MOBILE NO: 9940120341
‘பாடிப் பறந்த குயில்’ என்ற குறுநாவல் எழுதியியருப்பவர் எழுத்தாளர் வையவன் அவர்கள். இந்நாவல் வாழ்க்கையின் பல மதிப்பீடுகள் மீதான தவறான புரிதல்களை அடையாளம் காட்டியுள்ளது. ஆசிரியரின் உயிரோட்டம் நாவலில் உள்ளதைப் போலவே வனப்பகுதி இந்நாவலில் பின்னணியாகியுள்ளது. வனப்பகுதிகளையும், மலை அருவி, பூக்கள், பாறைகள் அதன் கம்பீரம் போன்றவற்றை அழகாகக் காட்சிப்படுத்தியுள்ளார். அதே சமயம் அதன் கொடூரமான மற்றொரு முகத்தையும் காட்டத் தயங்கவில்லை. கொடிய வனவிலங்குகள் திடீரென எதிர்ப்பட்டு மக்களைத் தாக்கி அழிப்பதை யதார்த்தம் மாறாமல் மிக இயல்பாகக் கதைப் போக்கில் எடுத்துக் கூறுகிறார்.
ஜீவானந்தம் விமானப்படையில்
செய்த தவறுக்காகத் தண்டனைக்குப் பயந்து வனப்பகுதியில் மறைந்திருக்கிறான். அவனுக்கு ஆதரவாகக் கிழவர் ஜான்சன் இருக்கிறார். மலைப்பகுதியில்
ஒரு சிறு பகுதியை விவசாயப் பகுதியாக மாற்றி அதில் உழவு செய்து வாழ்கிறார். ‘உழைப்பிலே தான் மனிதனோட பெருமை இருக்கிறதென்று’ கருதுகிற பாத்திரம். மனைவியைப் புலி அடித்துவிட, மகன் நோயில் இறந்து விட, தனிமையில் வாழும் அவர், தன் சொந்த ஊரான இங்கிலாந்துக்குச் செல்லாமல் இந்திய வனப்பகுதியே கதி என நினைத்தார். வாழ்க்கை அவரைப் பண்படுத்தியிருப்பதை அவர் பிறரோடு பேசும் உரையாடல்கள் வழி நாவலாசிரியர் வெளிப்படுத்துகிறார். இளமையில் அவர் நேசித்த மனைவியைப் புலி சமையலறையில் நுழைந்து அடித்துக் கொன்றுவிட்ட நிலையில், அவர் அங்கு வாழ்வதற்கான காரணத்தை இறுதியில் தான் ஆசிரியர் விடுக்கிறார். தன் மனைவியைக் கொன்ற புலியைக் கொன்று பலி தீர்த்துக் கொள்வதற்காகவே தங்கியிருக்கிறார். ஆனால், புலியைக் கொல்லும் சந்தர்ப்பம் பதினைந்து ஆண்டுகளுக்குப்
பின்னரே கிடைக்கிறது. அந்தச் சந்தர்ப்பத்தைத்
தானாகக் கிடைத்தும், காட்டிலாகா அதிகாரி அதைக் கொல்ல குறிபார்த்த நிலையில், அவரைத் திசை திருப்பிப் புலியைத் தப்பிக்க விட்டு விடுகிறார்.
‘இந்த வயதான காலத்தில் ஒரு கோழையைப் போல் புலியை வஞ்சம் தீர்த்துக் கொள்ள விரும்பவில்லை.
அது கேவலம் மிருகம். நான் இதயமுள்ள ஒரு மனிதன்’ எனக் காலம் தன்னை மாற்றிவிட்டதாகக் கூறுகிறார். இதிலிருந்து தனிமையும், காலமும் கொடிய எண்ணங்களைக் கூடக் கருணை வடிவமாக மாற்றிவிடும் என்கிறார் ஆசிரியர். ‘தான் ஓர் உண்மையான கிருத்துவன்’ என ஜான்சன் குறிப்பிடுவார்.
மதங்கள் மனிதரை உணர்வுபூர்வமாகப் பக்குவப்படுத்துவதற்குரியவை. அதற்குப் பொறுமை மிக அவசியம் என்பதை இப்பாத்திரத்தின் வழி விளக்குகிறார்.
தியாகராஜன் காட்டிலாகா அதிகாரி. முரட்டுத்தனமும், அதட்டும் குரலும், அடாவடித் தோற்றமும் கொண்ட அவனா இப்படி என வாசகர் வியக்கும் வண்ணம் தியாகராசனின் பாத்திரப்படைப்பை கொண்டு செல்கிறார். சந்தர்ப்பமும் சூழ்நிலைகளும் கூடப் பொறுமையுடன் இருந்தால் சாதகமாகிவிடும் என்று பொறுமையுடன் காத்திருக்கும்
இவனுக்குக் கிடைப்பதோ பெருத்த ஏமாற்றம். உண்மையில் இப்படிப்பட்ட மனிதர்கள் கூட ஒருவகையில் நல்லவர்கள்தான்.
ஆனால் காதல் என்ற மாயப் பொய்கையில் மூழ்கி எழுபவர்கள் இறுதிவரை அதிலிருந்து தாமும் மீளாமல், தம்மைச் சார்ந்தவருக்கும் நரகத்தைக் காட்டிக் கொண்டிருக்கிறார்களே அவர்கள் தான் உண்மையில் கொடூரமானவர்கள்
என்பதைக் கங்கா பாத்திரம் வழி நாவலாசிரியர் விளக்குகிறார்.
