நீரின்றி அமையாது உலகு.

முனைவர் ஜ.பிரேமலதா,தமிழ் இணைப்பேராசிரியர், அரசு கலைக் கல்லூரி, சேலம் 636 007 DR.J.PREMALATHA,ASSOCIATE PROFESSOR IN TAMIL,GOVT ARTS COLLEGE,SALEM -636 007.

Saturday 13 September 2014

சேலம் மாவட்டபோக்குவரத்தும் ,சுற்றுலாத்தலங்களும்


  சேலம் மாவட்ட போக்குவரத்து சாலை



    வாணிகம், வேளாண்மை, பொருளாதாரம், கல்வி, வாழ்க்கை முறை ஆகிய துறைகளில் சீரான வளர்ச்சிக்குப் போக்குவரத்து வசதிகளும், சாலை வசதிகளும் மிகவும் இன்றியமையாதவையாகும். சேலம் மாவட்டத் தலைநகரிலிருந்து இம்மாவட்டத்திலுள்ள மிகச் சிறிய கிராமத்திற்கும் பேருந்தில் சென்று வரமுடியும். 
இதைப் போலவே தமிழகத்தில் உள்ள மிகப்பெரிய நகரங்களுக்கும் மற்ற மாவட்டத் தலைநகரங்களுக்கும், மாநிலத் தலைநகரங்களுக்கும் பேருந்தில் சென்றுவர சாலை வசதிகள் உள்ளன.   சேலம் மாவட்டத்தின் வழியாகக் காசி-கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலை செல்கின்றது. சேலம்-கொச்சி, சேலம்-சென்னை, சேலம்-திருச்சி முதலிய தேசிய நெடுஞ்சாலைகளும் அமைக்கப்பட்டுள்ளன.இப்போக்குவரத்து வசதிகளால்தான்,சேலம் நகரம் நெசவுத் தொழிலாலும், வாணிகத் தொழிலாலும், இரும்புக் கனியாலும் சிறப்புற்று விளங்குகின்றது. சேலத்தில் பருத்தி நெசவும், பட்டு நெசவும் முக்கியமானவை. பருத்தி ஆடைகளும், பட்டாடைகளும் இங்கிருந்து மற்ற மாநிலங்களுக்கும், அயல் நாடுகளுக்கும் அனுப்பப்படுகின்றன. மேலும் பல்வேறு சிறு தொழில்களும் நடைபெற்று வருகின்றன.  அதிகமான திரையரங்குகள் உள்ள நகரங்களுள் சேலமும் ஒன்றாகும். இந்த நகரத்தில் ஐம்பதுக்கும் மேற்பட்ட திரையரங்குகள் உள்ளன.

  

இருப்புப்பாதைகள்


    சேலம் மாவட்டத்தில் முக்கிய இருப்புப்பாதைச் சந்திப்பு, சேலம் சந்திப்பு ஆகும். இச்சந்திப்பின் பிளாட்பாரம் இந்தியாவிலேயே பெரியது. நீளமானது என்பது குறிப்பிடத்தக்கது.
    தற்போது சேலத்திற்கும் பெங்களூருக்கும் இடையே போடப்பட்டுள்ள ‘மீட்டர்கேஜ்’ இருப்புப்பாதை குறிப்பிடத்தக்கதாகும். சென்னை-கொச்சி பிராட்கேஜ் (அகன்றவழி) பாதை சேலத்தின் வழியாகச் செல்கின்றது. சேலம் - மேட்டூர் பிராட்கேஜ் இருப்புப்பாதை இம்மாவட்டத்தில்தான் உள்ளது. சேலம் - கடலூர் மீட்டர்கேஜ் (குறுகல் வழி) பாதையும் உள்ளது. சேலம் மாவட்டம் கமலாபுரத்தில் விமான நிலையமும் அமைந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

சுற்றுலாத்தலங்கள்



(1) மேட்டூர் அணை


    காவிரி ஆறு கர்நாடக மாநிலம் குடகு மலையில் உற்பத்தியாகி அம்மாநிலத்தை வளமாக்கி விட்டு ஒகேனக்கல்லில் அருவியாக இறங்கி தஞ்சை தரணியை வளம் சேர்க்க மேட்டூர் அணைக்கு வந்து சேர்கின்றது. இரண்டு மலைகளுக்கு இடையே 4 கோடியே 80 லட்சம் செலவில் 1934-ஆம் ஆண்டு ஸ்டான்லி என்பவரால் கட்டி முடிக்கப்பட்ட இவ்வணை தமிழ்நாட்டின் மிகப்பெரிய அணையாகும்.

