நீரின்றி அமையாது உலகு.

முனைவர் ஜ.பிரேமலதா,தமிழ் இணைப்பேராசிரியர், அரசு கலைக் கல்லூரி, சேலம் 636 007 DR.J.PREMALATHA,ASSOCIATE PROFESSOR IN TAMIL,GOVT ARTS COLLEGE,SALEM -636 007.

Monday 15 June 2015

உயிரோட்டம் நாவல்

FIRM NAME: DHARINI PATHIPPAGAM
FIRM ADDRESS:4A,RAMEA FLATS,32/79 GANDHI NAGAR 4TH MAIN ROAD, ADYAR, CHENNAI-600020
MOBILE NO: 9940120341

VAIYAVAN - UYIROTTAM             300                       RS=350





உயிரோட்டம்




எழுத்தாளரின்  வையவன் அவர்களின் நாவல். சென்னை தாரிணி பதிப்பக வெளியீடு.  

ஒவ்வொரு மனித மனங்களுக்குள்ளும் ஒரு ஜீவ ஊற்று புதைந்து உள்ளுக்குள் சுழன்று கொண்டிருக்கிறது. அந்த ஜீவ ஊற்றைக் கண்டறிந்து அதை வெளிக் கொணர்ந்தால் மண்ணில் சொர்க்கத்தை உருவாக்கி விட முடியும் என்ற கருத்தை அடிநாதமாகக் கொண்டு படைக்கப்பட்டுள்ளது உயிரோட்டம் நாவல்.


           நாவலை முடித்ததும் நம்மை விடாமல் துரத்துபவள் மனோரமாதான். பகட்டான தோற்றமும், நாகரிக பேச்சும், அரைகுறை ஆடையும், மிடுக்காகக் காரை தனியாக ஓட்டி வரும் கல்லூரிப்பட்டம் பெற்ற மிதர்ப்பும் முன்பின் அறிமுகமில்லாத இளைஞர்களிடம் உரிமையோடு பேசும் மேட்டிமைத்தனமும் உள்ள பெண்ணாக மனோரமாவை நாவலாசிரியர் அறிமுகப்படுத்துகிறார். நாவலில் வரும் ஒரு சிறு பாத்திரம் என்றளவிலேயே வாசகர் அவளை முதலில் அணுகுவார்.



இரண்டாவது சந்திப்பிலேயே ரகுராமனிடம் தனியாகக் காபி குடிக்க அழைத்துத் தன் காதலை வெளிப்படுத்தும்போது இன்றைய சீரழிந்து வரும் இளைய சமூகத்தின் பிரதிநிதியாகவே தோன்றுகிறாள். ஆனால் இலட்சிய வேட்கையும், விவேகானந்தரின் கொள்கைகளில் கொண்டுள்ள பிடிப்பில் நாட்டைச் சீர்திருத்திவிட வேண்டுமென்ற வைராக்கியமும் கொண்ட இரகுராமனின் அலட்சியமான பார்வையும் உதாசீனமும் மனோரமாவை அப்படியே புரட்டி போட்டு விடுகின்றன. ஒரு காதல் இந்த மாயத்தைச் செய்யுமா எனில் உண்மைக் காதல் எதைத்தான் செய்யாது என்று நிரூபிக்கும் வகையில் மலை சரிந்து விழுந்து வளமான மண் பூமியாவதைப் போல் மனோரமாவும் மாறிப்போய் விடுகிறாள். தாயைப்போலப் பிள்ளை என்ற பழமொழியைப் பொய்யாக்கி உயர்ந்து நிற்கிறாள்.



          ரகுராமனின் அலட்சிய நோக்கிற்கான காரணத்தைத் தன்னிடம் தேடுகிறாள். தாயின் அலங்கோலமான வாழ்க்கை பிடிபடுகிறது.
 

பின்னால் ரகுராமன் புலி முடியின் அடியில் ஜீவ ஊற்றைக் கண்டறிந்து அதைத் தூர்த்து ஊற்றை வெளிப்படுத்தி ஜவ்வாது மலையின் தரிசாகக் கிடந்த ஐநூறு ஏக்கர் நிலப்பரப்பையும், தன் உழைப்பினால் பசிய வயல்களாக்குகிறான். ஆனால் மனோரமாவின் மனதில் உள்ளே மறைந்து கிடந்த ஜீவ ஊற்றையும் அவன் தன் அலட்சியக் கோடாரியினால் திறந்து விட்டான் என்றே சொல்ல வேண்டும்.

