நீரின்றி அமையாது உலகு.

முனைவர் ஜ.பிரேமலதா,தமிழ் இணைப்பேராசிரியர், அரசு கலைக் கல்லூரி, சேலம் 636 007 DR.J.PREMALATHA,ASSOCIATE PROFESSOR IN TAMIL,GOVT ARTS COLLEGE,SALEM -636 007.

Thursday 12 December 2013

ஆனந்தாயி காட்டும் குடும்ப உறவுகளில் பெண் நிலை









 ஆனந்தாயி காட்டும் குடும்ப உறவுகளில் பெண் நிலை


 

முன்னுரை


 

 குடும்ப அமைப்பில் குழந்தை வளர்ப்பு, திருமணம், வாழ்க்கை, தாய்மை என்று பலதரப்பிலும் பெண் அடக்கப்பட்டு ஒடுக்கப்படுகிறாள். குடும்ப அமைப்பின், மரபுக் கண்ணோட்டத்தாலும், சமுதாய நெருக்கடியாலும், பொருளாதார நிலையினாலும், பெண் பல்வேறு சிக்கல்களைச் சந்திக்கின்றாள்.
பெண்ணியக் கருத்துக்கள் உலகெங்கும் பேசப்பட்டு வரும் இந்நாளில், குடும்ப உறவுகளில் பெண் நிலையைப் பற்றி அறிய வேண்டியது அவசியமாகிறது. ஆனந்தாயி நாவல் காட்டும் குடும்பமானது, இன்று பல இடங்களில் நாம் காணும் ஒரு குடும்ப அமைப்பே ஆகும். ஆசிரியர் காட்டும் அத்தனை குணாம்சங்களும் பொருந்திய குடும்பங்கள் சில தான் என்றாலும், அவர் குறிப்பிடும் பல அம்சங்கள் பெரும்பாலான குடும்பங்களில் நிலவி வருகிறது என்பதை யாரும் மறுக்கவியலாது.

குடும்பம்

ஒரே கூரையால் பாதுகாக்கப்பட்ட இதயங்களின் இணைப்பு ஒரு குடும்பமாகும். அன்பு, பரிவு, பாதுகாப்புணர்வு, ஒன்றுபட்டு வாழ்வது, சகிப்புத் தன்மை ஆகியவற்றின் உறைவிடம் குடும்பம் என்பது குடும்பததைப் பற்றிய பொதுவான கணிப்பாகும்.
ஆனால், தந்தை வழிச் சமுதாயத்தில் சொத்துரிமை பெற்ற ஆண் ஆதிக்கம் செலுத்துபவனாகவும், தலைமை சார்ந்தவனாகவும், விளங்குகிறான். சொத்துக்களைத் தனியுடைமையாக்கப், பெண்ணிற்குக் கற்புக் கோடடை விதித்து வீட்டிற்குள் பூட்டினான், அடக்கி தன் கட்டுக்குள் வைத்துக் கொண்டான்.

மேலும் வாசிக்க...

அன்பு செலுத்துதல், விட்டுக் கொடுத்தல், உரிமை கொடுத்தல் போன்ற நிலையிலிருந்து விலகி, பொருளுரிமை பெற்ற முதலாளியாக தன்னைக் காட்டிக் கொண்டான். ஒருபுறம், கற்பைக் காரணம் காட்டி, பாதுகாப்பு என்ற பெயரில் பெண்ணைக் கட்டுப்படுத்தினான்.
மறுபுறம் பொருளுரிமையினால் போகப் பொருளாக்கினான். இதனால் குழந்தை வளர்ப்பிலும் வேறுபாடுகள் காட்டப்பட்டன. இன்று குடும்பம் என்றாலே, சண்டை சச்சரவு, ஆணின் சர்வாதிகாரம், ஆணின் தவறுகள் தண்டிக்கப்படாமல் போற்றப்படல்,  பெண் எனில் சுமைதாங்கி, மனைவி எனில் மிதியடி என்ற நிலைகளே பெரும்பாலும் நிலவி வருகின்றன. குடும்பம் என்றாலே அடங்கிய அம்மாவும், அடக்கும் அப்பாவும் என்று தானே பல குழந்தைகளுக்குச் மறைமுகமாகச் சொல்லித் தரப்படுகிறது.

