நீரின்றி அமையாது உலகு.

முனைவர் ஜ.பிரேமலதா,தமிழ் இணைப்பேராசிரியர், அரசு கலைக் கல்லூரி, சேலம் 636 007 DR.J.PREMALATHA,ASSOCIATE PROFESSOR IN TAMIL,GOVT ARTS COLLEGE,SALEM -636 007.

Friday 29 April 2016

இருளிலிருந்து ஒளிக்கு . . . . . . . . .



இருளிலிருந்து ஒளிக்கு . . . . . . . . .

Image result for சூரியன் 
Image result for விளக்கு உலகின் ஒரு பகுதி முழுவதும் இருள் நிரம்பியிருந்தது. மற்றொரு பகுதி முழுவதும் ஒளி நிரம்பியிருந்தது. இருளும் ஒளியும் அந்தியில் சந்தித்துக் கொண்டன. நட்பு கொண்டன. இருள் ஒளியை நோக்கி கூறியது. நீ இருக்குமிடமெல்லாம் அழகாக இருக்கிறதே. என் வீட்டிற்கு ஒரு முறை வரக்கூடாதா? என்றது. ஒளி உடனே ஒப்புப் கொண்டது. இருளின் வீட்டை நோக்கி ஒளி செல்லத் தொடங்கியது. ஒளி உள்ளே நுழைய நுழைய இருளின் வீடு பிரகாசமாகியது. எங்கும் ஒளி வெள்ளம். இருள் மறைந்து பிரகாசமானதைக் கண்டு இருளிற்கு ஒரே மகிழ்ச்சி. உடனே ஒளி கூறியது. சரி நீயும் என் வீட்டிற்கு வா. உடனே இருள் ஒப்புக் கொண்டு மறுநாள் சென்றது. ஒளியை நோக்கிச் செல்லச் செல்ல இருளின் இருள், கருமை கொஞ்சம் கொஞ்சமாக அகலத் தொடங்கியது. எங்கும் ஒளி வெள்ளம்.

