நீரின்றி அமையாது உலகு.

முனைவர் ஜ.பிரேமலதா,தமிழ் இணைப்பேராசிரியர், அரசு கலைக் கல்லூரி, சேலம் 636 007 DR.J.PREMALATHA,ASSOCIATE PROFESSOR IN TAMIL,GOVT ARTS COLLEGE,SALEM -636 007.

Sunday, 21 December 2014

கல்யாண வளையோசை கொண்டு...காற்றே நீ முன்னாடி செல்லு…….பின்னாடி நான் வாரேன் என்று...


 


 


குறிஞ்சிக்கலி - 3




கல்யாண வளையோசை கொண்டு...காற்றே நீ முன்னாடி செல்லு…….பின்னாடி நான் வாரேன் என்று...




         முன் பின் அறிமுகமில்லாத ஒரு தலைவன், தன் பெற்றோரோடு தலைவியைப் பெண் கேட்டு வந்துவிட்டான். தலைவியின் பெற்றோருக்குத் தாங்க முடியாத கோபம். அவர்கள் யார்? நாடு என்ன? எத்தகையவர்கள்? அவர்கள் வசதி என்ன? எந்த அறிவிப்பும் இல்லாமல், சுற்றங்களின் மூலம் சொல்லி அனுப்பாமல், பெண்கேட்டு வரலாமா? என்ன தைரியம்? அனுமதி கேட்காமல் தகவல் சொல்லாமல் இப்படித் திடுதிப்பென்று ஒரு வீட்டிற்குள் நுழைந்து கத்தரிக்காய் கேட்பது போல் ஒரு பெண்ணைப் பெண் கேட்கலாமா?  

தலைவியின் தந்தைக்கோ தாளமுடியாத கோபம். அவர்கள், ‘உங்கள் பெண்ணை எங்கள் மகனுக்குப் பெண் கேட்டு வந்திருக்கிறோம்என்று சொன்ன உடனே தலைவியின் தந்தையின் புருவங்கள் நெரிந்தன. அவர் முகம் கோபத்தால் சிவந்தது. தங்களை அறிமுகப்படுத்திக் கொள்ளக்கூட அவகாசம் தரவில்லை.அவர்களின் முகத்திற்கெதிராகவே ‘பெண் கொடுக்கமுடியாது என்று உறுதியாக ‘பட்டென்று கூறிவிட்டார். சுட்டு விரலை வாசலை நோக்கி நீட்டி விட்டார். அவர்கள் சென்ற பின்னும் கூட நெடுநேரம் மிகுந்த அதிர்ச்சியினால் உட்கார்ந்த இடத்திலிருந்து எழாமல் அப்படியே அமர்ந்திருந்தார். அந்த நாள் 
முழுவதும் சீற்றத்துடன் காணப்பட்டார். 
 