ஆனந்தாயி காட்டும் குடும்ப அமைப்பு

    ஒவ்வொரு ஆணும் தான் வீட்டிலிருந்தாலும், இல்லாவிட்டாலும் தன் ஆதிக் கமே தன் குடும்பத்தில் நிலவ வேண்டுமென்று விரும்புகிறான். காண்டிராக்ட் எடுத்தல் மற்றும் உழவுத்தொழில் செய்யும் பெரியண்ணன், மனைவி ஆனந்தாயியை பிள்ளை பெறும் இயந்திரமாகவும் பொருள் அடிமையாகவும் கருதுகிறான். மனைவி பிரசவித்திருக்கும் நிலையிலும் பல பெண்களோடு தன் வீட்டிலேயே தொடர்பு கொள்கிறான். தட்டிக் கேட்கும் மனைவியை நிறைமாத கர்ப்பிணி என்றும் ஐந்து குழநதைகளுக்குத் தாய் என்றும் நினையாமல் எட்டி உதைக்கிறான்.
பல பெண்களோடு ஊர் சுற்றும் பெரியண்ணன், வீட்டிற்கே பெரும்பாலும் வருவதில்லை. வீட்டிற்கு வரும்பொழுது தன் தவறை பலவீனத்தை மறைக்க மனைவி குழந்தைகளின் செயல்களில் தவறு கண்டுபிடித்து அடித்து துன்புறுத்துகிறான். தான் எத்தனை தவறு செய்தாலும் அது தவறாகவே நினைக்கப்படக் கூடாது என்றும் யாரும் கேள்வி கேட்டுவிடக்கூடாது என்றும் நினைக்கும் ஆணாதிக்கப் போக்கின் செயல்பாடுதான் வீட்டிற்கு வந்தவுடனே மனைவியை காரணமின்றி அடிப்பதற்கும் குழந்தைகளை மிரட்டுவதற்கும் தூண்டுகிறது என்றுணரலாம். தானே அக் குடும்பத்தின் தலைவன் என்பதை மீண்டும் மீண்டும் நிலைநாட்டும் முயற்சியே அது என்றாலும் மிகையாகாது.
தன் பலவீனத்தை மறைக்க ஆதிக்கத்தை நிலைநாட்ட பெண்களை துன்புறுத்துபவர்களாக, இந்நாவலில் வரும் பெரியண்ணன், அவன் தந்தை, மகன் மணி, வடக்கத்தியான் போன்றோர் காணப்படுகின்றனர். அதேபோல் தாய், மனைவி, மகள் என்று அனைத்துத் தரப்புப் பெண்களும் கணவனிடமும் மகனிடமும் அடி வாங்குபவர்களாக உள்ளனர். குடும்ப அமைப்பில் ஆண் உயர்வாகவும் பெண் தாழ்வாகவும் வளர்க்கப்படுவதே இதற்குக் காரணம்.

பெண் அடங்கல்

    பெண் ஆணுக்காகவே பிறந்தவள். ஆணிற்கு அடங்கி நடக்கவே பிறந்தவள் என்ற மனோபாவமும் அவளுடைய அனைத்து சிக்கல்களுக்கும் காரணம். பெண்ணாகப் பிறந்தவள் அடக்க ஒடுக்கமாகவே இருக்க வேண்டும்.
‘பொம்பளையாப் பொறந்துட்டா வாயடங்கி கைமடங்கித் தான் போவணும்’ என்று தாயும் (ப.307) 1வாயடங்கி கையடங்கி இருந்தா, புருஷன் எதுக்கு அடிக்கிறான் என்று தந்தையும் ,(ப-310) ‘அவன் வீட்ல இல்லே என்னா கொம்மாளம் போட்றாளுவ’ என்று பாட்டியும் (ப-257) பெண்கள் ஆண்களுக்கு அடங்கவே பிறந்தவர்கள் என்பதை இக்கதையில் அறிவுறுத்துகிறார்கள்.
நிறைமாத கர்ப்பிணி என்றும் பாராது உதைத்துத் துன்புறுத்திய கணவனை தான் உயிரோடு இருக்கிறோமா என்பதைப் பற்றிக் கவலைப்படாத கணவனைப்பற்றி கூறும்பொழுது ஆனந்தாயி, ‘அவரை கவனிக்கத்தான் ஏழாளு வேணுமே’ என்று பெருமை பொங்கப் பேசுகிறாள். காலங்காலமாக ஆண் உயர்வாகவும், பெண் தாழ்வாகவும் கருதப்பட்டும், நடத்தப்பட்டும் வந்த விளைவுகளின் எதிரொலியே பெண் தனனை தாழ்த்தி ஆணை உயர்த்திப் பேசக் காரணமாயிற்று. மேலும், ஆணின் பக்கம் தவறிருந்தாலும், பெண்ணின் பக்கம் தவறிருந்தாலும் பெண்தான் அடங்கிப் போக வேண்டுமென்று குடும்ப அமைப்பே கற்றுக் கொடுக்கிறது.
 எதிர்பார்ப்புகள், ஆசைகள், அவசியத் தேவைகள் எதுவாக இருந்தாலும் அவை பெண்ணென்ற காரணத்திற்காகவே மறுக்கப்படுகின்றன. உணர்வுகள் மறைக்கப்பட வேண்டியவை என்று கட்டாயப்படுத்தப்படுகின்றன.
    ‘ஆம்பிளப் பயக்கிட்டபோய் புஸ்தகம் வாங்கிட்டு வர்ற அளவுக்கு ஒனக்கு தகிரியம் யாருடி குடுத்தது’ என்று புத்தகம் வாங்கிப்படிக்கும் மகளையும் சைக்கிள் ஓட்டக்கற்றுக் கொள்ளும் மகளைக் கண்டதும் அவளைக் கவனிக்காமல் விட்ட காரணத்திற்காக மனைவியையும் மூர்ச்சையாகிப் போகும் வண்ணம் அடிக்கிறான் பெரியண்ணன்.