மேட்டூர் அணையின் விவரங்கள்

அணை கட்டத் துவங்கிய நாள்        :    20.07.1875
அணை     கட்டி முடித்த நாள்        :    21.08.1934
அணை கட்டுவதற்கு ஆனசெலவு    :    4.80 கோடி
அணையின் நீளம்            :    5300 அடி
அணையின் கொள்ளளவு        :    93 டி.எம்.சி
அணையின் அதிகபட்ச உயரம்        :    214 அடி
அணையின் அதிகபட்ச அகலம்        :    171 அடி
அணையின் சேமிப்பு உயரம்        :    120 அடி
அணையின் நீர்பிடிப்பு பரப்பு        :    59.25 ச.மைல்

(2) குழந்தை இயேசு பேராலயம்


    சேலம் நான்கு ரோடு அருகில் உள்ள அரிசிபாளையத்தில் மிகப்பெரிய குழந்தை இயேசு பேராலயம் கட்டப்பட்டுள்ளது. 1991-ஆம் ஆண்டு நவம்பர் 27-ந் தேதி திறந்து வைக்கப்பட்டு முன்னால் ஆயர் மைக்கேல் போஸ்கோவால் அர்ச்சிக்கப்பட்டது. பளிங்குக் கல்லால் ஆன குழந்தை இயேசு உருவமானது ஒரு இந்து நண்பரால் அன்பளிப்பாக கொடுக்கப்பட்டு, ஒரு முஸ்லீம் சிற்பியினால் கலை நுணுக்கத்துடன் செதுக்கப்பட்டது. இவ்வாலயத்தின் தனிச்சிறப்பு ஆகும். பசும்புல் தரையும், சுற்றி நிற்கும் தென்னை மரங்களிடம், மனதுக்கு இதமூட்டி ஜெபிக்கவும், வழிபடவும் மனிதனின் மனதை இறைவன் பால் ஈர்க்கின்றன. சாதி, சமயம், மொழி, இன பேதமின்றி அனைவருமே சகோதர சகோதரிகளாக இத்தேவாலயத்தில் வந்து வழிபடுகின்றனர்.

(3) எண் கோண வடிவ குளம்


கொங்கு நாட்டில் உள்ள சேலம் மாவட்டத்தில் தாரமங்கலம் உள்ளது. மகாவிஷ்ணு தன் தங்கை பார்வதியை சிவபெருமானுக்கு தாரை வார்த்துக் கொடுத்ததால் தாரமங்கலம் எனப் பெயர் பெற்றது. தாரைகள் பூஜை செய்ததால் தாரமங்கலமானது என்றும் அழைக்கப்படுகிறது. இப்புண்ணிய தலத்தில் எண்கோண வடிவ குளம் ஒன்று உள்ளது. ””அக்கோயிலைக் கட்டிய கெட்டி முதலி போருக்குப் போராடுவதற்கு முன்பு கல்லை குளத்தில் வீசி எறிவார். அந்தக் கல் வீசிய இடத்தில் இருந்து 8 மூலைக்கும் சென்று வந்து மீண்டும் வீசிய இடத்திற்கே வந்தால் போரில் வெற்றி கிடைக்கும் என்று நம்பி அவர் போருக்குச் சென்று வந்தார். ஆனால் கல் 8 பகுதிக்கும் செல்லாவிட்டால் போருக்கு செல்ல மாட்டார்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.”” (மாலைமலர் வழிகாட்டி 2012 ப - 88)

(4) புழுதிக்குட்டை ஆணைமடுவு அணை


    வாழப்பாடிக்கு அருகே புழுதிக்குட்டை கிராமத்தில் இயற்கை எழில் கொஞ்சும் இரு மலைக் குன்றுகளுக்கு இடையே அமைந்துள்ள ஆணை மடுவு அணை அப்பகுதி மக்களுக்கு முக்கிய நீர் ஆதாரமாகவும், சிறந்த சுற்றுலாத் தலமாகவும் விளங்குகின்றது.

