்படி வரதட்சணை வாங்காமல் திருமணம் செய்துகொள்ள இளைஞர்கள் முன்வந்தாலும் பெற்றோர் ஏற்பதில்லை என்பதை நாவலாசிரியர் வழிஆயவாளர் சமூக நிலையைக் காட்டியுள்ளார்.


சாதாரண விசயங்களுக்குக் கூட பழிவாங்கும் குணம் ஆண்களுக்கு இயற்கையிலே உள்ளது. பெண்களுக்கு அவ்வாறில்லை. தன்னை பழிவாங்க நினைத்து பழிதீர்த்துக் கொள்ளும் ஒருவனை மட்டுமே பழிவாங்க நினைப்பவளாக உள்ளாள். புதிய யுகம் பிறக்கட்டும்என்னும் புதினத்தில் மகாபாரதக் காலத்திலிருந்தே பெண்களை அவமானப்படுத்தியும், பழிவாங்கும் எண்ணத்தோடும் வாழ்ந்து வருவதையும், அவர்களை திருப்பி பழிவாங்க துடிக்கும் பெண்ணினத்தையும் பற்றி கூறுகையில், பெண்கள் தவறு செய்வதற்கு ஆண்களே காரணம், ஆண்கள் பெண்களை பழிவாங்க நினைத்து சாதித்து விட்டால், பெண்களும் பழிவாங்க துடிக்கிறார்கள். இதனால் அழிவுதான் மிஞ்சுகிறது என்றும், ஆண்களைப்போல் பெண்களும் நடந்துகொண்டால் அழிவுதான் ஏற்படும் என்பதை இதன்மூலம் சுட்டி காட்டியுள்ளார்.



இவருடைய புதினங்களில் ஆண்கள் தற்கொலை செய்து கொண்டதற்கான செய்திகள் இல்லை. மாறாக, ஐந்து பெண்கள் தற்கொலை செய்து கொள்ள நினைக்கிறார்கள். மூன்று பேர் இறந்தும் விடுகிறார்கள். இரண்டு பேர் காப்பாற்றப்படுகிறார்கள். காதலித்து ஏமாற்றப்பட்ட மூன்று பெண்களும் இறந்து விடுகிறார்கள். திருமணம் செய்து கொண்டு கணவனால் கைவிடப்பட்டு தற்கொலைக்கு முயன்று காப்பாற்றப்பட்டவர்கள் இரண்டு  பெண்கள் என்று ஆணாதிக்கச் சூழலினால் பெணகள் வாழ்க்கையை வெறுப்பதைச் சுட்டியுள்ளார். .


விதவை மறுமணம்


புதிய யுகம் பிறக்கட்டும்என்னும் புதினத்தில் விதவைகளாகும் தங்கள் பெண்களுக்கு மறுமணம் செய்விக்க முதலில் பெற்றோர்கள் பக்குவப்பட வேண்டும். அவர்களை ஏற்க, பிருமசாரிகளோ அல்லது மனைவியை இழந்த ஆண்களோ முன்வர வேண்டும். மறுமணம் செய்துகொள்வது (செய்யத்தகாத) பாவம் என்பதாய்ப் பெண்கள் தாங்களாகவே நினைக்கவேயில்லை. அவ்வாறு போதிக்கப்பட்டு வந்துள்ளது. அதனால் பெண்களும் இவ்விஷயத்தில் மனமாற்றமும் துணிவும் கொள்ள வேண்டும் என்றஆசிரியரின் முற்போக்குச் சிந்தனையை வெளிப்படுத்தியுள்ளார்..