திருமணம்

    யாரைத் திருமணம் செய்ய வேண்டுமென்பதும், எப்படி குடும்பம் நடத்த வேண்டுமென்பதும் ஆணின் விருப்பத்திற்குட்பட்டவையே. தன் விருப்பத்தை மட்டுமல்ல, விருப்பமின்மையை தெரிவிக்கக்கூடப் பெண்ணுக்கு உரிமையில்லை. தனக்கு மாப்பிள்ளை பையனைப் பிடிக்கவில்லை என்று கூறும் மகளிடம் ‘இவ குடும்பம் நடத்தப் போறாளா இல்ல விபச்சாரம் பண்ணப் போறாளா? மாப்ள புடிக்கலியாமே. . . . இன்னொரு தடைவ சொல்லிப் பாக்கட்டும், ஆயி மவ இரண்டு பேத்தையும் பலி கொடுத்துடுவேன்’ (2-141 )என்று அடக்குகிறான் தந்தை.
மற்றொரு மகள், தன் சக மாணவனிடம் பேசிக் கொண்டிருந்ததைக் கண்ட தந்தை, அவளை முச்சந்தியிலேயே அடிக்கிறான். வீட்டிற்குள் இழுத்து வந்து, பட்டியில் அடைத்து தன் மகன் மணியை விட்டு உதைக்கச் சொல்லி தண்டனை தருகிறான். """"அவள் பிறந்ததிலிருந்து ஒவ்வொரு பருவத்திலும் ஒவ்வொரு ஆணுக்கு அடிமையாக இருக்கிறாள்"""" என்பது ஜெயகாந்தன் அவர்களின் கருத்து.
    திருமணத்திற்குப் பின்னும் கணவனால் கொடுமைப்படுத்தப்படுபவர்களாக ஆனந்தாயி, தனம், கலா, அருள், வடக்கத்தியாள் போன்றோர் உள்ளனர். வடக்கத்தியாள் தன் கணவனைப்பற்றிக் கூறும்பொழுது, ‘அது செத்தது ஒருக்கா மனது கஷ்டமாயிருந்தாலும், ஒருக்கா நிம்மதியாப் போச்சு’ என்கிறாள். பெண்களின் இயல்பான தாய்மைக் குணமும், இரக்க குணமும் ஆணின் அதிகாரத்தினாலும், குடும்பச் சுமையினாலும் மாற்றமடைவதைக் காண முடிகிறது.

ஆணின் கற்பு நெறி

    கற்பு-பெண்களுக்கே உரித்தான ஒரே சொத்தாக இச்சமூகம் விட்டு வைத்திருக்கிறது. பொதுவில் என்பத பேச்சளவில் தான். நடைமுறையில் ஒருதார மணமும், பரத்தை உறவும் பிரிக்க இயலாத தண்டவாளங்கள்.
    நான் நெனச்சேன்னா எத்தனை பொட்டச்சி எம்பின்னாடி வருவா தெரியுமா’ (ப-75) என்று கேட்கும் பெரியண்ணன், ஆறாவது குழந்தையை மனைவி பிரசவித்திருக்கும் நேரத்தில், மருத்துவச்சியையும் விட்டுவைக்கவில்லை. நிரந்தரமாகவே வைப்பாட்டியை வீட்டில் தங்க வைக்கிறான். தனக்காகவே வாழும் மனைவியை தரக்குறைவாக நடத்துவதோடு, சந்தேகம் கொண்டு அடித்து உதைக்கிறான். தான் வீட்டிற்கு வராத நாட்களில், நீ எவன்கூட கூத்தடிச்சே என்றும், வேலைக்காரனை அழைக்கும் முறையிலும் சந்தேகம் கொள்கிறான். இதுதான் கற்புக்கோட்பாடு.