         அதுவரை கருணை என்ற ஜீவ ஊற்றை மறைத்துக் கொண்டிருந்த அவளுடைய நாகரிகப்பூச்சு, மேட்டிமைத்தனம், மிடுக்கு அனைத்தும் தகர்த்தெறிந்து உண்மைக் காதல் சமூகச் சேவையாக வெளிப்பட்டு, அவள் இருக்குமிடமெல்லாம், செல்லுமிடங்களெல்லாம் பயன்பெறுகின்றன. மனோரமா ஒரே பெண்ணாகச் செல்வச் செழிப்பில் வளர்ந்தவள். செல்வம் புரளும் கேளிக்கைகள், பொழுதுபோக்குகள், வசதி வாய்ப்புகள் இவையனைத்தும் தாயின் ஒழுக்கக்கேட்டினால் கிடைத்தவை என்றுணர்ந்தளவில் அனைத்தையும் சித்தார்த்தனைப் போல் உதறிவிட்டு எளிய புடவையோடு தாயை எதிர்த்துக் கொண்டு வெளியேறி விடுகிறாள். தாய் வந்து பலமுறை அழைத்தபோதும் மறுத்து விடுகிறாள். நாவலாசிரியர் ஓரிடத்தில் கூறுகிறார்.

 ""தனிமனித மனசாட்சிதான் சமூக மனசாட்சி. நியாயமாக ஒவ்வொருவரும் ஒழுங்காக நடந்து கொண்டால், சமூகச் சேவை அப்போது தான் பூர்த்திப் பெறுகிறது"" (ப-130) எவ்வளவு சிறந்த உண்மை. தனியாக யாரும் சமூகத்திற்குச் சேவை செய்யக் கிளம்ப வேண்டாம். ஒவ்வொருவரும் சரியாக இருந்தாலே அதுவே பெரிய சமூகச் சேவை. மனோரமாவின் வைராக்கியம் மயான வைராக்கியமல்ல.


         உடல் ஊனமுற்றோர் விடுதியில் கிளார்க் உத்தியோகத்தை மனோரமா விரும்பி ஏற்றுக் கொள்கிறாள். அழகினைக் கவர்ச்சியான பலமாகத் தரித்துக்கொண்டு துள்ளித் திரிந்த மனோரமா எளிய ஆடை உடுத்தி உடல் ஊனமுற்றோருக்கு சேவை செய்யும் பணிப்பெண்ணாக மாறிப் போனாள். எல்லாம் ரகுவின் காதலுக்காக. ஆனால் அவன் இந்துமதியை விரும்புவதையறிந்தும் நிலை கலங்கிப் போகிறாள். எனினும், ரகுவின் இலட்சியக் கனவிற்கு வடிவம் கொடுக்கும் வாய்ப்புக் கிடைத்ததும் மீண்டும் உயிர்த்தெழுகிறாள். இந்துமதி இறந்த பின்னும் ரகுவின் மனம் மாறாததை உணர்ந்து இலட்சியத் தோழமையாகவே அவனுடைய தேச முன்னேற்றப் பணியில் தன்னைக் கரைத்துக் கொள்கிறாள்.


          இந்நாவலில் வரும் ரகு, மனோரமா, ராஜு, மீரா என்ற நான்கு பாத்திரங்களுமே தேச முன்னேற்றத்திற்காகத் தங்களை அர்ப்பணித்துக் கொள்வார்கள். விவேகானந்தர் காண விரும்பிய இலட்சிய மாந்தர்கள் மனோரமா உதறிய இன்ப வாழ்க்கையை அவள் தாயார் சந்திரா தேவியால் உதற முடிவதில்லை. தன் மகள் எளிய புடவையைக் கட்டிக் கொண்டு சேவை செய்யப்புறப்பட்டதை அவளால் சீரணிக்க முடியவில்லை. தன் வாழ்க்கையின் இழிவை உணர்ந்தும், இழிவை மறக்க மீண்டும் இழிவையே நாடிடும் மனப்போக்கையே இறுதிவரை கொண்டிருக்கிறாள். பகட்டான வாழ்வை, அது தரும் சுகத்தை அவள இழக்க விரும்பவில்லை. இறுதியில் மகளை மரணப் படுக்கையில் கண்டளவில் சித்த பிரம்மையடைந்து இறந்து விடுகிறாள்.