தலைவன் பெண் கேட்டு வந்த பொழுது தலைவியின் தோழி அங்கு இல்லை. அவள் வேறொரு வேலையாக வெளியே சென்றிருந்த நேரத்தில் இது நிகழ்ந்து விட்டது. தோழி, நடந்ததைக் கேள்விப்பட்ட உடனே தலைவியின் பெற்றோரிடம் ஓடுகிறாள். அவர்கள் பெண்கேட்டு வந்ததற்கான காரணத்தைச் சொல்லத் தொடங்குகிறாள். சென்ற மாதம் புது வெள்ளம் வந்த நாளில் அந்த வெள்ளத்தைக் காண்பதற்காக எல்லோரும் சென்றிருந்தோமல்லவா? கரைபுரண்டு ஓடும் வெள்ளத்தைக் காண தலைவியும் எங்களுடன் வந்திருந்தாள் அல்லவா? அப்போது, நாங்கள் அந்தப் புதுவெள்ளத்தில் நீந்தி விளையாடினோம். பெருக்கெடுத்தோடிய அந்தப் புது வெள்ளத்தில் எதிர் நீச்சலிட்டோம். தலைவிக்கும் ஆசை வந்துவிட்டது. எங்களோடு சேர்ந்து நீர் விளையாட்டு விளையாட அவளும் விரும்பினாள். அப்போதுதான் நீச்சல் பழகியிருந்த அவள் நாங்கள் உடனிருக்கும் தைரியத்தால் நீரில் ஆசையுடன் இறங்கி விட்டாள். எங்களுடன் இணைந்து எதிர் நீச்சலிட்டாள். விளையாடினாள், ஆனால், நெடு நேரம் விளையாடியதால் சோர்வு ஏற்பட்டுவிட்டது. கைகள் சோர்ந்து போயின. தளர்ந்துவிட்டாள். புது வெள்ளத்தின் வேகத்திற்கு அவளால் ஈடுகொடுக்க முடியவில்லை. நாங்கள் அவள் கையைப் பற்றிக் காப்பாற்றுவதற்குள், புதுப்புனல் அவளை இழுத்துக் கொண்டு சென்றுவிட்டது. உடனே நாங்கள் பயத்தால் அலறினோம்; கூச்சலிட்டோம்; வேகமாக நீச்சலிட்டபடியே அவளைப்பிடிக்க முயற்சித்தோம். ஆனால், வேகமாக வெள்ளம் அவளை இழுத்துக் கொண்டு சென்றது.



எங்கள் அச்சக் குரல் கேட்டு, கரையின் வழியாகச் சென்று கொண்டிருந்த ஓர் இளைஞன் எங்கள் நிலைமையைப் புரிந்து கொண்டு, ஆற்றிலே குதித்தான். விரைவாக நீந்தினான். தலைவியைப் பற்றி இழுத்தான். துவண்டு போயிருந்த அவளைத் தன் பக்கம் இழுத்து அவளை அணைத்தபடி கரையில் சேர்த்தான். தலைவி, தன்னை அணைத்து இழுத்து வந்த அந்த இளைஞன் மீது அன்றே காதல் கொண்டுவிட்டாள். இது சரியா? எனக் கேட்டதற்குத் தலைவனின் அணைப்பில் அகப்பட்ட காரணத்தால் இனி வேறொருவரை மனதால் நினைக்கவும் இயலாது. இப்பிறவியில் ஒருவனை மணப்பதாக இருப்பின் தான் மணப்பதாக இருப்பின் தலைவனையே மணப்பேன். அப்படி மணமுடிக்க இயலாவிடில் கன்னியாகவே இருப்பேன் என்று உறுதியாகக் கூறினாள். அன்று அவளைக் காப்பாற்றியவன் தான், தலைவியைப் போலவே, ‘இவளைத்தவிர யாரையும் மணப்பதில்லை’, என உறுதியோடு தன் தாய் தந்தையரை இங்கு அழைத்து வந்துவிட்டான். இருவர் மனமும் ஒன்றிவிட்டதால், இருவருமே உறுதியாக இருக்கின்றனர். எனவே, அவனுக்கு இவளை மணமுடிப்பதே 
தகுதியானது என்று தோழி கூறுகிறாள்.
  உடனே செவிலித்தாயும் நற்றாயும் கோபத்தோடு தோழியை ஏசுகின்றனர். """"எவனோ ஒருவன். ஆற்றங்கரை வழியே நடந்து போனவன். ஆற்றோடு அடித்துச் சென்ற பெண்ணைக் காப்பாற்றியவன். அதற்காக அவளையே மணப்பேன் என்று கூறுவதா?"" தலைவிக்கும் என்ன தைரியம்? ‘முன்பின் தெரியாத ஒருவனை, அணைத்துக் காப்பாற்றிக் கரை சேர்த்தான் என்பதற்காக, அவனையே மணப்பேன் என்று பிடிவாதம் செய்வதா? அவன் யாரோ? என்ன பேரோ? எந்த ஊரோ? எதுவும் தெரியாமலேயே நீயும் தலைவியை அவனுக்கு மண முடிப்பதே தக்கது,’ என்று கூறுவதா? பெரியவர்கள் இருக்க, நீங்களே அனைத்தையும் முடிவு செய்து விடுவதா? ஒரு நெறிமுறை வேண்டாம்? என்று கேள்வி மேல் கேள்வி கேட்டு தோழியைத் துளைத்தெடுக்கிறார்கள்.