பருவ வயதில் தோன்றும் இனக்கவர்ச்சியைக்
காதல் என்று மயங்கி, அதைத் தெய்வீகம் என்றும் புனிதம் என்றும் உன்னதங்கள் கற்பித்து அதுவே வாழ்க்கை எனத் தானும ஏமாந்து, தன்னைச் சார்ந்தவர்களையும் ஏமாற்றும் கோமாளிகளால் தான் எத்தனை தற்கொலைகள், கொலைகள், உயிரிழப்புகள், வேதனைகள். . . . .
எதுவும் நிரந்தரமில்லை என்று வாழும் இந்த உலகில் காதல்தான் நிரந்தரம் என்பது போலத் திரைப்படங்களும், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளும் இளைஞர்களைத் திசை திருப்புகின்றன.
ஒவ்வொரு வயதிலும் ஒவ்வொரு பொருளின் மேல் ஆசை தோன்றும். சில ஆசைகள் நிறைவேறும். சில ஆசைகள் நிறைவேறாது. அப்படித்தான் பருவ வயதில் தோன்றும் காதலும் சில காதல்கள் நிறைவேறும். சில நிறைவேறாது. நிறைவேறிய காதல்கள் எல்லாம் புனிதமானவையுமல்ல. நிறைவேறாதவை களங்கமுடையனவுமல்ல. வாழ்க்கையை அதன் போக்கில் வாழத்தெரியாதவர்கள், பக்குவமில்லாதவர்கள், குறிப்பிட்ட வயதிலேயே அறிவு வளராமல் நின்று போனவர்கள் தான் நிறைவேறாத காதலையே நினைத்து வாழ்க்கையை இழப்பார்கள். பெண்ணிடம் தோற்றத்தில் பெண்மையும், வழிபாட்டில் மேன்மையும் இருந்தால் மட்டும் போதாது என்கிறார். பிறரை வாழ வைக்காத, தன்னையும் வாழவிடாத காதல் எப்படிப் புனிதமானதாக இருக்க முடியும் என்று கங்கா பாத்திரம் வழி கேட்கிறார் ஆசிரியர்.
இதனால் தான் அப்படிக் காதலைப் புனிதம் என நினைத்து, மயங்கியிருந்jதால் தான் கங்கா தன் கணவனின் உயர்குணத்தை அறியாமல் போயிருக்கிறாள்.
காதலனையும் குற்றவாளியாக்கியிருக்கிறாள். வாழ்வில் பக்குவப்படாத இப்படிப்பட்டவர்கள் இருப்பதைவிட இறப்பதே மேல்-அல்லது இருப்பதும் இறப்பதும் ஒன்றுதான் என ஆசிரியர் நினைத்ததால் தான் கங்காவை கொன்று விட்டாரோ என்னவோ.
தன் மனைவியின் காதலை அறிந்ததும், அவளைத் துன்புறுத்தாமல்
அவள் பக்குவப்படும் வரை காத்திருக்கும்
பெருந்தன்மையுடைய பாத்திரமாகத் தியாகராசன் பாத்திரம் படைக்கப்பட்டிருப்பது தோற்றத்திற்கும்
மனத்திற்கும் சம்பந்தமில்i எனப் பலாப்பழத்தை நினைவூட்டும் விதமாக உள்ளது.
நிஷா-பருவ வயதிலிருந்தாலும்
துள்ளி விளையாடும் மான்குட்டியை நினைவூட்டும் நடவடிக்கைகள். தாயிழப்பு-தந்தை
அறியாமை-மலைவாசி வளர்ப்பு இறுதியில் ஜான்சனின் மகள் எனப் புதிர் விடுவிக்கப்படுகிறது.
நல்ல கதைப் பின்னல். ராவுஜி-ராயம்மாவின் அன்பு, குடும்பப் பொறுப்பு, பக்குவம், நம்பிக்கை, பொறுமை, இருவரும் ஆதர்ச தம்பதிகள். சமூகத்திற்குக் கட்டுப்பட்டுக்
கங்காவின் காதலை புறக்கணித்து வேறிடத்தில் தன் சாதியில் மணமுடித்து வைக்கும்பொழுது
கங்காவின் மனது காலப்போக்கில் மாறிவிடும் என நம்புகிறார்கள்.
அதுபோல் சிறுபாத்திரமாகப்
படைக்கப்பட்டிருந்தாலும், மலைவாசிகளின் தலைவன் மனதில் நிற்கும் பாத்திரமாகப் படைக்கப்பட்டிருக்கிறான். காலம் அவன் கையில் நிஷா என்னும் பொம்மையைக் கொடுத்து விளையாடி விட்டது. பாதியிலேயே பறித்துக் கொண்டது. விதியின் விளையாட்டில் அவனே ஒரு பொம்மையாகி விட்டான் என்கிறார் நாவலாசிரியர்.
பாத்திர வார்ப்பில் ஆசிரியர் சிறப்பாக வெற்றிப் பெற்றிருக்கிறார்.
சிறு பாத்திரமாக இருப்பினும் அதற்குரிய தனித்தன்மையை அழகாகப் பதிவு செய்து விடுகிறார். உடல் வருணனைகளை விடக் குண வருணனைகளே பெரிதும் இடம் பிடிப்பதால் வாசகர் மனதில் பாத்திரங்கள் வெகு நாட்கள் நின்றுலவுகின்றன.
எளிய மொழிநடை, சிறப்பான உரையாடல், நல்ல கதை கூறும் போக்கு, நிகழ்சசிகளை முரண்பாடின்றி இணைக்கும் நேர்த்தி, சிறந்த பாத்திர வார்ப்பு, செறிவான கதைப்பின்னல் இவை நிறைந்து ‘பாடிப் பறந்த குயில்’ அழகாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
------------------------------------------------------------------------------------------------------------
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்களைப் பதிவு செய்யலாமே?