(5) உயிரியல் பூங்கா


    சேலம் நகரத்தில் இருந்து 10 கிலோ மீட்டர் தொலைவில் குரும்பப்பட்டி உயிரியல் பூங்கா அமைந்துள்ளது. சுமார் 25 ஏக்கர் நிலப்பரப்பில் இப்பூங்கா அமைந்துள்ளது. மலைத்தொடர் ஆரம்பமாகும் இடத்தில் பூங்கா அமைந்திருப்பதால் வானளாவிய மரங்களும், வண்ண வண்ணப் பூக்களும் வனப்பு மிக்க செடி கொடிகளும், தௌ;ளிய சுனைநீர் ஓடைகளும் பூங்காவிற்கு மேலும் அழகு சேர்க்கின்றன. மாலை நேரங்களில் மலை முகடுகளில் இருந்து வரும் அழகிய மேகக் கூட்டங்களும், வானளாவிய மரங்களுக்கு நடுவே சிணுங்கி வரும் மென் தென்றலும், சின்னச்சின்ன குளிர்ந்த சிற்றோடைகளும், சிட்டுக்குருவிகளின் ரீங்காரமும், குயில்களின் இனிய கானங்களும், குரங்குகளின் சேட்டைகளும், வண்ண மயில்களின் அணிவகுப்பும், துள்ள ஓடி மின்னலாய் மறையும் புள்ளிமான்களையும் காணும் காட்சிகள் மக்கள் மனதை மகிழ்விக்கின்றன.   இப்பூங்காவானது காதலர்களின் புகலிடமாகவும் விளங்குகின்றது. இங்கு வருவோரில் 40 விழுக்காடு இளம் தம்பதிகள் ஆவர்.

(6) அரியவை அறிய அருங்காட்சியகம்


    நமது கலை, கலாச்சாரப் பின்புலத்தைப் பறைசாற்றும் ஆதாரங்களாகக் கல்வெட்டுகள், சிலைகள், ஓலைச்சுவடிகள், சுதைமண் சிற்பங்கள் திகழ்கின்றன. இவற்றை ஒட்டுமொத்தமாகப் பாதுகாத்து நமது சந்ததிகளுக்குக் கலாச்சாரத்தைப் பற்றி அறிய வைப்பது அருங்காட்சியகங்கள் ஆகும். சேலத்தில் அரசு அருங்காட்சியகம் கடந்த 1974-75 ஆம் ஆண்டுகளில் சேலத்தில் எஸ்.கே. ராஜவேலு, தமிழ்நாடன் உள்ளிட்ட அறிஞர்கள், அப்போதைய மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.எம். சுவாமிநாதன் உதவியுடன் ஒரு கண்காட்சி நடத்தினார்கள்.   சேலம் அருங்காட்சியகத்தில் உள்ள சிற்பங்கள் பெரும்பாலும் புதை பொருட்களாகக் கிடைத்தவையாகும். இவை பல்லவர், சோழர், விஜய நகரம் மற்றும் நாயக்கர் கலைப் பாணியை சார்ந்தவையாகும்.

(7) அண்ணாவை கவர்ந்த பூலாம்பட்டி


    இயற்கை எழில் சூழ்ந்த பூலாம்பட்டிக்கு அண்ணாதுரை முதலமைச்சராக இருந்தபோது, ஈரோடு மாவட்டம் நெரிஞ்சிப்பேட்டையில் இருந்து பரிசிலில் பயணம் செய்தார். ‘காவிரியில் உல்லாசமாக உலா வருவதும், பசுமை
யைக் காண்பதும் மனதிற்கு மகிழ்ச்சியையும், ஆனந்தத்தையும் தருகிறது என்றார். இந்த இயற்கை அழகு திரைப்படத்துறையினரையும் விட்டுவைக்க வில்லை. பூலாம்பட்டியின் அழகு இயக்குநரும், நடிகருமான பாக்யராஜை பார்த்தமாத்திரத்திலேயே கவர்ந்து இழுத்தது.பாக்யராஜ் பானுப்பியா நடித்த பவுனு பவுனுதான் படம் முழுவதும் பூலாம்பட்டியும் அதன் சுற்றுப்புற பகுதியிலும் படமாக்கப்பட்டன. மேலும் ராசுக்குட்டி, சாமுண்டி, முற்றுகை போன்ற படங்களின் சில காட்சிகளும் படமாக்கப்பட்டன.

