
இவர் வாசகங்களுக்கு இன்பமளிப்பதை நோக்கமாகக் கொண்டு மேலோட்டமாக எழுதும் எழுத்தாளரல்ல. ஆழமான மனஉணர்வுகளையும், வாழ்வின் உண்மைகளையும் கருக்களாகத் தம் சிறுகதைகளில் எடுத்துக் கொண்டுள்ளார். மனிதனின் மேன்மைகளை, உயர்பண்புகளை இலட்சியங்களை மட்டுமன்றி அவனது குறைகளை, சிறுமைகளை, மனித சமூக அவலங்களை தன் கதைகளில் சித்தரித்துக் காட்டியுள்ளார். மண்ணின் மணம் கமழப் படைக்கப்படுகையில்தான் கதை உயிர்த்தன்மை பெறுகிறது என்பது இவரது கதைகளில் வெளிப்படுகிறது. பொழுது போக்கை மட்டும் அடிப்படையாக வைத்து இதழ்களின் அசுர வளர்ச்சிக்குத் தீனி போடும் சிறுகதை ஆசிரியர்கள் மத்தியில் சமூக அக்கறை கொண்டு சமூக அவலம், தனி மனித அவலம் இவற்றை எழுத்தின் பொருளாகக் கொண்டு படைப்புகளை மேற்கொண்டுள்ளார்.
நாட்டுப்புறமானாலும், நகர்ப்புறமானாலும், பெருநகர நவநாகரிகம் சூழ்நிலையானாலும் நம் நாட்டைப் பொறுத்தவரை பொருளடிமைத்தனம்
நிறைந்த சூழ்நிலையிலேயே பெண்கள் மூழ்கியிருக்கிறார்கள். வரதட்சணை என்பதும், ஜாதகம் பார்த்தல் என்பதும் பெண்கள் தொடர்பான சிக்கல்கள் மட்டும் அல்ல.
அவையிரண்டும் சமூகச் சிக்கல்கள் என்பதை தகடூரான் தன் சிறகதைகளில் ஆழமாக
வெளிப்படுத்தியுள்ளார். ஆணுக்கு ஒரு நீதி பெண்ணுக்கு ஒரு நீதி என்ற பழைய மரபு மாறி
தீமையை எதிர்த்துப் போராடுபவளாக உரிமைக்குக் குரல் கொடுப்பவளாக
""பெண்"" என்ற சிறகதை படைக்கப்பட்டுள்ளது. அதேசமயம் வரதட்சணை
கேட்காத, ஆண்களும் உண்டு என்பதை ""நெஞ்சில் நிறைந்தவள்""
காட்டுகிறது. மாமியார் மருமகள் சிக்கல் இவ்வுலகம் தோன்றியது முதல் உள்ள சிக்கல்.
இதை மிக நுட்பமாக கதைகளில் கருவாக்கி தீர்வு கூறியுள்ளார். இதை
""மாமியார்"", ""சொல்லியா
தெரியணும்"",
""அது அப்படித்தான்"", ""விருந்தும் மருந்தும்"" முதலான கதைகள் சுட்டுகின்றன.
பெரியவர்கள்தான் அன்பு என்கிற மாயமந்திரத்தின் மூலம் குடும்பத்தை வழி நடத்த
வேண்டும் என்றும், மருமகளிடம் மாமியார் நடந்து கொள்ள வேண்டிய முறை பற்றியும் இக்கதைகள்
காட்டுகின்றன. யாரும் அனாதை இல்லை என்பதை ""அந்தக் கேள்விக்கென்ன
பதில்"" உணர்த்துகிறது. நல்ல விசயங்களை தொடர்ந்து கேட்பதால் மனம்
பண்படும் என்பதை ""கதையின் முடிவு"" சுட்டுகிறது. பொது
இடங்களில் நடந்து கொள்ள வேண்டிய முறை குறித்து ""நமக்கு எதுக்குங்க
வம்பு"" கதையும்,
ஆண்பெண் நட்பு குறித்து ""கடைசி
பக்கம்"" கதையும் உணர்த்துகிறது. வர்க்க சமூகக் கொடுமைகளால்
சூறையாடப்பட்டு பறிக்கப்பட்ட மனித நேயத்தை மீண்டும் மனிதனுக்கு மீட்டுத் தருகிற
தனக்கேயுரிய தனித்தன்மையோடு தகடூரான் கையாண்டுள்ளார். படைக்கப்பட்ட சிறகதைகள் பல
வருடங்களுக்குப் பிறகும் வாழ்க்கைச் சம்பவங்களால் வழிகாட்டியாய்த் திகழ வேண்டும்.
தகடூரானின் சிறகதைகளில் சமூகத்தைவிட குடும்ப உறவுகளின் உன்னத மேன்மைகளே பெரிதும்
படம் பிடித்துக் காட்டப்பட்டுள்ளன. அரசியலில் இறங்குபவர்கள் அரசியல் செய்வதையே ஒரு
தொழிலாகக் கொண்டிருப்பதை ""இவர்கள்"" கதை காட்டியுள்ளது.
புரையோடிய புண்ணில் அழுகிப் போன பகுதிகளை நீக்க வேண்டியது காலத்தின் கட்டாயம்
என்பதை இவரது கதைகள் நயமாக எடுத்துரைத்துள்ளன. சிறுகதைகளின் தலைப்புகள் சிறியதாக, மிகப் பொருத்தமாக அமைக்கப்பட்டிருப்பது கதையை நினைவில் நிறுத்த உதவுகிறது.
தகடூரானின் சிறுகதைகள் மனிதரை பண்பாட்டுத் தளத்தில்
மேன்மைப்படுத்தும் முயற்சியில் ஒரு மைல்கல் எனலாம்.

No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்களைப் பதிவு செய்யலாமே?