17
ஆபுத்திரனின் உணவுக்கொடை இந்திரனின் பதவியையே கேலிக்குள்ளாக்கியது. முதலில் துணுக்குற்றாலும் இந்திரன் ஆபுத்திரனின் கருணை உள்ளத்தை வியந்தான். தனி ஒருவன் உலகைக் காக்க முற்பட்டதைப்போல ஆபுத்திரன் புறப்பட்டிருக்கிறான். அவனுடைய செயல் போற்றுதலுக்குரியது தான் . தெய்வத்தால் ஆகாததை, மெய் வருத்திக் கூலியாகப் பெற்றிருக்கிறான். அவனைப் பாராட்ட வேண்டுமென்று இந்திரன் நினைத்தான். ஆபுத்திரன் முன் தோன்றினான்.
" நான் தேவர் தலைவன் இந்திரன்.ஆபுத்திரா! உன் செயல் பாராட்டுக்குரியது. இந்த ஊர் மக்களின் பசியைப் போக்கி அவர்களுக்கு நல் வாழ்வளித்திருக்கிறாய். சிந்தாதேவியின் மனதை கருணைக்கடலாக்கியிருக்கிறாய் . நீ உள்ள ஊர் மக்களுக்கும் உனக்கும் எந்தத் தொடர்புமில்லை என்றாலும் அவர்களுக்காக மனம் கசிந்திருக்கிறாய். உன்னை வாழ்த்துகிறேன். உன் புண்ணியத்தின் பலனை உனக்களிக்க விரும்புகிறேன். உன் கருணைக்குப் பரிசளிக்கவே வந்தேன். உனக்கு வேண்டிய வரங்களைக் கேள். "
ஆபுத்திரன் இந்திரனை மேலும் கீழும் பார்த்தான்.
'நல்ல கொழுத்த தேகம். பட்டாடை. மின்னும் வைர வைடூரியங்களினால் ஆன தங்க நகைகள். எப்போதும் மாறாத புன்னகை. மக்களுக்கு மழை தராமல் அவர்களை வறியவர்களாக்கிய குற்ற உணர்வு சிறிதுமில்லை. ஆபுத்திரனின் கருணையைக் கண்டு சிந்தாதேவி இரங்கி பரிசளித்த போதும் இந்திரன் மழையைப் பெய்விக்கவில்லை. இதோ மக்களின் பசி தீர்ந்து பல மாதங்கள் கடந்த நிலையிலும் மழையைப் பெய்விக்கவில்லை. இப்போது எனக்கு வரம் தருவதற்கு வந்திருக்கிறார்.'
'மழையை வரமாகக் கேட்கலாம். ஆனால்அமுதசுரபி இருக்கையில் மழை கூட எதற்கு? இந்த நிலையில் கூட மழையைப் பெய்விக்க எண்ணாத கடவுளிடம் என்ன கேட்பது? மழையைத் தரமாட்டேன் என்று பிடிவாதமாகப் பனிரெண்டு ஆண்டுகள்......தனக்காக இந்திர விழா பல ஆண்டுகள் எடுத்த மக்கள், சில ஆண்டுகள் மறந்ததற்காக எவ்வளவு பெரிய தண்டனை?'ஆபுத்திரன் தனக்குள் சிரித்துக் கொண்டான். பிறகு தெளிவான குரலில் கூறினான்.
"இந்திரனே நீ தருவதாகக் கூறுகிற வரங்களின் பலன்களை நான் உணவு தானம் செய்தபோதே பெற்றுவிட்டேன். கை நிறைய உணவு பெற்று, வயிறு நிறைய அதை உண்டு, மனம் நிறைந்து மக்கள் வாழ்த்திய போதே பெற்று விட்டேன். ஆனால், மக்களின் வாழ்த்திற்காகவும் புண்ணியத்திற்காகவும் நான் அவர்களின் பசியைக் போக்கவில்லை. உணவு உண்ட பொழுதில், பசி நீங்கிய அக்கணத்தில் அவர்கள் முகத்தில் தோன்றிய மகிழ்ச்சியைக் காணவே உணவு வழங்கினேன். இவர்கள் முகத்தில் தெரிந்த புன்னகையைக் கண்ட போதே நீ தரவுள்ள வரங்களின் பலன்களை நான் பெற்று விட்டதாக உணர்கிறேன். எனவே உன் வரங்கள் இனி எனக்குத் தேவையில்லை"என்றான்.