      
சந்திராதேவி,   ‘தன்னம்பிக்கையும் தெளிவான தரிசனமும் உள்ள நாடு, தன் தேசியத் தன்மைகளை இடைவிடாது காப்பாற்றிக் கொள்ளப் போராடி வரும்நாடு இந்தியா என்று பெருமையுள்ள இந்தியா தற்போது அந்நியக் கலாச்சாரத்தின் பிடியில் சிக்கி சீரழிந்து வருவதைக் குறித்துக் கூறும் அமெரிக்கரான எரிக் நியூட்டனின் பேச்சை சுத்த போர் என்று ஒதுக்கி விடுகிறாள். அந்நியக் கலாச்சாரத்தில் தன் தாய்மை உணர்வைக் கூடத் தொலைந்து விடும். சந்திராதேவி ஓர் எச்சரிக்கை பாத்திரமாவாள். புத்தாண்டு கொண்டாட்டத்தில் இரவு நேர டிஸ்கோத்தேக்களுக்குச் செல்லும் பெண்கள் ஏனோ நினைவிற்கு வருகிறார்கள்.


             ஜவ்வாது மலையின் புலிமுடியின் அடிவாரத்தில் நாகப்பாறை சுனையிலிருந்து விழும் நீர் ஜீவ ஊற்றாக மண்ணுக்குள் புதைந்திருக்கும் இரகசியத்தைஉயிரோட்டம்கதையின் நாயகன் தன் கடின முயற்சியினால் கண்டறிகிறான். அதைத் தனியொருவனாகவே வெட்டி அந்த ஊற்றை வெளிக் கொணருகிறான். அதுபோல மகத்தான மனித ஆற்றல்களையும், இயற்கை வளத்தையும் கொண்டுள்ள பாரதப் பூமியில்தான் பஞ்சமும் பட்டினியும் வேலையில்லாத் திண்டாட்டமும். நாவலில் ஓரிடத்தில்தங்கம் வளிஞ்சு வீணாகிற மாதிரி’ (ப-293) என்றொரு தொடர் வருகிறது. தண்ணீரை மட்டுமல்ல இந்திய மக்களின் ஆற்றல்களும்கூட அப்படித்தான் வீணாகிக் கொண்டிருக்கிறது என்பதை நாசூக்காகத் தர்மானந்தா பாத்திரம் மூலம் நாவலாசிரியர் சுட்டிக் காட்டுகிறார். தெய்வ நம்பிக்கைகளாலும், விதி மேலுள்ள முடங்கிப் போன மக்கள் அறிவை நம்பாமல் அந்நியர்களுக்குப் பின் செல்லும் ஆட்டு மந்தை கூட்டங்களாக மாறிவிட்ட அவலநிலையை வேதனையோடு விவரிக்கிறார் நாவலாசிரியர்.
 
விவேகானந்தர் எதிர்பார்த்தபடி நூறு இளைஞர்களில் ஒருவராவது அவர் வழியில் நடந்தால் பல லட்சம் பேர்களுக்கு வாழ்வும் உணவும் கிடைக்கும் என்பதை ரகுநாதன் பாத்திரவழி நாவலாசிரியர் இந்தியாவின் எதிர்காலம் இளைஞர் கையில்தான் என்று உறுதியாக நம்பிய விவேகானந்தர் நூறு இளைஞர்களைக் கொடுங்கள். இந்தியாவை மாற்றிக் காட்டுகிறேன் என்றார்.

