நீரின்றி அமையாது உலகு.

முனைவர் ஜ.பிரேமலதா,தமிழ் இணைப்பேராசிரியர், அரசு கலைக் கல்லூரி, சேலம் 636 007 DR.J.PREMALATHA,ASSOCIATE PROFESSOR IN TAMIL,GOVT ARTS COLLEGE,SALEM -636 007.

Sunday, 15 November 2020

நம்பிக்கை

 பாசமாக நட்பாக அன்பாக வீரமாக நல்லவராக

தன்னை உயர்த்திக் காட்டிக் கொள்வதுதான் 

மனித வாழ்வின் குறிக்கோளா?

யாரோடாவதாது ஒப்பிட்டுப் பார்த்து 

 ஒரு படி மேலே இருக்க வேண்டுமென்பது கட்டாயமா?

அப்போதுதான்  மதிப்பு என ஏமாற்றிக் கொள்கிறோமா? 

நான் என்ற அடையாளம் எதுவரை?

நம் மரணம் வரை. அவ்வளவே.

ஒரு பூ, ஒரு காற்று, ஒரு மேகம், ஒருபுழு, ஒரு புல் 

அதனதன் போராட்டம் வேறு. 

வாழ்க்கைப் பாடு வேறு

மலர்வதற்குள் ஒரு பூவிற்கு எத்தனைப் போராட்டம்?

முளைப்பதற்குள் ஒரு புல்லுக்கு எத்தனை மிதிபடல்? 

சிலர்  வாழ்வில் தான் எத்தனை போலித்தனம்?

எல்லோருக்கும் எத்தனையோ போராட்டம்.

சிலருக்கு நாமே போராட்டம். 

மகிழ்வதற்கு எத்தனையோ காட்சிகள் 

இரசிப்பதற்கு எத்தனையோ நிகழ்ச்சிகள்

இயற்கைத்தரும் போலித்தனமில்லா வாழ்க்கை பெருவரம்

எவ்வளவு முயலுமோ அவ்வளவு முயலுவோம்

இயல்பு நிலை என்பதை நோக்கிய பயணம்பாதுகாப்பானது.

ஆனால் துயரம் நிறைந்தது.

நம்மைத் தெரிந்தவர்களிடம் நிரூபிக்கத் தேவையில்லை

நம்மைத் தெரியாதவர்களிடமும் நிரூபிக்கத் தேவையில்லை

எப்படியும் நம்பப் போவதில்லை என்பதால்...

நம்பிக்கை இருக்கிறதென்றால்

நிரூபிக்கத் தேவையில்லை.

நிரூபிக்கத்தான் வேண்டுமென்றால்

நம்புவதற்கு ஏதுமில்லை.



புத்தா...



 வழியில் ஒரு கடையில் புத்தா நீ...

உன்னை வாங்க தூண்டும் மனம்...

உன் சிலையின் மீதான ஆசை கூட 

உன் கொள்கைக்கு முரணானது...

நீயோ கனத்த மெனளம் காக்கிறாய்...

உன்னை உனக்கு அடையாளம் காட்டிய

போதி மரம் எங்கே தொலைந்தது? 

புடவைகளிலும், ஜாக்கெட்டுகளிலும்,

பைகளிலும்... அழகழகான வண்ணங்களி்ல் நீ.

அரண்மனை விடுத்து, 

அன்னையை விடுத்து, 

அன்பு மனைவியை விடுத்து,

அருமை குழந்தை விடுத்து

உன் தவத்தின் விளைவாய்

கடவுளே இல்லையென்றாய்...

உன்னையே கடவுளாக்கிவிட்டார்கள்

அப்போது கண்களை இழுத்து மூடினாயோ?

இப்போது விற்பனைப் பொருளானாய்...

இறுகிய உதடுகளின் இதழ்களில் 

தென்படும் குறுநகை....

இகழ்ச்சியா....ஞானச் சிரிப்பா?

ஊமையாகி உள்ளுக்குள் குமுறுகின்றன 

சொல்ல முடியா வார்த்தைகள்....

மௌனம் உடைக்கவே மொழிகள் முயல்கின்றன.

அதை மறைக்க சிரித்துப் பேசி நடித்தால்

வாழ்க்கை முழுதும் நடிக்க வேண்டி வரும்...

அது தேவையற்றது....

புத்தா உன் கண் மூடலிலும்

இறுகிய உதடுகளிலும்

நீ இன்னும் எதைப் போதிக்கின்றாய்?