 தலைவி அச்சத்தோடு தோழியையும் தாயாரையும் பார்த்து பயந்து போகிறாள். உடனே அங்கு நிற்க அஞ்சி, அதே சமயம், தன் நிலையிலிருந்து மாற மாட்டேன் என்ற உறுதியுடன் உள்ளறைக்குச் சென்று விடுகிறாள்.

 
                தோழி தனக்கேயுரிய மதி நுட்பத்துடன் தாயாரை நோக்கிக் கூறத் தொடங்குகிறாள். அவன் யார்? என்றா கேட்டீர்கள்?, ‘தலைவி மீது அக்கறையுள்ள நான் தலைவனைப் பற்றி விசாரிக்காமலா இருப்பேன்? நன்கு விசாரித்தபின் தான் கூறுகிறேன்.

 அவன் தலைவிக்குத் தகுதியானவன்தான். நமது குலப் பெருமைக்கும் செல்வ வளத்திற்கும் செல்வாக்கிற்கும் தலைவன் குடும்பத்தார் எவ்விதத்திலும் குறைந்தவர்கள் இல்லை. நம்மைப் போலவே அவனும் மலைவளம் மிக்க நாட்டைச் சார்ந்தவன். அவனுடைய நாட்டின் வளம் எப்படிப்பட்டது தெரியுமா? தினைப்புனம் காக்கும் பரணிலிருந்து கொண்டு, வேட்டுவர், அகிலை எரிய விடுவர், அகிலிலிருந்து எழும் மணம் அம்மலையெங்கும் மணக்கும். அதிலிருந்து எழும் புகையோ வான் முட்டும். வானிலிலுள்ள நிலவினைச் சென்று மறைக்கும். புகையின் பெருக்கத்தால் நிலவு ஒளி மங்கி பழுப்பாகத் தோன்றும். இப்படி நிறம் மாறிய நிலவு வான் வழியே சென்று மலை முகட்டினைக் கடக்கும். தொலைவிலிருந்து பார்த்தால் மலை மீதுள்ள நிலவு தேனடையைப் போலத் தோற்றம் தரும்; அந்த மலையிலே மிக நீண்ட மூங்கில்கள் வளர்ந்திருக்கும்; கணுக்கள் நிறைந்த அந்த மூங்கில் நீண்டு வரிசையாக வானிற்கே ஏணி வைத்தது போல வளர்ந்திருக்கும்; நிலவாகிய தேனடையை எடுப்பதற்காக வைக்கப்பட்ட ஏணியைப் போலஅந்த மூங்கில்கள் காட்சியளிக்கும். இத்தகைய சிறந்த அகில், மூங்கில் போன்ற வளங்கள் நிறைந்த நாட்டைச் சேர்ந்தான் தலைவன். அவன் மீது தான் தலைவி உயிராய் இருக்கிறாள். அவள்பெய் எனக் கூறினால், மழை பெய்து விடுமளவிற்குகற்பின் திண்மை உடையவள். இப்படிப்பட்ட சிறப்புடைய தலைவிக்காகத் தான் பெண் கேட்டு வந்தனர் அவனுடைய பெற்றோர். அவர்களின் மகனுக்குப் பெண் கொடுக்க மாட்டேன் எனக் கூறுவது நமக்கு அழகல்ல, இது நீதியுமல்ல.