பெண்கள் தங்கள் அழகின் மூலம் பெண்கள் படும் துயரங்களையும், அவலங்களையும், அழகாக இருந்தாலும் வாழ்க்கையே பிரச்சனையாக அமைந்து விடுவதையும், அழகாக இல்லையென்றால் திருமண வாழ்க்கை வாழ்வதற்கே பிரச்சனையாக இருப்பதையும் ஆசிரியர் சுட்டிக் காட்டியுள்ளதாகச் சுட்டுகிறார்..நாவலாசிரியர் பெண்களின் சிக்கல்களுக்கெல்லாம் காரணம் இச்சமூகம் பெண்களிடம் விதிக்கும் பிற்போக்கான கட்டுப்பாடுகளும், அதற்கு அடித்தளமாக இருப்பதுஆணாதிக்கமுமே என்பதை நாவல்கள் வழி வெளிப்படுத்தி இதிலிருந்து பெண்கள்தான் போராடி வெளி வரவேண்டுமென்று தீர்வாகக் கூறிருப்பதைப் பதிவு செய்துள்ள ஆய்வாளர்,ஒரு நாவலில் ஆசிரியர் பெண்களுக்கு எந்த இடத்திலேயும் பாதுகாப்பு இல்லை என்பதால் அவர்களிடம் மன்றாடி கேட்டுக் கொள்ளும் ஒரு செதியும் பதிவு செய்துள்ளார். 

 "". . . . .. .  அருமைச் சகோதரர்களே! வீட்டை விட்டுப் பல்வேறு கட்டாயங்களால் வெளியே வரத்தொடங்கியுள்ள பெண்களுக்குப் பாதுகாப்பாக இருக்க முயலுங்கள். முடியாவிட்டால், தொந்தரவு தராமலாவது இருங்கள்! இறுதியாக ஒன்று சமுதாயம் சார்ந்த எந்த இயக்கமாக இருந்தாலும், ஆண், பெண் இருபாலரும் இணைந்து அதில் ஈடுபட்டால் அது வெற்றி பெற்று பயனளிக்கும். அருமைச் சகோதரர்களே! நீங்களும் நாளை பெண் குழந்தைகளுக்குத் தகப்பன்மார் ஆவீர்கள் என்பதை நினைத்துப் பார்த்து உங்கள் இளமைப் பருவத்திலிருந்தே எங்கள் இயக்கத்தில் உங்களை இணைத்துக்கொண்டு எங்களுக்கு உதவுங்கள். இவ்வியக்கத்தின் சாதனைகள் நாளை உங்கள் மகள்களுக்குப் பெரிதும் உதவும்.""


ஜோதிர்லதா கிரிஜாதம் புதினத்தின் மூலம் பெண்களின் சிக்கல்களுக்கு காரணமான ஆணாதிக்க நிலையை முற்றிலும் வேரறுக்க பெண்களால்மட்டும்  இயலாது என்றுணர்ந்து ஆண்களும் முன்வரவேண்டுமென்று ஆண்களிடம் மன்றாடிக் கேட்கும் நிலையை தெரிந்து கொள்ள முடிகிறது என்று பதிவு செய்துள்ளார். ஆய்வாளர் கருதுகோளிலிருந்து விலகாமல் இறுதிவரை அதற்கேற்ப இயல்கள் அமைத்து ஆசிரியரின் பெண்ணியப் பார்வையை ஆராந்துள்ளார். ஆணாதிக்கத்தை வேரறுக்கவில்லையெனில் பெண்களின்சிக்கல்களுக்குத்த தீர்வில்லை என்றஆசிரிர்ன் பார்வயை பதிவு செய்துள்ளதோடு, பெண்கள் இதிலிருந்து விடுபட ஒன்றிணைந்து தொடரந்து போராடவேண்டும் என்றும் தீர்வாகக் கூறிச் சென்றுள்ளதையும் பதிவு செய்துள்ளார்.


எதிர்கால ஆய்வுகளுக்கான தலைப்புகளையும் தந்துள்ளார். வளமான துணைநூற்பட்டியல், பொருத்தமான பின்னிணைப்புகள் என்று ஆய்வேடு முழுமை பெற்றுள்ளது. நாவலாசிரியரின் சமூக அக்கறையுடன் கூடிய பெண்ணிப்பார்வையையும் வெளிப்படுத்தியுள்ளார்.















No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்களைப் பதிவு செய்யலாமே?