கவலை, துன்பம், அறியாமை, வறுமை அனைத்தும் இருளைப் போன்றவை. ஆனால் ஒளியோ நம்பிக்கை போன்றது. இருள் ஒளியாகிய நம்பிக்கையை நோக்கிப் போனாலோ, அல்லது நம்பிக்கை இருளைத் தேடி வந்தாலோ அத்தனை இருளும் மறைந்து எங்கும் நம்பிக்கை ஒளியே நிறைந்திருக்கும்.
நம்மைப் போன்ற சாதாரண மனிதர்களுக்கு மட்டும் தானா துன்பம், சோதனை, துயரமெல்லாம் இதோ மகாகவி பாரதியாருக்கும் தான் அவையெல்லாம் வாழ்வில் நிறைந்திருந்தன. அதை ஒரு பாடலில் இவ்வாறு கூறுகிறார்,
""
பண்டு நடந்ததனைப் பாடுகின்ற இப்பொழுதும்
மண்டு துயரெனது மார்பை யெலாங்கவ்வுதே!
ஓடித் தவறி உடைவனவாம் சொற்களெலாம்
கூடி மதியிற் குவிந்திடுமாம் செய்தியெலாம்""
நடந்ததையே நினைத்துக் கொண்டிருப்பதால், நினைக்கும் போதெல்லாம் துயரம் இதயத்தைக் கவ்வுகிறதாம். கோபம் வந்து சொற்கள் முறைதவறி வருகின்றனவாம். திரும்பத் திரும்ப அந்த நினைவுகளே மனதில் குவிகின்றதாம்.
இதிலிருந்து விடுபட அந்த மகாகவி என்ன செய்தார்? இதோ கேளுங்கள்.
துயரம் கதையை நடுவே நிறுத்தி விட்டுகாலைக் கதிர் அழகின் கற்பனைகள் பாடுகிறேன்என்று சூரியக் கதிர்களைப் பார்த்து தன் கதையைத் தொடர்கிறார்.
சூரியனைப் பார்த்தாராம். அது புல்லை சிரிக்க வைத்த அழகைக் கண்டாராம். பூவை வியப்பாக்கியதாம். மண்ணைத் தெளிவாக்கியதாம், நீருக்கு மலர்ச்சி தந்ததாம். விண்ணை ஒளியாக்கியதாம். இப்படியெல்லாம் விந்தை செய்த சூரியக் கதிர்கள் அவருக்குள்ளும் ஒரு விந்தை செய்ததாம்.
அதுதான் இருண்ட பகுதியில் ஒளி பட்டதும் எழுந்த மலர்ச்சி. அதுதான் மனிதனின் இதயத்திற்குள் இருக்கும் நம்பிக்கையைத் தூண்டி விட்ட அற்புத நிகழ்ச்சி.
புல்லுக்குள்ளிருக்கும் சிரிப்பும், பூவிற்குள் இருக்கும் அழகும், நீருக்குள் இருக்கும் மலர்ச்சியும் அவற்றிற்கே உரியவை. ஆனால் இருளில் மூழ்கியிருந்ததால் அவை வெளிப்படவில்லை. ஒரு ஒளி பட்டவுடன் அவை வெளிப்பட்டுவிட்டனவாம்.
மனித மனதிற்குள் இருக்கும் சுடரைத் தூண்டி, துலங்கச் செய்பவை நம்பிக்கைகளே. அறியாமையை நீக்கி அறவை தருபவை நம்பிக்கைகளே.
துயரத்தால் துவண்டிருந்த ஒரு கவிஞர் கூறுகிறார்நான் புதுப்புது இலட்சியங்களை நோக்கி என் பாதங்களை எடுத்து வைத்தேன். இருண்டிருந்த வானம் நட்சத்திரங்களால் நிறையத் தொடங்கியது. நமக்கெல்லாம் கவலை இருப்பதைப்போலச் சூரியனுக்கும் கவலை வந்துவிட்டதாம். அந்தி நேரம். சூரியன் மறையும் நேரம். உலகைப் பார்த்து சூரியன் கேட்டராம்.நான் சென்று விட்டால் இந்த உலகம் இருண்டு விடுமே. எனக்குப் பிறகு இந்த உலகிற்கு யார் ஒளிதரப் போகிறீர்கள்?’ நிலவு சூரியனைப் போல் நம்மால் ஒளிதர முடியாதென நினைத்ததால் அமைதியாக இருந்தது. நட்சத்திரங்களோ நிரந்தர ஒளி தராதவை எனத் தங்களை நினைத்துக் கொண்டிருந்ததால் ஓடி ஒளிந்து கொண்டன. ஆனால் ஒரு எளிய அகல் விளக்குக் காற்றில் அசைந்தபடியே தலைநிமிர்ந்து சொன்னது. ""நான் இருக்கிறேன் சூரியதேவா. மகிழ்ச்சியாகச் சென்று வா!"" சிறு அகல் விளக்கின் நம்பிக்கை பேச்சைக் கேட்டதும் சூரியன் மேலும் பிரகாசித்ததாம். இது இரவீந்திரநாத் தாகூரின்அகல்விளக்குகவிதை கூறும் செய்தி. ஏனவேதான் எத்தனை மாதங்களிருந்தாலும் கார்த்திகை மாதம் சிறப்பான மாதமாகக் கொண்டாடப்படுகிறது.
அகல் விளக்குகளின் ஒளியில் உலகமே மெய் மறந்து நிற்கிறது. இருட்டு என்ற அரக்கனை அஞ்சாமல் எதிர்த்து நிமிர்ந்து நிற்கும் அகல் விளக்கிடம் போராட்டக் குணத்தைக் கற்றுக் கொள்வோம்.