அவன் நம் தலைவியைக் காப்பாற்றிக் கொடுத்தவன். நம் உயிரையே நமக்குத் திருப்பித் தந்திருப்பவன். உதவி செய்தவர்க்கு நாம் செய்யும் கைமாறு இதுதானா? இது மிகவும் நன்றி கெட்ட செயல். 

 நாம் மலை நாட்டு மக்கள்.  உதவி செய்தவர்க்கு நன்றி மறக்கலாமா? இவளுடைய விருப்பத்தையும் அறியாது நமக்கு உதவியவர்க்கும் இவளைக் கொடுக்காது நாமறியாத வேறொருவருக்கு இவளை திருமணம் செய்து வைப்பதா? இது தான் அறமா? நம் மலை நாட்டு மக்கள் நன்றி கொன்றனர் என்ற அவப்பெயர் தான் மிஞ்சும்.
அப்படி நாம் நன்றி கொன்றவர்களாகி வாழ முடியுமா?  
அறம் பிழைத்தால் நமது நாட்டிலுள்ள வளம் குன்றி விடாதா? நாம் நன்றி மறந்தால் இனி வள்ளிக்கிழங்கு உண்டாகாது. மலையிலுள்ள முகட்டில் தேனீக்கள் கூடு கட்டாது. தினைப்பயிர்கள் ஓங்கி வளராது. கதிர்கள் செழித்து வளராது. கதிர்கள் செழித்து நிமிராது. நம் மலை நாட்டுப் பெண்டிர் என்றும் பிழை செய்யார். தாம் மனதில் நினைத்தவரையன்றி வேறொருவரை கனவிலும் நினையார். தம் கணவரையே நினைத்து வாழ்வர். இதனால் தான் அவர் தம் கணவர் விலங்குகள் மேல் வைத்த குறி என்றும் தப்பியதில்லை. இத்தகைய சிறப்புடைய மலைநாட்டில் பிறந்த தலைவி, இனி வேறொரு வரை எங்ஙனம் மனதில் நினைப்பாள்? எனவே, அவளைத் தகுதியுள்ள அத்தலைவனுக்கு மணமுடித்துக் கொடுத்தலே சாலச் சிறந்தது என்று தன் பக்கத்து நியாயத்தை எடுத்துரைக்கிறாள்.


செவிலித்தாயும், நற்றாயும் நன்குணர்ந்தவர்களாய் மனதில் தெளிவு பெற்று, தலைவியின் தமையன்களுக்கு உரைத்தனர். அவர்கள் மனதிற்கு ஏற்றவாறு எடுத்துரைத்தனர். முதலில் இதைக் கேட்டளவில் ஒருநாள் முழுவதும் நெஞ்சில் கோபக்கனல் சூழ, கோபத்துடன் கண்சிவந்து, தன் கணைகளையும் அம்புகளையும், சிலைகளையும் மாறி மாறி பார்த்து நின்றனர். 
 
         ஒரு நாள் முழுவதும் கோபம் தணியாமல் இருந்தபின் வேறுவழியில்லை என உணர்ந்து, தலைவியின் தந்தையிடம் சென்று எடுத்துரைத்தனர். தமையன்கள் கூறிய நிகழ்ச்சிகளையும், விளைவையும் கேட்டு தலைவியின் தந்தையும் சினம்கொண்டு உறுமி நின்றார். பின், தலைவன் வீட்டாரையும், தலைவியையும் நினைத்துப் பெருமூச்சு விட்டார். பின் இருவர் தரப்பிலும் தவறு எதுவும் இல்லை. இது விதியின் செயல் எனச் சினம் தணிந்து, தலைகுனிந்து சிந்தித்திருந்தார். பின் தன் அருமை மகளின் கற்பின் வலிமையை நினைத்து, அவள் விரும்பும் தலைவனுக்கே அவளை மண முடித்துக் கொடுக்க முடிவு செய்தார்.