இந்திரன் அவமானத்தினால் முகம் சிவந்தான்.
எப்போதும் ஆணவத்தோடு இருப்பவர்களுக்கு அவர்களைச் சுற்றியுள்ள அனைவரும் ஆணவத்தோடு இருப்பதைப் போலவே தோன்றுமல்லவா? இந்திரன், ஆபுத்திரனின் பதிலை ஆணவமாகக் கருதினான். அங்கிருந்து மறைந்தான்.
தன்னை மதிக்காத ஆபுத்திரனின் செருக்கை அடக்க நினைத்தான். அவனை இந்த ஊரை விட்டே துரத்திவிடத் துடித்தான். மக்கள் அவனைப் புறக்கணிக்கவேண்டும்.
அதற்கு என்ன செய்யலாம்? நாட்டில் வளம் உண்டாக்கினால் யாரும் ஆபுத்திரனிடம் கையேந்த மாட்டார்கள். அதற்கு மக்களின் வறுமை போக வேண்டும். மழை ஒன்றுதான் அதற்கு ஒரே வழி. மழையைப் பெய்வித்தால் நாடு வளம் பெறும். முடிவு செய்தபடியே மழையைக் கொட்ட வைத்தான்.
அன்று இரவு மழை...மழை..... அப்படி ஒரு பெரு மழை. வானம் உடைந்து விட்டதைப் போல எங்கும் பெரு வெள்ளம். பட்ட மரங்கள் சிலிர்த்தன.
ஆபுத்திரன் சிந்தா தேவி கோவிலிலிருந்து தெருவெங்கும் பெருக்கெடுத்தோடும் வெள்ளத்தைப் பார்த்துக் கொண்டிருந்தான். அவன் இதழ்களில் புன்னகை மிளிர்ந்தது. சிந்தாதேவியின் சிலையைப் பார்த்தான். அமுதசுரபி கொடுத்த நாளில் அத்தெய்வம் சொன்னது நினைவிற்கு வந்தது. ‘உன்னால் இங்கு மழை பொழியும்.‘ காதுகளெங்கும் மழையின் இரைச்சல். மின்னல் ...இடி....தொடர்ந்து பல நாட்கள் இரவெல்லாம் மழை பொழிந்தது.
மண் குளிர்ந்தது. மக்களின் மனம் குளிர்ந்தது. ஆபுத்திரனும் பெரு மகிழ்வெய்தினான்.உணவு உண்டு தெம்பு பெற்றிருந்த மக்கள் கலப்பையைத் தோளில் ஏந்தி பூரிப்புடன் வயல் நோக்கிச் சென்றனர். எங்கும் உழைப்பவர்களின் ஆரவாரம். 'நான் முந்தி நீ முந்தி' என்று வயலில் இறங்கி உழுதார்கள். வேர்வை மழையை வயலுக்குச் சீதனமாய்க் கொடுத்தார்கள். கோயில் கலசங்களிலிருந்து தானியங்கள் கொண்டு வரப்பட்டு வயலெங்கும் தூவப்பட்டது. பாலையாகக் கிடந்த நிலம் தன் இயல்பிற்குத் திரும்பியது. நீரைத்தேடி பூமியின் மையப்பகுதி வரை சென்றிருந்த மரங்களின் வேர்கள் எதிர்பாராமல் கிடைத்த பெருமழையால் திக்குமுக்காடின. வானத்திற்கு நன்றி செலுத்தும் விதமாகத் தன் கிளைக் கைகளால் செழித்த இலைகளையும் கொழுத்த பூக்களையும் பரிசாக வான் நோக்கி நீட்டின. கொழுத்த பழங்கள் சிரம் தாழ்த்தி தன்னைப் பெற்றுக் கொள்ளுமாறு வேண்டின. எங்கும் வண்ணச் சோலைகளால் அந்த ஊர் நிறைந்து காணப்பட்டது. பழைய நிலைக்கு ஊர் திரும்பி விட்டது.
அனைவர் வீட்டிலும் தொழுவம். பசு, ஆடு,மாடு,கோழி என்று மக்கள் தம் வேலைகளில் மூழ்கி விட்டார்கள்.