உரிமையற்ற வாழ்க்கை

    ஆண் செய்யும் வேலைக்கு ஊதியமிருப்பதாலேயே அவன் உழைப்பு உயர்வாகவும், அதைவிடக் கடினமான வீட்டில் உழைத்தும் ஊதியமில்லாததாலேயே, பெண் உழைப்பு தாழ்வதாகவும் கருதப்படுகிறது. வருடந்தோறும் குழந்தைகளைப் பெற்றுக் கொண்டிருந்தாலும், காட்டிலும், வீட்டிலும் காலை முதல் இரவு வரை ஓய்வு ஒழிச்சலில்லாமல் பாடுபடுகிறாள் ஆனந்தாயி.
அவள் கணவனோ கூத்தியாக்களோடு சேர்ந்து, உல்லாசப் பயணம் செல்கிறான். பல நாட்கள் வீட்டிற்கே வருவதில்லை. ஆனால், நான் ராத்திரி பவல் வேலை செய்யாட்டினா, நீயும் ஒம்புள்ளைங்களும் எங்கருந்து சாப்டறுதுங்கறேன் (ப-123)’ என்றும் ‘ஊட்ல குந்திக்கிட்டுத் திங்கறவளுக்கு இந்தப் புள்ளைங்களைப் பாத்துக்கறதுக்கு வலிக்குதா’ (ப-122) என்றும் ‘இவ குந்திக்கிட்டு அழிச்சா’ (ப-146) என்றும், தன் உழைப்பையே உழைப்பாகக் கூறுகிறான். உதவி கேட்டு வந்தவருக்கு உணவிட்டதை பெருங்குற்றமாகக் கருதி அடித்து உதைக்கிறான். ஏழாவதாக உண்டானதை கலைக்க காசு கேட்கும்பொழுது மறுத்து விடுகிறான்.

ஆண்-பெண் வளர்ப்பில் வேறுபாடு

    குழந்தை வளர்ப்பில் பாகுபாடும் பாரபட்சமும்  காட்டப்படுவது குடும்பச் சூழலில் தான். குடும்பச் சூழலே, ஆண் குழநதையை உயர்வாகவும், பெண் குழந்தையைத் தாழ்வாகவும், கருதக் காரணமாகிறது’ அங்க யாரு சமையல் கட்ல ஒளியறது, வாடி இங்கே தொட்டிக்குத் தண்ணி எடுத்து ஊத்து’ (ப-180) என்று பெண் குழந்தையை  மிரட்டும் தகப்பன், பிராந்தி மயக்கத்தில் படுத்திருக்கும் மகனை ஒன்றுமே சொல்வதில்லை. மகள் சைக்கிள் விட்டதை அறிந்ததும், பெரும் குற்றமாகக் கருதி அடித்துவிடுவதோடு, தண்டனையாக பள்ளியை விட்டும் நிறுத்திவிடுகிறாள். ஆண் குழந்தையை விட்டே பெண் குழந்தையை அடித்து துன்புறுத்தி பெரியண்ணன் ஆணாதிக்கத்தை நிலை நாட்டுகிறான்.

பெண் ஒரு உடைமை

    தனது மனைவியையும், பெண் குழந்தைகளையும் வீட்டிற்குள் அடித்து ஒடுக்கும் பெரியண்ணன், பல பெண்களை வளைத்துப் போடவும், ஆளவும், நினைக்கிறான். வைப்பாட்டி லெச்சுமியை நிரந்தரமாக தன் வீட்டில் குடியேற்றுவதோடு, அவளையும் தன் உடைமையாக்கிய மிதப்பில் அடித்து துன்புறுத்துகிறான்.  சந்தேகம் கொண்டு  வீட்டிற்குள் பூட்டுகிறான். சித்ரவதைகளைத் தாங்காது அவள் பலமுறை பலரோடு ஓடியபோது தன் ஆண்மைக்கு இழுக்கு நேர்ந்து விட்டதாகக் கருதி, சொத்துக்களை விற்று அவளைத் தேடியலைகிறான். சொத்தைவிட பெண்ணை உடைமையாக்கிக் கொள்வதையே, ஆண்மையாக நினைப்பவனாக இருக்கிறான்.

