நீரின்றி அமையாது உலகு.

முனைவர் ஜ.பிரேமலதா,தமிழ் இணைப்பேராசிரியர், அரசு கலைக் கல்லூரி, சேலம் 636 007 DR.J.PREMALATHA,ASSOCIATE PROFESSOR IN TAMIL,GOVT ARTS COLLEGE,SALEM -636 007.

Sunday 28 September 2014

ஆகாசப் பந்தலிலே பொன்னூசல் ஆடுதம்மா........


கலித்தொகை குறிஞ்சிக்கலி பாடல்-1

ஆகாசப் பந்தலிலே பொன்னூசல் ஆடுதம்மா........


தலைவியும் தோழியும் இணைபிரியாதவர்கள். ஒன்றாக உண்டு, உறங்கி விளையாடி மகிழ்பவர்கள். எங்கு சென்றாலும் ஒட்டிப்பிறந்த இரட்டையர்கள் போலப் பிரியாமல் செல்வார்கள். ஆனால், உள்ளம் ஒன்றாக இருக்குமா? என்னதான் ஒன்றாகப் பிறந்து ஒரே சூழலில் ஒரே மாதிரியாக வளர்ந்தாலும் எண்ணங்கள் வேறு வேறாகத் தானே இருக்கும்? இதோ இந்த தலைவிக்கும் தோழிக்கும் அதுதான் நிகழ்ந்தது. இது பருவம் செய்கிற வேலை. எப்போதும் கலகலப்பாக ஓடி விளையாடும் தலைவி, சில நாட்களாகத் தனிமையை நாடிச் செல்கிறாள். சரியாக உறங்குவதில்லை. உண்பதில்லை. எதையோ பறிகொடுத்தவர் போல் மோட்டு வளையையே பார்த்துக் கொண்டிருக்கிறாள். தினைப் புனக் காவலுக்குச் சென்றாலும் முன்புபோல் சுறுசுறுப்பாக கவண்கல் வீசி பறவைகளை விரட்டுவதில்லை. எதிலும் பற்றற்று இருக்கிறாள். இணையாக இருக்கும் விலங்குகளையும், பறவைகளையும் பார்த்து பெருமூச்சு விடுகிறாள்.
தலைவி வாய்திறந்து எதுவும் சொல்லாமலே தோழிக்கு அனைத்தும் விளங்கிவிட்டது. எனினும், தலைவி தன் வாயால் வெளிப்படையாக எதையும் சொல்வதாகத் தெரியவில்லை. அவள் உடல் மேலும், மேலும் மெலிந்து கொண்டே செல்கிறது. முகமோ வாடியே இருக்கிறது. உயிர்த் தோழியின் இந்நிலையை காணச்சகிக்க முடியாத தோழி ஒரு நாடகம் ஆடுகிறாள்.
என்ன நாடகம் தெரியுமா? தலைவியிடம், ‘நான் உன்னிடம் ஒரு நிகழ்ச்சியைக் கூறப் போகிறேன். நன்றாகக் கேள்என்று கூறத் தொடங்குகிறாள்.
 தலைவி கூறுவதைப் போலவே பாவித்துக்கொண்டு, சொல்லத் தொடங்குகிறாள். ""ஓர் இளைஞன். மிகுந்த அழகுடையவன்.  அழகான மாலைகளை, நன்றாகத் தொடுத்து, தன் மார்பில் அணிந்து கொண்டிருப்பவன். எப்போதும் அவன் கையில் வில்லும் அம்பும் இருக்கும். நாம் தினைப் புனக் காவல் செல்லும் போதெல்லாம், அந்தப் பக்கம் அடிக்கடி வந்து, இந்த வழியாக வந்த மானைப் பார்த்தீர்களா, அந்த வழியாக யானையைப் பார்த்தீர்களா என்று வினவுவான். வினவும்போது என்னை ஒருவிதமாக நோக்குவான். அப்போது மட்டும் நோயுற்றவன் போல் தென்படும் அவன் எதையும் வெளிப்படையாகக் கூறமாட்டான். நான் உணரவேண்டிய குறிப்பு ஒன்றை தன் கண்களில் தேக்கியபடியே அங்கிருந்து சென்று விடுவான். மீண்டும் வருவான். அவன் குறிப்பை நான் உணர வேண்டும் என, மீண்டும் என்னை நோக்குவான். இது ஒரு நாளல்ல, இரு நாளல்ல. பல நாட்கள் இது தொடர்ந்தபடியே இருந்தது.