(8) வற்றாத அமுதசுரபி


    சேலத்திற்கு அருகில் உள்ள சித்தர்கோவில் உள்ள ஒரு கிணற்றில் வாளி மூழ்குமளவிற்கே தூயநீர் இருந்தாலும் இறைக்க இறைக்க குறையாமல் அக்கிணற்றில் நீர் சுரந்து கொண்டே இருக்கிறது.

(9) காதல் மனைவிக்கு சேலத்தில் கட்டடம் கட்டிய வௌ்ளைக்காரர்


  
இங்கிலாந்தை சேர்ந்த ஜி.எப். பிஷர் என்பவர் 1815ம் ஆண்டில் இந்தியாவிற்கு வந்தார். அவர் 1822-ம் ஆண்டு சேலத்திற்கு வந்து கிழக்கிந்திய கம்பெனியில் து.ஆ. ஹீத் என்பவரிடம் சேர்ந்து பணியாற்றினார்.   இவருக்கு பிரெஞ்ச், கிரேக்கம், இந்தி, மலையாளம், தமிழ், தெலுங்கு, ஆங்கிலம் ஆகிய மொழிகளை அறிந்தவர். சேலம், அம்மாப்பேட்டையில் பிஷருடைய மாளிகை இருந்தது. அம்மாளிகையில் பிரம்மாண்டமான பூப்பந்து மைதானம், குளிப்பதற்கு நீச்சல் குளம், நடன அரங்கம் ஆகியவை அமைக்கப்பட்டிருந்தது. பிஷருக்கு இரண்டு மனைவிகள். இரண்டாவதான மனைவி சேலத்தை சேர்ந்தவர். அவருடைய பெயர் குருபீவி.

    முகலாய மன்னன் ஷாஜகான் தனது காதல் மனைவி மும்தாஜின் நினைவாக காதல் சின்னமாக தாஜ்மஹாலை கட்டினார். அதேபோல் பிஷர் தனது காதல் மனைவி குருபீவி இயற்கை எய்திய பிறகு அவரது நினைவாக சேலம் அம்மாப்பேட்டையில் ‘தர்கா’ ஒன்றை அமைத்தார். அந்த தர்காவில் உருது மொழியில் கல்வெட்டு ஒன்றையும் அமைத்தார்.

(10) குளுகுளு ஏற்காடு


  
தமிழ்நாட்டிலுள்ள கோடை வாசஸ்தலங்களில் ஏற்காடும் ஒன்று. சேலத்தில் இருந்து சுமார் 30 கி.மீ. தொலைவில் உள்ள ஏற்காடு கடல் மட்டத்திலிருந்து 1500 அடி உயரத்திற்கும் மேல் உள்ளது. சற்றே தொலைவில் நின்று பார்த்தால் பச்சை வண்ண ஆடையில் போர்த்தி கொண்டது போல் ஏற்காடு அழகோடு மிளிரும். கரடுமுரடான மலைகளுக்கிடையே மர கிராமங்களில் 40000க்கும் மேற்பட்ட மக்களும் வசித்து வருகின்றனர். ஆங்கிலேயர் ஆட்சியின்போது வௌ;ளையர்கள் அதிக அளவில் குளிர்ச்சி பிரதேசமான ஏற்காட்டில் வசித்தனர். ஏற்காட்டில் பார்க்க வேண்டிய இடங்களான லேடிசீட், தோட்டக்கலைத்துறை, அண்ணா பூங்கா, மான் பூங்கா, ஏரி பூங்கா, தோட்டக்கலைத்துறை, பொட்டானிக்கல் கார்டன், சேர்வராயன் கோயில் போன்றவை உள்ளன.

நூற்றாண்டு கண்ட ஏற்காடு மலைப்பாதை


    ஏற்காட்டிற்கு செல்லும் மலைப்பாதை அமைக்கும் பணி 1872ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்த பணி சுமார் 30 ஆண்டுகள் தொடர்ந்து நடைபெற்றது. தொடர் மலை மற்றும் நிலச்சரிவு காரணமாக வழிகள் நீண்டு கொண்டே சென்றது. அனைத்து பணிகளும் 1903ஆம் ஆண்டு முடிவடைந்து மலைப்பாதைக்குப் போக்குவரத்து தொடங்கியது. இதில் 20 கொண்டை ஊசி வளைவுகள் உள்ளன.

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்களைப் பதிவு செய்யலாமே?