வயல்கள் விளைந்து கொட்டின. மூட்டை மூட்டையாகத் தானியங்களை மக்கள் அயலூருக்குக் கொண்டு விற்று பொன்னும் பொருளும் கொண்டு வந்தார்கள். இந்திரனுக்கு விழா சிறப்பாகச் செய்தார்கள். யாரும் ஆபுத்திரனிருக்கும் பக்கமே வரவில்லை. அவர்கள் அவனை மறந்தே போனார்கள். உணவிற்காக இரந்த நாட்களை நினைத்துப் பார்க்க இயலாத அளவிற்குக் கேளிக்கைகளில் மூழ்கிப் போனார்கள்.
ஆபுத்திரன் தனிமைப்படுத்தப்பட்டான் .தனித்துத் தவித்துப் போனான். யாரும் அவனைப் பொருட்டாகக் கருதவில்லை. அவனை அழைத்து உணவிடவும் யாரும் முன் வரவில்லை. அவனிடமே அமுதசுரபி இருக்கிறதே! செல்வம் வந்ததும் அவர்களிடம் செல்வாக்கும் வந்துவிட்டது. இரந்து பிழைப்பதை இழிவாகக் கருதினார்கள். மானம் பெரிதென்று வாய்க்கு வாய் சொன்னார்கள். உழைப்பின் மேன்மையை ஊரைக் கூட்டி பொது மன்றத்தில் உரைத்தார்கள்.
ஆபுத்திரன் அமுதசுரபியைப் கையில் வைத்துக்கொண்டு முன்பு தன்னிடம் உணவு பெற்றவர்களை உணவு பெற அழைத்தான்.
"யாரடா இவன் ? எங்களைப் போய் உணவுன்ன அழைக்கிறான். இவன் பித்தன்தான். தினந்தோறும் விதம் விதமான உணவை உண்ணாமல் இவனிடமுள்ள ஒரே மாதிரியான உணவை யாராவது விரும்புவார்களா?" என்று கேலி பேசினார்கள்.
பைத்தியக்காரனைப் பார்ப்பது போலப் பார்த்தார்கள். இகழ்ச்சியாகச் சிரித்தார்கள். ஆபுத்திரன் இந்த ஊரில் தனக்கினி வேலையில்லை என நினைத்தான்.
ஆபுத்திரன் பசிப்பிணி உள்ள நாட்டைத் தேடியலைந்தான். அந்த ஊருக்கு வந்தவர்கள் சொன்னதின் பேரில் சாவக நாட்டின் நிலையறிந்து கப்பலேறினான்.
ஓய்விற்காக மணி பல்லவத் தீவில் இறங்கிய கப்பலில் அவன் திரும்ப ஏறாததை யாரும் கவனிக்கவில்லை.
ஆபுத்திரன் தியானத்திலிருந்து எழுந்தபோது, அங்கு யாரும் இல்லை. கடற்கரைக்கு ஓடினான். தொலைவில் கப்பல் செல்வது சிறிது சிறிதாகத் தெரிந்தது. ‘ஐயோ இப்படியாகிவிட்டதே, சாவக மக்களின் பசியைப் போக்க இயலாதவன் ஆனேனே’
தினந்தோறும் ஒரு கப்பலின் வருகைக்காகக் காத்திருந்தான். கடற்கரையிலேயே காலத்தைக் கழித்தான். பன்னிரண்டு ஆண்டுக் கழிந்த நிலையில் வேறு வழியின்றி அமுதசுரபியைப் புத்த பீடிகைக்கு முன்னுள்ள கோமுகிப் பொய்கையில் விடுத்து, உண்ணா நோன்பிருந்து உயிர் நீத்தான். தான் செல்ல விரும்பிய சாவக நாட்டில் புண்ணிய ராசன் என்னும் அரசனாகப் பிறந்தான். தற்போது அம்மக்களின் வறுமை போக்கி பெரும்புகழ் பெற்று வாழ்ந்து வருகிறான்.
மணிமேகலை ஆபுத்திரனின் கதையைக் கேட்டு வியந்தாள். ஆபுத்திரனின் கதையைத் திரும்பத் திரும்பச் சிந்தித்துக் கொண்டிருந்தாள்.[தொடரும்]
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்களைப் பதிவு செய்யலாமே?