எவ்வகையிலும் உறவில்லாத அவனது துயர் கண்டு, நானும் துயரமடைந்தேன். அன்றிலிருந்து என்னை விட்டு தூக்கம் சென்றுவிட்டது. படுத்தால் தூக்கம் வருவதில்லை. அவனை நினைத்து ஏற்பட்ட வருத்த மிகுதியால் உண்ணவும் பிடிக்கவில்லை. முன்பின் தெரியாத அவனுக்காக நான் துன்பக்கடலில் விழுந்தேன். அவனோ வாய் திறந்து ஒன்றும் சொல்ல மறுக்கிறான். நானே அவனிடம் சென்று வெளிப்படையாகக் கேட்டு விடலாம் என்றாலோ? நாணம் தடுக்கின்றதே. அவன் குறை என்னவென்று எப்படிக் கேட்பது?
இப்படிக் கேட்காமலே விட்டுவிட்டால், என் உள்ளம் அறியாமல் அவன் இறந்துவிட்டால்? அல்லது வராமலே இருந்துவிட்டால் என்ன செய்வது?
இந்நினைவுகளினால் நான் தடுமாறித் தவித்தேன். அவனை நினைக்க நினைக்க மேலும் துன்பம் தான் அதிகமாயிற்று. இதனால் என் தோள்கள் மெலிந்து போயின. இத்துன்பத்தைத் தீர்க்க ஒரு நாணமற்ற செயலைச் செய்யத் துணிந்தேன். அது என்ன தெரியுமா?
நாம் தினைப் புனக் காவல் புரியும் இடத்திற்கு அருகில் ஒரு சோலை உள்ளதல்லவா? அந்த சோலைக்கு நீ அறியாமல் சென்றேன். அந்த இடத்தில் மரத்தில் கட்டப்பட்டிருந்த ஒரு ஊஞ்சலில் அமர்ந்து, அவன் வருகையை எதிர்பார்த்து ஆடிக்கொண்டிருந்தேன். நான் நினைத்தது போல அன்றும் கையில் வில்லோடு ஒரு மானைத் தேடியபடி அவன் வந்தான். இந்தப்பக்கம் நான் துரத்தி வந்த மான் வந்ததாஎன்று என்னைக் கேட்டான். நானோ, ‘மானைத் தேடுவது இருக்கட்டும். இந்த ஊஞ்சலை சற்று ஆட்டிவிடக் கூடாதாஎன்று கேட்டேன். அவனும் ஒப்புக் கொண்டு ஊஞ்சலை ஆட்டிவிட்டான். அவ்விதம் அவன் ஆட்டியபோது, நான் ஊஞ்சலின் வேகத்தினால், தலைசுற்றுவதுபோல் நடித்து அவன் மார்பின்மேல் மயக்கமுற்று வீழ்ந்தேன். ஊஞ்சலைப் பிடித்திருந்த பிடியை விட்டு விட்டு அவன் தோள்களைத் தழுவியபடிக் கிடந்தேன். அவனும் நான் உண்மையாகவே மயங்கி விட்டதாகக் கருதி என்னை வாரி அணைத்துக் கொண்டான். நானும் மயக்கமடைந்தவள் போல் நடித்தேன். ஏன் தெரியுமா? நான் விழித்து எழுந்தால், உடனே அவன் என்ன செய்திருப்பான் தெரியுமா?  கேள். இதிலிருந்து அவன் எப்படிப்பட்டவன் என்பது தெரிந்து விடும்.
ஒருவேளை நான் விழித்து எழுந்திருந்தால், என்னை அவனுடைய அணைப்பிலிருந்து விலக்கி, ‘பெண்ணே, நீ உன் வீட்டிற்குச் செல்என்று என்னை அனுப்பியிருப்பான். அத்தகைய உயர்ந்த பண்புடையவன். எனவேதான், மயக்கமுற்றவள் போல் நடித்து, அவன் அணைப்பிலேயே கட்டுண்டு கிடந்தேன். அன்று ஆடிய ஊஞ்சல் ஆட்டம் தான் இன்று என்னை இப்படி பாடாய்ப் படுத்திக் கொண்டிருக்கிறது. என் மனம் அந்த ஊஞ்சல் நினைவுகளிலேயே ஆடிக் கொண்டிருப்பதால்தான், இன்று இப்படி மெலிந்து போய்க் கொண்டு இருக்கிறேன்."" என்று தோழி தலைவியாக மாறி, தலைவி கூறுவதைப் போல ஒரு நிகழ்ச்சியை விவரித்துத் தலைவியிடமே கூறுகிறாள்.
தலைவி தன் நிலைக்கான காரணத்தைச் சொல்லாமல் போனாலும் அவளுடனே இருக்கும் தான் ஊகித்து அறிந்து கொண்டதை இவ்வாறு மறைமுகமாகத் தெரிவிக்கிறாள்.