 
முன்பு பெண் கொடுக்க முடியாது என்று கோபமாகப் பேசி, தலைவனின் பெற்றோரை திருப்பியனுப்பிய அவரே இப்போது மனம்மாறி, உரியவர்களை அழைத்து, தலைவன் வீட்டாருக்கு அழைப்பு அனுப்பினார். இதனைக் கேள்விப்பட்ட தலைவியும் தோழியும் மிகவும் மன மகிழ்ந்து, இனி திருமணம் எவ்வித இடையூறும் நிகழாமல் நடைபெற வேண்டும் என மலை கடவுளான முருகப்பெருமானை வேண்டச் சென்றனர். முருகக் கடவுளுக்கு மிகவும் உகந்த குரவைக் கூத்தினை ஆட தலைவியை அழைக்கிறாள் தோழி.
தோழி கூறியதைக் கேட்டு, தலைவி மனம் நெகிழ்ந்து கண் கலங்கி நிற்கிறாள். அவளுக்குத் தலைவன் வீட்டார் வந்து பெண் கேட்டதும், தந்தை அவர்களிடம் பெண் கொடுக்க மறுத்து திருப்பியனுப்பதையும் நினைத்துப் பார்க்கிறாள். செவிலித்தாய், நற்றாய், தமையன்கள், தந்தை அனைவரும் தோழி உரைத்த நிகழ்ச்சியைக் கேட்டு மிகுந்த கோபமுற்றதையும் அதற்குத் தக்கவாறு பதிலளித்து அவர்களின் கோபத்தைத் தணிவித்ததையும் நினைத்துப் பார்க்கிறாள், தோழியின் அன்பையும், மதிநுட்பத்தையும் மனதில் பாராட்டுகிறாள். அவளுக்கு அனைவரின் மீதும் அன்பு பெருக்கெடுக்கிறது. தாயும், செவிலித்தாயும் , தமையன்களும் , தந்தையும் தன் மீது கொண்டிருக்கும் பேரன்பினால் அல்லவா இத்திருமணத்திற்குச் சம்மதித்திருக்கிறாள். முதலில் வீம்போடு பெண் கொடுக்க மறுத்தவர்கள் இப்போது தம் நிலையிலிருந்து இறங்கி தம் மதிப்பைக் குறைத்துக் கொண்டு துணிவோடுபெண் கொடுக்கிறோம்என்று கூறியனுப்பியிருக்கிறார்கள்.

 
          வலிய வந்தவர்களைத் திருப்பியனுப்பியவர்கள் இப்போது தாங்களே வலிய செல்லத் துணிந்திருக்கிறாள். தங்கள் மானம், மரியாதை, மதிப்பைவிட என் நலனே பெரிது என அவர்கள் சிந்தித்ததன் விளைவே இது, என் பொருட்டு அவர்கள் வைத்துள்ள அன்பிற்கு ஈடு இணையே இல்லை. இத்தகைய உயர்ந்த பண்பினைப் பெறுவதற்கு, எனது பெற்றோரும் மலைநாட்டவரும் என்ன தவம் செய்தார்களோ என வியக்கிறாள். அவளது தலைவன் வீட்டாரும் உடன் சம்மதித்துப் பெண் கேட்டு வருவதாகச் சொல்லி அனுப்பியிருக்கிறார்களே, அவர்களும் தவம் செய்தவர்களே, இனி திருமணம் உறுதியாக நிகழும் என நினைத்து அவளின் நெஞ்சம் மகிழ்வால் நிறைகிறது. சுமை முற்றிலும் நீங்குகிறது.

 குரவைக் கூத்தை ஏற்பாடு செய்யும் தோழி, தலைவியைப் பாடச் சொல்கிறாள், கனவிலே காதலனைக் கண்டு களித்த தலைவி இனி நனவிலேயே அவனுடன் வாழப்போகிறாள். திருமண நாள் என்று வருமோ? என அவள் மனம் ஏங்குகிறது. அதையே பாட்டாகப் பாடுகிறாள். 

