நீரின்றி அமையாது உலகு.

முனைவர் ஜ.பிரேமலதா,தமிழ் இணைப்பேராசிரியர், அரசு கலைக் கல்லூரி, சேலம் 636 007 DR.J.PREMALATHA,ASSOCIATE PROFESSOR IN TAMIL,GOVT ARTS COLLEGE,SALEM -636 007.

Friday 15 August 2014

இது நிகழாதிருக்கலாம் – கவிதை நூல் அறிமுகம்


 
இது நிகழாதிருக்கலாம் நூல் அறிமுகம்

இது நிகழாதிருக்கலாம் கவிதைத் தொகுப்பு குறித்து...... எழுத்தாளர் திரு. வையவன் அவர்கள் நடத்தும் சென்னை தாரிணி பதிப்பகம்தமிழ்ச்செல்வி அவர்களின் இது நிகழாதிருக்கலாம் கவிதைத் தொகுப்பை ஒரு நூலாக வெளியிட்டுள்ளது.
            
தமிழ்ச்செல்வியின் இது நிகழாதிருக்கலாம் கவிதைத் தொகுப்பிலுள்ள கவிதைகள் காதல் கவிதைகள். இத்தொகுப்பிலுள்ள கவிதைகள் வாழை மட்டையில் அமர்ந்து சறுக்கிக் கொண்டு போவதைப்போல நம்மை இழுத்துக்கொண்டு செல்கின்றன. மன உணர்வுகளை மிக மிக இயல்பாக தயக்கம் எதுவுமின்றி வெளிப்படுத்தும் விதம் தமிழ்ச்செல்வியின் காதலின் தூய்மையை, அதில் அவர் கொண்டிருந்த தெளிவினை உணர்த்துகின்றன.

           காதலின் வலியில் கூட காதலையே வெளிப்படுத்துகிறார். வருத்தத்திலும் காதல். வேதனையிலும் காதல். என எங்கும் காதல் காதல் காதல் தான். வற்றாத ஜீவநதியாய் அவருக்குள் ஊற்றெடுத்துக்கொண்டிருக்கும் காதல் பிரிவில், புறக்கணிப்பில் கூட தன்னிரக்கம் கொள்ளாமல் நேர்மையாகவே வெளிப்படுகிறது.
எல்லாக் காதல்களும் பிரிவில் வலிகளையே தந்து செல்கின்றன. அதே சமயம் வலிமையையும் தந்து செல்கின்றன என்பற்கான சாட்சியாய் தமிழ்ச்செல்வியின் கவிதைகள் உள்ளன. இன்றைக்கு கட்டுடைத்தல் என்பது வெகு இயல்பாக இலக்கியத்திலும் வாழ்க்கையிலும் நிகழ்த்தப்பட்டுவருகிறது.


         சங்க காலத்திலேயே மிக தெளிவோடு. உறுதியோடு. ஔவையார் பாடலில் தலைவி ஒருத்திமுட்டுவேன் கொல் தாக்குவென்கொல் என் காமநோயை அறியாது துஞசும் ஊர்க்கேஎன ஆவேசமாக காமத்தை தணிக்க இயலாத நிலையில் தலைவனையும் ஊரையும் சாடுவாள். ஆண்டாளும் கற்பூரம் நாறுமோ கமலப்பூ நாறமோ செம்பவள வாய்தான் தித்திருக்குமோஎன கண்ணனின் மீது கொண்ட காதலை காமத்தை வெளிப்படுத்துவாள். இதுதான் இயல்பு.


                  தமிழிலக்கியத்தல் காதல் என்ற சொல்லுக்கு மாதர் என்றுதான் பொருள். மாதரே காதலாக இருக்கும் போது அதை வெளிப்படுத்துவதற்கு பிற்காலத்தில்தான் எத்தனை தடங்கல்கள்? காதல் உள்ள இடத்தில் காமம் இருப்பது இயல்புதானே? அது ஒரு இயல்பான செயல்.ஆனால் பெண்ணுக்கு மட்டும் பலதேவையற்ற கட்டுப்பாடுகளை விதித்து எதையும் வெளிப்படுத்த விடாமல் அவளை எதுவுமற்றவளாக இச்சமூகம் செய்து கொண்டிருக்கிறது. இப்போது அதை உடைத்துக்கொண்டிருக்கிறோம். ஆனால் உடைக்கும் பெண்களை பெண்களே புரிந்து கொள்வதில்லை.ஏன் மரபுத் தளைகளால் கட்டப்பட்டிருக்கிறோம் என்ற உணர்வு கூட பலரிடம் இல்லை.
                    கரை புரண்ட வெள்ளம் தடைகளை பொருட்படுத்தாது, முன்னேறிக் கொண்டே சென்று தனக்கான ஒரு புதிய பாதையை ஏற்படுத்திக்கொள்வதைப்போல தமிழ்ச்செல்வியும் புதிய பாதையை தனக்கென ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார். காதலைகாதலினால் உள்ளம் பெற்ற உயர்வை,நேசத்தின் புரிதலில் - பகிர்வில் உயிர்கள் பெறும் ஆனந்தத்தை, காதலிக்கும் போது ஏற்படும் சிறு சிறு நிகழ்ச்சிகளில் தங்கிவிடும் நினைவுகளை , பிரிந்த பின்னும் கூட மகிழ்ச்சியாக இருந்த தருணங்களை நினைத்து நெகிழ்ந்து விடும் மனதை மிக அழகாகப் பதிவு செய்துள்ளார். என்னை நிரூபித்தலிலேயே இனிதான காலம் கடந்து போகாமல் ”----உலகிலுள்ள எல்லாப் பெண்களின் பிரதிநிதியாகவும்  இவவிடத்தில் மாறிப் போகிறார். பெண்ணின் வாழ்வே தன்னை தொடர்ந்து தூய்மையானவள் என நிரூபித்துக் கொண்டிருப்பதிலேயே கடந்து போய்விடுகிறது.
      எவ்வளவு யதார்த்தம் இவ்வரிகளில்! அவர் முன்னுரையில்  சொல்வதுபோல காதல் ஒவ்வொரு நாளும் புதுப்பிக்கப்படுமானால், நண்பன் காதலன் கணவன் என்ற முப்பரிமாணங்கள் ஒருவனுக்குள் இருக்குமானால் இருவரும் இறுதிவரை மகிழ்ச்சியாக வாழமுடியும். இந்த மகிழ்ச்சி அவனுக்கும் சேர்த்துத்தான் அவனிடமே யாசிக்கப்படுகிறது. அது மறுக்கப்படும் போது தமிழ்ச்செல்வி சொல்வது போல....

“அடுத்த வாசலின் வழி 
வலிகளின் உயிர்ப்பில் 
ஒளிர்கிறது வெற்றியின் விதை.........”

இக் கவிதைகள் பெண்ணியம் பேசவில்லை....
புலம்பவும் செய்யவில்லை....
.மாறாக வலிகளை வலிமையாக மாற்றிக் கொண்ட ஒரு அன்பான இதயத்தின் உயிர்த்துடிப்பை பதிவு செய்திருக்கிறது...............
நல்ல கவிதைகளைப் படித்ததின் நிறைவோடு.....

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்களைப் பதிவு செய்யலாமே?