கய மலர் உண்கண்ணாய்! காணாய் ஒருவன்
வய மான் அடித் தேர்வான் போல, தொடை மாண்ட
கண்ணியன் வில்லன், வரும்; என்னை நோக்குபு,
முன்னத்தின் காட்டுதல் அல்லது, தான் உற்ற
நோய் உரைக்கல்லான் பெயரும்மன், பல் நாளும்;
5
பாயல் பெறேஎன், படர் கூர்ந்து, அவன்வயின்
சேயேன்மன் யானும் துயர் உழப்பேன்; ஆயிடைக்
கண் நின்று கூறுதல் ஆற்றான், அவனாயின்;
பெண் அன்று, உரைத்தல், நமக்காயின்; 'இன்னதூஉம்
காணான் கழிதலும் உண்டு' என்று, ஒரு நாள், என்
10
தோள் நெகிழ்பு உற்ற துயரால் துணிதந்து, ஓர்
நாண் இன்மை செய்தேன் நறுநுதால்! ஏனல்
இனக் கிளி யாம் கடிந்து ஓம்பும் புனத்து அயல்,
ஊசல் ஊர்ந்து ஆட, ஒரு ஞான்று வந்தானை,
'ஐய! சிறிது என்னை ஊக்கி' எனக் கூற,
15
'தையால்! நன்று! என்று அவன் ஊக்க, கை நெகிழ்பு
பொய்யாக வீழ்ந்தேன், அவன் மார்பின்; வாயாச் செத்து,
ஒய்யென ஆங்கே எடுத்தனன் கொண்டான்; மேல்
மெய் அறியாதேன் போல் கிடந்தேன்மன்; ஆயிடை
மெய் அறிந்து ஏற்று எழுவேனாயின், மற்று ஒய்யென,
20
'ஒண்குழாய்! செல்க' எனக் கூறி விடும் பண்பின்
அங்கண் உடையன் அவன் 

நூல் - கலித்தொகை 
பாடல் - குறிஞ்சிக்கலி - 1
பாடியவர் - கபிலர்
கூற்று -தோழி கூற்று 

இங்கு தோழி தலைவி இருவருக்குமுள்ள நெருக்கமும், ஒருவருக்கு நடப்பதை மற்றவர் எப்படியாவது அறிந்துகொள்ளும் சூழலும், ஒருவர் துயரை மற்றவர் எப்படியாவது களைய எடுத்துக்கொள்ளும் முயற்சியும், தலைவி தன் காதலைச் சொல்லாமல் போனாலும் தோழி இப்படித்தான் நடந்திருக்கும் என ஊகித்து எடுத்துரைக்கும் பாங்கும், நாடகத்திற்குள் ஒரு குட்டி நாடகம் நடத்திக் காட்டியிருக்கும் குறிஞ்சிக் கபிலரின் புலமையும் இப்பாடலைச் சுவை மிக்கதாகச் செய்துள்ளது. இப்படிப்பட்ட சிறு நிகழ்ச்சிகளை ஒரு கதை போலச் சொல்வது தான் கலித்தொகையின் சிறப்புகளாகும்.


2 comments:

  1. சிறந்த பதிவு
    தொடருங்கள்

    ReplyDelete
  2. நல்ல பதிவு, மூலப் பாடலையும் பதிவிட்டால் பலருக்கு கலித்தொகையின் சிறப்பை உணரவும், ரசிக்கவும் உதவும்.

    ReplyDelete

உங்கள் கருத்துக்களைப் பதிவு செய்யலாமே?