          அவள் பாடலைக் கேட்ட தோழி, அவளைக் கேலி செய்கிறாள். திருமண நாளில் நீயும் உன் காதலனும் எப்படி நடந்து கொள்வீர்கள்? முன்பின் அறியாதவர் போலவா? அல்லது மிகவும் பழகியவர் போலவா? ஒருவேளை முன்பின் அறியாதவர் போல நடந்து கொண்டால், நான் என்ன செய்வேன் தெரியுமா? நானும் ஒன்றும் தெரியாதது போல நடிப்பேன், உங்கள் காதல் பார்வைகள், நடத்தைகள் எல்லாம எனக்குத் தெரியும். ஆனாலும், தெரிந்தாலும் தெரியாதது போலவே நடிப்பேன். நான் நடிப்பது கண்டு நீ என்ன செய்வாய்? நாணம் தாங்காமல் கைகளால் முகத்தை முடிக் கொள்வாய், உள்ளுக்குள்ளேயே சிரிப்பாய், எனது நடிப்பைக் கண்டு காதலன் அருகிருக்கையில், அதுவும் மணக்கோலத்தில் அருகிருக்கையில் நீ கண்களை முடிக்கொள்வதால் என்ன பயன்? என்று தோழி எதிர்பாட்டாகப் பாடுகிறாள்.

         தலைவியும் சளைத்தவள் அல்ல. """" நான் என் கண்களை மூடிக் கொண்டால் என்ன? நீ அருகே இருக்கிறாய் அல்லவா? உன் கண்களையே என் கண்களாகக் கருதி, நான் உன் கண்களால் என்னைக் காண்பேன். அன்பு நிறைந்த கண்களால் நீ காண்பதும் நான் காண்பதும் ஒன்றல்லவா? என எதிர்ப் பாட்டுப் பாடுகிறாள். அதற்குத்தோழி எதிர்ப்பாட்டுப் பாடுகிறாள், ‘அப்படியா! மிகவும் நல்லது அப்படியே ஆகட்டும். உனது கண் எனது கண் ஆகட்டும், உங்கள் திருமணத்தைக் கண்டு நான் மகிழ்வது போல நீயும் மகிழ்வாய், நீ மகிழ்வது போல நானும் மகிழ்வேன் என்கிறாள்.

 
          குரவைக் கூத்து முடிந்தது.  தலைவன் வீட்டாரும் மனதில் எதையும் வைத்துக்கொள்ளாமல், மீண்டும் பெண் கேட்டு வந்தனர், இம்முறை அனுபவமிக்க ஆன்றோரையும், திறமை மிகுந்த சோதிடர்களையும் உற்றார் உறவினரையும் அழைத்து வந்தனர். பேச்சு முறியாமலிருக்கவும், திருமண நாளை குறிப்பதற்காகவுமே இவ்வாறு முறைப்படி வந்தனர். தலைவன் வீட்டாரின் இவ்வகையான வருகையைக் கண்ட தோழி, தலைவியிடம் ஓடுகிறாள். முறைப்படி அவர்கள், முன்னேற்பாட்டுடன் வந்திருப்பதைத் தெரிவிக்கிறாள். ‘உனது மேனியிலுள்ள பசலை நீங்கும் காலம் வந்து விட்டது. இனி தலைவன் முன்னறிவிப்பின்றிப் பெண்கேட்டும் வந்ததும், தந்தை மறுத்ததும் ஊரார் பேசுவதற்குள் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு விட்டது, உனக்கு இனிமேல் மகிழ்ச்சிதான் உன் கவலைகள் உன்னை விட்டு முற்றிலும் நீங்கட்டும். உன் கண்களில் இன்பம் நிறையட்டும். முன்பு போல் அழகு பெற்று விளங்கட்டும் என வாழ்த்துகிறாள்.