மோன நிலையின் அற்புதத்தையா?

சிலையின் மௌனம் கலையாகும்

கடலின் மௌனம் முத்தாகும்

விதையின் மௌனம் மலராகும்

மௌனமே இங்குச் சிறையானால்?

உன் சிலை எனக்கு வேண்டாம்.

உன் மெளனச் சிறை போதும்.

எப்போதும் நீ போதிதான்.

 



பட்டாம்பூச்சி



 வானில் எத்தனையோ பட்டாம்பூச்சி

என்னைக்  கவர்ந்த ஒன்று

.பார்வை பறித்து மனதை இழுத்து வசமாக்கி,

நினைவு முளையில் என்னைக் கட்டிவிட்டு்ப் போனது. 

விடுபட்டுத் தேடினேன் அதுஅறியாமல்...

பூக்களின் மேல்....மரக்கிளையில்

தோட்டத்துச் சுவற்றில்

கண்ணில் பூச்சி காட்டி பறந்தது...

விண்ணில் மண்ணில் காட்டில்  நீரில்

என்னில்.....கைப்பிடிக்குள் வராமல்....

நானும் சிறகடித்தேன்....விழுந்தேன்..

அழுதேன்...மெல்ல....

பார்வையிலிருந்து மறைந்து போனது...

அமைதி தேடி ஓரிடம் அமர்ந்தேன்

 நினைவெங்கும்  பட்டாம்பூச்சி...

நிழலெல்லாம் பட்டாம்பூச்சி....

தோளில் மௌன சிறகடிப்பு

மனதில் ஒரு குறுகுறுப்பு...

பார்வை பாவை நகர்த்திப் பார்த்தேன்

பட்டாம்பூச்சி...அதே பட்டாம்பூச்சி...

மெல்ல கைவிரலில் எடுத்துப்பார்த்தேன்

அசைவின்றி இசைந்தது...

மெல்ல ஒரு கணம்...மனம்

அதை சொந்தமாக்க நினைத்தது...

அது வனதேவதைக்குச் சொந்தமானது...

விரல் விரித்தேன்....விடுபட்டுப் பறந்தது..

விரல் பார்த்தேன்.....

விரலில் அதன் வண்ணம் 

என்றும் நீங்காத வண்ணம்.

Saturday, 31 October 2020

முயற்சி

சேர்ர்வுகள் வாழ்வைச் சிதைத்தாலும் ஓய்விலும் வெற்றியை நினைத்தே இளைப்பாறிவிடு. தோல்விகள் உன்னிடம் துவளும் வரை முயற்சியால் மட்டுமே பதிலளித்திடு.

வானம்.

கடந்த பாதைகள் எல்லாம் கலைந்த கனவாக வரும்பாதைகள் எல்லாம் முற்றிலும் புதிராக வாழ்க்கை போகிறது ஒரு முடியாத பயணமாய், மௌனமே இதமாக, உடன் வரும் நிலவையும், அழத்தோன்றும் வேளையில்.. ஆறுதலாய் தலைகோதும் தென்றலையும் தேடிக் கொண்டேயிருக்கிறது மனம்.... திசையறியா பறவைக்கு... வானமெங்கும் பாதைகளே! இலக்கில்லா பயணத்தில்... பாதையெங்கும் புத்த போதிகளே! தீராத பாதையின் முன் ஒரு நீண்ட கனவாய்... ஊர்கிறது ஆழ்மனப் பயணம்! கடக்க கடக்க முடியவேயில்லை தூரம். போகப் போகத் தீரவேயில்லை வானம். தேங்கிக் கொண்டேயிருக்கும் நினைவலைகள் விடுபட விடுபட நிரம்பிக்கொண்டேயிருக்கும். எல்லா நதிகளும் கடலுள் சென்று சேருவது போல, கருங்குழிக்குள் எல்லா கோள்களும் ஈர்க்கப்படுவது போல, நினைவலைகள் எல்லாம் ஓர் ஒற்றைப் புள்ளியில். உறுதியானதென நினைத்துக்கொண்டிருந்த வலுவான அடித்தளம் நழுவியது எப்போது? -------------------------------------------

நந்தவன நாட்கள்

நகர்ந்து போன நந்தவன நாட்களை

 சாட்டையால் அடித்தது யாருடைய கைகள்?