 
தர்மானந்தா பாத்திரமாக நாவலாசிரியரின் குரலே உரத்து ஒலிக்கிறது! நான் சந்தித்த இந்தியன் அடுத்த நபரின் உழைப்பிலே நம்பிக்கை வைத்திருக்கிறான். தன்னம்பிக்கையற்றவனாக, முதுகெலும்பில்லாத புழுவைப் போல் விதியை நொந்தவனாக. நகரத்து வாசியோ ஏழையின் சோற்றிலிருந்து சாமர்த்தியமாகத் திருடுபவனாக. . . . உடல் உழைப்பில்லாத கௌரவ வேலையை நாடி நகரத்திற்குச் சென்று, வேலையில்லை என்று விதியை நொந்து, கடவுளைச் சபித்து, கலகம் செய்கிறான். மறுபுறம் விவசாய நாடான இந்தியாவில் விவசாய வேலை செய்வதற்கு யாரும் தயாராகவில்லை.
கிராமத்து ஏழை விவசாயியோ, கற்பனையில் வாழும் லட்சக்கணக்கான சோம்பேறிகளுக்குச் சோறு போட மாள்கிறான்.


தன்னை நம்பாதவன் தெய்வத்தை எப்படி நம்புகிறான்? தெய்வத்தைப் பேராசைக்காகவே இந்தியன் நாடுகிறான். அறிவே தெய்வம் என்பதை உணர்ந்து உடலுழைப்பினால் தான் எதையும் சாதிக்க முடியும் என்ற உண்மையை என்று ஒவ்வொரு இந்தியனும் உணர்கிறானோ அன்று தான் புதிய இந்தியா உதயமாகும் என்கிறார். தொழிற்சாலை வேலைநிறுத்தம் குறித்து நீலகண்டம் பிள்ளை கூறும் தேசத்தின் நட்டக்கணக்கு பற்றி யார் கவலைப்படுகிறார்கள்? அவரவர்க்கு அவரவர் தேவை பெரிது. தொழிற்சங்கங்களின் இன்றைய நிலை குறித்து ஆசிரியரின் பதிவு உண்மைதான் எனினும் தூங்குவது போல் நடிப்பவர்களை யார் எழுப்புவது? ரகுநாதன் போல் ஒவ்வொரு தொழிலாளியும் இருக்க வேண்டும் என்பது ஆசிரியரின் ஆசை. நீலகண்டம் பிள்ளையின் மூலமாக அப்படிப்பட்டவர்களைப் பாராட்டுகிறார்.


ஜவ்வாது மலை, டால்ஸ்டாய் பண்ணை, புலிமுடி ஊத்து, காட்டுத்தீ, வீராவலசை முட்காடுகள், சீர்திருத்தப்பட்ட வயல்பகுதி அனைத்தையும் ஆசிரியர் கண்முன் கொண்டு வந்து நிறுத்தி விடுகிறார். ஜவ்வாது மலையின் பூர்வகுடி மக்களின் அறியாமை, பயம், கடும் உழைப்பு, வறுமை இயற்கைச் சூழலைப் பயன்படுத்திக் கொள்ளாத பேதைமை போன்ற குணங்களுடன் உன் அச்சு அசலாகப் படைக்கப்பட்டுள்ளனர்.
மீராவின் சித்தப்பா குப்பண்ணா பாத்திரத்தின் மீது நாவலின் தொடக்கத்தில் கோபம் வருகிறது. நடன மாதுவானஅவளை அவள் வருமானத்திற்கு ஆசைப்பட்டு மிகுதியாகக் கட்டுப்படுத்துகிறாரோ என்று அவள் ஆத்மநாபனைக காதலிப்பதை அறிந்து மறுப்புத் தெரிவிக்கும்போது மீராவை நினைத்துப் பரிதாபம் தோன்றுகிறது.

           ஆனால் நாவல் வளர்ச்சியில் குப்பண்ணா பாத்திரம் மிக உயர்வான இடத்திற்குச் சென்று விடுகிறது. நாடோடியாகத் திரிந்த அவர் தாய் தந்தையற்ற குழந்தை மீராவை தோளில் போட்டுக்கொண்டு வந்த நாளிலிருந்து வளர்த்து ஆளாக்கும் வரையில் தன்னைப் பற்றியே நினைவையே மறந்து மீராவின் நல்வாழ்விற்காகவே அர்ப்பணித்துக் கொண்டு விட்டதைச் சிறு சிறு சம்பவங்கள் வழி நாவலாசிரியர் அழகிய கோட்டோவியமாகத் தீட்டிக் காட்டுகிறார்.  


