நீரின்றி அமையாது உலகு.

முனைவர் ஜ.பிரேமலதா,தமிழ் இணைப்பேராசிரியர், அரசு கலைக் கல்லூரி, சேலம் 636 007 DR.J.PREMALATHA,ASSOCIATE PROFESSOR IN TAMIL,GOVT ARTS COLLEGE,SALEM -636 007.

Friday, 28 February 2020

பொங்கல் வாழ்த்து கவிதை



ஒருபானைப் பொங்கல் பலகதைகள்  சொல்லும்
ஒருநூறு பலநூறு பலவாறாய் பிரிந்திருக்கும்
தமிழர் கூட்டம் அத்தனையும் கொண்டாடும்
அனைத்துலகும் கொண்டாடும் நன்றிக்கான விழா!

பானைக்கான பட முடிவுகள் 
செல்லுக்குள் புதைந்து வாழும் மக்களை
செல்லரிக்க விடாமல் அண்ணாந்து சூரியனைப்
பார்க்க வைக்கும் நாளிது நல்லமனிதருக்கு
உழவனை நினைவில் மீட்டும் திருநாளிது!


பொங்கல் காட்டும் பண்பாடு அதுதான்
எங்கள் தமிழ்நாடு! பொங்கச்சோற்றின் ஊடாக
கலந்திருக்கும் தமிழனின் அறிவியல் ஏடு!
பொங்கலிலே ஒளிச்சதை நீதேடிப் பாரு!

ஆவாரைப் பூத்திருக்கச் சாவாரைக் கண்டதில்லை
மாவிலை இருக்கும் வீட்டில்என்றும் நோயில்லை,
சிறுநீரகக் கல்லுக்குச் சிறுபீளைப் பூவிருக்கு,
மூன்றும் சேர்த்து காப்புக்கட்டு! கட்டிவிட்டால்,

நோயெல்லாம் பறந்துவிடும்! மங்கலம் பெருகிவிடும்! 
சுற்றம் சேர்ந்திணைந்து  மஞ்சக் கொத்தெடுத்து,
பானையிலே சேர்த்துகட்டி,  நீங்க வைச்ச
பொங்கலிலே, பொங்கிவரும் பொங்கல் கண்டு


காப்பு கட்டுக்கான பட முடிவுகள் 
வானம் தனைமறந்து சிரித்திடும்  தானாக!
சூரியனும் பொலபொலன்னு மலர்ந்திடும் தேனாக!
புதிதாகக் குளித்ததுபோல் பலநிற வண்ணத்தில்
மினுமினுன்னு மினுக்குது அழகழகாய் வீடுகளும்.

இளம்பச்சைத் தோரணமும்கரும்பச்ச மாயிலையும்
வெள்ளைப் பூளைப்பூவும் வாசக்கதவில் பூசிய 
சிவப்போடும் மஞ்சளோடும் போட்டி போடும்.
போட்டிக்கு நானுமிருக்கேனு, கொம்பில் கட்டிய


பொங்கல்க்கான பட முடிவுகள் 
வண்ணஞ்சொலிக்கப் புதுக் கோலம் பூண்டிருக்கும்
காளைகளும் பொங்கல் தின்று தலையாட்டும்!
இரும்பு உடலைத்தரும் கரும்போ உள்ளுக்குள்
கருப்பு இல்லையெனில் எதுவுமில்லைனு சிரித்திருக்கும்!

கோலத்தில் புள்ளிகளைச் சேர்ப்பதுபோல் உறவுகளோடு
கோலகலமாகச் சேர்ந்திருக்க வேண்டும் அன்போடு!
ஒருபுள்ளி விட்டாலும் கோலம் அலங்கோலம்
ஒருஉறவும் விடுபடாமல் வாழவேண்டும்  பண்போடு!

பொங்கல்க்கான பட முடிவுகள் 
சந்தனம் குங்குமம் மஞ்சள் கலந்தங்கே 
காற்று வீசும்! பொங்கல் பானையிலே
வெல்லம் நெய்அரிசி பாசிப் பயிறோடு
பொங்கி வரும் பொங்கல் வாசம்,

பொங்கல்க்கான பட முடிவுகள் 
புதுநீரோடு கலந்து ஊரைக் கிறங்கடிக்கும்!
மண்பானை நானும் இருக்கேனு கலந்தினிக்கும்!
ஆவாரம் பூவோடு பலபூக்கள் பறந்து வர
தாவாரத்தில் போடப்படும் மிகநீண்ட தலைவாழை!

மூன்று தலைமுறை  சேர்ந்தங்கே முகம்பார்த்து
மூவாயிரம் கதைபேசும்! கதைகளும் இனித்திருக்கும்!
பாவாடை சரசரக்கும்! கைவளையும் சேர்ந்திசைக்கும்!
பூவாடையோடு சேர்ந்து குப்பையும் மணந்திருக்கும்!


வீசும் காற்றுக்குச் சவால்விட்டு அங்கே
கற்பூரம் நின்றெறியும்! பொங்கல் வைச்சத
ஊரெல்லாம் சேதிபரப்பும் ஊதுபத்தி வாசம்!
ஊரெங்கும் வீடெல்லாம் மணக்கும் மண்வாசம்!


மற்றநாளில் உண்ண மறுக்கும் சிறுசுகள் 
பொங்கல் நாளில் கையில் நெய்யொழுக
பொங்கலை வாங்கி வாய் நிறைக்கும்.
கண்களோ கரும்பைத்தான் ருசி பார்க்கும்.

சல்லிக் காசுகளைக் கட்டியதால் காளையது
சல்லிக் காளையென அழைத்ததை மறப்போமா?
எங்கள் பொங்கலிது பொங்கும் இன்பமது!
சிங்கத் தமிழனை மீட்கும் பொங்கலிது!
 
பொங்கல் நன்நாளில் பொங்கல் வைத்துக்
கொண்டாடும் தங்கத் தமிழருக்கு, பொங்கலைக்
கொண்டாடும் சின்னஞ்சிறார்க்கு, கரும்பைச் சுவைக்கும்
அனைவருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துகள்


கரும்புக்கான பட முடிவுகள் 
அன்புடன் ஜ.பிரேமலதா





No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்களைப் பதிவு செய்யலாமே?