 நம் வீட்டுத் தெருக்களில் 

பாம்புகளை நெளிய விட்டது யாருடைய கைகள்?

  தென்றலைத் திசை மாற்றித் திருப்பியது யாருடைய கைகள்? 

 வசந்தங்களை விசமாக்கியது யாருடைய

 நச்சுக் கைகள்? 

 எப்போதாவது உண்ணும் கால்வயிற்றுக் கஞ்சியை 

பறித்தது யாருடைய  கைகள்?

மனிதம் மறைவதற்குக் காரணமாக இருந்தவை 

எந்த அரக்கனுடைய மாயக் கைகள்?

 சக மனிதனைச் சாவின் தூதுவனாகப் 

பார்க்கத் தூண்டியவை யாருடைய மரணக் கைகள்? 

 மகத்துவமெல்லாம் வெறும் மண்ணாகிப் போகக் 

காரணமாக இருந்தவை யாருடைய கைகள்? 

இந்தக் கைகளாக இருக்கலாமோ? 

வியர்வை வழிய வேலை செய்பவனை 

இழிவாகப் பார்க்கும் சோம்பேறிக் கைகள்! 

மூத்த தலைமுறையைச் சுமையாகக் கருதி

 தன் போக்கில் வாழ நினைக்கும் அல்ல கைகள்!

 உழைப்பை மறுத்து உறிஞ்சிக் கொளுத்து

 தலைமுறைகளைக் காக்கும் பெருங்கைகள்

 பூமிப் பந்தினைத் தன் காலத்திலேயே

 பூக்காத பந்தாகப் பாலைவனமாக்கும் நம்கைகள்!

 --------------------------------------------------- 



சாதி சடங்குகள் எங்குப் போயின? 

அட சாதிக்கொரு சுடுகாடுதான் எங்குப் போயின?

செய்த புண்ணியங்கள் மௌனித்துவிட்டன.

சேவை செய்த கோயில் மூடிப் பல நாளாயின

கடவுள்களும் முகக் கசவமிட்டு விளம்பரம் செய்கின்றன

பொட்டலங்களாய்க கட்டப்படுவதற்கா

அறிவியலை வளர்த்தெடுத்தோம்?

அச்நம்தான் கடவுள் நம்பிக்கைக்குக் காரணமென்ற மானிடவியல் கோட்பாடுகள் சலசலக்கின்றன

எல்லாம் படவுள் பா்த்துக் கொள்வார்...

 இக்குரல்கள் கேலிக்குள்ளாக்கப்படுகின்றன

ஆன்மீகமும் அறிவியலும் தலை கவிழ்ந்து கிடக்கின்றன

உடல்தான் உண்மையான கடவுள்.... 

 திருமூலரின் குரல் உறங்கியே கிடக்கிறது

மழை

  

 சிப்பியின் வயிற்றில் நீ முத்துத் துளி

உழவனின் பார்வையில் நீ வைரத்துளி , 

இலையின் நுனியில் நீ ஒளியின் துளி, 

கவிஞனின் பார்வையில் நீ அமுதத்துளி.  

மலர்களில் பூகம்பம் உன்னால்.  

விண்ணில் இருந்து வந்த நீ கண்ணீர் துளியா,

 பூமிக்கு வானம் கொடுத்த முத்தத்துளியா?

 விண்ணிலிருந்து மண்ணில் வந்த தேவதை நீயோ?

 வானுக்கும் மண்ணுக்கும் பாலம் நீயோ? 

உன் கரங்களைப் பற்ற கைநீட்டுகிறேன்.

 நீயோ ஏன் துளியாய்ச் சிதறிப் போகிறாய்? 

கைக்குள் பிடிக்கப் போகிறேன் காணாமல் போகிறாய். 

நான் பாராதிருக்கும் போது வந்து போகிறாய். 

பார்த்திருக்கும் போதோ...

 மேகத்திற்குள் நீ ஒளிந்து கொள்கிறாய்.  

கவிழ்ந்து கிடந்து நகர்ந்து போகிறாய்.

மழைத்துளியோ நினைவுத்துளியோ

சிறு பூகம்பத்தை ஏற்படுத்தி மனதில் 

நீங்காத பள்ளத்தை ஏற்படுத்தி விடுகிறது

 -------------------------------------

 

 வாசம்

மழையின் போது மண் வாசம்

முத்தமிடும் போது மழலை வாசம்

மலரும் போது பூ வாசம்

அரைக்கும் போது சந்தனம் வாசம். 