          ஆத்ம நாபனை மீரா காதலிப்பதை அறிந்ததும், கண்டிப்பதும், ஊர் மாற்றுவதும், அந்த ஊருக்கும் ஆத்மநாபன் தேடிக் கொண்டு வருகையில் அவனின் நிலையற்ற வாழ்க்கையைப் பொட்டில் அறைந்தாற்போல் உணர்த்திக் கெடு வைத்து திருப்பியனுப்புவதும் கெடு முடிவதற்குள் எதிர்பாராமல் ஆத்மநாபன் புகழின் உச்சாணிக் கொம்பிற்குச் செல்வதும், எவ்வளவு மீராவை அடையத் துடித்தானோ, அவ்வளவு மறந்தாற்போல் புறக்கணிப்பதும் மீராவை நினைத்து குப்பண்ணா இரத்தக்கண்ணீர் வடிப்பதும் விறுவிறுப்பான சதுரங்கப் பலகையாட்டத்தையொத்துச் சம்பவங்கள் நகர்கின்றன. 


             குப்பண்ணா ஆத்மநாபனை பகடைக்காயாக நகர்த்த, காலம் ஆத்மநாபனை ஆடுபவனாகவும் குப்பண்ணாவை பகடைக் காயாகவும் மாற்றுகிறது. இடையில் வெட்டப்படுவதென்னவோ மீராவின் உண்மைக் காதல்தான். ஆனால் குப்பண்ணா தன் அனுபவத்தினால் மீராவை ஆத்மநாபனிடமிருந்து காப்பாற்றி விடுகிறார் என்றே சொல்லலாம். புகழ் என்னும் போதையில் வாழ்க்கையின் மதிப்பீடுகளை இழக்கும் ஒரு சாதாரணச் சபல மனிதனான ஆத்மநாபனிடமிருந்து இலட்சிய வேட்கையுள்ள மீரா குப்பண்ணாவின் சாதுர்யத்தால் தப்பித்துத் தான் விடுகிறாள்.
இனக் கவர்ச்சியைக் காதல் என நினைத்து ஏமாறும் எத்தனையோ இளம்பெண்ணில் ஒருத்தியாகவே மீரா தோன்றுகிறாள்.

          ஆனால் காதல் போயின் சாதல் என வாழ்வைத் துறக்காமல் தியாக மனிதரான குப்பண்ணாவைப் புரிந்து கொண்டு அவருக்காக வாழ முடிவெடுத்து மீண்டும் சலங்கையை நாடுகிறாள். இறுதியில் உண்மைக் காதலை ராஜுவிடம் காண்கிறாள். இழந்த காதல் தியாக வாழ்க்கை சேவை மனப்பான்மை உண்மை மாந்தர்களை இனம் காண அவளுக்கு உதவுகிறது. ராஜு மீராவை முதலில் விரும்பினாலும், அவள் ஆத்மநாபனை விரும்புவதறிந்து விலகி விடுகிறான். பின் மீராவின் காதல் தோல்வி, தியாக வாழ்க்கை என அனைத்தும் தெரிந்திருந்தும் அவளறியாமலே அவளது நடன நிகழ்ச்சிகளில் ஒரு பார்வையாளனாகப் பங்கேற்று மீராவைச் சந்திக்காமலே விலகி நிற்கிறான். அவனது கண்ணியம், உண்மைக் காதல், பொறுமை, எண்ணத்தில் வலிமை இறுதியில் மீராவை மணமுடிக்கக் காரணங்களாகியுள்ளது.


             பாக்கியம், ஆனந்தரங்கம் நரேந்திரன் போன்ற பாத்திரங்கள் சிறு பாத்திரங்களாயினும் மறைமுகமாக ரகுநாதனின் ஆளுமைக்கு அடித்தளமாகின்றன. வேலைக்காரியின் மகனாக இருந்தாலும் வக்கீல் ஆனந்தரங்கமும், பாக்கியமும் ரகுநாதனை தன் மகன் போலவே நடத்துகிறார்கள். சம வயது தோழர்களாகப் பேதமின்றி ஒற்றுமையாக வளர்கிறார்கள். உயர் குடும்பத்து அன்னபூரணி காலக் கொடுமையால் வேலைக்காரியாகப் பணி செய்ய நேரிட்டாலும், இலட்சிய வேட்கையை மகனின் மனதிற்குள் விதைக்கிறாள். மகனுக்கு வேலை கிடைத்தவுடன் தனி வீடு பார்த்து குடி பெயர்கின்ற அன்னபூரணி இறுதிவரை தன்னை வாழவைத்த குடும்பத்தை நன்றியுடன் நினைத்துப் பார்க்கிறாள். இவளின் இறப்பு ரகுநாதனின் இலட்சியக் கதவை மறுபுறம் திறந்து விடுகிறது.
           