கபிலரின் குறிஞ்சிக்கலி - 3

'காமர் கடும் புனல் கலந்து எம்மோடு ஆடுவாள்,
தாமரைக்கண் புதைத்து, அஞ்சித் தளர்ந்து, அதனோடு ஒழுகலான்,
நீள் நாக நறுந் தண் தார் தயங்கப் பாய்ந்து, அருளினால்,
பூண் ஆகம் உறத் தழீஇப் போத்தந்தான் அகன் அகலம்
வரு முலை புணர்ந்தன என்பதனால், என் தோழி
5
அரு மழை தரல் வேண்டின் தருகிற்கும் பெருமையளே;
அவனும்தான், ஏனல் இதணத்து அகிற் புகை உண்டு இயங்கும்
வான் ஊர் மதியம் வரை சேரின், அவ் வரை,
'
தேனின் இறால்' என, ஏணி இழைத்திருக்கும்
கான் அகல் நாடன் மகன்;
10
சிறுகுடியீரே! சிறுகுடியீரே!
வள்ளி கீழ் வீழா; வரைமிசைத் தேன் தொடா;
கொல்லை குரல் வாங்கி ஈனா மலை வாழ்நர்
அல்ல புரிந்து ஒழுகலான்;
காந்தள் கடி கமழும், கண் வாங்கு, இருஞ் சிலம்பின்
15
வாங்கு அமை மென் தோட் குறவர் மட மகளிர்
தாம் பிழையார், கேள்வர்த் தொழுது எழலால், தம் ஐயரும்
தாம் பிழையார் தாம் தொடுத்த கோல்'
என ஆங்கு,
அறத்தொடு நின்றேனைக் கண்டு, திறப்பட
20
என்னையர்க்கு உய்த்து உரைத்தாள், யாய்;
அவரும் தெரி கணை நோக்கி, சிலை நோக்கி, கண் சேந்து,
ஒரு பகல் எல்லாம் உருத்து எழுந்து, ஆறி,
'
இருவர்கண் குற்றமும் இல்லையால்' என்று,
தெருமந்து சாய்த்தார் தலை
25
தெரியிழாய்! நீயும் நின் கேளும் புணர,
வரை உறை தெய்வம் உவப்ப, உவந்து
குரவை தழீஇ யாம் ஆட, குரவையுள்
கொண்டுநிலை பாடிக்காண்;
நல்லாய்!
30
நல் நாள் தலைவரும் எல்லை, நமர் மலைத்
தம் நாண் தாம் தாங்குவார், என் நோற்றனர்கொல்?
புன வேங்கைத் தாது உறைக்கும் பொன் அறை முன்றில்,
நனவில் புணர்ச்சி நடக்குமாம் அன்றோ;
நனவில் புணர்ச்சி நடக்கலும், ஆங்கே
35
கனவில் புணர்ச்சி கடிதுமாம் அன்றோ;
விண் தோய் கல் நாடனும் நீயும் வதுவையுள்
பண்டு அறியாதீர் போல் படர்கிற்பீர்மன் கொலோ;
பண்டு அறியாதீர் போல் படர்ந்தீர் பழங் கேண்மை
கண்டு அறியாதேன் போல் கரக்கிற்பென்மன் கொலோ;
40
மை தவழ் வெற்பன் மண அணி காணாமல்
கையால் புதை பெறூஉம் கண்களும் கண்களோ;
என்னை மன் நின் கண்ணால் காண்பென்மன், யான்
நெய்தல் இதழ் உண்கண் நின் கண் ஆக, என் கண் மன;
என ஆங்கு,
45
நெறி அறி செறி குறி புரி திரிபு அறியா அறிவனை முந்துறீஇ,
தகை மிகு தொகை வகை அறியும் சான்றவர் இனமாக,
வேய் புரை மென் தோட் பசலையும், அம்பலும்,
மாயப் புணர்ச்சியும், எல்லாம் உடன் நீங்க,
சேய் உயர் வெற்பனும் வந்தனன்
50
பூ எழில் உண் கணும் பொலிகமா, இனியே!

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்களைப் பதிவு செய்யலாமே?