குழந்தைப்பேறு

பெண்களின் இனப் பெருக்கத் திறமையே அவர்களைச் சமுதாயம் அடிமைப் படுத்துவதற்குரிய அடிப்படைக் காரணமாகும் என்கிறார் செ. சாரதாம்பாள். வருடந்தோறும் தொடர்ந்த குழந்தைப் பேறினால், கணவனின் போக்கைக் கண்டிக்க முடியாமலும் வீட்டு நிர்வாகத்தையும், குழந்தைகளையும் கவனிப்பதிலேயே நேரத்தை வாழ்க்கையை­ யும்  இழப்பவளாகவும் ஆனந்தாயி உள்ளாள். கணவனின் அடி உதை தாங்காமலும், சந்தேகத்தைத் தாங்கமாட்டாமலும் குடும்பத்தை விட்டே விலகிவிடலாமா என்று யோசிக்கிறாள். ஆனால் அவளால் யோசிக்க மட்டுமே முடிகிறது. """"நானுந்தான் இவருக்கு ஆறு புள்ளைங்களை பெத்துட்டு கொஞ்ச அடியா. . . நெனச்சாலே பதறுது, பெத்தது பெத்துட்டோம். க்ஷவளியில போனா, புள்ளைங்களுக்கு  மருவாதி  இல்லன்னு மருவி. . . .  இந்த வயசில உட்டுட்டுப் போனா நாலு சனம் காரித் துப்பும்"""" என சமூகத்திற்காகவும், குழந்தைகளுக்காகவும், தன்னை அடிமையாக்கிக்கொண்டு சித்ரவதை அனுபவிக்கத் தயாராகிறாள். இங்கு, வைப்பாட்டியாக வந்த வெச்சுமி, பெரியண்ணன், அடிக்கும்பொழுது எதிர்த்து அரிவாளைத் தூக்குகிறாள். பொறுக்க முடியாத பொழுது வீட்டை விட்டு ஓடி விடுகிறாள். ஆனால் குழந்தைகளின் காரணமாக கணவனிடம் அடங்கிப் போகிறாள் ஆனந்தாயி. தொடர்ந்த குழந்தைப்பேறு, கணவனை கட்டுப்படுத்த இயலாத நிலைக்கு மனைவியையும், மனைவியை வெறுக்கக் கூடிய அளவுக்கு கணவனையும் இட்டுச் செல்வதை நாவல் காட்டுகிறது.

பிரச்சனைகளை எதிர்கொள்ளும் பெண்கள்

    ஆனந்தாயி கணவனுக்கு அடங்கி நடந்தாலும், பலமுறை எதிர்க்குரல் எழுப்புகிறாள். இறுதியில், வெத்தலைக்கும் கணவனையே நம்பியுள்ளாள். வைப்பாட்டி லெச்சுமி பெரியண்ணனுக்கு எதிராக அரிவாளை தூக்குகிறாள்.  ஆனால் தோற்று, பலமுறை வீட்டை விட்டு ஓடி இறுதியில் விஷம் குடித்து இருக்கிறாள்.
மலர், கணவன் கள்ளத் தொடர்பு கொண்டதை எதிர்க்க அவளோ மனைவியை வெறுத்து வீட்டை விட்டு ஓடிவிடுகிறாள். திரும்ப வந்தாலும் அவனைச் சேர்க்க மாட்டேன் என்று வைராக்கியத்தோடு வாழ்கிறாள். பூங்காவனத்தைக் கர்ப்பவதியாக்கி விட்டு ஓடிய காதலன் திரும்பி வந்து மணம் செய்து கொள்ள விரும்ப, அவனை மறுத்து குழந்தையோடுத் தனி வாழ்க்கை வாழ்கிறாள்.

ஆனந்தாயி காட்டும் குடும்ப அமைப்பில்

1)    கற்பு என்பது பெண்களுக்கு மட்டுமே ஆணுக்கல்ல.
2)    ஆண் தவறு தவறாகக் கருதப்படுவதில்லை, பெண் அறியாமல் தவறிழைப்பின் அது முதன்மைப்படுத்தப்படுகிறது என்ற கருத்துகள் முதன்மைப்படுத்தப்படுகின்றன.

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்களைப் பதிவு செய்யலாமே?