 
           இந்துமதிக்கு நாவலில் முக்கிய இடம் என்றாலும் தந்தையின் பிடிவாதத்திற்கு மாற்றாகச் சிறு துரும்பையும் நகர்த்திவிட முடியாத நிலையில் எதிர்பாராத விபத்து அனைத்திலிருந்தும் விடுதலை பெற்றுத் தந்து விடுகிறது. அத்தை மகன் வெங்கடேசனை மணமுடிக்கும் நிலை வருமானால் உயிரை விடுவதே மேல் என்ற அவளுடைய எண்ணம் இயல்பாக நிறைவேறி அனைவருக்கும் நிம்மதியைத் தந்துவிட்டது.


            சக்கர நாற்காலியில் அமர்ந்து கொண்டு அனைவரையும் பம்பரம்போல் தன் அதிகார பணபலத்தால் ஆட்டிப் படைக்கும் அவள் தந்தை நீலகண்டம்பிள்ளை இந்துமதியின் காதலுக்கு விதித்த தடை அவர் நினைத்த மாதிரியே நடந்து விட்டது. அந்தஸ்து பித்துப்பிடித்த அவரின் மனதில் மரணம் பெரிய இடியை இறக்கி அவரையே ஆட்டி வைத்துவிட்டது. நீலகண்டம் பிள்ளை மனிதர்களைப் பகடைக் காயாக நகர்த்தும் ஆட்டத்தில் தேர்ந்தவர். வியாபாரத்தில் குறுகிய காலக் கட்டத்தில் மிக உயர்ந்த இடத்திற்கு அவர் வருவதற்கு மனிதர்களின் எண்ண வோட்டங்களை நுட்பமாக அறியும் நுண்ணுணர்வு காரணம் என்பதை இந்துமதியை விட்டு ரகுநாதனை நிரந்தரமாகப் பிரிக்க இரகுநாதனின் இலட்சிய வேட்கையையே சாட்டையாக அவர் பயன்படுத்துவதன் மூலம் நாவலாசிரியர் வெளிப்படுத்துகிறார். தரிசாகக் கிடக்கும் நிலமும் பண்பாடும், ரகுநாதனும் இந்துவை மறப்பான் என அவர் கணக்கு போடுகிறார். நகுநாதனுக்கு நிலம் பண்படுத்த அனுப்பும் தொகையை நிறுத்தி விடுகிறார். வெளிநாடு செல்ல ஆசை காட்டுகிறார். எனினும் மார்க்சிய கொள்கைப் பிடிப்புடைய அவர் மகன் ராஜு மறைமுகமாக உதவி செய்கிறான்.


         பாத்திரங்கள் ஒவ்வொன்றும் நம்முடன் வாழ்வதைப் போலவே படைக்கப்பட்டுள்ளன. பாத்திரங்களின் தோற்றங்கள் குறித்த வருணனைகளை விட அவர்களின் செயல்பாடுகளின் வழியிலான வருணனைகள், உள்ளத்துணர்வுகளை வெளிப்படுத்தும் வகையிலான வருணனைகள் அச்சு அசலாகப் பாத்திரங்களை வாசகர் மனதில் பதிய வைக்கின்றன.