சிலரை நினைக்கும் போது நேரமே வாசம்

 

-------------------------------------------------------

 

பார்வை பார்த்துப் பூத்திருக்க

சொல்லாமலே வந்து விட்டுப் போய்விடுகிறது.

குழந்தை போல் செல்லச் சிணுங்கல்

சில்லென்று வீசும் சாரல்...

இலைகளின் நுனியிலும் மரங்களின் கிளைகளிலும்

மட்டுமா சாலம் காட்டுகிறாய்?

புவியின் உள்ளடுக்குகளில் உள் நுழைந்து

வற்றாத ஜீவநதியாகி....

சிலரின் நினைவுகளைப் போல்...

ஓடிக் கொண்டேயிருக்கிறாய். 

மழையின் ஓசையும் புவியின் வைரங்களும்

பேசிக் கொள்கின்றன

 சிலர்....

என்னோடு பேசாத வார்த்தைகளையும் சேர்த்து.....

--------------------------


எத்தனை ஆண்டுகள் கடந்தாலும் 

மழை மழையாகவே இருக்கிறது.

எத்தனை ஆண்டுகள் கடந்தாலும்

ஈர்ப்பும் அப்படியே இருக்கிறது.

கொஞ்சம் அக்கறையும் நிறைய அன்பும்

விண்ணிலிருந்து மழை இறங்கி வர காரணங்கள் 

சிலருக்கு மழையும் தனிமையும் போதும் 

மழை காட்டும் ஜாலம் போதும்

மண்ணைச் சுத்தப்படுத்தும்  மழை

ஏனோ மனதைச் சுத்தப்படுத்தத் தவறிவிடுகிறது.

மழை தனக்குள் கவிதையை ஒளித்து வைத்திருக்கிறது

அதைப் பார்த்துக் கொண்டிருந்தால் போதும் 

மழை எங்கிருந்து வருகிறது? 

மேகமாவதற்கு முன் என்னவாக இருந்தது?

விண்ணுக்கும் மண்ணுக்கும் இது போடும் கோடுகள்

வரிசை மாறாமல்...

இடைவெளி மாறாமல்...

இசையோடு தன் வருகையை வெளிப்படுத்தும் ஆரவாரங்கள்..

காற்றுக் காதலனோடு இது நடத்தும் நடனங்கள்...

இலைகளின் மீது மழை வைக்கும் செல்லக் குட்டுகள் 

மண்ணில்மழை வைக்கும் தொடர் புள்ளிக் கோலங்கள்

மழை விட்டாலும் விடாத தூவாணம் போல 

சிலரது நினைவுகள்....

நாணேற்றிய வானவில்லில் அம்பாக உன்னை

சரம் சரமாக விட்டது யாரோ?

 மழை வரைவது நெடிய கோடுகள்

வானவில் வரைவது வளைந்த கோடுகள்

நீர்த்தாரைகள் வரைவது நீண்ட கோடுகள்

பெண்களுக்கும் கோடுகளுக்கும் கூட

நெருங்கிய தொடர்புண்டு....

பெண்களைச் சுற்றும் லட்சுமணக் கோடுகள்...

உணர்ச்சிப் பிரவாகத்தில் சில சமயம் 

மழையைப் போல கொட்டித் தீர்த்துவிடுகிறோம்... 

சிலசமயம் மேகம் போல் ...

கலைந்து காணாமல் போய் விடுகிறோம்.

சிலசமயம் சொல்லாமல் வரும் மழையைப் போல 

யாரும் காணாமல் அழுது தீர்த்துவிடுகிறோம்

இறுகிய பனிக்கட்டியாக முயற்சித்து ...

முடியாமல் கரைந்து கொண்டே இருக்கிறோம் 

ஆவியாகி காற்றில் கலந்தாலும் மீண்டும்

மேகமாகி மழையாகி விடுகிறோம்

மழையின் வருகை சிலருக்கு இதமாகவும்

சிலருக்கு வெறுப்பாகவும் இருக்கிறது

மழையே உள்னோடு பழகுவதால் உள்ளுக்குள் குளிரெடுத்து

நரம்புகள் சிலிர்ப்தென்னவோ உண்மைதான்

ஆனால் மழையே உன்னோடு பழகுவதில்

ஆபத்தும் இருக்கிறது....

-----------------------------------------------