நீரின்றி அமையாது உலகு.

முனைவர் ஜ.பிரேமலதா,தமிழ் இணைப்பேராசிரியர், அரசு கலைக் கல்லூரி, சேலம் 636 007 DR.J.PREMALATHA,ASSOCIATE PROFESSOR IN TAMIL,GOVT ARTS COLLEGE,SALEM -636 007.

Friday, 15 April 2016

உள்ளம் கவர்ந்த கள்வன் அவன்....

உள்ளம் கவர்ந்த கள்வன் அவன்....
Image result for மணல் வீடு  
தலைவி கூற்றாக வரும் குறிஞ்சிக்கலி பதினைந்தாவது பாடல் இது. தன் சிறுவயது தோழியின் பருவ வயது குறும்பைத் தோழியிடம் கூறுகிறாள்.

ஒளி பொருந்திய வளையலை அணிந்த தோழியே இதனைக் கேள்.
ஒரு நாள் நானும் தாயும் வீட்டில் தனித்திருந்தோமா?. அப்போது  வாசலில் இருந்து “அம்மா தண்ணீர் தாகத்துக்கு வேண்டும்“ என்ற குரல் கேட்டது.

 
தாயோ கைவேலையாயிருந்தாள், எனவே என்னை அழைத்து, ‘வாசலில் யாரோ தண்ணீர் கேட்கிறார்கள் கொண்டு போய்க் கொடுத்துவிட்டு வாஎன்றாள்.
Image result for குடித்தல் 
நானும் தண்ணீர் கொண்டு போனேன். அங்கே வாசலில் நின்றிருந்தது யார் தெரியுமா? “நாம் சிறு வயதில் சிற்றில் இழைத்து மணலில் விளையாடும் போது, ஓடிவந்து நம் சிற்றிலைத் தன் காலால் சிதைத்து நம்மை அழ வைப்பானல்லவா ஒருவன். நம் தலையில் கூடியிருக்கும் கோதையைப் பிய்ந்து அழ வைப்பானே, அவன் தான் வாசலில் வந்து நின்று கொண்டு தண்ணீர் கேட்டான். இப்போது பருவ வயது கட்டழகு காளையாகி விட்டான். நான் அவனென்று அறியாமல் தண்ணீர் கொண்டு போனேனா? அவனோ பழைய குறும்பை இன்னும் விடவில்லை. சட்டென்று என் முன் கையைப் பற்றி இழுத்து விட்டான். நானோ நடுங்கிப்போனோன்.    

என்னை அறியாமல்அம்மாஇவன் என்ன செய்து விட்டான் வந்து பார் என்று அலறிவிட்டேன். அன்னையும் அலறித் துடித்து ஓடி வந்தாள். அவனோ பயந்து போய்விட்டான். பாவமாக இருந்தது. எனவே நடந்ததை மறைத்தேன் . என்ன  சொல்வது என்று விழித்தேன். உண்மையைச் சொன்னால் என்னாகும்? அவனை நையப் புடைத்து விடமாட்டார்களா? எனவே ஒரு பொய்யைச் சொன்னேன்.
Image result for கண்ணன் குறும்பு 
              
“இவன் மடமடவென்று நீ ர் குடித்தானா?. புரையேறிற்று. எங்கே இறந்துவிடப் போகிறானோ என்ற அச்சத்தில் தான் உன்னை அழைத்தேன் என்று ஒரு வழியாகப் பொய் கூறிச் சமாளித்து அவனைக் காப்பாற்றினேன். என்கிறாள்.
 
அன்னையும் உண்மையென்று நம்பி, அவன் முதுகைத்தடவிக் கொடுத்துஎன்னப்பா அவசரம். மெதுவாக நீர் குடிக்க வேண்டியது தானேஎனக் கூறினாள்.
 
அப்போது அந்தத் திருட்டுப்பயல் என்ன செய்தான் தெரியுமா? என்னைக் கடைக் கண்ணால் பார்த்துக் கண் சிமிட்டி, நகை செய்தான் என்கிறாள்.


பொய் சொன்னால் தப்பில்லையா என்று கேட்கலாம்.  வள்ளுவர் கூறுவது போல அது, ‘புரை தீர்ந்த' நன்மையைத் தரும் என்றால் பொய் சொல்லலாம். கபிலரின் பாடல்களில் நகைச்சுவை உணர்வுடைய  நாடகப் பாங்கிலான பாடல் இது.
 
சுடர் தொடீஇ! கேளாய் - தெருவில் நாம் ஆடும்மணல் சிற்றில் காலின் சிதையா, அடைச்சிய
கோதை பரிந்து, வரிப் பந்து கொண்டு ஓடி ,
நோதக்க செய்யும் சிறு பட்டி, மேல் ஓர் நாள்,
அன்னையும் யானும் இருந்தேமா, 'இல்லிரே!
உண்ணு நீர் வேட்டேன்' என வந்தாற்கு, அன்னை
'அடர் பொன் சிரகத்தால் வாக்கிச், சுடர் இழாய்!
உண்ணு நீர் ஊட்டி வா' என்றாள்; என, யானும்
தன்னை அறியாது சென்றேன்; மற்று, என்னை
வளை முன்கை பற்றி நலியத், தெருமந்திட்டு,
'அன்னாய்! இவன் ஒருவன் செய்தது காண்!' என்றேனா,
அன்னை அலறிப் படர்தர, தன்னை யான்,
'உண்ணு நீர் விக்கினான்' என்றேனா, அன்னையும்
தன்னைப் புறம்பு அழித்து நீவ, மற்று என்னைக்
கடைக் கண்ணால் கொல்வான் போல் நோக்கி, நகை கூட்டம்
செய்தான், அக் கள்வன் மகன்!

2 comments:

  1. சிறந்த படைப்பு
    பயன்மிக்க பதிவு

    ReplyDelete

உங்கள் கருத்துக்களைப் பதிவு செய்யலாமே?