         வெங்கடேசன் ஆத்மநாபன் போன்ற பாத்திரங்கள் பணத்தையும், பகட்டையும் மேலைநாட்டு வாழ்க்கைமுறையையும் நம்பி சீரழிவது தற்கால இளைஞர்களின் வாழ்க்கைப் போக்கை நினைவூட்டி வேதனையை ஏற்படுத்துகிறது. தாய்மாமன் தன் மகளைக் கொடுத்து தன் பரந்து விரிந்த சொத்திற்கும் வாரிசாகத் தன்னை நியமிப்பார் எனப் பகற்கனவு காணும் படித்த மேதாவி வெங்கடேசன், தன் தாய்க்கு இணையான வயதுடைய சந்திராதேவியிடம் தொடர் கொள்வதும், ரகுநாதனைத்தான் இந்துமதி விரும்புகிறாள் எனத் தெரிந்தும் பணத்திற்காக அவளை மணமுடிக்கச் சம்மதிப்பதும், மேலை நாகரிகத்திலுள்ள பழக்கங்களைக் கடைபிடிப்பதுதான் பிடித்தவர்களுக்கு அழகு என்று நடந்து கொள்வதும், உடல் உழைப்பை கேவலமாகக் கருதுவதும் இந்தியா சென்று கொண்டிருக்கும் பாதையை ஓர் உருவமாக்கி உலவ விட்டுள்ளாரோ நாவலாசிரியர் என்று தோன்றுகிறது.


          ரகுநாதனின் உள்ளம் ஒரு இலட்சியவாதியின் உள்ளம் டால்ஸ்டாய் பண்ணையின் ஐநுhறு ஏக்கர் நிலத்தையும் பண்படுத்தி விவசாய நிலமாக மாற்ற வேண்டுமென்ற வேகத்தில் இந்துமதியைக் கூட அவன் மறந்து போனான். நிலம், மழை, உழைப்பு, பண்படுத்த பணம் என்ற நோக்கிலேயே அவன் மனம் யோகியைப் போல் சுழன்று கொண்டிருந்தது. வானம் பார்த்த பூமியில் எங்காவது ஜீவ ஊற்று இருக்கும் எனத் தேடியலைந்து இறுதியில் ஊற்றைக் கண்டுபிடிக்கிறான். ஆனால் அவனுடைய ஜீவனான இந்துமதி அவனை நிரந்தரமாக விட்டுப் போய் விடுகிறாள். எல்லாம் மாயை என்று நிலை தடுமாறிப் போகிறான். தன்னை, நிலத்தை, ஊற்றை மறந்து போகிறான். ஆனால் பல மாதங்களின் கடின உழைப்பினால் கண்டறிந்து தோண்டப்பட்ட ஊற்று நீர் வீணாவதைக் கேட்டளவில் துக்கத்தை விடுத்து நிலத்தைக் காக்க ஓடுகிறான். அவனுடைய இலட்சிய வெறி அவனைப் புதிதாய் பிறக்க வைக்கிறது. ஒரு சில ஆண்டுகளில் மனிதர்கள் வாழ இயலாத வறண்ட பூமி பசிய வயல்களாக மாறிப் போகின்றன.

           மீரா, ராஜு, மனோரமா உதவியால் தொழிற்பள்ளிக்கூடம், மருத்துவமனை, விருந்தினர் மாளிகை எனப் பல கனவுகளை ரகுநாதன் நிறைவேற்றுகிறான். இன்னும் நிறைவேற்றப் போகும் தேச முன்னேற்றத்தை அடித்தளமாகக் கொண்ட நிலையங்கள் குறித்த செயல்திட்டங்களை ரகு தீட்டத் தொடங்கியிருந்தான் என்று நாவலாசிரியர் கூறும் பொழுது, இழப்புகள் கூட வலிமையைத் தரும் என்ற உண்மை ஒளி வீசி நிற்கிறது.
சவ்வாது மலையை அப்படியே கண்முன் கொண்டு வந்து நிறுத்தி விடுகிறார். அங்குச் செல்ல வேண்டும் என்ற ஆர்வத்தை இதைப்படிக்கும் வாசகர் பெறுவர் என்பது உறுதி. அங்குச் சென்றால் தின்னன் போன்றோரைப் பார்க்கலாம் என்று நாவலைவாசித்ததும் எண்ணம் எழுகின்றது. பாத்திரங்களை உயிரோடு உலவவிடும் வித்தை ஆசிரியருக்கு கைவந்த கலையாக வரப்பெற்றுள்ளது. தமிழ் நாட்டு காண்டேகர் என்று இவரைக் 
கூறலாம்.

கல்லூரி, பல்கலைக்கழக மாணவர்களுக்கு பாடமாக வைக்கக்கூடிய தகுதிவாய்ந்த நாவல் இது.

 

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்களைப் பதிவு செய்யலாமே?