துன்பமும் இன்பமும் கலந்த முரண்பட்ட போக்கே நம்முடைய வாழ்க்கை. வாழ்வில் ஏற்பட்ட துன்பங்களை மட்டுமே நினைத்துக் கொண்டிருப்பது வளர்ச்சியைத் தடை செய்வதாகும். எல்லா இருளையும் நீக்கக்கூடியது ஒன்றே ஒன்றுதான். அதுதான் நம்பிக்கை.
மண்ணில் புதையுண்டு போன, புதைக்கப்பட்டுவிட்ட ஒரு விதை முட்டி மோதி வெளி வருகிறது. எப்படி?முன்னேற வேண்டும் என்ற ஒற்றை நம்பிக்கையால்தான். பின் அது விருட்சமாகி உலகிற்கே நிழல் தருகிறதே. ஒற்றை நம்பிக்கை செய்துவிட்ட மாயம்தான் இதுவல்லவா?
ஓஷோ ஓரிடத்தில் கூறுகிறார். இறைவன் படைப்பில் விதையில்லா பழங்கள் இல்லாதது போல், நம்பிக்கையில்லாத மனிதனும் இல்லை. பழத்திற்குள் விதைகள் ஒளிந்திருப்பதுபோல மனிதனுக்குள்ளும் நம்பிக்கை ஒளிந்திருக்கிறது. கனி விதையைச் சுமப்பதுபோல மனிதனும் நம்பிக்கையைச் சுமந்து கொண்டுதான் இருக்கிறான்.
அந்த நம்பிக்கையை நாம் உணர வேண்டும். நம்பிக்கை தான் வாழ்வின் உந்து சக்தி. மனிதன் நலிவடைந்த போது நம்பிக்கைதான் நலம் சேர்க்கும்.
ஒரு படகுக்காரன் நடுக்கடலில் தனியாக மாட்டிக் கொண்டான். எங்கும் இருள் சூழ்ந்திருக்கிறது. அலையோ வேகமாக வீசுகிறது. எந்த நிமிடத்திலும் புயல் வரலாம். படகுக்காரனுக்கு ஆறுதல் சொல்லக்கூட யாருமில்லை. படகுக்காரன் அந்த நிலையிலும் நினைத்துக் கொண்டான்.படகுக்குள் அலைவரலாம். ஆனால் மனிதனுக்குள் அச்சம் வரலாமா? அப்படி அச்சம் வந்துவிட்டால் அடியோடு நம்பிக்கை ஓடிப் போய்விடுமே. என்ன செய்வது?’ தனக்குத்தானே பாடிக் கொள்கிறான். இதோ அந்தப் பாடல்,
""
கடல் நடுவே துடுப்பிழந்தால்
கையிரண்டும் துடுப்பாகும் - விடிந்தால்
கரை எனது கண் அருகே
காலமும் என் கையருகே""
மனித வாழ்வில் இன்பமும் துன்பமும் அடுத்தடுத்து வரக்கூடியவை. இன்பத்தில் இனிமை பெறும் மனம், துன்பத்தில் துவண்டு விடக்கூடாது. முரண்பட்ட வாழ்க்கையில் வெற்றி பெற நம்பிக்கையே துணையாகிறது. பயணத்தின் இறுதிவரை, வாழ்வின் இறுதிவரை கூட்டைத் துறந்துவிடாத ஆமையைப் போல, ஒரு தந்தையைப் போல நாமும் நம்பிக்கையைச் சுமப்போம்.
தீபங்கள் புற இருள் அரக்கனை எதிர்த்து அவனை அகற்றுவது போல, நம்பிக்கை என்னும் ஓர் ஒளி நம் மன இருளை அகற்றி விடும்.
மனத்திருளேதுமின்றிஎன்று அபிராமி அந்தாதியும்,
மனத்திருள் மூழ்கி கெடலன்றிஎன்று திருப்புகழும்,
ஒளியுளோர்க்கு அன்றோ ஒழியாது ஒளியும்என்று திருமூலரும், மனத்திருளை நீக்க நம்பிக்கையைக் கைக் கொள்ள வேண்டும் என்கிறார்கள். நீ விழும்போதெல்லாம் தாங்கிப் பிடிக்கும் இந்தக்கை. மனம் உடையும் போதெல்லாம் தட்டிக் கொடுக்கும் இந்தக்கை. தனியே நீ அழும்போதெல்லாம் உன் கண்ணீரைத் துடைக்கும் இந்தக் கை. அது வேறு யார் கையும் அல்ல. உன்னுள் உள்ள உன்னுடைய நம்பிக்கைதான். ஆதை மட்டும ஒருபோதும் இழந்துவிடாதே!.
""
எவன் ஒருவன் எதனாலும் துயரப்படுவதில்லையோ, எதற்காகவும் எதையும், யாரையும் வெறுப்பதில்லையோ அவனே எனக்குப் பிரியமானவன்"" என்கிறார் பகவத்கீதையில் ஸ்ரீகிருஷ்ணர்.

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்களைப் பதிவு செய்யலாமே?